1. அரசியல் என்றதும் கட்சிகளை உருவகப்படுத்திக் கொள்ளும் சீக்குப் பிடித்த மனநிலையை நாம் விட்டொழிப்பது நல்லது. அரசியல் என்பது கட்சியோடு தொடர்புடையதல்ல. சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியலோடு கட்சிகள்தான் தம்மை தொடர்புபடுத்திக் கொள்கின்றன. பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தேவைகளை எவ்வாறு உற்பத்தி செய்து கொள்வது, அவற்றை எவ்வாறு தமக்குள் பகிர்ந்து கொள்வது, இந்த பகிர்வு சமத்துவமானதா ஏற்றத்தாழ்வானதா, சக மனிதர்களுக்கிடையேயான உறவுநிலை எத்தகையது, ஆண் பெண் உறவு எவ்வாறிருக்க வேண்டும் என்பதையெல்லாம் எந்தவொரு கட்சியின் தலையீடும் இல்லாமல் ஒவ்வொரு சமூகமும் தனது வளர்ச்சிப் போக்கில் சுயேச்சையாக தேர்ந்துகொள்கிறது. நிலவும் ஒரு சமூக அமைப்பின் இத்தகைய அடிப்படைகளையும் அதன் இயங்குவிதிகளையும் இயக்கு சக்திகளையும் குறித்த அறிவு அல்லது புரிதலே அரசியல் எனப்படுகிறது.

நிலவும் அமைப்பை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்வது, அடிப்படைகளை தக்கவைத்துக் கொண்டு சிற்சில மாற்றங்களோடு தொடர்வது, முற்றாக மாற்றியமைப்பது என்கிற கருத்தோட்டங்களே - அரசியல் கண்ணோட்டம் எனப்படுகிறது. (இதில் ஏதாவதொரு வகை கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறவையாகவே கட்சிகள் தோன்றுகின்றன.)

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அது சாதிகளாகப் பிளவுண்டு, அந்தந்த சாதியின் படிநிலைக்குத் தகுந்த அதிகாரத்தையும் பொருளியல் வளங்களையும் பண்பாட்டு மேன்மைகளையும் கொண்டதாக இருக்கிறது. திருப்பிச் சொல்வதெனில் படிநிலை இறங்குமுகத்தில் வரும்போது எல்லாவகையிலும் புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும், அந்த புறக்கணிப்பை எதிர்க்காமல் இருக்கும் பொருட்டு ஒடுக்கப்படுகிறவர்களாகவும் தலித்துகளே எஞ்சுகின்றனர். எனில் இங்கு தலித் அரசியல் என்று முன்மொழியப்படுவது எது? பெரும்பாலும் இந்த கேள்விக்கான பதில், உள்ளாட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையான அதிகாரமையங்களில் சிறுவீதத்தை தலித்துகளுக்கு ஒதுக்கிக் கொடுப்பதுதான் என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்லது முழுக்க முழுக்க தலித்துகள் மட்டுமே அங்கம் வகிக்கிற - தலித்துகளால் மட்டுமே தலைமையேற்று நடத்தப்படுகிற அமைப்புகளை உருவாக்கி தேர்தல்களில் ரிசர்வ் தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வது என்கிற புரிதலும் இருக்கிறது. நிலவக்கூடிய சாதிய சமூக அமைப்பைச் சிதைக்காமல் அல்லது சின்னச்சின்ன சேதாரங்களை மட்டும் நிகழ்த்தி இங்குள்ள அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு இந்த அமைப்பிற்குள்ளேயே தலித்துகளால் வாழ்ந்துவிட முடியும் என்பதிலிருந்து இந்தப் புரிதல்கள் உருவாகின்றன.

ஆனால், உலகின் வேறெந்த சமுதாயத்திலும் இல்லாத தனித்துவமாக இருக்கும் சாதியமைப்புக்குள் சிற்றளவிலான மாற்றங்களை நிகழ்த்தி சில்லரைச் சலுகைகளையும் உரிமைபோல் தெரிகிற ஏமாற்றுகளையும் வைத்துக்கொண்டு தலித்துகளால் இங்கு பிற குடிமக்களைப் போல வாழ்ந்துவிட முடியுமா? இந்த கேள்விகளுக்கான எளிய பதில், இல்லை என்பதுதான்.

2. ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்ற விரிந்த மக்கள் திரளை குறிப்பதாக முன்மொழியப்பட்ட தலித் என்கிற பொது அடையாளம் தீண்டத்தகாத சாதியினரை மட்டுமே குறிப்பதாய் மாறியுள்ள நிலையில் அவர்களது உடனடித் தேவை தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுபடுவதுதான் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிதலின் அவக்கேடான விளைவு என்னவென்றால் தீண்டாமையை ஒழிப்பதன் மூலம் சாதிப் பிரிவினையின் கடுமையைக் குறைத்து நாளடைவில் சாதி என்பதை தேவையற்ற ஒன்றாக மாற்றி, தானாகவே உதிர்ந்துவிடும் ஒன்றாக கற்பனை செய்து கொள்கிற செயலற்றத் தன்மைக்கு தலித்துகளை இட்டுச் செல்வதுதான். அடிப்படையில் இதுவும் முன்பே சொல்லப்பட்ட சீர்திருத்தவாதத்திற்குள் போய் முடங்கிப் போவதற்குத்தான் வழிவகுக்கும். அப்படியானால் அதிதீவிரம் பேசி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான உடனடிப் போராட்டங்களை தலித் அரசியல் நிராகரிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

தீண்டாமை சாதிக்கு வெளியே இருப்பதல்ல. சாதிக்குள்ளிருந்துதான் தீண்டாமை உருவெடுக்கிறது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இவரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யாரும் தீர்மானம் கொள்வதில்லை. அவரது சாதியை அறிந்து கொண்ட பின்தான், அவரோடு தான் எவ்வாறு பழகுவது என்பது குறித்த முடிவை ஒருவர் எடுக்கிறார். வெளிப்படையாக அவரை ஒதுக்கிவைக்க சூழல் அனுமதிக்காத போது எதற்கு வம்பென்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம் தீண்டாமை புதிய வடிவமெடுத்து நிலைநிற்கிறது. ஆகவே சாதி இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். தீண்டாமை இல்லாதபோதும் சாதி இருக்கும். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு சைவப்புலியாக இருந்து கொண்டிருக்காது. தன் இருப்புக்கும் தூய்மைக்கும் பங்கம் ஏற்படுவதாக அஞ்சும் நிலை வந்தால் அப்போது அதன் கடைவாயில் கோரைப்பல் முளைத்து குரல்வளையைக் கவ்வும். அல்லது அப்போதைக்கு எது சாத்தியமோ அந்த வடிவிலான தீண்டாமையை அது வெளிப்படுத்தும்.

தீண்டாமையை கடைபிடிக்கிறவர்களுக்கு தங்களது வெறுப்பை ஒரு தலித்துக்கு எப்படி உணர்த்த முடியும் என்ற நுட்பம் கைவரப் பெற்றிருக்கிறது. இந்த அவமானத்தையும் புறக்கணிப்பையும் தலித்துகளும் மிகச்சரியாகவே உணர்ந்து கொள்கின்றனர். இது இருதரப்பாருக்குமிடையேயான ஒரு சங்கேத மொழிபோல நிகழ்ந்து விடுகிறது. பல தருணங்களில் தாங்கள் அவமதிக்கப்பட்டு விட்டதாக தலித்துகள் கூறும்போது அதை மற்றவர்களால் உணரமுடியாமல் போவதற்கும் இந்த சங்கேதத்தன்மைதான் காரணமாகிறது. சிலவகையான அவமதிப்புகளை, அவமதிப்பென்று ஒத்துக்கொள்ள முடியாத மொன்னைத்தனம் வாய்ப்பதற்கும் இந்த தலித்தல்லாத உள்ளுணர்வுதான் தவறாக வழிநடத்துகிறது. எனவே, சாதியை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமைக்கு எதிராக மட்டுமே குரலெழுப்புவதோ போராடுவதோ தலித்துகளுக்கு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே பெற்றுத்தரக் கூடியது என்பதே உண்மை.

தவிரவும் தீண்டாமை ஒரு வடிவத்தில் இருக்குமானால், அதை எதிர்த்துப் போராடி ஒழித்துவிட இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் அது காலத்திற்கேற்றவாறு தகவமைக்கப்பட்டு ஒரு வடிவத்தில் தோற்கடிக்கப்பட்டால் வேறுவடிவத்தில் வெளிப்படுவதாயிருக்கிறது. எனவே தீண்டாமைக்கு எதிரானப் போராட்டங்கள் தலித் அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியுமேயன்றி அது முழுமையானதல்ல. காரணங்களை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது விளைவுகளை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கும் என்ற தத்துவார்த்தப் புரிதலோடு, சாதியமைப்புக்கெதிரான சமரசமற்றப் போராட்டத்துடன் தீண்டாமை¦Â¡ழிப்புச் செயல்பாடுகள் இணைக்கப்பட வேண்டும். அதன்றி முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்வும் வெறும் சீர்திருத்தவாதமாக சுருங்கிப்போகும் பலவீனத்தையேக் கொண்டிருக்கும். எனவே இங்கே தலித் அரசியல் என்பது சீர்திருத்தவாதங்களுக்குள் முடங்கிக் கொள்ளாமல், சாதியழிப்புக்கும், எல்லோரும் இணங்கி சமத்துவமாய் வாழும் ஒரு புத்துலகத்திற்குமான அறைகூவலை ஒருங்கே முன்வைக்கிறது. அதாவது நிலவும் சமூக அமைப்பை புரட்சிகரமானதாய் மாற்றியமைப்பதே தலித் அரசியல் என்றாகிறது.

3. சாதியழிப்புக்கு குறைவான எந்தவொரு மாற்றமும் தமது விடுதலையைத் தரமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தலித்துகளின் அரசியல் பிரதிநிதியாக யார் அல்லது எந்த அமைப்பு இருக்க முடியும் என்ற விவாதத்துக்கு வருவோம்.

தலித்துகளின் அரசியல் பிரதிநிதி யார் என்ற விவாதம் அம்பேத்கர் காலத்திலேயே தீவிரமடைந்தது எனலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட யாவருக்கும் தாமே ஏக பிரதிநிதி என்று காங்கிரசும் காந்தியும் அறிவித்துக் கொண்ட நிலையை மறுக்க அம்பேத்கர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து இந்த விவாதம் உச்சநிலைக்குச் சென்றது. காங்கிரஸ்காரன் என்றால் கதராடை உடுத்த வேண்டும் என்று தன் கட்சிக்காரன் உடையணிவதையும்கூட கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்த காங்கிரசும் காந்தியும் சாதிமறுப்பு- தீண்டாமை ஒழிப்பு விசயத்தில் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எதையும் முன்வைக்காதது ஏன் என்று கேள்வியெழுப்பினார். அம்பேத்கரின் இந்த நுட்பமான வாதத்தை எதிர்கொள்ளக் கிளம்பிய காந்தி, கடைசியில் வர்ணாசிரமத்திற்கு கட்டுப்பட்ட பொறுப்பான இந்துவாக தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.

வர்ணாசிரமத்தையும் சாதியமைப்பையும் ஒத்துக் கொள்கிற காந்தியும் காங்கிரஸ் தலைமையும் தலித்துகளின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று அறிவித்தார் அம்பேத்கர். தலித்துகளை தனி அரசியல் சக்தியாக அணிதிரட்டினார். அதில் ஓரளவே அவரால் வெற்றிபெற முடிந்தது. பொருளாதாரரீதியாகவும் சாதிரீதியாகவும் கிராமப்புறங்களில் ஆதிக்கம் பெற்றிருந்த பகுதியினரிலிருந்து உருவான காங்கிரசின் தலைவர்கள், பல்வேறு காரணங்களை முன்னிட்டும் தம்மைச் சார்ந்திருக்கும் தலித்துகளை காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திக் கொண்டனர். கிராமப்புற சமூகங்களில் தலித்துகள் தன்விருப்பத்தோடு ஒரு அரசியல் முடிவை எடுக்க முடியாமல் இருப்பதற்கு இந்த அம்சமே இன்றளவும் காரணமாயிருக்கிறது.

படிப்பும் சொத்தும் வாக்குரிமைக்கு முன்நிபந்தனையாக வைக்கப்பட்டதை எதிர்த்து வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் எழுப்பிய கோரிக்கை வெற்றியடைந்த பிறகு தலித்துகளின் முக்கியத்துவம் கூடத் தொடங்கியது. எண்ணிக்கை பலமாகவும், கட்டுப்பட்ட மக்கள் திரளாகவும் இருக்கிற தலித்துகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் தலைமை தீண்டாமை ஒழிப்பை பெயரளவுக்கேனும் பேச வேண்டி வந்தது. அந்தக் கட்சி நாடு முழுவதும் அமைப்புரீதியாக பரவியிருந்ததால் தலித்துகளை திரட்டுவது அதற்கு எளிதான ஒன்றாகவே இருந்தது. கிராமப்புறங்களை ஊடுருவித் தாக்கி காங்கிரசிலிருந்து தலித்துகளை மீட்டெடுக்கும் அமைப்புரீதியான ஏற்பாடுகளற்று இருந்தது அன்றைய தலித் இயக்கம்.

தலித்துகள் மத்தியிலிருந்து கல்வியறிவு பெற்ற புதிய பகுதியினர் உருவாகி, பொதுவெளியில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து குரலெழுப்பியதோடு அதிகாரப் பகிர்வையும் கோரினர். ஆதிக்கசாதியினருக்கு எல்லாமுனைகளிலும் ஒரு போட்டியையும், சாதி, தீண்டாமை குறித்த அறிவார்ந்த விவாதத்தையும் இவர்களால் உருவாக்க முடிந்தாலும் இவர்களது செயல்மையங்களாக பெரும்பாலும் நகர்ப்புறங்களே இருந்தன. கிராமப்புற ஆதிக்கசாதிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குறுக்கீடுகளை நிகழ்த்துவதில் நீடித்த பலவீனம் திட்டமிட்டு நடந்ததல்ல. தவிரவும், சாதியமைப்புக்கும் இங்குள்ள உற்பத்தி மற்றும் உடைமைச் சக்திகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பை மதிப்பீடு செய்வதிலும்கூட சீர்திருத்தவாத அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அரசியல் போதாமையை உணர்ந்தவராக அம்பேத்கர் இருந்தாலும், நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழியாக அவர் பௌத்தத்தைì கண்டு, மதரீதியாக தலித்துகளை ஒருங்கிணைத்துவிட முடியும் என நம்பினார்.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் தத்துவார்த்த, செயல் எல்லைகள் வெகுவாக சுருங்கிவிட்டன. தலித்தல்லாதவர்களின் மனங்களில் எந்த குறுக்கீடும் நிகழ்த்தாத அளவுக்கு அவை அரசியல் பண்பாட்டுத்தளங்களில் பலவீன நிலைக்கு எட்டிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து தலித் அமைப்புகள் நிறையத் தோன்றி தலித்துகளை அணிதிரட்டிய போதிலும், தலித் அரசியல் என்பது சமூகத்தின் விவாதப்பொருளாக மாற்றப்படவில்லை. தலித்துகளின் அமைப்புரீதியான திரட்சி, தீண்டாமைகளின் கடுமையைக் குறைக்க உதவியிருக்கிற அதேவேளையில் சாதிமுறைமைக்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் மங்கிக் கொண்டே வருவது கவலையளிக்கும் போக்குதான்.

எல்லோருக்கும் பொதுவானவை என்று சொல்லிக்கொண்டு இங்கு எண்ணற்ற கட்சிகள் இயங்ககின்றன. சாதி மத பேதமற்ற சமத்துவ சமூகமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொள்ளாத கட்சிகள் அநேகமாக தமிழகத்திலோ இந்தியாவிலோ ஒன்றுமில்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. சாதிச்சங்கத்தை கட்சியாக மாற்றிக்கொண்டவர்களும்கூட இந்த முழக்கத்தை எழுப்பத் தவறுவதேயில்லை. அந்த கட்சிகளில் தலித்துகளுக்கென்று தனிப்பிரிவுகளும்கூட உண்டு. இந்த தனிப்பிரிவுகள் தலித்துகளின் கோரிக்கைகளை கட்சித் தலைமைக்குத் தெரிவித்து அவற்றுக்குத் தீர்வு காணவோ, தீர்வு கிட்டாத பட்சத்தில் ஒட்டுமொத்த கட்சியமைப்பையும் தலித்துகளுக்காக போராட வைக்கவோ உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக, கட்சியின் நோக்கங்களை தலித்துகளிடம் கொண்டு செல்கிற ஒருவழிப்பாதை கொண்டதாகவே உள்ளன. இக்கட்சிகளின் தலித் பிரிவுகளைத் தவிர மற்றெல்லாப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்புகளையும் சாதிப் பெருமிதமும் சாதி ஒடுக்குமுறையில் நாட்டமும் கொண்ட தலித்தல்லாதவர்களே ஆக்கிரமித்துள்ள நிலையில், அக்கட்சி தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தோ சாதியழிப்புக்கு ஆதரவாகவோ துரும்பளவும் இயங்காது.

தலித்தல்லாதவர்களின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய கட்சிகளுக்குள் தலித்துகள் விரும்பி இணைவதில்லை. எற்கனவே காங்கிரஸ் என்ன செய்ததோ அதேபாணியில் தலித்துகளை எண்ணிக்கை பலமாகவும் வாக்குகளாகவும் கருதி கட்சிகள்தான் அணிதிரட்டுகின்றன. சாதிமத பேதமற்ற சமத்துவ சமுதாயம் என்ற முழக்கத்தை மெய்யாக்க கட்சி ஏன் போராடவில்லை என்று கேள்வியெழுப்பவோ அதன் பொருட்டான நெருக்கடியைத் தரவோ வலுவில்லாத மக்கள் திரளாக இருக்கும் தலித்துகளை சமாளித்து தம் பிடிக்குள் வைத்திருப்பது கட்சித் தலைமைகளுக்கும் எளிதானதாகவே இருக்கிறது.

பொருளாதார ரீதியாகவும், சாதிரீதியாகவும் செல்வாக்கும் அதிகாரமும் மிக்க சமூக அடுக்குகளிலிருந்து வரும் கட்சித் தலைமைகளுக்கு தங்களின் கீழுள்ள தலித்துகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது சாத்தியமான விசயம்தான். பொருளியல் காரணங்களுக்காகவும் வன்கொடுமைகளை எதிர்கொள்ள வலுவற்றிருப்பதாலும் தலித்துகளும் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சாதியழிப்புக்காக போராடாத எந்தவொரு கட்சியையும் - அது அம்பேத்கர், பெரியார் படங்களை எவ்வளவு பெரிதாக வைத்துக்கொண்டிருந்த போதும் - ஒருவேளை தலித்துகள் கணிசமாக அக்கட்சிக்குள் அணிதிரண்டிருந்தாலும்கூட- அதை தலித்துகளின் பிரதிநிதியாக ஒத்துக்கொள்ள முடியாது.

4. எல்லோருக்கும் பொதுவானதென்ற பம்மாத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக - ஒரு பாரபட்சமான நியாயத்தை முன்வைத்து புரட்சிகரமாக சமுதாயத்தை மாற்றியமைப்பது என்ற தலித் அரசியலை உள்வாங்கிய இயக்கங்களாக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சீய இயக்கங்களையே வகைப்படுத்த முடியும்.

சாதியழிப்பையும் தனியுடமை ஒழிப்பையும் இணைக்கும் புள்ளியாக உருவான பெரியாரியம், இன்று தலித் மற்றும் பொதுவுடமை இயக்கங்களால் உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே இங்கு சமூகமாற்றம் குறித்த உரையாடல் பெரியாரியத்தை உள்ளடக்கியே நடைபெறுகிறது. எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் தாயாக சாதியமைப்பே இருக்கிறது என்ற அவரது புரிதலோடு இயங்குகிற பெரியாரிய இயக்கங்களும் சாதியழிப்புக்கு பங்காற்றும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.

நிலம் முழுவதையும் அரசுடமையாக்கி, மக்களை குத்தகைதாரர்களாகக் கொண்டு கூட்டுப்பண்ணைகளை நிறுவுவதன் மூலம் சமூகத்தின் இயற்கை வளங்கள் மீது எல்லோருக்கும் பங்கிருப்பதை உத்தரவாதப்படுத்த முடியும் என்றார் அம்பேத்கர். தலித்துகளை ஆதிக்கசாதியினரின் பிடியிலிருந்து விடுவித்து அதிகாரப்படுத்த நிலத்தின் தேவையை அவர் வெகுவாக வலியுறுத்தினார். பொதுவுடமை இயக்கங்கள் முன்வைக்கும் நிலப்பகிர்வு என்பதற்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட வேண்டிய அளவுக்கு அம்பேத்கரின் கூட்டுப் பண்ணைத் திட்டமும் முக்கியத்துவம் கொண்டது. ஆனால், ஒரு சமாதானப்பூர்வமான மாற்றத்தினூடே இந்த நிலப்பகிர்வு நடக்கும் என்ற அவரது கணிப்பு நடைமுறைச் சாத்தியமற்றது. அம்பேத்கர் சமூகப்புரட்சியை முன்மொழிந்த போதும், அந்த புரட்சி பௌத்தம் வழிப்பட்ட அஹிம்சை வழியில் நிகழும் என்று நம்பினார். சாதியின் ஒடுக்குமுறையை சட்டத்தின் கடுமை கொண்டு தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே, ஆதிக்க சாதியினரின் மனசாட்சியோடு ஒரு உரையாடலைத் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் அவர் முயற்சித்துக் கொண்டேயிருந்தார். அவர் சுதந்திரத் தொழிலாளர் கட்சி போன்ற அமைப்புகளை நிறுவியதும்கூட இந்த முயற்சியின் பகுதியாகத்தான். ஆனால் அது வெற்றிபெறவில்லை. இந்தியப் பரப்புக்குள் பௌத்தத்தின் செல்வாக்கும் மனித மனங்களை குறுக்கீடு செய்து மாற்றியமைக்கும் வலுவோடு இப்போது இல்லை.

இதே காலகட்டத்தில் உருவான பொதுவுடைமை இயக்கம், ஆலைத் தொழிலாளர் பகுதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கத்திலிருந்தும் உருவான தனது ஊழியர்களை கிராமப்புற உழைப்பாளி மக்களை ஒரு வர்க்கமாகத் திரட்டும் அரசியல் பணிக்காக அனுப்புகிறது. அடிப்படையில் கிராமப்புற உழைப்பாளி மக்களாக பெரும்பாலும் தலித்துகளே இருப்பதையும், அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும் உணர்கின்றனர். தலித்துகளை சாதிரீதியாக புறக்கணிக்கிற பிற்பட்ட சாதியினரில் பெரும்பாலானவர்களையும் இந்த உழைப்புச் சுரண்டல் விட்டுவைக்கவில்லை. ஆகவே தலித்துகளையும் பிற்பட்ட சாதியினரையும் இணைக்கிற பொதுப்புள்ளியாக இருக்கும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டத்தில் தலித்துகளின் நேசசக்தியாக இணைந்து நிற்கிற பிற்பட்ட சாதியினர், சாதியடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டத்தில் தலித்துகளின் எதிர்முகாமாக மாறிவிடுகிற முரண்பாட்டை கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்தே இருந்தனர். ஒரு வர்க்கமாக தொடர்ந்து போராடுவதன் மூலம் சாதியுணர்வு மங்கி மறைந்துவிடும் என்பது அவர்களது புரிதலாகவும் கனவாகவும் இருந்தது. ‘பாடுபாடும் பாட்டாளிக்கு சாதி இல்லை மதம் இல்லை/ இனம் இல்லை மொழி இல்லை/ கொள்கையுண்டு கோஷம் உண்டு/ கோரிக்கைகள் பலவுண்டு’ என்ற முழக்கம் உருவான பின்னணிகூட இதுதான். சாதி மதமெல்லாம் மங்கி மறைந்துவிட்டது என்ற அர்த்தத்தில் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவற்றையெல்லாம் உதறித் தள்ளி ஒரு வர்க்கமாக ஒன்றுபடு என்பதற்கான முழக்கம்தான் அது. ஆனால், வர்க்கம் என்பதை உருப்பெற்றுவிட்ட ஒன்றாகக் கருதி, சாதி போன்ற விசயங்களைப் பேசுவது வர்க்க ஒற்றுமையை குலைக்கும் என்ற புரிதல் மேலோங்கிய போது ‘வர்க்கம் என்பது அடைய வேண்டிய லட்சியமேயொழிய, அதுவே நிலவும் எதார்த்தம் அல்ல’ என்று கம்யூனிஸ்டுகளை எச்சரித்தார் அம்பேத்கர்.

சாதியானது இந்த நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்போடும் பண்பாட்டு நடவடிக்கைகளோடும் இணைந்த ஒன்றுதான். இவற்றை ஒன்றிலிருந்து இன்னொன்றென தனித்தனியே பிரித்தெடுப்பது சாத்தியமில்லை. உண்மையில் இவை ஒன்றுக்கொன்று உள்சொருகி பிரிதொன்றைப் பாதுகாத்து இது அடிக்கட்டுமானம், இது மேல்கட்டுமானம் என்ற மரபார்ந்த வகைப்பிரிப்பை திணறடிக்கும் மயக்கப்புள்ளிகளைக் கொண்டுள்ளன. இன்னின்ன சாதிகளுக்கு சொத்து வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்கிற மநுவின் கட்டுப்பாடுகளை மேற்கோளிட்டு, ‘சாதியே அடிப்படை. அதை முன்வைத்துதான் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கிறது’ என்றும், ‘சொத்துக்களை சுருட்டிக் கொள்வதற்காகத் தான் சாதி முன்னிறுத்தப்பட்டது’ என்றும் வெறுமனே வாதித்துக் கிடப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. (இப்படிப்பட்ட வெற்று வாதங்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதிலிருந்து தடுத்து வெறும் வாய்ச்சொல் வீரர்களையே உருவாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.) ஆனால், அம்பேத்கரிய வரலாற்று வாசிப்பு ஒரு விசயத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, இந்திய சமூகத்தில் சாதி என்பதுதான் மற்றெல்லா வளங்களையும் அடைவதற்கான திறவுகோலாய் இருக்கிறது என்பதே அது.

எது அடிக்கட்டுமானம் எது மேற்கட்டுமானம் என்ற தத்துவார்த்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக நடைபெற்ற மயிர்பிளக்கும் விவாதங்கள் பலநேரங்களில் சாதியின் இருப்பை குறைத்து மதிப்பிடவே உதவி செய்தன. இந்த சிக்கலுக்குத் தீர்வு கண்டுவிட்டால் போதும், மறுநாள் காலை எட்டரை மணி பஸ்சில் புரட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என்பது போன்ற பாவனைகளுடன் இந்த விவாதங்களை நீட்டித்துக் கொண்டிருப்பது தேவையற்றது. மேலைச்சமூகங்களுக்கு பொருந்திய அளவுகோல்களைக் கொண்டு இந்திய சமூகத்தின் தனித்துவமான சாதியை மதிப்பீடு செய்வதில் உள்ள அபத்தங்களை உணர்ந்த இடதுசாரி இயக்கங்கள், சாதி என்கிற எல்லையைத் தாண்டுவதும் ஒரு வர்க்கமாக இணைவதும் தனித்தனியே சாதிக்கக்கூடியவையல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இந்தப் புரிதலோடு கருத்தியல் தளத்திலும் களத்திலும் நிகழும் போராட்டங்கள் மூலம் சாதி, பொருளாதாரம், பண்பாடு, பால்நிலை ஆகிய ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதே அவர்களது அரசியலாக இருக்கிறது. அதாவது தலித் அரசியலின் அடிப்படைத் தேவைகளோடு பொருந்துவதாக இடதுசாரி அரசியல் தகவமைந்துள்ளது.

மற்றெல்லா ஒடுக்குமுறைகளையும் சாதியடுக்குமுறையோடு இணைப்பதன் மூலம் சாதியத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதற்கெதிரானப் போராட்டங்களை நீர்த்துப்போக வைப்பதாகவும் இடதுசாரிகள் மீது தலித் அமைப்புகள் வைக்கும் குற்றஞ்சாட்டுகளை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டும். அதேநேரத்தில் சாதியழிப்பையும் மையப்படுத்திய சமூக மாற்றம் என்ற பொதுஇலக்கை எட்டுவதற்கான இடதுசாரிகளின் போராட்டத்தில் தலித் அமைப்புகளும் பங்கெடுக்க வேண்டும். இணைந்து செயலாற்றுவதன் மூலம் ஏற்படும் கருத்தொற்றுமையே இங்கு நிகழவேண்டிய எல்லா மாற்றங்களுக்கும் முன்னிபந்தனையாக இருக்கிறது.

- ஆதவன் தீட்சண்யா

Pin It