ஆங்கிலத்தில்: அமர்காந்த், தமிழில்: செ.நடேசன்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய அரசியல் தலைமையைப் பற்றியும் இந்தியத் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றித்தருவது இந்திய மக்களுக்கு என்ன அர்த்தத்தைத் தரும் என்பதுபற்றியும் என்ன கருதினார்கள் என்பது சி. ஆர். அட்லியால் “தொழிற்கட்சி யின் அணுகுமுறை” என்ற தலைப்பில் 1931ல் எழுதப்பட்ட புத்தகத்தில் மிக அற்புதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்லி எழுதினார்:’இந்தியா இந்தியர்களுக்கே’ என்பது ஒரு எளிய முழக்கம். ஆனால், இது மனிதவாழ்வு என்ற முறையில் என்ன பொருளைத் தருகிறது? என்று பார்ப்பது அவசியமானதாகும். இந்தியாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அவர்களது சொந்த நாட்டின் முதலாளிகளாலும், நிலப்பிரபுக்களாலும் சுரண்டப்படுவதற்காக அவர்களிடம் ஒப்படைப்பதில் எந்தப் பயனும் இல்லை. ’
“தேசியவாதம்” என்பது ஒரு நம்பிக்கை: கோட்பாடு. அதை மாபெரும் சுயதியாகத்தாலும், கோட்பாட்டாலும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஆனால் அது வர்க்க ஆதிக்கத்தை யும்,சிறுபான்மையினர்மீது சகிப்புத்தன்மையின்மையையும், அதுபோலவே பொருளாதாரச் சுரண்டலையும் பாதுகாக்கும். இந்தியாவின் அரசியலமைப்புக்காக நடத்தப்பட்ட விவாதங்கள் முழுவதிலும் தொழிற்கட்சி உறுப்பினர்கள் ‘தேசியவாதம்’ மட்டும் போதுமானதல்ல என்று உணர்ந்தார்கள். பெரும்பான்மையான வறிய மற்றும் கல்வியறிவற்ற மக்களுக்குக், கிடைக்காத,,நல்வாய்ப்பும், கல்வியறிவும் அதைப் பெற்றுள்ள பணக்கார வர்க்கத்தின் சுரண்டலிலிருந்து அவர்களைத் தப்பவைக்காது என்பதைக் கண்டறிந்திருந்தார்கள்…’
ஆனால் ஒருமுரண்நிகழ்வாக அவர்களது சொந்த இந்திய முதலாளிகளாலும், நிலப் பிரபுக்களாலும் சுரண்டப்பட இந்தியாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது கட்சி அதிகாரத்தில் இருந்தபோது கிரேட்பிரிட்டனின் பிரதமரான அட்லி ஒப்ப டைத்தார். இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு அட்லி தலைமையிலான தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. வருந்தத்தக்கவகையில் அட்லி தனது புத்தகத்தில் குறிப்பிட்ட வாறு இந்தியாவில் சோசலிசக்கொள்கையை நடைமுறைப்படுத்த அவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. போலிசோசலிஸ்ட்கள் எவ்வாறு அதைப்பற்றிப் வாய்கிழியப் பேசுவார்கள் ஆனால், நடைமுறையில் எப்படி அதன்படி நடக்கமாட்டார்கள் என்பதை இது காட்டுகிறது !இதைத்தான் பகத்சிங் தனது எழுத்துக்களில் என்ன நடக்கும் என்று கணித்து எச்சரித்தார்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கிரேட் பிரிட்டன் இராணுவரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலவீனம் அடைந்தது. அதனுடைய மனித ஆற்றலும் வீழ்ச்சியுற்றது. அது தனது இந்தியப் பணியாளர்களின் விசுவாசத்தின்மீது இனியும் உறுதியான நம்பிக்கைகொண்டிருக்க முடியவில்லை. அதற்குமாறாக, அது தன்னுடைய காலனியாதிக்கத்தைத் தொடருமானால் இந்தியாவில் புரட்சி ஏற்படும் என்ற சாத்தியத்தால் மிரட்சி அடைந்திருந்தது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆளுவதா?அல்லது அதிகாரத்தை இந்தியத் தலைமை யோடு பகிர்ந்துகொள்வதா? அல்லது இந்தியாவைவிட்டு விலகிவிடுவதா? என்ற கேள்வி 1942 முதல் பிரிட்டிஷ் அமைச்சரவைக்குள்ளும், அப்போதைய வைஸ்ராய் களிடமும் அதேபோல இந்திய அரசியல் தலைவர்களிடமும் அவ்வப்போது விவாதிக் கப்பட்டு வந்தது.
பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு பெரும்பான்மையினரின் கண்ணோட் டம் இந்தியர்களுக்கே அதிகாரத்தை வழங்குவதாக இருந்தது. அடுத்துவரும் பத்திகள் முடிவெடுக்கக்கூடியவர்களின் மனநிலைபற்றியும், இறுதியாக தங்கள் இந்தியக் கூட்டாளிகளிடம் (காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீக் தலைவர்கள்) அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான காரணங்கள்,, சூழ்நிலைகள் பற்றியும் கணநேரக் கண்ணோட் டங்களாகத் தருகின்றன.
கிட்டத்தட்ட தொழிற்கட்சி நிர்வாகம் முழுமையாக அமைவதற்கு முன்பே பிரதமர் சி. ஆர். அட்லி. தனது மேஜையின்மீது புகழ்பெற்ற பொருளாதாரநிபுணரான ஜே,எம், கீய்ன்ஸ் பிரபுவின் இரகசிய அறிக்கையை வைத்திருந்தார். அது ‘பிரிட்டன் மிகவும் அதிர்ச்சி தரும் பொருளாதார நிலையில் உள்ளது’ என்று எச்சரித்தது. ‘பொருளாதாரத் தின் பின்விளைவுகள் என்னவாகும் என்பதைப்பற்றி முழுவதும் கருத்தில் கொள்ளாம லேயே போர் நடத்தப்பட்டது. ’ கீய்ன்ஸ் மேலும் எழுதுகிறார்: ‘பிரிட்டன் முழுவதும் திவாலாகி விட்டது:அந்தப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்சிபெறுவோமா என்பதை மிகைப்படுத்தாமல் கூறினார்: ‘அதற்கான நம்பிக்கை எதுவும் இல்லை. பின்விளைவு கள் என்னவாகும் என்பதை முற்றிலும் கருத்தில் கொள்ளாமலேயே போர் நடத்தப் பட்டது. பிரிட்டன் முற்றிலும் திவாலாகிவிட்டது. ’ ‘இது நம்மை வலுக்கட்டாயமாகவும், வருந்தத்தக்கவகையிலும்கடல்கடந்த நாடுகளிலிருந்து திரும்பிவருவதை வலியுறுத்து கிறது, அல்லது போர்க்காலங்களில் கடைப்பிடித்ததைவிடவும் கூடுதலான சிக்கண நடவடிக்கைகளை மேற்கொண்டுகுறைவான வாழ்க்கைத்தரத்தை உள்நாட்டில் கடைப் பிடித்தாக வேண்டும். ’ ‘முடிவு தவிர்க்கவியலாதது. ’ என கீய்ன்ஸ் வாதிட்டார். பிரிட்டன் அமெரிக்காவிடமிருந்து பணம் கேட்கவேண்டும். அப்படி நடந்தால், அமெரிக்க மிகக்கடுமையான பேரத்தை நடத்தும். (பிரிட்டனின் அதிகார வீழ்ச்சி-ரொனால்டு ஹாயன் பக்கம் 130)
இரண்டாம் உலகப்போருக்குப்பின், அனைத்துலக செயற்களத்தில் நடந்தது என்ன வென்றால் உலகப்பேரரசு என்பது பிரிட்டனின் மூலமாக அமையாது என்பது மட்டுமல்ல: இப்போது அதன் கௌரவத்துக்கும் மரியாதைக்கும்கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் அது இப்போது ஒருசுமையாகிவிட்டது என்ற உணர்வு மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வலுப்பட்டுவந்தது பனிப்போர் பிரிட்டனின் கொள்கையின் முக்கியமான உருவமைப்பை நிர்ணயித்தது. அதன்காரணமாக பிரிட்டன் தேசியவாதிகளை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டியதா யிற்று. காமன்வெல்த் நாடுகளை வலுப்படுத்தவும் ஐ. நா வுடன் ஒத்துப்போகவேண்டியிருந்தது. இதனால் மேற்கத்திய ஆதரவு தேசிய அரசுகள் உருவாகவும், உற்சாகப்படுத்தவுமான வழியில் காலனியாதிக்கத்தைக் கைவிட வேண்டிய முழுஅழுத்தம் ஏற்பட்டது.
புவிசார் அரசியலில் வலுவான, நன்குஇயங்கும்தன்மைகொண்ட உள்ளார்ந்த ஆட்சிமுறைமைகள் அவசியம். அதிகார வெற்றிடம் என்னவிலை கொடுத்தேனும் தவிர்க்கப்பட வேண்டும். சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சமாகவேனும் தனது செல்வாக்கைச் செலுத்த ரஷ்யா முயற்சிக்கும் என அதிகாரிகளின் தலைமை எண்ணியது. பிரிட்டன் மட்டும் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இந்தியா வெகுஎளிதாக ரஷ்யாவிடம் சென்றிருக்கும். காமன்வெல்த் நாடுகளுடனான வான்வழித்தகவல் தொடர்புகளிலும், பாரசீக வளைகுடா எண்ணெய் விநியோகத்தை ராஜதந்திர ரீதியாகப் பாதுகாப்பதிலும் மையப்புள்ளியாக இந்தியா இருந்துவந்தது. அது மட்டுமல்ல: அன்று ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் தோரியம்இருப்பை அது திருவாங்கூர் பகுதியில் கொண்டிருந்தது. இந்த மாபெரும் விளையாட்டு நீண்ட நிழலைப் படியவைத்துவிடும். (மேலே உள்ளவாறு: பக்கம் 114)
ஃபீல்ட் மார்ஷல் வேவல் பிரபு (வைசிராய்) இராணுவத்தலைமைத் தளபதி அச்சின் லெக் ஆகிய இருவரும், ‘1946ல் பிரிட்டிஷாருக்கு எதிரான மிகப்பெரிய ஒருசட்ட விரோத அச்சுறுத்தல் உள்ளது. அது பிரிட்டிஷாரின் ஆட்சி நிர்வாகத்தை முடக்கி அவர்களைத் தூக்கியெறிவதை நோக்கமாகக்கொண்ட, நன்கு திட்டமிடப்பட்ட ஓர் எழுச்சியாக அது அமையும்’ என எச்சரித்தார்கள். ராயல் இந்தியன் கப்பல்படையின் பிப்ரவரி நடவடிக்கைகள் எதிர்வினைகளைத் தூண்டிவிட்டன. இது மிகவும் ஆபத்தா னது. இந்த அதிருப்தி மத்திய கிழக்கில்உள்ள இந்தியத் துருப்புக்களிடமும் பரவி ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்’ என எச்சரித்தார்கள். . (மேலே உள்ளவாறு: பக்கம் 106)
1946 ஜூன் 29 அன்று பதவியில் இருந்த பிரதமருக்கு ஃபீல்டு மார்ஷல் விஸ்கவுண்ட் வேவல் அனுப்பிய ‘இந்தியாவுக்கு அதிகாரங்களை மாற்றுவதற்கான தொடர்’ (Transfer of Power Series for India (TOPI) தொகுப்பு VII பக்கம் 1087ல் ஒரு குறிப்பில்,’ போரின்போது ஐ. சி. எஸ். அணியினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமைகளுக்குப் பொருத்தமற்றவர்களாக இருந்தார்கள்: அவர்களில் வயதான பலர் களைப்படைந்து மனமொடிந்தவர்களாக இருந்தார்கள். இளைஞர்களிலும்கூட பலர் தங்கள் பணி நிலைகள் சுவையற்றதாக இருந்ததைக்கண்டு இந்தியாவில் தங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று எண்ணி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓய்வுபெற விரும்பினார்கள். காவல்துறையிலும் நிலைமைகள் இவ்வாறே இருந்தன. போர் துவங்கியதிலிருந்து புதியவர்களைப் பணியில் சேர்ப்பது நடைபெறவில்லை’ என எழுதினார்.
மூத்த அமைச்சரான பெவின், ‘இதற்கு ஒருமுடிவுகாணாமல் இந்தியாவில் நமது நிலையைக் கைவிடும் எந்த ஒரு ஆலோசனையும் பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சிக்கான ஆதாரம் என்று விளக்கப்பட்டுவிடும் இந்த முடிவு அமெரிக்கர்களை நிலைகுலைய வைத்துவிடும். இந்தியா பலதுண்டுகளாக சிதறிவிடுமானால், ரஷ்யா இதில் தலையிடும். உலகமோதல்களுக்கான விதைகள் தூவப்பட்டுவிடும்’ என்று வாதிட்டார். (ரொனால்ட் ஹயாம் எழுதிய Britain’s Declining Power என்ற நூலின் பக்கம் 106) புத்தாண்டு தினத்தன்று -1947 ஜனவரி 1ல் பெவின் விரக்தியுற்ற மனநிலையில், ‘பிரிட்டனின் நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்தும் இளைஞர்களைக் கண்டுபிடிப்பதற்குப்பதிலாக இதிலிருந்து தப்பியோடுவதைத்தவிர வேறு எந்த ஒன்றையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை’ என்று எழுதினார். இந்தியாவிலிருந்து விலகுவதற்கான தேதியை நிர்ணயிப்பதை அவர் எதிர்த்தார். அவர் அட்லியிடம் ஒரு உறுதியான நிலையை எடுக்குமாறும், மிகவும் மோசமான தோல்வி மனப்பான்மைக்கு இடம்தர வேண்டாம் என்றும் கெஞ்சினார். (மேலே உள்ளவாறு-பக்கம் 116)
அட்லி இவையனைத்தையும் உறுதியாக நிராகரித்தார். 1946 நவம்பரில் இதை நிராகரிப்பதற்கான காரனங்களை தனக்கே உரியமுறையில் வகுத்தார். (அ) உலகம் முழுமைக்குமான நமது கடமைப்பொறுப்பின் பார்வையில் பரந்து விரிந்து பெருகிவரும் கொரில்லா இயக்கத்துக்கு எதிராக இந்தியாவைத் தொடர்ந்து வைத்துக்கொள்வதற்கு அல்லது இந்தியாவை வெற்றிகொள்வதற்கு இராணுவபலம் நம்மிடம் இல்லை. பொதுக் கருத்தின்படி- குறிப்பாக நமது கட்சியின் கருத்தின்படி நாம் அந்த நிலையை எடுக்க முடியாது. (ஆ) நமது சொந்தத் துருப்புக்கள்கூட அவ்வாறு செயல்பட ஆயத்தமாக உள்ளனவா? என்பது சந்தேகத்துக்கு உரியது. (இ) நமக்கு எதிராக உலகக்கருத்து உள்ளது. அது ஐ,நா அமைப்பில் எழுப்பப்படுமானால், நமக்கு ஒரு சாத்தியமற்ற நிலையை ஏற்படுத்திவிடும். (ஈ)பிரிட்டிஷாரோ அல்லது இந்தியர்களோ இத்தகைய கொள்கையை முன்னெடுத்துச்செல்ல நமக்கு இப்போது எந்த நிர்வாக இயந்திரமும் இல்லை.
நிதித்துறைப் பொறுப்புவகித்த ஹக் டால்டன் தமது நாட்குறிப்பில், இந்தியாவை நாம் படைபலத்தால் பிடித்து வைத்திருப்பதுபற்றி நாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டு, மிகவிரைவில் பின்வாங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். (மேலே உள்ளவாறு –பக்கம் 116, 108)
கிளமெண்ட் அட்லி, பெவினுக்கு எழுதிய தனிப்பட்ட இரகசியத் தகவலில், ‘இந்தியப்பிரச்சனைகள் பற்றிஆய்வு செய்வது நம் அனைவருக்கும் ஒருபொது விஷயமாக ஆகியுள்ளது. அங்கு பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் அரசு மாறுவதை உண்மையிலேயே விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அமைதியாக உள்ளார்கள். மக்கள்தொகையில் செயல் ஈடுபாடுகொண்டவர்கள்- படித்த வர்க்கத்தினர் உட்பட தேசியஉணர்வினால் பெரிய அல்லது சிறிய அளவுக்கு போதம் பெற்றுள்ளவர்களாக ஆகிவருகிறார்கள் இது சைமன்குழு (1928) காலத்திலிருந்தே மிகப்பெருமளவுக்கு உண்மையாகும் அப்போது முதலே இது வேகம் பெற்றுள்ளது,. ‘ நாம் எப்போதும் இந்தியர்களை இந்தியர்களைக்கொண்டே ஆண்டு வந்திருக்கிறோம். பல பத்தாயிரத்துக்கும் குறைவான செயல்பாட்டாளர்கள் இல்லாமல் நாம் இதைத் தொடர்ந்து நடத்த முடியாது. 10 இலட்சம், 20 இலட்சம் மக்கள்தொகையுள்ள ஒருமாவட்டத்தில் நாம் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை அதிகாரிகளைக் கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது. சட்டபூர்வ அரசுகளின் கீழான ஆட்சியில் அவை இப்போது நடைமுறையில் உள்ளன. பல ஆண்டுகள் இடைவெளியில் இந்திய அதிகாரிகளின் விசுவாசம் –பிரிட்டிஷ் ராஜ்யத்தின்மீது அல்ல – இந்திய அரசுகளை நோக்கியதாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி தூக்கியெறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் சொந்த இந்திய அரசுகளை நோக்கிய விசுவாசம் கொண்டிருக்கமாட்டார்கள் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நீங்கள் சிலநூறு பிரிட்டிஷ் நிர்வாகிகளைக் கண்டுபிடித்தாலும்கூட,அரசியல் சிந்தனையும், ஒட்டுமொத்த செயலாற்றலும் மிக்க மக்கள்தொகையின் எதிர்ப்புக்களுக்கு எதிராக எவ்வாறு நிர்வாகம் செய்யமுடியும்? அது முற்றிலும் சாத்தியமே இல்லை’.
சி. ஆர். அட்லி தனது ‘As It Happened’ என்ற நூலின் 189ஆம் பக்கத்தில். ‘ஒப்பீட்டளவில் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களிடம் கம்யூனிசத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தாலும், ஆசியாவின் மக்களில் பலருக்கு அது ‘விடுதலை அளிக்கும் சக்தியாகவே’ தோன்றுகிறது. பழைய காலனி ஆட்சிமுறையைத் தொடர்வது ஆசியாவின்மீது கம்யூனிசத்தின் செல்வாக்கு விரைவாகப் ஒஅரவ உதவுவதாகவே ஆகிவிடும்’ என்று மேலும் எழுதினார்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்புப் போராட்டம் அல்லது சத்தியாக்கிரக இயக்கம் பற்றிய எந்த ஒருகுறிப்பும் கிரேட் பிரிட்டனின் முடிவுகளை எடுப்பவர்களிடம் இருக்கவில்லை. 1942ன் ‘இந்தியாவைவிட்டு வெளியேறு’ (வெள்ளையனே வெளியேறு) இயக்கம் அப்போதைய வைஸ்ராய் லின்லித்கோவ் பிரபுவால் இந்திய அரசுக்கான செயலாளர் அமெரி-க்கு எழுதப்பட்ட ஓர் அறிக்கையில் விவாதிக்கப்பட்டது. அவைஅனைத்தும் பெரும்பாலும் காவல்துறையினர் கொல்லப்பட்டது, காவல் நிலையங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது மற்றும் நாட்டின் பலபகுதிகளிலும் நடைபெற்ற வன்முறைச்செயல்கள் பற்றியதாகவே இருந்தது. இந்தத் துணிகரமான நடவடிக்கைகள் ‘வன்முறையற்றவை’ என்று தொழிலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன’ என்ற குறிப்போடு அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. ரொனால்டு ஹயாம் தனது நூலின் 66ஆம் பக்கத்தில் மகாத்மா காந்தியைப் பற்றியும் எழுதினார்: அது, ’இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பேரரசை இரத்தம் சிந்துவதிலிருந்து – அதாவது ‘புரட்சி’யிலிருந்து அஹிம்சைபற்றிய மகாத்மா காந்தியின் நம்பிக்கையே காப்பாற்றியது’ என நன்றிதெரிவிக்கும் உணர்வுடன் எழுதப்பட்டிருந்தது. அவர் எழுதினார்:’ அவரது (காந்தியின்) அஹிம்சைபற்றிய போதனைகள்தான் இந்தியாவுக்கும், இரத்தம் சிந்துதலுக்கும் (புரட்சிக்கும்) இடையேவேறு எந்தவொரு அம்சத்தைவிடவும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு உறுதியாக நின்ற அம்சமாகும். ’
ரெஜினால்ட் மாஸே தனது ‘மாவீரன் பகத் சிங்கும், மறக்கப்பட்ட இந்திய தியாகிகளும் (Shaheed Bhagat Singh and the forgotten Indian Martyrs) என்ற நூலில் ராயல் இந்தியன் கப்பற்படையின் 1946 எழுச்சி பற்றிய (கப்பற்படைக் கலகம்) அற்புதமான விவரங்களைத் தருகிறார். அத்துடன் அன்றைய மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பிலிருந்த நீதிபதி பானி பூஷன் சக்ரவர்த்தி, 1956ல் கல்கத்தாவுக்கு வருகைதந்த சி. ஆர். அட்லியுடன் ‘1947ல் இந்தியாவைவிட்டு வெளியேற பிரிட்டனை முடிவுசெய்ய வைத்த முக்கிய நிகழ்வுகள்’ தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களையும்சக்ரவர்த்தி இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: ‘நான் அட்லியிடம் காந்தியின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பிரிட்டன் எடுத்த முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியது?’ என்று கேட்டேன். இதைக்கேட்ட அட்லியின் உதடுகள் மெல்ல விரிந்து ஒவ்வொரு எழுத்தின்மீதும் அழுத்தம் தந்து ‘மி-னி-ம-ல்’ (மிகக்குறைவாக) என்றன’
மகாத்மா காந்தி வகித்த பாத்திரமும், அவரது ஒத்துழையாமையும், அவரது சட்டமறுப்பு மற்றும் சத்தியாக்கிரகமும், அஹிம்சை பற்றிய அவரது மகத்தான நம்பிக்கையும்- அதேபோல, பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் சிறைசென்ற தியாகங்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை! அவர்கள் புரட்சியைக் கண்டே அதிர்சியடைந்தார்கள். அந்தப்’புரட்சி’ ‘தீவிரவாதம்’ என்றும், புரட்சியாளர்கள் ‘தீவிரவாதிகள்’ என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என்ற இருதரப்பினராலும்அழைக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றும் பிரிட்டனின் திடீர்முடிவுக்குக் காரணம் பிரிட்டனுக்கு இருந்த நிர்ப்பந்தங்கள் மட்டுமே. மகாத்மா காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பிரிட்டிஷ் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக பெருமளவில் வெடித்தெழுந்த வன்முறை நடவடிக்கைகளின் காரணமாக அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள்-காங்கிரஸ் அணியினர் உட்பட- அந்த இயக்கத்தின்போது அஹிம்சை என்ற காந்தியின் நம்பிக்கையைப்பற்றிச் சிறிதளவும் கவலைகொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவின் மீதும் அதேபோல பிற காலனியப்பகுதிகள்மீதும் தங்களது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தப் போதுமான அளவுக்கு மனித ஆற்றலையும், நிதி ஆதாரங்களையும் திரட்ட முடியாத அளவுக்கு அவர்கள் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலவீனமடைந்திருந்தார்கள்.
எனவே அவர்கள் தங்கள் ஆட்சியை நேரடி ஆட்சி என்பதற்குப்பதிலாக வேறுவழிகளில் நடத்த முடிவு செய்தார்கள். அவர்கள் தங்களது அதிகாரத்தை காலனி நாடுகளிலுள்ள தங்கள் கூட்டாளிகளின் தலைவர்களிடம் ஒப்படைத்தார்கள். இந்தக்கொள்கைதான் மற்ற ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளாலும்கூட ஆசியாவில்-இந்தோனேஷியாவின் ஹாலாந்து, பெல்ஜியம் நாடுகளிலும், ஆஃப்ரிக்கா வில்- காங்கோ விலும் முறையே பின்பற்றப்பட்டன. ஃப்ரான்ஸ் அவ்வாறு செய்யத் தயக்கம் காட்டியது. எனவே அது ஆசியாவில்- இந்தோ சீனாவிலும் (வியட்நாம்) ஆஃப்ரிக்காவில்- அல்ஜீரியாவிலும் வருந்தத்தக்க தோல்விகளை அடைந்தது. கிரேட் பிரிட்டனோ அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், அதனுடைய கார்பரேட்குழுக்களுக்கும் அடிபணிந்து தன்னை மிகவும் ஒரு இளைய கூட்டாளியாக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன்காரனமாக சில ஆண்டுகளுக்குப்பின் பிரிட்டன் ‘அமெரிக்காவின் கைப்பாவை’ என ஊடகங்களால் அழைக்கப்பட்டது!
அமெரிக்கா, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ‘உலகப் போலீஸ்காரன்’ பாத்திரத்தை எடுத்துக்கொண்டது!
1946 கப்பல்படைஎழுச்சியை- ‘படேல்களின் முடக்கும் முயற்சி’ என அந்த எழுச்சியின் முன்னணித்தலைவர்களில் ஒருவரான மதன்சிங் குறிப்பிட்டார். அந்த நாட்களை, ‘வீரம் செறிந்த நாட்கள்’ என 2007 ஜனவரி 23ல் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ன் விஷால் பரத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் வர்ணித்தார்.
1946 பிப்ரவரி 19 அன்று ராயல் இந்தியன்நேவி போர்க்கப்பலின் வீரர்கள் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக புரட்சி செய்து போர்க்கப்பலின்மீது இந்திய தேசியக் கொடியை ஏற்றினர். அத்துடன் உடனடியாக அணிவகுத்த துருப்புக்கள் பம்பாயின் தெருக்களில் ஊர்வலம் நடத்தினர். மக்களை அந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும் போர்க்கப்பலின் கம்பியில்லாத்தந்தி அமைப்பு புரட்சிகரப்பாடல் கள் கவிதைகள் கலந்த புரட்சி செய்தியைப் பரப்பின. நாடு முழுவதும் ‘புரட்சி நீடூழி வாழ்க’ என்ற முழக்கத்தை எதிரொலித்தது.
1946 பப்பற்படை எழுச்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சண்டிகரை சார்ந்த மதன்சிங் அப்போது தனது இருபதுகளின் இடைப்பட்ட வயது இளம் அதிகாரியாகவும், கப்பல்படை வேலைநிறுத்தக்குழுவின் துணைத்தலைவராகவும் இருந்தார். கடந்துசென்ற ஆண்டுகளை அவர் மீள்பார்வைகொண்டபோது, கப்பல்படை எழுச்சியின் நினைவுகள் இன்னும் பசுமையாக அவர் நினைவுகளில் இருந்தன. அவர் தனது எண்பதுகளின் இடைப்பட்ட வயதில் இருந்தார். – அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அந்த நாட்களின் நினைவுகள் அவருள் ததும்பி வழிந்தன. (இப்போது அவர் இல்லை)
அவருடனான உரையாடலைத் துவக்க, ‘ஆட்சியாளர்களுக்கு எதிரான அந்தக் கிளர்ச்சியை நடத்த ஆதர்சமாக இருந்த சூழ்நிலைகள் எவை? என்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவர் தரையை உற்றுப்பார்த்துக்கொண்டே தனது நினைவுகளின் கடலுக்குள் ஆழ்ந்து மூழ்கினார். சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. . ஆனால் திடீரென்று அவர் முகத்தில் பலவகையான உணர்வுகள் மின்னலாக எழுவதை நாங்கள் கண்டோம். கடைசியாக அவர் தனது மௌனத்தைக் கலைத்து, ‘ நான் தளபதி கிங் பற்றி கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. தகுதியற்ற மனிதனையும்கூட நாங்கள் வெறுக்கக்கூடாது’ என்றார். பின்பு அவர் ‘வீரதீரத்துடன் போரிட்ட, ஒருபோதும் கருணைக்காக கெஞ்சாத படைவீரர்களின் செயல்திறன் மிகுந்த நீண்ட கதைகளைக் கூறத்தொடங்கினார். அவர்கள் புரட்சிகரப் பாடல்களைத் தங்கள் உதடுகளில் பாடிக்கொண்டே தண்டனைகளை எதிர்கொண்டார்கள் போராட்டகளம் ஒரு புரட்சிக்கான வளத்தோடு மிக நன்றாக இருந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி கிங் அதைத் திடீரெனப் பற்றவைத்தான். ஹெச். எம். எஸ் தல்வாருக்கு அவன் வழக்கம்போல வருகை தந்தபோது கப்பல்படை வீரர்களை நோக்கி ‘இந்திய நாய்களின் மகன்களே’ என அழைத்து ஒரு இழிவான வார்த்தையை அவன் கூறினான். நாங்கள் அவனுக்கு எதிராக புகார் தர விரும்பினோம். ஆனால் அச்சுறுத்தப்பட்டோம். மேலும் எங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு மிகவும் மோசமானதாக இருந்தது. அது எங்கள் வெறுப்பை அதிகப்படுத்தியது. எனவே பிப்ரவரி 18 அன்று ஒரு முழக்கத்தை ஓங்கி ஒலித்தோம்: ‘உணவு இல்லை: வேலை இல்லை’ என்றார் அவர்.
’ அதன்பின் நாங்கள் ஒருபொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தோம். கூட்டமாக அணிதிரண்டோம். பிரிட்டிஷ்காரர்கள் இதை தங்கள் மேலாதிக்கத்துக்கு எதிரான சவாலாகப் பார்த்தார்கள். எனவே அவர்கள் விரக்தியால் படைவீரர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூட்டை துவக்கினார்கள்’ என்று மேலும் கூறிய அவர்,மௌனத்தில் மூழ்கினார். உடைந்து போனார். இறுதியாக நடுங்கும் குரலோடும், ஈரம் கசிந்த கண்களோடும், ‘ நான் எனது இந்தக்கண்களால் பம்பாய் தெருக்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பார்த்தேன். நமது வீரப்பெண்மணிகள் சுடப்படும் குண்டுகளுக்கு மத்தியிலும் காயமடைந்தவர்களுக்கு உதவுவதையும்கூட நான் பார்த்தேன். அவர்கள் தங்களால் காப்பாற்றப்பட்டவர்களின் மதத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை. நான் இன்றும்கூட அவர்கள்மீது உயர்ந்த மரியாதை கொண்டுள்ளேன் அவர்களை நினைக்கும்போதெல்லாம் எனது கண்ணீரை என்னால் அடக்கமுடிவதில்லை. ’
அதன்பிறகு சர்தார் படேல் தலைமையிலான தேசியத்தலைவர்கள், அந்தப்போராட்டம் தங்களுடையதல்ல என்று கூறி, போர்வீரர்களை சரணடையுமாறு கேட்டுக்கொண்டதை விளக்கினார். ‘அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்’ என்று அவர்கள் உறுதி தந்தார்கள். ஆனால் அந்தப்போர்வீரர்கள், ‘எங்களது எழுச்சி நமது மக்களின் வாழ்வில் ஒரு மிகமுக்கியமான வரலாற்று நிகழ்ச்சி:’, ‘வரும் தலைமுறைகள் தங்கள் பாடங்களைக் கற்கும்போது எங்களால் எதை அடையமுடியவில்லையோ அதைக் கட்டாயம் அடைந்தே தீருவார்கள். புரட்சி நீடூழி வாழ்க!’ என்ற செய்தியோடு தங்கள் தலைகளை உயர்த்தி சரணடைந்தார்கள். ’
அந்தப்படைவீரர்கள் அனைவரும் தாங்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப் பட்டது மட்டுமின்றி சிறைகளிலும் அடைக்கப்பட்டார்கள். மதன்சிங்கும்கூட கைதுசெய்யப்பட்டு மூன்றரை மாதங்கள் 5x4 அடி தனிமைச்சிறையில் 16 பிரிட்டிஷ் படைவீரர்களின் காவலில் வைக்கப்பட்டார்.
சுதந்திரத்துக்குப்பின், இந்திய கப்பல்படை மதன்சிங்கை மறக்காமல் அவருக்கு கௌரவம் அளிக்கும்வகையில் ஓர் ஆபத்துகால உதவிக் கப்பலுக்கு ஐ. என். எஸ். மதன்சிங் எனப் பெயரிட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட மக்கள் இன்னும் வறிய நிலையில் இருப்பதைக்கண்டு மதன்சிங் வருத்தமடைந்தார். . ’நாங்கள் போராடிய சுதந்திரம் இது அல்ல’ என்றார் அவர். ( நன்றி: விஸ்வபாரதி மற்றும் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ 2007 ஜனவர் 23)
ஒருதாம்பாளத்தில்வைத்து அதிகாரம் கையில் கொடுக்கப்பட்ட பண்டித நேருவால் தலைமை தாங்கப்பட்ட இந்திய முதலாளிகள் ஏற்கனவே தயாராக இருந்த நிர்வாக இயந்திரத்தை மரபுரிமையாகப் பெற்றதில் பெருமை கொண்டார்கள். அதே நேரத்தில் சீனர்கள் 1948ல் தங்களது புரட்சிக்குப்பிறகு, சிதைவுகளிலிருந்து புதிதாக தங்களது புரட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற தங்களுக்கேயான ஒருபுரட்சிகர நிர்வாக இயந்திரத்தை உருவாக்கவேண்டியிருந்தது
பண்டித நேரு ’தான் எடுத்துக்கொண்ட நிர்வாக இயந்திரம் பிரிட்டிஷ் காலனியத் தனமைகொண்ட, ஒடுக்குமுறைக்கு உட்படுத்துகின்ற, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சுரண்டலில் திளைத்த, ஊழல் நிறைந்த ஒன்று’. என்பதை அவர் உணரவில்லை. அதேநேரத்தில் சீனர்கள் தங்களது புரட்சிகரமான, மக்களை நேசிக்கின்ற புதிய நிர்வாக இயந்திரத்தைக் கட்டமைத்தார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட, ஒருவரோடொருவரை மோதவைக்கின்ற, மத அடிப்படையிலான இரண்டு நாடுகள் என்ற தத்துவமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியத்துணைக்கண்டத்தின் பிரிப்பும் ஏகாதிபத்தியத் தின் சதியால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அது இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களுக்கும் பேரழிவு என்பதை நிரூபித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடந்த இருநூறு ஆண்டுகால சூழ்ச்சியிலிருந்து இந்தியத்தலைமை எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.
ஓர்அந்நிய நாட்டைக் கைப்பற்றுவதற்கு இரண்டுவழிகள் உள்ளன. ஒன்று: அந்த நாட்டுமக்களை ஆயுத வலிமையால் கட்டுப்படுத்துவது. இன்னொன்று: அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிதியின்மூலமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. இதில் முதலாவது வழியில் ஒரு நாட்டின் இறையாண்மையை இராணுவ சக்திகளைக்கொண்டு அச்சுறுத்தும்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அதைப்பற்றி அறிந்துகொள்வார்கள். ஆனால் மறுபுறத்தில் இரண்டாவது வழியில் அந்தநாட்டின், பொருளாதாரத்தை ஆக்கிரமிப்பது சத்தமில்லாமல் செய்வதாகும்: அது கண்ணுக்குத் தெரியாது. நாடகத்தன்மையற்றது. செய்தி மதிப்பு இல்லாதது. அது அடிக்கடி செயலாற்றல் மிக்கதாக, மிகமிகமெல்ல, ஆக்கிரமிப்புக்குள்ளான நாட்டின் மக்களால்கூட அத்தைகைய ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது என்று உணரக்கூட முடியாதது. அவர்களுக்கு நன்மை செய்வதற்காகவே வந்துள்ள ‘உதவும் மனப்பான்மை கொண்ட நண்பன்’ என்றுகூட அந்த ஆக்கிரமிப்பளனை அந்த மக்கள் ஏற்கச்செய்யும் தந்திரம் கொண்டது.
” காலனியாதிக்க காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதனால் என்ன? காலனியாதிக்க அதிகாரங்கள் இன்னும் குறைந்துவிடவில்லையே. அதன் வடிவம் மட்டும்தானே மாறியிருக்கிறது. அதேநேரத்தில் அதன் சாராம்சத்தை வைத்துக்கொண்டு தங்கள் தலைவலிகளை மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். நிர்வாகத் தொந்தரவுகள் எதுவுமில்லை: புதிய காலனியாதிக்கம் செலுத்துவதற்கு தாங்கள் விட்டுச்சென்ற அமைப்பு நிலையாக உள்ளது! புதிய காலனியமுறைக்கு எதிராக மக்களைத் திரட்டுவது வெளிப்படையான பழைய காலனியாதிக்கத்துக்கு எதிராக மக்களைத் திரட்டியதைவிட மிகவும் சிரமமானது. பெயரளவுக்கான (அரசியல்) சுதந்திரம் அளிக்கப் பட்ட புதிய அரசு தனது மேல்குடியினருக்கும் (மிகவும் உயர்கல்விபெற்ற, நகர்ப்புறமயமான, பணக்காரப்பிரிவினருக்கும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும்) மிகப்பெரும் நிலப்பிரபுக்களுக்கும் தங்கள் சொந்த மக்களையே சுரண்டிப் பயனடைவதற்கும், நாட்டின் செல்வ வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் ஏராளமான வாய்ப்புக்களைத் தெருகிறது. ” – ஃபெலிக்ஸ் கிரீன் – “The Economy” பக்கம் 103, 104.
”இன்றைய நாளின் முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார விதிகளின் முக்கியமான அம்சங்களும், தேவைகளும், ‘சுரண்டலின்மூலம் உயர்ந்தபட்ச முதலாளித்துவ இலாபத்தை அடைவதும், ஒருகுறிப்பிட்ட நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்களை அடிமைத்தனத்தின்மூலம் அழிப்பதும், வறுமைக்குள்ளாக்குவதும், மற்ற நாடுகளின் – குறிப்பாக பின்தங்கிய நாடுகளின் – மக்களைக் கொள்ளையடிப்பதும், பின்னர் தேசியப்பொருளாதாரத்தை போர்கள் மற்றும் இராணுவமயமாக்குவதன் மூலம் – இவை மிக உயர்ந்த இலாபத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்துவதும் ஆகும்” – ஜே. வி. ஸ்டாலின் ’சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள்’ பக்கம்45 – ஏகாதிபத்தியமும் புரட்சியும்’ என்வர் ஹோக்ஸா பக்கம் 133)
1947 ஜூலையில் இந்திய சுதந்திர மசோதா பிரிட்டிஷ் பாறாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர் ஆனது. இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு மிகவும் வினோதமாக, இந்தியத்தலைவர்களின் வேண்டுகோளின்பேரில் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். அதுமட்டுமல்ல: பல பிரிட்டிஷ் அதிகாரிகளும் இந்தியத்தலைமையால் அவர்கள் ஏற்கனவே வகித்த சிலமுக்கியமான பொறுப்புக்களில் தக்கவைக்கப்பட்டார்கள் . ஃபீல்ட் மார்ஷல் அச்சின்லெக் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் ஜெனரல் லாக்ஹர்ட் இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதியாக ஆக்கப்பட்டார். ஏர்மார்ஷல் எலம்ஹிர்ஸ்ட் இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வங்கம், சென்னை, பம்பாயின் பிரிட்டிஷ் ஆளுநர்கள் அவர்கள் வகித்துவந்த பதவிகளிலேயே தக்கவைக்கப்பட்டார்கள்.
இந்தஅதிகாரிகள் தங்கள்விசுவாசத்தை முதன்மையாக இந்தியாவைவிட இங்கி லாந்தின் அரசரிடம்தான் கொண்டிருப்பார்கள் என்பது முற்றிலும் இயல்பானதுதான். அப்போதைய இந்திய அயலுறவுசேவைத்துறையில் சிறப்பாக மதிக்கப்பட்ட அதிகாரியான சி. தாஸ்குப்தா, ‘கஷ்மீரில் போரும், சாதுர்யமும் 1947-1948’’ என்ற தனது புத்தகத்தில் பக்கம் 200ல், ‘சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபுவின் இந்தியாவின்மீதான பற்று அவருக்கு மிகவும் விருப்பமான பிரிட்டிஷ் ராஜதந்திர நலன்களோடு ஒருபோதும் குறுக்கிட்டதேயில்லை. அவர் பிரிட்டனுக்கு மகத்தான சேவைகளைச் செய்தார். அதேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்கலான தருணங்களில் இந்திய இராணுவத்தின் முன்முயற்சிகளைத் தடுத்து பாகிஸ்தானுக்கும் சேவை செய்தார். இந்தியா தனது இராணுவ நடவடிக்கை களை பாகிஸ்தானின் எல்லையான பூஞ்ச் மற்றும் மிர்பூர் மாவட்டங்கள்வரை நீட்டிக்காமலிருப்பதை உறுதி செய்தார். அதுமட்டுமல்ல, பண்டித நேருவை கஷ்மீர் பிரச்சனையை ஐ. நா. வுக்கு எடுத்துச்செல்வதை ஏற்கவைத்தார். (ஐ,நா. ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்தில் உள்ள ஓர்அமைப்பு) இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் பதவி வெற்று அரசியல் தலைமை பிம்பமல்ல என்பது கிட்டத்தட்ட கவனிக்கப்படாமலேயே விடப்பட்டது. அமைச்சரவை பாதுகாப்புக்குழுவின் தலைவ ராக மவுண்ட் பேட்டன் நியமிக்கப்பட்டது இந்திய அரசின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் நிர்வாக அதிகாரம் பெற்றவராக அவரை ஆக்கியது. இந்தப்பதவியை அடைந்ததன்மூலம் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அரசின் கொள்கைமுடிவுகளில் நேரடியாக செல்வாக்கு செலுத்தும் நிலைக்கும், அல்லது எங்கு தேவைப்படுமோ அங்கு அதை சீர்குலைப்பதற்குமான நிலையை எடுத்தார்.
மவுண்ட் பேட்டன் பிரபுவையும், அதேபோல மற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளையும் நாட்டின் மிகமுக்கியமான நிர்வாகப்பதவிகளில் தக்கவைத்துக்கொண்டது இந்தியத் தலைமையின் அபத்தம் அல்லவா?”
கிரேட் பிரிட்டனின் 1047ன் பிரதமரான சி. ஆர். அட்லி, ‘As It Happened’ என்ற தனது புத்தகத்தின் 186ஆம் பக்கத்தில் பிரிட்டனின் முடிமன்னரை காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அங்கீகரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் பண்டித நேரு தனது உயர்ந்த அரசியல்மேதைமையைப் பயன்படுத்தியதற்காக அவருக்கு நன்றிசெலுத்தியுள்ளார்!
சுதந்திரம் மற்றும் குடியரசுத்தன்மையின் மீதான வலுவான தத்துவார்த்தப் பார்வைகொண்ட தனது சொந்த அணியினரின் விமர்சனங்களுக்கு நேரு உள்ளானார்.
இந்த இடத்தில் இத்ற்கு முற்றிலும் மாறாக 156 ஆண்டுகாலம் பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங்கை 1997ல் மக்கள்சீனக் குடியரசு எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒருவிரிவான கண்ணோட்டத்தில் காணவேண்டியுள்ளது. 1997 ஜூன் 30 நள்ளிரவில் ஹாங்காங் சீனாவுக்குத் திருப்பித் தரப்பட்டது. அதன்பிறகு மிகவும் குறுகிய நேரத்தில், 156 ஆண்டுகளுக்குமுன் பிரிட்டிஷ் ராயல் கடற்படை எந்தத்திசையில் ஹாங்காங்குக்குள் வந்ததோ அதே மேற்குதிசை யிலிருந்து சீனா, ஹாங்காங் கடலுக்குள் வந்துசேர்ந்தது. சீனா-பிரிட்டிஷ் உறவுகளிலிருந்த பூசல்களின் ஒட்டுமொத்தக் கதையும் சீனாவின் எல்லையான ஹாங்காங்கை பிரிட்டன் சீனாவிடம் ஒப்படைத்த அந்தக்கடைசி நிமிடம்வரை அனைவராலும் பார்க்கக்கூடியவிதத்தில் அங்கு இருந்தது. சீனாவின் பிரதமரான ஜியாங்ஜெமின். , மற்றும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தலைமையில் நடைபெற்ற அந்த நள்ளிரவுக் கொண்டாட்டம் 12,14 மணிக்கு முடிவடைந்தது. ஹாங்காங்கிலிருந்து தனது காலனிய அதிகாரத்திலிருந்து பிரிட்டன் விலகிக்கொண்டபோது, அந்த அதிகாரத்தை அடுத்து ஏற்றுக்கொண்ட சக்தியான சீனா, அந்த முக்கியமான நள்ளிரவு தருணத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் சில அம்சங்கள் பற்றிய எந்தவொரு நட்பிணக்கமான வார்த்தைகளையோ அல்லது பாராட்டு வார்த்தைகளையோ தெரிவிக்கவில்லை. இது பிரிட்டனின் வரலாற்றில் ஒருவேளை முதன்முறையாக இருந்திருக்கக்கூடும்! சீனப்பத்திரிக்கைகளும், நாடகங்களும், திரைப்படங்களும், நடன நிகழ்வுகளும் என அனைத்தும் கிரேட்பிரிட்டனை ‘ஹாங்காங்கின் கொடிய அடக்குமுறையாளனாக சித்தரித்தன. ஹாங்காங்கிலிருந்து வெளியேறும் பிரிட்டிஷ் ஆளுநரை அடுத்து பொறுப்பேற்கும் சீனாவின் நிர்வாகி, பிரிட்டிஷ் ஆளுநர் வசித்துவந்த இல்லத்துக்கு தான் குடிவரப்போவதில்லை என்றும் அந்தக் கட்டடத்தில் தீயசக்திகள் உள்ளன என்றும் கூறினார். சீனாவின் எந்தவொரு முக்கியத்தலைவரும் இளவரசர் சார்லஸையோ, பதவியிலிருந்து விலகும் ஆளுநர் கிரித்பேட்டனையோ வழியனுப்பச் செல்லவில்லை! (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா- 1997 ஜூலை 1)
ஆனால் இங்கோ ஒன்றுக்கும்மேற்பட்ட வழிகளில் இந்தியா தனது பழைய காலனிய உறவுகளை கிரேட்பிரிட்டனோடு வைத்துக்கொண்டது. இவை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. 1947க்குமுன் இந்தியாவின் உள்துறை புலனாய்வு அமைப்பு பிரிட்டிஷ் உள்நாட்டுப் புலனாய்வுத் துறையான MI-5 மற்றும் இந்திய அரசியல் புலனாய்வுத்துறை (IPI) என்று அழைக்கப்பட்ட இந்திய அயலுறவுத்துறை, ஸ்காட்லாந்துயார்டு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. 1909ல் ஒரு தனி இந்தியக் காவல்துறை அதிகாரியால் இந்தியப் புரட்சியாளர்களைக் கண்காணிக்கத் துவக்கப்பட்ட ‘இந்திய அரசியல் புலனாய்வு –IPI- இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஒர் மாபெரும் அமைப்பாக மாறியிருந்தது. 1919ல் இருந்து பிரிட்டன் தனது மிகப்பெரிய சவாலாக ‘சிவப்பு அபாயத்தை’க் கருதியது. 1947க்குப்பிறகும் இந்த MI-5 IB ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகள் நீடித்துவந்தன. 1947ல் அதிகார மாற்றத்தின்போது, எழுதப்படாத ஓர் ஒப்பந்தமாக புதுடெல்லியில் இரகசியப்பதவியாக ‘பாதுகாப்பு தொடர்பு அதிகாரி என்ற Security Liasion Officer –SLO பதவி இருந்துவந்தது. பின்னர் 1971ல் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் எஸ். பி. சர்மா MI-5 ன் தலைமைக்கு ‘ஒரு பிரிட்டிஷ் SLO இல்லாமல் தன்னால் எவ்வாறு நிர்வகிக்கமுடியும் என்று தெரியவில்லை எனவே தன்னைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்திக் கூறியதாக பிரிட்டிஷ் ஆவணக்காப்பகக் குறிப்பு தெரிவித்தது.
பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் முக்கிய உறுப்பினராக இருந்த பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, அனைத்துலக நாடுகளில் ஏற்படும் முக்கியமான வளர்ச்சிகள் பற்றி பிரிட்டிஷ் பிரதமருடன் பகிர்ந்துகொள்ளவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேரு 1954ல் சீனாவுக்குச் சென்றுவந்த விவரங்களையும், தனது கருத்துக்களையும் கிரேட்பிரிட்டனின் அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு தெரிவித்த ஒரு இரகசியக்குறிப்பு ‘தி இந்திய எக்ஸ்பிரஸ்’ 2010 அக்டோபர் 18 இதழில் வெளிவந் துள்ளது. இது வழக்கமானதுதான். அது இந்தியா தனது ஆங்கிலோ-அமெரிக்க அதிகா ரங்களுடன் ஏராளமானவற்றைப் பகிர்ந்துகொண்டது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்கிறது. இது, பிரிட்டிஷின் காலனியாதிக்க அதிகாரம் பண்டித நேருவால் தலைமை தாங்கப்பட்டஇந்தியத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இந்தியா பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் ஓர் உறுப்பினராக முடிவு செய்தபோது தெளிவானது.
மாவீரன் பகத்சிங்கும் அவரது கட்சியான ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோஸியேஷனும்’ கொண்டிருந்த இந்திய சுதந்திரம் பற்றிய சிந்தனை ‘இடைவிடாது போராடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ‘இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் இன்றையநிலை மிகவும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. அது இரட்டை ஆபத்துக்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. ஒருபுறத்தில் அது அந்நிய மூலதனத்தின் கொலைவெறித்தாக்குதலைத் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மறுபுறத்தில்இந்திய முதலாளித்துவத்தின் இரக்கமற்ற தாக்குதலைத் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய முதலாளிகள் அந்நிய மூலதன சக்திகளுடன் இணைந்துகொள்ள்வதில் ஒரு வளர்ச்சிப்போக்கைக் காட்டுகிறார்கள்’
‘புரட்சி என்பது தற்போது நிலவிவரும் சமூக ஒழுங்கை முற்றிலும் தூக்கி எறிவதும், அந்த இடத்தில் சோசலிச ஒழுங்குமுறையை மாற்றியமைப்பதும் ஆகும். அந்த நோக்கத்துக்கான நமது உடனடிக்கடமை அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும் அரசும், அரசு இயந்திரமும் ஆளும்வர்க்கத்தின் கைகளில் உள்ள ஆயுதங்கள் என்பது உண்மையான அம்சமாகும். அவர்களின் நலன்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் அவை பயன்படுகின்றன. நாம் அதைப் பறிக்கவும், நமது இலட்சியத்தை அடைவதற்காகவும், சமுதாயத்தை மார்க்ஸிய அடிப்படையில் மறுநிர்மாணம் செய்வதற்காகவும் பயன்படுத்த விரும்புகிறோம் இந்த நோக்கத்துக்காக, அரசு இயந்திரத்தை நாம் கையாள்வதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இவற்றோடு நாம் மக்களைக் கல்விபெறச்செய்யவும் நமது திட்டத்துக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்தப்போராட்டத்தில் நம்மால் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், கல்விபெறச்செய்யவும் முடியும்’
(விரைவில் வெளிவரவுள்ள அமர்காந்த்-ன் புத்தகமான ’ஷஹீத்-எ-ஆஸம் பகத்சிங்’: ஓர் உண்மையான மார்க்ஸிஸ்ட்: ஓர்உண்மையான மஹாஆத்மா:ஒரு வீரம்செறிந்த ஸ்பார்டகஸ்’ ன் ஓர் அத்தியாயத்தின் சுருக்கம்)
நன்றி: ஃப்ராண்டியர்
தொகுப்பு 49 எண் 47 மே 3- ஜூன் 3, 2017