மராட்டிய மாநிலம், இரத்தினகிரி மாவட்டத்திலுள்ள அம்பவாடே என்கிற கிராமத்தில் பிறந்த அம்பேத்கர் மகார் இனத்தைச் சார்ந்தவர். பின்நாளில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்திருக்கும் மாபெரும் மேதை. இவர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் புரட்சிநாளாக, கொண்டாட்டங்களாக, விழாக்களாக பரந்துபட்ட அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் அதேபோல அம்பேத்கரின் புகழைத் தொடர்ந்து பரப்ப வேண்டிய தேவை காலந்தோறும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ambedkar readingகடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 07 ஆம் தேதியை உலக மாணவர் தினமாகக் கொண்டாடிட திட்டமிட்டு அறிவித்தது. ஏன் இந்நாள் உலக உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்? இந்நாளில்தான் முதன் முதலாக புரட்சியாளர் அம்பேத்கர் பள்ளிக்குச் சென்றார். அவர் முதன் முதலாக பள்ளிக்குச் சென்ற நாளையை உலக மாணவர் தினமாகக் கொண்டாடிட ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்திருக்கிறது. ஒருவர் முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற நாளை கொண்டாடிடும் அளவிற்கு அம்பேத்கர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையல்ல!

அம்பேத்கரின் இளமை காலத்தில் அவர் கற்ற கல்வி, அதற்கான போராட்டம் வலிகள் நிறைந்த வரலாறு. அம்பேத்கர் கல்வி கற்றது மட்டுமல்லாமல் கல்விக் கூடங்களையும் உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு என்பதை இந்நாளில் நாம் தெரிந்து கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

கல்வியின் தொடக்க காலம்

இராணுவ வேலையிலிருந்து அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற போது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தை. மத்திய இந்தியாவிலிருந்து கொங்கணத்திலி தபோலி என்ற ஊரில் இவர்கள் குடியேறினர். அம்பேத்கரின் ஐந்தாவது வயதில் தபோலியில் அவரைப் பள்ளியில் சேர்த்தனர். அவருடைய அண்ணனுடன் அங்குத் தொடக்கக் கல்வியைக் கற்கத் தொடங்கினார். சுபேதார் ராம்ஜி சக்பால் தபோலியில் நீண்டகாலம் தங்க முடியவில்லை. பம்பாய்க்குக் குடியேறி சத்தராவில் இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு வேலையில் அமர்ந்தார். சத்தாராவில் இவர்கள் குடியேறிய நேரத்தில் அம்பேத்கரின் தாயார் பீமாபாய் மறைவுற்றார்.

அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் பள்ளிக்குச் செல்லும் போது சிறிய சாக்குத் துண்டு ஒன்றை எடுத்துச் செல்வார்கள். வகுப்பின் மூலையில் இதைக் கீழேப் போட்டு அதன் மீது அமருவார்கள். இவர்களுடைய குறிப்பேடுகளை ஆசிரியர் தொடமாட்டார். இவர்களைப் பாடம் ஒப்பிக்கச் சொன்னால் தீட்டாகி விடுவோமோ என்ற அச்சத்தினால் சில ஆசிரியர்கள் இவர்களிடம் கேள்வியும் கேட்க மாட்டார்கள். பள்ளியில் படிக்கும் போது அம்பேத்கருக்கு தண்ணீர் தாகம் எடுத்தால் மற்ற மாணவர்கள் இவரின் திறந்த வாயில் புனல் வழியாக தண்ணீரை ஊற்றுவார்கள்.

                இப்படிப்பட்ட கொடூரமான சூழலில் அம்பேத்கருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து கொண்டே போனது. அவருக்கு விருப்பமான பொழுதுபோக்குகளிலும் விளையாட்டுகளிலும் நேரத்தைக் கழித்தார். வீட்டில் இவரை காண்பதே அரிது. இதற்கெல்லாம் பள்ளி வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களே காரணமாக இருந்தது எனப் பின்னாளில் அம்பேத்கரே கூறியுள்ளார்.

அம்பேத்கரின் தந்தை மறுமணம் செய்துகொள்வதில்லை என்ற எண்ணத்துடன் இருந்தார். ஆனால் பின்னாளில் இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு மறுமணம் செய்துகொண்டார். தன் தாயின் இடத்திற்கு இன்னொரு பெண் வருவதை அம்பேத்கர் விரும்பவில்லை. இனி தந்தையைச் சார்ந்து வாழக்கூடாது, தானே சம்பாதித்து வாழவேண்டும் என்று எண்ணினார். சத்தாராவிலிருந்து பம்பாயிலுள்ள தொழிற்சாலைகளுக்குப் பையன்கள் சென்று வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று தன் சகோதரிகள் கூறக் கேட்டிருந்தார் அம்பேத்கர். எனவே பம்பாயில் நூற்பாலையில் வேலைக்குச் செல்வது என்று முடிவு செய்தார். "இந்த முடிவுதான் என் வாழ்வில் புதிய திருப்பத்தையே ஏற்படுத்தியது. பள்ளிக்குச் செல்லாமல் விளையாடித் திரிகின்ற போக்கினைக் கைவிட்டுவிட்டு இனிக் கடுமையாக உழைத்துப் படித்துத் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் சுயமாகச் சம்பாதித்து தந்தையின் சார்பு இல்லாமல் வாழமுடியும் என்று முடிவு செய்தேன்" என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாளிலிருந்து பொறுப்பற்ற பழக்கங்களையும் செயல்களையும் அறவே கைவிட்டார். படிப்பில் கருத்தூன்றிக் கடுமையாக உழைத்துப் படிக்கத் தொடங்கினார். இந்தப் பையன் சரியாகப் படிப்பதில்லையே என்று ஏமாற்றமடைந்திருந்த ஆசிரியர்கள் இவருடைய தந்தையிடம் சிறந்த கல்வியை இவருக்கு வழங்குமாறு அறிவுரை கூறினார்கள். அந்த அளவுக்குத் தீவிரமாக அம்பேத்கர் படிப்பை கண்ணும் கருத்துமாகப் படித்தார்.

                அம்பேத்கர் படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தார். தனது அப்பாவின் துணையுடன் ஹோவர்ட்ஸ் ஆங்கிலப் பாடநூலைக் (Howard’s English Reader) கற்றார். மற்றும் தர்க்கத்கரின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு பற்றிய மூன்று நூல்களையும் படித்தார். இதனால் மொழிப்பெயர்ப்பில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் வகுப்பில் இருந்த பெரும்பாலான மாணவர்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். இவருடைய தந்தை கற்பிக்கக் கையாண்ட மொழிபெயர்ப்பு முறையானது சரியான சொல்லை இவர் தேர்ந்தெடுக்கவும், இவருடைய சொல்வள அறிவு வளர்ச்சி பெறவும், இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் என்ற புகழ் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ளவும் அடித்தளமிட்டது என்று நன்றியோடு பின்னாளில் தனது தந்தையை நினைவு கூர்ந்திருக்கிறார்.

                இளமையில் நூல்களைப் படிப்பதில் அம்பேத்கர் பேரர்வம் கொண்டிருந்தார். நூல்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு என்றுமே தணிந்ததில்லை. பாடநூல்களைப் படிப்பதைவிட மற்ற நூல்களைப் படிப்பதிலேயே பெருவிருப்பம் கொண்டிருந்தார்.

                “நீ படிப்பது வீண்” என்று ஒர் ஆசிரியர் அம்பேத்கரிடம் அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்தார். இது அம்;பேத்கரின் உள்ளத்தை எரிச்சலடைய செய்தது. ஒருநாள் வழக்கம் போல் அந்த ஆசிரியர், “நீ படிப்பது பயனற்றது” என்று சொன்னபோது, அம்பேத்கர் சினத்துடன், “உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டு போங்கள்” என்று பதிலடிக் கொடுத்தார். தீண்டப்பாடத மாணவன் கல்வி கற்பதா என்ற காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமாக இருந்தது.

                வாழ்நாள் முழுவதும் மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தைப் அம்பேத்கரையும் அவருடைய அண்ணனும் எடுத்துப் படித்திட அனுமதிக்கப்படவில்லை இங்குள்ள சாதி இந்துக்களின் சமூகக் கட்டமைப்பு. சூத்திரர்களும், தீண்டப்படாதவர்களும் சமஸ்கிருதத்தைப் படிக்கவோ மற்றவர் படித்தால் பக்கத்தில் நின்று கேட்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்த வேதங்களைக் கற்பதற்குச் சமஸ்கிருதமே திறவுகோல் போன்றது. அதனால் அம்பேத்கரின் தந்தை எப்படியாவது இவர்களை சமஸ்கிருதம் படிக்க வைத்துவிட வேண்டுமென நினைத்தார். ஆனால் அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் சமஸ்கிருதத்தைக் கற்க முடியாமல் ஒதுக்கப்பட்டனர். பின்னாளில் அம்பேத்கர் தனது சொந்த முயற்சியாலும், பண்டிதர்களின் துணைகொண்டும் சமஸ்கிருதத்தைக் கற்றார். அதிலும் புலமை பெற்றார்.

                1907 ஆம் ஆண்டு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றார்;. அம்பேத்கர் மொத்தம் 750 மதிப்பெண்களுக்கு 282 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆயினும் தீண்டப்படாத மாணவன் ஒருவன் தேர்ச்சி பெற்று இவ்வளவு மதிப்பெண் பெற்றிருப்பது பெருஞ்சாதனையாகக் கருதப்பட்டது. இதற்காக புகழ் பெற்றிருந்த சமூகச் சீர்திருத்தவாதியான எஸ்.கே.போலே தலைமையில் பம்பாயில் அம்பேத்கருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. புகழ்பெற்ற மராத்தி எழுத்தாளரும் சமூக சீர்சிருத்தவாதியுமான கிருஷ்ணாஜி அர்ஜுன் கெலுஸ்கர் இந்தப் பாராட்டுவிழாவில் தான் எழுதிய ‘கௌதம புத்தரின் வரலாறு’ என்ற புத்தகத்தைப் பரிசாக அம்பேத்கருக்கு வழங்கினார்.

தன் தந்தையின் விருப்பத்தினால் ஊக்கம் பெற்றிருந்த அம்பேத்கர் பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு தீண்டப்படாதவருக்கு இது ஒரு புதிய அனுபவம். அவருடைய சமூகத்தில் முன் மாதிரியில்லாத ஒரு புதிய வாய்ப்பு. தொடக்கம் முதலே முனைப்புடன் படிக்கத் தொடங்கினார். இந்நேரத்தில் அம்பேத்கரின் தந்தைக்கு பணகஷ்டம் ஏற்பட்டது. இச்சமயத்தில் கெலுஸ்கர் பெரும் உதவியாக இருந்தார். உடனடியாக பரோடா மன்னரைச் சந்தித்து, அவரிடம் சில நாட்களுக்கு முன் உயர் கல்வி கற்பதற்குத் தகுதி வாய்ந்த சிறந்த தீண்டப்படாத மாணவனுக்கு உதவிடத் தயாராக இருப்பதாக மன்னர் அறிவித்ததை அவருக்கு நினைவூட்டினார். சாயஜிராவ் கெய்க்வாடு சிற்றரசர் இந்த வாய்ப்பினை வரவேற்று அம்பேத்கருக்கு உதவினார்.

அயல்நாடுகளில் உயர்கல்வி

                அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புப் படிக்க சில மாணவர்களை அனுப்பிட பரோடா மன்னர் விரும்பினார். பம்பாயில் அரசரின் அரண்மனையில் மன்னரைச் சந்தித்து அம்பேத்கர் தன் வரலாறு முழுவதையும் தெரிவித்தார்;. அவருடைய அரசு விளம்பரம் செய்துள்ளவற்றில் ஏதாவதொரு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு அரசர் அறிவுறுத்தினார். இவ்வாய்ப்பும் அம்பேத்கருக்குக் கிடைத்தது. பரோடா அரசின் கல்வித் துறை துணை அமைச்சர் முன்னிலையில் 1913 ஜுன் 4 ஆம் நாள், “குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களை நன்கு படிப்பேன் என்றும், படித்தபின் பரோடா அரசில் பத்தாண்டுகள் பணிபுரிவேன்” என்றும் ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

                அயல்நாடான அமெரிக்காவில் அம்பேத்கரின் வாழ்க்கை தனித்தன்மை உடையதாகவும், நெகிழ்ச்சி மிக்க அனுபவம் உள்ளதாகவும் இருந்தது. அங்கு மாணவர்களோடும் மற்றவர்களோடும் அவர் சுதந்திரமாகப் பழக முடிந்தது. படிப்பதில், எழுதுவதில், நடப்பதில், குளிப்பதில், தங்குவதில் சமஉரிமை கிடைத்தது. குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது, மேஜையின் மேல் உண்பது, உணவுச் சிதறல் உடைமீது விழாமல் இருக்க ஒரு சிறிய துண்டு, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வாழ்க்கையில் இப்படிப் பல புதிய காட்சிகள். அவருக்கு அது ஒரு புது உலகம். அது அவருடைய அறிவின் பரப்பை மேலும் விரிவடையச் செய்தது. புதிய அர்த்தத்தோடு அவருடைய புதுவாழ்வு பளிச்சிட்டு மின்னியது.

தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தையும் எவ்வாறு படிப்பதற்காகப் பயன்படுத்தினார் என்று அவருடன் கல்லூரியில் படித்தவர்கள் பலரும் பிற்காலத்தில் பெருமையுடன் கூறி இருக்கிறார்கள். இந்தியாவில் ஆங்கில மொழியுடன் பெர்சியன் மொழியையும் படித்து பி.ஏ., பட்டம் பெற்றார். இந்நேரத்தில் அரசியல், விஞ்ஞானம், நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதரம் ஆகியவற்றைப் பாடமாகவும் எடுத்திருந்தார்.

                அம்பேத்கர் அன்றாடம் பதினெட்டு மணிநேரம் படித்தார். அறிவைப் பெருக்குவதற்கான ஆழ்ந்த தேடல் இவ்வாறு பல மாதங்கள் தொடர்ந்தது. இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துப் படித்தபின் ‘பண்டைய இந்தியாவின் வாணிபம்’ (Ancient Indian Commerece) என்ற ஆய்வுக் கட்டுரைக்காக 1915 இல் எம்.ஏ., பட்டம் பெற்றார்.

                ‘இந்தியாவின் ஆதாயப் பங்கு – ஒரு வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம்’ (National Dividend of India: A Historic and Analytical Study) என்ற கட்டுரையைப் பல நாட்கள் தன் முழுக் கவனத்தையும் கடும் உழைப்பையும் செலவிட்டு எழுதி முடித்தார். 1916 ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் இவ்வாய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. இந்த ஆய்வுக் கட்டுரைக்காகத் தத்துவயியல் டாக்டர் (Doctor of Philosophy) என்ற பட்டத்தைக் கொலம்பியா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அம்பேத்கருக்கு வழங்கியது.

                1916 அக்டோபர் மாதத்தில் சட்டம் பயிலுவதற்காக கிரேஸ் இன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்திற்கான இங்கிலாந்துக் கல்லூரியில், பொருளாதரம் பற்றிப் படிப்பதற்காகச் சேர்ந்தார். இங்கிலாந்தில் அவருடைய கல்வியை மேலும் தொடர்ந்திட அனுமதி வழங்குமாறு பரோடா மன்னருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பொருளாதரத்தில் அவர் மேற்கொண்ட படிப்பு அப்பொழுது மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆகவே டி.எஸ்.ஸி., பட்டம் பெறுவதற்குத் தயார் செய்வதற்காக இலண்டன் பேராசிரியர்கள் அம்பேத்கருக்கு அனுமதி தந்தனர். அம்பேத்கர் இதற்கான ஆய்வு வேலையைத் தொடங்கினார். ஆனால் இதற்கிடையில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டது என்று அம்பேத்கருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே பரோடாவின் திவான் அம்பேத்கரை இந்தியாவிற்குத் திரும்புமாறு தெரிவித்தார்.

                உதவியில்லாத நிலையில் இந்தியாவிற்குத் திரும்பிட வேண்டியதுதான் என்று அம்பேத்கர் எண்ணியபோதிலும் அவர் உள்ளம் ஓர் உறுதி பூண்டது. பணத்திற்கு ஏதேனும் வழி செய்து கொண்டு மீண்டும் இலண்டனுக்கு வந்து படிப்பை எப்படியும் முடிப்பது என்று முடிவெடுத்தார். நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் மீண்டும் அவருடைய படிப்பைத் தொடருவதற்கான அனுமதியை இலண்டன் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றுக் கொண்டார். பின்பு தான் சேர்த்து வைத்திருந்த சிறுதொகை, கோல்ஹாப்பூர் மன்னரிடம் பெற்ற சில உதவிகள், நண்பர் நவல் பத்தேனாவிடம் பெற்ற கடன் ரூபாய் 5000 ஆகியற்றுடன் 1920 ஜுலை மாதம் சட்டப் படிப்பையும் பொருளாதரப் படிப்பையும் முடித்திட வேண்டும் எனக் கருதி இலண்டனுக்குப் பயணமானார்.

                இப்பொழுது அவருடைய கவனம்; இலண்டன் அருங்காட்சியகத்தின் பக்கம் படர்ந்தது. இங்குப் பண்டையத் தத்துவ அறிவியல் களஞ்சியங்களாக நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பழங்காலத் தொல்பொருள் சின்னங்கள் இங்குப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாய்ப்பு அமையும் போதெல்லாம் இந்த அருங்காட்சியகத்திலுள்ள நூலகத்தில் அம்பேத்கர் ஆழ்ந்து படித்தார். காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை படிப்பது என்பது அடிக்கடி நிகழும்.

வயிற்றுப் பசியை மறக்ககடித்த அறிவுப்பசி!

நேரத்தைப் பொன்போல் கருதுவது அவர் வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் பகல் உணவு உண்ணாமலேயே இருந்துவிடுவார். அச்சமயம் ஒரு பெண் நடத்திவந்த விடுதியில் தங்கியிருந்தார். அது அரைநேர உணவு விடுதியாகவும் இயங்கியது. இவ்விடுதியின் உரிமையாளரன பெண் கண்டிப்பும் கடுமையும் உள்ளவர். ஜாம் தடவப்பட்ட சிறிய ரொட்டித் துண்டு, ஒரு சிறிய மீன் துண்டு, ஒரு குவளை தேநீர் இவைதாம் அந்தப் பெண் அங்குத் தங்கியிருந்தவர்களுக்கு அளிக்கும் காலைச் சிற்றுண்டி. செலவு குறைவான இச்சிறிதளவு சிற்றுண்டியை அவசர அவசரமாக விழுங்கிவிட்டுக் காலையிலேயே அருங்காட்சியகத்திற்கு விரைந்து ஓடுவார். அருங்காட்சியகத்திற்குள் நுழையும் முதல் ஆள் பெரும்பாலும் இவர்தான். இடையில் நிறுத்துவதோ ஓய்வு கொள்வதோ இல்லாமல் இந்த நூலகத்தில் மணிக்கணக்கில் அன்றாடம் படிப்பார். எந்த அளவிற்கு ஆழ்ந்து மூழ்கிப் படித்து வந்தார் என்றால், நூலகக் காவலாளி அம்பேத்கர் எங்கே இருக்கிறார் என்று ஒவ்வொரு நாள் மாலையிலும் வேட்டையாடுவது போல் தேடிப் பிடித்து வெளியே அனுப்புவார். ஏனெனில் இவர்தான் நூலகத்தை விட்டு வெளியேறும் கடைசி மனிதர். நூலகத்தை விட்டு வெளியேறும் போது அவர் எழுதிய குறிப்புத் தாள்கள் அவரது சட்டைப் பைகளில் பிதுங்கிக் கொண்டிருக்கும். அத்துடன் படித்த களைப்பால் முகம் வெளிறிப் போய் சோர்ந்து காணப்படும்.               

ambedkar 583அம்பேத்கரின் ஆய்வுப்பணி அருங்காட்சியக நூலகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய அலுவலக நூலகம், இலண்டன் பல்கலைக்கழக நூலகம் மற்றும் பொருளாதர நூல்களுக்காகப் புகழ் பெற்றிருந்த இலண்டன் நகரிலிருந்த பிற நூலகங்கள் ஆகியவற்றில் பல தொகுதிகளையும் பழைய அறிக்கைகளையும் படித்தார். தன் ஆராய்ச்சிக்காகப் பெருமளவில் குறிப்புகள் எழுதிக் கொண்டார்;.

ஆய்வுக் கட்டுரைகளும் - பட்டங்களும்!        

அம்பேத்கரின் அரும்பெரும் ஆய்வுப்பணி படிப்படியாக ஒரு முடிவுநிலைக்கு வந்தது. ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல்’ என்ற ஆய்வுக் கட்டுரையை அவர் முதலில் எழுதி முடித்தார். இதற்காக 1921 ஜுன் மாதத்தில் அவருக்கு எம்.எஸ். (Master of Science) பட்டம் வழங்கப்பட்டது. 1922 அக்டோபரில் அவருடைய புகழ்மிக்க ‘ரூபாயின் சிக்கல்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்து இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்தார்.

                1923 மே மாதம், அம்பேத்கரின் ‘ரூபாயின் சிக்கல்’ என்ற ஆய்வுக் கட்டுரையிலுள்ள சில சொற்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தேர்வாளர்களின் மனத்தைப் புண்படுத்துவதாகத் தேர்வாளர்கள் கருதுவதால் அந்த ஆய்வுக் கட்டுரையில்; சில சொற்களை மட்டும் மாற்றி மீண்டும் எழுதித்தர வேண்டும் என்பதற்காக உடனே இலண்டனுக்கு வருமாறு அம்பேத்கரை அழைத்தனர். இலண்டன் உயர்கல்வி வட்டாரத்தில் அம்பேத்கரின் எழுத்துகள் பெருங்கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. இது முதன்முறையன்று. அதற்குச் சில நாட்களுக்கு முன் ‘இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசின் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் மாணவர் சங்கத்தில் ஒரு கட்டுரை படித்தார். அறிஞர்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கர் இந்திய விடுதலைப் புரட்சியாளர்களில் ஒருவராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை இது எழுப்பியது. இங்கிலாந்தில் பேராசிரியராக இருந்த ஹெரால்டு ஜெ.லஸ்கி கூட அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் சரத்துகள் புரட்சிகரமானவை என்பதை வெளிப்படையாகவே புலப்படுத்துகின்;;றன என்று கருத்து கூறினார்.

                ரூபாயின் சிக்கல் பற்றிய ஆய்வுக் கட்டுரையைத் திருத்தி எழுதி பம்பாயிலிருந்து இலண்டனுக்கு அனுப்பினார். இலண்டன் தேர்வாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இதற்கான டி.எஸ்., (Docter of Science) பட்டத்தைப் பெற்றபோது அவர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தார். மிக நெடிய கடும் உழைப்பு, நடுக்கமற்ற மனத்திட்பம், எதையும் தன்வயமாக்கும் அறிவாற்றல் இவை இறுதியில் அம்பேத்கருக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

தீண்டப்படாத மாணவர்களுக்கான கல்விப்பணி

தான் படித்தது மட்டுமல்லாமல் தன்னைப் போன்று, தான் சார்ந்திருக்கிற சமூக மக்களும் படிக்க வேண்டும், உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார் அம்பேத்கர். அதற்காக அவர் எடுத்த முயற்சிகளும், பணிகளும் ஏராளம். இதற்காக பகிஷ்கிரித் ஹித்தகாரிணி சபையை 1925 ஜனவரியில் தோற்றுவித்தார். ஷோலாப்பூரில் ஒடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்; தங்கிப் படிப்பதற்கான ஒரு விடுதியை இச்சபை ஏற்படுத்தியது. மாணவர்களின் உணவு, உடை, மற்ற செலவுகளையும் இந்தச் சபையை ஏற்றுக் கொண்டது. பின்பு பகிஷ்கிரித் ஹித்தகாரிணி சபையைக் கலைத்துவிட்டு, ஒடுக்கப்பட்ட வகுப்புகள் கல்விக் கழகம் என்ற ஓர் அமைப்பை நிறுவினார் அம்பேத்கர். வலுவான அடித்தளத்தின் மீது அவருடைய வகுப்பு மக்களுக்குப் பள்ளிக் கல்வியை வழங்க வேண்டும் என்பதே அக்கழகத்தின் குறிக்கோள் ஆகும். இந்தச் சபையின் மேற்பார்வையின் கீழ்ச் சரசுவதி விலாஸ் என்ற மாத இதழை மாணவர்கள் நடத்தினார்கள். இது தவிர பம்பாயில் இலவசப் படிப்பகம் ஒன்றும், மகார் ஹாக்கி கிளப்பும் தொடங்கப்பட்டன.

யார் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்

கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதினார் அம்பேத்கர். பார்ப்பனர்களை ஆசிரியர்களாக அமர்த்தினால் கல்வியில் உண்மையான முன்னேற்றத்தை அடையவே முடியாது என அதில் குறிப்பிட்டார். ஏனெனில் பார்ப்பனர்கள் கீழ்சாதி மக்களை வெறுக்கும் மனங்கொண்டவர்கள். தங்களைத் தவிர வேறு எவ்வகுப்பினரும் கல்வி அறிவுப் பெறக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள். மனிதர்களை நாயினும் கீழாக நடத்துபவர்கள் மற்ற மனிதர்களை ஒரு போதும் சமமாகவோ அன்பாகவோ நடத்தாதவர்கள் என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார். ஆசிரியர்கள் நாட்டை நடத்திச் செல்லும் தேர்ப்பாகனைப் போன்றவர்கள். சமூகச் சீர்திருத்தக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, எத்தகையவர்களை ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைவிட மிகவும் முக்கியமானது வேறெதும் இல்லை. பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் செவிகளில், “உடலால் உழைக்கும் உங்களின் அப்பன்மார் தொழில்களைக் செய்யவே நீங்கள் பிறந்திருக்கீறீர்கள். நீங்கள் கீழ்ச்சாதி மக்கள். கல்வி என்பது ஒரு சாதிக்கே உரியது” என்று இடைவிடாது ஓதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர். இவர்கள் மிக மேன்மை தர வல்லதும் தேசிய முக்கியத்துவம் உடையதும் மனிதத் தன்மையை அளிக்க வல்லதும் அறிவைத் துலங்கச் செய்வதுமான கல்வி கற்பித்தல் தொழிலை செய்யக்கூடாது எனத் தெளிவாகக் கூறினார். கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படிப்பட்ட மனங்கொண்டவராக இருக்க வேண்டுமென இதன் மூலம் தெளிவுப்படுத்தினார்.

பெண் கல்வி

1927 ஆம் ஆண்டு மகத் மாநாடு முடிந்ததும் அங்குள்ள பெண்களின் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி தேவை என்பதை உணருங்கள். எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டால் பெரிய அளவில் முன்னேற முடியும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள். உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை நல்லொழுக்க நெறியில் இயங்குமாறு செய்யுங்கள். உங்கள் மகன்கள் இவ்வுலகில் தங்கள் தனி முத்திரையைப் பதிக்கும் வகையில் அவர்களை உருவாக்குங்கள்” என்று அறிவுறுத்தினார். பெண்களும் கல்விக் கற்க வேண்டும். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தார்.

மாணவர்களுக்கான அறிவுரை

தீண்டப்படாத வகுப்பு மாணவர்கள் தங்கும் விடுதியை 1933 ஏப்ரலில் அம்பேத்கர் பார்வையிடச் சென்றார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் பேசிய அவர், மிகவும் இழிவாக நடத்தப்பட்ட மற்றும் வசதியற்ற சூழ்நிலையில் அவர் காலத்தில் படிக்க நேர்ந்ததையும் பகிர்ந்து கொண்டார். கல்வி கற்கும் காலத்தில் அரசியலில் ஈடுபடாதீர்கள், உங்களுடைய சொல்லும் செயலும் மதிக்கக் கூடியதாக உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். நல்ல பழக்கவழக்கங்களைத் தாமே வளர்த்துக் கொண்டு, சுயஉதவியைக் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைப்பை அளியுங்கள் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.

சித்தார்த்தா கல்லூரி தொடக்கம்

நவீன விஞ்ஞான சாதனங்களையும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களையும் கொண்ட ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை நிறுவவேண்டும் என்பது அம்பேத்கரின் நீண்டநாள் கனவாகும். தீண்டப்படாத சாதியினருக்கு உயர்கல்வியை வழங்கவேண்டும் என்பதே அவருடைய எண்ணமாகும். அதற்காக 1946 ஜுன் 20 ஆம் நாள் ஒரு கல்லூரியைத் தொடங்கினார். அக்கல்வி நிறுவனத்திற்கு புத்தரின் பெயர்களில் ஒன்றான சித்தார்த்தா என்று பெயரிட்டார். அதேபோல் அவுரங்காபாத்திலும் ஒரு கல்லூரியை உருவாக்கினார். இந்த இரண்டு கல்லூரியிலும் சுமார் 3400 மாணவர்கள் வரை படித்தனர்.

கௌரவ டாக்டர் பட்டம்

1952 ஜுன் மாதம் கொலம்பியா பல்கலைக்கழத்தின் 198 ஆவது பட்டமளிப்பு விழாவில் அம்பேத்கருக்கு ‘டாக்டர் ஆஃப் லாஸ்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இது சட்டத்திற்கு வழங்கப்படும் கௌரவ டாக்டர் பட்டமாகும். அயல்நாட்டு பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் படித்து அக்கல்வியைக் கொண்டு அரும்பணியாற்றிக் கொண்டிருப்பதை சிறப்பிக்கும் வகையில் இப்பட்டம் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது என்றால் அது மிகையல்ல!

அறிவாயுதம்

அம்பேத்கருடனான சந்திப்பு என்பது பேசும் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தது போன்றிருக்கும். அவருடைய கலந்துரையாடல் தெளிவூட்டுவதாகவும், தன்வயப்படுத்துவதாகவும், விறுவிறுப்பானதாகவும், பல செய்திகளை எடுத்துரைப்பதாகவும் இருக்கும். வியத்தகு அருங்காட்சியகம் போன்று அறிவுக்களஞ்சியமாக இருந்த அவருடைய மூளையில் பல்துறை அறிவுவையும் சேர்த்து வைத்திருந்தார். அதனால் அவர் கலந்துரையாடும் போது அவருடைய பேச்சு, பல துறைகளின் அனுபவம் வெளிப்படும்.

ஒரு வணிகருக்கு நேரம் பணமாக இருப்பது போல், அம்பேத்கருக்கு நேரம் என்பது அறிவாக இருந்தது. அதனால் நேரத்தைப் பொன் போன்று பயன்படுத்தினார். நூல்களை மிக உயர்ந்த தன்மையிலான புத்துணர்ச்சியூட்டும் சாதனங்களாகவும், இன்பத்தின் ஊற்றாகவும் அவர் கருதினார். ‘எனக்கு எது அறிவூட்டுவதாக உள்ளதோ அதுதான் எனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும்’ என்று பெருமையோடுச் சொன்னார்.

அரசியல் கற்போருக்கான பயிற்சி பள்ளி

இந்தியாவிலுள்ள சனநாயகச் சக்திகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் தொடங்க இருந்த குடியரசுக் கட்சியில் புதியவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். அதுமட்டுமில்லாமல் அம்பேத்கர் அரசியலில் நுழைய விரும்புவோர்க்கான ஒரு பயிற்சிப் பள்ளியை ஏற்படுத்துவது என்று முடிவு செய்தார். பதினைந்து மாணவர்களுடன் 1956 ஜுலை முதல் இப்பள்ளி செயல்படத் தொடங்கி, 1957 மார்ச் வரை செயல்பட்டது. இப்பள்ளியின் நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் அம்பேத்கர் அவரது இறுதி காலத்தில் இப்பள்ளியை நேரில் பார்க்கும் வாய்ப்பே அமையாது போனது.

இறுதியாக...

அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் தீண்டப்படாத மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும், கற்றுக் கொடுப்பதிலும், அறிவுறுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் கற்றக் கல்வியை இன்றுவரை யாரும் கற்றுக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு அறிவு வேட்கை, அறிவுத் தாகம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட மேதை, நமக்காக விட்டுச் சென்றுள்ள பொக்கிஷமான அவரது படைப்புகளைக் கற்றும் அறிவுறுத்திய வழிமுறைகளைப் பின்பற்றியும் அறிவார்ந்த சமூகமாக தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம்.

நவம்பர் 07 ஆம் நாளான உலக மாணவர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்வோம்! ஜெய் பீம்!

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It