‘கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர்

முன் செய்து பின் பேசுவது நன்று’

என்று உரத்தக் குரலையும் உருப்படியான சிந்தனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கிய சிந்தனைச் சிற்பி பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வாழ்நாளைய எல்லாச் சிந்தனையும், செயல்பாடுகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கானதாகவே அமைந்தன. மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், செத்தான் என்பது பொதுவான கருத்தியல், ஆனால் இவற்றிற்கு மாற்றாக வாழ்ந்தவர் தான் அம்பேத்கர். தனது உயிர் மூச்சு உள்ளவரையில் இன விடுதலையை முன் வைத்திருந்தவர். அம்பேத்கரைப் பொறுத்த வரையில் தலித் விடுதலையை முன் வைத்த தேசிய விடுதலையை விரும்பியவர், அதனையே பல இடங்களில் கூறியவர். இக்கட்டுரை அம்பேத்கரின் தலித் விடுதலைக் கருத்தியலும் இன்றைய நிலைப்பாடும் குறித்து ஆராய்கிறது.

தாழ்த்தப்பட்டவன் (தலித்)

இக்கட்டுரையை தாழ்த்தப்பட்டவன் யார் என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம். ஏதோ ஒரு காலத்தில், சூத்திரர்கள் என்று சொல்லப்பட்ட நான்காவது வருணத்தின் மிச்சம் தான் தாழ்த்தப்பட்டவர்கள். மிச்சம் என்றால் நான்கு வர்ணத்தில் சூத்திரர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர், அதில் பலர் புதிய சத்திரியர்களாகப் பிரிந்து சென்ற பின்னர், தற்போது மீதம் உள்ள சூத்திரர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்று அரசாங்கம் கொண்டு வரப்பெற்ற பட்டியலில் உள்ளவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளனர்.

ambedkar 237 copyஅந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்கள் தொடக்கத்தில் புருஷா கோட்பாட்டில் இருந்து தோன்றியவர்கள். இதனைப் பற்றி அம்பேத்கர் கூறும் போது, சூத்திரர்கள் யார் அவர்கள் எப்படி கீழே நான்காவது வருணத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முயலுகையில், இந்தோ ஆரிய சமுதாயத்தின் சதுர்வருணத் தோற்றத்தினை முதலாக வைத்து ஆரம்பிக்கவேண்டும். எனவே சதுர் வருணக் கோட்பாட்டை ஆய்விட எடுத்துக்கொள்ளும் போது ரிக்வேதம் பத்தாவது மண்டலம் தொண்ணூறாவது பாடற்பகுதியிலிருந்து தொடங்க வேண்டும். அது ‘புருஷ சுக்தா’ என்னும் கீர்த்தி வாய்ந்த பெயரால் குறிப்பிடப்படுகிறது என்று கூறியுள்ளார். (சூத்திரர் யார் - ப.19) இதன் வழியில் பார்க்கும் போது ஒரு கட்டுக்கதையை வேத நூல்கள் தன்னகத்தே கொண்டுள்ளன. குறிப்பாக புருஷா என்பது ஒரு மனிதன் என்றும் அவன் ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கண்களையும், ஆயிரம் கால்களையும் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு பக்கத்திலும் பத்து பத்து விரல்களை விரித்து அதற்குள் அடங்க வைத்துள்ள இடமே இப்பரந்த பூமி என்று கதை கூறப்பட்டுள்ளது.

இந்த புருஷா வை கடவுள் வேள்வியில் பலிகொடுக்கும் போது புருஷாவில் இருந்து தான் இந்த உலகில் உள்ள விலங்குகள், மற்றையப் பொருள்கள் தோன்றின. அது போலவே தான், நான்கு வருணங்களும் தோன்றின என்று கதை உள்ளதாக அம்பேத்கர் கூறுகிறார். அந்தக் கதையின் தொடர்ச்சியாகத் தான் பிராமணர்கள் புருஷாவின் வாயிலிருந்தும், ராஜன்யா (சத்திரியர்கள்) அவரது கைகளிலிருந்தும் வைசியர்கள் அவரது தொடை­யிலிருந்தும் சூத்திரர்கள் அவரது பாதங்களிலிருந்தும் தோன்றினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நான்கு வருணத்தாரும் மனிதர்கள் தான். இங்கு ஒரு வேடிக்கையான கருத்துள்ளது. விலங்குகளைப் பற்றிக் கூறும் கதையில் எங்கிருந்து பிறந்தன என்று கூறவில்லை, ஆனால் மனிதர்களை மட்டும் ஏன் இப்படிப் பிரித்தனர் என்று தெரியவில்லை. அதாவது மக்களை ஏதோ ஒரு வகையில் அன்றைய இந்து தத்துவ வாதிகள் பிரித்த பின்பு இந்த ‘புருஷா’ கதையை வேதத்தில் எழுதியுள்ளனர். என்பது தெளிவாகத் தெரிகின்றது.ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகவும், தீண்டாதவர்களாகவும் எப்படி கட்டமைக்கப்பட்டனர் என்பது புதிரானதாக உள்ளது.

நான்கு வருணங்களின் பிறப்புகளைப் பற்றி புருஷாவிற்குப் பிறகு, அபஸ்தம்பா தர்ம சூத்திரம், வஷிஷ்ட தர்ம சூத்திரம், வேதங்கள், மனுதர்ம சாஸ்திரம் போன்ற அனைத்து இந்து தத்துவ நூல்களும் நான்கு வருண நிலையைத் தொடர்ந்து கூறி வருகின்றன. இது பொய்மையான புனைவு என்பது இதில் இருந்து தெரிகிறது. இப்படி ஏன் எழுதினார்கள் எங்கு மக்களைப் பிரித்தார்கள், குறிப்பாக சூத்திரர்களை ஏன் மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கி வைத்தார்கள், என்று ஆராயப்பட வேண்டியுள்ளது. அதற்கு அம்பேத்கரின் சிந்தனைகளை முதன்மையாகக் கொள்ள வேண்டும்.

புறக்கணிப்பிற்கான காரணம்

முன்பு கூறிய சூத்திரர் பற்றிய கதை ஒரு புறமிருக்க, கதையை எழுதுவதற்கு இந்துத்துவ வாதிகளுக்குப் பயன்பட்ட சூழ்நிலையும், சூத்திரர்களைப் புறக்கணிக்கப் பட்டதற்கான சூழ்நிலையும் ஒன்று தான் அது இன்று வரையில் சமுதாய இந்து தத்துவ வாதிகள் முன்வைக்கிற மாட்டிறைச்சி சாப்பிடுவது தான். எல்லா சமுதாயத்தினரும் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குவதற்கு மிக முக்கியமான காரணம் ‘மாட்டுக்கறியை’ தலித்கள் உண்பது தான். இதனைப்பற்றி அம்பேத்கர் மிகப் பெரிய விவாதத்தையும் உண்மையையும் தமது சிந்தனைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அசோகர் காலம் வரையிலும் மாட்டிறைச்சி எல்லாப் பிரிவினருக்கும் பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரின் பொதுவான உணவாக இருந்து வந்தது. அதில் விரும்பத்தகாதது ஒன்றுமில்லை. பசுவானது செம்மறியாடு அல்லது வெள்ளாடு அல்லது மான் போன்ற ஒரு பிராணி மட்டுமே. எனவே மக்கள் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த நான்கு வருணத்தினரும் அவர்களின் உணவு விஷயத்தில் வேறுபட்டிருக்கவில்லை. குறிப்பாக அனைவரும் மாட்டிறைச்சியை உண்டனர் என்று கூறுகிறார்.

ஆனால் இப்படி இருந்த சூழ்நிலையில் எப்படி தலித் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது அதற்குக் காரணம் எல்லோரும் மாட்டுக்கறியைத் தின்றனர். ஆனால் சூத்திரர்கள் இறந்துபோன மாட்டுக்கறியைத் தின்றனர். மற்றவர்கள் உயிருடன் உள்ள மாட்டினைக் கொண்டு தின்றனர் அவ்வளவு தான் வேறுபாடு. ஒரு காலக்கட்டத்தில் பிராமணர்கள் பசு மாட்டை இறைவனாகக் கருதி வணங்க ஆரம்பித்தனர். அதனை மற்ற வர்ணத்தார்களும் கடைப்பிடித்தனர். ஆனால் சூத்திரர்கள் அதனைக் கடைப்பிடிக்கவில்லை, எனவே அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்பது வரலாற்றுச் செய்தி. இங்கு தான் தீண்டாமை தொடங்கியது என்கிறார் அம்பேத்கர். இது காரணமாக பழங்காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இன்று தலித் மக்கள் தவிர இஸ்லாமியர்கள் மற்றும் சிலர் மாட்டுக்கறியைச் சாப்பிடுகின்றனர். அவர்களை ஏற்றுக் கொள்ளும் இந்துத்துவ வாதிகள் ஏன் தலித் மக்களை ஏற்றுக் கொள்ளவில்லை, இது தான் புரிய வில்லை.

மற்றொரு கருத்தும் உள்ளது. அதாவது ஆரியர்களை எதிர்த்தவர்கள், அவர்களிடம் சரணடைந்தவர்கள் இந்த இரண்டு பிரிவினர்களிடையே எதிர்த்தவர்கள் தான் தலித் மக்கள் என்பதும் வரலாறாக உள்ளது. இந்து தத்துவத்திற்கு எதிரான கருத்தியல் எங்கெல்லாம் முளைத்ததோ அங்கெல்லாம் வன்முறையும், வெறியாட்டமும் தலைவிரித்தபடியிருக்கிறது. சமணத்திற்கு எதிராகவும் அந்த வன்முறை வெறியாட்டத்திற்கு அஞ்சி நடுங்கி, பயந்து, சரணடைந்து போனவர்கள் எல்லாம் சாதி இந்து ஆனார்கள். எதிர்த்து நின்றவர்கள் சேரி வாழ் மக்களானார்கள். இந்த வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது என்கிறார் திருமாவளவர். (அத்து மீறு.ப.104) இதுவும் உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் தலித் மக்களுக்கு எதிராக அனைத்து சாதி இந்துக்களும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் அது இதனால் தான் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறாக சூத்திரர்கள் தாழ்த்தப் பட்டவர்களாக மாறி இன்று தலித் மக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு காலத்தில் கதைகள் புனையப்பட்டு அதிலிருந்து இந்த தலித் இனம் தாழ்ந்த இனமாகக் கருதப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையின் போது தான் அம்பேத்கர் தலித் மக்களுக்காக குரல் கொடுத்தார்.

அம்பேத்கரின் செயல்பாடுகள்

இந்துத்துவ வாதிகளின் கட்டுக் கதையின் அடிப்படையில் பார்த்தால் இந்த உலகம் தோன்றிய போதே சூத்திரர்கள் தோன்றிவிட்டார்கள் எனக்கூறுகிறது. ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்பட்டுக் கிடந்த இனத்தை மீட்டெடுத்து அவர்களுக்கு சமத்துவம் பெற்றுக் கொடுப்பது முடியுமா? என்பது கேள்வியாக இருந்தது. அம்பேத்கர் அந்த பெருமுயற்சியில் இறங்கினார். அவர் செயல்பாடுகள் ஓரளவு வெற்றியே பெற்று தந்தது.

1. தலித் மக்களுக்குக் கல்வி வழங்குவது

2. அரசியல் அதிகாரம் பெறுவது

இந்த இரண்டு கொள்கைகளையும் அம்பேத்கர் கையில் எடுத்தார்.

தலித் மக்களுக்குக் கல்வி வழங்குவது

சூத்திரர்களுக்கான பிராமண சட்டங்கள் மிகவும் கொடுமையானது. அந்த சட்டங்களில் மிக முக்கியமானது. ‘சூத்திரத்தின் அறிவைப் பெறக் கூடாது, அனைவருக்கும் கல்வி போதிப்பது ஒரு பாவம், ஒரு குற்றச் செயலாகும்’ என்கிறது மனு முதலான நூல்கள். இதில் இருந்து அம்பேத்கார் தமது செயல்பாட்டைத் தொடங்குகிறார். சூத்திரனுக்குக் கல்வி வழங்கக் கூடாது என்னும் கருத்தியலை அவர் எதிர்த்து சூத்திரம் கல்வி பயில வேண்டும் என்கிறார்.

‘நெடுங்காலமாய் ஷெட்யூல்ட் வகுப்பினர் தன்மான மற்ற ஓர் அறியாமைக் கூட்டத்தினராகவே இருந்து வந்தனர். அச்சமயம் அவர்கள் இந்து சமூகத்தினர் தமக்கு அளித்த சமுதாய படித்தரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் கல்வியறிவு பெறப் பெற அவர்கள் இந்திய சமுதாயச் சட்டங்களால் தாங்கள் துன்புறுவதை உணரத் தொடங்குவார்கள். அதன் விளைவாக அவர்கள் இந்து சமுதாயத்தினின்றே பிரிந்து செல்லும் அபாயமும் நேரிடக் கூடும் என்று இந்துக்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்’ என்கிறார். கல்வியறிவு பெற்று விட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் சட்டங்களைப் புரிந்து கொள்வார்கள் அதன் மூலம் விடுதலை பெற முடியும் என்று அம்பேத்கர் நம்பினார். மேலும் அம்பேத்கர் 1924 ல் “பகிஷ்கார ஒழிப்பு சபை” மாநாட்டில் சில கருத்துக்களை தீர்மானமாகக் கொண்டிருந்தார்.

1. தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பெற வேண்டும், இதற்கான விடுதிகள் ஏற்படுத்துவது, மற்ற வசதிகளையும் ஏற்படுத்துவது.

2. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு தொழிலியல் பள்ளிகளையும், விவசாயப் பள்ளிகளையும் துவக்குதல்.

இவற்றை அம்பேத்கர் பேசியதோடு மட்டும் இருக்கவில்லை. அவற்றை செயல் வடிவம் காட்டிச் செய்தார்.

1. 4.1.1925 - ஷோலாப்பூரில் தாழ்த்தப்பட்ட உயர்தரப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் விடுதி நிறுவப்பட்டு, உடை, புத்தகங்கள், உணவு இலவசமாக வழங்கப்பட்டன.

2. 1928 - தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம் துவக்கப்பட்டது.

3. 1946 - பம்பாய் மாநகரில் சித்தார்த்தா கல்லூரி தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டம் பெற நிறுவப்பட்டது.

இவைகளை அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகச் செய்தார். ஒரு சமூகம் விடுதலை பெற வேண்டுமானால் கல்வி பெற வேண்டும். கல்வி நிலையில் முன்னேற்றம் அடைந்தால் மற்ற நிலைகளில் மாற்றம் அடைந்து விடலாம் என்று அம்பேத்கர் நம்பினார். எனவே தான் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான விதத்தில் பல்கலைக் கழகத்தின் கல்வியைப் பெறுதல் வேண்டும். அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய இடமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் வேலைக்குப் பயிற்சி பெறும் நிலையமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்கிறார். மேலும் பெற்ற அறிவைக் கொண்டு ஏதாவதொரு வகையில் தனது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்கிறார். அறிவானது மனிதனுடைய வாழ்வின் அஸ்திவாரம் ஆகும். ஆதலால் மாணவர்கள் தங்களது முயற்சிகள் அனைத்தையும் பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு நிர்வகிக்கக் கூடியவைகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அறிவையும் சிந்தான சக்தியையும் இந்த நாட்டின் சமூகத்தில் நசிந்து நலிவுற்றுள்ள நமது ஷெட்யூல்ட் வகுப்பினர் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். (உலக சிந்தனையாளர் ப.25)

இவரின் கல்விச் சிந்தனை தான் உண்மையான தலித் மக்களுக்கான கல்விச் சிந்தனை, இது தவிர மற்றவர்களின் குறிப்பாக தலித் அல்லாதவர்கள் கூறிய கல்விச் சிந்தனை எல்லாம் தலித் மக்களுக்கான கல்விச் சிந்தனையாக இருக்கவில்லை, மாறாக இச்சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி பேசி தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்.

பொய்யான சிந்தனையாளர்கள் இன்றளவும் தலித் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தங்களது பெயர்களை பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பட்டியலிட்டால் எண்ணிக்கையில் அடங்க மாட்டார்கள். ஆனால் அம்பேத்கர் தலித் மக்களாக பிறந்து அவர்களுக்காகவே வாழ்ந்து இறந்தவர். அவரின் கல்விக் கொள்கைதான் தலித் மக்களின் உண்மையான கல்விக் கொள்கை.

அரசியல் அதிகாரம் பெறுவது

ஒரு சமுதாயம் முழுமையான விடுதலை பெற வேண்டுமானால் அரசியல் ஈடுபாடும் உரிமையும் பெற வேண்டும். அரசியல் என்பது சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரம் படைத்த அமைப்பு. எனவே தான் அம்பேத்கர் அரசியல் அதிகாரத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பெற்றுத் தர முயற்சி செய்தார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அரசியல் களத்தை உருவாக்க பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட்டார். முதல் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கார் அரசியல் நிலைப்பாடு குறித்து மிக விரிவாகப் பேசியுள்ளார்.

அதாவது நாட்டின் சமூக, பொருளாதார வாழ்க்கை கோட்பாடுகளை மாற்றியமைப்பதற்குத் தயங்காததுமான ஓர் அரசு நமக்கு வேண்டும். இத்தகையோர் அரும்பணியைப் பிரிட்டிஷ் அரசால் என்றைக்கும் செய்ய இயலாது. மக்களின் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஓர் ஆட்சியினால் மட்டுமே இதை நிறைவேற்றிக் காட்ட முடியும். (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்புத் தொகுதி - 56)

இவ்வாறாகப் பேசிய தலைவர் அம்பேத்கர் ஆனால் அந்த மக்களாட்சி என்பது வெறுமனே இருந்து விடக்கூடாது. அது தலித் மக்களை முன்வைத்து தேசிய விடுதலை என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார். முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் தலித் மக்களுக்கு கிடைக்காதவற்றைப் பற்றி இந்திய அரசாங்கத்தை நடத்தி வரும் அதிகார வர்க்கத்தினர் எவ்வளவு தான் நல்ல நோக்கம் உடையவர்களாக இருந்த போதிலும் எங்களுடைய குறிப்பிடத்தக்க குறைகளைப் போக்கி மாற்றத்தை உண்டாக்க கூடிய அளவுக்கு அதிகார மற்றவர்களாகவே இருப்பார்கள் அரசியல் அதிகாரம் எங்கள் கைகளுக்கு வந்தால் தவிர இவர்களால் மட்டுமல்ல பிறர் எவராலும் கூட எங்கள் குறைகளைத் தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கார் அரசியல் அதிகாரத்தை மிக நேர்த்தியாக ஆராய்ந்து எப்படி அது சமூக விடுதலையைப் பெற்று தர ஏதுவாக இருக்கும் என்று அந்தத் தளத்தில் இயங்கினார் அம்பேத்கர் தலித் மக்களுக்கான அரசியல் உரிமையைப் பெற்றுத் தர பல வகைகளில் போராடினார். குறிப்பாக வட்டமேசை மாநாட்டில் அவர், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல் ஒரு சமூகச் சிக்கல், அதற்குரிய தீர்வு அரசியலில் இல்லை வேறு இடத்தில் உள்ளது என அடிக்கடி கூறப்படுகிறது. இந்தக் கருத்தை வன்மையாக மறுக்கின்றோம். அரசியல் ஆதிக்க உரிமை கிடைத்தாலன்றி ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் சிக்கல் தீராது. இது உண்மையாயின் இதற்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியாது என்பது தான் என் எண்ணம் - ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் சிக்கல் முதன்மையாக ஓர் அரசியல் சிக்கலே அன்றிச் சமூகச் சிக்கல் அன்று, அது அவ்வாறு தான் கருதப்பட வேண்டும். என்று தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பொருளாதாரம் சமூகம், சமயம் ஆகியவற்றால் எங்களை அடக்கி ஆதிக்கம் செலுத்துவோர் கைகளுக்கு மாறிச் செல்கிறது என்பதை அறிவோம், சுயராஜ்யம் என்ற கருத்தினை கேட்கும் போதெல்லாம் எங்களுக்கு இழைக்கப்பட்டு வந்துள்ள கொடுமைகள், அடக்கு முறைகள், அநீதிகள் ஆகியவை எங்கள் நினைவுக்கு வந்து சுயராஜ்ய ஆட்சியில் அவை மீண்டும் தலைதூக்கும் என்ற பயம் ஏற்படுகின்ற போதிலும் அந்த ‘சுயராஜ்யம்’ கிடைப்பதற்கும் நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை - அரசியல் ஆதிக்கப் பதவிகளில் எங்கள் நாட்டு மக்களோடு நாங்களும் எங்கள் சமுதாய மக்களின் விகிதத்திற்கு தக்கவாறு அமர்த்தப்படுவோம் என்னும் நம்பிக்கையில் தற்போது நிலவும் தவிர்க்க முடியாத இடர்பாடுகளை ஏற்கக் தயாராக இருக்கின்றோம். எங்கள் சிக்கல்கள் காலப்போக்கில் தீர்த்து விடும் என்ற நிலையில் விடப்படக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் சுயராஜ்யம் அளிப்பதற்கு உடன்படுகிறோம். (ப.8)

என்று மிகவும் நீளமான உரையை சிந்தித்து வெளிப்படுத்தியுள்ளார். அம்பேத்கரைப் பொருத்த வரையில் இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை விட தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற்ற சுதந்திரம் வேண்டும் என்றார். தலித் மக்களின் அரசியல் அதிகாரம் மூலம் தான் தலித் சமூகம் விடுதலை பெற முடியும் என்று ஆழமாக நம்பினார். எனவே தான் இந்தியா சுதந்திரத்தைப் பற்றி இந்துத்துவ வாதிகள் பேசிய போதெல்லாம் அம்பேத்கர் தலித்திய சுதந்திரத்தை முன்னெடுத்துச் சென்றார்.

1946 ஏப்ரல் 5 ஃபீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவலுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் அம்பேத்கர் கூறிய கருத்து முக்கியத்துவம் பெற்றது. இந்தியா சுதந்திரமடைந்தால் அது மிகப் பெரிய விபத்தாக இருக்கும் என்று டாக்டர் அம்பேத்கர் கருதினார், காரணம் இந்தியாவில் உள்ள இந்துத்துவ வாதிகள் தலித் மக்களை அடிமையாக வைத்துக் கொள்வார்கள் என்பது தான். எனவே பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறுவதற்கு முன்னால் புதிய அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வாழ்க்கையின் அடிப்படையான மனித உரிமைகள், சுதந்திரம், மகிழ்ச்சியான வாழ்க்கை முதலியவற்றை உத்தரவாதம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களின் தனித் தொகுதிகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்” (தொகுதி.19.ப.109) என்று கூறியுள்ளார். அம்பேத்கரைப் பொறுத்த வரையில் இந்தியா சுதந்திரம் பெறுவதால் தலித் மக்களுக்கு எந்த விதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்று கருதியுள்ளார் எனவே தான் ‘நாட்டின் சுதந்திரத்தைக் காட்டிலும் என்னுடைய சமூகத்தின் முன்னேற்றதிற்கு உழைப்பதையே நான் விரும்புகிறேன். நானும் அதில் ஒருவன் என்று நான் பெருமைப் பட்டு வரும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களை முன்னேற்றுவதற்கும் வளர்ப்பதற்குமான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாக எந்த தலைவராவது என்னிடம் உறுதியளிப்பாரேயானால் நான் அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்வேன். சாதி வேறுபாட்டை அங்கீகரிக்கும் எவனையும் ஒரு தலைவனாக அங்கீகரிக்க நான் மறுக்கிறேன் என்கிறார். (தொகுப்பு - 1 ப.79)

இவ்வாறாக தலித் மக்களுக்காக அரசியல் அதிகாரம் பெற்றுத் தந்த அம்பேத்கர் மிகப் பெரிய சாதனையாளர் தான். கி.பி 400 களில் இருந்து அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தருவது என்பது மிகப் பெரிய சவாலானதாகும். அதனைப் போராடி பெற்றுத் தந்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கல்வி, பொருளாதாரம், அரசியலில் போதுமான அளவு உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுத் தந்த அம்பேத்கர் தலை சாய்ந்து குறுகிப் போய் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை இன்று பல அடி உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

இன்றைய நிலை

டாக்டர். அம்பேத்கர் போராடிப் பெற்றுத் தந்த தலித் மக்களின் சுதந்திரம் இன்று எந்த அளவில் இருக்கின்றது என்பதை ஆராய வேண்டியுள்ளது. அம்பேத்கர் எந்த நோக்கத்திற்காக அரசியல் அதிகாரம் பெற்றுத் தந்தாரோ அந்த நோக்கம் இன்று தலித் மக்களிடம் இருக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அம்பேத்கர் கூறினார் “எதிர்கால இந்திய அரசியலமைப்பில் பெரும்பான்மையோர் ஆட்சி ஏற்படின் அது நிச்சயமாய் சாதி இந்துக்களின் ஆட்சியாகத் தான் இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. இந்த சாதி இந்துக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு நியாயம் நீதி, சமத்துவம், மனசாட்சி, ஆகியவை அனைத்தும் பலியிடப்படும். சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், சிறுபாண்மை வகுப்பினரின் நலன் புறக்கணிக்கப்படும் அவர்களின் குடியுரிமைகள் காற்றிலே பறக்க விடப்படும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இத்தகைய அபாயகரமான நிலை ஏற்படாதவாறு ஷெட்யூல்ட் வகுப்பினருடைய நலன் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்” என்றார். ஆனால் இன்று அம்பேத்கரின் கூற்றுப் போலவே அரசியல் நிலை உள்ளது.

இட ஒதுக்கீட்டால் அரசியல் அதிகாரம் தலித்களுக்கு கிடைத்தது. இருந்த போதிலும் தலித் மக்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை எனலாம். இதற்கான காரணம், அரசியல் கட்சிகள் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை தமதாக்கிக் கொள்ளவே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தலித் இட ஒதுக்கீட்டை தமதாக்கிக் கொண்டு தலித் உறுப்பினர்களை தமது கட்சியின் பண்ணையாட்களாகவே வைத்திருக்கின்றன. அம்பேத்கர் தமது மக்கள் அரசியலில் இடம் பிடிக்க வேண்டும், இடம் பிடித்தால் மக்களின் குறைகள் சட்டமன்ற நாடாளுமன்றத்தில் முழங்கப்படும். அதனால் தலித்களுக்கு ஓர் விடிவு காலம் பொறக்கும் என்று நம்பினார். ஆனால் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் செல்கின்ற தலித் உறுப்பினர்கள் தாங்கள் தலித் மக்களின் பிரதிநிதி என்பதையும், தலித் மக்களுக்கான தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்பதையும், அம்பேத்கர் பெற்றுத் தந்த அரசியல் களம் என்பதையும் மறந்து போய் விட்டனர்.

மாறாக தலித் உறுப்பினர்கள் எல்லாம் எந்த பெரும்பான்மைக் கட்சியைச் சார்ந்திருக்கின்றார்களோ அந்த கட்சித் தலைவர் கூறுகின்றவற்றை மட்டுமே கேட்கின்றனர் அவர்களுக்கு மட்டுமே ஜால்ரா போடுகின்றனர். இதனால் அம்பேத்கரின் உழைப்பு அர்த்தமற்றதாகிப் போனது. இதற்கான காரணம் என்ன என்று பார்த்தால் அதற்கும் அம்பேத்கர் கூறியுள்ள கருத்தினையே இங்கு சுட்டிக் காட்டலாம். ‘அரசியலை ஒரு பிழைப்பாய்க் கருதி வாழ்கின்ற நேர்மை, நாணயமற்றோரை நான் பெரிதும் வெறுக்கின்றேன் சாதாரண மக்களின் உழைப்பும், தியாகமும் தான் தலைவர்களின் வெற்றிக்குக் காரணம். கருங்காலிகள், உரிமைகளின் மீது பற்றுடையோர் போன்றும் இன அன்பு கொண்டோர் போன்றும், போர்வை கொண்டு நடிப்பது தங்களின் சொந்தவருமானம், வாழ்வு மற்றும் புகழுக்குமே ஆகும்.’ இக்கூற்று அம்பேத்கரின் கூற்று யாருக்காக இதனைச் சொன்னார் என்றால் இந்து தத்துவ அரசியல் வாதிகளுக்காக ஆனால் வெட்கக்கேடு இன்று அது தலித் உறுப்பினர்களுக்குப் பொருந்தி விடுகிறது.

குறிப்பாக கூற வேண்டுமென்றால் இன்று தலித் மக்கள் பிரதிநிதிகள் இந்துத்துவ கட்சிகளின் பண்ணையாட்களாகவே செயல்படுகின்றனர். எதிலும் பதவிகளுக்காக அவர்களிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். எங்காவது தலித் மக்கள் துன்பப்படுவதைப் பற்றிப் பேசுகின்ற தலித் எம்.எல்.ஏ களைவவிட தனது கட்சித் தலைமைக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டிப்பேசி, அதன் மூலமாக தான் சார்ந்திருக்கின்ற கட்சியில் ஒட்டிக் கொள்கிறார்கள். இது போன்றவர்கள் தான் இன்று தலித் அரசியல் அதிகார அடையாளமாக இருக்கின்றனர். இவர்கள் அம்பேத்கர் கூறுவது போல ‘கருங்காலிகள்’ ஆவார்கள். இது போன்ற நிலைகளில் அம்பேத்கரின் உழைப்பு இன்னமும் எத்தனையோ தலித் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

இன்றைய கல்வி, அரசு வேலை வாய்ப்பு

இன்றைய கல்வி நிலையங்களும், அரசு வேலை வாய்ப்பு என்பதும் தலித் மக்களைப் பொறுத்தவரையில் அது ஒரு விவசாயத் தோட்டம் போல அதிகார மையத்தாரிடம் தான் சிக்கியுள்ளன. தலித் மக்களுக்கான நல்ல கல்வி என்பது கிடைப்பது அரிதானதாவே உள்ளது.

பொதுவாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி முறை என்பது மாயத்தோற்றம் கொண்ட கல்விமுறை தான் ‘பாப்லோ ஃப்ரையிரே’ கூற்றுப்படி பிரிந்து வாழும் நம்பகத் தன்மை அற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான கல்வி முறை ஒன்றை விடுதலை நோக்கி இட்டுச் செல்லும் கல்வி முறை ஒன்றை விடுதலை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்றை வளர்த்தெடுப்பதில் எப்படி பங்கேற்க முடியும்? தங்களை அடக்கி ஆளும் அதிகார வர்க்கத்தின் ஆதாரப் பிரபுக்களாக தங்களை கண்டறிந்து கொள்ளும் போது தான் தங்கள் விடுதலை நோக்கி வழிநடத்தும் ஒரு கல்வி முறையைப் பெற்றெடுக்கும் செவிலியின் வேலையை அவர்களால் எப்படி செய்ய முடியும். வாழ்வது என்பதே அவர்களாக இருத்தல். அவர்கள் என்றாலே அது அதிகார வர்க்கம் என அவர்களாக மாறுவதே குறி என்பதை உடைக்கும் வரை அதற்கு சாத்தியமே இல்லை. தாங்களும் தங்களது அதிகார வர்க்கமும் மனிதத் தன்மையை அற்றுப் போக வைத்ததன் விளை பொருட்களே என்பதைக் கண்டறியும் ஒரு கருவியே ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி முறை ஆகும். என்று தமது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை நூலில் கூறியுள்ளார். (ப.20)

இக்கூற்று இன்று தலித் மக்களுக்குரியதாகவே அமைந்துள்ளது. பொதுவாக அதிகார வர்க்கம், அதிகார சூழல் இவ்விடங்களில் தலித் மாணவர்கள் அம்பேத்கர் வாங்கிக் கொடுத்த கல்வி உரிமையை முன் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. அதனையும் மீறி முன் செல்கின்ற போது பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தலித் மாணவர்களின் பிரச்சினைகள்

1.அரசு நிறுவனங்களில் தலித் மாணவர்கள் அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து விடுகின்றனர்.

2.திறமையான மாணவர்கள் கூட ஒதுக்கீட்டின் வழியில் தான் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

3.அங்குள்ள அதிகார வர்க்கத்து ஆசிரியர்கள் தலித் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்றத்தாழ்வுகளை கடைபிடிக்கின்றனர். குறிப்பாக தான் சார்ந்துள்ள இனத்து மாணவர்கள் தலித் மாணவர்களுக்கு கீழ் மதிப்பெண் பெற்று விடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் அதிகமாக வழங்குகின்றனர். நன்றாகப் படிக்கின்ற தலித் மாணவர்களுக்கு மேல் மதிப்பெண் உள்ளவனாக ஆக்கி விடுகின்றனர்.

4.குறிப்பாக (á¯áÀ) என்ற பாடத்திட்டத்தின் அமைப்பில் தலித் மாணவர்கள் புறக்கணிக்கப் படுகின்றார்கள்.

5.ஏதேனும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது தலித் மாணவர்களுக்கு இந்துத்துவ ஆசிரியர்கள் முக்கியப் பொறுப்புகளில் உள்ள போது கையெழுத்து இடுவதில்லை.

இது போன்ற பிரச்சினைகளில் மாணவர்கள் இயல்பாகவே தனக்குரிய திறமையை இழக்கிறார்கள். இங்கு அம்பேத்கர் கூறிய எதிர்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துத்துவ வாதிகளுக்கு அடிமையாக இருப்பார்கள், என்ற சிந்தனை கல்வி நிலையங்களில் இன்று உருவாகி விட்டது. இது போலவே அரசு நிறுவனங்களில் பணிபுரியும் நிலை இன்றும் உயர்ந்து நிற்கிறது. திறமையுள்ள தலித் ஊழியர்களை ஓரங்கட்டிவிடும் பழக்கமும், அவர்களை மதிக்காத போக்கும் இன்று சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் ‘ஷெட்யூல்ட்’ பிரிவினர் அரசுப் பணிகளைப் பெறுவதில் இரண்டு விதமான நன்மைகள் உள்ளன. முதலில் சாதி இந்துக்கள் அரசுப் பணிகளைக் கைப்பற்றிக் கொண்டு ஷெட்யூல்ட் வகுப்பினரை நிரந்தரமான கொடுமைகளில் ஆழ்த்தி அவதிப்படுத்துவதை; தடுத்து ஷெட்யூல்ட் பிரிவினருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கச் செய்கின்றது. இரண்டாவது அரசு விவகாரங்களில் நீதியைப் பெறுவதற்கு அனுகூலமாக இருப்பதோடன்றி, அவர்களின் பொருளாதார நிலைமைகளையும் உயர்த்துகின்றது? என்றார். (உலகச் சிந்தனையாளர்.ப.26) இங்கு முதலாவது நன்மை என்று கூறிய சம சந்தர்ப்பம் இன்றும் வரவில்லை, ஆனால் இரண்டாவது அம்பேத்கர் கூறிய பொருளாதார நிலைமை உயரும் என்பது மட்டும் நிறைவேறியுள்ளது. சம சந்தர்ப்பம் அடைவது பற்றி ஆராயப்பட வேண்டியுள்ளது.

தீர்வு

இவ்வாறாக டாக்டர் அம்பேத்கர் போராடிப் பெற்றுத் தந்த அரசியலும், கல்வியும், இன்றளவும் முழுவதுமாக தலித் மக்களுக்குக் கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் இரண்டு கருத்துக்களைக் கவனிக்கப்பட வேண்டும்.

1.விவசாயத்துறையில் தலித்துக்கள் ஈடுபடுவது

2.கிராமங்கள் அழிய வேண்டும்

இது கொஞ்சம் அதிர்ச்சியை உண்டுபண்ணும் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதான் உண்மையான சமத்துவத்துக்கான காரணங்களாக அமையும். இன்றளவும் சாதிய ஏற்றத்தாழ்வு அமைந்துள்ள இடம் ‘கிராமம்’ சாதியம் கொண்டுள்ள தொழில் வேளாண்மை (விவசாயத் தொழில்) இந்த இரண்டும் அழிக்கப்பட்டு விட்டால் இந்தியாவில் சாதியம் அழியும். தலித்துக்கள் அதிகார வர்க்கத்தினால் ஒதுக்கப்பட மாட்டார்கள்.

ஏன்

விவசாயத்தில் தலித்துக்கள் பண்ணையாட்களாகவும், தினந்தோறும் கூலி பெறும் தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். அங்கு முதலாளி என்கின்ற இந்துத்துவ வாதிகள் தலித்துக்களை அடிமையாகவே பார்த்துப் போய் விடுகிறான். இங்கு இரண்டு கருத்து முக்கியமானவை.

1.தலித் மக்கள் தனக்குக் கீழானவர்கள் என்கிற எண்ணம்

2.தலித் மக்கள் தன்னிடம் கூலி பெறுகிறான் என்கிற எண்ணம்

இவை இரண்டும் சேர்ந்து கொண்டு முதலாளியை எல்லா இடங்களிலும் முதலாளியாக வைத்திருக்கின்றது. மற்றொன்று

1.விவசாயத்தில் தொழிலாளியாக இருக்கும் தலித் மக்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தாலும் அவர்கள் கூலித் தொழிலாளிகள் தான். வேறு மாற்று கிடையாது. எனவே இத்துறையை விட்டு தொழிற்துறைகளுக்கு வேலையாட்களாகச் செல்லலாம்.

இப்போது சில வினாக்கள் எழும்.

1.விவசாயம் இல்லையெனில் உணவு தட்டுப்பாடும் ஏற்படுமல்லவா?

ஆம் ஏற்படும், தலித்துகளுக்கு மட்டுமா உணவுப்பிரச்சினை ஏற்படும் நாட்டில் உள்ள அனைவருக்கும் தானே, அனைவரும் மாற்று வழியைத் தேடும் போது தலித்து மக்களுக்கும் அது கிடைக்கும் அல்லவா.

2.மாற்றாக என்ன செய்வது

இன்று தொழிற்துறைகள் பெருகிப் போய்விட்டன. அவற்றில் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படுகிறது. அங்கு வேலையில் சேரலாம்.

3. வேளாண்துறையில் இருந்து தொழிற்துறை சென்றால் என்ன லாபம்?

நஷ்டம் இல்லை. லாபம் இல்லை எனில் ஒரு தலித் எத்தனை ஆண்டுகள் விவசாயத் துறையில் கூலியாக இருந்தாலும் அவன் கூலி தான். ஆனால் தொழிற்சாலையில் அவன் 10 ஆண்டுகள் இருந்தால் அனுபவ அடிப்படையில் வேறு பதவிக்குச் செல்கிறான். அவன் ஒரு நாள் நிச்சயமாக 10 நபர்களை வேலை வாங்கும் தலைமைத்துவத்தை அடைவான். அதான் சமத்துவம். இதைத் தான் அம்பேத்கர் விரும்பினார்.

கிராமங்கள் ஏன் அழிய வேண்டும்

கிராமம் சாதியத்தின் பிறப்பிடம். அங்கு என்ன தான் தலித் மக்கள் வசதியாக பொருளாதார முன்னேற்றம் பெற்றிருந்தாலும் இந்துத்துவவாதிகளால் மதிக்கவோ சமமாக நடத்தவோ முடியவில்லை. இங்கிருந்து கல்வி நிலையங்கள் அரசு நிறுவனங்களுக்கு வரும் தலித் மக்களை அங்கு இருந்து வரும் இந்துதத்துவ வாதிகள், கிராமத்தில் பார்க்கும் அணுகுமுறைகளில் தான் பார்க்கின்றனர். இது ஒரு போதும் சமத்துவத்தைக் கொடுக்காது. எனவே கிராமங்களை அழிக்க வேண்டும். தலித் மக்கள் நகரத்தை நோக்கிப் பயணப்பட வேண்டும். அது சமத்துவத்தை வழங்க வழிவகுக்கும். இல்லையெனில் வேளாண்மையில் கூலிகளாக தலித் மக்களைப் பார்த்த இந்துத்துவ வாதிகள் அரசு ஊழியர்களாக ஆன பின்பும் அது போலவே பார்க்க வாய்ப்புள்ளது. இன்றும் அதான் நடந்து கொண்டுள்ளது.

எனவே இந்த மாற்றங்கள் வரவேண்டும். இதனைச் செய்வது கூட தலித் மக்களாகத் தான் இருக்க முடியும். வேளாண்மைத் தொழிலையும், கிராமங்களையும் அழிக்க வேண்டும் என்பது தலித் மக்கள் அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு மாற்றத்தைத் தேடுவதைக் குறிப்பிடுகிறது இக்கட்டுரை. இது தான் அம்பேத்கரின் தலித் விடுதலையை முன் வைத்து கருத்தியலும் இன்றைய நிலைப்பாடும் அவற்றிற்கான தீர்வும்.

- முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.

Pin It