அறிவியல் கலைக் களஞ்சியத்தில் எந்த விஞ்ஞானியையும்விட சர் ஐசக் நியூட்டன் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

                Isaac Newtonசர் ஐசக் நியூட்டன் அவர்கள் 1642ல் இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர்.  இவர் பிறப்பதற்கு முன்பே இவரது தந்தையார் இறந்துவிட்டார்.  இவருக்கு மூன்று வயது ஆகும்போது இவரது தாய் மறுமணம் செய்து கொண்டார். இளம் வயதில் வளர்ப்புத் தந்தை இவரை வெறுத்து ஒதுக்கினார்.  இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் இருந்தது.  தனது பாட்டியிடம் சென்று தங்கினார்.

                தனது 12 வது வயதில் பள்ளியில் சேர்ந்தார்.  இவர் பள்ளி படிப்பில் மிகவும் பின்தங்கி சாதாரண மாணவராக இருந்தார்.  பள்ளியில் பாடம் படிப்பதற்கு பதிலாக படம் வரைதல், பட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருந்தார்.  சில ஆண்டுகளில் தன் படிப்பின்  நிலையை அறிந்து தனது தீவிர முயற்சியால் படிப்பில் முதல் மாணவராகத்  திகழ்ந்தார்.

                இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தனித் திறமை பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார்.  பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கணித சூத்திரங்களையும், ஈருறுப்பு தொடர் தேற்றங்களையும் கண்டுபிடித்தார்.  இயற்கையை அறிந்து கொள்ள ஆற்றல் வாய்ந்த கணித முறையான வகையீட்டு எண் கணிதம், தொகையீட்டு எண் கணிதம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.  இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியலில் கணித முறையை பயன்படுத்த உதவியது.

                தனது படிப்பின்போதே ஒளியின் இயல்பு பற்றி ஆய்வு செய்தார்.  வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார்.  வெண்மை நிற சூரிய ஒளிக்கதிரை முப்பட்டக கண்ணாடி வழியாக செலுத்தினார்.  அதில் ஒளிக்கதிர்கள் பல வண்ணங்களாகப் பிரிந்தது.  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் கொண்ட நிறப் பிரிகை உண்டானது.  அதற்கு VIBGYOR என்று பெயரிட்டார்.

                1668ல் பிரதிபலிப்பு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார்.  இது விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது.  தமது 27வது வயதில் தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

                சர்.ஐசக் நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகும்.  பொருட்களில் ஏற்படும் ஈர்ப்பு விசையானது அதன் அளவிற்கும், தூரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது என்பதை நிரூபித்தார்.

                இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களைப் பற்றிய விதிகளை வகுத்தார்.  முடுக்கம், பொருளின் எடை, அப்பொருளின் மீது செயல்படும் விசை ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஒரு விதியை உருவாக்கினார்.  அது மீட்டல்விதி  என்று அழைக்கப்படுகிறது.  இயற்கை தத்துவத்தின் கணித விதிகள், வானவியல்துறை, பொருளியல் துறை, ஒளியியல் ஆகியவைகளைக் குறித்து ஆய்வுகள் எழுதி வெளியிட்டார்.  இவர் எழுதிய புத்தகங்கள் இன்றைக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக உள்ளது.  அது மட்டுமல்லாமல் பல சிக்கல்களை தீர்த்து வைக்கவும் உதவுகிறது.

                இயற்பியல் அறிஞர், வானவியல் ஆராய்ச்சியாளர், கணித மேதை, இயக்கவியலை உருவாக்கியவர்.  மேலும், மனிதகுல வரலாற்றில் இதுவரை தோன்றிய அறிவியல் அறிஞர்களில் சிறந்தவர் என புகழப்படுகிறார்.

                1672ல் ராயல் கழக உறுப்பினரானார் (FRS). 1703ல் ராயல் கழகத்தின் தலைவரானார்.  இவர் 1727ல் தனது 84வது வயதில் காலமானார்.  இங்கிலாந்து நாட்டில் முக்கிய பிரமுகர்கள் அடக்கம் செய்யப்படும் வெஸ்ட் மினிஸ்ட் (West-minist) கல்லறையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

- பி.தயாளன்

Pin It


“பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை சிறந்த ஆய்வாளர்; செறிவான எழுத்தாளர்; கட்டுரையாளர்; பன்னூலாசிரியர்; தெளிந்த சிந்தனையாளர்; நல்ல உரையாடல் வல்லவர்; கடிதம் வரைபவர்; அடக்கமும் கூச்சமும் அணிகலனாக உடையவர்; பல்கலைக் கழகத்திலே பலருக்கும் ஆய்வு வழிகாட்டியாக விளங்கியவர்; இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பல்கலைக்கழகத்திலும் தேர்வாளர்; இந்திய மொழியியல் கழகம், திராவிட மொழியியல் கழகம், இந்திய கல்வெட்டியியல் கழகம், இலங்கைத் தொல் பொருட்கழகம் போன்ற அறிஞர் குழாத்தில் உறுப்பினர் எனப் பல்வேறு சிறப்புகள் பெற்றவர்” எனப் போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக் கழக வருகைப் பேராசிரியர் முனைவர் சி. நாச்சிமுத்து பதிவு செய்துள்ளார்.

velupillaiபேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம் தென்புலோலியில் உபயகதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை – உமையாத்தைப்பிள்ளை வாழ்விணையருக்கு மகனாக 21.11.1936 அன்று பிறந்தார். தென்புலோலியில் உள்ள தமிழ்ப் பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை ஆகியவற்றில் தமது தொடக்கக் கல்வியை முடித்தபின் உயர்கல்வியை ஹாட்லிக் கல்லூரியில் கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியை முடித்தார். இளங்கலை –ஆனர்ஸ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கீழ்த்திசைக் கல்வி உதவித் தொகையையும், ஆறுமுக நாவலர் பரிசையும் பெற்றார். பின் பல்கலைக்கழக உதவித் தொகை பெற்று ‘பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து இலங்கையில் தமிழில் முதல் முனைவர் பட்டத்தை 1962 ஆம் ஆண்டு பெற்றார். இலங்கையில் 1960-61 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைச் சிவில் சர்வீஸ் தேர்வில் இலங்கை முழுவதிலுமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றார். அக்காலத்தில் சிவில் சர்வீஸ் நியமனம் பெற்றவர்கள் பொருள் வருவாய், அதிகாரம், அந்தஸ்து என்பன மிகுந்த பதவிகளை இன்று வசிக்கின்றனர். தமிழ்க் கல்வியிலும் தமிழாராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபடுவதற்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பதவி உதவும் என்ற நம்பிக்கையில், சிவில் சர்வீஸ் நியமனத்தை நிராகரித்தார். இவருக்கு புகழ் பெற்ற பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வழிகாட்டியாக இருந்தார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சென்று புகழ்பெற்ற திராவிடவியல் மொழியியலிலே துறைபோகியவர்களில் ஒருவராக மதிக்கப்படும் பேராசிரியர் தாமஸ் பர்ரோவின் மேற்பார்வையில் ‘கி.பி. 800 தொடக்கம் 920 வரையுள்ள கல்வெட்டுகளில் தமிழின் நிலை’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு இரண்டாவது டாக்டர் பட்டம் பெற்றார்.

இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் துறைத்தலைவர் வரை பல நிலைகளில் பணியாற்றினார். திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் கழகத்தில் 1973-74 ல் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றிய போது கேரளப் பல்கலைக் கழக மொழியியல் துறையில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் 1980 ஆம் ஆண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 1990 முதல் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக் கழகச் சமய வரலாற்றுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பொதுநல நாடுகள் கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பேராசிரியர் ஆர்.ஈ. ஆஷர் (R.E. Asher) மேற்பார்வையில் தற்காலத் தமிழ்மொழியின் அமைப்புப் பற்றி ஆய்வுகள் செய்து கட்டுரைகள் வெளியிட்டார். சுவீடன் உப்சாலப் பல்கலைக் கழகத்துச் சமய வரலாற்றுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாப் பல்கலைக்கழகத்திலும், பின்பு அரிசோனா மாநிலப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் இளங்கதிர் . இந்த தர்மம், சிந்தனை முதலிய இதழ்களிலும், தமிழ்த் தின இதழாகிய ‘வீரகேசரி’ யிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் மிக்கவர். மேலும், சாசனவியல், திராவிட மொழியியல், இலக்கியமும் வரலாறும் ஆகிய துறைகளில் மிகவும் புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி. 800-920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தினார். இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. இவரது ஆய்வுகள் நூல் வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் ஏற்றுப் போற்றியது.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை படைத்து அளித்துள்ள நூல்கள்: ஈழத்து அறிஞர் ஆளுமைகள், இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை, சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, தமிழலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழ் வரலாற்றிலக்கணம், தமிழர் சமய வரலாறு, சாசனமும் தமிழும், பண்டிதமணி போற்றிய யாழ்ப்பாணத்து சைவத் தமிழ், பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக்கோலம், பாவலர் துரையப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம் அன்றும் இன்றும், ஈழத்தமிழ் இலக்கியம் வரலாற்றுப் பின்னணி தமிழும் சமயமும், கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும் (ஆங்கிலம்), கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு (ஆங்கிலம்), An Inscription from the munnisvaram Temple முதலிய நூல்களாகும்.

‘சாசனமும் தமிழும்’ என்னும் நூலில், சாசனத்துத் தமிழ் வரிவடிவம், சாசனத்துத் தமிழ்மொழி, சாசனத்துத் தமிழ் பண்பாடு, சாசனத்துத் தமிழ் இலக்கியம், சாசனத்துத் தமிழ் வழக்காறுகள், சாசனத்துத் தமிழ் இலங்கை முதலிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், தமிழ்ச் சாசனக் கல்வி கற்போருக்கு மிகவும் உதவியாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய மிகச் சிறந்த அறிவியல் படைப்பாக விளங்குகிறது. மேலும் இந்நூல் கல்வெட்டுகளில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகிறது. கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் துணையுடன் மொழி, இலக்கியம் பற்றி ஆராயப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நூலில் கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கு விளக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் சிங்களம், தமிழ், பாலி ஆகிய மொழிகளில் வெட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் கிடைக்கும் தமிழ் கல்வெட்டுகளை அந்தந்த மாநிலத்தார் முதன்மையளிக்காமல் மறைப்பது போல் இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளுக்கு முதன்மையும், தமிழ் கல்வெட்டுகளுக்கு முதன்மையின்மையும் உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்க்கல்வி தமிழ்ச்சாசன அறிவு இன்றிப் பூரணத்துவம் பெறாது. துமிழ் இலக்கிய வளத்துக்குத் தமிழ்ச்சாசன வளம் குறைந்ததன்று. தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள், தமிழ்ச்சாசனங்கள், தமிழ்நாடுத் தொல்பொருட் சின்னங்கள் என்பன பண்டைக்கால, இடைக்காலத் தமிழகத்தை அறிந்து கொள்வதற்கு வேண்டிய முக்கியமான மூன்றுவகை மூலாதாரங்களெனலாம். சாசனம் என்பது வடமொழிச் சொல், சாசனம் என்பதற்குப் பதிலாகக் கல்வெட்டு என்ற தமிழ்ச்சொல் வழங்கப்படுவதுண்டு, சாசனங்களில் மிகப்பெரும்பாலானவை கல்லில் வெட்டப்பட்டனவாதலால் இப்பெயர் வழக்குக்கு வந்திருக்க வேண்டும். கல்லில் வெட்டப்பாத செப்புப் பட்டயம் முதலியனவற்றையும் உள்ளடக்கக்கூடிய தமிழ்ச் சொல்லின்மையால், சாசனம் என்ற வடசொல் இங்கே எடுத்தாளப்படுகிறது.” என ‘சாசனமும் தமிழும்’ என்னும் நூலின் முகவுரையில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பதிவு செய்துள்ளார்.

‘தமிழ் வரலாற்றிலக்கணம்’ என்னும் நூல், தமிழ் மொழியின் வரலாற்றிலக்கணத்தை ஆராய்ந்து கூறும் முதல் நூலாகும். இந்நூலில் தமிழில் பிறமொழி, எழுத்தியல், சொல்லியல், பெயரியல், வினையியல், இடையியல், பொருளிலக்கணம் முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

‘ஈழத்துப் பழைய இலக்கியங்கள்: வரலாறு தேடல்’ என்னும் நூலில் ஈழத்து பழைய இலக்கிய வரலாறு இன்னும் நன்கு தெளிவுபடாத நிலையிலேயே காணப்படுகிறது. அந்தப் பழைய இலக்கிய வரலாற்றுக்கான தேடலே இந்த நூலிலே உள்ள கட்டுரைகள். தமிழகத்தையும், ஈழத்தையும் உள்ளடக்கிய பழைய ‘தமிழ் கூறும் நல்லுலகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்திய-இலங்கை அரசியல் பண்பாட்டு இலக்கிய வரலாறுகளும், அண்மைக்காலத்திலே பிரபலமடைந்துவரும் தொல்லியல் கல்வெட்டியல் செய்திகளும் இந்தத் தேடலுக்குப் பயன்பட்டுள்ளன. இந்நூலில், தொடக்க கால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின்வரலாற்றுப் பின்னணியும், அரசகேசரியின் இரகுவம்மிசமும் அது எழுந்த இந்துப் பண்பாட்டுச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் கயிலாச பாரம்பரியம், கோணேசர் கல்வெட்டுப் பற்றிய நுண்ணாய்வு முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

‘தமிழர் சமய வரலாறு’ என்னும் நூலில் சமய பொருளை விளக்க எழுந்து இலக்கியங்கள் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் மொழியாலும் பலவாக விரிவாகின்றன. எவ்வெச்சமயப் பொருளை எவ்வெவ் இலக்கியம் எவ்வெவ் காலத்தில் எவ்வெவ்வாறு கூறியுள்ளது என்ற நோக்கிலே பல ஆராய்ச்சி நூல்கள் எழுகின்றன. இன்னும் எழ இடமுண்டு. இந்நூலில், சமய இலக்கியமும் கால மாறுதலும், புறநானூற்றில் நிலையாமை, தமிழ் நாட்டிற் சமணர், தமிழில் அற நூல்கள் எழுந்த காலம், வள்ளுவர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், சைவமும் பௌத்தமும், சைவ மறுமலர்ச்சியும் சம்பந்தர் சமயப் பிரகாசமும், சிவபிரானுடைய அட்டவீரச் செயல்களும், ஞானசம்பந்தரும், அப்பர் சுவாமிகள் சமண சைவப் பாலம், அப்பர் தேவாரத்துள் சிவசூரிய வழிபாடு, நாயகன்-நாயகி பாவம், வைணவமும் தமிழும், சமண பக்திப் பாடல்கள், திருநூற்றந்தாதி, பௌராணிக மதமும் சமணமும் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

‘தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்னும் நூலில் தமிழ் சிந்தனையின் வரலாற்றையும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தோன்றிய தமிழிலக்கியங்களிலிருக்கும் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளது. இயற்கை நெறிக்காலம், அறநெறிக்காலம், சமய நெறிக்காலம், தத்துவ நெறிக்காலம், அறிவியல் நெறிக்காலம் ஆகிய ஐந்து காலப்பிரிவுகளின் ஊடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்தக் காலங்களில் சிறப்பு பெற்றிருந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அத்தியாயங்களைப் பிரித்து அதில் ஆய்வு செய்துள்ளார். அதுவரை காலமும் அந்தந்தக் காலங்களில் ஆண்ட ஆட்சியாளரை அடிப்படையாகக் கொண்டே தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டு வந்தது. பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலே ஒவ்வொரு காலப்பகுதிகளும் முதன்மைப் பெற்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூறுகிறது. அத்துடன் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு இந்நூலில் முதன்மை பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தமிழ் ஈழத்தின் பழம் வரலாற்றை அறிய இவை அரிய மூலங்களாகும். ஆத்துடன் பாண்டியல் கல்வெட்டு மொழி பற்றிய இவரது ஆய்வேடு இடைக்காலத் தமிழ் மொழி வரலாற்றை அறியத் துணை செய்யும் ஒன்றாகும். தமிழில் வரலாற்றுக் கிளை மொழி ஆய்வில் முதல் நூல் என்று போற்றத்தக்கது, விரிவாக இவர் ஆய்ந்து திராவிட மொழியியல் கழகம் ‘கல்வெட்டில் தமிழ்க் கிளை மொழி ஆய்வு’ என்ற ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியிட்டது. மேலும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவரது ‘கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்’ என்னும் ஆங்கில நூலை 1980 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம், சுவீடிஷ் ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மொழியியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல், சமயம், இலக்கியம், வரலாறு என்று பல்துறைகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை 1973 ஆம் ஆண்டு திராவிட மொழியியல் கழகம் வழங்கிய முதுநிலை ஆய்வு நிதியை ஏற்று ‘ கல்வெட்டுகளில் தமிழ்க்கிளை மொழி வழக்கு’ என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்வீடனிலுள்ள புகழ்பெற்ற உப்சாலா பல்கலைக்கழகம் 31.05.1996 அன்று பேராசிரியர் ஆ .வேலுப்பிள்ளையின் பணிகளைப் பாராட்டிச் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாது உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமதிப்பளிக்கக்கூடிய செய்தியாகும். “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தார். மேலும், உப்சாலா பல்கலைக்கழகச் சமயவியல் புலத் தலைவர் பேராசிரியர் கார்ல் ரெயின்ஹோல்டு பிரேக் கென்ஹீயெல்ம் "உலகு அவாவும் உங்கள் புலமைத் திறத்தைப் போற்றி மகிழ்கிறோம். அடிமை நாடாவதற்கு முந்தைய தென்னிந்தியச் சமய வரலாறு பற்றிய தங்கள் ஆய்வுகள் அறிஞர் உலகத்திற்குச் சிறந்ததொரு விருந்தாகும்” என்று பாராட்டினார்.

தமிழகத்தில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையை கலந்து கொள்ள மத்திய மாநில அரசுகள் அனுமதி மறுத்து திருப்பியனுப்பி வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு 1972 ஆம் ஆண்டு, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய ‘சாசனமும் தமிழும்’ என்னும் நூலுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை 01.11.2015 அன்று தமது 79 ஆவது வயதில் சான்பிரான்சிஸ்கோவில் காலமானார்.

“கல்வெட்டாய்விலும் வரலாற்று மொழியியலாய்விலும் இவர் சிறந்த ஈடுபாடுடையவர். தமிழ்க் கல்வெட்டுக்களைப் பற்றி இவர் தனிப்பெரும் புலமை பெற்றவர். என சுவீடனில் உள்ள உப்சாhலா பல்கலைக் கழகப் பேராசிரியர் பீட்டர் ஹால்க் புகழ்ந்துரைத்துள்ளார்.

- பி.தயாளன்

Pin It

               சிறந்த சிந்தனையாளராகவும், நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு அதிகாரியாகவும், சமூகவியல், வரலாறு, மொழியியல் ஆய்வாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல்துறை அறிஞராகவும் விளங்கியவர் சைமன் காசிக் செட்டி!

               கி.பி.45-இல் ஏதென்சு நகரைச் சேர்ந்த புளுராக் என்ற அறிஞர் கிரேக்க நாட்டுப் புலவர்களைப் பற்றி எழுதிய வரலாற்று நூல் தான் உலகில் தோன்றிய முதல் இலக்கிய வரலாறாகக் கருதப்படுகின்றது. பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வரலாறுகளுக்கெல்லாம் இந்நூல் மூலமாக அமைந்தது.

             CassieChetty  பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அதன் ஆசிரியர்கள் குறித்தும் அறிவியல் பூர்வமான தகவல்களைத் தர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று ‘தமிழ் புளுராக்’ (தமிழ்ப் புலவர் வரலாறு) (Tamil Pultarch) என்னும் ஆங்கில நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

               ஈழவளநாட்டில் புத்தளம் அருகில் துறைமுக நகரமாக விளங்கிய கற்பிட்டியில் 21.03.1807 அன்று காபிரியேல் - மேரி றோசைறோ வாழ்விணையருக்கு புதல்வராகப் பிறந்தார்.

               கற்பிட்டி, புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். தமது பதினேழாவது வயதிற்குள் தாய்மொழியாகிய தமிழுடன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும் சமஸ்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீன், டச்சு, கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே சுயமாகக் கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

               புத்தளம் நீதிமன்றத்தில் 1824-ஆம் ஆண்டு மொழி பெயர்ப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1828-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மணியக்காரராகவும் (ஊர்த்தலைமகன்) (Chief Headman) மாவட்ட முதலியராகவும் பணிபுரிந்தார். இலங்கை சட்ட நிரூபண சபை அங்கத்தினராக 1838 முதல் 1845 வரை செயல்பட்டார். 1845 ஆண்டு இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon Civil Service) சேர்ந்தார். 1848-ஆம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார்.

               அரசுப் பணிபுரிந்த போதும், தமது மொழிக்கும், நாட்டிற்கும் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் சிறப்பைத் தேடித் தந்தார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது தமிழ்த் தொண்டை தமிழறிஞர்களும், ஆங்கில அறிஞர்களும் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர்.

               அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களையும், அவற்றைப் படைத்தோரையும் பற்றிய வரலாறு முறையாகப் பேணப்படாமையால் தமிழிலக்கிய வரலாற்றை பிற நாட்டவர்கள் மட்டுமின்றி நம்மவரும் அறிந்து கொள்ள முடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்தது. தமிழர் தம் பாரம்பரியத்தையும், தம் இலக்கிய வளத்தையும் பிறருக்கு எடுத்துக் காட்ட வேண்டுமென்னும் உந்துதலால், சிலர் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் புதிய துறையில் கவனம் செலுத்த தொடங்கினர். அவர்களது முயற்சியின் விளைவாகவே இன்று கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழிலக்கிய வரலாறு தமிழ்பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

               தமிழிலக்கிய வரலாற்றை எழுத முதன் முதல் முயற்சியில் ஈடுபட்டவர் சைமன் காசிக் செட்டி. அவர் எழுதியளித்துள்ள நூல்கள்

               தமிழர் சாதிப்பகுப்பு முறை, புத்தளப் பகுதியிலுள்ள முக்குவரின் உற்பத்தியும் வரலாறும், தமிழர் சடங்கு முறைகள், இலங்கை சோனகரின் பழக்க வழக்கங்கள், மலையகராதி, இலங்கைச் சரித்திர சூசனம் (தமிழ் மொழி பெயர்ப்பு), யோசேப்பு வாஸ்முனிவர் சரித்திரம், இலங்கையில் கத்தோலிக்க சமய அபிவிருத்தி, பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் (இந்து முகமதிய மதச்சான்றுகளுடன் விளக்கவுரை), குதர்க்கதிக்கரம் (மஸ்தான சாயபு என்றும் முஸ்லிம் கிறிஸ்து மத கண்டன வச்சிரதண்டம் நூலுக்கு மறுப்பு) சிலோன் கெஜட்டியர் (The Ceylon Gazetteer) Tamil Plutarch (தமிழ்ப் புலவர் வரலாறு), கத்தோலிக்க கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும், கற்பிட்டியில் கண்டெடுத்த நாணயங்கள், பண்டைக்காலம் தொட்டு ஒல்லாந்தர் காலம் வரையிலுள்ள வரலாறு, ரேணர் எழுதிய (Turour) Epitome of the History of Ceylon என்னும் இலங்கை வரலாறு பற்றிய நூலின் மொழி பெயர்ப்பு நூல் முதலியவைகளாகும்.

               தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் முன்னோடியாக விளங்குவது, சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புளுராக்’ என்னும் ஆங்கில நூலாகும். The Tamil Plutarch Containing a summary Account of the Lives of the Poets and Poetesses Southern India and Ceylon. The Earliest to the present times, with select specimens of their compositions’ என்னும் ஆங்கில நூல் 1859-ஆம் ஆண்டு வெளிவந்தது.

               மேற்கத்திய நாடுகளில் செல்வாக்குப் பெற்ற ‘வாழ்க்கைச் சரிதம்’ என்னும் வடிவத்தைக் கையாண்ட சைமன் காசிச் செட்டி தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை எழுதியுள்ளார். தமிழ்ப் புலவர்களுடைய சரிதங்களை ஒரே நூலில் முதலில் அச்சேற்றிய பெருமை, சைமன் காசிக் செட்டியவர்களையே சாரும்.

               ஈழத்தவரான சைமன் காசிச் செட்டி படைத்த தமிழ் புளுராக் ‘தமிழ்ப் புலவர் சரிதம்’ என்னும் ஆங்கில நூல் முன்னோடி நூலாகும். இந்நூல் 1859ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் 189 தமிழ்நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் வெளியிடப்;பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், வெளிவந்த ஆண்டு போன்ற விளக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

               தமிழ் புளுராக் நூலில் அரசகேசரி, நல்லூர் வி. சின்னத் தம்பிப் புலவர், சுன்னாகம் அவரது பண்டிதர், மாதோட்டம் லோரெஞ்சுப் புலவர், ஞானப்பிரகாச முனிவர், கூழங்கைத் தம்பிரான், பிலிப்பு தெ. மெல்லோ, கணபதி ஐயர், நெ. சேனாதிராய முதலியார், வட்டுக்கோட்டை கணபதி ஐயர், நெ. சேனாதிராய முதலியார், நல்லூர் ம. சரவண முத்துப்புலவர், அராலி விசுவநாத சாஸ்திரியார் ஆகிய பன்னிரெண்டு ஈழப்புலவர்களின் சரித்திரமும் இடம் பெற்றுள்ளது.

               சைமன் காசிச் செட்டி 1840 ஆம் ஆண்டில் ‘கொழும்பு அப்சர்வர்’ (The Colombo Observer) என்ற பத்திரிகையிலும், ‘சிலோன் மேகசின்’ (The Ceylon Magazine) என்ற இதழிலும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘சிலோன் மேகசின்’ இதழில் அகத்தியர், தேரையர், திருமூலர், கொங்கணர், மச்சமுனி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், ஒளவையார், திருவள்ளுவர், கபிலர், மாணிக்கவாசகர், அதிவீரராம பாண்டியன், வில்லிபுத்தூரார், தொல்காப்பியர், பவணந்தி முனிவர், அமிர்தசாகர், கச்சியப்பர், சேந்தன் (திவாகரர்), கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, மண்டலபுருடர், பரஞ்சோதி முனிவர், சிவவாக்கியார், அருணகிரி நாதர், பட்டணத்துப்பிள்ளையார், பத்திரகிரியார், குமரகுருபரர், தாயுமானசுவாமிகள், சீர்காழி அருணாசலக் கவிராயர் என்னும் முப்பத்திரண்டு தமிழறிஞர்கள் குறித்துக் கூறியுள்ளார்.

               கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ‘குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆராய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்திலிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658 ஆம் ஆண்டு வரையில் அவர் எழுதிய நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.

               பரதவர் குல வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ (சரித்திர சூதனம்) என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகவும் போற்றப்படுகின்றார்.

               தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றை வரிசைப்படுத்தி எழுதியுள்ளார். தமிழ்-வடமொழி-அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ்த தாவரவியல் அகராதி ஆகிய நூல்களையும் படைத்;துள்ளார். மாலத்தீவு மொழிக்கும், சிங்கள மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் காட்டும் சொற்பட்டியல், ஜாவா மொழிக்கும், வடமொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை முதலிய மொழியியல் நூல்களையும் எழுதியுள்ளார்.

               சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புலவர் வரலாறு’ என்ற நூல் தொ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையுடன் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.

               இவர் எழுதிய தமிழலின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் முதலியவை இவருக்கு புகழை ஈட்டித் தந்தன. இந்நூல்கள் தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ் மொழியின் பழமை, தமிழரின் உடைகள், அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழலின் திருமணச் சடங்கு முறைகள் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது. இந்நூலுக்கு டாக்டர் எசு சிபோல் பாராட்டுரை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1934 ஆம் ஆண்டு வெளிவந்தது.

               இவர் 1841 ஆம் ஆண்டு ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி ஓராண்டு காலம்வரை நடத்தினார்.

               இஸ்ஸாமியர்களின் காப்பியமான சீறாப்புராணத்தை முழுமையாக ஆய்வு செய்து, சீறாப் புராணத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதியுள்ளார். ஜோசப் பிலிப்-டி-மெல்லோ, வாசு ஆகியோரின் வரலாறுகளையும் படைத்துள்ளார்.

               திருக்கோணேச்சுரம் பற்றிக் கூறும் கவி ராஜவரோசுயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டு வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

               மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிட்ட சைமன் காசிச் செட்டியின் முயற்சிகளைப் பாராட்டி, சர். இராபர்ட் ஹோட்டன் என்பவர் பதிப்புச் செலவிற்கு 100 கினி பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். (கினி என்பது பிரிட்டிஷாரின் அன்றைய தங்க நாணயமாகும்)

               ‘சிலோன் கெஜட்டியார்’ (Ceylon Gazatteer) இலங்கைத் தீவுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் சிறந்த படைப்பாகும். இந்நூலுக்கு அந்நாளைய ஆங்கிலேய பிரதம நீதிபதியாக பதவி வகித்த சர்.சார்லஸ் மார்ஷல், பிரதம படைத் தளபதியாக இருந்த சர்.யோன்வில்சன் ஆகியோர் மதிப்புரை வழங்கியுள்ளனர். இந்நூல் 1934-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் பிரதி ஒன்று கொழும்பிலுள்ள இராயல் ஏசியாடிக் சங்கத்தில் இன்றும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் இலண்டனில் உள்ள ஆங்கிலேயர்களும் பாராட்டியுள்ளனர்.

               உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலம், நீளம், குறித்த அளவுகள் பற்றி, அக்கால புவியியலாளர்கள் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர். புதுமை அளவைக் கருவிகள் ஏதுமின்றி, மேலைநாட்டு அறிஞர்கள் வியக்கும் வகையில் இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு போன்றவற்றை துல்லியமாக முதன் முதலில் கூறியவர் இவரே.

               தமது சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்து, அப்பள்ளியில் ஏழை மாணவர்கள் இலவசமாகக் கற்பிக்க ஏற்பாடும் செய்தார்.

               சைமன் காசிச் செட்டியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி டி.பீ.ஏ. ஹென்றி என்ற அறிஞர் ஆசிய சங்க இதழில் 1927-ஆம் ஆண்டு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ‘தமிழ்த்தூதர்’ தனிநாயகம் அடிகள் நடத்திய ‘Tamil Culture’ (தமிழ்ப் பண்பாடு) இதழ்களில் வித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராசு இவரின் தமிழ்ப் பணியை சிறப்பித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

               அந்நாட்களில் ஆங்கிலேய ஆளுநராகப் பணியாற்றிய, மக்கந்சி, சிலோன் கெஜட்டியரின் வெளியீட்டினால் பெரிதும் மகிழ்ந்ததுடன் ஆங்கிலேயர் அல்லாத மக்களுள் சைமன் காசிச் செட்டி அபூர்வ ஆற்றல் வாய்ந்த விவேகியாவார் என இலங்கை சட்டசபைக் கூட்டத்தில் இவருக்கு புகழாரம் சூட்டினார்.

               ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய டாக்டர் கால்டுவெல், சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புளுராக்’ நூலின் சிறப்பினையும் பதிவு செய்துள்ளார். சைமன் காசிச் செட்டி வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் புலமை மிக்கவராக விளங்கினார்.

               பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழறிஞர்களில் சைமன் காசிச் செட்டி முக்கியமானவராகக் கருதப்பட்டார்.

               “தங்கம் புடத்திலழியாது நிற்கின்ற தன்மையைப் போல்

 அங்கம் பொருந்திய வாத்திமநாளு மழிவதில்லை

 சங்கத்து கரைகளிலோர் துரையாகத் தனித்தாசாள்

 சிங்கத்தை யொத்த சீமான் சைமன் காசிச் செட்டி சிரோமணியே”

 எனப் புலவர் வேதகிரி முதலியார் இவரை போற்றிப் பாடியுள்ளார்.

               சைமன் காசிச் செட்டி தமது ஐம்பத்து மூன்றாவது வயதில் 05.11.1860 அன்று காலமானார்.

               கற்பிட்டியில் சைமன் காசிச் செட்டி வாழ்ந்த வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘செட்டித் தெரு’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.

               அவர் பிறந்த கற்பிட்டியால், அவ்வூர் மக்கள் நன்றியுணர்வுடன் அவருக்கு முழு உருவச் சிலை எழுப்பியுள்ளதோடு, ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுத்து சிறப்பித்து வருகின்றனர். சைமன் காசிச் செட்டியின் புகழ் கூறும் பாராட்டு வாசகம் புத்தளம் நகரமன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சைமன் காசிச் செட்டியின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1987 ஆம் ஆண்டு வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.

- பி.தயாளன்

Pin It

“கவிஞர் இ. முருகையன் தமது காலத்தில் ஆற்றல் மிக்க படைப்பாளியாக விளங்கியதால் அவரது படைப்புகள் முக்கியமான கணிப்பிற்குரியதாகியதுடன், நவீன தமிழ் கவிதை சம்பந்தமான பல சிக்கலான பிரச்சனைகளுக்கு ஒளி பாய்ச்சுவனவாகவும் அமைந்துள்ளன. தனிமனித அவல புலம்பல்களுக்கும் சமூக உணர்வுமிக்க படைப்புகளுக்குமான அடிப்படை வேறுபாடு இதுதான். பாரதிக்குப் பின் வந்த கவிஞரான முருகையனில் பாரதி பரம்பரையின் பரிணாமத்தைக் காணமுடிகிறது. அந்த வகையில் கவிஞர். இ. முருகையன் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான பாதையில் வரித்துச் சென்றவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. யாவற்றுக்கும் மேலாக அவர் தமிழ் அறிஞராகவும், திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.” என ஈழத்து எழுத்தாளர் லெனின் மதிவாணம் பதிவு செய்துள்ளார்.

 murukaiyanமுருகையன் யாழ்ப்பாணம் சாகவச்சேரி கல்வயல் என்னும் கிராமத்தில் தமிழாசிரியர் இராமப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினருக்கு 23.04.1935 அன்று மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், தொடர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் அதன் பின் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று விஞ்ஞானப் பட்டதாரியானார். இவர் லண்டன் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். விஞ்ஞானத்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்ற இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

               சாகவச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 ஆம் ஆண்டு விஞ்ஞான ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்த முருகையன், அறிவியல்-பாடநூல் மொழிபெயர்ப்பாளராகவும், தமிழ்மொழிப் பாடநூல் குழுவின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத் தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கல்விப்பணிப்பாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முதுதுணைப் பதிவாளராகவும் பல பதவிகளை வகித்து 1995 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

இவர் பள்ளியில் பயிலும் காலத்திலேயே தமிழ்மணி, யாழ்ப்பாடி, இந்துசாசனம், கலைச்சுடர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதினார்.

கவிஞர் இ. முருகையன் தமிழுலகுக்கு படைத்து அளித்துள்ள நூல்கள்: நெடும்பகல், நாங்கள் மனிதர், மாடும் கயிறு அறுக்கும், ஒவ்வொரு புல்லும் பிள்ளையும், அது அவர்கள், ஆதி பகவன் (காவியம்) முதலிய கவிதை நூல்களை படைத்து அளித்துள்ளார். வெறியாட்டு (கவிதை நாடகம்), சிந்தனைப் புயல், நித்திலக் கோபுரம், வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், கடூழியம், செங்கோல், கலைக்கடல், கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம், சும சும மகாதேவா, அப்பரும் சுப்பரும், பொய்க்கால், குற்றம் குற்றமே, தந்தையின் கூற்றுவன், கந்தப்ப மூர்த்தியார், இடைத்திரை, குனிந்த தலை, இரு துயரங்கள், கலிலியோ, உயிர்த்த மனிதர் கூற்று, எல்லாம் சரி வரும், நாம் இருக்கும் நாடு, பில்கணியம், வழமை, அந்தகனே ஆனாலும், கூடல் முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

               இதயத்தின் இளவேனில் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), ஒரு வரம் (ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ), உண்மை (மொழிபெயர்ப்பு நாடகத் தொகுதி), கர்வபங்கம் (சொபொகிளிஸின் அன்ரிகனி நாடகத்தின் மொழிபெயர்ப்பு) முதலிய மொழி பெயர்ப்பு நூல்களையும் அளித்துள்ளார். மேலும் காளிதாசன் சமஸ்கிருதத்தில் எழுதிய ‘இறையனர் களவியல் ’ என்னும் கவிதை நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து குமார சம்பவத்தை அடியொற்றி ‘இளநலம் ’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். இன்றைய உலகில் இலக்கியம், ஒரு சில விதி செய்வோம், கவிதை நயம் (பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதியுடன் இணைந்து எழுதியது), மொழி பெயர்ப்பு நுட்பம் -ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

               இ. முருகையன் எழுதிய கோபுரவாசல் (கவிதை நாடகம்) ஆலயப் பிரவேசம் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருந்த காலகட்டத்தில், பழைய நந்தனார் சரித்திரக் கதையைப் பொருத்தமாக மாற்றிச் சமகாலத்துக்குத் தொடர்புடைய நாடகமாக அமைந்துள்ளது.

“இவரது ‘நாடகம் நான்கு’ தொகுதிக்கு சிறப்பொன்றுண்டு. எத்தனையோ நாடகங்கள் மேடையில் பார்க்கும் பொழுது ஓரளவு சுவராஸ்யமாயிருப்பினும், அவற்றை இலக்கியமாக போற்றத்தக்க சிறப்பற்று மறைந்து விடுகின்றன. ஆனால், நடிப்பதற்கென்றே திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு நாடகம், மேடையில் வெற்றி பெற்று அதன் கருத்தாழத்தினாலும், நடைச் சிறப்பினாலும், உணர்வு நலத்தினாலும் நூலாகப் படிப்பதற்கும், மீண்டும் மீண்டும் நடிப்பதற்கும் உகந்ததாகக் கருதப்படுமாயின் அதுவே ஆற்றல் மிக்க நாடக இலக்கியமாகும். பா நாடகங்களுக்கு இப்பண்பு சாலப் பொருந்தும். காத்திரமான சமூக உள்ளடக்கத்தைக் கொண்டனவாயும், உயர் கவிதையின், சொற் செறிவு, தரிசன வீச்சு, தெளிவு, ஓசைச் சிறப்பு முதலிய அம்சங்கள் பொருந்தப் பெற்றனவானவாயும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் தாண்டி உலகப் பொதுவான உணர்வுகளை எழுப்புனவாயும் இந்நான்கு நாடகங்களும் அச்சுருவிலும் வெளிவரக் கூடியனவாய் விளங்குகின்றன. காட்சி நயம் மட்டும் நாடகத்துக்கு உயிரூட்ட முடியாது. கருத்து மேம்பாடு மாத்திரம் நாடகத்தை இயங்க வைத்து விடாது. இரண்டும் இணைவுற்று இயங்குவதே நாடகத்தின் உயிர் நிலையாகும். இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள நாடகாசிரியர்கள் கவிஞராயும் இருப்பது அவர்தம் படைப்புகள் இலக்கியச் செவ்வியுடன் விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. நாடக உணர்வு நன்கு வாய்க்கப்பெற்ற முருகையன் எழுதியுள்ள கவிதைகள் பலவற்றிலும் நாடகப் பண்புகள் அவற்றின் உள்ளியல்பாய் இருக்கக் காணலாம். மேலும், பாராளுமன்ற அரசியலின் போலித்தன்மை, கட்சி முறைகளின் வறுமை, வர்க்க முரண்பாடுகளின் உண்மை, போராட்டங்களின் இன்றியமையாமை என்பன இந்நாடகங்கள் உணர்த்தும் மெய்ப்பொருள்கள்.” ஏன ஈழத்து நாடகவியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

‘கலீழியம் ’ நாடகம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “சுரண்டல் பற்றிய ஒரு விசாரணையின் கலை வெளிப்பாடாக அதனைக் கருதிக் கொள்ளலாம். வர்க்க ஒடுக்குமுறையே அதன் உட்பொருளாகக் கையாளப்பட்டுள்ளது. ஆயின், இனம், நிறம், மதம் தொடர்பான நசுக்கலின் ஏனைய வடிவங்களுடனும் அதனைப் பொருத்திக் காணலாம் என்று இப்பொழுது எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. ‘விடுதலை கிடைத்த பிறகுதான் நிம்மதி’ என்பது ‘கலீழியத்தின்’ உயிர்க்குரல். அந்த விடுதலை தேசிய விடுதலையாயும் இன, மத, வர்க்க ஒடுக்குதல்களினின்றும் மீளலாகிய விடுதலையாயும் இருக்கலாமல்லவா? கவிதை மொழி பல பரிமாணம் உடையதாகையால் இவ்விதமான வியாக்கியானங்களுக்கும் அது இடமளிக்கிறது.”

‘கூடல்’ ஆண், பெண் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறு நாடகமாகும். ‘கோபுரவாசல்’ சாதி ஓடுக்கு முறைக்கு எதிராக இடதுசாரி நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நாடகமாகும்.

“ஆசிய நாடுகள் பலவற்றின் மக்களாட்சி நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் பற்றிய ஒரு குறிப்புரையாக இதைக் கொள்ளலாம். கட்சி வழி ஆளுகின்ற முறைமையால் ஆட்சிப் பொறுப்பாளர்களை அடிக்கடி மாற்றிக்கொள்வதும், அந்த மாற்றம் ஒவ்வொன்றும் அனைத்துத் துயர்களையும் தீர்த்துவிடும் என்ற அதீத நம்பிக்கை வைப்பதும், நம்பிக்கை கைகூடாத நிலையில், மீண்டும், மீண்டும் அந்த மாற்றங்களை இடைவிடாது செய்து கொண்டிருப்பதுமான திண்டாட்ட நிலைமையே இந்த நாடகத்தில் கையாளப்படும் உரிப்பொருள் ” என ‘ அப்பரும் சுப்பரும் ’ எனும் நாடகத்தின் உள்ளடக்கம் பற்றி கவிஞர் முருகையன் கூறியுள்ளார்.

 ‘இன்றைய உலகில் இலக்கியம் ’ என்ற நூலில், இலக்கியம் ஏன்? இலக்கியம் உணர்த்தும் காட்சிகள், பழமையின் பீடிப்பு, மரபின் விரிவு, இரவல் மனப்பான்மையும் மேற்குமய மோகமும், ஆங்கில வழிபாடும் பண்பாட்டு வறுமையும், சரித்திரமும் புனைகனவும், விமரிசன அச்சம், ஆகிய இரு வேறு நோக்குகள், படைப்பும், நுகர்வும் முதலிய தலைப்புகளில் இலக்கியக் கட்டுரைகள் இடம் பெற்று உள்ளது.

 “இலக்கிய வளர்ச்சி, அறிவுத்துறைகளைப் புறக்கணித்த வளர்ச்சியாக இருத்தல் இயலாது. ஏனென்றால், முன்னேறாத ஒரு மொழியின் இலக்கியம் முற்போக்கானதாக அமையாது. மொழி முன்னேற வேண்டுமானால் அதனைப் பேசும் மக்கள் முன்னேற வேண்டும். அந்த மக்களின் பொருளியல், வர்த்தக, விஞ்ஞான, தொழில்நுட்பத்துறைகள் யாவும் முன்னேறியிருத்தல் வேண்டும். இந்தப் பலதுறை முன்னேற்றத்தின் உயிர்ப்புள்ள தொரு கருவியாக அந்த மக்களின் மொழி பயன்படவேண்டும். சுருங்கச் சொல்வதானால் அறிவாயுதமாகவும், அரசியல் ஆயுதமாகவும், வர்த்தகத் தொழில் நுட்ப ஆயுதமாகவும் மொழி பயன்பட வேண்டும். அப்பொழுது தான் அந்த மொழி முன்னேறிய மொழியாகும்.” என்று அந்நூலில் பதிவு செய்துள்ளார்.

மேலும், “மனித சமூகங்களின் மிக நெடிய வரலாற்றுத் தொடர் ஓட்டத்தின் போது பல்வேறு காலங்களில் பல்வேறு மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சியினால் அணுஅணுவாகத் திரண்டு கோவைப்பட்டு வெளிப்பட்ட ஒரு பண்பாட்டு விளை பொருளே மொழி” எனப் பதிவு செயதுள்ளார் முருகையன்.

மேலும், மேற்கண்ட நூலில், தமிழைப் பூசனைப் பொருளாகவும் எல்லாமறிந்த தமிழாகவும் பூட்டி வைத்துப் போற்றுவதன் கேடும், தீங்கும் சுட்டிக் காட்டப்படுகின்றன. முதலாளித்துவ நாகரிகத்தை இறக்குமதி செய்வதன் மூலம் நமது பண்பாட்டிலும், இலக்கியத்திலும், மொழியிலும் நிகழ்ந்துள்ள கலப்பும், ஏற்பட்டுள்ள வறுமையும் முற்போக்குச் சக்திகளால் நீக்கப்பட வேண்டியவையாகும். இலக்கிய வியாபாரிகள் போதை இலக்கியங்களையும் போலி இலக்கியங்களையும் மேலைக் கலாச்சாரத்தோடு ஆங்கில மொழி கலப்போடும் விற்பனை செய்து நமது பாரம்பரியத்துக்கு எவ்வாறு ஊறு விளைவிக்கிறார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

ஓரு மொழி உலகியலின் பல துறைகளிலும் துணிவுடன் புகுந்து, கருத்துக்கள் எவ்வளவு சிக்கலானவையாக இருந்தாலும், எவ்வளவு நுணுக்கமானவையாக இருந்தாலும், அவற்றை அப்படியே அச்சொட்டாகத் திரிபின்றி எடுத்துரைக்கும் வல்லமையைப் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறே மனித உணர்வுகளும் மனநிலைகளும் கொள்ளும் பல்வேறு நுணுக்கமான வேறுபாடுகளையும் மென்மையான விவகாரங்களையும் பிறழ்வின்றியும் கொச்சைப்படுத்தாமலும் செப்பமாயும், நுட்பமாயும், திட்பமாயும் வெளிப்படுத்தும் ஆற்றலையும் மொழி பெற்றிருத்தல் வேண்டும். கணிதம், தருக்கம், மெய்யியல், தொழில் நுட்பம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மிகம், வணிகம், ஆட்சியியல் முதலான அனைத்துத்துறைகளையும் அளாவி, அளந்து, அலசி, அனைத்தையும் தழுவிச் செல்லும் பன்முகமான திறமைபெற்ற மொழியே வளர்ச்சியடைந்த, அபிவிருத்தி பெற்ற, மேம்பாடுற்ற முழுமையான தொடர்புச்சாதனமாகத் திகழும் மனித நாகரிகத்தின் திறம்பட்ட கருவியாகவும், பண்பாட்டு உயர்ச்சியின் துணைக்காரணமாகவும் தொழிற்படும். அந்த வலிமையும் வளமும் வினைத்திறனும் தமிழ் மொழிக்கு வாய்க்கும் வகையில் உழைப்பதுதான் உண்மையான தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய உயிர்ப்புள்ள பணியாகும்” என கவிஞர் முருகையன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழறிஞர்கள் ஆற்ற வேண்டிய பணியை சுட்டிக்காட்டியுள்ளார்.

               முருகையனின் நெடும்பகல், ஆதிபகவன், அது அவர்கள் முதலிய நெடும் பாடல்களில் ‘ மனிதனே ’ மையப்பொருளாக விளங்குகிறான். அவருடைய பெரும்பாலான தனிக் கவிதைகளிலும், பல நாடகங்களிலும் இலங்கையின் சமூக, அரசியல் பிரச்சனைகள் மையப்பொருளாக உள்ளன. மேலும், இவரது படைப்புகள் யாவும் சமூக அக்கறையும், மனித விடுதலை நாட்டமும் கொண்டுள்ளன.

               ‘ நாங்கள் மனிதர் ’ என்ற கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் முருகையன் பின்வருமாறு கூறுகின்றார். “இக்கவிதைகள் எல்லாம் மனிதகுல மேம்பாட்டை நோக்கிய உந்துதல்களாகவும், தேடுதலாகவும், விசாரணையாகவும், அங்கலாய்ப்புகளாகவும், தேற்றமாகவும், தெளிகையாகவும், உறுதியாகவும் உள்ளன. இடையறாத பரிசீலனைகளின் ஆவணங்களாகவும் அமைகின்றன. மனிதனைப் பிணித்துள்ள தளைகள் நீங்க வேண்டும். தடங்கல்கள் அகல வேண்டும். அதன் பேறாக முழுமையான விடுதலை கிட்ட வேண்டும் என்னும் வேட்கையின் மூச்சொலிகளை வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.”

“ஆதி பகவனின் கதை உலகின் கதை ; உலக மனிதனின் கதை ; ஆதி பகவனின் குடும்பம் மனித சமுதாயம். எனவே தான் ‘ஆதிபகவன்’ தனிமனித குடும்பச் சித்திரம் போன்று தொடங்கினாலும், சமுதாயத்தின் வரலாறாக விரிந்து பரந்து சென்று கொண்டிருக்கிறது.” என ‘ஆதிபகவன்’ நூலில் கவிஞர். இ. முருகையன் குறிப்பிட்டுள்ளார்.

               ‘கவிதை நயம் ’ என்னும் நூல் கவிதையின் இயல்புகளையும், கவிதையின் மூலாதாரங்களையும் அறிவதற்கு ஒரு வழித்துணையாக அமைந்துள்ளது. இலக்கியவாதிகளுக்கும், இளங்கவிஞர்களுக்கும் இந்நூல் மிகுந்த பயனுடையதாக உள்ளது.

               இந்நூலில், படைப்பும் நயப்பும், உவமையும் உருவகமும், கற்பனையின் பங்கு, ஓசையின் மேல் ஓசை, சொல்வளம், பரவசமும் பகுப்புணர்வும், கவிதையின் உயிர், பயிற்சிப் பாடல்கள் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

               இவர் எழுதிய, ‘மொழிபெயர்ப்பு நுட்பம் - ஓர் அறிமுகம் ’ என்னும் நூல் மொழி பெயர்ப்பின் தேவையானது நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் மிகவும் அவசியமானது ஆகும். மேலும், மொழிபெயர்ப்பு முயற்சியில் முழுமூச்சோடு இறங்கி செயல்படும் ஒருவர் விரைவில் ஒரு கைதேர்ந்த, சிறந்த மொழி பெயர்ப்பாளராக வளர்ச்சி அடைய மிகவும் பயனுடையது. இந்நூலில், மொழிபெயர்ப்பின் விளக்கங்கள், வரைவிலக்கணங்கள், வகைப்பாடுகள் பயன்பாடுகள், சிக்கல்கள், மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாத மொழி இயல், இலக்கண நியமங்கள் மாத்திரமின்றி மொழி மரபு நுணுக்கங்கள், மொழி பெயர்ப்பின் சமுதாயப் பரிமாணங்கள், மொழியில் நிகழும் மாற்றங்கள், கலைச்சொல் ஆக்கம், கவிதை மொழி பெயர்ப்பு, பல்மொழிப் பயில்வு முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராக செயற்பட்டார் முருகையன். தேசிய கலை இலக்கியப் பேரவையின் ‘தாயகம்’ இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.

               சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற நிலைப்பாட்டுக்கு எதிரான தமிழ் மொழி உரிமைப் போராட்டம், ஒரு பண்பாட்டு அரசியல் போராட்டமாக எழுச்சியடைந்த சூழலில் தான் வீறார்ந்த மொழி உணர்ச்சிக் கவிதைகள் எழுந்தன. அச்சூழலில் கவிஞர். முருகையன் கீழ்க்கண்ட கவிதையை படைத்தார்.

“மொழியே உயிர், முதலாவது.

                               முடிவாவதும் அதுவே    

                               முடியாது –

                               அதை விடவா ?

                               சமர் முரசே அறை தமிழா

                               விழியே மொழி

                               ஒரு போதிலும்

                               மிதிகாலிடல் சகியோம் ”

              

               கவிஞர் இ. முருகையன் 27.06.2009 அன்று தமது 74 ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் அவரது கவிதைகளும், நாடகங்களும் என்றும் நிலைத்து நிற்கும்.

               “முருகையனது கவிதைகள் எப்பொழுதுமே ஆய்வறிவுப் பண்புடையனவாய் இருத்தல் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியதாகும். உணர்ச்சி வெள்ளத்தில் அடிபட்டுப் போகாமல் நிதானித்து விஷயங்களை ஆழமாக நோக்கிக் கவிபாடும் நோக்கும், போக்கும் அவரின் சிறப்பியல்புகள். முருகையனைக் கவிஞர்க்குக் கவிஞன் நான் பெருமையோடு கூறிக் கொள்வதுண்டு. கவிதை உயிர்த் துடிப்புள்ள இலக்கிய வடிவம் என்று நம்மவர்க்கு இக்காலத்தில் உணர்த்திய கவிஞரில் முக்கியமானவர் முருகையன்.” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி புகழ்ந்துரைத்துள்ளார்.

“தற்காகலத் தமிழ்க் கவித வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முக்கியமான கவிஞர்களுள் முருகையனும் ஒருவர்.” என ஈழத்து இலக்கிய விமர்சகர் எம்.ஏ.நுமான் பதிவு செய்துள்ளார்.

“சிறந்த நடையும், கருத்தாழமும், முருகையனின் கவிதைகளிற் பொதிந்திருப்பதைக் கவனிக்கலாம். எங்கள் மத்தியிலும் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் முருகையன் ஆவார்.” எனப் பதிவு செய்துள்ளார் பேராசிரியர் சு. வித்தியானந்தன்.

இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007 ஆம் ஆண்டு முருகையனுக்கு வழங்கப்பட்டது.

               “அவலங்களும் அழுக்குகளும் மேடு பள்ளங்களும் சுரண்டலும் ஒழிந்து மானுடம் மேம்பட வேண்டும் என்ற உறுதியுடன் பாடிய மாபெரும் கவிஞர்” எனப் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் புகழ்ந்துரைத்துள்ளார்.

               “மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை

                நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல் கொடுத்து

               இறுதி மூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களை

               அறுதியாக உரைப்பேனென அரும்பெரும் கவிதைகளில்

               வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்

               துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்கு போல

               அடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்

               விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன் ”.

               எனக் கவிஞர் முருகையன் போற்றி புகழப்பட்டார்.

- பி.தயாளன்

Pin It

“தோட்ட மக்களோடு இவர்கள் உரையாடுவதையோ பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதையோ அனுமதிக்காது தடை செய்தது. தோட்டங்களுக்கு இவர்கள் செல்வதையும் தடை செய்தது இலங்கை ஆங்கிலேய அரசு.

தாங்கொணாத இக்கஷ்டங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றி வழிநடத்த வேண்டுமென்ற நல்ல நோக்கில் தோட்டங்களுக்கு உள்ளே செல்ல முடியாததால் இருவரும் புடவை விற்பனை செய்யும் வியாபாரிகள் போல, பொருள் விற்பனையாளர்கள் போல மாறுவேடம் பூண்டு மக்களிடம் சென்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். தாம் இன்னல்பட்டாலும் துன்பத்தில் உழலும் மக்களை ஈடேற்ற இவ்விருவரும் பெரும்பாடுபட்டனர். மீனாட்சியம்மாள் தோட்ட மக்களிடம் சென்று பத்திரிகைச் செய்திகளை வாசித்து விளக்கி காண்பித்துச் செய்திகளை அறியச் செய்தார். அம்மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களது துன்ப துயரங்களை நீக்கிட பெரிதும் பாடுபட்டார்!

meenachiyammalதீண்டாமை எனும் சாதி வேறுபாடு, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பினரை மிருகங்கள் போல் நடத்துதல், மது அரக்கனின் ஆக்கிரமிப்பு, சீதனக் கொடுமை, பால்ய விவாகம், விதவை மறுமண மறுப்பு, பெண்கல்வி மறுப்பு, பெண் அடக்குமுறை, கற்புக்கலாச்சாரம் போன்ற மிக பிற்போக்கான கொள்கைகளின் மாயையில் சமூகம் இறுக்கமாகக் கட்டுண்டிருந்த காலம். பெண் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கற்பு பறிபோய்விடும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டிருந்த காலம். அக்கால கட்டத்தில் மீனாட்சியம்மாள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என ‘ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள் என்னும் நூலில் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் பதிவு செய்துள்ளார்.

மீனாட்சியம்மாளின் முதல் கணவர் உடுமலை முத்துசாமி கவிராயர். மீனாட்சியம்மாளுக்கும் உடுமலை முத்துசாமி கவிராயருக்கும் பட்டம்மாள் என்ற மகளும், சண்முகம் என்ற மகனும் பிறந்தனர். பட்டம்மாளுக்கும் தேசிகர் சாரநாதன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில ஆண்டுகளில் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் தேசிகர் சாரநாதன் இலங்கைக்குச் சென்றுவிட்டார். இலங்கையில் கோ. நடேசய்யரின் தேசபக்தன் இதழில் பணியில் சேர்ந்தார்.

மீனாட்சியம்மாள் இந்தியாவில் பிற பெண்களைப் போல குடும்ப பெண்ணாக இருந்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் நன்கு புலமை பெற்று இருந்தார்.

சாரநாதன் இலங்கையில் பணிபுரிவதை அறிந்த மீனாட்சியம்மாள் தனது மகள் பட்டம்மாளையும், மகன் சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு கொழும்பு சென்றடைந்தார். தமது மகள் பட்டம்மாளின் வாழ்க்கை இள வயதிலேயே கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்ற தாயுள்ளத்துடன், தமது கணவர் உடுமலை முத்துசாமி கவிராயரிடம் கலந்துபேசி, சாரநாதனுடன் தமது மகளை சேர்த்து வைத்திட வேண்டுமென்ற நோக்கத்துடன் இலங்கைக்குச் சென்றார்.

கொழும்பு புதுச்செட்டித் தெருவில் ‘தேசபக்தன்’ இதழின் அச்சகமும், கோ.நடேசய்யரின் அலுவலகமும் அமைந்து இருந்தன. அங்கு மீனாட்சியம்மாளும், அவரது பிள்ளைகளும் தங்கினர். அப்போது நடேச்சய்யரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. கோ.நடேசய்யர் கொழும்பு நகரில் 1926 ஆம் ஆண்டு மீனாட்சியம்மாளை திருமணம் புரிந்து கொண்டார்.

மீனாட்சியம்மாளை 1929 ஆம் ஆண்டு முதல் ‘தேச பக்தன்’ இதழின் ஆசிரியப் பொறுப்பில் நியமித்தார் நடேசய்யர். இதழ் நடத்தும் பணியில் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கினார். ‘தேசபக்தன்’ இதழை தின இதழாக கொண்டு வந்தார். நடேசய்யர் அரசியல் மற்றும் தொழிற்சங்க பணிகளில் கூடுதலாக ஈடுபட்டார். அச்சுகோர்ப்பவர்கள் வேலைக்கு வராத சமயத்தில் சில பெண்களை வைத்து அச்சு கோர்த்து இதழை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார் மீனாட்சியம்மாள்.

கவிதையில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சியம்மாள் தேசபக்தன் இதழில் கர்சியா ஆதிமூர்த்தியின் பாடல்களையும், கவிஞர் வாணிதாசனின் கவிதைகளையும், சந்தசரபம் முத்துசாமிக்கவிராயரின் தேசிய கீதங்களையும் அதிகமாக பிரசுரித்தார்.

தேசபக்தன் இதழில் ‘இந்தியாவின் முன்னேற்றம்’ குறித்து தொடர் கட்டுரை எழுதினார். அத்தொடர் கட்டுரையில் சுதந்திரத்திற்கும், செல்வப் பெருக்கத்திற்கும் சமூக சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ‘தேசபக்தன் ‘இதழில் பெண்களுக்குச் சம சுதந்திரம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

“தங்களைப் பெற்ற தாய்மார்களுக்கோ, தங்களுடைய சகோதரிகளுக்கோ சம உரிமை கொடுக்க எண்ணாத ஆண் பிள்ளைகளால் உலக சமாதானம் எவ்விதம் ஏற்படும்? சமத்துவ உணர்ச்சியும், சகோதர உணர்ச்சியும் இல்லாத ஆண்பிள்ளைகளால் நடைபெற்று வரும் அரசாங்கங்கள் ஒருவரை ஒருவர் அடக்கியாள எண்ணுமே தவிர, எவ்விதத்தும் காருண்யம் காட்டமாட்டாது. ஆகவே அரசாங்க விஷயத்திலும் பெண்கள் அதிக பொறுப்பு ஏற்றுக்கொண்டாலன்றி உலக சமாதானமே ஏற்படாது என்பது திண்ணம்.

ஆண்பிள்ளைகள் நம்மை ஒர் சட்டிப்பானை போலவும், அடிமைகள் போலவும், விலைக்கு வாங்கவும், வேண்டியவர்களுக்கு இரவல் கொடுக்கவும் உதவி வந்திருக்கின்றார்கள். பூர்வீகக் காலத்தில் கிரேக்கர்கள் தங்கள் பெண்சாதிகளையும், பெண்களையும் விற்பதுண்டாம். அவர்களுடைய சிநேகதர்களுக்குத் தேவைப்பட்ட காலத்தில் இரவலும் கொடுத்துதவுவார்களாம். தன்னுடைய சீடனுக்கும், அல்கியா பீடிஸ் என்பவருக்கும், சாக்ரடீஸ் என்னும் மகாமேதாவியே தம் சம்சாரத்தை இரவல் கொடுத்தாராம். அவரே கொடுத்தார் என்றால் பிறரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? பிறர் பெண்சாதியை இரவலாக வாங்கிக் கொள்வதோ, பிறருக்கு பெண்சாதியை இரவல் கொடுப்தோ மிகவும் கௌரவம் என்று எண்ணினார்கள்.

பிறர் பெண்சாதியை பெறமுடியாத ஒருவன் மிகவும் கேவலமானவனாக கருதப்படுவது வழக்கம். இவ்வழக்கம் அக்கால யூதர்களிடத்தும், பாபிலோனியர்களிடத்தும் இருந்து வந்திருக்கின்றது.

இந்தியாவிலும் பெண்களை விலைக்கு வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. பெண்களாலேயே நரகம் கிடைக்கிறது என்றும், அவர்களுக்கு யாதொரு உரிமையும் கொடுக்கலாகாதென்றும் ஏற்பாடு செய்து கொண்டனர். இதனாலேயே பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல் போயிற்று. ”

“இந்துமதப் பிரகாரம் கலியாணம் ஒரு மத காரியம். அவள் வேறு மதத்தை தழுவினால், தன் புருஷனை விட்டு பிரிய உரிமை பெறுகின்றாள். அதுவும் அவள் புருஷன் அவளுடன் வாழ மறுத்தால் தான் . அவள் வாழ்வதாகச் சொன்னால் அதுவும் முடியாது. சமீபத்தில் ஒரு வங்காளச் சகோதரி முஸ்லீம் ஆகி, புருஷனையும் முஸ்லீம் ஆகும்படி கேட்க, அவன் மறுக்க அவளின் இந்து விவாகம் ஹைகோர்ட்டால் ரத்தாக்கப்பட்டது என்று பத்திரிகைகளில் வாசித்திருக்கலாம்.

மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும், மிகவும் அவசியமான நிலைமைகளிலும் விவாகரத்துக்கு இடம் கொடுத்து அவர்கள் மறுவிவாகம் செய்து கொள்ள அனுமதிக்காவிட்டால், இந்து மதம் பாழாகுவதைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? முஸ்லீம் சட்டம் பலதாரமணத்தை அங்கீகரிக்கின்றது. கிறிஸ்துவ மதம் விபசாரியென்று பெண்களை விலக்கி வைக்க இடம் கொடுக்கின்றது. இவ்வித நிலைமையில் இந்தியாவில் அதிலும் இந்து பெண்களின் நிலைமை மிகவும் தாழ்ந்திருக்கின்றது என்று சொல்லக்கூடும். குடும்பத்தில் கீழ்த்தர நிலைமையிலே அவள் இருக்கின்றாள். குடும்பத்துக்குள்ளாகவே நமக்கு இவ்வளவு வித்தியாசம் கற்பிக்கும் பட்சத்தில் நமது நாடு முன்னேறுவது எப்படி? ஸ்திரிகள் சம சுதந்திரம் உடையவர்கள், சக்தி உருவைப் பெற்றவர்கள், அவளே வீட்டுக்கு ராணி, அவளின்றி மோட்சமடைய முடியாது என்று பல விதமாய்ச் சொல்லியும் பயன் என்ன? தற்கால நிலையிதுவே” என்று பலவித உதாரணங்களைக் காட்டி, தன் கருத்தை வலியுறுத்தும் அவர் கட்டுரையின் முடிவில் மீண்டும் பெண்களுக்கு பகிரங்க அழைப்பு விடுகின்றார்.

“நமது நலவுரிமையைக் காத்துக் கொள்ள நாமே முன்வர வேண்டும். நமக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்க நிர்வாகத்திலும், சட்டமியற்றுவதிலும், நமக்கு பாத்தியதை கிடைக்கும்படியோ அல்லது நமது செல்வாக்கு சட்டசபைக்குள் வியாபிக்கும்படி செய்து நாம் நமது நாட்டில் சம சுதந்திரம் அடைய வேண்டும். இது விஷயமாய் எல்லா சகோதரிகளும் என்ன செய்யப்போகின்றார்கள் நமது குரல் சட்ட சபையில் வியாபிப்பதற்கு.”

‘தேசபக்தன்’ இதழில் ஆசிரியர் தலையங்கள் எழுதினார். ‘ஸ்திரிபக்கம்’ என்று பெண்களுக்காக இதழில் ஒரு பக்கத்தை ஒதுக்கி பெண்களின் விழிப்புணர்வுக்காகப் பல கட்டுரைகள் எழுதினார்.மீனாட்சியம்மாளின் எழுத்தாற்றலைக் கண்டு கொழும்பு வாழ் தமிழர்கள் 1930 ஆம் ஆண்டு ‘தேச பந்து’ என்னும் வார இதழுக்கு ஆசிரியராக்கினார்கள். இவ்வார இதழ் இலங்கை அரசை விமர்சித்து பல கட்டுரைகளை வெளியிட்டது.

1928 ஆம் ஆண்டு ஆட்டுப்பட்டித் தெரு 70 ஆம் நம்பர் தோட்டத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் குழுமியிருந்தனர். கூட்டத்துக்கு நடேசய்யர் ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்தார். அவரை இடைமறித்து சுமார் பத்து பேர் கொண்ட சிங்களக் காடையர் கூட்டம் தாக்கியது. நடேசய்யர் அச்சமடையவில்லை, ஜிந்துபிட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரில் “ பகல் நேரத்தில் கொழும்பு நகரில் சட்ட நிரூபணசபை அங்கத்தினர் ஒருவருக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது இலங்கையின் சனநாயத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல்” என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை ஆங்கிலேய அரசு நடேசய்யரின் உயிருக்கு ஆபத்து நேராதிருக்க வேண்டி பிஸ்டல் துப்பாக்கி வைத்துக்கொள்ள சிறப்பு அனுமதி வழங்கியது. காவல் நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு நடேசய்யர் வந்தார். நடேசய்யர் தாக்கப்பட்டதையறிந்த கூட்டத்தினர் கொதித்தெழுந்தனர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த நடேசய்யருடன் வந்த இந்திய பெண்மணி மேடை ஏறினார். அவர் உரையாற்றத் தொடங்கியதும் கூட்டத்தில் உணர்ச்சி அலைகள் பரவியது.

“பல்லாயிரக்கணக்கில் கூடி இருக்கிறீர்கள். உங்கள் தலைவர் இப்படி தாக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதல் நடத்திய குண்டர்களின் தலைவன் குணசிங்காவின் சங்கத்தில் இனியும் இருக்கப் போகிறீர்களா? வெட்கம், மானம், ரோஷம் உள்ளவர்கள் தானா நீங்கள்? தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே. இப்படி வாழ்வதைவிட நாம் இந்தியா போய் மானத்தோடு வாழ்வோம்.” என்று முழங்கினார் அப்பெண்மணி. “சாண் வயிறு தானே நமக்கு சரீரமெல்லாம் வயிறோ? ஊண் உண்டு வாழ்வதிலும் நாம் உயிர் துறக்கலாமே” என்ற பாடலை பாடி முடித்தார்.

“எதிரியின் தடித்தனத்தை அடக்குவதற்கு செய்ய வேண்டிய காரியத்தை எவர் செய்யாவிட்டாலும் அவர் தேசத்துரோகியாவார். நீங்கள் தேசத்துரோகியாவதற்கு விரும்பிகின்றீர்களா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். “துரோகியாவதற்கு நாங்கள் எவரும் தயாரில்லை” என்று கூட்டத்தினர் பதில் கூறினார்.

அவரது வீராவேசமான பேச்சும், காதுக்கினிய உணர்ச்சிமிக்கப் பாடலும் எதிரி குணசிங்காவை அயர வைத்தன. அந்த வீரப்பெண்மணிதான் மீனாட்சியம்மாள் ஆவார்.

அன்றைய கூட்டத்தில் மீனாட்சியம்மாள் காட்டிய தீவிரப் போக்கும், உணர்ச்சிப் பூர்வமான பாடலும், வீர உரையும் நடேசய்யரின் நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இலங்கையிலிருந்த இருபத்திரெண்டு ஆண்டுகளில் மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமல் இரவு பகல் பார்க்காது இலங்கை இந்தியர்களின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்த கோ.நடேசய்யருக்கு பக்கத்துணையாக மீனாட்சியம்மாள் விளங்கினார்.

“ஆண்களுக்கு சமமாக பெண்களும் சம்பாதிக்கும் புதுமை தோட்டப் பகுதிகளில் தான் காணக்கிடைக்கின்றது. பெண்கள் உழைக்காதிருக்க மனம் வைத்தால் தோட்டங்கள் எல்லாம் காடுமண்டிவிடும். இதை பெண்கள் உணர்ந்து தங்களுக்கு சம சம்பளம் பெறுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்.”

“பெண்கள் நலினமானவர்கள், கொழுந்தாய்வதற்கு அவர்களின் நலினம் உதவுகின்றது. வெயிலிலும், மழையிலும், கடும் குளிரிலும் அவர்கள் உழைத்து மாய்வதை கண்டும் காணாததைப் போல் இருக்கும் கல் நெஞ்சர்கள் கங்காணிகளாக இருக்கும் நிலைமை மாற வேண்டும். பெண் பிள்ளைகளின் வேலையை மேற்பார்வை செய்ய பெண் கங்காணிகள் நியமிக்கப்பட வேண்டும்.” என்று மீனாட்சியம்மாள் பெண்களுக்கு சம சம்பளம் வழங்கப்பட வேண்டும், பெண் கங்காணிகள் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கைகளை முன் வைத்து குரல் கொடுத்தார்.

“பாட்டு மக்களை தட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தளராத நம்பிக்கை கொண்டு செயல்பட்டார். தோட்டச் சூழலில் ஒதுக்கித்தள்ளமுடியாத விதத்தில் நேரடியான உற்பத்தியில் ஈடுபடுவர்களாக பெண்கள் உள்ளனர். உணவு, எரிபொருள், உறைவிடம் உடை என்பவைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பெண்களது பங்களிப்பு உரிய இடத்தையும் , முக்கியத்துவத்தையும் பெறுவது மிக அவசியம்.

தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் வாழுகின்ற பெண் தொழிலாளர்கள் உழைக்க மறுத்தால் இலங்கையின் முழுப் பொருளாதாரமும் முடங்கிவிடும். கல்வி கற்பிப்பதில் நமது கூடிய கவனம் பெண்களின் பால் இருக்க வேண்டும். குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலை என்பவற்றுக்கப்பால் தொழில் தளத்தில் ஆண்களின் ஆட்சியை வேரறுக்க வேண்டும்” மேற்கண்டவாறு மீனாட்சியம்மாள் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தீவரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“ சட்டமிருக்குது ஏட்டிலே- நம்முள்
சக்தியிருக்குது கூட்டிலே
பட்டமிருக்கு வஞ்சத்திலே – வெள்ளைப்
பவர் உருக்குதுநெஞ்சத்திலே
வேலையிருக்குது நாட்டிலே- உங்கள்
வினையிருக்குது வீட்டிலே”

என்று மீனாட்சியம்மாள் பாடிய தொழிலாளர் சட்டக்கும்மியைக் கேட்டு மெய்மறக்காதவர் யாருமில்லை. மகாகவி பாரதியாரின் பாடல்களை மலையகமெங்கும் பாடிப் பரப்பிய பெருமைக்குரியவர் மீனாட்சியம்மாள்.

மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை 1931 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் கோ. நடேசய்யர். அந்தத் தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர்களை அணிதிரட்டி அறிவூட்டி உணர்வு கொடுக்கும் தளபதியாக மீனாட்சியம்மாள் திகழ்ந்தார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. நடேசய்யருடன் சேர்ந்து மீனாட்சியம்மாள் பொது மேடைகளிலும், பேருந்து நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச் சந்தைகளில் தோன்றி திறந்த காரை மேடைபோல் அமைத்து உரையாற்றினார்கள். அவர்களது உரைகளைக் கேட்டு தொழிலாளர்கள் புத்துணர்வு பெற்று, சங்கமாக அணிதிரண்டு, போராடுவதற்கு தொழிற்சங்கத்தில் சங்கமித்தனர்.

டொனமூர் ஆணைக்குழு 1929 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைபுரிந்த போது சர்வஜன வாக்குரிமைக்காக அந்த ஆணைக்குழுவில் நடேசய்யர் சாட்சியளித்த போது மீனாட்சியம்மாள் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்துடன் சேர்ந்து இயங்கியதுடன் பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி ‘தேசபக்தன் ’ இதழில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். ஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதன் முதலாக அனைவருக்கும் ஒரே நேரத்தில் சர்வஜன வாக்குரிமை கிடைத்த நாடு இலங்கை. அதற்கு காரணம் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்தின் விடாப்பிடியான தொடர் போராட்டத்தின் மூலம் 1931 ஆம் ஆண்டு பெண்களுக்கும் சேர்த்து வாக்குரிமை வழங்கப்பட்டது.

இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்கு கோ. நடேசய்யருடன் சென்று, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நேரில் கண்ட மீனாட்சியம்மாள் நெஞ்சுருகினார். ‘கரும்புத் தோட்டத்திலே ’ என்ற பாரதியாரின் பாடல் அவரின் நினைவுக்கு வந்தது.

“தேயிலைத் தோட்டத்திலே –ஆ
தேயிலைத் தோட்டத்திலே
தேயிலைத் தோட்டத்திலே அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே – இந்த
மாதர் தன் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்குகின்றனரே –அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற்கில்லையோ –செக்கு
மாடுகள் போல் உழைத் தேங்குகிறார்
நாட்டை நினைப்பாரோ –எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி
அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே ! ”

என்ற பாடலை எழுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பாடுவார். பாடல் வரிகளை கேட்டு அவர்கள் விம்மி விம்மி அழுதனர். மீனாட்சியம்மாளும் விம்மி அழுதார்.

இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோ. நடேசய்யரும், மீனாட்சியம்மாளும் துணையாக விளங்கினார்கள்.

“இலங்கைத் தொழிலாளர்களின் தொண்டிற்காகவே இவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கின்றார்கள் என்றும், நடேசய்யரை ‘காந்தி அய்யர் ’ என்றும் மீனாட்சியம்மாளை ‘காந்தி அம்மாள்’ என்றும் தமது இலங்கைப் பயணத்தின் போது எழுதிய கட்டுரையில் கல்கி குறிப்பிட்டுள்ளார் ”

‘இந்திய தொழிலாளர் துயரச்சிந்து’ என்ற மக்களை ஈர்க்கும் மீனாட்சியம்மாள் இயற்றிய பாடல்களை, 1930 ஆம் ஆண்டு சகோதரி அச்சகம் வெளியிட்டது. தேயிலைத் தோட்டங்களில் அடிக்கடி நடக்கும் கூட்டங்களுக் வந்து பாரதிபாடல்களை படிக்கும் பெண்மணி இயற்றிய பாடல்கள் என்ற உணர்வில் தேயிலைத் தோட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் அதை வாங்கிப் படித்தனர்.

கோ.நடேசய்யர் தம்பதியினரின் செயற்பாடுகளால் ஆத்திரமுற்ற தோட்டத்துரைமார்கள் அய்யருக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விட்டனர். ‘ஊழியன’ என்ற பெயரில் ஒரு எதிர்ப்பு இதழை வெளியிட்டனர். அய்யர் ஒரு பார்ப்பனர். அவரை நம்பி தோட்ட மக்கள் போராட நினைப்பது தற்கொலைக்கு ஒப்பானது என்று பிரச்சாரம் செய்தனர்.

1931 ஆம் ஆண்டு அரசாங்க சபைத் தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டார். தமது தேர்தல் நிறமாக சிவப்பை தேர்ந்தெடுத்தார். அவருடைய துண்டு பிரசாரங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போது மீனாட்சியம்மாள்

“ பார்ப்பான் பார்ப்பானென்று – நீங்கள்
பல தடைவ சொன்னாலும்
பார்ப்பான் அல்ல வென்று, அய்யர்
பறையடித்துச் சொல்லலையே ! ”

என்ற பாடலை பாடி தமது கணவரின் நிலைப்பாட்டினை விளக்கினார்.

“ பனையைச் சேர்ந்தானோ அல்லது
பழங்கள் விற்றானோ
தொழிலாளர் கஷ்டங்களை
தொலைக்க பாடுபட்டவரை
பழியாகப் பேசி நீங்கள்
பச்சை நோட்டீஸடித்து மெத்த
பசப்புவதேனோ அம்மா
உசுப்புவதேனோ ! ”
என்று மக்களைப் பார்த்து பாடினார்.

“தொழிலார்களுக்கு அறிவூட்டுவதற்கும் அவர்களது அடிமை நிலையை உணர்த்துவதற்கும், உணர்ச்சிப் பூர்வமாக அவர்களை ஈடுபாடு கொள்ளச் செய்யவும் மீனாட்சியம்மாள் பாடல்களை பயன்படுத்தியுள்ளார்.

எளிமையான நடையில் பெரிய விடயங்களை எடுத்து இயம்பி உள்ளார். பாடல்களை மனோரஞ்சகமான மனதைக் கவர்ந்த சினிமாப் பாடல்களின் மெட்டுக்களில் அமைத்துள்ளார். இதுவும் அவரது யுக்தி, மக்களுக்காக, மக்கள் மொழியில், மக்கள் இசையில் மொழிந்துள்ளார். வாதங்களை அறுத்து, உறுத்து எட்டுப் பக்கத்தில் எல்லாவற்றையும் விண்டு விண்டு கூறியுள்ளார். மந்திரிமாரை எள்ளி நகையாடுகின்றார். அவர்களது சுயநலத்தை கடிந்துரைக்கின்றார். தொழிலாளரைத் தட்டி எழுப்பி கூவி அழைத்து போருக்கு அழைக்கின்றார்.” என மீனாட்சியம்மாளின் பாடல்களை மறு பிரசுரம் செய்து வெளியிட்ட செல்வி திருச்சந்திரன் அதன் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘ இந்திய தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ என்ற நாடக நூலை 1937 ஆம் ஆண்டு கோ. நடேசய்யர் வெளியிட்டார். அந்நூலில் மீனாட்சியம்மாள் இயற்றிய பல பாடல்கள் இணைக்கப் பெற்றிருந்தன.

மீனாட்சியம்மாள் மக்களிடையே செல்வாக்குள்ள பாடல் மெட்டுகளில் தன் பாடல்களை இயற்றினார். ஜெய மாயாவதாரனே, சந்திர சூரியர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஆடு பாம்பே, அய்யா ஒரு சேதிக்கேளும், தங்கக் குடமெடுத்து, கும்மி, கல்லார்க்கும் கற்றவர்க்கும், அய்யோ ஈதென்ன அநியாயம் என்று தமது ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை’ என்ற பாட்டுப் புத்தகத்தில் மெட்டுக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும், இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக் கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்த்திவிடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா. ” என ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தமது பாடல்கள் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“ ஏழைக் கண்ணீர் வடிய தாமும் பார்க்கலாமா
ஏளனம் செய்வோரை நம்மில் சேர்க்கலாமா
கோழைகளல்ல வென்று கூறி கூறியே நாம் கூடுவோம்.”

என்ற பாடல் வரிகளின் மூலம் ஏழைக் கண்ணீர் சிந்துவதை நாம் வேடிக்கைப் பார்த்திட கோழைகள் அல்ல, கூடிப் போராடுவோம் என அழைக்கிறார்.

மகாத்மா காந்தியடிகள் 1929 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார் இந்திய வம்சாவளியினர் தங்களை விடுவிக்க வந்த ரட்சகனாக எண்ணி தாம் வாழும் தோட்டங்கள் தோறும் அவருக்கு சிலைகள் செய்து கும்பிட்டனர். இதை அறிந்த கோ.மீனாட்சியம்மாள்.

“ பொதுஜன சேவையே புனித வாழ்க்கை
புகன்றிடுவோம் நாமே”

“தேச விடுதலை சேவை புரிவதே
திடமெனக் கொள்வோமே
நம் நேசன் காந்தி மகான் நிர்மாணத்தினை
நினைவினில் கொள்வோமே. ”

என்று பொதுமக்களுக்கு தொண்டு செய்வது புனிதமானது, காந்தியின் நிர்மாணத்திட்டங்களை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறத்தியுள்ளார்.

“பாய்க் கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்
பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்,
தாய் நாடென்றெண்ணி யிருந்தோம் -இவர்கள்
தகாத செய்கையைக் கண்டு மனமிக நொந்தோம். ”

புலிகள் தான் வாழ்ந்திட்ட காடு – அது இப்போ
பொழில் சூழும் அழகிய சிங்கார நாடு,
பலியிதற் கிந்திய ஆடு –களைப் போல்
பல்லாயிரம் பேர்கள் உயிரிதற்கீடு.

அஞ்சா தெதிர்த்துமே நின்று –நமக்கிங்கே
அதிக சுதந்திரம் தரவேண்டுமென்று,
நெஞ்சி லுரத்துடன் நின்று –போராடி
நேயரே வருகுவீர் திடத்துடனின்று. ”

இந்தியர்களை இந்தியாவிற்கு விரட்ட வேண்டுமெனக் கூறி திரிந்த மந்திரிகளின் பிரச்சாரத்தை எதிர்த்துப் பாடிய பாடல் இது. மேலும், இப்பாடலில் பாய்மரத்தில் வந்ததையும், வரும் வழியில் பலர் உயிரிழந்ததையும், புலிகள் வாழ்ந்த காட்டினை, மக்கள் வாழும் அழகிய நாடாக்குவதற்கு செய்த தியாகங்களையும், எங்கள் மக்கள் இலங்கையை தாய் நாடென்று எண்ணியிருந்தோம், இப்போது இந்தியாவிற்கு எங்களை விரட்டுகிறார்களே ஆயிரக்கணக்கில் ஆடுகளைப் போல் பலியாகியுள்ளனர் என்பதையும், அஞ்சாமல் நின்று அநியாயத்துக்கு எதிராக நெஞ்சத்துணிவுடன், நேர்மைத் திறனுடன் போராடுவோம் என அறைகூவி அழைக்கின்றார்.

“காட்டைத் திருத்தினது இந்தியன்னாலே நீங்கள்
கற்றுக் கொண்டு பேசுவதும் இந்தியன்னாலே
நாட்டைத் திருத்தினதும் இந்தியன்னாலே
நன்றி கெட்டுப் பேசுவதாகாது சொல்மேலே
தீட்டின மரத்திலே கூரு பார்க்கிறீர்களா இந்தியர்
திட்டத்தை யினிமேலும் எற்குறீர்களா ?
போட்டியிட்டுச் சண்டைக்கே யாள் சேர்க்கிறீர்களா ?
போதங் கெட்ட புத்தியையே போக்குகிறீர்களா ?”

என்ற பாடலில் காட்டைத் திருத்தி நாட்டை உருவாக்கியது இந்திய வம்சாவளியினர். அவர்களது உரிமையை மறுத்து சண்டைக்கு ஆள் சேர்ப்பதை கண்டித்துள்ளார்.

“இந்தியத் தொழிலாளர்கள் இங்கு வந்தார்கள்
இலங்கையைச் செழிக்கவே செய்த தந்தார்கள்
மந்திரிகள் மயக்கத்தில் மதி மறந்தார்கள்
மனம் வந்தபடி சட்டம் பிறப்பித்தார்கள்”

என்ற பாடலில் சிங்கள மந்திரிகள் செய்திடும் சூழ்ச்சிகளையும், மனம் போன போக்கில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக சட்டம் இயற்றியதையும் சாடியுள்ளார்.

“ யானை புலி கரடி சிங்கத்துக்கு
ஆயிரமாயிரம் பேர்
வேதனை கொண்டுணர்வு ஆனதுதான்
வீண் போக மாட்டாதே !
இந்தியா விட்டு நாங்கள் தொழிலுக்கு
இலங்கைக்கு வந்த போது
சொந்தமாய் வேண்டியதை எங்களுக்கு
சொரிவோ மென்றீர்கள். ”

என்னும் பாடலில் இந்தியாவிலிருந்து எங்களை இலங்கைக்கு தேயிலைத் தோட்ட தொழில் செய்ய அழைத்து வந்த போது, இலங்கை பிரஜைக்குள்ள அனைத்து உரிமைகளும் உங்களுக்கும் தரப்படும் என்று கூறிவிட்டு, இப்போது நன்றி கெட்டத்தனமாக நடப்பது நியாயமா என்கிறார். அநுராதபுர காட்டு வழியில் யானை, புலி, கரடி, சிங்கம் முதலிய மிருகங்களுக்கு ஆயிரக்கணக்கில் எங்கள் உறவுகளை பறிகொடுத்து விட்டு தோட்டங்களுக்கு வந்து உழைத்ததை உங்கள் நெஞ்சம் அறியாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

“ சிங்கள மந்திரிகள் கூற்று மிக
சீரு கெட்டதென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று திந்திய
சமூகம் நெருப்பாய் வரும் காற்று.
நன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்
நியாயமென்ன சொல்லு வீரே
இன்றியமையாத வொரு போரே செய்ய
இடமுண் டாக்குகிறீர் நீரே !
சத்யா க்ரகமே யெங்கள் அம்பு அது
சரிசெய்யு மென்பதையே நம்பு
வித்யா விவேகியிடம் வம்பு செய்தால்
வீணிலழிந்து போகும் தெம்பு !

என்ற பாடலில் சிங்கள மந்திரிகளின் நன்றிகெட்ட தனத்தை தோலுரித்துக் காட்டுகிறார்.

கோ. ந. மீனாட்சியம்மாள் தொழிலாளர்களுடன் நின்று சேர்ந்த பாடினார். தொழிலாளர்கள் அவரது பாடல்களைப் பாடினார். தேடித்தேடி அவரது பாடல் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கினார்.

“இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி. மீனாட்சி அம்மையினரைக் காணலாம்” எனக் கலாநிதி என்.எம்.பெரேரா பதிவு செய்துள்ளார்.

“ஒரு முழு நேர தொழிற்சங்கவாதியாகவும், சமூக அரசியல், பெண்ணிய செயற்பாட்டாளராகவும், பத்திரிக்கையாளராகவும், பாடலியற்றும் கவிஞராகவும், பாடகராகவும் ஒரே நேரத்தில் செயற்பட்ட ஒரு பெண் ஆளுமை இலங்கை வரலாற்றில் முதற் பெண்ணாகவும், ஒரே பெண்ணாகவும் மீனாட்சியம்மையாரைத் தான் காண முடியும்.” என இலங்கை எழுத்தாளர் என்.சரவணன் புகழ்ந்துரைத்துள்ளார்.

“தோட்டம் தோட்டமாகச் சென்று நடேசய்யருக்குத் துணையாக நின்று கருமங்கள் ஆற்றியவர் மீனாட்சி அம்மையாரே. அய்யரின் முன் கோபத்துக்கு ஈடு கொடுத்து, அவரது முரட்டுச் சுபாவத்தைக்கரை புரண்டோடாது கட்டிக்காத்து காட்டாறாகத்தடம் புரளவிடாது தடுத்து நிறுத்தி, தடைகளைத் தகர்த்தெறியும் சக்தியாக உருவாக்கியவர் மீனாட்சி அம்மையாரே ஆவார். இந்தியாவிலிருந்த இலங்கைக்கு வந்து, இலங்கைத் தீவை தமது தாயகமாக மதித்து சேவையாற்றிய நடேசய்யரும், மீனாட்சியம்மாளும் காலத்தால் மதிக்கப்பட வேண்டியவர்கள் என மலையக எழுத்தாளர் சாரல் நாடன் பதிவு செய்துள்ளார்.

1942 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பிய மீனாட்சியம்மாள் 1943 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் காலமானார்.

- பி.தயாளன்

Pin It