மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பாதுகாப்பானது கடந்த 17.11.2015 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. வழக்குரைஞர்களின் போராட்டத்தால் நீதிபதிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நீதிமன்றத்தின் மாண்பு பாதிக்கப்படுவதாகவும், தமிழக காவல்துறை நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கத் தவறிவிட்டதாகவும் காரணம் கூறப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர்களின் போராட்டத்தால் உயிர் பயத்தில், பாதுகாப்பற்ற சூழலில், கையறு நிலையில் இருக்கின்ற சென்னை மாண்புமிகுக்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே போய், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இராணுவத்தின் பாதுகாப்பைக் கூட வழங்க நேரிடும் என்று 'தத்து' பித்தென்று என்று கொந்தளித்து தள்ளி விட்டார் தில்லி மாண்புமிகு.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வேண்டியதில்லை; நாங்களே எங்கள் காக்கி குண்டாந்தடிகள் கொண்டு நீதிமன்றத்தைப் பாதுகாக்கிறோம் என்ற அடிமை தமிழக அரசின் வாதங்கள் எல்லாம் “காசுமீரின் தாத்ரேய கவுல்” நிலவுடைமை வம்சத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி கவுலின் கர்ஜனைக்கு முன்னால் பொசுங்கிப் போய் விட்டன. தலைமுறை தலைமுறையாக மக்களை சுரண்டி, கொழுத்துத் தின்ற வம்சத்தின் தலைமகனின் முன்னால் மண்டியிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசிற்கு மாண்புமிகு நீதியரசர்கள் கொடுத்த மரியாதை “மூடிட்டு நான் சொல்வதை செய்” என்பதுதான். பெங்களுரு கு.சாமியின் ஊழல் கரங்களால் தன் ஊழல் கறை துடைத்த முன்னாள் மக்களின் முதல்வர் வேறு வழியின்றி தன்னுடைய நாடகத்தை உச்ச நீதிமன்றம் சென்று வந்ததோடு முடித்துக் கொண்டுவிட்டார்.
ஒரு காலத்தில் காவல்துறையால் ஒரு நீதிபதியின் மண்டையுடைந்து அவர் அய்யோ, அம்மா என்று உயிர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடிய போது வராத உயிர் பயம், வழக்குரைஞர்களை நீதிமன்ற வளாகத்திற்குள் காக்கிகள் படை வெறிகொண்டு தாக்கிய போது நீதிக்கு வராத பங்கம் இப்போ எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பாதவர்களே இல்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி நீதித்துறைக்கு பங்கம் வந்து விட்டதாக நீதியரசர்கள் ஆடிய அலறல் நாடகம் உச்சக்கட்டத்தை எட்டி நிற்கிறது.
ஒரு மாண்புமிகு? நீதியரசர் மோட்டார் வாகனச் சட்டத்தில் இருப்பதை செயல்படுத்த உத்தரவிடாமல், விளம்பர நோக்கத்திற்காக நேரடியாக தன்னுடைய கட்டாய தலைக்கவச உத்தரவை மக்கள் மேல் திணிக்கிறார். தீர்ப்பின் சாராம்சத்தில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கோ, இருசக்கர வாகன விற்பனை நிறுவனங்களுக்கோ நேரடியாக எந்த கட்டுப்பாடும், உத்தரவும் கிடையாது. மக்களை மட்டுமே நேரடியாகக் கட்டுபடுத்தும் சர்வ வல்லமை கொண்ட உத்தரவு அது. உத்தரவைப் பின்பற்றாதவர்களின் வண்டியைக் கைப்பற்றவும், கடுமையான அபராதம் விதிக்கவும், கடும் நடவடிக்ககை எடுப்பதற்கும் காவல்துறைக்கும், அரசிற்கும் பரிந்துரை வேறு..
ஏற்கனவே, டாசுமாக் சாராயக் கடைகளில் மூழ்கித் திளைத்து, வெளியே வருபவர்களைக் காத்திருந்து வழிமறித்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி வழிப்பறி செய்து வருகிற காக்கிகளுக்கு, மீண்டுமொரு வாய்ப்பா? என மக்கள் புலம்பித் தள்ளிவிட்டனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கும் அளவிற்கு மக்கள் ஒன்றும் சர்வ வல்லமை படைத்த “இரத்தத்தின் இரத்தங்கள்” அல்லவே!. வேறு வழியில்லாமல் வெறுத்துப் போய் மண்டை ஓட்டு வியாபாரிகளின் முன்னால் வரிசையில் நின்றார்கள். ஆனால் தீர்ப்பில் வெளிப்பட்ட அதிகாரத் திமிர் பொறுக்க முடியாத மக்களின் ஒரு பிரிவினரான சட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்து போராடினர்.
உண்மையில் வழக்குரைஞர்களின் கொந்தளிப்பு வெறும் மண்டைக்கவசத்திற்கு எதிரானது மட்டும் கிடையாது என்பது போராடிய வழக்குரைஞர் குமுகத்திற்கும் தாக்குதல் இலக்கான நீதிபதிகளுக்கும் தான் நன்கு தெரியும். (திருடியது யார் என்பது திருடனுக்கும் காவல்துறைக்கும் மட்டும் தான் தெரியும் என்பது போல)…
ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டு, மன்னர்கள் போல் ராச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, யாரும் தட்டிக் கேட்க முடியாதவர்கள் என்ற திமிறில் நீதியரசர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்ணார கண்டுணர்ந்தவர்கள் வழக்குரைஞர்கள் மட்டுமே. நீதியரசர்களின் நீத (நிதி) பரிமாற்றத்திற்கு இடைத்தரகர்களாக இருப்பவர்களும் சில வழக்குரைஞர்களும், சங்க, பேராய நிர்வாகிகளும்தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இடைத்தரகர்களுக்கு நீதித்துறையில் இருக்கும் செல்வாக்கு காரணமாகவே அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் நியாயமான வழக்குரைஞர்கள் குமுறி வந்தனர். வசதிபடைத்த வழக்காடிகள் எளிதில் தாங்கள் விரும்பும் நீதியைப் பெற்றுவிடுவார்கள் என்பது பிச்சையெடுத்து வாழ்பவனுக்குக் கூட நன்கு தெரியும் சமூகச் சூழல் இது. இருப்பினும் எந்த நெற்றிக் கண்ணும் தங்களை எரித்துவிட முடியாது என்று நீதியரசர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
ஊழலரசர்களின் இந்த பிழைப்பு வெறியைக் கண்டு மனம் கொந்தளித்துக் கிடந்த வழக்குரைஞர்களின் உணர்வுகளே மண்டை ஓட்டுக்கு எதிரான பேராட்டமாகவும், பின்னர் ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வெடித்துக் கிளம்பியது. தங்கள் பிம்பங்கள் அம்மணமாக்கப்பட்டு சாலையில் செருப்படிபட்டதைப் பொறுக்குமா நீதியரசர்களின் உள்ளம். கொந்தளித்துக் கிடந்தது. சமயம் எதிர்பார்த்திருந்தது. அதற்கு கிடைத்த வாய்ப்புதான் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வழக்குரைஞர்கள் போராடியதற்கான போராட்டம்.
தமிழ்மக்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி பல ஆண்டுகாலமாக போராடி வருகிறார்கள். தீர்வு கிடைத்த பாடில்லை என்பதால் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி வழக்குரைஞர்கள் போராட்ட தேதியை அறிவித்து, தொடர் பரப்புரைகளை செய்து வந்தார்கள். தமிழர்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, சம்பளம் வாங்கி, கிம்பளம் வாங்கி, நீதியைக் கொலை செய்து, பிழைப்பு நடத்தி வரும் நீதியரசர்களுக்கு தமிழுணர்வு மட்டும் எப்படி வரும்..
உயர்நீதிமன்றத்தில் தமிழ் என்றதும் அரசும், நீதித்துறையும் பார்ப்பன வெறியில் புகைந்து கொண்டிருந்த்து. 8 கோடியைத் தாண்டிய மக்கள் தொகை கொண்ட ஒரு தேசிய இனத்தின் மொழியில் அந்த தேசிய இனத்திற்கு நீதி பரிபாலனம் கிடையாது, “வெட்கக் கேடு” என்று வெடித்துக் கிளம்பியது வழக்குரைஞர் - மாணவர் போராட்டம். நீதிமன்றத்தின் அறைக்குள், அமைதியான முறையில் போராட்டம் நடந்த போதும், தீக்கங்கை மிதித்தது போல் அலறிய பார்ப்பன மனுவின் வாரிசுகள் நீதிமன்றத்தின் மாண்பு? கெட்டுவிட்டதாக கொந்தளித்துவிட்டார்கள்.
நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பெட்டி பெட்டியாக அள்ளி, நீதி தேவதையை முதலாளிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் கூட்டிக் கொடுத்தபோது வராத நீதிமன்ற அவமதிப்பு, வழக்குரைஞர்களின் போராட்டத்தைக் கொண்டு மனுநீதியாக பொங்கியது. விளைவு, வாய்ப்பு எதிர்பார்த்திருந்து காத்திருந்த நீதித்துறைப் பாசிசம் கட்டவிழ்த்து விட்டது தன்னுடைய அடக்கு முறையை. கைது, சிறையிலடைப்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடைநீக்கம், விசாரணை என்று மனு நீதி எல்லா ஆயுதங்களையும் கொண்டு போராடிய வழக்குரைஞர்களை தாக்கு தாக்கென்று தாக்கி வருகிறது.
நீரில் ஊறிக்கிடக்கும் நீர் யானை போல், ஊழல் குட்டையில் ஊறிக்கிடந்த தலைமையரசர்க்கு வந்த கோபத்தில் வழக்குரைஞர் சமுதயாமே ஆடிப் போய்வி்ட்டது. நீதியரசர்களின் தலைமைத் தரகனான வெட்கங்கெட்ட தமிழ்நாடு வழக்குரைஞர் பேராயத் தலைவர் செல்வம் வேறு இவர்களுக்கு ஒத்தூதுகிறார். இந்திய வழக்குரைஞர் பேராயம் வழக்குரைஞர் பேராயத்தின் சட்ட திட்டங்களையெல்லாம் மீறி வழக்குரைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வழக்குரைஞர்களின் போராடும் உரிமையையும், சங்கமாக சேரும் உரிமையையும், கூட்ட கூடும் உரிமையையும் இந்திய வழக்குரைஞர் பேராயம் பறிப்பதைக் கண்டும் காணாததும் போல் தமிழ்நாடு வழக்குரைஞர் பேராயம் இருந்து வருகிறதோடு, தன்னுடைய உறுப்பினர்களுக்கு அறிவிப்பு அனுப்பி மிரட்டவும் செய்கிறது. நீதியரசர்களுக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்கு ஊழலுக்கு எதிராகவும், தமிழுக்காகவும் போராடிய வழக்குரைஞர்களை தற்போது இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கெதிராக போராட முடியாமல், தமிழகத்தில் அமைப்பாக்கப்பட்ட கொள்கையுறுதியற்ற மாபெரும் ஒரு வர்க்கமான வழக்குரைகள் தங்கள் மீதான அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பதறிப் போய் வாய் மூடிக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை..
நீதித்துறை, இந்திய – தமிழக வழக்குரைஞர் பேராயங்களின் நடவடிக்கையால் மனம் கொந்தளித்துக் கிடந்த வழக்குரைஞர்கள் சமுதாயம், தமிழ்நாடு மற்றும் இந்திய வழக்குரைஞர் பேராயத்தின் தேர்தல் நெருங்கி வருவதால் அதில் தங்களுடைய துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டி உறுதியான தலைமையைத் தேர்ந்தெடுத்து விடலாம் என்று எண்ணியிருந்த நிலையில், மாண்புமிகு நீதியரசன் கிருபாகரன் மீண்டும் ஒரு ஆப்பு வைப்பது போல் வழக்குரைஞர் பேராயத்திற்கான தேர்தலுக்கு தடை விதித்து தன் நீதிப்பாசிசத்தை மறுபடியும் நிரூபித்துக் கொண்டார்.
இதற்கிடையில் விசாரணை என்ற பெயரில் ஒரு கேலிக் கூத்தை அரங்கேற்றிய நீதியரசர்கள் சி.டி.செல்வம், தமிழ்வாணன் தங்கள் வயதிலும் மூத்த மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவரை இரக்கமேயில்லாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்தே சித்திரவதை செய்தனர். பொது இடமான நீதிமன்றத்திற்குள் வழக்குரைஞர்களையே அனுமதிக்க மறுத்து ஆட்டம் போட்டனர். வழக்குரைஞர்களை சமூக விரோதிகள் போல் நீதிமன்றத்திற்கு வெளியில் நிறுத்தி விசாரணை நாடகம் நடத்தினர்.
இந்த இடைவெளியில் நீதிமன்றத்திற்கு உரிய பாதுகாப்பளிக்க தவறிவிட்டதாக தமிழக காக்கிக் குண்டாந்தடிகளுக்கு குட்டு வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பாதுகாப்பு அளிக்குமாறும், அதற்கு தமிழக அரசே பல கோடிகள் செலவழிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தியும் விட்டார்கள் நீதிக் கொடுங்கோலர்கள்.
இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் மக்களைச் சுரண்டும் இந்திய ஏகாதிபத்தியம் மற்றும் தனியார் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பளித்து ஊழலிலும் திருட்டிலும் கொழுத்து வளரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்தான் ஊழல் பெருச்சாளிகளான தங்களையும் பாதுகாக்க ஏற்றவர்கள் என்று நீதிப்பாசிச சக்திகள் முடிவு செய்ததில் வியப்பேதும் இல்லை. எனவே மத்திய (ஊழல்)தொழில் பாதுகாப்பு படையிடம் உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு மாண்புமிகு நீதியரசர்களின் உத்தரவின் பேரில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது உயிர் பயம் ஏதுமின்றி, போராட்ட அச்சுறுத்தலின்றி நீதியரசர்கள் தங்கள் கடைமையைச்(?) செவ்வனே செய்து வருகிறார்கள்.
மாண்புமிகு நீதியரசர்களின் தொடர் இழி செயல்கள் மக்கள் மன்றத்தில் வழக்குரைஞர்களின் போரட்டத்தால் விவாதிக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாததாலேயே, போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், வழக்குரைஞர்களை அச்சுறுத்துவதற்காகவும் தற்போது உயர் நீதிமன்றம் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மன்னரின் அரண்மனைக்குள் செல்வதற்கு சோதனையிடப்படுவதைப் போல் சோதனைகள் நடக்கிறது. வழக்குரைஞர்களையும், மக்களையும் சமூக விரோதிகள் போல் சோதனைக்குள்ளாகிறார்கள். தமிழ் மக்களை சொந்த தேசத்தில் ஏதிலிகளாக்கிய மகிழ்ச்சியில் இந்திய நீதித்துறைப் பாசிசம் அதிகார மமதையில் ஆடிக் கொண்டிருக்கிறது.
விளைவு தாய்த்தமி்ழ் மக்கள் தங்கள் வரிப்பணத்தில் இயங்கி வரும் உயர்நீதிமன்றத்திற்குள் வளாகத்திற்குள் சுதந்திரமாக சென்று வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் மொழியுரிமை கோரி போராடிய தமிழ் தேசிய இனம் இன்று நீதிமன்றத்திற்கு வெளியே ஏதிலிகளாக நிறுத்தப்பட்டுள்ளது. கொள்கையுறுதியற்ற குட்டி முதலாளிய சங்க அமைப்பிற்குள் சிக்கிக் கொண்ட வழக்குரைஞர் சமூகமோ, சோதனைகள், அடையாள சரிபார்ப்புகள் ஆகியவகைகளைக் கண்டு கொந்தளிக்கும் மன உணர்வுகளை அடக்கவும் முடியாமல், போராடவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் பெண் வழக்குரைஞரை மத்திய பாதுகாப்பு படை சோதனையிட்ட நிகழ்வும், அதற்கெதிரான போராட்டமும். வழக்கம்போல் நியாயம் கேட்ட வழக்குரைஞர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் மீதும் “செல்வத்தின்” பேராயம் நடவடிக்கை எடுக்கும்..
மாண்புமிகு(?) உயர்நீதிமன்றத்தின் மாண்புக்கும் நீதிக்கும் பாதிப்பு உண்மையில் மக்களாலோ, வழக்குரைஞர்களாலோ இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். நீதித்துறைக்குள் தின்று பெருத்த ஊழல் பெருச்சாளிகளும், பாசிச வெறியர்களும், சாதி வெறியர்களும், அதிகாரத் திமிரும், இந்திய வல்லாதிக்க உணர்வும் கொண்ட கொடுநெறியர்களான நீதிபதிகளால் நீதித்துறையின் அவமானங்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்.
எனவே உண்மையில் சோதனையிடப்பட வேண்டியவர்கள் மக்களோ, வழக்குரைஞர்களோ கிடையாது. நீதியரசர்கள்தான் முதலில் சோதனையிடப்பட வேண்டும். நீதியரசர்களின் மனசாட்சிகள்தான் கேள்விக்குள்ளாக்கப் பட வேண்டும். அவர்களின் கோட்டு, சூட்டு பாக்கெட்டுகளிலும், பெட்டியிலும் நிறைந்திருக்கும் பணத்திற்கு கணக்கு கேட்கப்பட வேண்டும். அவர்களின் தீர்ப்புகள் மறு வாசிப்பிற்கு உள்ளாக வேண்டும். ஆனால் சுரண்டைலையும், ஒடுக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூக அமைப்பில் இதெல்லாம் நடக்கவே முடியாத நிகழ்வாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல் தேசிய இனங்களை இந்திய தரகு முதலாளிகளின் வர்க்கச் சுரண்டலுக்காகவும், பார்ப்பனியத்தின் ஒட்டுண்ணித் தனத்திற்காகவும் அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொழுத்து வரும் இந்திய தரகு பார்ப்பனிய வல்லாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கானவைகள்தான் இன்றைய சட்டங்களும், நீதித்துறையும். ஆங்கிலேய காலனியாதிக்கக் காலத்தில் மக்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களும், நீதித்துறையும் தற்போது இந்திய எசமானர்களின் கைகளுக்கு மாறி மிகக் கடுமையாக வலுவாக்கப்பட்டுள்ளது.
மக்களை குற்றவாளிகளாகவும், வெறும் பார்வையாளர்களாகவும் மட்டுமே கொண்ட உளுத்துப் போன இந்திய தரகு பார்ப்பனிய நீதித்துறை தன்னுடைய ஆளும் வர்க்கத்தை நாளும் பாதுகாப்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. எனவே இந்திய தரகு பார்ப்பனிய நீதித்துறையின் கொடுநெறி ஒடுக்குமுறையும், ஊழலும் அதனோடு ஒட்டிப்பிறந்தது.
புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்திய தரகு பார்ப்பனிய சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை இந்த ஒடுக்குமுறைகள் தொடரும். கொள்கை உறுதியற்ற, மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காத வழக்குரைஞர் சங்கங்களினால் இந்திய மனு நீதி பாசிசத்தின் முன்னால் தாக்குபிடிக்க முடியாது என்பதை மேற்படி நிகழ்வுகள் நமக்கு கண்கூடாக உணர்த்துகின்றன.
தாய்மொழி மறுக்கும், சமூக நீதி மறுக்கும், அடிப்படை உரிமைகள் மறுக்கும் இந்திய தரகு பார்ப்பனிய வல்லரசின் சட்டமும், ஊழல் நீதிமன்றங்களும் மக்களுக்கானவை அல்ல என்பதை முன்னேறிய பிரிவினரான வழக்குரைஞர்கள் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
சட்டம், நீதி யாவும் மக்களுக்கே! என்று முழங்கி வழக்குரைஞர்களும், மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வரும் பட்சத்திலேயே நீதித்துறையில் தமிழும், ஊழலற்ற நீதிபரிபாலன முறைகளும் சாத்தியமாகும். அதற்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து கேள்வியே கேட்க முடியாது என ஆட்டும் போடும் நீதித்துறை கொடுநெறியாளர்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்தி, அவர்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து சோதனைக்குள்ளாக்க வேண்டியது படித்த, சமூகத்தில் முன்னேறிய பிரிவினரான வழக்குரைஞர்களின் அடிப்படைக் கடமையாகும். எனவே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து ஊழல் பெருச்சாளிகளை, மனு நீதிக் கொடுநெறியாளர்களை, மக்கள் மன்றத்தில் தொடர்ந்து சோதனைக்குள்ளாக்குவோம். மக்களையும், மண்னையும் பாதுகாப்போம்.