சென்னையில் அடையாறு பகுதியில் இயங்கி வரும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஐ.ஐ.டி.எம்.) கடந்த ஆண்டு ஏப்பிரல் 14 முதல் செயல்பட்டுவந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (ஏபிஎஸ்சி) திடு மெனத் தடைசெய்யப்பட்டதும், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பலை காரணமாகப் படிப்பு வட்டத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்ற மாதம் முழுவதும் ஊடகங்களிலும், செய்தி ஏடுகளிலும் பெரிய பெரிய தலைப்புகளில் உலாவந்து கொண்டிருந்தன.
தடைக்கான காரணமாக நிர்வாகத்தால் சொல்லப் பட்டதும், படிப்பு வட்டத்தினர் ஐ.ஐ.டி.யின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினர் என்பதுதான். மேலும் நடத்தை விதிகளுக்கு முரணாகவும் அவர்கள் செயல்பட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது. அம்பேத் கர் பெரியார் படிப்பு வட்டத்தினர் இந்து மதத்தின் மீதும் மோடி அரசின் மீதும் கடுமையான சொற்களில் துண்ட றிக்கைகள் அச்சிட்டுக் கல்லூரி வளாகத்திலேயே வழங்குகின்றனர்.
மக்களுக்கு எதிரானக் கொள்கை களான நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வரைவு, காப் பீட்டுச் சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரானச் சட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்து, பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி போல மோடி செயல்படு கிறார். இந்துமதவாதிகளின் செல்வாக்கால் சமற்கிருதம் திணிக்கப்படுகிறது. மதமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. பசுவதைத் தடைச்சட்டம் பாய்கிறது என்றெல்லாம் துண்டறிக்கை வெளியிட்டுப் பரப்புகிறார்கள்.
படிப்பு வட்டத்தினரின் செயல்பாடுகள் அங்குக் கல்வி பயிலும் மாணவரிடையே சாதி மோதலை உருவாக்கும் தன்மையில் (இந்துக்களுக்கும் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கும்) அமைகின்றன என்பன போன்ற குற்றச்சாட்டுகள், பெயர் தெரியாத ஒரு அநாம தேயக் கடிதம் நிர்வாகத்திற்கு வந்ததாகவும், அந்த மொட்டைக் கடுதாசியின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் தலையீட்டின் பேரில் இந்தத் தடைவிதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
நடத்தை விதிகளை மீறிப் படிப்பு வட்டம் செயல் பட்டதாகச் சொல்லப்பட்டதே கடைந்தெடுத்த பொய். தடையைக் கொண்டுவந்த நாள் ஏப்பிரல் 14. ஆனால் அதற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் (ஏப்பிரல் 18) நடத்தை விதிகள் அறிவிக்கப்படுகின்றன.
மேலும் மோடி அரசு மீதும் இந்துத்துவ அமைப்பு கள் மீதும் குற்றம் சுமத்தித் துண்டறிக்கைகள் வெளி யிடுகிறார்கள், கூட்டம் நடத்துகிறார்கள் என்பதும்கூட பச்சைப் பார்ப்பனத் திமிர். மக்கள் வரிப்பணத்தில், பார்ப்பன-உயர்சாதி ஆதிக்கத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவரும் அந்த நிறுவனத்தில் கல்லூரியில் விவேகானந்தர் படிப்பு வட்டம், வியாசர் படிப்பு வட்டம், வசிஷ்டர் படிப்பு வட்டம், தூர்வாசர் படிப்பு வட்டம் உள்ளிட்ட பல இந்துமதவாதிகள் பெயர்களின் வாசகர் வட்டங்கள் உள்ளன. நிறுவன வளாகத்திற்குள்ளே ஆர்.எஸ்.எஸ். உடற்பயிற்சிகள் (ஷாகாக்கள்) நடைபெறு கின்றன. குருமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன் உள்ளிட்ட இந்துத்துவ ஊதுகுழல்கள் நிறுவன உள்ளரங்குகளில் வந்து ஊளையிடுகின்றன. ஆனால் அங்கே பெரியார், அம்பேத்கர், பகத்சிங் முதலானோரின் முற்போக்குக் கருத்துகளுக்குத் தடை.
கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 10ஆம் நாள் அந்நிறுவனத்தில் IIT for Society என்ற மாணவர் அமைப்பு, மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லி ணக்கத்துக்கான கருத்தரங்கு என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திற்று. குசராத் கலவரங்களுக்கு எதிராகப் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து துணிச்சலுடன் இயங்கிவரும் மனித உரிமைச் செயற் பாட்டாளர் வழக்கறிஞர் தீஸ்தா செதல்வாத் அந்நிகழ்ச் சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் கேள்வி நேரத் தின் போது அவரைப் பேசவிடாமல் மதவெறி ஊட்டப் பட்ட மாணவர் சிலர் பெருங்கூச்சலிட்டுக் காலித்தனம் செய்தனர்.
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடைசெய்யப் பட்டதற்கு எதிராகப் பரவலாகக் கண்டனக் குரல்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. தினமணி ஆசிரியர் வைத் தியநாதன் சிண்டு (குடுமி) மட்டும் தனியாக ஆடியது. “சில தனியார் பத்திரிகைகளும் சில தனியார் தொலைக் காட்சிகளும் இந்த மாணவர்களுக்கு ஆதரவாக நின்ற போதிலும் அந்த வளாகத்தை விட்டு அது தாண்ட வில்லை. பல்வேறு கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கப் பார்த்தபோதும்கூட, மதுரை போன்ற சில ஊர்களில் இந்த மாணவர்களுக்கு ஆதரவாகச் சில கட்சிகள் போராட்டம் நடத்திய போதும் இது குறித்து மற்ற கல்லூரி மாணவர்கள் தீவிரம் கொள்ளவில்லை” என ஆசிரியவுரை (4.6.2015) எழுதி வைத்திய நாதன் தன் பார்ப்பனத் தினவைத் தீர்த்துக் கொண்டார்.
ஆனால் அவர் கருத்துக்கு மாறாக நாடெங்கிலும் உள்ள மாணவர் அமைப்பினர் வீச்சோடு கிளர்ந் தெழுந்தனர். சென்னை மட்டுமல்ல தில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். நாட்டின் பல கல்லூரிகளில் ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்’ ((Ambedkar- Periyar Study Circle) என்ற பெயரிலேயே அமைப்புகள் தொடங்கப்பட்டன. இந்தியா எங்ஙனும் உள்ள எல்லாக் கட்சிகளும் இப்போராட்டத்தை ஆதரித்த போதிலும் பா.ச.க., அ.தி.மு.க. என்கிற இரண்டே கட்சி கள்தான் தனித்து நின்றன. சும்மா சொல்ல முடியாது; அம்மாவுக்கு ஆயிரம் நெருக்கடிகள். அவர் எப்படி ஆதரிப்பார்?
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அமைப்புகள், காட்சி ஊடகங்கள் ஒத்த கருத்தோடு இயங்கினாலும் மதவெறி அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க., விசுவ இந்து பரிசத், இந்து மக்கள் கட்சி போன்ற வையும், அவற்றின் கூட்டாளிகளாக உள்ள சில சாதி தலைவர்களும் தடையை முழுமையாக ஆதரித் தார்கள். நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புக் காரணமாக ஐ.ஐ.டி. நிர்வாகம் தடையை விலக்கிக் கொண்டதும், அதற்கெதிராகவும் இந்த அனுமர்ப் படையினர் அய்யோ குய்யோ என்று அலறினார்கள்.
நாடெங்கும் இந்தத் தடைக்கெதிரான கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது தமிழ்நாட்டைச் சார்ந்த எச். இராசா என்ற பார்ப்பனரும், அருச்சுன் சம்பத் உள்ளிட்ட பார்ப்பன அடியாட்களும் அம்பேத்கரையும் பெரியாரையும் தனித்தனியே பிரித்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கள்வர்களின் பாசம் அம்பேத்கரின் பேரில் எல்லை மீறிப் பாய்ந்தது. படிப்பு வட்டத்துக்கு மட்டுமல்ல, பரந்துபட்ட அந்தக் நிறுவன வளாகத்துக்கே ‘அம்பேத்கர்’ பெயரைச் சூட்ட வேண்டுமென்று அவர்கள் அண்ண லுக்குக் காவடி தூக்கினார்கள். அம்பேத்கர் பிறந்து, வளர்ந்து, படித்து, பாடாற்றிய மராட்டிய மாநிலத்தில் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று அந்நாளில் கோரிக்கை எழுந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்த வர்கள் இந்தக் காவிப்படையினர் என்பதை வரலாறு மறக்காது.
அம்பேத்கரை தேச விரோதி என்று பழி தூற்றிய இவர்கள்தான் இன்று அவரை மாபெரும் தேசபக்தர் என்று போற்றுகிறார்கள். மதம் மாறவேண்டும் என்று முடிவெடுத்த போதுகூட இசுலாம், கிருத்துவம் போன்ற அந்நிய மதங்களைப் பற்றி எண்ணாமல் இந்து மதத்தின் இன்னொரு பிரிவாகவும் இந்த மண்ணின் மதமாகவும் உள்ள பவுத்தத்தைத்தான் அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார் என்று பசுப்புகிறார்கள். இவற்றுக் கெல்லாம் கன்னத்தில் அறைந்ததுபோல் எத்தனை யோ முறை அம்பேத்கர் விடை கூறிவிட்டார். இந்து மதத்தின் மானிட இனத்துக்கெதிரான இழிதன்மைகள் குறித்து அம்பேத்கர் போல் இன்னொருவரால் கூறிட வே முடியாது.
‘பொதுவான இந்தியப் பண்பாடு’ என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று அடிப்படையில் பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என்ற மூன்று இந்தியாக்கள் - ஒவ் வொன்றும் தனக்கெனச் சொந்தமான தனிப் பண்பாடு களைக் கொண்டிருந்தன என்பதைiயும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் கருத்து (அம்பேத்கர் ஆங்கிலத் தொகுப்பு நூல் 3, பக்.267). 1936இல் இயோலா மாநாட்டில் தன் முன் திரண்டி ருந்த மக்களைப் பார்த்து “இந்துமதம் உங்கள் முன் னேற்றத்திற்குப் பல திசைகளில் முட்டுக்கட்டையாக உள்ளது. உங்கள் சிந்தனைச் சுதந்தரத்தை அது முடக்கிவிட்டது. உங்களை நிரந்தர அடிமைகளாக்கி விட்டது. வெளியுலகத்தில்கூட நீங்கள் அடிமைகளா கவே முன்நிறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் சுதந்தரம் பெற வேண்டுமானால் கண்டிப்பாக மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார்.
அதே இயோலா மாநாட்டில் அவர் தொடர்ந்து பேசும்போது, “சாதி என்பது ஒருவகை மனநோய். இந்த நோய்க்கான ஆணி வேர்கள் இந்துமதத் தத்து வங்களேயாகும். இந்துக்கள் சாதியையும் தீண்டாமை யையும் கடைப்பிடிப்பதற்குக் காரணம் இந்துமதம் அவ்வாறு ஆணையிட்டிருக்கிறது. கசப்பான பொருளைக் கூடச் சுவையானதாக மாற்றலாம். எந்த ஒரு பொரு ளின் சுவையையும் அவ்வாறு மாற்றிவிட முடியும். ஆனால் கொடிய நஞ்சை அமுதமாக மாற்ற முடியாது; முடியவே முடியாது. சாதியை ஒழிப்போம் என்று கூக் குரலிடுவது, நஞ்சை அமுதமாக்குவோம் என்பதைப் போன்றதே ஆகும்” என எச்சரித்தார்.
இந்து மதத்தின் அடிப்படையே, பிரித்து வைப்பது தான். இது அய்யத்திற்கு இடமில்லாத உண்மை. சாதியும் தீண்டாமையும் பின் எதற்காக இருக்கின்றன? பிரித்து வைப்பதற்குத்தான் என்னும் அம்பேத்கர், “ஒவ்வொரு இந்துவிடமும் இருக்கிற உணர்வு சாதி உணர்வுதான். இதனால் இந்துக்களை ஒரு சமூக மாகவே தேசமாகவோ கொள்ள முடியவில்லை” என்றார்.
முதலாவதாகவும், முக்கியமானதாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ‘இந்து சமூகம்’ என்பதே ஒரு கட்டுக்கதை என்பதைத்தான். ‘இந்து என்ற பெயரே ஒரு அந்நியப் பெயர்தான். சுதேசிகளிடமிருந்து தம்மைப் பிரித்துக் காட்ட முகமதியர்களால் ‘இந்துக்கள்’ என்று பெயர் தரப்பட்டது. முகமதியரின் படை யெடுப்புக்கு முந்தைய எந்த சமற்கிருத நூலிலும் இந்து என்ற சொல்லே காணப்படவில்லை’ என்கிறார் அம்பேத்கர் (‘சாதியொழிப்பு’ நூல், பக்.49, அலைகள் வெளியீடு).
உழைக்கும் மக்களாகிய நம்மைப் பார்த்துப் பஞ்சமர் என்றும் சூத்திரர் என்றும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்றும் பிதற்றித் திரியும் இவர்கள் ஒழுக்கம் என்ன? பண்பாடு என்ன? நாகரிகம் என்ன? இதோ அம்பேத்கரே எழுதுகிறார் :
பண்டைய அமைப்பு முறை : ஆரிய சமூகத்தின் நிலை
ஆரிய சமுதாயத்தின் சமூக, சமய, ஆன்மிக நிலை பெரிதும் தரங்கெட்ட நிலைக்குத் தாழ்ந்து போய்க் கிடந்தது. சமுதாயத்தில் நிலவிய சில கேடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமானால் சூதாட்டத்தைக் குறிப்பிட லாம். மது அருந்துவதைப் போலவே சூதாட்டமும் ஆரியரிடையே மலிந்து கிடந்தது. சோமபானம், சுராபானம் என மது இருவகைப்பட்டது. சோமபானம் யாகங்களுக்குப் பயன்பட்டது. சோமபானம் தயாரிக் கும் முறை பிராமணர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகக் காப்பாற்றப்பட்டது.
சுராபானத்தைப் பார்ப்பனர் உட்பட அனைவரும் அருந்தினர். கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருமுறை அளவுக்கு அதிகமாக மது அருந்திக் கிடந்தது பற்றி மகாபாரதம் குறிப்பிடுகின்றது. ஆரியப் பெண்களும் மது அருந்தும் வழக்கம் உடையவர்கள்.
புத்தருக்கு முற்பட்ட ஆரியரிடையே இன்று நம் மிடையே வழக்கில் உள்ள பாலியல் அல்லது மண உறவு பற்றிய கட்டுப்பாடுகள் போன்றவை அன்று இருந்ததில்லை. ஒரு பெண் பல ஆண்களைக் கணவ ராகக் கொள்ளும் விந்தையான முறை அவர்களி டையே வழக்கத்தில் இருந்தது. பாட்டன் தன் பேத்தி யை மணந்து கொண்டதற்கான சான்றுகளுக்கும் குறைவில்லை. ஆரியர்கள் பலரும் காணும் வகை யிலும் வெட்ட வெளியிலும் பெண்களோடு கூடுவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.
தம் மனைவியரைச் சிறிது காலத்திற்கு, அயலா ருக்கு வாடகைக்கு விடும் வழக்கமும் ஆரியரிடையே இருந்து வந்தது. மேலும் மகளிரை மாற்றாருக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கும் வழக்கத்தைப் போலவே, சிறந்த ஆடவர் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் பழக்கமும் ஆரியரிடையே இருந்தது. குடும்பம் என்பது அவர்களிடையே பிள்ளைகளைப் பெருக்குவது என்றே இருந்தது.
ஆரியரிடையே வலிமையிலும் தகுதியிலும் உயர்ந்தவர்களாக விளங்கிய பிரிவினர் தேவர்கள் எனப்பட்டனர். சிறந்த பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேவர்களோடு கூடுவதற்குத் தம் மகளிரை ஆரியர் அனுமதித்தனர். ஆரியப் பெண்களை இவ்வாறு முதலில் சுகிப்பது தங்களுடைய உரிமை எனத் தேவர்கள் கருதிய வழக்கம் பரவலாக இருந்தது. பெண்களின் ஒழுக்கம் தொடர்பான விதிகள் ஏதும் அப்போது இருக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண் எவருடனும் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆரியர்கள் விலங்குகளையும் புணரும் பழக்க முடையவர்கள். தாமரிஷி பெண்மானுடன் கூடிய கதை யாவரும் அறிந்தது. சூரியன் பெண் குதிரை யுடன் கூடியது இன்னொரு எடுத்துக்காட்டு. இவை எல்லாவற்றையும்விட வெறுக்கத்தக்க உறவு அசுவ மேத யாகத்தில் பெண்டிர் குதிரையுடன் உறவு கொள்வது தான் (பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு (தமிழ்) 7, இயல் 2, பக்.10-15).
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் - சட்டம் - வரலாறு - பொருளாதாரம் ஆகிய துறைகளில் மட்டும் அறிஞர் அல்ல. மதம், வேதம், புராணம், இதிகாசம், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள் போன்ற எல்லாத் துறைகளிலும் ஈடிணையற்ற அறிஞராவார். ஆனால் மாபெரும் இந்த அறிவுலக மேதைக்கு இந்துமத வெறி யர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உரிய மதிப்பளித் தார்களா? இன்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டா டுகிறார்கள் என்றால் எல்லாம் ஏமாற்று. தான் இந்த நாட்டின் பிரதமராக உயர்ந்த நிலையை எய்தியதற்குக் காரணமே அம்பேத்கர்தான் என்று உண்மைக்கு மாறாகப் மோடி புளுகுகிறார். என்னென்ன கொள்கை களையெல்லாம் அவர் அம்பேத்கருக்காக இதுவரை நிறைவேற்றியுள்ளார்? இனி எதிர்காலத்தில் எவற்றை நிறைவேற்றப் போகிறார்? பட்டியலிட முடியுமா?
ஒருத்தரை நடுத் தெருவில் அம்மணமாய் நிற்க வைத்துச் சாட்டையால் அடிப்பதைப் போல, அம்பேத் கர் இந்து மதக் கீழ்மைகளை இவ்வளவு ஆழமாய்த் தோலுரித்துக் காட்டியபின் அவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டாமா? ஆனால் அந்த மதவெறியர்கள் அம்பேத்கரை ஒருபக்கம் வானள வாகப் பாராட்டி விட்டு, மறுபக்கத்தில் பெரியாரை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு இழி வாகப் பேசுகிறார்கள்.
இந்துச் சனாதன நால்வருணக் கொடுமைகளை எந்தச் சமரசத்திற்கும் ஆட்படாமல் மிகக் கடுமையாகத் தாக்கிய மாபெரும் வரலாற்றுத் தலைவர்கள் அம்பேத் கரும் பெரியாரும் ஆவர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக் களிடையே பிளவையும் மோதலையும் உண்டாக்க இந்தக் கயவர்கள் திட்டமிட்டுக் காய்நகர்த்துகிறார்கள். ‘பெரியார் ஒரு தலித் விரோதி’ என எந்தச் சான்றும் இல்லாமல் பிதற்றுகிறார்கள்.
1920ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் தாழ்த்தப் பட்டோருக்கான ஓர் ஆசிரமத்தைத் திறந்து வைத்துப் பெரியார் பேசுகிறார் :
“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக் காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுகூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” (நூல் : தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார், பக்.65).
1925இல் பெரியார் வைக்கத்தில் நடத்திய தீண்டாமைக்கெதிரானப் போராட்டத்தின் தாக்கம், 1927இல் அம்பேத்கர் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண் ணீர் எடுக்கும் போராட்டத்தில் வெளிப்பட்டதாக அம் பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் குறிப்பிட்டுள்ளார்.
1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22 தேதிகளில் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டில், தான் கொண்டுவர விரும்பிய வகுப்புரிமைக்கு ஆதரவான தீர்மானத் தைப் பார்ப்பனர்கள் தடுத்துவிட்டார்கள் என்ற சினத் தால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி னார் என்பது பலரும் அறிந்த செய்தியாகும். ஆனால் மாநாடு நடப்பதற்கு ஒரு கிழமை முன்பே தீண்டா மையை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்துப் பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார். குறிப்பாக, பார்ப்பனரல்லாத மக்கள் தீண்டாமை ஒழிப்புக் கொள் கையில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
‘தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல் லாதாருக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லா தாரின் முன்னேற்றமாகும். தீண்டாதாரின் துன்பந் தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால் தீண்டாமை ஒழிப்பில் கவலை உள்ளவர்களும், தீண்டாதார் என்று சொல்லப்படுபவர்களும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து, அதற்கென்று ஒரு மாநாடு கூட்டி, காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங் களைக் காண வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்’ (குடிஅரசு, அறிக்கை 15.11.1925).
பெரியார் 1925 நவம்பரில் காங்கிரசுக் கட்சியி லிருந்து வெளியேறினாலும், காந்தியின் நிர்மாணத் திட்டங்களின் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. ஆயினும் காந்தியின் வருணாசிரம ஆதரவுக் கொள்கை பெரியாருக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. இதனைக் கண்டித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றை காந்திக்கும் அவருடைய சீடர்களுக்கும் அனுப்பியதாகச் சொல்லும் பெரியார் அதனால் பெரிய பயன் ஒன்றும் விளைந்து விடப் போவதில்லை என்றும் கூறுகிறார்.
“நமது நாட்டின் விடுதலைக்கும், நமது சுயமரியா தைக்கும் வருணாசிரமமும் சாதியும் உண்டு என்கிற தத்துவமே எமனாய் இருக்கிறது என்ற கண்ணிய மான முடிவுக்கு வந்திருப்பதனாலும், அதையொழிக்கப் பாடுபடுவதே நாட்டின் விடுதலையும் சுயமரியா தையும் கோரும் மனிதனின் கடமையென்று நாம் களங்கமற உணருவதாலும் கண்டிக்க வேண்டியிருக் கிறதே என்பதாக வருத்தத்துடன் இதை எழுதுகி றோம்” (குடிஅரசு 28.8.1927).
பின் பெரியாரின் காந்திய மாயை முற்றிலுமாய் அகன்றது. அவரை மகாத்மா என்று அழைப்பதையும் நிறுத்திக் கொண்டு ‘ஸ்ரீமான் காந்தி’ என்றே விளிக்கத் தொடங்கினார். நாட்டின் விடுதலைக்கும், சூத்திர மக்களின் சுயமரியாதைக்கும் உள்ள முதன்மையான தடைகள் வருணாசிரமமும் சாதியும்தான் என்கிற முடிவுக்கு வந்த பெரியார் தனது தன்மான இயக்கத் தின் பணிகளை தமிழகமெங்கும் முழு வீச்சோடு எடுத்துச் சென்றார்.
1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் ‘செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை இயக்க மாகாண மாநாடு’ பற்றி 24.12.1929 குடிஅரசு ஏட்டில் இடம்பெற்ற செய்தி :
“பெண்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சமூகக் கொடுமைக்கு ஆளாக்கப் பட்டவர்கள் ஆகியோர்கள் மற்ற எல்லோரையும்விட அதிகமாகக் கூடி இருந்தாலும் அவர்களே மாநாட்டுக்குச் சொந்தக்காரர்கள் ஆனதினாலே அவர்கள் வந்திருந்த தில் நாம் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
இதனைக் கொண்டே பெரியார் யாருக்கான தலை வர், எந்த மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட வர் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
பெரியாருக்கு முன், பழைய சென்னை மாகாணத் தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி முதலான பெயர் களில் டாக்டர் சி. நடேசனார், டி.எம். நாயர், சர். பிட்டி தியாகராயர் உள்ளிட்ட பல தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின், வாழ்நிலை உயர்வுக்காகப் பாடுபட்டுள்ள னர். 1920 முதல் 1936 முடிய இங்கே ஆட்சி நடத்திய நீதிக்கட்சி ஆதிதிராவிடர் நலனுக்காக அரிய பல பணி களை ஆற்றியுள்ளது.
1. ‘பள்ளர், பறையர் என இழிவாகச் சுட்டப்படும் பெயர்களை மாற்றி, ஆதிதிராவிடர் என்ற பெயரில் எம் சமூகத்தினரை அழைக்க வேண்டும்’ என்று எம்.சி. இராசா 20.9.1922 அன்று சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற் றப்பட்டு உரிய அரசாணையும் வெளியிடப்பட்டது (அரசாணை எண்.817 சட்டம் (பொது), நாள் 25.3.1922).
2. அனைத்து அரசு பொதுப் பள்ளிகளிலும், அரசு நிதி உதவிப் பள்ளிகளிலும் கட்டாயம் ஆதிதிராவிட வகுப்பு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அம்மாணவர்களைத் தனியே பிரித்து அமர வைக் கக்கூடாது. இவ்விதிகளை மீறினால் பள்ளிகளுக்கு அரசின் நிதி உதவி நிறுத்தப்படும்.
3. ஆதிதிராவிட மாணவர்கள் இலவயமாகத் தங்கிப் படிக்க 1921ஆம் ஆண்டிலேயே மாணவர் விடுதி கள் ஏற்படுத்தப்பட்டன.
4. 22.8.1924 அன்று இரட்டைமலை சீனிவாசன் சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தின்படி பொது இடங்களில் ஆதிதிராவிடர் நுழைய இருந்த தடை அகற்றப்பட்டது.
5. மேலும் இது விரிவுபடுத்தப்பட்டு வீரய்யன் என் பார் கொண்டுவந்த தீர்மானத்தின்படி பொது இடங் களில் (கிணறு, சாலை, அங்காடி முதலியன) ஆதி திராவிடர் நுழையத் தடை உண்டாக்கினால் ரூ.100/- தண்டம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை 24.12.1925இல் வெளியீடு.
6. பனகல் அரசரின் 6 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நிலங்கள் முறையாகப் பங்கிடப்பட்டு உரிய வர்களுக்கு வழங்கப்பட்டன.
7. பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முறையாக மாகாண அரசுகளின் காவல்துறையில் ஆதிதிராவிடர்களை நியமிக்க நீதிக்கட்சி ஆட்சி நடவடிக்கை எடுத்தது.
8. நீதிக்கட்சி ஆட்சியில்தான் ஆதிதிராவிடர்களுக்குத் தொழிலாளர் நலத்துறையின்வழி கூட்டுறவுக் கடன்கள் வழங்கப்பட்டன.
9. சிதம்பரத்தில் சகஜானந்தர் நடத்திவந்த ஆதிதிரா விட மாணவர் பயிலும் பள்ளிக்கும் சென்னையில் எல்.சி. குருசாமி நடத்திவந்த அருந்ததி வகுப்பு மாணவர் பயிலும் பள்ளிகளுக்கும் முறையான நிலமும், நிதி உதவியும் வழங்கி ஆணைகள் இடப் பட்டன.
10. நீதிக்கட்சி ஆட்சியில்தான் ஆதிதிராவிடர்களைப் பேருந்துகளில் ஏற்ற மறுக்கும் தனியார் பேருந்து களின் பேருந்து உரிமம் உடனடியாக நீக்கம் செய்யப் பெறும் எச்சரிக்கை விடுக்கப் பெற்றது. ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் என்ற நீதிக்கட்சித் தலைவர் இந்தச் செய்தியில் மிகுந்த உறுதி காட்டி னார். இன்றைக்குச் சென்னை தியாகராயநகரின் நடுவமான இடத்தில் அமைந்துள்ள பாண்டிபசார் அவர் நினைவாக அமைந்ததுதான்.
நீதிக்கட்சியின் சிறந்த தலைவர்களில் ஒருவராய் விளங்கிய என். சிவராஜ் அவர்கள் மீது பெரியார் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். தொண்டு வீரசாமி போன்ற தலைவர்கள் பெரியாரோடு நெருக்க மான உறவைக் கொண்டிருந்தனர். சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்று ஈ.வெ.ராவுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கியது. அந்தப் பெருமை அவர்க்கு வந்து சேரப் பெரிதும் துணையாய் நின்றவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஆவார். இந்தப் பெரியாரைத் தலித் விரோதி என்று பழிதூற்று கின்றனர் இந்துமத வெறியர்கள்.
மேலும் பெரியாரைத் தேசவிரோதி என்றும் பிதற்றுகின்றனர். இந்தத் தேசபக்தர்கள்தான் காந்தி யைக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை கள் நிறுவி வழிபாடு செய்ய முற்படுகின்றனர். காந்தி யின் கொலை வழக்கில் குற்றவாளியான சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தில் காந்தி படத்திற்கு நேர் எதிரில் நிறுத்திக் களிப்படைகின்றனர்.
செல்வச் சீமானாயும், ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவி மட்டுமல்லாமல் பல்வேறு பதவிகள் பெற்றவ ராயும் விளங்கிய பெரியார் நாட்டு விடுதலைக்குப் போராடத் தன் எல்லாப் பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டுப் பொது வாழ்விற்கு வந்தார். தான் மட்டுமல்ல தன் தள்ளாத வயதுத் தாயையும் கதர் உடுத்த வைத் தார். தன் குடும்பத்தையே விடுதலைப் போராட்டக் களத்தில் நிறுத்தினார்.
இதற்கு மாறாக இவர்கள் போற்றும் சத்தியமூர்த்தி அய்யர், வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா போன்ற தேசபக்தத் திலகங்கள் வெள்ளையனுக்கு வால்பிடித் தார்கள். பதவிக்கு பல்லிளித்தார்கள். விதவை மணம், தேவதாசி ஒழிப்புச் சட்டம் போன்றவற்றை எதிர்த்தார் கள். குழந்தை மணத்துக்கு ஆதரவாகக் குரலெழுப்பி னார்கள்.
ஆக, அம்பேத்கரை ஆதரித்தும் பெரியாரை எதிர்த் தும் இவர்கள் எழுப்புகின்ற பெருங்கூச்சல் என்பது பிற்போக்குச் சாதிவெறி, மதவெறிக் கூச்சலே ஆகும். நாடெங்கிலும் உள்ள இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் மக்களின் உதிரம் தண்ணீராகப் பாய்கிறது. இதுநாள்வரை ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த இந்த ‘அம்பி’களே பட்டம் முடித்து வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள். இப்போது அம்பேத்கர், பெரியார் உழைப்பின் பயனாய் மெல்லக் கண்திறக்கத் தொடங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மாணவர் களின் கல்வி உரிமையைப் பறிக்கத்தான் நடத்தை விதிகள், ஒழுங்கு நடவடிக்கைகள் என்கிற பெயர்களில் நாடகமாடுகிறார்கள்.
அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த வர்கள் அனைவருமே தலித் மாணவர்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள். உண்மையில் அந்த அமைப்பில் 90 விழுக்காடு மாணவர்கள் பிற்படுத் தப்பட்ட எளிய வகுப்பைச் சேர்ந்தவர்களே. காலங்கா லமாய் இந்த மண்ணையும் மக்களையும் அடிமைப் படுத்தி அரசோச்சி வந்த ஆரியப் பார்ப்பனியத்திற்கு மரண அடி கொடுக்க நம் காலத்தில் தோன்றிய மாபெரும் தலைவர்கள் பெயர்களை மறைக்க இவர் கள் செய்யும் சூழ்ச்சிகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்க வேண்டும். உழைப்புச் சாதி மக்களின் ஒற்றுமையே அதற்கான வலிய படைக்கலன். தீ பற்றி விட்டது! அந்தத் தீயில் வெந்து கருகாகட்டும் சாதி மதவெறிச் சருகுகள்.
கட்டுரை அமையத் துணைசெய்த நூல்கள் :
1. பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நூல் தொகுப்புகள் (தமிழ்) - மராட்டிய மாநில அரசு வெளியீடு.
2. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - தொகுப்பு வே. ஆனைமுத்து