தூத்துக்குடி இந்த் பாரத் தனியார் அனல் மின் உற்பத்தி நிலையத்தில் விபத்து நடைபெற்ற சிறிது நேரத்திற்குள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்து விட்டார். விபத்திற்கான காரணம் கூட முழுமையாக அறியப்படவில்லை.

ind_bharat_640

வழக்கம் போல அரசின் முறையான அனுமதி எதையும் பெறாமல் தனது மின் உற்பத்தியை துவங்கி நடத்தி வருகின்றது இந்த் பாரத் அனல் மின் நிலையம். இதன் உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த ரகு ராமகிருஷ்ணா ராஜூ அம்மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர். குழுமத்திற்கு நெருக்கமானவர். தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசரடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்த் பாரத் (Indh-Barath Power Gencom Ltd – IBPGL) அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை எரித்து அதன் மூலம் 3 x 63 (189MW) மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். சுமார் 73.21 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 230 KV மின்சாரம் தமிழ்நாடு மின் வாரியத்திற்குக் கொடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆனால் அந்நிறுவனம் மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேசன் அமைப்புடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின் படி மின்சாரம் கர்நாடக மாநிலம் மங்களூர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது தெரிய வருகின்றது.

இந்த நிலையில்தான் சுதந்திர தினத்திற்கு முதல்நாள் 2012 ஆகஸ்ட் 14 நண்பகல் 12 மணியளவில் தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.

நிர்வாகத்தின் தரப்பில், "கன்வேயர் பெல்டில் நிலக்கரி கொண்டு செல்லும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ பிடித்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்பிக்க கீழே குதித்து இறந்து விட்டனர்" என்கின்றனர். விபத்தில் நால்வர் மரணம் அடைந்துள்ளனர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஏ.வி.எம். தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சக பணியாளர்கள் கூறுகையில் சம்பவம் நடந்த அன்று கன்வேயர் பெல்ட் இயங்கவில்லை. வேலை நடக்கவில்லை. மாறாக மெயிண்டனன்ஸ் ஒர்க் நடந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது வெல்டிங் பண்ணுகையில் தீ பற்றி கன்வேயர் பெல்டில் தீ பிடித்துள்ளது. எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள், தீ தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமே இல்லாமல் இருந்த கம்பெனி நிர்வாகம் அங்குள்ள அப்பாவி தொழிலாளர்களை தீ அணைக்க கன்வேயர் பெல்டின் மேலே அனுப்பியுள்ளனர். பயிற்சி இல்லாத, தீ தடுப்பு பற்றி தெரியாத தொழிலாளர்கள் கம்பெனியின் கட்டாயத்தினால் தீயை அணைக்க முயன்றுள்ளனர். தீயின் தாக்கத்தினால் கீழே விழுந்துள்ளனர் அல்லது குதித்துள்ளனர். தீயை அணைக்கச் சென்ற ஒப்பந்த தொழிலாளிகள், பாஞ்சாலங்குறிச்சி சிலோன்காலனி சக்தி(28), கோரம்பள்ளம், சோரீஸ்புரம் கிராமத்தின் மால்ராஜ் (47), கழுகுமலை லவக்குமார் (22), அசாம் மாநிலத்தின் கூகுலி (19) ஆகியோரை கரும்புகை தாக்கியது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிர்தப்பிக்க அங்கிருந்து கீழே குதித்த அந்த நால்வரும், படுகாயமடைந்து இறந்தனர். பணியிலிருந்த ஒப்பந்த தொழிலாளிகள், ராமநாதபுரம் சரவணக்குமார் (33), தூத்துக்குடி சுடலைமுத்து (35), சார்லஸ் (31), திருச்சி நாகேந்திரன் (22), சூரியநாராயணன் (21), ஆகியோர் படுகாயமடைந்து ஏ.வி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்குப் பெயர் விபத்து என்று இந்த பாரத் நிர்வாகமும், தமிழக முதல்வரும் ஒரே குரலில் சொல்லுகின்றனர். உள்ளூர் அரசியல்வாதிகளும் நிர்வாகத்தோடு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு அதையேதான் கூறுகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கட்டிட விபத்திற்குக் காரணமாக பிரபல கல்வியாளர் ஜேப்பியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 பிரிவு 2 (அசம்பாவிதம் அல்லது கொலையாகாத மரணம்), 308 (அதிக காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த விபத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அதற்காக கட்டிட மேஸ்திரி, காண்ட்ராக்டர், ஒப்பந்தம் செய்து அழைத்து வந்தவர், கட்டிட உரிமையாளர் உள்பட பலரும் காவல் துறையின் கைது வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால், தூத்துக்குடி வேலாயுதபுரம் இந்த் பாரத் அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்திற்கு அனல் மின்நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அலெக்ஸ், பிச்சுமணி ஆகியோர் மீது 285, 287,337, 338, 304-ஏ ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 304 பிரிவு 2ன் படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக இல்லை. அதுவும் தனியார் தொழிற்சாலைகளைப் பொருத்தவரை எந்த விபத்து நடந்தாலும் அதற்கு அங்குள்ள ஊழியர்களும், அதிகாரிகளும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத்தின் தரப்பில் பொறுப்பை தட்டிக் கழிப்பார்கள்.

இந்த் பாரத் விபத்தைப் பொருத்தவரை தீ தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அலுவலர்கள், தூத்துக்குடி இந்த் பாரத் நிறுவனத் தலைவர் சுதாகர், இந்த் பாரத் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே.ரகு ராமகிருஷ்ண ராஜூ மற்றும் உண்மையை மறைத்து தவறான தகவல்களைப் பரப்பிய மக்கள் தொடர்பு அலுவலர் காசினிவேந்தன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர். அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இந்த் பாரத் அனல் மின் நிலையத்தின் சார்பில் நஷ்ட ஈடாக தலா 20 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசும், காவல் துறையும் சமநிலையோடு செயல்பட்டு மரணமடைந்தவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தீ பிடித்ததும் தொழிலாளர்களை கன்வேயர் பெல்டில் தீயை அணையுங்கள் என்று கட்டாயப்படுத்தியது யார்? தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை சாதாரண தொழிலாளர்கள் மூலம் கையாண்டது யார் குற்றம்?

ஒரு தனியார் ஆலையின் தொழிற்சாலை விபத்திற்கு உடனடியாக அரசு நிவாரணம் அறிவிக்கின்றது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் காயம்பட்டவர்களைச் சந்தித்து, விபத்து குறித்து இப்படித்தான் கூற வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். இதெல்லாம் யாரைக் காப்பாற்றுவதற்காக?..

ஒரு தீ தடுப்பு நடவடிக்கையைக் கூட செய்ய முடியாத ஆலை நிர்வாகம் ஒரு புறம், அதைக் கண்காணிக்கக் கூட முடியாத அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனத்தின் விபத்திற்கு அரசு பணத்தில் நிவாரணம் இதெல்லாம் ஜனநாயக நாட்டின் கேலிக் கூத்துகள். இவர்கள் சொல்கின்றார்கள் கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று.

விசாரணை, தீர்ப்பு, நீதி இவைகளின் மீதெல்லாம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இந்திய ஜனநாயக நாட்டில் தொடர வேண்டும். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்குத்தான் உள்ளது.

- நிலவன்

Pin It