தாய்க்கோழி இறைகூட எடுக்காமல் அடைகாத்தால் கோழிமுட்டையில் இருந்து குஞ்சு வெளிப்பட 21 நாட்கள் ஆகும். முட்டையின் மீது தாய்க்கோழி செலுத்தும் வெப்ப அளவுதான் குஞ்சு பொரிப்பதற்குக் காரணம். இதை அறிந்து, அறிவியல் மனிதன் அந்த வெப்பத்தை இயந்திரத்தின் மூலம் 21 நாட்கள் செலுத்தி முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்க வைத்து விடுகிறான். கோழிமுட்டையின் உள்ளே உள்ள வெண், மஞ்சள், கருப்பொருள்கள் குஞ்சிற்குத் தேவையான புரதம், அமினோ அமிலங்களை, தாய் தரும் வெப்பத்தின் மூலம் தந்து விடுகிறது. இந்த விந்தையை எல்லா உயிரினங்களிலும் நிகழ்த்த முடிவதில்லை. ஆடு சினை அடைந்து ஐந்து மாதங்களில் குட்டியை பிரசவிக்கிறது. மாடும், மனிதனும், சினை அடைந்தபின் பத்து மாதங்களில்தான் பிரசவிக்க முடிகிறது. உரிய காலத்திற்கு முன்பு நடைபெறும் பிரசவத்தை குறைப்பிரசவம் என்று சொல்கிறோம்.

குறைப்பிரசவத்தில் வரும் உயிர்களைக் காப்பதில் அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. கருப்பையில் வளரும் உயிர்களுக்கு உரிய காலம் வரை, உருவம் பெற்று வளர வெறும் வெப்பம் மட்டுமல்ல, புரதமும், அமினோ அமிலங்களும் தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. அதற்கான காலம் தான் ஐந்து, பத்து, மாதங்கள். புதிய உயிரினங்கள் தோன்றுவதற்கு மட்டுமல்ல, புதிய சமுக, அரசுமுறை, அமைப்புகள் தோன்றுவதற்கும், மாறுவதற்கும், காலத்தின் வளர்ச்சியும், உரிய சந்தர்ப்பமும், {புரதம், அமினோ அமிலங்களைப்போல} தேவைப்படுகிறது. இதை தோழர் லெனின் இரத்தின சுருக்கமாக "ஆட்சி செய்பவர்கள் இனியும் இந்த ஆட்சியைத் தொடர முடியாது என்றும், ஆட்சி செய்யப்படும் மக்கள் இனியும் இந்த ஆட்சியில் தொடர்ந்து வாழ முடியாது என்றும் உணரும் வேளையில்தான், ஆட்சிமாற்றமும், சமுகமாற்றமும் நடைபெறும்" என்று கூறுகிறார். அதுதான் சமுகத்தின் கொதிநிலை.

எந்த மாற்றமும் தானாக நடந்துவிடாது. மனித சமுகத்தில் கொதிநிலையை சமுகம் அதன் வளர்ச்சியில் இருந்தும், அதன் தீர்வு காணமுடியாத பிரச்சனைகள் மூலமும் வழங்கும். அதைப் பயன்படுத்தி மனித சிந்தனையும், உழைப்பும் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கொதிநிலை இன்றியோ, சிந்தனையும், உழைப்பும் இன்றியோ அல்லது ஒன்றிருந்து மற்றொன்று இல்லாமலோ மாற்றம் நிகழாது, நிகழ்ந்ததும் இல்லை. இது வரலாறு தரும் செய்தி.

 ஜனநாயகம் என்ற கருத்து 2400 ஆண்டுகால பழமை வாய்ந்தது. அது தோன்றி 2100 ஆண்டுகள் கடந்தபின் 19 ஆம் நூற்றாண்டின் கடைசியில் அமெரிக்காவிலும், பிரான்சிலும் அரைகுறையாக பிரசவம் ஆனது. அதற்கு உந்துவிசையாக இருந்தது தொழிற்புரட்சியும், காலனியாதிக்கக் கொடுமைகளும். குறைப்பிரசவ குழந்தையை, வளர்ந்துவந்த அறிவியல் என்ற தாய் காப்பாற்றி வந்தது. அதனால் ஒரு 50 ஆண்டுகள் கடந்தபின் ஜனநாயகம் என்ற குழந்தை உலகின் பல நாடுகளில் தவழத் துவங்கி, வளர்ந்து நடைபயின்று வருகிறது. என்ன இருந்தாலும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை அல்லவா, மேலும் அது முதுமையும் அடைந்துள்ளது அல்லவா, அதனால் அதன் நடையில், வடிவில், செயலில் சிலகுறைபாடுகள் நேர்ந்து உள்ளன. அவைகளை மீண்டும் சரிபடுத்தி, மிடுக்கு நடையுடன் நடைபோடச் செய்யவேண்டும். அதற்கும் உதவி செய்ய வேண்டியது அறிவியல் என்ற தாய்தான்.

 தேசியம், தேசவிடுதலை என்ற இரண்டு கொள்கையோடு இணைந்து, ஜனநாயகம் உலகில் பிறந்து வளர்ந்துள்ளது. அதன் 60, 70, ஆண்டுகால அனுபவம், இக்காலத்தில் வளர்ந்துள்ள அறிவியல், அதன் பலனாய் விளைந்த வளர்ச்சியும், பிரச்சனைகளும், இன்று அரசமைப்பிலும், சமுகத்தின் இதர அமைப்புகளிலும் உரிய மாற்றங்களை நிர்பந்திக்கின்றன. அறிவியல் என்ற தாய் வளர, வளர, இளமை பெறுவது விந்தையானது; ஆனால் உண்மையானது. அதனால்தான் இன்று உலகில் உள்ள நாடுகளில், ஆட்சி முறை எதுவாயினும் எல்லா நாடுகளிலும், அரசமுறைக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். எல்லா நாட்டு மக்களின் போராட்டங்களின் சாரம் என்னவென்றால், அரசு நிர்வாகத்தில், செயல்பாட்டில், திட்டமிடலில், தங்களின் பங்கைக் கோருவதும், வலியுறுத்துவதும் தான். ஆனால் ஆட்சி செய்பவர்கள், ஆட்சிக்கு உறுதுணையாய் நிற்கும் அதிகாரிகள், ஆட்சிமுறையினால் பயன் பெறுபவர்கள் எல்லாம் மக்கள் கோரும் மாற்றங்களுக்கு எதிராக தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் நலனைப் பாதுகாத்துக் கொள்ள, மக்களைக் காக்க உருவாக்கப்பட்ட சட்டம், காவல், நீதி, ராணுவம் போன்ற துறைகளை, சொந்த மக்களை கொன்று குவிக்கவும், அடக்கி ஒடுக்கவும் பயன்படுத்துகின்றனர்.

 இதுதான் உலக நாடுகளின் நிலைமை. அதே நிலைமைதான் நம் நாட்டிலும், மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரத்திலும், ஒன்றியத்திலும், கிராமத்திலும் நிலவுகிறது. மக்களுக்கும் ஆள்பவர்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகள்தான் சமுகத்தில் கொதிநிலையை உருவாக்குகிறது. அதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். அது என்ன? அதன் கொள்கை என்ன? நடைமுறை என்ன? வழிமுறை என்ன? அதாவது சமூக கொதிநிலையை தீர்ப்பதற்கு என்ன வழி? அதற்கான மனித சிந்தனையும், உழைப்பும் என்ன? என்பதுதான் நாம் விவாதிக்க வேண்டிய பொருளாகிறது. ஜனநாயக ஆட்சிமுறை தோன்றியபின் அதில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன‌. எனினும் பல தீர்க்கமுடியாத நெருக்கடிகளும் தொடர்கின்றன‌. ஆனாலும் புதியதாக ஒரு ஆட்சிமுறை இன்னும் கருத்தளவில்கூட ஏதும் உருவாகவில்லை, உருவாகும் சூழலும் ஏற்படவில்லை. சமுகத்தின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளவர்கள் அடக்குமுறையால் கொதிநிலையை அழித்துவிட முயல்கின்றனர். மக்கள் கொதிநிலையின் காரணிகளை அழிப்பதற்குப் பதிலாக மாற்று அரசு, நிர்வாக முறையை முன்னிறுத்துகின்றனர். இதில் எது சிறந்தது, மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றக்கூடியது? என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

 தேசவிடுதலையும், ஜனநாயக ஆட்சிமுறையும் தேசிய செல்வங்களைப் பயன்படுத்தி, உலக நாடுகளை உயர்த்தி உள்ளது உண்மைதான். ஆனால் தேசங்களில் மக்களின் பெரும்பான்மையினரை உயர்த்த முடியாமல் தவிப்பதும் உண்மைதான். செழுமையும், வறுமையும் சேர்ந்தே எல்லா நாடுகளிலும் இன்னமும் பயணிக்கின்றது. மருத்துவ விஞ்ஞானத்தின் உயரிய கண்டுபிடிப்புகளால், மக்களின் வாழ்காலம் அதிகரித்து உள்ளது உண்மைதான். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு பொதுசுகாதரமும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் கூட கிடைக்காமல் நோய்நொடிகளால் மடிவதும் உண்மைதான். நாடுகளில் அணைகளும், ஏரிகளும், குளங்களும் ஓடைகளும், கால்வாய்களும் இருந்தும் வெள்ளமும் வறட்சியும், பஞ்சமும், இணைபிரியாமலேயே தொடர்கின்றன. உலக மக்களின் தேவைகள் பூர்த்தியடையும் அளவிற்கு, உணவுப்பொருள்களும், இதர உற்பத்தி பொருள்களும் உள்ளன. ஆனால் அவைகள் வேண்டிய அனைவருக்கும் கிடைக்காமலேயே கொட்டிக்கிடக்கிறது, பாழாகிறது. பணம் கொழிக்கும் அமெரிக்காவும், பஞ்சத்தில் வாடும் ஆப்ரிக்காவும் ஒரே உலகில்தான் வாழ்கின்றன. இந்த நிலை இரண்டு நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்குள்ளும், ஊருக்குள்ளும் இருப்பதால் வளமும், வறுமையும் தேசிய ஜனநாயக அரசுமுறையில், வெற்றிடத்தையும், கொதிநிலையையும் ஏற்படுத்த‌ காரணமாகி உள்ளன‌.

 அரசு என்ற அமைப்பு தோன்றியநாள் முதல் மனித சமுகத்தில் ஏற்றத் தாழ்வும், ஏழையும், பணக்காரனும், சுரண்டுபவனும், சுரன்ட்டப்படுபவனும், முதலாளியும், தொழிலாளியும் ஒன்றாகவே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியும், வேற்றுமையும், பகைமையும், அதிகரித்துக் கொண்டிருப்பது தான் கொதிநிலை நோக்கி இன்றைய சமுகத்தை உந்துகிறது. அந்த கொதிநிலை உச்சத்தை அடைகின்றபோழுது, மக்களின் போராட்டங்கள் மூலம் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்தவழியில் மனித சமுகம் எத்தனையோ கொதிநிலைகளை சந்தித்து, மாற்றங்களை உருவாக்கி உள்ளது. அத்தகைய உச்சநிலையை தற்பொழுது நம் சமுகம் அடைந்துள்ளதா? என்று நாம் பரிசீலித்து ஆகவேண்டும்.

 1980 ஆம் ஆண்டுகளில் அறிவியல் உலகம் கண்டு, அறிந்து, மனித பயன்பாட்டிற்கு வந்த இணையம், அலைபேசி, தொலைக்காட்சி, கணணி, போன்ற சாதனங்கள் உலகமக்களின் நுகர்வுப் பண்பை மாற்றி உள்ளன‌. அதனால் பொருள்களின் சந்தையும், உற்பத்தியம், உழைப்பவர்களின் பயணமும், பரிவர்த்தனையும், மூலதனமும், உலகம் சார்ந்ததாக மாற்றம் பெற்றுவிட்டது. ஆனால் பொருள்களின் தரமும், கூலியும், பணிப் பாதுகாப்பும், சீரானதாகவோ, சமமானதாகவோ இல்லை. எனவே இதுவரை சமூகங்களின் உயர்வை பேணிக் காத்துவந்த, தேசியக் கோட்பாடுகளும், கொள்கைகளும் பயன் அற்றுப்போயின‌. உலகீயமும், உலகநாடுகளின் சார்புநிலைத் தன்மையும், தேசியங்களின் சுதந்திரம், தற்சார்புக் கோட்பாடுகளை மக்களின் உயர்விற்குப் பயன்படுத்த இயலாமல் செய்துவிட்டது.

எந்த ஒரு நாட்டின் அரசும் தன் மக்களுக்கு வேண்டியது என்று எண்ணி தாங்களாக எந்த சட்டத்தையும் வரைய முடியவில்லை. எந்த ஒரு நாட்டின் அரசும் சுயமாக தனித்து தங்களின் வரவு-செலவு, கணக்கை கூட தங்களின் நாடாளுமன்றத்தில் வைக்கமுடியாமல் போய்விட்டது. மொத்தத்தில் நாடுகளின் சுதந்திரம் பறிபோய்விட்டது. பொதுவாக உலக மக்களின் கலை, கலாச்சாரம், வாழ்வியல், நடை, உடை, பாவனை, கல்வி என அனைத்திலும் கலப்பும், பரிமாற்றமும் நடந்துள்ளது. இந்த உலகீய கோட்பாடு, உலகநிதிமூலதனத்திற்கும், பன்னாட்டு குழுமங்களுக்கும், உலக நாடுகளில் பட்டுக் கம்பளம் விரிக்க ஏற்பாடு செய்தது. அவர்களின் லாபம்பெருக, எல்லா நாடுகளின் அரசுகளும் இன்று இவர்களின் நலன்காக்கும் காவலர்களாக செயல்படும் நிர்பந்தம் ஏற்பட்டு, சொந்த மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. அதனால் நாடுகளில் ஜனநாயக அரசோ, மன்னராட்சியோ, சர்வாதிகாரி ஆட்சியோ, வர்க்க சர்வாதிகார ஆட்சியோ எதுவாயினும், அவைகளின் நடவடிக்கைகள், ஆடம்பர செலவுகள், ஊழல் மலிந்த நிர்வாகங்கள், அனைத்திற்கும் எதிராகப் போராட மக்களைத் தூண்டி வருகின்றன.

 சமூகங்களில் இருப்பது இரண்டு வர்க்கங்கள் ஆயினும், அதில் உள்ள பல அடுக்குகள் வர்க்கங்களின் ஒருங்கிணைப்பில் தடையாய் உள்ளன. பன்னாட்டு குழுமங்களுக்கும், பெரும்மூலதனங்களுக்கும், தங்கள் நாடு பெற்றிருந்த உரிமைகளை, மக்களுக்கு அளித்துவந்த நலன்களை, பலிகொடுத்து வரவேற்பு அளிக்க அரசுகளும், அரசியல்கட்சிகளும் தயாராகிவிட்டன‌. லஞ்சமும், ஊழலும், மூலதனத்தின் விளைபொருள் என்பதை வரலாறு கூறுகிறது. ஆனால் பன்னாட்டு மூலதனமும், குழுமங்களும், உலக அரசுகளை கள‌ங்கப்படுத்திய‌தையும், கரைபடுத்தியதையும் போல சான்றுகள் வரலாற்றில் இல்லை. ஆகவேதான் நாடுகளின் வளர்ச்சியில் வேறுபாடுகள், படிநிலை மாறுபாடுகள் இருந்தும் எல்லா அரசுமுறைகளுக்கும் எதிராக இன்று பல வடிவங்களில் மக்கள் போராடுகின்றனர். சமுகத்தில் உள்ள வர்க்கங்களின் எல்லா அடுக்குகளையும் சமமாக பாதித்து இருப்பது ஊழல், லஞ்சம் என்ற பேய்தான்.

லஞ்சம் வாங்குபவர்கள் கூட லஞ்சம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். ஆகவே இந்த லஞ்சத்தை கட்டுப்படுத்த முயற்சி எடுத்த அன்னாஅசாரே முன் வைத்த ஜன்லோக்பால் மசோதா, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அவர்களின் செயல் பாட்டிற்கும், செயல்படாமல் இருந்ததிற்கும் பொறுப்பு ஏற்கக் கோரியது. பன்னாட்டு குழுமங்களும், அதன் ஊடகங்களும், அசாரேவின் போராட்டத்தை விளம்பரப்படுத்தின‌, ஆதரவு திரட்டின‌. மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுத்தந்தது . அந்த மக்களின் ஆதரவை ஒருகட்சிக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த துவங்கியபின், மக்களிடம் இருந்த ஆதரவும், மதிப்பும் குறைய வழிகண்டது. ஏனெனில் மக்களுக்கு ஒட்டுமொத்த அரசியல், அதிகார வர்க்கங்களின் மீதும் ஏற்பட்டு இருந்த அவநம்பிக்கை மக்களை பின்வாங்க வைத்தது. அப்போராட்டத்தை ஊதி ஊதிப் பெரிதுபடுத்திய குழுமங்களும், ஊடகங்களும் அரசியல் வர்க்கத்தை மிரட்டி, பணிய வைக்கும் ஆயுதமாக அதை பயன்படுத்திக் கொண்டு, ஆதரவு தருவதை நிறுத்திக்கொண்டன‌. அதேபோல பாபாராம்தேவ் போராட்டத்தை மதவாதிகள் அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். லஞ்சம், கறுப்புப்பணம் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சி கூறுவதையும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.


 அரபு நாடுகளில் நடைபெற்ற மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவும், நிதியும் தந்த பன்னாட்டு குழுமங்கள், வால்ஸ்ட்ரீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கோ, பச்சை அமைதி போராட்டத்திற்கோ, அணுஆயுத எதிர்ப்புப் போராட்டங்களுக்கோ ஆதரவு தருவது இல்லை. அதே வேளையில் அவ்வியக்கங்களை அழிக்கவும், போராடும் நபர்களை ஒழிக்கவும், அனைத்தும் செய்வர். அந் நாடுகளில் கொதிநிலை இருந்தது உண்மை. ஆனால் அதை வழிநடத்தவும், பொறுப்பேற்கவும் போராடுபவர்கள் தயாராகவில்லை, அதாவது உரிய சிந்தனையும், உழைப்பும் இல்லை. எனவே அப்போராட்டங்கள் பயனற்றுப் போயின. வெற்றிபெற்றபின் செய்வது அறியாது நிலைதடுமாறி, எதிர்காலத் திட்டமின்றி, தட்டுத்தடுமாறி வருகின்றன. நம் சமுகத்தில் கொதிநிலை உள்ளது உண்மைதான். ஆனால் அதைப் பயன்படுத்த உரிய தத்துவமோ, திட்டமோ, கட்சியோ, இன்னும் உருவாகவில்லை. அப்படி ஒரு இயக்கத்தை மக்களின் ஆதரவுடன் உருவாக்கம் செய்வதுதான், சமுக மாற்றம் கோருபவர்களின் பணியா இருக்கமுடியும்.

 காலனீய ஆட்சி முறைக்கு எதிராக, தேசீயமும், தேசவிடுதலையும், கருத்தாக்கங்களாக உருவானது போல, தேசிய, ஜனநாயக ஆட்சிமுறையில் ஏற்பட்டுள்ள தீர்வு காணமுடியாத பிரச்சனைகளை தீர்ப்ப‌தற்கு, உலகீயம் என்ற கோட்பாடு உருவாகி உள்ளது. அனால் அதை நடைமுறைபடுத்த, இருக்கின்ற ஜனநாயக ஆட்சிமுறை போதுமானதாக இல்லை. ஆகவே அதற்கு புதிய ஆட்சிமுறையோ, கருத்தாக்கமோ, எழுச்சி பெறும்வரை "பங்குபெறும் ஜனநாயகம்" என்ற புதிய கருத்தாக்கத்தை தோழர் ஹுகேசாவாஸ் முன்வைத்துள்ளார். உண்மையில் இந்த கருத்து புதியதல்ல, ஜனநாயக கோட்பாட்டை முன்வைத்தவர்களே, மக்களின் நேரடிபங்கையும், செயல்பாட்டையும் வலியுறுத்தியவர்கள்தான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நகர அரசுகள் மட்டுமே இருந்தது. பின்னால் உருவான ரோமானிய பேரரசுகளில் இருந்து இன்றுவரை அரசுகளின் எல்லை பெரிய அளவில் பெருகி, பிரதிநிதித்துவ ஜனநாயகமாக மாறிவிட்டது. மக்களின் பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல், தங்களையும், தங்களின் கட்சியையும் மட்டுமே பிரதிபலிப்பதால் இன்றைய கொதிநிலை உருவாகி உள்ளது.

இந்த ஆட்சிமுறையில் மக்களின் கடமையும, உரிமையும் தெளிவாக உணரமுடியாதவாறு மக்களை இருளில் ஆழ்த்தி, இலவசம் தந்து, வைத்திருப்பதால் ஜனநாயகத்தின் உண்மையான பலனை இன்னமும் அனுபவிக்காமலேயே உள்ளனர். அதை மக்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு பெறச்செய்தால், மக்களின் பேராதரவும், மாற்று ஆட்சிமுறையும், நிர்வாகமும் உருவாகும். அதற்க்கான சாவி ஆட்சியில் மட்டுமல்ல, சமுகத்தின் அனைத்து அமைப்புகளிலும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் தன்மையும், முழுமையான, உண்மையான ஜனநாயகம் தேவை. .

- மா.சுந்தரராஜன்

Pin It