‘பூமிப் பந்து, முழுவதிலும் அமைதி ஏற்பட வேண்டும்! போரற்ற புது உலகம் பூக்க வேண்டும்! ஆயுதங்களுக்குத் தடை போட வேண்டும்! ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும்! ஆயுதமற்ற சமுதாயம் அவணியில் மலர வேண்டும்! - என்றெல்லாம் எண்ணித் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அருமைப் பெண்மணி ‘ஆல்வா மைர்டல்!!

               alv myrdal ‘ஆல்வா, பெண்விடுதலைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும், பெண்களின் சமுத்துவத்திற்காகவும் மிகத் தீவிரமாகப் பாடுபட்டார்.

                ‘ஆல்வா மைர்டல் - ஸ்வீடன் நாட்டிலுள்ள உப்சலா என்னுமிடத்தில் 1902 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் தேதி பிறந்தார். இவர் தமது பட்டப்படிப்பைப் பல்கலைக் கழகத்தில் 1924 ஆம் ஆண்டு முடித்தார். இவர் கன்னர் மைர்டல் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

                இவரும், இவரது கணவரும் இணைந்து ஸ்வீடன் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கடுமையாக உழைத்தனர்.

                இவர் தமது கணவருடன் இணைந்து ‘மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் நெருக்கடிக்கள் (The population problem in crisis) என்ற நூலை எழுதி இருவரும் வெளியிட்டனர். குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளின் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றில் உள்ள குறைபாடுகளை எப்படிக் களைவது என்பதை அறிக்கையாகவும் வெளியிட்டனர்.

                சுவீடன் நாட்டின், ‘சமத்துவ ஜனநாயகக் கட்சியின் (Social Democratic party) மிக முக்கிய அங்கத்தினராக இணைந்து செயல்பட்டார். போர்முடிந்த, 1943 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த முக்கியமான பணியை இவரிடம் கட்சி அளித்தது. யுத்தத்திற்குப் பின்னர் சர்வதேச சீரமைப்புப் பணிகள் மற்றும் உதவிகள் செய்வதற்கான குழுவின் தலைவராக அரசு இவரை நியமித்தது. 

                இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு தமது நேரத்தையும், உழைப்பையும் சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கினார். ‘ஐக்கிய நாடுகள் அமைப்பின் – (UNO) சமூக நலக்கொள்கை வகுப்பதற்கான பிரிவில் இரண்டாண்டுகள் தலைமைப் பதவி வகித்து சிறப்பாகப் பணியாற்றனார். பின்னர் யூனஸ்கோவில் சமூக அறிவியல் பிரிவின் தலைவராக 1950 முதல் 1955 வரை அய்ந்தாண்டுகள் பணியாற்றினார்.

                ஸ்வீடன் நாட்டின் தூதராக இந்தியாவில் 1955-ல் நியமனம் செய்யப்பட்டார். மேலும் ஸ்வீடன் நாட்டின் பிரதிநிதியாக ஜெனிவாவில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக ஆல்வா 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                ஸ்வீடன் நாட்டின் அமைச்சரவையில் 1966 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். ஆயுத ஒழிப்பைத் தமது முக்கியக் கடைமையாகக் கருதினார். ஜெனிவாவின் ஆயுத ஒழிப்புக் கமிட்டியில் 1973 ஆம் ஆண்டு வரை அங்கம் வகித்தார். மேலும் ஐக்கிய குடியரசு நாடுகளின் அரசியல் கமிட்டியில் உறுப்பினராக இடம் பெற்றார். ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கும், ஆயுத ஒழிப்பிற்கும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

                ஜெனிவாவில் நடைபெற்ற ஆயுதக் குறைப்புக் குறித்து பேச்சு வார்த்தை விபரங்களைத் தொகுத்து ‘ஆயுதக் குறைப்பு விளையாட்டு (The game of disarmament) என்ற நூலை வெளியிட்டார். அந்நூலில் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் அமெரிக்காவும் சோவியத் இரஷ்யாவும் ஆயுதங்கள் உற்பத்தி செய்வதைக் கண்டித்து எழுதினார். ஆயுதத் குறைப்பு சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இதுவே சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

                அணிசேரா நாடுகளின் தலைவராக இருந்து, வல்லரசு நாடுகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் இரஷ்யா ஆகிய நாடுகள் தங்களின் ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என குரல் கொடுத்தார். ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தைக்கப் பிறகு பல அறிஞர்களைச் சந்தித்துப் பேசினார், அதன் அடிப்படையில் அறிவியல் நீதியாகவும், தொழில் நுட்பம் மூலமாகவும் ஆயுதப் பரவல் மற்றும் உற்பத்தியை எப்படித்தடுப்பது என்பதை அறிந்து உலகிற்கு அறிவித்தார். ஆயுதக் குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக அறிஞர்களையும் அணிதிரட்டினார். மேலும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International peace Research Institute) என்ற அமைப்பு உருவாக முக்கியமான பங்காற்றினார். இந்த நிறுவனத்தின் மூலம் ஆயுத உற்பத்தியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஆயுதக் குறைப்பின் அவசியம் குறித்தும் முக்கிய விவாதத்தைப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் மத்தியில் ஏற்படுத்தினார். ஆயுதக் குறைப்புக் குறித்து நூல்களும், இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார்.

                ஆல்வா, ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1962 முதல் 1973 வரை ஆயுதக் குறைப்புக் கமிட்டியில் அங்கம் வகித்தார்.

                அமைதிக்கானப் இவரது பணியைப் பாராட்டி பல பட்டங்களும், விருதுகளும் அளிக்கப்பட்டன. அமைதிக்கான மேற்கு ஜெர்மனியின் பரிசு 1970 ஆம் ஆண்டு இவருக்கும், இவரது கணவர் கன்னர் மைர்டலருக்கும் வழங்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமைதிப் பரிசை 1980 ஆம் ஆண்டிலும், ஜவஹர்லால் நேரு விருதை 1981 ஆம் ஆண்டிலும் இவர் பெற்றார்.! நார்வே மக்களின் அமைதிப்பரிசும் இவருக்கே வழங்கப்பட்டது.!

                உலகில் அமைதி வேண்டி இவர் ஆற்றிய தொண்டிற்காக உலகின் மிக உயர்ந்த பரிசான ‘நோபல் பரிசு – 1982 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசை மெக்சிகோவைச் சேர்ந்த அல்போன்சா கார்சியா ரோபலஸ் என்பவருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டார்.

                “நான் பெறும் பரிசுகளைவிட, நான் மனித சமூகத்திற்குச் செய்யும் தொண்டுதான் பெரியதுஎன உலகிற்கு அறிவித்த உன்னதமான பெண்மணி ‘ஆல்வா!

‘உலக அமைதிக்காகப் போராடியஉன்னதப் பெண்மணி ஆல்வா மைர்டல்!

- பி.தயாளன்

Pin It

இந்தியக் கலைகள் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. இந்திய சிற்பக் கலை ஆரிய மக்களால் வளர்க்கப்பட்டுள்ளது எனத் தவறான வரலாறு ஆங்கில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய சிற்பக்கலை திராவிட மக்களின் திறமையால் வளர்க்கப்பட்டது என்னும் உண்மை மறைக்கப்படுகிறது. எனவே, இந்தியக் கலைகள் குறித்த உண்மை வரலாறுகளை வெளிக்கொணர பழைய தமிழ் நூல்களை ஆய்வு செய்து, தமிழிலேயே வெளியிட வேண்டும். தமிழ் மக்கள் தமது பண்டைய வரலாற்றுச் சிறப்புக்களை கற்றறிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ‘கலைப்புலவர்’ எனப் போற்றப்படும் க. ரத்தினம்.

Kalaipulavar Navarathinamயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த த. கந்தையாப்பிள்ளை- பொன்னம்மாள் வாழ்விணையருக்கு மகனாக 15.09.1898 அன்று பிறந்தார். வெஸ்லியன் மிஷனால் நடத்தப்பட்ட தமிழ்ப்பாட சாலையில் தமது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். கொழும்பிலுள்ள வர்த்தகக் கல்லூரியில் பயின்று வர்த்தகக் கல்வியில் பட்டம் பெற்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றினார்.

யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் வர்த்தகக் கற்கை நெறியை ஆரம்பித்தார். கல்லூரியின் நூலக வளர்ச்சிக்கும், சித்திர கைவேலை முதலியவற்றின் வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.

மகேஸ்வரிதேவி என்பவரை 1934 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவரது மனைவி மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றவர். தமது உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரிடமும், தமிழ்நாட்டுத் தாகூர் எனப் போற்றப்பட்ட ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர், இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதி அளித்துள்ளார்.

க. நவரத்தினம், தமிழ்க் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்துதல், தமிழ் மக்கள் அனைவரும் அவற்றை அறிந்திடச் செய்தல், திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை தமிழ் நூல்களின் வாயிலாக ஆய்வு செய்து உண்மை வரலாற்றைக் கூறுதல் ஆகிய நோக்கங்களை தமது கலை வரலாற்று எழுத்தியலுடனும், தமிழ் மொழியினூடும் கட்டமைத்தார்.

பண்டைக் காலம் முதல் இந்திய நாட்டிற்கும் இலங்கைக்கும் சமயம், சமூகம். கலாச்சாரம் ஆகிய துறைகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தமையினால் இலங்கையின் கலைகளில் இந்தியக் கலைகளின் அம்சங்கள் பல காண முடியும்.

நெசவுத் தொழில், ஆபரணத் தொழில், உலோக வேலைகள் போன்றவற்றை மீண்டும் மறுமலர்;ச்சி பெறச் செய்திட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘யாழ்ப்பாணக் கலைகளும் கைப்பணிகளும்’ எனும் கட்டுரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.

ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றிற்கு அளித்த முக்கியத்துவம் கட்டிடக் கலைக்கோ, நடனக் கலைக்கோ வழங்கப்படவில்லை. மேலும், கிராமியக் கலை வடிவங்கள் பற்றியோ, நாடகங்கள், கூத்துக்கள் பற்றியோ ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் கலை வளர்த்த நிறுவனங்களாக நாடக சபாக்கள், குழுக்கள் விளங்கின. இசை நாடக மரபினைப் பேணிய நிலையங்களுள் ஒன்றாக ‘சரஸ்வதி விலாசகான சபா’ விளங்கியது. இந்நிலையம் 05.12.1930 அன்று துவக்கப்பட்டது.

இலக்கியம், தத்துவம், ஓவியம், நாகரிகம், வரலாறு இவற்றில் இந்தியாவும் இலங்கையும் அடைந்த முன்னேற்றங்களை, வளர்ச்சிகளை ஆராய்ந்தறிதல், இவற்றை இக்கால ஆராய்ச்சி முறையில் விளக்குதல். கலைகளின் புத்துயிர்ப்புக்கும், நாட்டின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளுதல் முதலியவற்றை முக்கிய நோக்கங்களாக ‘சரஸ்வதி விலாசகான சபை’ கொண்டிருந்தது. இந்த நிலையத்தின் செயலாளராக க. நவரத்தினம் செயற்பட்டார்.

இந்த நிலையத்தில் இலக்கியம், தத்துவம், சமயம், பொருளாதாரம் போன்றவற்றில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிலையத்தின் மூலம், ‘ஞாயிறு’ எனும் தமிழ் இதழ் இரு திங்களுக்கொரு முறை வெளியிடப்பட்டது.

இந்நிலையத்தில் சு. நடேசுப்பிள்ளை, வி. இராமசாமி சர்மா, சி. கணேசையர், சுவாமி ஞானப்பிரகாசர், த. குமாரசாமிப்பிள்ளை, சி.முருகையர், சி.எஸ். கணபதி அய்யர், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், பண்டிதர் சி. கணபதிபிள்ளை, சுவாமி விபுலானந்தர் முதலிய தமிழறிஞர்கள் விரிவுரை நிகழ்த்தினார்கள்.

“இந்திய சிற்பக் கலையினது வனப்பைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல்கள் பல ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன. அவ்ஆங்கில நூல்களின் ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றத் தமிழில் சிற்பக் கலையினை குறித்து ஒரு நூல் எழுதப்படின் அது தமிழ்மொழி அறிவு ஒன்றே உடையவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்” என ‘தென்னிந்திய சிற்ப வடிவங்கள்’ என்னும் நூலின் உருவாக்கம் பற்றி க. நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.

க. நவரத்தினம் எழுதிய, ‘இலங்கையிற் கலை வளர்ச்சி’ என்னும் நூல் 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்நூல் வெளியீட்டு விழாவில் க. நவரத்தினத்திற்கு ‘கலைப்புலவர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

இலங்கையில் உள்ள கண்டியில் 1943 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வமத கோட்பாடுகளின் மாநாட்டில் ‘சைவ சித்தாந்தம்’ பற்றி விரிவுரை நிகழ்த்தினார்.

புதுடெல்லியில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய எழுத்தாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, “சமயம் நிலைத்து நிற்க வேண்டுமானால் நவீன பண்பாட்டிற்குத் தக்கபடி அதில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மனித குல சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும், மனிதர்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் இணக்கத்தையும் உண்டாக்கவும் சமயம் உதவுதல் வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

கலைப்புலவர் க. நவரத்தினம் சமூகத்தில் அக்காலத்தில் நிலவிய சீர்;கோடுகளை துணிவுடன் சுட்டிக்காட்டியதுடன், அவற்றைக் களைந்திடும் செயலிலும் ஈடுபட்டார். தீண்டாமையைக் கண்டித்தும், மது ஒழிப்பினை வலியுறுத்தியும் ஈழகேசரி, வீரகேசரி, இந்து சாதனம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

ஆனைப்பகுதியில் 1920 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்து, சம வாய்ப்பு அளித்த விபுலானந்த அடிகளாருடன் இணைந்து பாடுபட்டார்.

தமிழ்நாட்டில் கலை வளர்ச்சி, இலங்கையில் கலை வளர்ச்சி, இந்திய ஓவியங்கள், நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர், நடராஜ் வடிவம் முதலிய தலைப்புகளில் க. நவரத்தினம் வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையில் வடமாகாண மதுவிலக்குச் சபை, கைத்தொழில் கண்காட்சி திட்டக்குழு, யாழ்ப்பாண கலை கைப்பணிகள் கழகம், யாழ்ப்பாண நூதன கலை ஆலோசனைக்குழு, இலங்கை அரசின் கலைக் கழக சிற்ப ஓவியப் பிரிவு முதலிய அமைப்புகளில் அங்கம் வகித்து செயற்பட்டார்.

கலைப்புலவர் க. நவரத்தினம், இந்திய ஓவியங்கள், இலங்கையில் கலை வளர்ச்சி, யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும்; முதலிய கலை குறித்த நூல்களையும், கணக்குப் பதிவு நூல், உயர்தர கணக்குப் பதிவு நூல், இக்கால வாணிப முறை முதலிய பாட நூல்களையும் எழுதி அளித்துள்ளார். மேலும் மதம், கலாசாரம், கலை குறித்து ஒன்பது ஆங்கில நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

கலைப்புலவர் க. நவரத்தினம் தமது அறுபத்து நான்காவது வயதில் 1962 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 

- பி.தயாளன்

Pin It

 பல்கலைக் கழக நிலையில் முதல் தமிழ் பேராசிரியர் பதவி வசித்தவர். தமிழ் இசை மரபை மீட்டெடுத்த யாழ் நூலின் ஆசிரியர். ஈழத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர். தமிழின் புகழை உலகுக்கும், உலகின் சிறப்புக்களை தமிழுக்கும் எடுத்துரைத்தவர். ஈழத்தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டைச் சுட்டுகின்ற சின்னமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற அறிஞராக விளங்கியவர். தமிழ் பேசும் மக்கள் அனைவரது பண்பாட்டு வாழ்வில் முக்கியமானவராக விளங்கியவர் விபுலாநந்த அடிகள்.

                Vibulanandarஈழத்தில் மட்டகளப்புக் காரைத்தீவில் சாமித்தம்பி - கண்ணம்மை வாழ்விணையருக்கு மகனான 27-03-1892 அன்று பிறந்தார். இயற்பெயர் மயில்வாகனன்.

                நல்லாசிரியர் குஞ்சித்தம்பியிடம் ஆங்கிலம், தமிழ், கணிதம் முதலியவற்றை கற்றார். காரைத்தீவில் அமைந்திருந்த சைவப் பாடசாலைத் தலைமையாசிரிராக விளங்கிய புலோலியூர் நா. பொ. வைத்தியலிங்க தேசிகரிடம் தமிழும், சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் கல்முனை மெதடிஸ் உயர்தர ஆங்கிலப் பள்ளி, மட்டக்களப்பு ஆர்ச்-மிக்கேல் கல்லூரி முதலிய கல்வி நிலையங்களில் பயின்றார்.

கொழும்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றார். 1915 ஆம் ஆண்டு தொழிற் கல்லூரியில் சேர்ந்து பயின்று பட்டையப் பட்டம் (Diplamo) பெற்றார். இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று பி. எஸ். சி. பட்டம் பெற்றார். மேலும் பண்டிதர் எஸ். கந்தையாபிள்ளை,       எஸ். கைலாசபிள்ளை, வித்துவான் சி. வை. தாமோதரம்பிள்ளை முதலியவர்களிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார்.

மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் (தமிழ்ப் பண்டிதர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற முதலாவது இலங்கை மாணவர் விபுலாநந்த அடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிப்பாய் இந்துக் கல்லூரி முதல்வராக 1920 ஆம் ஆண்டு பதவியேற்று பணிபுரிந்தார். மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், திருக்கோணமலை இந்துக் கல்லூரி முதலியவற்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயத்தை 1929 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். மேலும், யாழ்வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், திருக்கோணமலை இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்தியாலயம் முதலிய கல்வி நிறுவனங்களை விபுலாநந்த அடிகள் உருவாக்கினார். ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயில இலவச விடுதிகளை அமைத்தார்.

மாணிப்பாய் இந்துக் கல்லூரியில் விபுலாநந்த அடிகள் முழுமைபெற்ற அறிவியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். அக்கல்லூரியில் அறிவியல் பாடங்கள், லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிப்பாடங்கள் முதலியவற்றை தாமே கற்பித்தார்.

விபுலாநந்த அடிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம, லத்தீன், கிரேக்கம், யவனம், வங்கம், சிங்களம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தர் 1917 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை புரிந்தார். அவருடன் விபுலாநந்த அடிகள் கலந்துரையாடினார். தேச சேவை, சமூக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி முதலியவற்றில் அக்கறை காட்டிய சுவாமி சர்வானந்தரின் கருத்துக்கள் அடிகளாரை ஈர்த்தன.

அடிகளார் துறவியாகும் நோக்குடன் சென்னை ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றார். மடத்தில் துறவிக்குரிய வழிமுறைகளைக் கடைபிடித்தார். அவருக்கு மடத்தினரால் பிரபோத சைதன்யர் என்னும் பிரமச்சரியப் பெயர் வழங்கப்பட்டது.

அடிகளாரின் கல்வியறிவையும், மொழித்திறனையும் அறிந்து, மடத்தின் திங்கள் இதழ்களான ஸ்ரீஇராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), வேதாந்தகேசரி (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்;டார்.

சுவாமி சிவானந்தா, பிரபோத சைதன்யருக்கு 1924 ஆம் ஆண்டு ஞானாபதேசம் செய்து சுவாமி விபுலாநந்தா என்ற துறவறப் பெயரைச் சூட்டினார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தினர் கிழக்கு இலங்கையில் உள்ள தமது கல்வி நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பினை அடிகளாருக்கு வழங்கினார்கள்.

விபுலாநந்த அடிகள் மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு முதலியப் பணிகளை ஸ்ரீஇராமகிருஷ்ண இயக்கம் மூலம் மேற்கொண்டார்.

சுவாமி விவேகானந்தரின் ஆங்கிலக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் யாவும் அடிகளாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள பேலூரில் 1926ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீஇராமகிருஷ்ண மட மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். “விவேகானந்தர் ஏந்திய ஞானதீபத்தை தமிழரிடையே உயர்த்திச் செல்லும் ஒப்பற்றத்துறவி விபுலாநந்தர்” என்று போற்றப்பட்டார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் அவரது ஆங்கிலக் கட்டுரைகளின் ஒரு தொகுதியை Ancient Thought for Modern Man என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.

மேலும், மதுரை தமிழ்ச் சங்கத்தினர் ‘தமிழ்த்தாத்தா’ உ. வே. சா அவர்களின் பதிப்புப்பணி, தமிழிலக்கியப்பணி ஆகியவற்றைப் பாராட்டி ‘பொற்கிழி’ வழங்கிச் சிறப்பித்தனர். அந்த விழாவில் இலங்கைப் புலவர்களின் சார்பாக விபுலாநந்த அடிகள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.

விபுலாநந்த அடிகள் மட்டக்களப்பு பகுதிகளில் புலவர் மன்றங்கள், நூல்நிலையங்கள், தமிழ்க் கழகங்கள் நிறுவி செயற்பட்டார்.

மதுரை தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று 1924 ஆம் ஆண்டு ‘நாடகத் தமிழ்’ என்னும் பொருள் பற்றிச் சிறப்பாக உரை நிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

கிழக்கு இலங்கைக் கல்வி நிலையை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க இலங்கை அரசு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. அக்குழுவின் தலைவராக விபுலாநந்த அடிகள் செயற்பட்டார். அப்பொழுது ஊர்தோறும் பள்ளிகள் அமைக்க பாடுபட்டார்.

இலங்கையின் தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் தொடக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசுக்கு’ விபுலாநந்த அடிகள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தியடிகள் இலங்கைக்கு வருகைபுரிந்த போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் விபுலாநந்த அடிகள் வரவேற்பு அளித்தார்.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் பச்சையப்பன் கல்லூரியில் 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற கலைச் சொல்லாக்க மாநாட்டிற்கு விபுலாநந்த அடிகள் தலைமை தாங்கி நடத்தினார். கலைச் சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராக பங்கு பெற்று பௌதிகம் பற்றிய பகுதிக்கு வேண்டிய மிகச் சிறந்த கலைச் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார். இது கலைச் சொல்லகராதியின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.

தமிழ்ப் பல்கலைக் கழக குழுவொன்று, 1926 ஆம் ஆண்டில் இந்தியாவில் நியமிக்கப்பட்டது. இராமநாதபுரம் அரசர் ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கி, விபுலாநந்த அடிகள் மதுரைக்குச் சென்று சாட்சியம் கூறினார். அதன் பயனாகவே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. செட்டி நாட்டரசர் ராஜா சர். அண்ணாலை செட்டியார் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்காக, அண்ணாலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக 1931 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். யாழ் குறித்த ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டித் தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய போது. பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய யாழ் என்ற இசைக் கருவியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

பழந்தமிழரது பரம்பரைச் சொத்தான சகோடயாழ், செங்கோட்டி யாழ், பேரியாழ், சீறியாழ், வில்யாழ், மகரயாழ் என்னும் இசைக்கருவிகள் குறித்த ஆய்வில் மூழ்கினார்.

சிலப்பதிகாரம் என்னும் இலக்கியத்தை அறிவியல் கண்கொண்டு நோக்கினார். 1. பாயிரவியல், 2. யாழுறுப்பியல், 3. இசை நரம்பியல், 4. பாலைத்திரிபியல், 5. பண்ணியல், 6. தேவாரவியல், 7. ஒழிபியல் என்னும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டு பழந்தமிழிசைச் செல்வமும் ‘யாழ் நூல்’ என்னும் பெயரோடு தமிழன்னைககு பெருமைச் சேர்த்தார்.

முத்தமிழின் நடுநாயகமான இசைத் தமிழ்ச் சிறப்பைக் காட்டும் யாழ் நூலானது கரந்தைத் தமிழ்ச சங்கத்தின் ஆதரவில், கும்பகோணம் அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயில் அரங்கில், நற்றமிழ் புலவர்கள் குழுமிய பேரவையில் 05. 06. 1947 அன்று வெளியிடப்பட்டது. அந்த விழாவில் ஒளவை. துரைசாமிப்பிள்ளை, அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் க. அவினாசிலிங்கம் செட்டியார், அ. சிதம்பரம் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், இரா. பி. சேதுப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரம், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ‘யாழ்நூல்’ இசைத் தமிழ், இயற்றமிழ், விஞ்ஞானம், கணிதம் ஆகிய அறிவுத் துறைகளெல்லாம் கலந்து குழைந்து எழுந்த தமிழமுதம் என அறிஞர்களால் போற்றப்படுகிறது.

விபுலாநந்த அடிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த காலத்தில் திருவேற்களத்திலே தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். மேலும் அங்கு பணியாற்றிய போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடாவடிகளை வெளிப்படையாக எதிர்த்து குரல் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்காக மண்டபங்களும் விடுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த வளாகமே பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கக் கொடிகளை பறக்கவிட்ட போது, விபுலாநந்த அடிகள் மட்டும் தமது விடுதியில்; தேசியக் கொடியை உயர்த்தி பறக்கவிட்டார். விபுலாநந்த அடிகளாரின் சுதந்திர உணர்வைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.

‘மதங்க சூளாமணி’ என்னும் நாடகத் தமிழ் நூலை விபுலாநந்த அடிகள் படைத்து அளித்துள்ளார். இந்நூல் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலெல்லாம் இருக்கும் நாடகங்ளின் சிறப்பைக் காட்டுகிறது.  தமிழ் நாடக இலக்கண அமைதிகளை ஷேக்ஸ்பியரது ஆங்கில நாடகங்களைக் கொண்டு விளங்கும் பொருத்தத்தினை எடுத்து விளக்குவதாக உள்ளது. வடமொழி நாடக இலக்கண ஆசிரியரான தனஞ்சயனராது தசரூபகத்தைத் தமிழருக்கு விளக்கிக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இந்த நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது இதன் மூலம் தமிழில் நாடக இலக்கண நூல் இல்லை என்ற பெருங்குறை நீங்கியது.

விபுலாநந்த அடிகள் 1943 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியாரகப் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வித்துறை பாடக்குழு,தேர்வுக் குழு, கல்விநிலை ஆராய்ச்சிக் குழு ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

விபுலாநந்த அடிகள், உமாமகேஸ்வரம், கலைச் சொல்லாக்கம், பண்டைத் தமிழர் இசைக் கருவிகள், விண்ணுலகம், தமிழ் மொழியின் தற்கால நிலைமையும் தமிழர் தம் கடமையும், ஆங்கிலவாணி, மேற்றிசைச் செல்வம், நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், யவனபுரத்து கலைச் செல்வம், பூஞ்சோலைக் காவலன் முதலிய உடைநடை நூல்களை படைத்து அளித்துள்ளார்.

கணேச தோத்திர பஞ்சகம், குமாரவேணவ மணிமாலை, கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை, கங்கையில் விடுத்த ஓலை, ஈசன் உவக்கும் மலர்கள் முதலிய கவிதை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

விஞ்ஞான தீபம், நம்மவர் நாடடு ஞான வாழ்க்கை, விவேகானந்தர் பிரசங்கங்கள், விவேகானந்த ஞானதீபம், கருமயோகம், இராசயோகம், ஞானயோகம், பதஞ்சலி சூத்திரம் முதலிய மொழி பெயர்ப்பு நூல்களையும் அளித்துள்ளார்.

திருக்குறள் குறித்து The Book of Books in Tamil Land என்னும் நூலையும், தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து The Origin and Growth of Tamil Literature என்னும் நூலையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

விபுலாநந்த அடிகளின் கட்டுரைகள், சொற்பொழிவுகள், கவிதைகள், நாடகங்கள் உள்ளடக்கிய தொகுப்பு நூல்களாக விபுலாநந்தத்தேன், விபுலாநந்த வெள்ளம், விபுலாநந்த செல்வம், விபுலாநந்த உள்ளம் முதலிய தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.

                தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் பண்பாட்டு வாழ்வில் முக்கியமானவராக கடந்த நூற்றாண்டில் தமது பெயரை நிலைநாட்டியவர். தலை சிறந்த சமுக சேவையாளர் மக்களிடையே சமத்துவம் ஏற்படவும், சமுகம் சீர்திருத்தம் பெறவும் பாடுபட்டவர் விபுலாநந்த அடிகள்.

                கல்வி வளர்ச்சிக்காகவும், தமிழ் இசைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கியத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட விபுலாநந்த அடிகள் தமது ஜம்பத்து அய்ந்தாவது வயதில் மட்டக்களப்பில் 19-07-1947 அன்று காலமானார். 

- பி.தயாளன்

Pin It

                ஜெர்மனி நாட்டு வணிகக் குடும்பத்தில் 1845 ஆம் ஆண்டு பிறந்தார் ராண்ட்ஜென். பள்ளியில் படிக்கும் போதே இயற்கையின் மீது பற்று கொண்டு , ஒய்வு நேரத்தை தனிமையான கிராமங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த காடுகளிலும் சுற்றித் திரிந்தார்.

                Roentgenஇயற்பியலில் பட்டம் பெற வேண்டுமென விருப்பம் கொண்டு பல்கலைக்கழகத்தில் 1865 ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது, எனவே, அங்குள்ள பாலிடெக்னிக்கில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவரை இயந்திரவியல் பிரிவில் சேர்த்துக் கொண்டனர். முயன்று பயின்று பட்டம் பெற்றார்.

பாலிடெக்னிக்கில் பயிலும்போது இவருக்கு ஆசிரியர்களாகவிருந்த ‘க்ளவ்ஸியஸ்’ மற்றும் ‘குண்ட்’ ஆகிய இருவரும் ராண்ட்ஜென்னுக்கு வழிகாட்டியாக விளங்கினர். அவர்கள் வழங்கிய பல ஆய்வுக் கட்டுரைகளும், விளக்க விரிவுரைகளும் இயற்பியல் பாடத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது

                ஸுரிச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ (முனைவர்) பட்டம் பெற்றார் ராண்ட்ஜென்!. இவரது ஆய்வு, ‘வாயுக்களின் வெப்ப குணாதிசயம்’ பற்றியது ஆகும். பின்னர் ‘படிகங்களின் வெப்பக் கடத்தி பண்பு’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

                திட மற்றும் திரவப் பொருட்கள் மீதான ஆய்வுகளின் விளைவாக, படிகங்கள் மற்றும் பளிங்குப் பொருட்களின் மீது ராண்ட்ஜென் மேற்கொண்ட ஆய்வுகள், இயற்பியல் ஆய்வு வரலாற்றில் இன்றளவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. படிகங்கள் மற்றும் பளிங்குகள் முதலிய பொருட்களின் மின் கடத்தும் பண்பு, வெப்பம் கடத்தும் பண்பு ஆகியன குறித்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். மேலும், வேறு வேறு அடர்த்தி கொண்ட இரு திரவங்களின் அல்லது வாயுக்களின் சந்திப்பில் வெவ்வேறு அழுத்தங்களை வரிசையாய் கொடுத்து, அச்சந்திப்பில் உருவாகும் ஒளி விலகலின் அளவுகளை அட்டவணைப்படுத்தினார்.

                மின்காந்த அலைகளுக்கு உட்படுத்தப்படுவதால் எதிரெதிர் குணம் கொண்ட இருவேறு ஒளிக்கதிர்களின் இயக்கத் தளத்தில் தற்காலிகமாக ஓர் ஒற்றுமையை ஏற்படுத்துவது குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவைகளாகும்.

                நீர்த்துளிகளில் விழும் எண்ணெய்த் துளிகள் அந்தப் பரப்பில் எவ்விதம் பரவுகிறது. அந்த இயக்கம் என்ன என்பது குறித்தும் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், உலக இயற்பியல் துறையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவைகளாகும். இவ்வாறாக, வாயுக்கள் மற்றும் திரவங்கள், அவற்றின் மீது கொடுக்கப்படும் அழுத்தங்கள், இதனால் அவற்றின் மின்காந்த வெப்ப குணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அவரது ஆய்வுகளில், 1895-ஆம் ஆண்டு வியத்தகு முன்னேற்றம் நிகழ்ந்தது.

                அக்காலத்தில், மிக உயர்ந்த மின் அழுத்தத்தை உருவாக்கவல்ல ஒருவகை மின் சுருளின் எல்லைக்குள், சில அபூர்வான வாயுக்களை நிரப்பினால் அவை மின்சாரத்தை உருவாக்கும் அதுதான் ‘காத்தோட் கதிர்’ என அறியப்பட்டிருந்தது. “மின் சுருளுக்கு அளிக்கப்படும் உயர் மின் அழுத்தமானது முழுக்க அடைக்கப்பட்ட காற்றுப் புகாத ஒரு குழாய்க்குள் நிகழும்”எனப் பல அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? என்ற வினா ராண்ட்ஜென் மனதில் ஏற்பட்டது.

                எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு நாளைக்குள் நடைபெற்றுவிடுவது இல்லை. கண்டுபிடிப்புகள் நிகழ பல ஆண்டுகள் உழைத்திட வேண்டும் என்பது ராண்ட்ஜென்னின் புதிய கண்டுபிடிப்பிலும் உறுதி செய்யப்பட்டது.

                பரிசோதனைக் குழாயைச் சுற்றிலும் கனமான கறுப்பு தடுப்பு கொண்டு மூடி, துளிகூட ஒளிபுகாவண்ணம் செய்து, மின்சுருள் பரிசோதனையை முழு இருட்டான ஓர் அறைக்குள் வைத்து நடத்தினார். அப்பரிசேதனையின் விளைவால் கதிர்களின் பாதையில் நீட்டப்படும் ‘பேரியம் ப்ளேட்டினோஸைனைட்’ பூசப்பட்ட ஒரு சிறுதட்டு தகதகவென மினுமினுப்பதைக் கண்டறிந்தார். பரிசோதனைக் குழாயிலிருந்து சில மீட்டர் துhரம் தள்ளி வைக்கப்பட்டாலும் கூட, அதில் மினுமினுப்பு ஏற்படுவதைக் கண்டார் ராண்ட்ஜென்.

                ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பலவிதமான தடிமன்கள் கொண்ட பொருட்களைக் கதிர்வீச்சின் குறுக்கே வைக்கும்போது அவற்றில் விதவிதமான மாறுபட்ட மினுமினுப்புகள் உண்டாவதைக் கவனமாகப் பதிவு செய்தார். இந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக நடந்து வந்த தமது மனைவியை அழைத்து, மனைவியின் கையைக் கதிர்வீச்சுப் பாதையில் புகுத்தி சிறிது நேரம் அப்படியே அசையாமல் நிறுத்தி வைக்கச் செய்தார். அப்போது உருவான பிம்பத்தைப் புகைப்படச் சுருளில் பதிவு செய்து கொண்டார். பின்னர், புகைப்படச் சுருளை படமாக்கிப் பார்த்தார், அதில் அவரது மனைவியின் கை எலும்புகளும், அவர் அணிந்திருந்த மோதிரமும் மட்டும் தெளிவாகப் பதிந்திருந்தன. கைப்பகுதியின் சதைகளனைத்தும் கிரகணம் போலத் தெளிவில்லாமல் தெரிந்தன. இதுதான், முதன்முதலாகப் பதிவாகி அறிவிக்கப்பட்ட ‘ராண்ட்ஜென் பதிவு’ ஆகும்.

                ‘காத்தோட் கதிர்களின் பாதையில் ஏதேனும் பொருளை வைத்தால், அப்போது ஏற்படும் மோதலின் காரணமாக மேலும் புதுக் கதிர்கள் உருவாகின்றன’ – எனத் தமது கண்டுபிடிப்புக்கான விளக்கத்தை அளித்தார் ராண்ட்ஜென்.

                அது என்ன கதிர்? ராண்ட்ஜென் மட்டுமல்ல, அப்போதிருந்த அறிவியலாளர்களும் கூட விளக்கம் தர இயலவில்லை. ‘ஒளியைப் போன்ற குணாதிசயங்களை பெற்றிருக்கும் மின்காந்தக் கதிர்கள் இவை’ என மட்டுமே அறிவித்தனர். எனவே, ஒன்றும் புரியாத காரணத்தினால், இப்புதுக் கதிகள் ‘எக்ஸ் கதிர்கள்’ என்று பெயர் சூட்டப்பெற்றன .

                ‘எக்ஸ் கதிர்கள்’ கண்டுபிடிப்பின் மூலம் ராண்ட்ஜென்க்கு உலக அரங்கில் சிறப்பு ஏற்பட்டது. பல விருதுகள், பரிசுகள், கேடயங்கள், அரசுப் பதவிகள், வெகுமதிகள், அங்கீகாரங்கள் அவரைத் தேடி வந்தன. ராண்ட்ஜென் பெயர் தெருக்களுக்கும், நகரத்திற்கும் சூட்டப்பட்டது. உலகெங்கும் அவரது புகழ் பரவியது. எக்ஸ் கதிர்களுக்கு ‘ராண்ட்ஜென் கதிர்கள்’ என்ற பெயர் சில காலம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை ராண்ட்ஜென்னே மறுத்தார். எதேச்சையாக நடந்துவிட்ட ஒரு கண்டுபிடிப்புக்கு நான் உரிமை கொண்டாட முடியாது என அறிவித்தார். மேலும், அக்கதிர்களின் பெயர் ‘எக்ஸ்’ ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும் என அறிவித்தார்.

                இயற்பியல் துறைக்கு ஆற்றியுள்ள ஈடு இணையற்ற பங்ளிப்புக்காககவும், பல ஆய்வுகளுக்கு களமமைத்துத் தரும் வகையில் ஒரு புதுக் கதிரினைக் கண்டுபிடித்து அளித்தமைக்காகவும் 1901-ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்றார் ராண்ட்ஜென்.

                அவரது கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் மகுடமாக இன்றும் விளங்குகிறது.

- பி.தயாளன்

Pin It

அருணாசலம் யாழ்ப்பாணம் மானிப்பாலைச் சேர்ந்த பொன்னம்பலம் முதலியார் - செல்லாச்சி வாழ்விணையாருக்கு மகனாக 14.09.1853 அன்று பிறந்தார்.

சர் முத்துக்குமாரசுவாமி இவரது தாய்மாமன். அருணாசலம் இராயல் அக்கடாமியில் கல்வி பயின்றார். இப்போது அது இராயல் கல்லூரியாக விளங்குகிறது. அங்கு பயிலும் போது இவர் இராணி புலமைப் பரிசைப் பெற்றார்.

Ponnambalam Arunachalamஆங்கிலச் சர்வகலாசாலை புலமைப் பரிசை 1870 ஆம் ஆண்டு பெற்று, இலண்டன் கேம்பிரிட்ஜிலுள்ள ‘கிறைஸ்ட்’ கல்லூரியில் உயர்தரக் கல்வி பெறச் சென்றார். தமது அறிவுத் திறமையால் ‘பவுண்டேஷன்’ புலமைப் பரிசைப் பெற்றார். புராதன இலக்கியங்களிலும், கணிதத்திலும் வல்லுநராகிப் பெரும்புகழ் ஈட்டினார். கிறைஸ்ட் கல்லூரி ஆவணங்களில் “சாமர்த்தியமுள்ள கணித சாஸ்திர நிபுணனும் புராதன இலக்கிய அறிஞனும்’ என அருணாசலத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடைய மாமன் சர் முத்துக்குமாரசுவாமி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்படி இவரை வற்புறுத்தினார். வழக்கறிஞராவதே அருணாசலத்தின் விருப்பமாயிருந்தது. ஆனால் அவரது மாமன் வற்புறுத்தியதால் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இலங்கையில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நபர் அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை திரும்பிய அருணாசலம் 1875 ஆம் ஆண்டு, கொழும்பிலுள்ள அரசாங்க மாகாண அதிபதி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். சில காலம் கண்டிப் பகுதியில் காவல் நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். பின்பு இலங்கையின் பல பகுதிகளில் நீதிபதியாக பணிபுரிந்தார். மட்டக்களப்புப் பகுதியில் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்தார்.

அக்காலத்தில் சர் ஆதர் கோடன் இலங்கை அதிபராக இருந்தார். அருணாசலத்தின் திறமையை அறிந்து, தலைமை பதிவு அலுவலகத்தில் ஜெனரல் பதவியில் நியமித்தார். அருணாசலம் தலைமை பதிவு அலுவலகத்தில் நிலவிய ஊழல்களை ஒழித்தார். அலுவலக நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார்.

“அருணாசலம் பதவி ஏற்கும் பொழுது தலைமை பதிவு அலுவலகத்தில் பல ஊழல்கள் தாண்டவமாடின. உறுதிகள் பதவு செய்வதென்றால் நீண்ட கால தாமதமும் அலைக்கழிவும் ஏற்பட்டன. காணிப்பதிவு சம்பந்தமாகவோ கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாகவோ யாதொரு அட்டவணையும் வைத்திருக்கப்படவில்லை. நேர்மை என்பது அணுவளவேனும் புலப்படவில்லை. அருணாசலம் மிகுந்த ஆற்றலும் தளரா ஊக்கமும் கொண்டு அலுவலகத்தில் உள்ள கடமைகளைக்; கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். கடமைகளை முழுவதும் கற்றுக் கொண்டபின்பு, சீர்திருத்த வேலையை ஆரம்பித்தார். உறுதிகள் பதிவுதில் ஏற்பட்ட காலதாமதத்தை நீக்கினார். உத்தியோகப்பூர்மாக ஆற்றும் கடமைகட்கு தனியாக பணத்தை இலஞ்சமாகப் பெறுவதை ஒழித்தார். இன்ன இன்ன அலுவலுக்கு இன்ன இன்ன செலவு என வரையறுத்து அறிவித்தார். அலுவல்கள் செவ்வனே நடைபெற ஓர் புதிய முறையை ஏற்படுத்தினார்” என ‘டைம்ஸ் ஆப் சிலோன்’ எனும் இதழ் பாராட்டியது.

அருணாசலம் பிறப்பு, இறப்புப் பதிவில் ஓர் புதிய முறையை இலங்கையில் கையாண்டார். இந்த முறை கீழை நாடுகளுக்குப் புதிதாக இருந்தது. இலங்கையில் மரண விகிதம் அதிகரித்து வந்ததை 1895 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டினார். சுகாதார வசதிகள் குன்றிய சேரிகளினாலே நோய் பரவுகின்றதென்பதை விளக்கினார். சாக்கடை நீர் ஊருக்குள் தங்காது வெளியே அப்புறப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்றும் குடியிருப்பு வீடுகள் சுகாதார வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறினார்.

 “அருணாசலம் ஒரு புகழ்பெற்ற அறிஞர். புராதன ஆங்கில இலக்கியங்களிலும் கீழத்தேய இலக்கியங்களிலும் இவருக்கு மிகுந்த பாண்டித்தியம் உண்டு. ஆங்கிலப் பேச்சுவன்மையும் இலக்கிய ஆராய்ச்சியும் அவருடன் பிறந்தனவே எனலாம். இவர் இலக்கிய ஆராய்ச்சியாய் இருந்தாலும், சட்டப் பயிற்சியாய் இருந்தாலும், உத்தியோக அலுவலாய் இருந்தாலும் கண்ணும் கருத்துமாய் இருந்து மிக நுட்பமாகக் கடமையாற்றும் சாமர்த்தியம் வாய்ந்தவர்” என இலங்கை தலைமை நீதிபதி மொன்கிரியவ் புகழ்ந்துரைத்துள்ளார்.

‘இலங்கை சிவில் சட்டச் சுருக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.  

“நாட்டை ஆளும் கலை இந்தியாவில் அற்றுப் போனது. இந்திய அரசாங்கம் எல்லைப் புறங்களில் உபயோகமின்றித் தொடுத்த போர்களில் பணத்தை இறைத்தது. இவ்வித வீண் செலவுகளின் பயனாகக் கடும்வரி விதித்தது. நிர்வாகம் அபரிமிதமான செலவை உண்டாக்கியதால், பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவதிப்படும் ஏழை மக்கட்கு கடின வேலையிலும் அனுதாபம் காட்டாது கொடுமை இழைக்கின்றது. அது மட்டுமோ, திலகர் போன்ற தேசபக்தர்களைக் கொடுமையாக நடத்துவதும், அரசாங்க அதிகாரிகளின் செயல்களைக் கண்டு மக்கள் நியாயமான முறையில் நேர்மையாகக் கூறும் அபிப்பிராயங்களைத் தடை செய்வதும் எதைக் குறிக்கின்றது? அரசாங்கம் தன்னால் கூடிய வரையில் முயன்று மக்கள் வைத்திருக்கும் இராஜவிசுவாசத்தை அழிக்கச் செய்யுமென்பதையே அது குறிக்கும். இதனால் நாளடைவில் பிரிட்டிஷ் ஆட்சி வீழ்ச்சியடையும்” என தமது நண்பர் காப்பென்டருக்கு 1898 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் தமது உள்ளக் குமுறலை தெரிவித்தார்.

அவரது பணியைப் பாராட்டி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் அவருக்கு ‘நைட்’ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சமூக மேம்பாட்டுப் பணிகளையும், தர்மஸ்தாபனங்களையும், தொழிற்சங்கங்களையும், நகரசபை அமைப்புகளையும் விரிவாக ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்காக 1913 ஆம் ஆண்டு அருணாசலம் அய்ரோப்பா நாட்டுக்குச் சென்றார்.

இலங்கைத் தேசாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட சாமேர்ஸ் பிரபுக்கு 15.07.1913 அன்று அருணாசலம் எழுதிய கடிதத்தில்,

“தலைவரியை நீக்குவதற்கு இலங்கையில் இப்பொழுது கிளர்ச்சி உண்டாகி வருகிறது. பௌத்தகுரு, அந்நிய நாட்டுத் தொழிலாளி என்பவர் தவிர, இலங்கையிலுள்ள சுய வல்லபம் படைத்த ஒவ்வொரு ஆணும், இன்று தலைவரி கொடுத்து வருகிறார்கள். இது நியாயமற்ற வரி என்று பல முறை எடுத்துரைத்துள்;ளேன். ஏனென்றால் செல்வர்கள் கொடுக்கும் இந்த வரியையே ஏழைகளும் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனை நீக்கப் பல ஆண்டுகளாக நான் முயற்சி எடுத்து வந்திருக்கிறேன். இலங்கையில் செல்வர்கட்கு ஒரு குறையுமில்லை. அவர்கள் ஆடம்பரப் பொருள்கட்கு மட்டுமே பணச் செலவு செய்கின்றனர்.

அருணாசலம் இலங்கை அரசாங்கத்திடம் உப்புத்தீர்வையை நீக்க வேண்டும் அல்லது ஓர் அளவிற்குக் குறைக்க வேண்டும். அரசாங்கமே உப்பு வர்த்தகத்தை இன்று ஓர் ஏகபோக வர்த்தமாகக் கொண்டுள்ளது. உப்புத் தீர்வையை நீக்கும் கொள்கை ஏழைகட்கு நன்மையைக் கொண்டு வருவதுமன்றி, விவசாயத்திற்கும் ஊக்கம் அளிக்கும். விவசாய உற்பத்திக்கு உப்பு பெரிதும் தேவைப்படும். ஆனால் இதன் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக, இதனை விவசாயிகள் எவரும் உபயோகிப்பதில்லை.

தேயிலை, ரப்பர் பயிரிடும் தோட்ட முதலாளிகள் அபரிமிதமான வருவாயைப் பெறுகின்றனர். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தேயிலை, ரப்பர் ஏற்றுமதி செய்யும் வர்த்தக் குழுவினர் அதிகமான இலாபத்தை ஈட்டுகின்றனர். இவர்கள் வருமான வரியோ, நில வரியோ செலுத்துவதில்லை. ஏழைக்குடியானவன் கொடுக்கும் தலைவரியையே செல்வம் படைத்த முதலாளிவர்க்கத்தினரும் கொடுக்கின்றனர். வரி சம்பந்தமான விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சபை இடையில் சிதைந்து போனதற்கு நியாயம் என்ன? முதலாளி வர்க்கத்தினர் பிரயோகித்த செல்வாக்கே சிதைவுறச் செய்தது எனலாம். அது மட்டுமல்லாமல் விசாரணையை பொறுப்பேற்ற சபையினரும் ஏழை மக்களின் பரிதாப நிலைமைகளை உணரவில்லை” என வலியுறுத்தினார்.

சுயாட்சி பெறும் நோக்கத்துடன் 1917 ஆம் ஆண்டு, மே மாதத்தில் இலங்கைச் சீர்திருத்தச் சங்கமொன்றை அருணாசலம் நிறுவினார். அச்சங்கத்தின் சார்பாக 1917 மற்றும் 1918 ஆம் ஆண்டுகளில் இரண்டு அரசியல் மாநாடுகளை நடத்தினார். 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘இலங்கையில் அரசியல் சீர்திருத்தம் ஏற்பட வேண்டியதற்குரிய காரணங்கள்’ என்ற ஒரு அறிக்கையைத் தயாரித்து இலங்கைச் சீர்திருத்தச் சங்கத்தினதும், இலங்கை தேசிய சங்கத்தினதும் கூட்டுக் கமிட்டியில் வெளியிட்;டார்.

 ‘இலங்கைத் தேசீய காங்கிரஸ்’ 11.12.1919 அன்று தோற்றுவிக்கப்பட்டது. அருணாசலம் இலங்கைத் தேசீய காங்கிரஸின் முதலாவது தலைவராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அருணாசலம் இலங்கையின் அரசியல் விடுதலைக்காகப் போராடவும், சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபட வேண்டுமெனவும் மக்களிடம் பரப்புரை செய்தார்.

கொழும்பில் வறியவர்களுக்கு வீடமைக்கவும், மக்களின் ஆரம்பக்கல்விக்கும், கூலியாட்களைத் தற்போதைய அடிமைத்தனத்தினின்று விடுவிக்கவும் அதிக பணிகள்; செய்ய வேண்டியிருக்கின்றன என்பதை உணர்ந்து பாடுபட்டார்.

ஒரு நாட்டின் இளைஞர்கள் தாம் எதிர்காலச் சந்ததிக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உணர்ந்த அருணாசலம், 19.11.1914 அன்று கொழும்புவில் இளைஞர்களைக் கூட்டி கீழ்க்கண்டவாறு உணர்ச்சித் ததும்ப அறிவித்தார்.

“மக்களின் தேவைகளை நாம் நன்கு அறிந்து, அறிவு, பொழுதுபோக்கு என்பவற்றை அவர்களுக்குக் கிடைக்கச் செய்து அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டும். அத்துடன் கற்றவர்கள், செல்வந்தர்கள், குறைந்த நிலைமையிலுள்ள சகோதரர்கள் ஆகியோரிடையே இனிய மனித உறவுகளை நிலவச் செய்தல் வேண்டும்.

இந்த வேலை மிக முக்கியமானதெனினும் மக்களின் கல்வி, மருத்துவ வசதி, பொருளாதாரச் சீர்திருத்தம், அவர்களின் வீட்டுத் திட்டங்களை மேம்பாடு செய்தல், அவர்களின் இல்லங்களுக்குச் சென்று நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் மூலம் துப்புரவாகவும் சிறப்பாகவும் வாழ அவர்களுக்குக் கற்பித்தல், மருத்துவ வசதிகளை அளித்தல். குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்தல், பயன்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.”

                அருணாசலம் இரவு பாடசாலைகள் பலவற்றைத் தொடங்கினார். சேரிகள் தோறும் சென்று தொழிலாளரிடையே கல்வியைப் பரப்பினார். சுகாதாரம் குறித்து விரிவுரை நிகழ்த்தினார். சேரிச்சிறார்களின் நலனுக்காக விளையாட்டுச் சங்கங்களை நிறுவி செயற்படுத்தினார். கைத்தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டிட வழிவகை ஏற்படுத்தினார். கூட்டுறவு கடன் உதவிச் சங்கங்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைத்திட பாடுபட்டார்;.

                இலங்கையின் முதலாவது தொழிலாளர் சங்கம் அருணாசலத்தால் 25.06.1919 அன்று தோற்றுவிக்கப்பட்டது. இத்தொழிலாளர் சங்கத்தின் பெயர் ‘இலங்கை கைத்தொழிலாளர் சேமாபிவிருத்திச் சங்கம்’ என்பதாகும்.

                இலங்கையிலுள்ள தொழிலாள வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல், மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றிய பிரச்சினைகளைக் கற்றறிதலை ஊக்குவித்தல் என்பவைகள் அத்தொழிலாளர் சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டது.

                அருணாசலம் 1920 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொழிலாளர் சங்க இயக்கத்தை மிகவும் விரிவடையச் செய்து, இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தையும் தோற்றுவித்தார். இவரது முயற்சியால் தொழிலாளர் சட்டத்தில் இருந்த தொழிலாளரைத் தண்டிக்கும் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டன.

                இலங்கைக் கல்வி அதிபர் எஸ். எம். பரோஸ், அருணாசலத்திடம் கல்வி குறித்து அறிக்கை தயார் செய்து வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் 1900 ஆம் ஆண்டு ஜீலை 8 ஆம் தேதியன்று தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் அவர், கொழும்பில் வழங்கப்பட்டு வந்த ஆரம்பக்கல்வி முறையின் அடிப்படையான குறை ஆங்கிலத்தின் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படுவதே என்று குறிப்பிட்டார். உண்மையில் அருணாசலம் தான் இலங்கையில் தாய்மொழிக் கல்வி இயக்கத்தின் தந்தையாவார்.

                “இங்கிலாந்திலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் ஆங்கிலத்தைத் தள்ளிவிட்டு, ஜெர்மானிய மொழியைப் போதனா மொழியாக்கினால் எவ்வாறிருக்கும் என யோசித்துப் பாருங்கள்! ஆங்கிலத்துக்கும் சிங்களத்துக்கும் (அல்லது தமிழுக்கும்) இருக்கும் ஒற்றுமையிலும் பார்க்க ஜெர்மானிய மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது. எனவே சிங்களச் சிறார்களும் தமிழ்ச் சிறார்களும் ஆங்கிலம் கற்பதைவிட ஆங்கிலச் சிறார் ஜெர்மானிய மொழியை இலகுவில் கற்க முடியும்” என்று கல்வி அதிபரிடம் வினா எழுப்பினார்.

                பொன்னம்பலம் அருணாசலம் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பிதா என போற்றப்பட்டார். அவரது முயற்சியினால் 1906 ஆம் ஆண்டு சனவரி மாதம் இலங்கைப் பல்கலைக் கழகச் சங்கம் தொடங்கப்பட்டது.

                பொன்னம்பலம் அருணாசலம் 1883 ஆம் ஆண்டு மானிப்பாயைச் சேர்ந்த சொர்ணம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

‘இலங்கைத் தமிழ் சபை’ என்னும் கலாச்சார அமைப்பை 1923 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

                இந்தியாவிலுள்ள புனித ஸ்தலங்களுக்கு 1923 ஆம் ஆண்டின் இறுதியில் யாத்திரை சென்றார். அப்போழுது தமிழகத்திலுள்ள மதுரையில் 09.01.1924 அன்று தமது எழுபத்தொன்றாவது வயதில் மறைந்தார்.

                இலங்கைச் சரித்திரச் சுருக்கம், எங்கள் அரசியல் தேவைகள், எங்கள் அரசியல் நிலைமைகள், ஞானாவாசிட்டம், முருக வாழிபாடு, சமயதத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்பும் முதலிய நூல்களை படைத்து அளித்துள்ளார்.

                பொன்னம்பலம் அருணாசலத்தின் தேச சேவையை போற்றும் வகையில் இலங்கைப் பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டு உள்ளது. 

- பி.தயாளன்

Pin It