இன்று நாட்டை அச்சுறுத்தக்கூடியதாக இந்துத்துவா விளங்குகின்றது. ஆளும் வர்க்கத்தினர், இந்தியாவில் நடைபெற்று வருகிற சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். ‘தாய்மதத்திற்குத் திரும்புதல்’ (வீட்டிற்குத் திரும்புதல் - க்ர்வாபஸி), ‘மருமகள்களை அழைத்து மகள்களாக்குங்கள்’ என்பது போன்ற முழக்கங்கள் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு ஆதரவாக எழுப்பப்படுகின்றன. ஒற்றை பெரும்பான்மை ஆணாதிக்கவாதம் தலைவிரித்தாடுகிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் அல்லது இந்துத்துவம் பாசிஸத் தன்மைகொண்டது. இன்றைய அரசே பாசிஸ அரசாக விளங்குகிறது. இந்துத்துவாவின் வழியில் குறுக்கிடுபவர்கள் வெட்டிக் கொல்லப்படுவார்கள் என்று மதவெறியர்கள் அறைகூவல் விடுக்கின்றார்கள். இந்துத்துவாவின் அடித்தளம் புதிய தாராளமயம் ஆகும். தாராளமயக் கருத்தியலின் அதிதீவிர வடிவம் தான் புதிய தாராளமயமாகும்.
முதாராளமயவாதமும் தீவிரவாதமும் இணைந்த வடிவம்தான் புதிய தாராளமயம். செத்துக் கொண்டிருக்கிற முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய 1945-1960 காலப்பகுதிதான் முதலாளித்துவத்தின் பொற்காலம் ஆகும். முதலாளித்துவத்திற்கான மரண நெருக்கடி 1970களில் தொடங்கிவிட்டது. அதிலிருந்து விடுபடுவதற்காக உருவாக்கப்பட்ட புதிய தாராளமயப் பொருளாதாரம், முதலில் சிலி நாட்டில்தான் பரிசோதிக்கப்பட்டது. சிலியின் அதிபர் ஆலன்டே கொல்லப்பட்டு இது அங்கு அரங்கேற்றப்பட்டது. இதனை அரங்கேற்றியவர்கள் ‘சிகாகோ பையன்களான’ சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயின்ற சிலிநாட்டுப் பொருளாதார வல்லுநர்கள்.
சுதந்திரமான சந்தைகளுக்கு அனுகூலம் செய்வது என்பதைத் தவிர வேறு எந்த வரையறையும் புதிய தாராளமயத்திற்கு இல்லை. இது முழுக்க ஆர்.எஸ்.எஸ்.ஐப் போன்றது. இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ப் (இந்து தேசம்) பார்த்தல் என்பதற்கு அனுகூலம் செய்வதைத் தவிர வேறெந்த நோக்கமும் ஆர்.எஸ்.எஸ்.க்கு இருப்பதாகத் தெரியவில்லை. புதிய தாராளமயம் தனிமனிதர்களை அடிப்படை அலகாகக் கருதுகின்றது. இந்தத் தடைகளற்ற சுயநலமிக்க தனிமனிதர்களிடையே போட்டியை ஏற்படுத்துகின்றது. இவர்களையே மனிதகுல முன்னேற்றத்தின் முதன்மை நகர்த்துநர்களாகக் கருதுகின்றது. இது வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை, வறுமை என்பனவற்றைச் சமூகக்கட்டமைப்பின் குறைபாடாகப் பார்க்காமல், தனிமனிதர்களின் திறமையின்மையாக ஏற்றியுரைக்கின்றது. சந்தை, வேலைப்பாடமைந்த கலைப்பொருளாக உருவெடுக்கிறது.
அதன் பெயரால் சுதந்திரமான போட்டி தனிமனிதர்களிடையே நிகழ்த்தப்படுகிறது. ஆகவே புதிய தாராளமயத்தின் வாய்பாட்டைப் பின்வரும் மூன்று அளவு விதிகளாக வரைந்து காட்டலாம்: 1. தீவிர தனிமனிதவாதம் 2. சமூக டார்வினிய போட்டி 3. சுதந்திரச்சந்தை அடிப்படைவாதம். இவைதாம் புதிய தாராளமயத்தை நிகழ்த்திக் காட்டுவதற்கான கருத்தியல் அரங்கைச் சமைக்கின்றன. புதிய தாராளமயம் சமுதாயம், காலம், வெளி ஆகிய எல்லாவற்றையும் தனித்தனிப் பொருட்களாக வேறுபட்டனவாகப் பார்க்கின்றது. சமூகம் என்பது திட்டமிட்டப்பட்டு வேறுபட்ட அணுநிலைப்படுத்தப்பட்ட தனிமனிதர்களாக நொறுக்கப்பட்டிருக்கிறது; தூள்தூளாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
புதிய தாராளமயத்தின் மையமாய் சமூக டார்வினியம் இருக்கிறது. ‘தகுதிவாய்ந்த உயிரினங்கள் தான் வாழமுடியும், இருத்தலுக்கான போராட்டம் தொடர்கிறது’ என்பது டார்வின் கருத்து. புதிய தாராளமயம், சமுதாயநிலை புள்ளிவிபர ஆய்வு ரீதியாக, உலக மக்கள்தொகையைக் கீழிறக்குவதற்கு எதிர்நோக்கியிருக்கிறது. பிரபஞ்சத்தின் சக்திக்கு ‘தகுதியான சூழலில்’ வாழ முடிகின்றவர்கள்தான் நிலைத்திருக்கமுடியும் என்கிறது. அப்படியென்றால் ‘போட்டியில் இல்லாத’ 400 கோடி மக்களை அது வெளியேற்றுகிறது.
நல்ல வேளையாக இந்த பெரும் மக்கள் திரளை அழித்தொழிப்பதற்குச் சாத்தியமான தொழில்நுட்பத் தீர்வு எதுவும் இல்லை. அவ்வாறெனில் அவர்கள் இந்தப் ‘பயனற்ற’ மக்கள் திரளோடுதான் சேர்ந்து வாழ வேண்டியிருக்கிறது. புதிய தாராளமயம் ‘சமூகநீதி’ போன்ற விஷயங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. உலகவங்கி உட்படுத்துதல் ((Inclusion) பற்றிப் பேசுகிறதென்பது முழுக்க இந்துத்துவவாதிகள் பேசுகிற ‘சமராஷ்டிரம்’ (சமத்துவதேசம்) என்பதைப் போன்ற ஒட்டுப்போடுகிற வேலைதான். இது தலித்துகளுக்கு நலம் பயக்கக்கூடியதென்று பேசுகிற ‘தலித் அறிவாளிகள்’ என அழைக்கப்படுபவர்களைப் பார்த்து நான் வருந்துகிறேன்.
புதிய தாராளமயத்தின் கருதுகோளிலேயே அடிப்படை முரண்பாடுகள் இருக்கின்றன. அது ‘அரசை’ச் சார்ந்திருப்பது மிக வெளிப்படையாக இருக்கிறது. அதே சமயத்தில் சந்தைதான் எல்லாவற்றிற்குமான இயங்கு தொழில்நுட்பம் என்று அழுத்திக் கூறுகிறபோது, அரசு அதனை ஆதரிக்கவேண்டுமெனக் கோருகிறது. புதிய தாராளமயம் எங்குமே மக்களால் ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்கப்பட்டு ஏற்கப்படவில்லை. அது எப்போதும் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் அரசின் வழியாகவே நுழைகின்றது. அதன் வருகைக்குப்பின்னர் அது அரசுகளை அழிப்பதோ வலுவற்றதாக்குவதோ செய்வதில்லை.
மாறாக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதன் மையச்செயல்பாட்டில் எல்லோரையும் அடக்கியாளக்கூடிய செயல்முறையால் மிக வலிமையுள்ளதாக மாற்றம் பெற்றிருக்கின்றது. புதிய தாராளமயத்தின் கருத்துக்கள் அரசுகள் செயல்படும் முறையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. புதிய தாராளமயம் நேரடியாகவே மக்கள்நல அரசை இடித்துத் தரைமட்டமாக்குகிறது. அத்துடன் மானியம், வரிச்சலுகைகளை ஒழித்துக்கட்டுகிறது. அரசு, வணிகத்துறைகளைத் தனியார்மயமாக்கல் - குழுமப்படுத்தல் செய்கின்றது. தொழிற்சங்கங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்துகிறது. சுகாதாரம், சேவை, கல்வி என்பனவற்றைத் தனிமனிதத்துவப்படுத்துகின்றது.
இருந்தபோதிலும் சந்தைகள் அரசாங்கத்திற்கு ஆணையிடுதல் என்ற கருத்து முந்தைய தசாப்தங்களைவிட இப்போது முட்டாள்தனமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தேசிய ஆட்சிமுறையாக வடிவங்கொண்டுள்ள புதிய தாராளமயம், ஒரு சமயக்கோட்பாடாக, யாராலும் கேள்வி கேட்கமுடியாத ஒன்றாக - எல்லோரும் எளிமையாக ஏற்றுக்கொண்டுள்ள உலகப்பார்வையாக உருவாகியிருப்பதைப் பலஅறிஞர்கள் கண்டனம் செய்துள்ளனர். புதிய தாராளமயத்தைக் கடுமையாக விமர்சிப்பவரும் உலகமயமாதலுக்கு எதிராக முன்னணிக்குரல் கொடுப்பவருமான சூசன் ஜார்ஜ், புதிய தாராளமயத்தின் பொருந்தா வளர்ச்சியினைப் பற்றி மிகச் செறிவாக கருத்துரைத்துள்ளார்:
“1945 அல்லது 1950-ஆம் ஆண்டில், நீங்கள் இன்றைய தரமான புதிய தாராளமயத்தின் கருவிப்பொதியிலிருக்கும் கருத்துக்களையோ கொள்கை முடிவுகளையோ முன்மொழிந்திருப்பீர்களேயானால், நீங்கள் காலத்திற்குப் பொருந்தாதவரென நகைப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பீர் அல்லது பைத்தியக்காரர் விடுதியில் சேர்க்கப்பட்டிருப்பீர்கள். அந்தக்காலத்தில் குறைந்தபட்சம் மேற்குலக நாடுகளில், ஒவ்வொருவரும் முதலாளித்துவத்தை மட்டுப்படுத்தும் கெயின்ஸியவாதியாகவோ, சமுதாய ஜனநாயகவாதியாகவோ, சமுதாய கிறித்தவ ஜனநாயகவாதியாகவோ அல்லது மார்க்சிய சாயலுடையவராகவோ இருந்தனர்.
முதன்மையான சமுதாய, அரசியல் தீர்மானங்களை நிறைவேற்ற சந்தையை அனுமதிப்பது என்கிற கருத்து, அரசு தானாகவே பொருளாதாரத்தில் அதற்கான பங்கினைக் குறைத்துக்கொள்வது அல்லது குழும நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவது என்கிற கருத்து, தொழிற்சங்கங்களைத் தடை செய்யவேண்டும்.
குடிமக்களுக்கு அதிக சமூகப் பாதுகாப்பளிக்கத் தேவையில்லை என்கிற கருத்து, இவையெல்லாம் அந்தக்காலத்தின் உயிர்த்துடிப்பிற்கு முற்றிலும் அந்நியமானவை. ஒருவேளை யாராவது உண்மையிலேயே இக்கருத்துக்களோடு உடன்படுவார்களென்றால், அவர் பொதுத்தளத்தில் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குவார். மேலும் அவருக்கான கேட்போர் கிடைப்பதும் அரிதாக இருக்கும் (ஜார்ஜ் 1999, பத்தி 2).
ஹார்வி (2005) எனும் அறிஞர், ‘பிறர் உடைமையைக் கவர்வதன் வாயிலாக மூலதனத்தைத் திரட்டுகின்ற செயல்முறையே புதிய தாராளமயம்’ என்று மிகச் சரியாக வரையறுக்கிறார். இது ஆச்சரியமில்லை. முதலாளித்துவத்தின் கருத்துக்கள் அரசியல், சமுதாய, பண்பாட்டு நிறுவனங்களில் அரசு - நிலையில் உட்செலுத்தப்பட்டிருக்கின்றன.
புதிய தாராளமயம் வலதுசாரி புரட்சியைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இது சமகால சமுதாய ஒழுங்கமைவின் வாழ்க்கை உறவுநிலைகளைத் தாக்குகிறது. சமத்துவமற்ற பொருளியல் சூழ்நிலைகளில் இத்தகைய உறவுநிலைகள் கசப்பூட்டுவதாக மாறுவதற்கு தனிமனிதர் மற்றும் சமூக செயலாண்மை உணர்வுநிலையின் மீது ஆழமான வெட்டு, சமத்துவம் முதலான ஜனநாயக மதிப்புக்களை அப்புறப்படுத்தல் மற்றும் எதிர்த்தல், நம்பிக்கையின்மையையும் அழுகுணித்தனத்தையும் ஊக்குவித்தல் என்பனவற்றிற்கு வழிவகுக்கின்றன. எல்லா அரசியல், சமுதாய, பொருளாதாரத் தீர்மானங்களை ஒருங்கிணைக்கும் கோட்பாடாக சந்தை விளங்கவேண்டுமென்கிற நம்பிக்கையோடு புதிய தாராளமயம் மணம் புரிந்துள்ளது. குடிமகன் தகைமை, சமுதாய வாழ்க்கை என்பதன் அர்த்தங்களை புதிய தாராளமயம் துரத்தியடிக்கின்றது.
அதேசமயத்தில் ஜனநாயகம், பொதுச்சொத்துக்கள், மக்கள்நல அரசாங்கம், பண்டமாக்கப்படாத மதிப்புக்கள் என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்துகிறது. இதன் கொடூரமான கொள்கை முடிவுகள், தொழில்முனைவு மற்றும் வணிகம் ஆகிய எல்லா நிலைகளிலும் வியாபாரத்தை ஒழுங்குமுறை விலக்கம் செய்கிறது; செல்வந்தர்களுக்கும் குழும நிறுவனங்களுக்கும் வரி விலக்களிக்கின்றது; செயலற்று முடங்கிக்கிடந்த அணுஆற்றல் தொழில்துறைக்கு மீண்டும் புத்துயிர் தருகின்றது; கூட்டாக ஒன்று சேர்ந்து போராடுகின்ற - பேச்சுவார்த்தை நடத்துகின்ற - தொழிலாளர்களின் உரிமையை வரம்புக்குட்படுத்தப்படவும் வழக்கொழிக்கப்படவும் செய்கின்றது; நிலப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளுக்கு எதிராக வியாபாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்குச் சாதகம் செய்கின்ற நிலம் சார்ந்த கொள்கை முடிவு உருவாக்கப்பட்டுள்ளது; சீர்கேடு அடைந்துள்ள வேலைவாய்ப்பற்றோருக்கான வருமானப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது; கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான நிதிஒதுக்கீட்டுத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன; ஓய்வூதிய திட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்ட மனிதர்கள், வழக்கு தொடுக்கின்ற ஊழியர்கள், சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் ஆகியோரின் உரிமை வரம்புக்குட்படுத்தப்படுகின்றன (ஆர்னோவிட்ஸ் 2003:102) சந்தைதான் சமுதாயம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த முடிவுகளைத் தீர்மானிக்கிறது.
உடல்நலம், குழந்தைநலம், மக்கள் நிதியுதவி, கல்வி, போக்குவரத்து முதலான பொதுச் சேவைகள் எல்லாம் சந்தையின் விதிகளுக்குட்பட்டனவே. பெற்றோர் - குழந்தைகள், மருத்துவர்கள் - நோயாளிகள், ஆசிரியர்கள் - மாணவர்கள் ஆகியோருக்கிடையிலான சமூக உறவுகள் விநியோகஸ்தர் - வாடிக்கையாளர் உறவு என்கிற அளவில் குறைக்கப்பட்டுவிட்டது. பொதுச்சொத்து தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றது. குழும நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்காக அரசு முதலீடுகள் வேட்டையாடப்படுகின்றன. புதிய தாராளமயக் கருத்தியல் கசப்பான வறுமையின் நிலைத்த இருப்பினை, ஏழை-பணக்காரர்களுக்கிடையிலான சமத்துவமின்மைகளின் வளர்ச்சிப்பெருக்கத்தினை உருவாக்குகிறது; சட்டமயப்படுத்துகிறது (க்ருக்மேன் 2003; பிலிப்ஸ் 2003).
புதிய தாராளமயம் உலகில் மிக அழுத்தமான சமத்துவமின்மையை, எதிர்பார்க்காத அளவில் எல்லா நிலைகளிலும் எல்லாத்துறைகளிலும் ஏற்படுத்தியிருப்பதற்கு உறுதியான ஆதாரம் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் உலகின் 100 மிகப்பெரிய பணக்காரர்கள் நாம் திகைத்தத்தக்க அளவில் 24,000 கோடி பணத்தை ஈட்டியிருக்கிறார்கள். மிகுந்த வறுமையில் இருக்கின்றவர்கள் 4 மடங்கு அதிகரித்து போதுமான பணமின்றித் தவிக்கின்றார்கள்.
புதிய தாராளமயம் யாராலும் கட்டுப்படுத்தமுடியாத மாபெரும் சூதாட்டக்களமாக உருவெடுத்திருக்கின்றது. இது உலகைத் தவிர்க்கமுடியாத வகையில் மிக ஆழமான நெருக்கடிகளுக்குத் தள்ளுவதை அண்மைக்காலங்களில் அனுபவித்து வருகின்றோம். பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட இவ்வகை நெருக்கடிகளின் சுமை, ஏழைகளின் மீதுதான் வீழ்கிறது. அவர்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். புனைவாக உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தல் என்று கூறி கடுமையான சட்டங்களை உருவாக்குவது என்பது, அரசாங்கங்கள் எதிர்க்கும் மக்களை முளையிலேயே கிள்ளி எறிவதற்குத்தான். நகரமயமாதலும் நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியும் மேல்நோக்கிய வளர்ச்சியாகத் தென்பட்டாலும், அவை மக்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளைப் போர்த்தி மறைக்கவே உதவுகின்றன. அரசுகளைப் பேரதிகாரம் படைத்தவையாகவும் பாசிஸத்தன்மை கொண்டவையாகவும் உருவாக்குவது இன்று உலக முழுமைக்குமான ஒரு நிகழ்வாக இருக்கின்றது.
இனி, நாம் இந்துத்துவா பிரச்சினைக்கு வருவோம். பெரும்பாலான மக்கள் புதிய தாராளமயத்திற்கும் இந்துத்துவாவுக்கும் இடையிலான தொடர்பினைக் காண்பதில்லை. மெய்யாகவே, பெரும்பான்மையான விஷயங்களில் இவற்றின் சித்தாந்தக்கூறுகள் ஒத்துப்போவதில்லை. எதிரானவையாகக் கூடத்தோன்றும், சான்றாக புதிய தாராளமயம் தனிமனிதவாதத்தை உயர்த்துகிறபோது, இந்துத்துவா சமூகங்களை ஊக்குவிக்கின்றது. புதிய தாராளமயம் உலகமயமாக்கலை ஊக்குவிக்கிறபோது, இந்துத்துவா தேசியவாதத்திற்கு சாதகம் செய்கிறது.
ஆனால் இவையெல்லாம் மேலோட்டமான கருத்தியல் வேற்றுமைகளே தவிர இவ்விரண்டின் செயல்திட்டம் மிக நெருக்கமாக இணக்கமுடையவை. இவற்றின் சமூக டார்வினியத்தின் உள்ளார்ந்த மதிப்புகள், ஏற்றத்தாழ்வு, ‘திறமையின்மை’ குறித்த ஏளனம் இவையெல்லாம் ஒத்திசைவுடையன; ஒன்றுக்கொன்று நிறைவு தருவன. நமது அனுபவ அறிவிற்குப் புதிய தாராளமயத்தின் வருகையும் இந்துத்துவாவின் எழுச்சியும் தற்செயல் நிகழ்வுகளாகத் தென்படலாம். கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.
பெரிதும் தீண்டத்தகாத ஒன்றாக இருந்தது. அதனுடைய அரசியல்கருவியான பாரதிய ஜனதா கட்சி 1980கள் வரை விளிம்புநிலை ஆட்டக்காரராகவே இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்த தசாப்தங்களில் அது திடீரென்று ஒரு மாபெரும் விசையாக எழுந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. புதிய தாராளமயம் உருவாக்கிய சூழலுக்குப் பல காரணங்கள் கூறப்படலாம். ஆசைப்படுகிற நடுத்தரவர்க்கத்தின் வளர்ச்சி, பாதுகாப்பற்ற அடித்தளமக்களின் பெருக்கம், பழமைவாதிகளின் பண்பாட்டு அச்சுறுத்தல் குறித்த பார்வை இவையெல்லாம் புறக்கணித்தக்கனவல்ல.
இந்துத்துவம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் அடையாளப்படுத்தப்படுகின்றது. இது 600 துணைப்பிரிவுகளையும் அவை அதற்கான பரிவாரங்களையும் கொண்டிருக்கின்றன. நாம் முன்னரே குறிப்பிட்டபடி, சில தவறான கருத்துக்கள் காற்றில் பரவிவிடுகின்றன. அதாவது இந்துத்துவம் என்பது பெரும்பான்மை வகுப்புவாதம்; அது ஆர்.எஸ்.எஸ். உடன் உறவுகொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சமயச் சார்பற்றதாகக் கருதவைக்கிறது. முதலில் நாம் முன்பு கூறியபடி, இந்துத்துவம் வெறும் வகுப்புவாதம், சமயச் சார்பின்மைக்கு எதிரானது என்பது மட்டுமல்ல. இது கடிவாளமற்ற பாசிஸம். நாம் அதனை வகுப்புவாதம் என்ற வாசகத்தின் அடிப்படையில் பேசுவோமானால், நாம் ஆச்சரியப்படத்தக்கவகையில் அதன் வேர்கள் காங்கிரஸ்காரர்களிடம் போய்ச் சேருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.இன் முன்வரு தூதனான இந்து மகாசபை மிக முன்னதாகவே பிறந்துவிட்டது.
இந்து மகாசபைகள் இந்திய தேசிய காங்கிரஸ் பிறப்பதற்கு முன்னரே, 1882-இல் லாகூரில் பரவியிருந்தது. இந்த சபைகள் 1906-இல் கிட்டத்தட்ட பஞ்சாபின் எல்லா மாவட்டங்களிலும் நிறுவப்பட்டிருந்தன. இந்த இந்துசபைகள் போட்ட அடித்தளத்தில்தான் லாலா லஜபதிராய், லால்சந்த், ஷாதிலால் ஆகியோர் பஞ்சாப் இந்து சபையை 1909-இல் தோற்றுவித்தனர். அமிர்தசரசில் இந்து மகாசபை மிகப் பின்னதாக 1914-இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹரிதுவாரில் இருந்தது. இதன் முதல் ஆண்டிறுதி கூட்டத்தொடர் 1915-இல் அங்கு நடைபெற்றது.
இந்து மகாசபை தொடக்கத்திலிருந்தே மேல்தட்டு இந்து நற்குடியினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. லக்னோ ஒப்பந்தம், இந்துக்களுக்கு எதிராக கேரளத்தில் நடந்த மாப்பிள்ளைமார் (முஸ்லிம்கள்) கலகம், பத்தான் வெறியர்களால் நடத்தப்பட்ட முல்தான் மற்றும் கோஹத் கலகங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் இது இந்துக்களின் மத்தியில் மிகப்பெரிய இயங்குவிசையாக உருவெடுத்தது. இதன் ஆரம்பகாலத் தலைவர்கள், மதன்மோகன் மாளவியா மற்றும் லாலா லஜபதிராய் ஆவர். இவர்கள் பஞ்சாப் இந்துசபையின் இயக்குவிசையாக இருந்தவர்கள். மாளவியா இந்துக்களின் அரசியல் ஒற்றுமைக்கும் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அணி திரட்டினார்.
அத்துடன் இஸ்லாமியர்கள் இந்துக்களாக ‘மறு மதமாற்றம்’ செய்யப்படவேண்டுமென்றார். உண்மையிலேயே, பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்கள் 1920கள் வரை இந்து மகாசபையின் ஆண்டிறுதி கூட்டத்தொடர்களுக்குச் சென்று வந்தனர். காங்கிரஸ் தனது சமயச்சார்பற்ற முகத்தைப் பெரிதுபடுத்திக் காட்டிக்கொண்டாலும், அதன் நடத்தைமுறையில் அது ஒரு இந்து நிறுவனமாகவே விஞ்சி நிற்கிறது. திலகரின் இந்து சமயச்சார்பும், சமூகப் பழமைவாதமும் எல்லோராலும் விரிவாக நன்கு அறியப்பட்டவைதாம். அவர் இந்துத்துவா இயக்கத்தின் முக்கிய புள்ளிகளிடமிருந்துதான் தூண்டுதலைப் பெற்றார். தீவிரவாத இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் மும்மூர்த்திகளான லால், பால், பால் (லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால்) ஆகிய மூவருள் மூன்றாவது தலைவரான பிபின் சந்திரபாலும் மற்ற இருவருக்கு இணையாக இந்துக்களுக்கு சாதகமான வகுப்புவாதத்தினால் ஊக்குவிக்கப்பட்டவரே. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இவ்வகையான தொடக்கநிலையிலான போக்குகளையும் மனப்பாங்குகளையும் முந்திச்சென்று வெளிப்படையாகவே அதனது “இந்து ராஷ்டிரம்” (இந்துதேசம்) என்கிற நச்சு சித்தாந்தத்துடன் வெளிவந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் பலிராம் ஹெட்கேவார் என்கிற பிராமணரால் சிறிய அளவில் சிறுவர் சாரணர் இயக்கமாகத் தொடங்கப்பட்டது. அது படிப்படியாக வன்முறைப் போக்குகளைக் கொண்ட ஒரு வகுப்புவாத இராணுவ அமைப்பாக வளர்ச்சியடைந்தது. இது முழுக்க மகாராஷ்டிர பிராமணர்களின் அமைப்பு. இது உள்ளூர் பிராமணரல்லாதாரிடம் சிறிது கூட அனுதாபம் பெறவில்லை. வேறு மாகாணங்களிலும் கூட ஆர்.எஸ்.எஸ்.இன் தலைமை அமைப்பாளர்களாகவும் முழுநேர ஊழியர்களாகவும் வேறுபாடின்றி மகாராஷ்டிர பிராமணர்களே இருந்தனர். அவர்கள் அடிப்படையில் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின்னர், ‘பேஷ்வா ராஜ்ஜியத்தை’ மறுகட்டமைக்கவே கனவுகண்டனர். பேஷ்வா மன்னர்கள் மகாராஷ்டிர பிராமணர்கள்.
ஆர்.எஸ்.எஸ்.இன் கொடி கூட, பேஷ்வாக்களின் ‘பாக்வா’ கொடி என்கிற காவிக்கொடியே. இந்த அமைப்பு, வன்முறை வழிகளுடனும் பாசிஸ சார்புடனும் இரகசியமாகச் செயல்பட்டது. எந்தவிதமான அரசியல்சாசனத்தையும் இது கொண்டிருக்கவில்லை. இதனுடைய இலக்குகளும் நோக்கங்களும் ஒருபோதும் தெளிவாகக் கூறப்படவில்லை. பொதுமக்கள் வழக்கமாக இதனை ஒரு பண்பாட்டு அமைப்பென்றும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டதென்றும் கூறுவர். இதன் உண்மையான நோக்கங்கள் அதன் உயர்பதவிகளில் இருப்பவருக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை.
அதன் கோப்புகளில் கூட இல்லை. இதனுடைய ‘உள்வட்டத்தினர்’ மட்டுமே இரகசியமாக அறிந்து வைத்திருப்பர். இந்த அமைப்பு எந்தவிதமான ஆவணங்களையும் பராமரிப்பதில்லை. உறுப்பினர்கள் பதிவேடுகள் இல்லை. அதன் வரவுசெலவு பற்றிய ஆவணங்கள்கூட இல்லை. இதன் கட்டமைப்பு சர்வாதிகாரத் தன்மைகொண்டது. உயர் அதிகாரம் படைத்த தலைவரால் வழிநடத்தப்படுகிறது. ஜனநாயகத்திற்கான சிறு தடயம் கூட இதில் இல்லை.
மர்ஷியா கஸோலரி போன்ற ஆய்வாளர்கள், இந்துதேசியத் தலைவர்களுக்கும் இத்தாலியின் பாசிஸிட் பெனிட்டோ முசோலினிக்கும் இடையிலான உறவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். 1924-1935 காலகட்டத்தில், திலகரின் ‘கேசரி’ பத்திரிகை இத்தாலி, பாசிசம் மற்றும் முசோலினி பற்றி கட்டுரைகளும் தலையங்கங்களும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறது. மராத்திய பிராமண பத்திரிகையாளர்கள், பாசிஸ ஆட்சியின் மூலம் பின்தங்கிய நாடான இத்தாலி உயர்தர அதிகாரம் பெற்ற நாடாக உருமாறியிருப்பதைக் கண்டு கவரப்பட்டுள்ளனர். இந்திய உற்றுநோக்கர்கள், பாசிஸம் அரசியல் பதட்டங்களுக்கு முன்னர் இருந்த ஒழுங்கிற்கு நாட்டை மீட்டுவரும் என்பதில் உடன்பாடு கொண்டிருந்தனர்.
கேசரி பத்திரிகையில் வந்த தலையங்கத் தொடர்களில், சுதந்திர அரசாங்கத்திலிருந்து சர்வாதிகாரத்திற்குச் செல்வதென்பது, ஆட்சி குழப்பங்களிலிருந்து ஒழுங்கமைவுச் சூழலுக்குச் செல்வதாகும், அங்கு சமூகப் போராட்டங்கள் இருக்காது என்பதாக விவரிக்கப்பட்டது. மராத்தி நாளிதழ்கள் முசோலினி செய்த அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் கணிசமான இடமளித்தன. குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்முறையை மாற்றி, உறுப்பினர்களை முன்மொழிதலின் மூலம் நியமனம் செய்து, பாராளுமன்றத்தை ‘பாசிஸ பேரவையாக’ மாற்றியதைப் பற்றிக் குறிப்பிட்டன. சாராம்சமாக, ஒட்டுமொத்த பிராமணர்களும் ‘ஒற்றை மனிதன்’ அரசாங்கம் ஜனநாயக நிறுவனங்களை விட ஒரு தேசத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும், மிக பிணைப்புள்ளதாகவும் இருக்கும் என்கிற முசோலினியின் கருத்தினைப் பாராட்டியுள்ளனர். இக்கருத்து ‘ஒரு தலைவனுக்குப் பணிந்து நடத்தல்’ (‘ஏக் சலங் அனுவர்தித்வா’) என்பதைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் சித்தாந்தத்தில் எதிரொலிக்கவில்லையா?
மராத்திய பிராமணர்கள் இத்தாலிக்கும் இந்தியாவிற்கும் ஒப்புமை இருப்பதைக் கண்டறிந்தனர். அதனால் முசோலினி பின்பற்றிய ஒழுங்குமுறைகளால் கவரப்பட்டனர். இதற்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று ஒழுக்கக் கட்டுப்பாடு. அது மிக உறுதியான மதப்பற்று, குடும்பத்தின் மீது பற்றுதல், பழைய மதிப்புகளின் மீது மரியாதை, விவாகரத்து இன்மை, ஒற்றை மனிதர்கள் இன்மை, பெண்களுக்கு வாக்குரிமை இன்மை, பெண்கள் வீட்டில் சமையலறையில் உறைந்திருப்பதுதான் அவர்களது கடமை என்பனவாகும். தொடக்கத்திலிருந்தே தேசிய இராணுவம், ‘புரட்சிக்கான காவலன்’ என்று அழுத்திக் கூறப்பட்டது. ஆட்சியைக் கவிழ்க்கிற கட்சிகளுக்குத் தடை, பத்திரிகைகளுக்குக் கட்டுப்பாடுகள், ‘கருத்து வேறுபாடுகளுடையவர்களை’ பொதுப்பதவிகளிலிருந்து வெளியேற்றுதல், இறுதியாக எதிர்ப்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குதல் முதலான பாசிஸ ஆட்சியின் தடை அளவீடுகளை அவர்கள் வியந்து பாராட்டினர். ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட பிறகு பாசிஸ ஆட்சியும் முசோலினியும் குறிப்பிடத்தக்க அளவில் மகாராஷ்டிராவில் பிரசித்தி பெற்றிருந்தனர்.
இந்துத்துவாவின் மூலவரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் (1883-1966) இத்தாலிய புரட்சியாளரான மாஜினியின் வாழ்வாலும் செயல்களாலும் பெரிதும் கவரப்பட்டிருந்தார். இவர் 1904-இல் ‘அபிநவபாரத்’ என்கிற இரகசிய அமைப்பை, முசோலினியின் ‘இளம் இத்தாலியர்’ இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு நிறுவினார். மாஜினி ஒரு பாசிஸவாதியாக இருந்தார். இத்தாலியில் மாஜினியின் தேசியம், ஆட்சியாதிக்கத்தன்மை கொண்டதாகவும், ஜனநாயக விரோத முனைப்புகொண்டதாகவும் பழமைவாத எழுச்சி மற்றும் பாசிச அரசியலின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் விளங்கியது.
ஒட்டுமொத்த உலகமும் நாசிஸத்தையும் பாசிஸத்தையும் கண்டனம் செய்தபோது, சாவர்க்கர் ஜெர்மனியையும் இத்தாலியையும் வலிமைமிக்க தேசங்களாக உருவாக்கிய அத்தத்துவங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புகழ்ந்து ஓங்கி ஒலித்தார். ஹிட்லர், முசோலினி மீது நேரு குற்றம் கண்டதை சாவர்க்கர் அடிக்கடி விமர்சித்து வந்தார். திலகர் தொடங்கி எல்லா மராத்திய சித்பவன பிராமணர்களும் தம்மை ஆரியர்களோடும் அதனடிப்படையில் ஜெர்மானியர்களோடும் அடையாளப்படுத்திக் கொண்டனர்.
சாவர்க்கர் சொன்னார்: “ஜெர்மனி ஆரியப்பண்பாட்டின் பகைவர்களுக்கு எதிரான புனிதப்போரினை நடத்தி, உலகெங்கிலுமுள்ள ஆரியதேசங்களை ஒன்றிணைத்து அவர்களை உணரவைத்தது. மேலும் இந்தியாவிலுள்ள இந்துக்கள் இழந்துபோன பெருமையை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.” ஜெர்மனியில் 1938-இல் யூதர்களுக்கு எதிராகச் சட்டங்கள் முடுக்கிவிடப்பட்ட சமயத்தில், சாவர்க்கர் அதைப்போன்ற தலைவிதி இந்திய முஸ்லீம்களுக்கு நேரவேண்டுமென்று கருத்துரைத்தார். சாவர்க்கர் ஹிட்லர்மீதும் முசோலினிமீதும் கொண்டிருந்த பற்றுக்கும் பாராட்டுதலுக்கும் இதைப்போன்று ஏராளமான சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.
திலகரின் சீடராக இருந்த பாலகிருஷ்ணராம் என்கிற பி.எஸ்.மூஞ்சே, தொடக்கத்தில் ஹிந்து மகாசபையுடன் உறவுகொண்டிருந்தார். இவர் தான் நாக்பூரில் ‘ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக் ஸங்க்’ (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பினை 1925-இல் நிறுவிய கேசவ் பலராம் ஹெட்கேவாரின் (1898-1940) ‘குருநாதராக’ இருந்தார். மூஞ்சே முசோலினியை நேரடியாகச் சந்தித்து அவருடைய இராணுவப் பள்ளிகளைப் பார்வையிட்டவர் ஆவார். மூஞ்சேயின் முசோலினி மீதான புகழுரைகளும் பாராட்டுதல்களும் அவற்றை இந்தியாவில் கொண்டுவரவேண்டுமென்கிற ஆசையும் குறிப்பிடத்தக்கன.
மூஞ்சேக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்குமான தொடர்பு, மார்ஷியா கஸோலரி எனும் அறிஞரால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மூஞ்சே, 1927-1937 காலப்பகுதியில் ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்தார். இவர் தனது தலைமைப்பொறுப்பை சாவர்க்கரிடம் ஒப்படைத்தபோதுதான், ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக இந்துத்துவ அமைப்பாக உருவெடுத்தது. இந்தியாவை ‘ஹிந்து ராஷ்டிர’மாக (இந்து தேசம்) உருவாக்குவதே இதன் ஒட்டுமொத்த பார்வையாக இருந்தது. இந்தியா ‘புகழ்மிக்க கடந்த காலத்தைக்’ கொண்டிருந்தது என்கிற முகப்புரை முழுவதும் பொய்யுரையை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால் பொய்களே இந்துத்துவ படைப்பிரிவின் கொக்கிப்பிடி வளையங்களாக இருந்தன.
ஹெட்கேவாருக்குப் பின்வந்த எம்.எஸ்.கோல்வால்கர் (1906-1973) உணர்ச்சி வெளிப்பாட்டில் அனல் மிகுந்த கந்தக திராவகம் போன்றவராகவும் எதிர்தாக்குதல் புரிபவராகவும் இருந்தார். கோல்வால்கரின் கருத்துப்படி, இந்துப் பண்பாட்டின் இதயம் என்பது இந்து மதமே. அதன் உன்னத கருத்துக்கள் வேதங்களிலிருந்து பிறந்தவையே. சமஸ்கிருதம், கடவுளர்களின் -அறிவொளிமிக்க ஆரிய இனத்தாரின் பேச்சுமொழி. மற்ற எல்லாமொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்தவையே. கோல்வால்கருக்குப் பின்னர் வந்த டி.எஸ். தியோரஸ், அவரது முன்னோடிகளின் பாசிஸ வரைகோட்டிலேயே காலூன்றி நின்றார்.
சங் பரிவாரின் “ஒற்றை தேசம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மதம், ஒற்றை மொழி” என்கிற முழக்கம், “ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவன்” என்கிற நாஜிக்களின் முழக்கத்தோடு ஒப்புமையுடையது. முழுவதும் நாஜிக்களைப் போல, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ‘நாம்-தான்’ எனும் தன்மையின் அடையாளத்தை மரபு மற்றும் சடங்காச்சாரங்களிலிருந்து உருவாக்கினர்.
அதே சமயத்தில் அவர்கள், அவர்களின் ‘மற்றமைகளாக’ முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளைப் படைத்தார்கள். ஆர்.எஸ்.எஸ். எப்போதும் தன்னை ஒரு தேசியப் பண்பாட்டு அமைப்பாகவே காட்டிக்கொள்கிறது. அதன் கருத்துநிலையை ஒருபோதும் வெளிப்படுத்தாவிட்டாலும் கூட, அதன் அடிப்படை நோக்கம் மறைந்திருப்பதில்லை. அவர்கள், இந்து தர்மசாஸ்திரங்களை ஆதாரமாகக்கொண்ட - சனாதன தர்மத்தின் அடிப்படையிலான, பிராமணர் ஆட்சியை மறுநிர்மாணம் செய்யவே விரும்புகின்றனர்.
சித்பவன பிராமண சமூகத்தாரோடு முழுக்க தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பேஷ்வாக்களின் வீழ்ச்சியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நேரடியாகத் தோற்றம் கொண்டதை எளிதில் நாம் தடம் காணமுடியும். பேஷ்வா மன்னர்களின் ஆட்சி, பிராமணர் அல்லாதாருக்கு மிகவும் அடக்குமுறை கொண்டதாக இருந்தது. பீமா -கோரேகௌன் எனுமிடத்தில் நடந்த இறுதிப்போரில், பேஷ்வா படை மிகச்சிறிய அளவிலான தலித் படைவீரர்களால் தோற்கடிக்கப் பட்டதற்குப் போதுமான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளன.
தலித்துகள் பேஷ்வாக்கள் ஆட்சியில் தாங்கள் பெற்ற அடக்குமுறைகளுக்கும் இழிவுகளுக்கும் பழிதீர்க்கும் சந்தர்ப்பமாகவே இப்போரினைக் கருதியிருக்கிறார்கள். பேஷ்வாக்களின் வீழ்ச்சி பொதுமக்களால் கொண்டாடப் பட்டதாகவும் புனேயில் இனிப்புகள் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் பிராமணர்கள் தங்கள் தோல்வியை ஜீரணித்துக்கொள்ளவில்லை. அவர்கள் அதற்குப்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பல வகைகளில் கலகம் புரிந்தனர். திலகர் இந்த கலகக்காரர்களை, அரசியல் இலக்குகளை நோக்கி ஆற்றுப்படுத்தினார். இந்து தேசியத்தின் பிறப்பிற்கு ஊக்கியாக இருந்தார்.*
Bapu, Prabu, Hindu Mahasabha in colonial North India, 1915-1930: Constructing Nation and history, Routledge, New York, 2013, P.17. (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற 11-ஆவது மாநில மாநாட்டுத் தொடக்கவுரையான ஆங்கில உரை மொழிபெயர்ப்பின் கட்டுரை வடிவம்.)
ஆங்கில மூலம்: ஆனந்த் டெல்டும்ப்டெ
தமிழில்: பா.ஆனந்தகுமார்