இந்திய நாட்டில் பல சமூகப் புரட்சியாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜோதி ராவ் புலே, நாராயண குரு, சாகு மகராசர், தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோராவர்.

இவர்களில் சாகுமகராசர் மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர் ஆவார். இந்திய நாட்டில் நூற்றுக்கணக்கான மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களில் சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர் சாகுமகராசர் அவர்களே ஆவார்.

சாகுமகராசர் 1874 ஆம் ஆண்டு பிறந்து தனது 20 ஆவது அகவையில் அதாவது 1894 ஆம் ஆண்டு கோலாப்பூர் சமஸ்தான மன்னராக முடிசூட்டிக் கொண்டார். சாகுமகராசர் இறை நம்பிக்கையுள்ளவர். ஆரிய சமாசத்தை ஆதரித்தவர். அரசுப் பதவிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதற்குக் காரணம், பார்ப்பனரல்லாதாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதே என்பதை உணர்ந்தார். இதனை மாற்றி அமைக்கப் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் கல்வி போதிக்க முழு முயற்சியில் ஈடுபட்டார்.

கோல்காப்பூரில் அனைத்து மாணவர்களும் தங்கிப் படிக்க ஒரே ஒரு விடுதி இருந்தது. ஆனால் அந்த விடுதியில் பார்ப்பனரல்லாத மாணவர் ஒருவர் கூடத் தங்கியதில்லை என்பதை அறிந்து வருந்தினார். எனவே, பார்ப்பனரல்லாதார் தங்கிப் படிக்க பல விடுதிகளை ஏற்படுத்தினார்.

சாகுமகராசர், தான் பிறந்த மராத்திய சாதி, சமுதாயத்தில் சத்திரியர் எனும் நிலைக்கு உரியது எனக் கூறினார். ஆனால் பார்ப்பனர்கள் அவர் பிறவியில் சத்திரியர் அல்லர், சூத்திரர் எனக்கூறி அவருக்கு வேத மந்திரங்களை ஓத மறுத்தனர். புராண மந்திரங்களையே ஓதி வந்தனர். இதனை அறிந்த மன்னர் சாகு மகராசர் தன்னை இழிவுபடுத்திய பார்ப்பனர்களைத் தண்டிக்க 1901 ஆம் ஆண்டு, இனி அரண்மனையில் புரோகிதர்கள் வேதச் சடங்குகளையே செய்ய வேண்டும். அப்படிச் செய்ய மறுத்தவர்கள் அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்தார். ஆனால் தலைமைப் புரோகிதர் மன்னரின் இந்த உத்தரவை ஏற்க மறுத்தார். இதனால் மன்னர் அவருக்கு தானமாகத் தந்த நிலங்களைப் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பித்தார்.

பார்ப்பனர்களுக்கும் மன்னருக்கும் இடையே மோதல் முற்றிக்கொண்டே போனது. இந்நிலையில் மன்னர் சாகுமகராஜ் மராட்டியத்தில் உள்ள மற்ற மன்னர்களுக்கும் இது பற்றிக் கடிதம் எழுதினார். அவர்களும் பார்ப்பனர்களால் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டு வருவதை அறிவித்தனர். பரோடா மன்னர் கெய்க்வாடு சாகு மகராசரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தார்.

இந்நிலையில் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் சங்கர மடத்தில் வாரிசுகளை நியமிக்கும் முன் அதற்கான ஒப்புதலை மன்னரிடம் பெறவேண்டும். ஆனால் பிலவதிகர் என்ற சங்கராச்சாரி மன்னரின் அனுமதி பெறாமல் பிரம்மனாலகர் என்பவரைத் தமது வாரிசாக அறிவித்தார். இதனை அறிந்த மன்னர் சங்கர மடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். உடனே பாலகங்காதரத் திலகர் தலையிட்டு மன்னரின் ஆணையை நிறைவேற்ற உறுதி அளித்து பறிமுதல் செய்த சொத்துக்களைத் திரும்பப் பெற்றார். அரண்மனைப் புரோகிதர்களும் வேத மந்திரம் ஓத ஒப்புக்கொண்டனர்.

1902 ஆம் ஆண்டு, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். இந்திய நாட்டில் இதுதான் முதல் சமூகநீதி ஆணையாகும். பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாகவும் இருந்தது. மேலும், கோல்காப்பூரில் மாணவர் விடுதி ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போது “சாதி முறையை ஒழிப்பது தேவையானது. அதை ஆதரிப்பது குற்றமும், பாவமும் ஆகும். முன்னேற்றப் பாதையில் மிகப்பெரும் தடையாக இருப்பது சாதி முறையே'' என்றார். அதோடு சாதியை அகற்றுவது நமது கடமை என்றும் அக்குறிக்கோளை அடைவதற்குத்தான் சாதி மாநாடுகள் நடைபெறுகிறது என்பதை மறவாதீர் என்று மன்னர் சாகுமகராசர் வேண்டுகோள் விடுத்தார்.

      மன்னர் சாகுமகராசர், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதற்குத் தனிக் கவனம் செலுத்தினார்.

      தாழ்த்தப்பட்டோரை அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் சமமாக நடத்திட ஆணைபிறப்பித்தார்.

      தாழ்த்தப்பட்டோர் நகர சபைத் தேர்தலில் பங்கு பெற்று வெற்றிபெற சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினார்.

      தாழ்த்தப்பட்டோர் பொது கிணறு மற்றும் குளங்களை மற்றவர்களுடன் சமமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்தார்.

      தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாகச் செயல்பட்டுவந்த பள்ளிகளை மூடி, பொதுப்பள்ளியில் எவ்வித வேறுபாடுகளுமின்றி அவர்களைச் சேர்த்துக் கல்வி போதிக்க ஆணை பிறப்பித்தார்.

      தாழ்த்தப்பட்டோர் கிராமங்களில் கணக்குப் பிள்ளைகளாகப் பணியாற்ற பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமன ஆணைகளைப் பிறப்பித்தார்.

      மன்னர் தன்னுடைய தனிப்பட்ட அலுவல்களை கவனித்துக் கொள்ள தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டார்.

      அரசாங்க யானை மீது அமர்ந்து அதை வழி நடத்திச் செல்லும் பதவியை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்கினார்.

      தாழ்த்தப்பட்ட தோழர்களோடு மன்னரே இணைந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

1919 ஆம் ஆண்டு முதல் மன்னர் சாகுமகராசரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு ஏற்பட்டது. அம்பேத்கர் 1920 ஆம் ஆண்டு வெளியிட்ட “மூக்நாயக்'' (ஊமைகளின் தலைவன்) என்ற மாதமிருமுறை இதழ் வெளிவர சாகுமகராசர் அம்பேத்கருக்கு உரிய உதவிகளைச் செய்தார்.

1920 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21 ஆம் நாள் கோல்காப்பூர் அரசில் மான்கோன் என்ற இடத்தில் நடைபெற்ற “தீண்டப்படாதார் மாநாட்டிற்கு'' அம்பேத்கர் தலைமை தாங்கினார். மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னர் சாகுமகராசர் “அம்பேத்கர் உருவில் உங்கள் மீட்பரைக் கண்டறிந்துள்ளீர்கள், உங்கள் அடிமை விலங்கை இவர் உடைத்தெறிவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காலம் வரும்; அப்போது அனைத்திந்திய அளவில் மதிப்பு வாய்ந்த புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்வார் என்று என் மனச்சான்று சொல்கிறது'' என்று குறிப்பிட்டார்.

மன்னர் சாகுமகராசர் அம்பேத்கர் மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் கொண்டு இருந்தார். ஒருநாள் திடீரென்று அம்பேத்கர் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரோடு சில மணிநேரம் கலந்துரையாடித் திரும்பினார். இதன்மூலம்மன்னர் சாகுமகராசர் அம்பேத்கர் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நாம் அறியலாம்.

20 ஆவது அகவையில் ஆட்சிக்கு வந்து 28 ஆண்டுகள் ஒரு சிற்றரசராகப் பதவி வகித்து 48 ஆவது வயதில், அதாவது 1922 இல் மறைந்த சாகுமகராசர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் தாழ்த்தப்பட்ட சமூகம் உயர்வதற்கும் பாடுபட்டார். குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனர்களை எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை உயர்த்திடத் தனது பதவியே பறிபோனாலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். பார்ப்பனர்கள் ஆங்கிலேயரைத் தனக்கு எதிராகத் திருப்பிவிட்டு எந்த தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார் என்று பிரகடனம் செய்தவர் மன்னர் சாகுமகராசர் ஆவார்.

சுதந்திர இந்தியாவில் குறிப்பாக கடந்த 64 ஆண்டுகளில் இதுவரை ஒரு பிரதம மந்திரியோ, அல்லது ஒரு மாகாண முதல் மந்திரியோ இவரைப்போல் துணிவுடன் பார்ப்பனர்களை எதிர்த்து பணியாற்ற முன்வந்தார்களா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆட்சிக்கு வருபவர்கள் தங்களது கொள்கை இலட்சியங்களை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, தனது பதவியின் காலத்தை வெற்றிகரமாக முடித்து மீண்டும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சில திட்டங்களைத் தீட்டி அவைகளை மட்டுமே செய்து தேர்தலில் போட்டியிடுவதை நாம் காண்கிறோம்.

சாகுமகராசர் தொடங்கிவைத்த பணி இன்னும் முடியவில்லை அவரைப் போன்ற ஒரு வீரமிக்க சமூகப் புரட்சியாளர் நம் சமூகத்தில் மீண்டும் தோன்றிச் சமூக புரட்சிக்கு வழிகாட்ட வேண்டும். வாழ்க சாகுமகராசர் புகழ்.

(பாசறை முரசு ஜூலை 2011 இதழில் வெளியானது)

Pin It

 

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் தான் சாரதா சட்டம் என்பது பரவலாக அறியப்பட்டுள்ள செய்தியாகும். எனினும் அதற்குச் சாரதா சட்டம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதனை நிறைவேற்றுவதற்கு வெள்ளையர் அரசு எடுத்த முயற்சிகள் மற்றும் அதற்குத் துணையாக நின்ற திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள், அதனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பனர்கள் செய்த பல்வேறு முயற்சிகள் ஆகியன குறித்து, இன்றைய தலைமுறை, குறிப்பாகப் பெண்கள் அறிந்திடல் வேண்டும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர், அரசுக்கு எழுதிய கடிதம் முதல் தூண்டுதலாக இருந்தது. 1880களில் அந்தக் கடிதம் எழுதப்பட்டது. 5 வயது, 6 வயதுப் பெண் குழந்தைகளுக் கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டி ருந்தார். அது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது.

வெகுண்டு எழுந்தார் பாலகங்காதர திலகர். தன்னுடைய கேசரி இதழில் இது குறித்த மிகக் கடுமையான கண்டனங்களையும், கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் எல்லாம் கைவைப்பதற்கு வெள் ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். அவருடைய எழுத்து களுக்கு, அன்று இந்தியா முழுவதும் இருந்த, இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. இதுபோன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார் திலகர்.

இவ்வளவுக்கும் அந்த சட்டம், ஒரு சாதாரண செய்தியைத் தான் முன் வைத்தது. 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது. இது நியாயமாகத்தான் படுகிறது என்று மராட்டி யத்தைச் சேர்ந்த டாக்டர் பண்டார்க்கர் போன்றவர்கள் கருத்து வெளியிட்டனர். நீதிபதி ராணடே, இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஆதரவாகத் தன்னுடைய சர்வஜன சபாவில் தீர்மானமே நிறைவேற்றினார். இவர்கள் இருவரும்கூட, பிறப்பால் பார்ப்பனர்களே எனினும், சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். திலகரின் கடுமையான கண்டனத்திற்கு இவர்களும் தப்பவில்லை.

மலபாரி, பார்சி மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்துமதப் பண்பாடுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று திலகர் எடுத்துவைத்த வாதம் மக்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றது. ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

மீண்டும் 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற பார்ப்பனர்கள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். 'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’என்றார் ஆச்சார்யா. அச்சட்ட முன்வடிவை, மெய்யறம் என்னும் தன் நூலில் வ.உ.சி. வரவேற்று எழுத, அதே நூலின் முன்னுரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண்டித்து எழுதி உள்ளதை நம்மில் பலர் அறிவோம். இப்படிப் பல்வேறு ஆதரவு எதிர்ப்புகளுக்குப்பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டது.

1920களில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 1926இல் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகுதான் தமிழ்நாட்டில் பெண்விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நீதிபதி மயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற பெரியவர்களும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற மாகவிஞர்களும் பெண்விடு தலைக்காக எழுதிக் குவித்தனர் என்றாலும், பெரியாருக்குப் பிறகே அது ஓர் இயக்கக் கோட்பாடாக வளர்ச்சி பெற்றது. அதன் விளைவாகப் பெண்கள் பலரே போராட்டக் களத்திற்கு வந்துசேர்ந்தனர். சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையைத் தகர்ப்போம் என்று முழங்கினர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினர்.

இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ஹாபிலாஸ் சார்தா என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் சார்தா சட்டம் என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பர் 28ஆம் நாள் அது சட்டமாக நிறைவேற்றப்பட் டது. 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் நடைமுறையில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்திருக்கின்றன. எப்படி வரதட்சணை தடைச் சட்டமும், வெளிப்படையாகவே வரதட்சணை வாங்கும் பழக்கமும் இன்று ஒருசேர நடைமுறையில் உள்ளனவோ, அது போலவே அன்றும் நடந்திருக்கிறது. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாடுதான், பெண் விடுதலையில் பல புதிய மைல் கற்களைத் தொடக்கி வைத்துள்ளது. வெறும் சட்டங்களால் மட்டும் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது என்பதைத் தந்தை பெரியார் அறிந்து வைத்திருந்தார். அதே வேளையில் சட்டத்தின் துணையும் அவசியத் தேவை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் திராவிட இயக்கம் இரு முனைகளிலும் சமூக மாறுதலுக்காக முனைந்து பணியாற்றியது. சாரதாச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் அப்படித்தான் உருப்பெற்றன.

மாற்றம் தேவை, மாற்றம் தேவை என்று பலரும் இன்று கூறிக்கொண்டிருக் கிறார்கள். மாற்றம் என்பது எப்போதும் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். இல்லையானால் அது ஏமாற்ற மாகவோ, தடுமாற்றமாகவோதான் ஆகிவிடும். உண்மையான, வளர்ச்சி நோக்கிய பல சமூக மாற்றங்கள் திராவிட இயக்கத்தினால்தான் இம்மண்ணில் ஏற்பட்டன என்பதற்கு இன்னும் பல வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

(கருஞ்சட்டைத் தமிழர் ஜுன் 16, 2011 இதழில் வெளியானது)

Pin It

 

இந்திய மெய்யியல் ஆய்வு மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘உலகாயதம் : பண்டை இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு’ என்ற வெளியீடு புதிய யுகத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்தியாவில் இருந்த கல்வித்துறை சார்ந்த சில புலமையாளர்களுக்கு 678 பக்கங்களைக் கொண்ட இந்த ஆங்கிலப் படைப்பின் பொருளடக்கத் தலைப்புகளின் வரிசையே திகைப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்த சிந்தனை பற்றிய வரலாற்றியலாளர்களும், தொல்சீர் இலக்கியப் புலமை யாளர்களும் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இந்நூலை வரவேற்றனர். மிக நன்கறியப்பட்ட ‘சீனாவில் நாகரிகமும் அறிவியலும்’ என்ற பல்தொகுதி நூலின் ஆசிரியர் ஜோசப் நீதம் “உங்கள் நூல் என்னுடைய நூலகத்தில் உண்மையாகவே மதிப்புக்குரிய இடத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும். நாம் பண்டைய இந்திய, சீன நாகரிகங்களை ஆராய்ந்து சில ஒத்த முடிவுகளுக்கு வந்தடைந்திருப்பது மிக வியப்புக்குரிய உண்மை” என்று சட்டோபாத்தி யாயாவுக்கு எழுதினார்.

deviprasath_360மூத்த பிரெஞ்சு இந்தியவியலாளர் லூயிஸ் ரெனோ “இந்த நூல் உயர்ந்த மதிப்புடையதாக இருக்கின்றது. இந்தியவியலாளர்கள், சமூகவியலாளர்கள் ஆகியோரால் ஆழ்ந்து கவனமாகக் கற்கப்பட வேண்டியது” என்று கூறினார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகக் கிரேக்கப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் “படைப் பாக்கத் திறனுள்ள மார்க்சியரின் இந்நூலும் அவருடைய பேசுபொருளும் ஒருவர் அறிந்துகொள்ளவும், நேசிக்கவும் வேண்டியது” என்று சொன்னார். ஜே.பி.எஸ். ஹால்டனே “உங்களுடைய புத்தகத்தால் மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று சட்டோபாத்தியாயா விடம் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது குறிப் பிட்டார். ‘உலகாயதம்’ வெளிவந்த பிறகு சட்டோபாத்தி யாயாவின் மிக நெருங்கிய துறை சார்ந்த நண்பராக மாறிய ரூபன் “சட்டோபாத்தியாயாவினுடைய புத்தகங்கள் இந்திய மெய்யியல் பற்றிய தேடலில் இந்தியர்களிடையே புதிய காலகட்டத்தைத் தோற்றுவித்தன” என்று கருதினார்.

இப்போது சட்டோபாத்தியாயாவும், அவருடைய படைப்புகளும் பல்லாயிரம் முறை நினைவுகூரப்படுகின்றன.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா 1918ஆம் ஆண்டு நவம்பர் 19-இல் கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939-1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A. (Honours), M.A. ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார். முதுகலையில் சிறப்புத்தாளாக (வேதாந்தச் சார்புடைய) இந்திய மெய்யியல் இருந்த போதிலிருந்து, அவருடைய பிந்தைய வாழ்வு முழுவதும் வேதாந்தத்திற்கும், வேறு பொருள்முதல்வாதமல்லாத மெய்யியல் முறைகளுக்கும் எதிராகச் சற்றும் உறுதி குறையாத வகையில் போராடினார்.

களைப்புறாமல் எழுதிக் குவிக்கிற எழுத்தாளரான சட்டோபாத்தியாயா ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல் தொகுதிகளையும் (அவற்றில் சில மிகமிகப் பெரியவை) குறிப்பிடத்தக்க எண்ணற்ற நூல் பதிப்புகளையும் அவருடைய பங்களிப்பாக அளித்துள்ளார். அவர் ஏற்கெனவே வங்காளியில் ஒரு உண்மையான படைப் பாளியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். அவருடைய ஆங்கில, வங்காளி மெய்யியல் படைப்புகளுக்காக நெடுங்காலம் அவர் தூற்றல்களுக்கும் போற்றல்களுக்கும் முகங்கொடுத்தார். அவருடைய தெளிவான, சரளமான நடை எல்லாவற்றிலும் உயர்வானது. அவர் 1940களின் தொடக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாட்டாளர். பின்னர் இச்சங்கம் பாசிச எதிர்ப்பு எழுத்தாளர் சங்கம் என்றழைக்கப்பட்டது. அப்போது வங்காளியின் புகழ்பெற்ற கவிஞரான விஷ்ணு தேயுடன் இணைந்து செயல்பட்டார். அர்ப்பணிப்பு மீதான அவருடைய மிக்கார்வம்பற்றி தேயால் எழுதப்பட்ட கடிதங்களிலிருந்து அவர்களுடைய நெருக்கமான உளமொன்றிய நட்பு தெரியவருகின்றது.

1940கள் பிற்பகுதியிலும், 1950கள் தொடக்கத்திலும் வங்காளியில் சிறந்த சிறுவர் இலக்கிய ஆசிரியராக சட்டோபாத்தியாயா அறியப்பட்டார்; பள்ளி செல்லும் சிறுவர்களுக்காக வாழ்க்கை வரலாறுகள், எளிய அறிவியல் நூல்கள், புதினங்கள், கதைகள் ஆகியவற்றை எழுதினார். அவருடைய அண்ணன் காமாட்சி பிரசாத்துடன் இணைந்து ‘ராங்மசால்’ என்று சிறுவர்களுக்கான இதழை நடத்தினார். இது மிகக் குறுகிய காலமே வந்தாலும் உண்மையான இலக்கிய இதழ். ஜன்பர் கதா (அறிவுப் புத்தகங்கள்), அமரௌ ஹோதே பரி (நம்மாலும் மாற முடியும்) விஞ்ஞான் விச்சிரா (பல்வேறு அறிவியல்கள்) முதலான தலைப்புகளில் இளம் வங்காளி வாசகர் களுக்காகச் சிறுநூல் வரிசையைப் பதிப்பித்தார். மானிடவியல், உயிரியல், உளவியல் முதலானவற்றைப் பற்றிய அவருடைய சிறுநூல்கள் எளிய முறையில் அறிவியல் நூல்களை முழுவதற்கான சிறந்த முன்மாதிரிகள். சுபாஷ் முகோபாத்தியாயா போன்ற பலருடன் இணைந்து வங்காளி உரைநடையில் புதுக்கிளர்ச்சியை உருவாக்கியது அவர் அளித்த பங்களிப்பு.

தாகூருக்குப் பிறகு வங்காளியில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்ற முன்னோடிகள் குழுவுடன் இணைந்து, சட்டோபாத்தியாயா தன் இளநிலைப் பட்டப்படிப்புக் காலத்தில் இளங்கவியாக இருந்தார். மிகச் சிறிய கவிதை நூலான ‘கயக்தி நாயக்’ (மிகச் சில வீரர்கள்) அவருடைய இளமைக்காலத் துணிகரச் செயலுக்கான சான்றாக நினைவுகூரப்படுகின்றது. இந்தக் கவிதை நூல் முதன் முதலாக 1942-இல் பதிப்பிக்கப்பட்டது. பின்பு சட்டோ பாத்தியாயாவின் வாழ்நாளில் மீளப் பதிப்பிக்கப்படவே இல்லை. ஆங்கில மொழியாக்கத்தில் ‘நவீன வங்காளிக் கவிதைகள்’ (1948) என்பதையும் பதிப்பித்திருந்தார். அலுவல்முறையில் கல்கத்தாவில் தங்கியிருந்த படைவீரர் மார்டின் கிரிக்மேன் பல கவிதைகளின் மொழிபெயர்ப்புச் சுமையை ஏற்றுக்கொண்டார். இந்தத் தொகை நூல் நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்தாலும், நம் ஆர்வத்தைக் கிளறக்கூடிய புத்தகம். இதை வட அமெரிக்கப் பழைய புத்தகக் கடைகளில் தேடினால் மிகக் குறைவான விலையில் இன்றும் வாசகர்களுக்குக் கிடைக்கும். மாணிக் காங்கோபாத்தியாயாவின் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறுகதைகளையும், ஆங்கிலத்தில் “Primeval and other stories” (1958) என்ற தலைப்பில் பதிப்பித்திருக்கின்றார் சட்டோபாத்தியாயா.

கவிஞரும், Frontier இதழின் நிறுவனரும் ஆசிரியருமான சமர் சென் சட்டோபாத்தியாயாவுக்கு மார்க்சு, எங்கெல்சுடைய ‘பொதுவுடைமைக் கட்சி அறிக்கை’யை 1940களின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தினார். சென்னுக்கும் சட்டோபாத்தியாயாவுக்கும் இடையில் ஆழமான அன்பு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் நட்பு இருந்தது. சான்று இதற்குச் சென் சட்டோபாத்தியாயாவுக்கு எழுதிய கடிதங்கள். இந்தக் கடிதங்கள் ‘Anustub, Eboug Ei Samay’ ஆகிய இரு வங்காளி இதழ்களில் வெளியாகியுள்ளன.

தொழிலாளர் தலைவர் பங்கிம் முகோபாத்தியாயா, மீரத் சதி வழக்கில் புகழ்பெற்ற இராதாராமன் மித்ரா ஆகியோருடன் இணைந்து மார்க்சியக் கொள்கை, நடைமுறை ஆகியவை பற்றிய அறிவை சட்டோபாத்தி யாயா விரிவாக்கிக் கொண்டார். சிறிது காலம் இராம கிருஷ்ண மித்ரா, சுபாஷ் முகோபாத்தியாயா ஆகியோருடன் தொழிலாளர் கட்சியில் இருந்தார். பிறகு 1944-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பாவனி (சங்கர்) சென் (குப்தா) 1951-இல் பண்டைய இந்திய மெய்யியல் ஆய்விற்கு மார்க்சியத்தைக் கையாளும்படி சட்டோபாத்தியாயாவைத் தூண்டினார். இந்தத் தூண்டுதல் சட்டோபாத்தியாயா வாழ்வின் திசையை முழுமையாக மாற்றியமைத்தது. பிறகு இந்திய மெய்யியல், அறிவியல் மரபுகளில் உள்ள பகுத்தறிவு பொருள்முதல்வாதக் கூறுகளைத் தேடுவதற்கு ஒரே மனதுடன் தன்னை ஒப்படைத்துவிட்டார். இந்தப் பணி அவருடைய வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது.

பாவனி சென் மற்றொரு அடிப்படையான பணியையும் செய்தார். 1940-களில் சட்டோபாத்தியாயா மார்க்சுக்கும் பிராய்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தார். 1949-இல் வெளிவந்த பாலியல் பற்றிய சட்டோபாத்தியாயாவின் வங்காளிப் புத்தகத்தைக் கடுமையாக பாவனி சென் விமர்சித்ததின் மூலம் சட்டோபாத்தியாயாவிடமிருந்த பிராய்டு பேயை விரட்டியடித்தார்; அவருடைய வாழ்வின் அடிப்படையாய் விளங்கிய மார்க்சியப் பாதைக்குக் கொண்டு சேர்த்தார். 1950களில் சட்டோபாத்தியாயா எழுதிய வங்காளப் புத்தகங்களில் அவர் இறுதியாகவும் உறுதியாகவும் நெறி வழுவாமல் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. அவருடைய ‘மார்க்சியம்’ (1952) என்ற வங்காளித் தொடக்க நூல் அறிமுக வாசகர்களுக்கு இயங்கியல் பொருள்முதல்வாத நோக்கை மிகச் சிறப்பான முறையில் கற்பிக்கின்றது.

இந்திய மெய்யியல்பற்றி சட்டோபாத்தியாயாவின் முதல் ஆய்வுத் தேடல் படைப்பான உலகாயதம் முதலா வதாக 1956-இல் வங்காளியில் வெளிவந்தது. பின்னர் முற்றிலும் மாற்றி எழுதப்பட்டு 1959-இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்நூல் ஜப்பானிய மொழி, சீன மொழி, ருஷ்யன் உள்ளிட்ட பல அயல்மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, பன்முறை திரும்பத்திரும்ப வெளியிடப்பட்டது. இன்றைய நாள் வரைக்கும் இந்த நூல் அவருடைய மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றது. மிகச் சிறந்த ஆய்விதழ்கள் மதிப்புரை எழுதின. உலகின் மிகச் சிறந்த புலமையாளர்கள் சட்டோ பாத்தியாயாவுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களின் மூலம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நீண்ட காலமாகப் புலமை வட்டத்தில் இந்நூலுக்குத் தேவை இருந்து கொண்டே இருந்தது. இந்தியாவில் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்விற்குப் புதிய வழியைத் தோற்றுவித்தது. எவ்வாறு மெய்யியலை நோக்க வேண்டும் என்பதை உள்நாட்டு, அயல்நாட்டுப் புலமையாளர்களுக்கு ‘உலகாயதம்’ கற்பித்தது என்று கூறுவது மிகைப்படுத்தல் அன்று. பொருள்முதல்வாதத்தை ஆராய்வதற்கு நடப்பில் இருந்த எல்லாமுறைகளையும் சட்டோபாத்தியாயா ஒதுக்கித் தள்ளினார். பொருள்முதல்வாதத்தின் வேர்களை மானிடவியலில் தேடினார்; தந்திரத்திலும் சாங்கியத்திலும் புரட்சிகரமான பார்வையைக் கண்டார்; அதுவரை நோக்கப்படாத முறையில் வேதத்திலும்கூடப் புதிய சான்றுகளை ஆராய்ந்து கண்டார்.

இந்திய மெய்யியலுக்கு ‘எளிய அறிமுகம்’ என்ற சிறிய நூல் அடுத்து வெளிவந்தது. 1964-இல் வெளிவந்த இந்த நூல் இந்தியாவின் முதன்மையான சிந்தனைப் பள்ளிகளைப் பருந்து நோக்கில் விவரித்தது. உலகாயதத்தில் தொடங்கி வேதாந்தத்தில் நிறைவடையும் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சயனர், மாதவர் ஆகியோருடைய சர்வதரிசன சங்கிரகத்திற்கு எதிர்நோக்கில் இந்நூல் அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நூல் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளின் வரலாற்றுத் தோற்றத்தை எடுத்துக் கூறி, அவை வளர்ச்சியடைந்த முறையை வரிசையாக விளக்கிச் செல்கிறது.

‘இந்திய நாத்திகம்’ (1969) நூலில் சட்டோபாத்தியாயா வேதநெறி சார்ந்த ஆத்திக மெய்யியல் பள்ளிகளை ஆய்விற் குள்ளாக்கி, அவற்றின் நாத்திக உள்ளடக்கத்தினை வெளிப் படுத்தினார். சாங்கியம், நியாயம் ஆகியவற்றின் நாத்திகத் தன்மையை விளக்கியுள்ளார். மீமாம்சைகூடத் தன் சொந்தத் தேவைப்பாட்டிற்காக நாத்திகத் தன்மையுடன் விளங்குவதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்தப் புத்தகம் உலகாயதத்தை அடுத்து மிகவும் புலமை சான்றது. ஏராளமான சான்றுகளை, மிக ஒழுங்கமைந்த வாதமுறையில் எடுத்துக் கூறுகின்றது.

‘இந்திய மெய்யியலில் அழிந்தனவும் நிலைத்திருப் பனவும்’ (1976) புதிய களத்தேடல்களில் மிக விரிந்த பரப்பை உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் நியாயம், பௌத்தம் ஆகியவற்றின் எண்ணற்ற நேர்மறைக் கூறுகளை வெளிக் கொணர சட்டோபாத்தியாயாவின் தலையாய ஆய்வுமுறை உதவியுள்ளது. மிகச் சிறந்த புலமைப்பாட்டைக் கொண்ட, நுண்ணிய ஆய்வு நோக்குள்ள இந்தப் புத்தகம் உலகாயதத்தை அடுத்து வந்த மிகச் சிறந்த படைப்பு. இந்தப் புத்தகத்திற்கு முதலில் “இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய மேலதிக ஆய்வுகள்” என்று பெயரிடப்பட்டது. ‘உலகாயதம்’, ‘இந்திய மெய்யியலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ ஆகிய இரண்டு நூல்களும் செவ்வியல் படைப்புகள்.

சட்டோபாத்தியாயாவின் ‘பண்டைய இந்தியாவில் சமூகமும் அறிவியலும்’ (1977) என்ற நூல் அவர் ஏற்கெனவே புதிய களத்தில் செயற்படத் தொடங்கிவிட்டார் என்பதற்குச் சான்று. அவருடைய முந்தைய படைப்புகளின் தொடர்ச்சி யாக அர்த்தமற்ற சமயச் சடங்குகளுக்கு வெளியே, இந்திய மருத்துவ நூல்களான சரக சம்கிதை, சுசுருத சம்கிதை ஆகிய இரண்டு படைப்புகளோடு இணைந்திருந்த அறிவியலின் மையக்கருவைத் தோண்டியெடுத்தார். சட்டோபாத்தியாயாவின் ஆசிரியர் சுரேந்திரநாத் தாஸ்குப்தா பண்டைய இந்தியாவில் இருந்த மருத்துவச் சிந்தனைப் பள்ளிகள் ஏதோ ஒரு தனித்துவமான மெய்யியல் நோக்கைக் கொண்டிருப்பதாகக் கருதினார். இத்தடத்தில் மேலும் சட்டோபாத்தியாயா முன்னே சென்றார். மருத்துவர்கள் புனிதமான தரும சாத்திரகாரர்களுக்கு எதிரான கருத்துநிலையைக் கொண்டிருந்ததால், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த பழைமை மரபிற்கு உட்படாத வலிமையான அறிவியல் மரபைக் கைவிடுமாறு மருத்துவர்களை மரபாளர்கள் வற்புறுத்தினர். இதனாலேயே மிகச் சிறந்த தொடக்கத்தைக் கொண்ட இந்திய நோய் மருத்துவமும், அறுவை மருத்துவமும் பிற்காலத்தில் வளராமல் போய்விட்டன என்று சட்டோ பாத்தியாயா சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் படைப்பு சட்டோபாத்தியாயாவை மிகச் சிறந்த சிந்தனை வரலாற்றியலாளர் என்று காட்டுகிறது. நோய் மருத்துவ, அறுவை மருத்துவ வடமொழி நூல்களில் அறிவியல் கூறுகளும், அறிவியலற்ற கூறுகளும் ஏன் கலந்துள்ளன என்ற கடுஞ்சிக்கலை சட்டோபாத்தியாயா முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கலவையை முரட்டுத் தனமான, குறுக்குப் புத்தியுள்ள மதக்காரர்கள் அவற்றில் திணித்துள்ளனர் என்று அவர் விளக்குகிறார். வேதங்களில், குறிப்பாக யசுர் வேதத்திலும், தரும சாத்திரங்களில் குறிப்பாக மனு சுமிருதியிலும் மருத்துவ அறிவியலுக்கான எதிர்ப்பு உள்ளதை வெளிக்காட்டியுள்ளார். இவை எல்லாவற்றையும் பிறகு ஒரு வங்காளி சிறுநூலில் (பிரச்சின் பாரத்தே சிசிச்சாவிஞ்ஞான்) சுருக்கமாய் எழுதியுள்ளார்.

உலகாயதத்திற்குப் பின் ‘பண்டைய இந்தியாவில் அறிவியலும் சமூகமும்’ சட்டோபாத்தியாயாவின் வாழ்வில் இரண்டாவது திருப்புமுனையாக அமைந்தது. இப்போது அவருடைய ஆர்வநோக்கு பண்டைய இந்தியாவில் அறிவியலின் மெய்யியல், வரலாறு ஆகியவை பற்றித் திரும்பியது. 1978-இல் கல்கத்தா நகரக் கல்லூரி கற்பித்தல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அக்கல்லூரியில் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு மெய்யியல், தருக்கவியல் ஆகியவற்றின் அடிப்படை களைக் கற்பிக்கத் தன்னை மிக அதிகமாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். ஓய்வுபெற்ற பிறகு திரும்பவும் ஒரு மாணவனாக மாறினார்; பல்வேறு பண்டைய அறிவியல் துறை களைத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்டார். வடிவக் கணிதம், வானவியல், அறுவை மருத்துவம், நோய் மருத்துவம் ஆகியவற்றை ஆராய்ந்து பேரார்வ விருப்புடன் புதியனவற்றைக் கண்டுபிடித்தார். அவருடைய மற்ற படைப்புகளிலிருந்து வேறுபட்ட ‘பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற மூன்று தொகுதி களை உடைய நூல் ஒரு மாபெரும் படைப்பு ஆகும். அம் மூன்று தொகுதிகளும் 1986, 1991, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. மூன்றாம் தொகுதி அவர் இறந்த பிறகு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல்களில் வேதகால இந்தியாவிலிருந்து தொடங்குவதற்குப் பதிலாக சிந்துசமவெளி நாகரிகத்தின் மீது கவனத்தைக் குவித்தார். இது மிகச் சிறந்த பயன் விளைவுகளை அளித்தது. ஜாகொபியும், திலகரும் வானவியல் துறை வளர்ச்சியில் முக்கியமான கண்ணிகளைத் தவறவிட்டனர். ‘வேதங்க ஜோதிஸ்டா’வின் வளர்ச்சியில் உள்ள இந்தச் சிக்கலை இறுகப் பற்றினார். பண்டைய இந்தியாவில் இரு நகர மயமாக்கங்களுக்கும் இடையே அறிவியல் எழுச்சியில் ஒரு தொடர்உறவு இருப்பதை வெளிக்கொணர்ந்தார். கிழக்கு உலகில் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய ஆய்விற்கு ஒரு பெருநோக்கைக் கையளித்தார். இத் துறையில் சமூக வரலாற்றுப் பின்புலத்தைக் கவனத்தில் கொள்ளாத மரபு சார்ந்த ஆய்வுகளின் சாதனைகளை மீட்டெடுத்தார். அதே வேளையில், சுல்பசூத்திரங்களின் வடிவக்கணிதம் (வேள்விப் பீடம் அமைக்கும் கலை), செங்கல் அறுக்கும் தொழில்நுட்பம் ஆகியவை வேதப் பரப்பிற்கு வெளியே சிந்துவெளி மரபில் உருவாகித் தொடர்ந்து வந்ததை எடுத்துக் காட்டியுள்ளார்.

அறிவியலின் வரலாற்றில் ஈடுபாடு கொள்வதற்கு முன்னமே சட்டோபாத்தியாயா மெய்யியலை, குறிப்பாக மார்க்சிய மெய்யியலை மிக அதிக அளவில் நேசித்தார். ‘மெய்யியலாளர் லெனின்’ (1979) என்ற நூலை முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். பிறகு 1980-இல் இந்த நூலை வங்காளியில் எழுதினார். மெய்யியல் துறையில் அவருடைய கடைசிப் படைப்பு ‘பாரத்தே வாசுவத் பிரசங்கே’ என்ற இந்தியாவில் இருந்த பொருள்முதல்வாதம் பற்றிய மதிப்புரை ஆகும். இதன் முதற்பதிப்பு 1987-லும் திருத்தப்பட்ட மறுபதிப்பு 1991-லும் வெளிவந்தன. இந்நூலை அவரே 1989-இல் “பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் உள்ளாற்றல் பற்றி” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருடைய மற்றப் படைப்புகளைப் போன்று இதுவும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சட்டோபாத்தியாயாவின் வாழ்வு அடிச்சுவட்டில் கடுமையான தடைகள், அடிப்படை வசதிகளின் பற்றாக் குறை, வெளியீட்டில் முறையற்ற சுணக்கம் ஆகியவை எல்லாம் விடாப்பிடியாகத் தொடர்ந்தன. இந்த இடர் களையும், நாம் முன்பே குறிப்பிட்ட நூல் வேலைகளையும் தாண்டி சட்டோபாத்தியாயா 1989 முதல் 1973 வரை ‘இந்திய ஆய்வுகள் : நேற்றும் இன்றும்’ என்ற ஆய்விதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்; எம்.எம்.பாணிபூசன தருக்கவாகிசர் குறிப்புகளுடன் நியாயச் சூத்திரத்தையும், அதற்கான வாத்யாயனர் உரையையும் மிரிணள்காந்தி காங்கோபாத்தியாயாவுடன் இணைந்து மொழிபெயர்த்துப் பதிப்பித்தார். காங்கோபாத்தியாயாவை “என் இளம் நண்பனும் ஆசிரியனும் ஆவான்” என்று குறிப்பிட்டு இருந்தார். இம்மொழிபெயர்ப்பு இரண்டு தொகுதிகளாக 1967-68ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது. திபெத்திய படைப்பான லாமா தாரநாதருடைய ‘இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு’ என்ற நூலினை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1970இல் பதிப்பித்தார். வரலாறும் சமூகமும் (நிகர் ரஞ்சன்ராய் பாராட்டு மலர்) 1978-லும், ‘இந்திய மெய்யியலின் வரலாறு பற்றிய ஆய்வுகள்’ என்ற தலைப்பை உடைய மூன்று கட்டுரைத் தொகுதிகள் 1978-79களிலும் பதிப்பித்தார். இந்திய அறிவியல் வரலாறு பற்றிய ஆய்வுகள் (1980), மார்க்சியமும் இந்தியவியலும் (1981) ஆகியவை மேலும் பதிப்பித்த இரண்டு தொகைகளாகும்.

‘சாருவாகம்/லோகாயதம்; அண்மைக் கால ஆய்வுகள் அடிப்படைச் சான்றுகள் ஆகியவற்றின் தொகை’ (1990) என்ற நூலை மீண்டும் மிரிணள்காந்தி காங்கோபாத்தியாயாவுடன் இணைந்து வெளிக்கொணர்ந்தார். இந்நூல் இத்துறையில் இருந்த நீண்டகாலத் தேவையை நிறைவு செய்தது. இந்த நூல் பன்முறை மறு அச்சிடப்பட்டது. உள்நாடுகளிலும் அயல்நாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரைக்கப் பட்டது. 1990-91ஆம் ஆண்டுகளில் சட்டோபாத்தியாயா அனைவருக்குமான உலக மெய்யியல் என்ற எட்டுத் தொகுதி களைக் கொண்ட சிறுநூல் வெளியீட்டைத் திட்ட மிட்டார். அவற்றில் மூன்றை அவரே எழுதினார். இந்தியப் பண்பாடு பற்றிய ஆய்வுகள் என்ற தலைப்பைக் கொண்ட பல்தொகுதிக்கு மிகப் பெரிய அளவில் திட்டமிட்டார். ஆனால் முதல் தொகுதி மட்டும் 1992இல் நம் பார்வைக்குக் கிட்டியது. இதுவே அவர் கடைசியாகப் பதிப்பித்த நூல். இங்குக் குறிப்பிட்ட படைப்புகளும், பல்வேறுபட்ட குழப்பமான சான்றுகளைப் புரிந்துகொள்ளும் அவருடைய திறனும் நம்மை மலைக்க வைக்கின்றன.

வேறு இரண்டு படைப்புகளைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். முதலாவது புலமைப்பாடு மிக்க ரஜனி பாமிதத்துடைய ‘இன்றைய இந்தியா’ என்ற நூலை ‘இந்தியா: இன்றும் நாளையும்’ (1955) என்ற தலைப்பில் திருத்திய சுருக்கப்பட்ட பதிப்பாக வெளிக்கொணர்ந்தார். இந்நூலை 1958இல் திலிப் போசுடன் இணைந்து ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து, வெளியிட்டார். இரண்டாவது ரமேஷ் சந்திர தத்தாவினுடைய ‘ரிக்வேத சம்கிதை’ வங்காளி மொழிபெயர்ப்பைப் பல அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளுடன் 1963இல் திரும்பப் பதிப்பித்தார். இப் பதிப்பு நீண்ட காலமாக அச்சில் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது.

சட்டோபாத்தியாயா ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் பல சாதனைகளைப் புரிந்ததற்கு அவரைச் சுற்றியிருந்த, அவரால் தாக்கமுற்ற இளம், முதிய ஆய்வுத்துறை நண்பர்கள் ஒரு காரணமாவார்கள். திட்டமிடுதல், எழுதுதல், படியெடுத்தல், மெய்ப்பு திருத்துதல் ஆகிய எந்தப் பணியாக இருந்தாலும் அவருடைய நண்பர்கள் உளமொன்றிய பொறுப்பு உணர்வுடன் பணிபுரிந்து படைப்பின் ஓர் அங்கமாவார்கள். அவர்களைத் தன்னுடைய படைப்பின் முகவுரையில் உண்மையான நன்றியுணர்வோடு சட்டோபாத்தியாயா குறிப்பிடுவார்.

காலம் தாழ்ந்தே அவர் துறை சார்ந்த ஏற்பு மதிப்பைப் பெற்றார். அந்த ஏற்பு முதலில் வெளிநாடுகளில் கிடைத்தது. 1975இல் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் அறிவியல் கழக உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1989இல் சோவியத் குடியரசு அறிவியல் கழக விருந்தினராக அழைத்து முதுமுனைவர் பட்டம் வழங்கியது. பிறகு இந்தியக் கல்வி நிலையங்கள் அவருக்குப் பட்டங்களையும் தகைமை ஊதியங்களையும் வழங்கின. பழைமைவாதிகளுக்கு எதிரான கருத்துநிலைப் போராட்டத்தில் அவருடைய படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் இளம் செயல்பாட்டாளர்களுக்கு அவர் எப்பொழுதும் உதவி வந்தார். அவர் 1991இல் ‘வ்ராதிரோத்’ (எதிர்ப்பு) மாதம் இருமுறை வெளிவரும் வங்காளி இதழை நடத்தினார். அதில் ராம்மோகன் ராய் முதல் சத்தியேந்தர நாத் வரையிலான புகழ்பெற்ற வங்காளப் படைப்பாளிகளின் எழுத்துகளிலிருந்து சிறப்பான பகுதிகளை உள்ளடக்க மாகக் கொண்ட ‘உத்ஸ மனுஷ்’ என்ற பகுதியை வெளியிட்டு வந்தார். இந்தப் பகுதி பழைமைவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான பகுத்தறிவுப் போராட்டம் தொடக்கத்திலிருந்தே வங்காளத்தில் இருந்து வந்தது என்பதனை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியது.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், வி.ஜி.சைல்ட், ஜார்ஜ் தாம்சன், ஜோசப் நீதம் ஆகியோர் சட்டோபாத்தியாயா மீது மிகப் பெரிய செல்வாக்குச் செலுத்தினர். இவர்களுக்குப் பட்ட கடனையும் நன்றியறிதலையும் எப் பொழுதும் சட்டோபாத்தியாயா குறிப்பிடத் தவறவில்லை. அவர் ஜே.டி.பெர்னலின் ‘வரலாற்றில் அறிவியல்’ என்ற கையடக்க நூலைப் பயன்படுத்திக் கொண்டார். பரோஸ் டன்ஹாம், ஜான் சாமர்வில்லே, வால்ட்டர் ரூபன் ஆகியோரிடம் மிகப் பெரிய நன்றியுணர்வு கொண்டு இருந்தார். டி.டி.கோசாம்பி, ட்ரேவர் லிங்க், டேல் ரெய்ஃபே ஆகியோருடன் மிக நெருங்கிய உளமொன்றிய நட்பைக் கொண்டிருந்தார். பல்வேறு நாடுகளிலிருந்த அவருடைய நண்பர்களான வரலாற்றியலாளர்கள், மெய்யியலாளர்கள், படைப்பாளிகள் ஆகியோருடன் தனிப்பட்ட அளவில் கடிதத் தொடர்பு கொண்டிருந்ததை சட்டோபாத்தியாயாவினுடைய ஆவணங்கள் காட்டுகின்றன. அவை வெளியிடப்படும்போது சட்டோபாத்தியாயாவின் மற்றொரு ஆளுமைத் தோற்றம் வெளிவரும்.

ஆங்கிலம், வங்காளி ஆகிய இருமொழிகளின் எண்ணற்ற கலைக்களஞ்சியத் திட்டங்களில் சட்டோ பாத்தியாயா இணைந்திருந்தார். அவர் பகுத்தறிவாளர்களுடனும் மக்கள் அறிவியல் இயக்கத்தினருடனும் எப் பொழுதும் தொடர்பில் இருந்தார். இளம் ஆய்வாளர் களுக்குச் சாத்தியமான வகையில் வழிகாட்டினார். விருப்புகளும் வெறுப்புகளும் கொண்ட உறுதி வாய்ந்த மனிதர் என்ற வகையில் அவருடைய பார்வைகளைத் திரும்பத்திரும்ப விமர்சனத்துக்குள்ளாக்கிப் புதுப்பித்துக் கொண்டார். புதிய இடது, மேலை மார்க்சியம் என்று அழைக்கப்பட்ட பகட்டார்வப் போக்குகள் அவரிடம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் ஓர் உறுதியான மார்க்சியர். பின்நவீனத்துவப் பகட்டுப் பேச்சுகளுக்கு அவர் கொஞ்சம்கூட ஆதரவு தரவில்லை. கருத்துப் போராளியான சட்டோபாத்தியாயா வலிமையாக இருந்த தன்னுடைய பகைவர்களுக்கு எதிராகத் தயக்கமற்ற முறையில் வெளிப்படையாக எப்பொழுதும் பேசினார். அவருடைய தொடக்க கால வங்காளக் கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை. அவற்றைத் தொகுப்பது அவருக்கு மிகச் சிறிய வேலையாகவே இருந்திருக்கும். வெளியிடு வதற்குத் தகுதியற்ற, முழுமையடையாத சில ஆங்கிலக் கட்டுரைகளும் ஆய்வுரைகளும் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கின்றன.

பகுத்தறிவு, அறிவியல், மனிதகுல வளர்ச்சி ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கையாளரும், தான் மரணமுறுவதற்குச் சிறிது மனவருத்தமும் அச்சமும் இல்லாத மார்க்சிய லெனினியருமான சட்டோபாத்தியாயா 1993 மே 8 அன்று இறந்து போனார். அவருடைய இல்லாமையை நிறைவு செய்வது சாத்தியமற்றது என்று வாய்ப்பேச்சாகக் கூறவில்லை.

(இக்கட்டுரையை எழுத உதவிய அமித்துவ பட்டாச்சாரியா, அதிதி சட்டர்ஜி, சித்தார்த்த தத்தா, மலயந்து திந்தா ஆகியோருக்கு நன்றிகள்)

உங்கள் நூலகம் மே 2011 இதழில் வெளியானது

Pin It

 

ஏப்பிரல் பல்வேறு எண்ணங்களை எதிரொலிக்கும் திங்களாகும். முதல் நாள் முட்டாள்களுக்கு உரியது என்பது இளைஞர்களின் விளையாட்டு. பார்ப்பனப் பஞ்சாங்கத்தில் மூழ்கியோர் 14ஆம் நாளைத் தமிழர் புத்தாண்டு என்று பிதற்றுவர். ஆனால் பகுத்தறிவாளர்களோ உலக மாக்கவி ஷேக்ஸ்பியரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் ஈன்ற திங்கள் என்று போற்றுவர். இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலை வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் என்ற மானுடப் படுகொலையும், சோக நிகழ்வையும் இணைத்துக் கொண்டது ஏப்ரல் திங்கள். 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை பல நினைவலை களை நம் நெஞ்சின் முன் நிறுத்துகிறது. இந்நிகழ்விற்கு முன்பும் பின்பும் நடந்த பல வரலாற்று படிப்பினைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது. 1918 முதல் உலகப் போர் முடிவுற்றது. இப்போரில் ஒரு கோடி மாந்தர்கள் மாண்டனர். 43 ஆயிரம் இந்தியப் படைவீரர்கள் உயிர் நீத்தனர். இந்நிகழ்வுகளுக்கு உள்ள தொடர்புதான் என்ன?

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1915இல் தென் ஆப்பிரிக் காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து காங்கிரசு இயக்கத்தில் இணைந்து அரசியலில் தடம் பதிக்கிறார். காந்திக்குப் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அதேபோன்று பல்வேறு கருத்து வேறுபாடுகளும் அவரைச் சுற்றிச் சுழலுகின்றன. காங்கிரசு இயக்கத்தில் இணைந்தவுடன் முதல் உலகப் போரில் இங்கிலாந்திற்கு ஆதரவாக காந்தி செயல்படுகிறார். எல்லோரும் வியக்கும்வண்ணம் முதல் உலகப் போரில் இங்கிலாந்து படைக்கு ஆதரவு திரட்டுகிறார். போர்ப்படையில் இந்தியர்கள் சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தொடர் பரப்புரையை மேற்கொள்கிறார். காந்தி, “ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கிற திறனைப் பெற்று அதனைப் பயன்படுத்த வேண்டும். பெரும் முனைப்போடு போர்ப் பயிற்சி பெற வேண்டுமென்றால், இராணுவத்தில் பதிவு செய்து கொள்வது நமது கடமையாகும். (To bring about such a state of things we should have the ability to defend ourselves, that is, the ability to bear arms and use them... If you want to learn the use of arms with greatest possible dispatch, it is our duty to enlist ourselves in the army) என்று முழங்குகிறார்.

காந்தியின் இங்கிலாந்து ஆதரவு நிலையும், பரப்புரை நோக்கமும் வெற்றி பெற்றதா? நடந்தேறிய அரசியல் நிகழ்வுகள் உண்மையைப் பதிக்கின்றன. காந்தியைப் பற்றியும் பல கருத்து வேறுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. ஆயுதம் கூடாது. வன்முறையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி வழியே சிறந்தது என்று முழங்கிய காந்தி வன்முறையையே அடிப்படையாகக் கொண்ட போரில் இந்தியர் களைச் சேர வலியுறுத்தியது சரியானதா? முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றவில்லையா? என்று பலர் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தனர். அவர்களில் முதன்மை யானவர் காந்தியின் நெருங்கிய நண்பர் சார்லி ஆண்டருஸ், “நான் தனிப்பட்ட முறையில் அவருடைய இந்தச் செயலுக்கு ஒருபோதும் உடன்பட முடியவில்லை. மன வருத்தத்தோடு இந்தக் கருத்தில் நான் அவருடன் வேறுபடுகிறேன்” (Personally I have never been able to reconcile this with his one conduct in other respects, and it is one of the points where I have found myself in painful disagreement) என்று இந்நிகழ்வைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டார். “போர்ப் படையில் சேர வேண்டும் என்று பரப்புரை செய்தது ‘அகிம்சை’ கொள்கைக்கு எதிரானது. கருத்து வேறுபாடுகளை உருவாக்கிய காந்தியின் இச்செயல் தொடர்ந்து பேசப்படுகிறது” என்று காந்தியின் தனிச்செயலர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் உலகப் போர் முடிவுற்றவுடன் வெள்ளை ஏகாதி பத்தியம் இந்தியத் தலைவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் மீறி இந்திய மக்கள் மீது அடக்குமுறையைத்தான் ஏவியது. பல கறுப்புச் சட்டங்களை நிறைவேற்றியது. போராளி களையும், பினாயக் சென் போன்ற மருத்துவர்களின் கருத்துரிமையையும் பறிக்கப் பயன்படுத்தப்படும் இன்றைய கறுப்புச் சட்டங்களுக்கு எல்லாம் தாயான ரௌலட் சட்டம் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. ஏப்ரல் 10ஆம் நாள், காங்கிரசு இயக்கத்தின் அன்றைய புகழ் பெற்ற தலைவர்களான டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதின் கித்லூ ஆகியோர் கைது செய்யப்பட்டுக் கண் காணாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையைக் கண்டிப்பதற் காகத்தான் ஏப்ரல் 13, 1919 அன்று ஜாலியன் வாலாபாக்கில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெண்களும், குழந்தைகளும், இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இக்கூட்டம் நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட ஒரு பூங்காவில் அமைதியான முறையில் நடைபெற்றது. விடுதலை உணர்வினை அடக்க வேண்டும். மக்களை அச்சுறுத்த வேண்டும் என்ற ஆதிக்க வெறியோடு, கூடியிருந்த பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ரெஜினால்ட் டயர் (General Reginald Dyer) என்ற இராணுவத் தளபதி ஆணையிட்டான். பூங்காவில் இருந்து மக்கள் தப்புவதற்கு இருந்தது ஒரே வழி. ஆனால் டயர் ஆணைப்படி 1600 துப்பாக்கி ரவைகள் 10 மணித்துளிகளில் மக்களைச் சுட்டுப் பொசுக்கின. துப்பாக்கியில் ஒரு ரவைகூட மிஞ்சவில்லையாம். இந்த வன்கொடுமையால் 1521 பேர் காயப்படுத்தப்பட்டனர். ஆயிரம் பேர் உயிர் நீத்தனர் என்று இந்திய தேசியக் காங்கிரசு கணக்கிட்டுக் கூறியது. ஆனால் வெள்ளையர் அரசோ 379 பேர்தான் இறந்தனர் என்று குறிப்பிட்டது.

பஞ்சாப் படுகொலை எதிர்பாராத தன்மையில் நடந்ததா? திட்டமிட்டுச் சதி செய்து நடந்ததா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒன்றுமட்டும் உண்மை. இந்த பஞ்சாப் படுகொலைக்கு உத்தரவிட்டு மக்கள் மாண்டதை மகிழ்ச்சி யோடு வரவேற்றவன் அன்றைய பஞ்சாப் மாநில ஆளுநர் மைக்கேல் ஓ டுவையர் (Michael O’Dwyer). யார் அந்த ஓ டுவையர்? இந்தியாவின் உயர் அலுவலராக 1885இல் பணியில்சேர்ந்து பல மாகாணங்களின் வருவாய்த் துறையின் ஆணையராகப் பணிபுரிந்து பிறகு ஆளுநராகப் பதவி உயர்வு பெற்று பஞ்சாபில் பணியேற்றார். இந்தப் படுகொலை நடந்தேறியவுடன், ஆளுநர் ஓ டுவையர், “உங்களுடைய செயல் சரியானது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்” என்று தளபதி டயருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டிருந்தான்.

இந்திய மக்கள் அனைவரும் கதறினர். கொதித்தனர். அறிஞர்கள், கவிஞர்கள் கண்டனக் கணைகளைக் குவித்தனர். காங்கிரசு இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு பன்மடங்கு பெருகியது. வலிமைமிக்க இயக்கமாக காங்கிரசு பொலிவு பெற்றது. வெள்ளை ஏகாதிபத்தியம் இதனைக் கண்டு அஞ்சியது. ஹண்டர் என்ற உயர் அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. ஏதுமறியா மக்களைத் தொடர்ந்து சுட்டது கொடுஞ்செயல் என்று இக்குழு தனது அறிக்கையில் கூறியது. ஆனால் வெள்ளை ஏகாதிபத்தியமோ டயரைப் பணியில் இருந்து விடுவித்து இங்கிலாந்திற்குத் திருப்பியனுப்பியது. இக்காலக் கட்டத்தில்தான் தந்தை பெரியார் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘பஞ்சாப் துயரம்’ என்று பொதுக் கூட்டத்தில் கூறி கண்டனங்களைத் தெரிவித்தார். வங்கக் கவிஞன் இரவீந்திரநாத் தாகூர், பஞ்சாபில் சட்டம் சாய்ந்தது, நீதி கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டது என்று முழக்கமிட்டு, இங்கிலாந்து அரசின் உயர் விருதினைத் துறந்தார். போர்ச் செயலராகப் பணியாற்றிய வின்சென்ட் சர்ச்சில் நாடாளுமன்றத்தில் இது ஒரு அரக்கத்தனமான நடவடிக்கை. முன்பு எப்போதும் நடைபெறாத ஒரு தீயச் செயல், இங்கிலாந்து பேரரசிற்கு இது ஒரு தலைகுனிவு என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இந்தப் பழிதீர்க்கும் செயலை மேற்கொண்ட கொடுங் கோலன் டயர், பாகிஸ்தான் நிலப்பகுதியில் உள்ள முரி என்ற ஊரில்தான் பிறந்தான். சிம்லாவில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, அயர்லாந்து சென்று கல்லூரிப் பட்டத்தைப் பெற்றான். பின்பு இராணுவத்தில் இணைந்தான். இந்தியத் துணைக்கண்ட மக்களை நன்கு அறிந்தவன். இருப்பினும், வெறிபிடித்த வெள்ளையனாகவே டயர் வளர்ந்தான், வாழ்ந் தான் என்பதை இந்தப் படுகொலை நிகழ்வுகள் அவனை அடையாளம் காட்டுகின்றன. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மறுநாள் ஏப்ரல் 14ஆம் நாள் உருது மொழியில் விடுத்த அறிக்கை அவனது ஆதிக்க வெறியை வெளிப்படுத்தியது. “மக்களே நான் ஒரு படைவீரன். நீங்கள் விரும்புவது போரா? அல்லது அமைதியா? நீங்கள் போரை விரும்பினால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். அமைதியை விரும்பினால் என்னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படியுங்கள். நான் இராணு வத்தைச் சேர்ந்தவன். எதையும் நேராகக் கூறுபவன். நான் 30 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி இருக்கிறேன். இந்திய வீரர்களையும், சீக்கிய மக்களையும் நன்கு அறிவேன். கடையடைப்பை நிறுத்துங்கள். பிரிட்டிஷ் அரசின் ஆணைக்கு அடிபணியுங்கள். ஆங்கிலேயரைக் கொன்ற ஒரு கெட்ட செயலைச் செய்து இருக்கிறீர்கள். இதற்காகப் பழிதீர்க்க உங்கள் மீதும், உங்கள் குழந்தைகள் மீதும் தாக்குதல்கள் தொடரும்” என்று டயர் அறிவித்தான்.

மக்கள் மீது இதுபோன்று கொடுஞ்செயல்கள் நடந்தேறிய போதெல்லாம் மத குருமார்கள் எவ்வாறெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு வெண்சாமரம் வீசினார்கள் என்று உலக வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. சீக்கிய மதகுருக்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை இந்தக் கொலைகாரர்களைப் பாராட்டி, போற்றி பொற்கோயில் போட்ட தீர்மானம் சீக்கிய இளைஞர்களைக் கொதித்தெழச் செய்தது. மானுடத்திற்கும், சீக்கிய மார்க்கத்திற்கும் சிறப்பான பணியை டயரும் அவனது குழுவினரும் ஆற்றினர் என்று கூறி சரோபா என்ற மரியாதைக்குரிய விருதை இந்த கொடுங்கோலனுக்கு பொற்கோயிலின் பூசாரிகள் வழங்கினார்கள். இதன் விளைவு தான் மாணவர்களின் போராட்டம், மக்கள் போராட்டமாக மாறியது. மதம் என்னும் போர்வையில் ஊழலில் ஊறித் திளைத்த மகந்த் என்ற சீக்கிய பூசாரிகளின் பிடியில் இருந்து சீக்கிய கோயில்கள் விடுவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் நடந்தேறியது. 1920லிருந்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களை சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு தான் மேலாண்மை செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

டயர் இங்கிலாந்திற்கு திரும்பியதும், அவருக்கு அளிக்கப் பட்ட ஓய்வூதியம் கூட நிறுத்தப்படவில்லை. ஆதிக்க வெறியர்கள் ஒன்றுகூடினர். இங்கிலாந்து நாட்டின் காலை ஏடு Morning Post டயருக்குப் பாராட்டுகளையும், பொற்கிழியும் வழங்க நிதித் திரட்டியது. நன்கொடையாகப் பெற்ற தொகையில் 26000 பவுண்டுகளை அன்பளிப்பாக அளித்தது. இந்தப் பெருந்தொகையைப் பெற்ற டயர் சில மாதங்களிலே கடும் நோயுற்றான். மூளைப்பிளவு நோய் தாக்கியது. பேச்சிழந்து, செயலிழந்து, உயிரிழந்தான் டயர். ஆனால், பஞ்சாப் படுகொலைக்கு ஆணையிட்ட ஆளுநர் ஓ டுவையர், மறைந்த டயருக்கு லண்டன் மாநகரில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று நிதித் திரட்டினான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிக்கப்பட்டோர் பலர். சிலர் கண்டனங்களை மட்டும் எழுப்பிய நேரத்தில், மிக உயர்ந்தப் பதவியான வைஸ்ராய் குழுவின் உறுப்பினர் பதவியை இழந்தார் சி. சங்கரன் நாயர். ஆனால் சங்கரன் நாயருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை நாடு அளிக்க வில்லை. காரணம், இடஒதுக்கீடு கொள்கை என்ற சமூகநீதியை உயர்த்திப் பிடித்தவர் சங்கரன் நாயர். திராவிடர்களின் தனித் தன்மைகளைப் பல கட்டுரைகளில் எதிரொலித்தவர். இந்திய தேசியக் காங்கிரசின் மாநாட்டிற்கு 1897இல் தலைமை யேற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 1907இல் நியமிக்கப்பட்டவர். இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்றவரை நெஞ்சுரத்தோடு பாராட்டியவர் கவிஞர் பாரதி ஒருவரே. 1905ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சங்கரன் நாயர் தெரிவித்த கருத்திற்குப் பல கண்டனங்கள் வந்தபோது, பாரதி, சங்கரன் நாயருக்கு ஆதரவாக இந்து நாளிதழில் ஒரு மடலைத் தீட்டினார். அம்மடலில் சமத்துவத் தையும், சமுதாயப் புரட்சியையும் வலியுறுத்திய சங்கரன் நாயரின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

தனி மனிதரான ஒரு மாநிலத்தின் துணை ஆளுநர் எதையும் செய்துவிடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாபில் நடந்த படுகொலை என்று தனது புகழ்மிக்க நூலான ‘காந்தியும் குழப்பமும்’ (Gandhi and Anarchy) என்ற நூலில் குறிப் பிட்டார். இந்த நூலைப் படித்த பிறகு ஆளுநர் ஓ டுவையர், சங்கரன் நாயருக்கு எதிராக ஒரு மான நட்ட வழக்கை இங்கிலாந்தில் தொடர்ந்தார். 12 உறுப்பினர்கள் கொண்ட தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்தது. இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த அரசியல் அறிஞர், பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கி ஒருவர்தான் சங்கரன் நாயருக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இருப்பினும், திரு. சங்கரன் நாயருக்கு 500 பவுண்ட் (இங்கிலாந்து நாணய மதிப்பு) தண்டமும், வழக்குச் செலவிற்காக 20000 பவுண்டும் அரசிற்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இங்கிலாந்து தீர்ப்பாயம் சங்கரன் நாயருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பைக் கண்டு பலர் கண்டனங் களைத் தெரிவித்தனர். இங்கிலாந்தில் அக்காலக்கட்டத்தில் தலைமறைவாக இருந்த மாவீரர் உதம் சிங் இச்செயலைக் கண்டு மனம் கொதித்தார். சங்கரன் மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் படுகொலைக்கு உறுதுணை புரிந்த ஓ டுவையரைப் பழிதீர்க்க வேண்டும் என்ற நோக்கத் தோடு 21 ஆண்டுகள் லண்டன் மாநகரில் போராட்ட வாழ்க்கையை மேற்கொண்ட உதம் சிங் எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிட்டியது. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட உதம் சிங்கின் காயம் ஆறியது என்றாலும் உதம் சிங்கின் நெஞ்சில் பதிந்த வடு மட்டும் மாறவில்லை.

1940ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் காக்ஸ்டன் மண்டபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தான் ஓ டுவையர். போராளியாகத் துப்பாக்கி ஏந்தினார் உதம் சிங், நேருக்கு நேர் அக்கொடுங்கோலனைச் சுட்டுக் கொன்றார். “நான்தான் இந்தக் கொலையைச் செய்தேன். இவர்தான் உண்மையான குற்றவாளி. இந்தத் தண்டனை தான் இவருக்குத் தகுதியானது. என்னுடைய மக்களின் உணர்வை நசுக்கியழித்தவரை நான் நசுக்கிவிட்டேன். 21 ஆண்டுகள் பழி தீர்ப்பதற்காகக் காத்திருந்தேன். நான் என்னுடைய கடமையை முடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சிய டைகிறேன். நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. என்னுடைய மக்கள் இங்கிலாந்து கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பசியால் வாடுவதைக் கண்ணுற்றேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித் தேன். இது என் கடமை. நான் தாய்நாட்டிற்காக இறக்கும் இந்தச் செயலைவிட ஒரு பெரும் புகழ் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது” என்று மாவீரர் உதம் சிங் நீதிமன்றத்தில் வீர முழக்கமிட்டார். 1940ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று இங்கிலாந்து அரசு உதம் சிங்கைத் தூக்கிலிட்டது.

மகாத்மா காந்தி இரண்டு வரிகள் அடங்கிய ஒரு அறிக்கையை வெளியிட்டார். “உதம் சிங் செய்தது அறிவற்ற செயல், ஆனால் வீரமிக்கது”. இந்த அறிக்கையில் காணப்படுகிற சொற்றொடர் கள் இன்றும் பல உண்மைகளுக்குச் சான்று பகிர்கின்றன. பஞ்சாப் படுகொலையைக் கண்டித்ததற்காக பெரும் தொகை யைத் தண்டமாகச் செலுத்தவும் சங்கரன் நாயர் அஞ்ச வில்லை. தண்டனையை ஏற்கவும் தயங்கவில்லை. காந்தியாரோ, மாவீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போதும் கலங்கவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆனால் மாவீரன் உதம் சிங்கிற்குக் காந்தியார் அளித்தது பாராட்டுத்தானா என்றும் புரியவில்லை. உதம் சிங்கின் செயல் அறிவற்றது என்கிறார். ஆனால் வீரத்திற்கும் அறிவிற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. அறிவாற்றலால்தான் பல வீரர்கள் உலகை வென்றிருக்கிறார்கள் என்று வரலாறு சுட்டுகிறது. அடக்கு முறையை எதிர்ப்பதற்கும் அறிவுதான் தூண்டுகோலாக இருக்கிறது. அறிவின் ஒரு வெளிப்பாடுதான் வீரம். இது போன்ற காரணங்களுக்காகத்தான் சங்கரன் நாயர், காந்தியும், குழப்பமும் என்ற நூலை எழுதினாரோ என்னவோ தெரிய வில்லை. ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை பல உண்மைகளை உலகிற்கு அறிவிக்கிறது. மறைக்கப்பட்ட இந்த உண்மைகளை ஏப்பிரல் திங்களிலாவது நினைவுகூர வேண்டாமா?

(சிந்தனையாளன் மே 2011 இதழில் வெளியானது)

Pin It

 

ஆனந்த விகடனில் வெளிவந்த, எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் 'ஆத்மா' கதையின் வாயிலாக கப்பற் படைத் தளபதி மாவீரர் கனோஜி ஆங்க்ரேயைப் பற்றி அறிமுகம் கிடைத்தது. மேலும் இணையத்தில் தேடியபோது பல சுவாரஸ்யமான செய்திகள் பெற்றேன்.

கனோஜி ஆங்க்ரே 18 ஆம் நூற்றாண்டில் மராத்திய கப்பற் படைத் தளபதியாக பதவி வகித்தார். இவர் பின்னாளில் மராத்தியக் கப்பற் படைத் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்ததால்  (Sarkhel) சார்க்கெல் ஆங்க்ரே என்றும் அழைக்கப்பட்டார். இவர் (ஆயுட் காலம்: ஆகஸ்டு1669 முதல் 4, ஜூலை, 1729) மராத்திய மாநிலத்தில் தெற்குக் கடற்கரைப் பிரதேசத்தின் கொங்கன் பகுதியிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தின் (Harne) கர்னே என்ற கிராமத்தில் 1669 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிறந்தார். இவர் குடும்பத்தினர் கொங்கன் பிரதேசத்திலுள்ள வீர் ராணா சன்க் என்ற சிறிய மாகாணத்தைப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வந்ததால், இவர்கள் 'சங்கபால் குடும்பத்தினர்'(Sankapal) (தற்சமயம் Bhilare குடும்பம்) என்றழைக்கப்பட்டனர்.

இவர் தாயின் பெயர் அம்பா பாய். தந்தை துகோஜி. இவர்களுக்கு வெகு நாட்களாக பிள்ளைகளில்லாமலிருந்து 'கனிபா நாத்' என்ற தெய்வத்திடம் அம்பா பாய், "உங்கள் எரிக்கப்பட்ட புனித மரச் சாம்பலின் (Angara) மகிமையால் நான் தாய்மையடைந்தால், அந்தக் குழந்தைக்கு ஆங்கரே (Angare) எனப் பெயரிடுகிறேன் என்று வேண்டினார். ஆங்கரேயின் தந்தை, பேரரசர் சத்ரபதி சிவாஜியின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். கனோஜி ஆங்க்ரே குழந்தைப் பருவத்தை 'சுவர்ண துர்க்' கோட்டையிலேயே கழித்தார். இவர் தன் இளமைப் பருவத்தில் கடலில் சில வீரச் செயல்களில் ஈடுபட்டார்.

கனோஜி ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் வணிகக் கப்பல்களைத் தாக்கி பிரபலமடைந்தார். இவர் ஆரம்பத்தில் சதாராவை ஆண்ட தலைவரால் 1698 ல் அறிவில் சிறந்த ஆலோசகராக (Darya - Saranga) நியமிக்கப் பட்டார்.இந்த அதிகாரத்தினால், மும்பையிலிருந்து வின்கோரியா (Vingoria, இப்பொழுது Vengurla) வரையுள்ள மேற்கு கடற்கரை சார்ந்த பகுதிக்கு தலைவராக இருந்தார்.

சத்ரபதி சிவாஜி மராத்திய சாம்ராஜ்யத்தின் தலைமைக்கு உயர்ந்தபோது, பாலாஜி விஸ்வ நாத் பட் என்பவரை தளபதியாக (Senakarta) நியமித்து அவர் மூலமாக 1707 ல் ஆங்க்ரேயிடம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இது மராத்திய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்திற்குப் போட்டியாகப் போராடி வரும் தாராபாய்க்கு ஆதரவாக இருந்துவரும் ஆங்க்ரேயைச் சமாளிக்கத் தேவைப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, ஆங்க்ரே மராத்திய கப்பற் படையின் தலைமைத் தளபதியாக்கப்பட்டார்.

மொகலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் டெக்கான் பிரதேசப் படையெடுப்பின் சமயம் மராத்தியர்ர்களுடனான முரண்பாடுகளின் போது கனோஜி ஆங்க்ரே முக்கியப் பங்காற்றினார் .

1. இவர் 1698 ல் மும்பையிலிருந்து 425 கி.மீ தொலைவிலுள்ள விஜயதுர்க்கின் மராத்தியக் கோட்டையில் (Victory Fort) (முன்னாளில் Gheriah) தன் முதல் கடற்படைத் தளத்தை அமைத்தார். இந்தக் கோட்டை மராத்திய அரசர் சிவாஜியால் கடற்கரையை ஒட்டி கட்டப்பட்டது. இக்கோட்டைக்குள் கடலிலிருந்தபடியே கப்பல் நுழைந்து நிறுத்தும்படி வாசல் அமைக்கப்பட்டது.

2. மும்பை கடற்கரையிலிருந்து தள்ளியுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட கந்தேரி (Kandheri - Underi) உந்தேரி தீவுகளில் இன்னொரு படைத் தளம் அமைத்து, துறைமுகத்திற்கு வரும் வணிகக் கப்பல்களுக்கு வரி வசூலித்தார்.

3. அந்தமான் தீவுகளில் படைத்தளம் அமைத்து, அவைகளை இந்தியாவுடன் இணைத்தார்.

4. ஆங்க்ரே 17 ஆம் நூற்றாண்டு இறுதியில் அலிபாக் (Alibagh) என்ற நகரத்தை நிர்மாணித்தார். இவர் சொந்த நாணயமாக அலிபாகி ருபையா (Alibagi Rupaiya) என்ற வெள்ளிக் காசுகளை வெளியிட்டார்.

கனோஜி ஆங்க்ரே 1702 லிருந்து 1723 வரை பிரிட்டிஷாரிடமும், போர்ச்சுகீசியரிடமும் பல முறை போர் செய்து கப்பல்கள், கோட்டைகள், தீவுகளையும் கைப்பற்றினார். இவர் மராத்திய கப்பற்படையின் மிக முக்கிய தலைமைத் தளபதியாக இருந்து, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினர்க்கு பல இழப்புகளை ஏற்படுத்தினார்.

இவரால் நாசப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் மற்றும் பிற நாட்டுக் கப்பற்படைத் தலைவர்கள், இவர் முறையாக மராத்தியக் கப்பற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் என்பதை அறியாமல், இவரை 'கடற் கொள்ளைக்காரன்' என அறிவித்தார்கள். சட்ட வல்லுனர் William Hall என்பவரும், 'ஆங்க்ரே மராத்திய கப்பல் படைத் தளபதியாக முறையாக நியமிக்கப்பட்டவர், கடற் கொள்ளைக்காரன்அல்ல ' என்பதை உறுதி செய்கிறார்.

கனோஜி ஆங்க்ரே தீர்க்க தரிசனத்துடன் Blue Water Navy என்று நிறுவி, பகைவர்களை கடற்கரையை நெருங்க விடாமல் தடுத்தார். அவருக்கு உதவியாக ஒரு நேரத்தில் சில ஐரோப்பியர்களையும் தன் படையில் சேர்த்திருந்தார். ஒரு டச்சுக்காரரை தன் தளபதியாகவும் ஆக்கியிருந்தார். இவர் தன் செல்வாக்கின் உச்ச கட்டத்தில் இருந்தபோது நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்களை நிர்வகித்து வந்தார்.

பிரிட்டிஷ் கப்பற் படையால் மராத்திய கப்பற் படையை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்க்ரே 1729 ஜூலை 4 ஆம் தேதி இறந்த தருணத்தில், அரபிக் கடலின் சூரத்திலிருந்து தெற்கு கொங்கன் வரை அவர் ஆதிக்கத்திலிருந்தது. ஆங்க்ரேயைப் பணிய வைக்கும் முயற்சியில், பிரிட்டிஷ் மற்றும் டச்சுக்காரர்களால் ஆங்க்ரேயின் ஆயுட் காலம் வரை வெற்றிபெற முடியவில்லை.

அவரது கல்லறை ஞாபகச் சின்னமாக மகாராஷ்ட்ராவின் அலிபாக் நகரில் இருக்கிறது.

தெற்கு மும்பையின் கப்பல் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பழைய பம்பாய்க் கோட்டையில்  (Old Bombay Castle) ஆங்க்ரேயின் உயரமான சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

அங்கு கோட்டையிருந்த இடத்தில் Indian Naval Ship Angre - INS Angre என்ற மேற்கு கடற்படையின் தலைமை ஆணையகம் அமைந்திருக்கிறது.

இது மராத்தியத்தின் தீரமிகு கடற்படைத் தளபதிக்கு  மரியாதை செய்யும் பொருட்டு, 1951 செப்டம்பர், 15 ஆம் தேதி INS Angre எனப் பெயரிடப்பட்டது.

1999, ஏப்ரலில் இந்திய தபால் துறை ஆங்க்ரேயின் கப்பற்படை பயணம் செய்யும் கப்பல் படத்தைப் பொறித்து 3 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.

மும்பைத் துறைமுகத்தின் தெற்கு எல்லையாக விளங்கும் Khanderi தீவிலுள்ள Kennery Light House, 'கனோஜி ஆங்க்ரே கலங்கரை விளக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அலிபாக்கிலுள்ள ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் குடியிருப்பு வளாகம் 'சார்க்கெல் கனோஜி ஆங்க்ரே நகர்' எனப்படுகிறது.

மும்பை பரேலில் (Parel) நடைபெறும் Malvani Jatrotsav திருவிழாவின்போது, 1995 ல் 10 நாட்களுக்கு Charles Boon தலைமையேற்ற பிரிட்டிஷ் கப்பற்படைக்கும், ஆங்க்ரேயின் கப்பற் படைக்கும் நடந்த போரினைப் போன்ற ஒத்திகை, ஒலி ஒளியுடன் முப்பரிமாணக் காட்சியாக நடத்திக் காட்டப்பட்டது. ஆயிரக் கணக்கான மும்பை மக்களால் கண்டு களிக்கப்பட்டது.

கனோஜி ஆங்க்ரே பாரதத்தின் சுதந்திரத்திற்காக, காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, அவர்களுக்கு பல சேதங்களை ஏற்படுத்தி, பாரதத்திற்கு வெற்றிகள் பல தேடித் தந்த தலைசிறந்த மாவீரர். இவரைப் போற்றுவோம்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It