1847 ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்த அன்னி வூட் தனது 19ஆவது வயதில் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற பாதிரியாரை மணந்து கிறித்துவப் பணியில் ஈடுபட்டார். தனது இரண்டு பெண்குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் பாதிப்பில் மனமுடைந்த அன்னிபெசண்டிற்கு கடவுள் நம்பிகையின் மீதே சந்தேகம் ஏற்பட்டது. 1870ல் சார்லஸ் பிராட்லா-வோடு இணைந்து 'நேஷனல் ரிபார்மர்' என்ற ஆங்கில ஏட்டை நடத்தினார். பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண்களுக்கான ஓட்டுரிமை, குடும்பக் கட்டுப்பாடு (கர்ப்பத்தடை) போன்ற புரட்சிகரமான திட்டங்களை வகுத்து அதற்கான இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார். மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்தார். இதனைத் தொடர்ந்து, 'நியூமால் தூசியன் அமைப்பு' என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியான அன்னி பெசண்ட். "நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை" என்று பேசினார்.
தனது "லிங்க்" பத்திரிக்கையில் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதியதன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டார், தொடர்ந்து அன்னிபெசண்டிற்கு பெசண்டோடு இணைந்து கிறித்துவ மதப்போதகராக பணியாற்றுவதில் நாட்டமில்லாமல் போனதால் 1873ல் தன் கணவரைவிட்டுப் பிரிந்தார்.. விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக 1913ல் காமன்வீல் பத்திரிகையைத் துவங்கிய அன்னி பெசன்ட் 1914ல் சென்னையில் இருந்தபடி நியூ இந்தியா இதழை துவக்கினார். காங்கிரஸில் தன்னை இணைத்துகொண்ட அன்னி பெசண்ட் அங்கிருந்த பார்ப்பனர்களால் சுவீகரிக்கப்பட்டு பார்ப்பனீயத்திற்கு ஆதரவாகவே தன் வாழ்நாளை கழிக்கும் நிலைக்கு ஆளானார். அவரது பார்ப்பனீய ஆதரவு போக்கிற்கு அவர் நடத்திய பத்திரிகைகளும் எழுதிய நூல்களுமே சான்றாய் விளங்குகிறது.
1917ல் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.தமிழ்நாட்டிலிருந்து அந்த மாநாட்டிற்கு செல்ல இருந்த நரசிம்மாச்சாரி போன்ற காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கோ கல்கத்தா சென்றால் அங்கு தங்கள் ஆச்சாரம் கெடாத வகையில் உணவருந்தமுடியுமா என்ற சந்தேகம் எழ அப்படியான உணவுவிடுதியை கண்டு பிடிக்க தனது நியூ இந்தியா இதழில் விளம்பரத்தை வெளியிட்டதோடு, பின்னர் அந்தப்பார்ப்பனர்களுக்கு பயன்படும் வகையில் முதல் தரமான தஞ்சாவூர் பிராமண சாப்பாடு கிடைக்கும் என ஓட்டல் முகவரி, விலைப்பட்டியலோடு "தமிழ்ப்பிராமணர்" என்ற புணைப்பெயரில் ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டு அவர்களது ஆச்சாரம் கெடாதவாறு மிகவும் கவனமாகப் பார்த்துகொண்டார் அன்னி பெசன்ட்..
பெண்களைப் பாவயோனியில் பிறச்தவர்கள் என்று பகிரும் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெண்ணினத்திற்கு பெருமை தேடித்தந்தவர். இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் குப்பைகளிலும், இந்து சாஸ்திரக் சாக்கடையிலும் மூழ்கி அவற்றைப் புத்தகமாக்கி புளகாங்கிதம் அடைந்தவர். சென்னை அடையாறு பகுதியில் செத்துப்போன சமஸ்கிருதத்திற்கென்றே தனி நூலகம் அமைத்து அதில் இத்துப்போன நூல்களையெல்லாம் தேடித்தேடி சேகரித்தவர். மதம் மற்றும் மதம்சார்ந்த கல்வியைப் பரப்புவதில் ஆர்வம் காட்டியவர்.
1912ல் பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்க துவங்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் பார்ப்பனரல்லாதாரின் பலத்த ஆதரவோடு முதலாம் ஆண்டுவிழாவில் திராவிடர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த காலகட்டத்தில் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கிய அன்னி பெசன்ட் அதனை முற்றிலுமாக பார்ப்பனர் நலனுக்காகவே பயன்படுத்தினார். இதனை புரிந்துகொண்ட திராவிடர் சங்க தலைவர்களான நடேசனார், தியாகராயர், நாயர் போன்றோர் அன்னிபெசண்டின் சுயாட்சி என்பது பார்ப்பன ஆட்சியே என்று அம்பலப்படுத்தினர். வர்ணபேதத்தைப் போற்றி இந்து மதத்திற்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கிதையை தோலுரித்து ஆங்கில ஏடான மெயில் பத்திரிகையில் எழுதிய டி.எம்.நாயரின் கட்டுரைகள் அன்னிபெசண்டடின் அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டது. அன்னி பெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் மீது ஆரம்பத்தில் நல்ல எண்ணம் கொண்டிருந்த பெரியார் பின் அதன் நோக்கம் புரிந்து அதனை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நேஷனல் அசோஷியேஷன் அமைப்பில் தமிழ்நாடு காரியதரிசியாக செயல்பட்டதை தனது குடியரசு பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார். விஜயராகவாச்சாரி, இராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனர்களைத் தலைவராகக் கொண்ட இந்த அமைப்பிலும் பெரியார் தனது முயற்சியால் பார்ப்பனரல்லாதாருக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் வேண்டி தீர்மானம் நிறைவேற்றினார் என்பதுதான் வரலாறு.
பார்ப்பனர்களின் முழு ஆதரவோடு நடத்தப்பட்ட அன்னிபெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் பார்ப்பனரல்லாதாருக்கு பெரும் கேடு விளையக்கூடும் என்று அறிந்த திராவிடச் சங்க தலைவர்கள் ஒன்றுகூடி 1916ல் தென்னிந்திய மக்கள் சங்கம் எனும் அரசியல் கட்சியைத் துவக்குவது என முடிவெடுத்தனர். அதுவே தென்னிந்திய நலஉரிமைச்சங்கமாகி பின்னாளில் அவர்கள் நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி அல்லது நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
தொழிலாளர்களின் தோழனாக இவரைப் பார்ப்பன ஊடகங்கள் தூக்கி நிறுத்துவது எந்தளவுக்கு போலியானது என்பதற்கு குடியரசில் 15.1.1928ல் வெளிவந்த பெரியாரின் கட்டுரை வரிகளே சான்று,
"சென்னையில் எந்தக் காரணத்தைகொண்டும் தொழிலாளர் இயக்கம் உருப்பெறாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் பார்ப்பனர்களும் அரசியல் பிழைப்புக்காரர்களும் அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள். ஶ்ரீமதி பெசண்ட் அம்மைக்கும், ஶ்ரீனிவாசய்யங்காருக்கும் சிவராவுக்கும் சத்திய மூர்த்திக்கும் வரதராஜுலுவிற்கும் மற்றும் இவர்கள் போன்றோர்க்கும்தொழிலாளர் சம்பந்தமோ, தலைமை ஸ்தானமோ இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்கிறோம். இவர்கள் தொழிலாளர்களா? அல்லது தொழில் திறம் அறிந்தவர்களா? அல்லது தொழிலாளி போன்ற ஏழ்மை வாழ்வு வாழ்கின்றவர்களா?
நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு பெயர்கள் தொழிலாளர்களாய் இருக்கின்றவர்கள். ஶ்ரீமதி பெசண்ட் அம்மையார் தயாரித்திருக்கும் சுயராஜ்யத்திட்டத்தில், பொறுப்புள்ள ஸ்தானங்களுகெல்லாம் மிகுந்த பணக்காரர்களுக்கும், பெரிய படிப்பாளிகளுக்கும் ஓட்டு இருக்கவேண்டுமென்று எழுதியிருக்கிறார்களே ஒழிய தொழிலாளிக்கு ஓட்டோ பிரதிநிதித்துவமோ இருக்கும்படி எழுதவேயில்லை."
எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அவர் ஈடுபட்ட காலத்திலும் பல நேரங்களில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டார். ஆங்கில அரசு அனுப்பிவைத்த சைமன் குழுவைக்கூட பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்த்தவர் அன்னி பெசன்ட்.
பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ.ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்க அய்யங்காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் 'டிக்டேட்டர்' என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் 'ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்' என்று கூறிவிட்டார்.
அன்னிபெசன்ட் அம்மையாரோ ஒருபடி மேலே போய்
"பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச தர்மம்" என்றார் !
மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்திட்டத்தில் கண்டிருந்தபடி இரட்டை ஆட்சிமுறை செயல்படுவதை பரிசீலிக்கவும் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய ஆலோசனைகளை வகுக்கவும் சர்.ஜான்சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியா வருவதாக 1927ம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியாயிற்று.
அந்தக்குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை எனக் காரணம் காட்டி காங்கிரஸ் பார்ப்பன தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காங்கிரஸி லிருந்து ஒதுங்கியிருந்த அன்னிபெசன்ட் சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்து கொண்டு சைமன் குழுவை கடுமையாக எதிர்த்தார்.
சைமன் குழுவை வரவேற்ற தந்தை பெரியார் அவர்கள்
"பெசன்ட் அம்மையின் புதிய உபத்திரம் என்னவெனில்,நம்நாட்டு பார்ப்பனர்கள் இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்ட பிறகு அம்மையை (அன்னிபெசன்ட்) பற்றியிருக்கிறார்கள்.இது பார்ப்பனரல்லாதாருக்கு பேரபாயம். இந்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையும் தோட்டி நிலையிலேயே இருக்கிறார்கள். அத்தோட்டி நிலை மாற ஏதாவது மார்க்கமுண்டானால் எந்த துரையையும் கமிஷனையும் வரவேற்கவும் செய்யலாம். பகிஷ்கரிக்கவும் செய்யலாம்.
கமிஷனில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர் களாகவே இருந்துவிடக் கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியமென்றே சொல்ல வேண்டும்"
என்று குடியரசில் கட்டுரை எழுதினார்.
இப்படி அன்னிபெசன்ட் அம்மையார் பார்ப்பனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததோடு இந்துமதத்தைப் பரப்புவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் தான் இன்றுவரை அவரை பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்!
- கி.தளபதிராஜ்