இருக்கிற சமூக அமைப்பு இப்படியே ஒரு நொடி கூட நீடிக்கக்கூடாது என்பார் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள். ஏனென்றால், இருக்கிற சமூக அமைப்பில் நிலவுகிற அனைத்துமே கோளாறாகத்தான் இருக்கிறது. கல்வி முறையில், தேர்தல் முறையில், தேர்வு முறையில், வணிக முறையில், நிர்வாக முறையில், காவல் முறையில், சட்டமியற்றும் முறையில், சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முறையில், நீதிபரிபாலன முறையில், நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் எனச் சொல்லிகொண்டே போகலாம். சுருங்கச் சொன்னால், நிலவுகிற சமூக அமைப்புக்கு நேர்மாறானதொரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆண்டை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, சாதிய, சமூக அமைப்பை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டு, சாதியற்ற மதமற்ற, சமத்துவ, பொதுவுடமைச்சமுதாயம் ஒன்றைப் புதியதாக நிர்மாணிக்க வேண்டியிருக்கிறது.

அப்படியானதொரு சமூக அமைப்பைத் தலைகீழாக புரட்டிப்போட்டு புதிய சமூக அமைப்பை உருவாக்குவதென்பது, எளிதான காரியமில்லை. வெகுவான மக்கள் திரண்டெழுந்து ஒரு ஜனநாயகப்புரட்சியை நடத்துவதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும். அப்படியொரு புரட்சி நடத்துவதற்கு இடையூறாக சாதி, மதம், மொழி, வாழிடம், இனம், பாலினம், எனப் பல்வேறு அடையாளங்களுக்குள் சிக்கிக் கொள்வதோடு அந்த அடையாளங்களை விட்டொழிக்காமல் அந்த அடையாளங்களை வெகுமக்கள் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், ஊடகங்கள் அக்கூர்மையை வலிமைப்படுத்துகிறது என்பதும், இவ்வாறான அடையாள அரசியல், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு இடையூறாக இருக்கிறது என்பதும் சமூக மாற்றச் சிந்தனையாளர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த வேதனையாகும்.

இது போன்ற அடையாள அரசியல் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் முற்றுமுழுதான விடுதலைக்கு இடையூறு என்பதை நாமும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், அதே நேரத்தில், தீண்டாமையால், வன்கொடுமையால், இழிவால் பாதிக்கப்படும் தலித் மக்கள் தங்களின் விடுதலை நோக்கில் முன்னெடுக்கும் தலித் அரசியலும் அடையாள அரசியலே என்று புரிந்து கொள்ளும் போக்கிலான சிந்தனையில்தான் சற்றே வேறுபடுகிறோம்.

எந்தவொரு தலித்தும், தீண்டாமை மட்டும் ஒழியட்டும், வன்கொடுமை மட்டும் ஒழியட்டும், நாங்கள் தலித்துகளாகவே இருந்து கொள்கிறோம். நமக்குள் கொள்வினையும் வேண்டாம் கொடுப்பினையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு தலித் சொல்வாரேயானால் அவர் ஒரு அம்பேத்கரியல்வாதியாக இருக்கவே முடியாது.

அடையாள அரசியல் என்பது எதுவாக இருக்க முடியும்? எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்லிக்கொண்டே, எல்லோரும் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டே என் சாதிப்பெண்களைக் உன் சாதிப்பயல்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் கை காலை வெட்டுவேன் என்றும், கொன்று வீசுவேன் என்றும் சொல்வது வேண்டுமானால் அடையாள அரசியலாக இருக்கலாம். மத ஆச்சாரங்களில், சடங்குகளில், பழக்க வழக்கங்களில், உணவு முறைகளில், பாரம்பரியம் என்ற பெயரில், இமியளவு கூட கைவிட மாட்டேன் எனக்கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மத துவேஷம் வளர்ப்பது வேண்டுமானால் அடையாள அரசியலாக இருக்கலாம்.

மொழி என்பது இரு மனிதர்களுக்கிடையிலான கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு கருவி. எந்த மொழியும் உயர்வானதல்ல, அதே நேரத்தில் எந்த மொழியும் தாழ்வானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஒரு மொழி பேசும் மக்கள் மீது இன்னொரு மொழியை வலிந்து திணிப்பதும், இந்த மொழியைப் பேசுவதனாலேயே நான் உயர்ந்தவன் என்று இறுமாப்புக் கொள்வதும் வேண்டுமானால் அடையாள அரசியலாக இருக்கலாம்.

ஆனால், நீங்கள் தண்ணீர் பிடிக்கும் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை, நீங்கள் நீர் சேந்தும் கிணற்றில் நீர் சேந்த முடியவில்லை, நீங்கள் நடக்கும் பாதையில் நடக்க முடியவில்லை, உங்களைப்போல காலில் செருப்புப் போட்டு நடக்க முடியவில்லை, உங்களைப்போல சைக்கிளில் ஏறிச்செல்ல முடியவில்லை, உங்களைப்போல மீசை வைத்துக்கொள்ள முடியவில்லை, நீங்கள் வளர்க்கும் ஆண்நாயை நாங்கள் வளர்க்க முடியவில்லை, நீங்கள் குடிக்கும் குவளைகளில் தேநீர் அருந்த முடியவில்லை, நீங்கள் குடியிருக்கும் தெருக்களில் குடியிருக்க முடியவில்லை, நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் மண்டபங்களில் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக உங்களைப் புதைத்துக்கொள்ளும் சுடுகாட்டில் எங்களைப் புதைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இத்தனைக்குப் பிறகும் உங்களை விட்டு அறவே நாங்கள் பிரிந்து போய்விட நினைக்கவில்லை. இதே மண்ணில், இதே நாட்டில் இதே ஊரில் இதே தெருவில் உங்களோடு இரண்டறக் கலந்து வாழவே ஆசைப்படுகிறோம். தலித் என்கிற அடையாளம் எங்களுக்குப் பெருமை அல்ல. அதை நாங்கள் மகிழ்வுடன் தூக்கிச் சுமக்கவில்லை. அடுத்த நொடி அந்த அடையாளம் தொலையுமானால் இந்த நொடியே நாங்கள் மகிழ்வோம். இன்று சூழ்ந்திருக்கிற சமூகத்தின் தூசி கூட சாதியைச் சுமந்தே வருகிறது எனும்போது, என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் சாதியாலேயே தீர்மானிக்கப்படும் எனும்போது, தீண்டாமையால் திட்டமிடப்படும் எனும்போது தலித்தாகப் போராட நான் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை அடையாள அரசியல் என்று சிறுமைப்படுத்திட வேண்டாம் என்பதுவும், தலித் அரசியல் ஒருபோதும் அடையாள அரசியல் அல்ல! என்பதுவுமே சமூக மாற்றச் சிந்தனையாளர்களுக்கு நாம் வைக்கிற பணிவான வேண்டுகோள் ஆகும்.
 
அவ்வாறான, தலித் அரசியல் கூட, வெறுமனே தலித்துகளால் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டியது என்று குறுக்கி விட விரும்பவில்லை. சாதி ஒழிப்பையே அடிநாதமாகக் கொண்ட பெரியாரியல்வாதிகளும், தனியுடமைச் சமுதாயத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் வலிய வேட்கை கொண்ட பொதுவுடமைவாதிகளும், பெரும்பான்மை வாதத்தால் தாக்குண்டு போயிருக்கும் மதச்சிறுபான்மையினரும், சமூகத்தின் சரிநிகர் பாதியான பெண்களும், பூவிலிருந்து வண்டு தேன் எடுப்பது போல இயற்கையை நுகர்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடிகளும், இணைந்து முன்னெடுக்க வேண்டியதாகும். இத்தகைய கூட்டணி அடுத்த தேர்தலை மையப்படுத்தியது அல்ல, மாறாக அடுத்த தலைமுறையை மையப்படுத்தியதாகும்.!

- நீலவேந்தன், ஆதித்தமிழர் பேரவை.

Pin It