மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றிய விவாதம் இந்தியா அளவிலும், தமிழகத்திலும் முதன்மையான இடத்தில் உள்ளது. விற்பனை தொடர்பாக அரசு நிறுவனங்களின் பங்கு பற்றி இந்த சிறிய பதிவில் நேரடி அனுபவத்திலிருந்து சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
விற்பனையில் (கொள்முதல்) உள்ள நிறுவனங்கள்
1) அரசு நேரடி கொள்முதல்
2) கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டி விற்பது
3) விற்பனைக்கான முகவராக அரசு நிறுவனங்களான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவது.
4) ஒப்பந்த முறையில் அரசு ஒழுங்கு செய்து சாகுபடி, கொள்முதலைக் கண்காணிப்பது.
1) அரசு நேரடிக் கொள்முதல்
நெல், கோதுமை இரண்டு முதன்மையான உணவு தானியங்களையும் அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை நம்பியே விவசாயிகள் தமது உற்பத்தியைச் செய்யும் நிலை உள்ளது.
அரசின் தற்போதைய நெல்கொள் முதல் விலை ஒரு கிலோ ரூ 19.68. இதுவே தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் ஒரு கிலோவிற்கு ரூ 2.00 முதல் 3.00 வரை விவசாயிக்கு குறைவாகத்தான் கிடைக்கும். ஒரு ஏக்கரில் சராசரி 2500 கிலோ நெல் விளைகிறது. இதன் படி ரூ 5000 லிருந்து 7500 வரை விவசாயிகள் அரசு கொள்முதல் மூலம் இலாபம் அடைகிறோம்.
அரசு கொள்முதல் நிலையத்தில் பணம் உடனடியாகக் கிடைக்கும். தனியாரிடம் அப்படிக் கிடைக்காது. உத்திரவாதமும் கிடையாது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுப் பள்ளிகள் தேய்ந்து அழிந்து வருவது போல BSNL மூடப்படுவது போல அரசு கொள்முதலும் இல்லாமல் ஒழியும்.
அரசு கொள்முதல் இல்லை எனில் பொது விநியோக முறை ஒழிக்கப்படும். இது தான் அவர்கள் திட்டம்.
2) கூட்டுறவு முறையில் பால் கொள்முதல் மிக முதன்மையான பொருளாக கொள்முதல் செய்யப்பட்டு மதிப்புக் கூட்டப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
சர்க்கரை ஆலைகளும் கூட்டுறவு முறையில் இயங்குகின்றன.
இதில் தமிழகத்தின் ஆவின் நிறுவனத்தை விட குஜராத் ஆனந் கூட்டுறவின் அமுல் மிகவும் முன்னணியில் உள்ளது. அமுல் பன்னாட்டு நிறுவனங்களையே விஞ்சி நிற்கிறது. அமுல் விவசாயிகள் பால் விலையைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர். குஜராத் உழவர்களின் வாழ்க்கையில் அமுல் கூட்டுறவின் பங்கு மிக முக்கியமானது.
தமிழகத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களைவிட ஆவின் நிறுவனம் தான் விவசாயிகளுக்கு பாதுகாப்பாதானதாக உள்ளது. அரசு பால் விலையைத் தீர்மானித்து கொள்முதல் செய்வதால் தான் விவசாயிகள் தனியாரிடம் அதே விலையைப் பெற முடிகிறது.
ஒரு கூட்டுறவு அமைப்பை அரசு கண்காணித்து விலையைத் தீர்மானிக்காமல் இருந்தால் தனியார் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்குத்தான் பால் கொள்முதல் செய்வார்கள்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட மந்த நிலையால் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்தி விட்டன. அந்த விவசாயிகளிடம் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறது.
கூட்டுறவு சங்கத்தினால் விவசாயிகள் பெறும் சமூக நலன்கள் தனியானது. தாங்களே உரிமையாளர்கள் என்ற உரிமையோடும் இருக்கின்றனர்.
3) ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், விற்பனைக் கூட்டுறவு சங்கங்களும்
பல்வேறு வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் முகவராக இருந்து விவசாயிகளுக்கு வெளிச்சந்தையை விட இலாபகரமான விலை கிடைக்க உதவுகின்றனர். தேங்காய், தேங்காய் பருப்பு, எள், மஞ்சள், பருத்தி போன்ற விளை பொருட்கள் பெருமளவு அரசு நிறுவனங்களைச் சார்ந்தே விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தது 10% விலையைக் கூடுதலாக அரசு விற்பனையகங்கள் மூலம் பெறுகிறோம். இன்னொரு முக்கியமான அம்சம் பணம் உடனடியாகக் கிடைக்கிறது.
இந்த சட்டங்கள் நடப்பிற்கு வரும்போது இந்த அரசு முகமைகள் படிப்படியாக செயலிழந்து நசிந்து அழிந்து விடும்.
4) ஒப்பந்த முறையில் கரும்பு சாகுபடி ஒரு பாதுகாப்பானதும் ஒப்பீட்டளவில் இலாபகரமானதுமாகும். இதில் அரசு கரும்பு விலையைத் தீர்மானித்து விவசாயிகளுக்கு அந்த விலை கிடைக்கச் செய்கிறது.
மகாராஷ்ட்ரத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு கரும்பு சாகுபடி நடக்கிறது. 40க்கும் மேற்பட்ட கூட்டுறவு ஆலைகள் மிகச் சிறப்பாக இயங்கி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கிறது. அங்கு கரும்புக்கான நிலுவை தமிழகத்தை ஒப்பிட்டால் மிகச் சொற்பமானது.
தற்போதைய சட்டம் வந்தால் அரசு விலையைத் தீர்மானிப்பதிலிருந்து விலகிக் கொள்ளும். ஆலைகள் வைத்தது தான் சட்டம் என்றாகும். ஆக வேளாண் உற்பத்தியிலும் சந்தைப்படுத்துவதிலும் தற்போதைய கட்டமைப்புகளை விவசாயிகளின் பங்கேற்போடு சீரமைக்கப்பட வேண்டும். அது தான் தற்போதைய நிலையிலிருந்து இன்னும் அதிகப் பயனை உழவர்கள் பெற வழிவகுக்கும்.
மாறாக இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட கார்பரேட் நிறுவனங்களிடம் வேளாண்துறையையும், மக்களின் உணவுப் பாதுகாப்பையும் ஒப்படைப்பது எப்படி சரியாக இருக்கும்?
வேளாண் உற்பத்தியும், வெகுமக்கள் உணவுப் பாதுகாப்பும் நேரடியாகத் தொடர்புடையது.
இன்று நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களை அரசே கொள்முதல் செய்து முடை இருப்பு வைத்துக் கொண்டு பொது விநியோக முறையில் மக்களுக்கு எளிய முறையில் கிடைக்க வழி செய்கிறது. இந்த பொது விநியோக அமைப்பு தான் பெரும்பான்மை மக்கள் பட்டினி கிடக்காமல் பாதுகாக்கிறது.
அதே போல நெல், கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் விளை பொருட்களை நிலையான விலைக்கு கொள்முதல் செய்து உழவர்களையும் பாதுகாக்கிறது.
மோடி அரசின் புதிய சட்டம் உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கும் இந்த சமூக பாதுகாப்பிலிருந்து அரசை விலக்கி விடுகிறது. இவைகளைக் கடந்து மாநிலத்தில் பட்டியலிலுள்ள வேளாண்துறையை முற்றாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது. இது மாநில மக்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் ஒரு சர்வாதிகார அரசியல் நடவடிக்கையாகவும் மாறியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் காசு உள்ளவர்களுக்கு என்று மாறியதைப் போல உணவுப் பொருளும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை வந்து சேரும்.
மக்களுக்கான உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்திலிருந்து அரசின் சமூகப் பொறுப்பை புதிய வேளாண் சட்டங்கள் இல்லாமல் செய்து விடுகிறது. முழுக்க, முழுக்க இலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட கார்பரேட் முதலாளிகளிடம் உணவு உற்பத்தி செய்யும் உழவர்களையும் நுகர்வோரான வெகுமக்களையும் ஒப்படைத்து விடுகிறது.
மற்ற எல்லாத் துறைகளையும் விட உணவு அளிக்கும் வேளாண் துறையை கார்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பது நாட்டு மக்களை பலி பீடத்தில் நிறுத்துவதற்கு ஒப்பாகும். எனவே புதிய வேளாண் சட்டங்கள் உழவர்களின் பிரச்சினை என்பதுடன் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாகவும் மாறிவிட்டது. சமூக நலனில் அக்கறை உள்ள அனைவரும் இது குறித்து பேச வேண்டுகிறோம்.
- கி.வே. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்