`தங்கவங்கம்’ என்று போற்றிப் பாடியுள்ளார் மகாகவி இரவீந்திர நாத் தாகூர். `தங்கத்தில் குறையிருந்தாலும், அது தரத்தில் குறைவதுண்டோ?’ என்று உரக்கவே பாடினார் கவிஞர் கண்ணதாசன்! தங்க வங்கம் தந்த மனிதர்கள் உலகம் போற்றும் பேரறிஞர்களாக தரத்தில் உயர்ந்து விளங்கினார்கள்! ஆம். மாபெரும் நல்லறிஞர் சரத்சந்திரர்-மேலைநாடுகளுக்குச் சென்று இந்திய வேதஞானக் கருத்துக்களை உலகம் முழுக்கப் பரப்பிய சுவாமி விவேகானந்தர்-பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து இந்திய தேசிய இராணுவப் படையை உருவாக்கி விடுதலைப் போர்புரிந்த மாவீரர் நேதாஜி-ஆகியோர் தோன்றிய மண் வங்காளம்.

               இந்து மதத்தின் ஆன்மீக ஒளியை அகிலமெலாம் உணரச் செய்த, பெருமைக்குரிய இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த பூமி வங்காளம்! ஞானமாதரசி அன்னை சாரதா தேவியும் இங்குதான் பிறந்தார்.

               jagdish chandra boseஆங்கிலேயரை எதிர்த்து, அடிமைத்தனத்தை ஒழித்து, இந்தியா சுதந்திரம் பெற்றிட வீரப்போர் நடத்திய நாவலர் சித்தரஞ்சன் தாஸின் சொந்த மாநிலமும் வங்காளம் தான்! இவர்களுக்கு இணையாகப் புகழ் பெற்றும், அறிவியல் துறையில் புதுமைகளைக் கண்டறிந்தும் சிறந்த விஞ்ஞானியாக விளங்கிய மாமேதை ஜகதீச சந்திர போஸின் தாய் மண்ணும் இதே வங்காளம் தான், தரத்தில் குறையாத தங்க வங்கம்!

ஊரும் பேரும்

               வங்காளத்தில் டாக்கா மாவட்டத்தில் விக்கிரம்பூர் சிற்றூர். அதை விக்கிரமபுரம் என்றும் அழைப்பர். அந்தச் சிற்றூரில், `பகவான் சந்திர போஸ், பாமாசுந்தரி போஸ்’ – தம்பதியருக்கு 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஜகதீச சந்திரபோஸ் பிறந்தார். ஜகதீசர் என்பது அவரது குடும்பப் பெயர்.

               விக்கிரம்பூர் ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க ஊராகும். அங்கு ஒரு வடமொழிக் கல்லூரியும் இருந்தது. அது வட இந்தியாவில் புகழ்மிக்க கல்லூரியாக விளங்கியது. அதற்கானச் சான்றுகள் இன்றும் நிறைந்து காணப்படுகின்றன.

               பகவான் சந்திர போஸ், பரீத்பூர் நகரில் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்தார். மிகச்சிறந்த மனித நேயமுள்ளவர். நாட்டுப் பற்றம் மொழிப்பற்றும் உடையவர். சிறந்தகுணமும் பரந்த மனமும் பெற்றவர். எக்காரணத்தைக் கொண்டும் தனது நீதித்துறையில் நேர்மை தவறாதவர். சுயமரியாதை இழக்காத சுபாவம் பெற்றவர். எதற்கும் எப்போதும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவர். தன்னைச் சார்ந்துள்ளவர்களிடமும், குறிப்பாக பொதுமக்களிடமும் அன்பு காட்டுபவர்; கருணை மனத்தவர். ஊயிரே போவதாக இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். ஏழை எளிய மக்களுக்கு எதையும் தர்மமாகக் கொடுக்கும் ஈர நெஞ்சமுடையவர். பொதுநலத் தொண்டர்.

தந்தையின் தாராளமும் மனித நேயமும்

               வங்காளத்தில் 1874 ஆம் ஆண்டு ஏற்பட்ட காலரா நோயினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளானார்கள். ஜகதீச சந்திர போஸின் தந்தை `பகவான் சந்திர போஸ்’ துயருற்ற கிராமப்புற மக்களுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் சொந்த பணத்திலிருந்து ஏராளமான உதவிகளைச் செய்தார்.

               வங்காளத்தைச் சேர்ந்த டாக்கா மாவட்டத்தில் அடர்ந்த பல காடுகள் நிறையவே இருந்தன. அக்காடுகளில் கொள்ளையர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள். அங்குள்ள கிராமப்புரங்களுக்குச் சென்று கொள்ளையடித்து மக்களைத் துன்புறுத்திக் கொடுமைகள் பல புரிந்தனர். மக்கள் விரட்டியடிக்கும் போது, கொள்ளையர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொள்வார்கள். ஏழை எளிய மக்கள் தங்களது உடைமைகளை இழந்து வேதனைகளை அனுபவித்து வந்தனர்.

               வெள்ளையர்கள் ஆட்சியில் அரசு நிர்வாகமும், நீதித்துறையும் ஒரே அதிகாரியாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது போடப்படும் எல்லா வழக்குகளும் பகவான் சந்திர போஸ் நீதிமன்றத்திற்கே வந்தன. கொள்ளையர்களைத் தண்டித்தார்; ‘நேர்மை தவறாத நீதிபதி’ என்ற நல்ல பெயரைப் பெற்றார்.

               கொள்ளையர்களின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் கடமையைச் செய்து வந்தார். பகவான் சந்திர போஸ் மீது கோபம் கொண்ட கொள்ளையர்கள், ஒருமுறை அவரது வீட்டிற்குத் தீ வைத்துவிட்டனர். பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரது அன்பு மகள் அத்தீயில் கருகி இறந்துவிட்டாள். அந்த கொடிய காட்சியைக் கண்டதும் பகவான் சந்திரபோஸின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. அவரது துணைவியாரும் மிகுந்த மன வேதனையுற்றார்.

               மனம் திருந்திய கொள்ளைக்காரன் ஒருவன், சிறைத்தண்டனை முடிந்து விடுதலையானவுடன் நேராக நீதிபதி பகவான் சந்திர போஸ் வீட்டுக்கு வந்தான். அவரது கால்களில் விழுந்தான். "தங்களது தண்டனையால் திருந்தி விட்டேன்! எனக்கு ஏதாவது ஒரு வேலை உங்களுடைய வீட்டிலேயே கொடுங்கள்" என்று மன்றாடினான், கெஞ்சினான். அந்தக் கொள்ளைக்காரனை சமூகம் தான் `சூழ்நிலையின் கைதியாக’ மாற்றியுள்ளது என்பதை பகவான் சந்திர போஸ் பகுத்தறிந்தார். தனது வீட்டிலேயே ஒரு வேலைக்காரனாக்கிக் கொண்டார். கெட்டவனையும் நல்லவனாக்க முடியும் என்ற நன்னெறிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

பணிமாறுதலும் உடல் பாதிப்பும்

               பகவான் சந்திர போஸ் `தடவா’ என்ற நகருக்கு பணி மாறுதலில் செல்ல நேரிட்டது. அங்கு சில நாட்களில் மிகவும் கொடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு மிகவும் மன வேதனைப்பட்டார். அவர்களின் பஞ்சத்தைப் போக்க மக்களுக்காக அல்லும்-பகலும் அரும்பாடுபட்டார். மக்களுக்காகப் பாடுபட்ட அவரின் உடல்நலம் வெகுவாகக் குன்றியது. இரண்டு ஆண்டுக் காலம் படுத்த படுக்கையாகிவிட்டார். அதனால் நீதிமன்றம் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் பற்றுடன் வந்து உற்றுழி உதவினர். நட்புக்கு இலக்கணமாய் நடந்தார்.

முளையிலே தெரிந்த விளையும் பயிர்

               ஜகதீசரின் பாட்டியார், சிவலிங்க பூசையிலும், தியானத்திலும் ஆழ்ந்திருப்பார். அப்போது ஜகதீசர் மண்ணால் செய்யப்பட்ட சிவபெருமான் திருவுருவச்சிலையை எடுத்துக்கொண்டு போய்விடுவார்; பல்வேறு உருவமுடைய பொம்மைகளாகச் செய்தும் விளையாடுவார்; இப்படிப்பட்ட குறும்புத்தனங்களில் பேரன் பொழுது போக்குவான். பாட்டியும் பேரன் ஜகதீசன் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்ததால் குறும்புத் தனங்களைக் கண்டு கொள்ளையாய் மகிழ்ந்தார்!

               ஓய்வு நேரங்களில் பேரனைத் தன் அருகில் அமரவைத்து பேரனுக்குப் பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லுவார்; வீரர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் கூறுவார். முன்பு கொள்ளைக் காரனாகவிருந்து, பின்னர் திருந்தி வேலைக்காரனாக மாறியவனும் ஜகதீசுக்குக் கதைகளை அளப்பான்; தனது வீரதீரச் செயல்களையும் அள்ளிவிடுவான். அக்கதைகள் ஜகதீசின் நெஞ்சத்தில் வீர உணர்வைப் பாய்ச்சின.

               ஜகதீசரின் பாட்டியார் சொல்லும் அரிச்சந்திரப் புராணக்கதை, பசுமரத்து ஆணிபோலப் பதியும்; மராட்டிய வீரன் சிவாஜியின் வீரதீர சாகசங்களும், பக்தி உணர்வுகளும், அவர்மீதான பெருமைகளை மேலும் உயர்த்தும். மகாபாரதக் கதையில் வரும் வீரர்கள் ஒவ்வொருவருவரின் வீரத்தையும் குணங்களையும், பண்புகளையும் பாராட்டி கதைபோலச் சொல்லும் பாங்கு மெய் சிலிர்க்க வைக்கும்.

               ஜகதீசரின் நெஞ்சைக் கவர்ந்த பாத்திரம், மகாபாரதக் கர்ணன்! ‘வீரனாக மட்டும் இல்லாமல், கேட்ட நேரத்தில் கேட்ட பொருளைத் தட்டாது கொடுக்கும் கொடை வள்ளலாகவும் விளங்குகிறானே!’-என்ற அவனது உயரிய பண்பு ஜகதீசரை மிகவும் கவர்ந்தது. கொடை வீரன் கர்ணனின் வீரம்-ஈரம்-இரண்டுமே அவர் மனதில் ஆயுதமாய்ப் பதிந்தன. அம்மாவீரனது கொடைக் கருணையை நன்குணர, `கர்ணன் நாடகம்` எங்கு நடைபெற்றாலும் போய்ப்பார்த்துவிடுவார்.

               மகாபாரத்தக் கொடை வள்ளல் கர்ணனின் பண்பை, ஜகதீசர் மறக்காமல் தனது மனதில் வரித்துக் கொண்டார்! இலட்சியப் பாத்திரமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டதால் தனது இறுதிக் காலம்வரை கர்ணனைப் போல் ஏழை மக்களுக்கு வழங்கும் வள்ளலாக வாழ்ந்தார்!

               ஜகதீசர் இளமைக் காலத்திலேயே எந்தப் பொருளையும் கூர்ந்து கவனிப்பார். அதைப்பற்றிக் கேள்விகளைக் கேட்டுத் தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வார். யாரிடமும் கேள்விகளைக் கேட்டு, பதிலைப் பெறுவது ஜகதீசரின் பிறவிக்குணம்.

               பகவான் சந்திர போஸ், தனது மகன் கேட்கும் கேள்விகளைக் கண்டு எரிச்சலோ, ஆத்திரமோ, கோபமோ கொள்ளமாட்டார். மகிழ்வுடன் பதில் கூறுவார். வளரும் தலைமுறைகள் இவ்வாறு கேள்விகளைக் கேட்பதை வரவேற்பது தானே கல்விக்கு அழகு! மகன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறி மகனுடைய ஐயங்களை அகற்றுவார். ஜகதீசர் கேட்கும் கேள்விகளின் அருமையையும், அறிவின்பாற்பட்ட ஆழத்தையும் எண்ணி வியப்பார். எதிர்காலத்தில் தனது மகன் சிறந்த ஓர் அறிவாளியாக விளங்குவான் என்று பூரித்து மகிழ்வார்.

               வெப்பம் எப்படி ஏற்படுகிறது? நெருப்பு எப்படி உருவாகிறது? காற்று எவ்வாறு வீசுகிறது? தண்ணீர் ஏன் பாய்ந்து ஓடுகிறது? இவ்வாறான பல்வேறு கேள்விகளை, தந்தையிடம் கேட்பார் ஜகதீசர். தந்தையும் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும் பதில் கூறுவார்.

               ஜகதீசரின் பெற்றோர்கள், அவர் படிப்பில் மட்டும் சிறந்தவராக விளங்கினால் போதாது, குணநலன்களிலும் சிறந்து விளங்க வேண்டுமெனக் கருதினார்கள். அதற்கேற்பவே, அவர் குழந்தைப் பருவத்திலேயே பரந்த மனப்பான்மை உடையவராகப் பளிச்சிட்டார். தேசப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார்; பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவராகவும், பிறர்மீது அளவிலா அன்பு செலுத்தக்கூடிய பண்பாளராகவும் வளர்ந்தார். ஏழை-பணக்காரர் என்ற வித்தியாச மில்லாமல் அனைவரையும் சமமாக பாவிக்கும் மனோபாவம் உடையவராகவும் விளங்கினார்.

தாய் மொழிக் கல்வியும் அறிவியல் ஞானமும்

               ஜகதீசர் கல்வி கற்றிட பள்ளியில் சேர்ந்த போது, இந்திய நாட்டை வெள்ளையர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆங்கில மொழி படித்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த காலம். ஆங்கில மொழியைப் படித்தால் அரசுப்பணி அப்போதெல்லாம் எளிதாக கிடைத்தது. அக்காலத்தில் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழியிலேயே கல்விகற்க ஆங்கில மொழிப் பள்ளிகளில் சேர்த்தனர்.

               இன்று போல – அன்றும் ஆங்கில மோகம், மக்களை ஆட்டிப்படைத்தது. அதே வேளையில் "ஆங்கில மொழிப் பள்ளியில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு வந்தால் இரண்டு மடங்கா சம்பளம் தருகிறான் வெள்ளைக்காரன்?" என்று கேள்வி எழுப்பிய தாய் மொழிப் பற்றாளர்கள் அப்போதும் வாழ்ந்தனர்.

               ஜகதீசரின் தந்தை ஆங்கில மொழியில் வல்லவர். அது மட்டுமன்று, மாவட்ட உதவி நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். ஆனாலும், அவர் ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டிருக்கவில்லை. `ஆங்கிலம், அரசுப் பணிக்கான மொழிமட்டுமே’-என்று அறுதியிட்டுச் சொன்னவர். வேலை செய்யவும், ஊதியம் பெறவும், குடும்பம் நடத்தவும் தான் அந்த அந்நிய மொழி அவருக்குப் பயன்பட்டது. `எனது உயிர், உடல், மூச்சு எல்லாம் என் தாய்மொழியே!’ - என்று மதித்தவர் பகவான் சந்திர போஸ்.

               `ஒவ்வொரு மனிதரும் அவரவர் தாய் மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்க வேண்டும். தாய்மொழி இலக்கணங்களை முறையாகப் பிழையின்றிப் பயில வேண்டும். தாய்மொழியிலேயே குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இருக்க வேண்டும்’ என்ற எண்ணமுடையவர் பகவான் சந்திர போஸ். தனது தாய்மொழி மீது அவருக்குப் பற்று உண்டு. அதனால் தான் மகன் ஜகதீசனுக்கு ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியான வங்காள மொழியிலேயே கற்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

               `தாய்மொழியில், கல்வி பயில்வதால் பாடங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்; பிற மொழிகள் மூலமாகப் பாடங்களைக் கற்பது சுமையானது; அது கடினமானது` -இதை உணர்ந்தவர் பகவான் சந்திரபோஸ்.

               ஜகதீசருக்கு அய்ந்து வயது ஆனது; பரீத்பூர் நகரில் தாய்மொழியான வங்கமொழியில் கல்வி பயில பள்ளியில் சேர்க்கப்பட்டார். `உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு` - என்று தமிழகத்தில் தாய் மொழிக்கு ஆதரவாய் எழுச்சி ஏற்பட்டது. அதற்கு முன்னரே, தாய்மொழிப் பற்றுடையவர்கள் வங்க மொழிக் கல்விமுறைகளையே முழுக்க முழுக்க ஆதரித்தார்கள்! ஜகதீசர் தனது ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியில் படித்தார். ஆதனால் சுயமாக சிந்திக்கவும், பாடங்களைப் புரிந்து கொள்ளவும் அவருக்கு எளிமையாக இருந்தது. அதன் மூலம் விரைவாகப் பல செய்திகளை அறிந்துகொண்டார்.

               ஜகதீசர் வங்க மொழிக் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை முழுமையாக கவனித்தார். நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

               ஜகதீசர் எதையும் கூர்ந்து கேட்டும், சம்பவங்களை உற்று நோக்கியும் ஆழ்ந்து அறியும் மாணவராய் வளர்ந்தார். கூடவே, ஊடுருவி நோக்கும் திறமை, ஊக்கம், விடாமுயற்சி ஆகியன அவருக்குள் வயது வளர வளர பேருருவமாகவும் உயர் பண்பாகவும் வடிவெடுத்தன.

               பிற்காலத்தில் ஜகதீச சந்திர போஸ், "நான் தாய்மொழிப் பள்ளியில் படித்ததால் தான், மொழிப் பற்றையும், இலக்கிய அறிவையும் பெற்றேன்; உயர்சாதி, கீழ்ச்சாதி என்ற வேற்றுமை உணர்வுக்குப் பலியாகாமல் சமத்துவத்தைப் பயின்றேன். எளிய மக்களுடன் படித்ததால்தான், இயற்கையுடன் இயைந்து வாழும் அவர்களுடன் ஒன்றிப் பழகக் கற்றுக்கொண்டேன்"-என்று கூறினார்.

               இதே கருத்தைத்தான், அணுசக்தி விஞ்ஞானியும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர்.அப்துல்கலாம் அண்மையில் வெளியிட்டார். மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது தாய்மொழிக் கல்வியின் சிறப்பை கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

               "அம்மா" என்ற அழகு தமிழ் வார்த்தை இருக்க "மம்மி" என்றும், "அப்பா" என்ற வார்த்தை இருக்க "டாடி" என்றும் ஆங்கிலத்தில் அழைப்பதையே தமிழகத்தின் பல பெற்றோர்கள் நாகரீகமாகக் கருதுகின்றனர். இதனால் சமூகத்தில் தாம் உயர்ந்தவர்கள் என்ற ஒரு வித உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர். இவர்கள், தமிழ் மொழியைப் புறக்கணித்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்”.

               “ஒரு வேற்றுமொழியை அறிந்து கொள்வதற்காக, ஆயிரமாயிரம் ரூபாய்களைச் செலவழிந்து தம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், தாய்த் தமிழை மாற்றான்தாய்ப் போக்குடன் அணுகுவது ஆபத்தானது. இது ஏன் என்று புரியவில்லை”.

               “மேலை நாடுகளெல்லாம், தமது பிள்ளைகளைத் தாய் மொழியிலேயே பயிற்றுவித்து, இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேறச் செய்துள்ளன”.

               “ஆனால், தாய்மொழியில் பயிலுவதை நாம், கௌரவக் குறைச்சலாக நினைக்கிறோம். அதுவே நமது முன்னேற்றத்திற்குத் தடையாகவும் உள்ளது”.

               “தாய்மொழியில் பயின்றவர்கள் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன”.

               “தாய்மொழியில் கல்வி கற்றால் எப்படிப்பட்ட கடினமான விஷயத்தையும் எளிதில் புரிந்து கொண்டு சிக்கலைத் தீர்க்க முடிகிறது. மற்ற மொழியில் படிப்பதைவிடவும், தாய் மொழியில் கற்றுணர்ந்து தேர்ச்சி பெற்றால் அதிகமாகவே சாதிக்க முடியும்”.

               “மேலைநாடுகள் இன்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கக் காரணம், அவர்கள் தாய்மொழியில் கற்பதால்தான்”.

               “நான் விஞ்ஞானியாகச் சிறப்புற்று விளங்கியதற்குக் காரணம் தாய்மொழிக் கல்வியே! தமிழை நன்கு கற்றுணர்ந்ததால்தான், தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டிகளில் முதல் பரிசையும் வென்றுள்ளேன்!”

               சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீச சந்திர போஸ், தாய்மொழிக் கல்வி பற்றி கூறியதும், தற்போதைய அணுசக்தி விஞ்ஞானியான அப்துல் கலாம் கூறுவதும் எவ்வளவு பொருத்தமானவை? இவை காலத்தால் அழியாத உயர்ந்த கருத்துக்களாகும்.

கல்கத்தாவில் கல்வி

               ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் கல்கத்தா நகரில் உள்ள தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ஜகதீசர் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்ததால் ஆரம்பத்தில் சிரமப்பட்டார். பின்பு மாணவர்களுடன் பழகி, உரையாடல்கள் வாயிலாக குறுகிய காலத்தில் ஆங்கிலத்தைத் தெளிவாகவும், எளிதாகவும், சரியாகவும் பேசும் திறமையாளரானார். ஆங்கில மொழியில் நன்றாக எழுதவும், சரளமாகப் பேசவும், எண்ணிய எண்ணங்களை எழுத்தில் வடிக்கவும் திறன் பெற்ற மொழிச் சிற்பியானார்.

               ஜகதீசர் புத்தகப்புழுவாக மட்டும் இருக்கவில்லை. அவர் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வமுடையவராக விளங்கினார். அவரின் விருப்பமான விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.

               பிறப்பிலேயே விஞ்ஞானியாகத் துடித்தவர் ஜகதீச சந்திர போஸ்! அவர் தனது மாணவப் பருவத்தில் விஞ்ஞானத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கினார்.

               பள்ளி விடுதியின் அருகில் இருந்த குளத்தில், துள்ளித்திரியும் தவளைகள், மீன்கள் ஆகியவைகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார். மேலும் செடிகளைப் பார்த்து அவற்றின் தண்டுகள், இலைகள், கிளைகள் மற்றும் வேர்ப்பகுதிகளையும் பிரித்து ஆராய்ந்தார்.

               வீட்டுப் பிராணிகளாக முயல்கள், அணில்கள் மற்றும் விஷமில்லாத பாம்புகள் ஆகியவற்றை வளர்த்தார். தாவரங்கள், விலங்கினங்கள், பறவையினங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

               உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

இளமையில் சாகசம்

               ஜகதீசருக்குக் குதிரைச் சவாரி செய்வதில் மிகுந்த நாட்டம் உண்டு. ஒரு மட்டக்குதிரையை அவரது தந்தையார் அவருக்கு வாங்கிக் கொடுத்தார். குதிரைச் சவாரி செய்வதில் தேர்ச்சி பெற்றார். பரீத்பூர் நகரில் குதிரைப் பந்தயம் நடைபெற்றது. ஒருமுறை தானும் போட்டியில் கலந்துகொள்ள விரும்பினார். குதிரைப் பந்தய விதிமுறைகள் பற்றியும், ஏற்பாடுகள் பற்றியும் ஏதும் தெரியாமலேயே கலந்து கொண்டார்.

               குதிரைச் சேணத்தைத் தனது கால்களால் இறுகப் பற்றிக் கொண்டார். குதிரை மிகவும் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தபோது அவரது கால்களில் உராய்வு ஏற்பட்டது. அதனால் அவரது கால்கள் தேயத்தேய சேணத்தில் உராய உராய, ஜகதீசரது கால்களிலிருந்து இரத்தம் பீறிட்டு வழிந்தது. அவர் அதைப் பொருட்படுத்தாமல் பந்தயம் முடியும் வரை குதிரை மேல் அமர்ந்து அதை ஓட்டினார். ஜகதீசரின் நெஞ்சுறுதியை அந்தத் திடலில் கூடி இருந்த மக்களனைவரும் கரவொலி எழுப்பிப் பாராட்டி மகிழ்ந்தனர்.

சாதுமிரண்டால் தலைவனும் ஆகலாம்!

               கல்கத்தாவில் உள்ள தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ஜகதீசர் படிக்கும் போது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருநாள், மாணவன் ஒருவன், ஜகதீசனைத் தன் கோபம் தீரும் மட்டும் வலிக்க வலிக்க அடித்தான். ஜகதீசன் பொறுமையாக, அந்த மாணவன் விளாசிய அடிகளை ஒன்று கூட தவற விடாமல் தாங்கிக் கொண்டே நின்றான். முடிவாக, "சாதுமிரண்டால் காடு கொள்ளாது" என்பது போல ஜகதீசன் கோபமாய்க் கொதித்தெழுந்தான். தன்னை அடித்த மாணவன் முதுகில் துணி துவைப்பது போல அவனை அடித்து துவைத்தான். அவன் மயங்கி தரையில் விழும்வரை விடவே இல்லை. அன்று முதல் ஜகதீசனிடம் மாணவன் எவனும் வம்புக்குப் போவதில்லை. அதுமட்டுமா? அனைத்து மாவணவர்களும் ஜகதீசனைத் தம் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். உரிய மரியாதையும் அளித்தார்கள்.

கல்லூரிக் கல்வி…

               தந்தையார், ஜகதீசனை, கல்கத்தாவில் உள்ள தூய சேவியத் கல்லூரியில் சேர அனுப்பினார். அங்கு பி.ஏ., வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அப்பொழுது பி.ஏ., வகுப்பில் அறிவியலும் பாடமாகச் சேர்த்துக் கற்பிக்கப்பட்டது. ஜகதீசர் உயிரியல் பாடத்தில் மிகவும் விருப்பமுடையவராக விளங்கினார். அக்கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக `தந்தை லெஃபண்ட` பணியாற்றினார். அவர் ஒரு சிறந்த அறிவியல் ஆராய்ச்சி அறிஞர். அவர் இயற்பியல் கருத்துக்களை மாணவர்கள் மனதில் பதியுமாறு அன்பாகவும், ஆழமாகவும், விளக்கமாகவும் கூறுவார். அதனால் இயற்பியல் மாணவர்களுக்கு அவர் மீது தனியொரு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டது. அப்பேராசிரியரை ஜகதீசர் மிகவும் கவர்ந்துவிட்டார். இயற்பியலும் ஜகதீசர் உள்ளத்தை ஈர்த்துவிட்டது.

               கல்லூரியில் இயற்பியல் விஞ்ஞானக் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியை ஜகதீசர் சென்று பார்த்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கருவிகள் அவரது கருத்தையும், அறிவையும் கவர்ந்தன. அக்கண்காட்சியைப் பலமுறை விஞ்ஞானத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட புதுவிதமான ஆர்வமும், உணர்ச்சியும், உந்துதலுமே காரணம். ஜகதீசரின் மனதை இயற்பியல் மிகவும் ஈர்த்துவிட்டதால், அவருக்கு விஞ்ஞானத்தின் மீது விருப்பமும் நாட்டமும் நாளுக்கு நாள் பெருகியது. அதற்குக் காரணமானவர் பேராசிரியர் `தந்தை லெஃபண்ட்` என்றே சொல்ல வேண்டும்.

               கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

               கல்லூரி விடுமுறை நாட்களில் ஜகதீசர் வேட்டையாடச் சென்றுவிடுவார். வேட்டையாடும் திறமை, அறிவு, கூரியநோக்கு ஆற்றல் எல்லாமே அவரிடம் இருந்தது. வேட்டையாடுவதில் ஈடுபட்டதால் ஜகதீசர் உள்ள உரமும், உடல் திறமும் ஒருங்கே பெற்று விளங்கினார்.

               கல்லூரியில் பி.ஏ., இறுதியாண்டுத் தேர்வை எழுதி இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

ஐ.சி.எஸ்-ஆர்வம்

               ஜகதீசரின் தந்தையார் `தடாவா` என்ற ஊரின் மலையடிவாரத்தில் சில ஏக்கர் நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். அந்த நிலத்தில் விவசாயம் செய்தார். விவசாயத்தின் மூலம் எவ்வித வருமானமும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டார். மேலும், அசாம் பகுதியில் ஏற்கனவே வைத்திருந்த நிலங்களில் தேயிலை சாகுபடி செய்தார். அதிலும் நட்டமே ஏற்பட்டது.

               நண்பர்களின் பேச்சைக்கேட்டு பம்பாய் நகரில் நெசவாலை ஒன்றை ஆரம்பிக்க, பகவான் சந்திர போஸ் பங்குதாரராகச் சேர்ந்தார். தனது பங்குப் பணத்தையும் கொடுத்தார். பணம் பெற்றுகொண்ட நண்பர்கள், நம்பிக்கைத்துரோகம் செய்து, பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். இதை அறிந்து மனம் தளர்ந்தார்.

               தந்தையார் பெற்ற கடன்களை அடைக்க வேண்டுமானால், நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று யோசித்தார்-ஜகதீசர். இலண்டன் சென்று ஐ.சி.எஸ் (ஐ.ஊ.ளு) பட்டம் பெற்றுவந்தால் பெரிய அதிகாரியாகலாம், நிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணினார். அதனால் ஐ.சி.எஸ் படிக்க இலண்டன் நகருக்குச் செல்வது என்று முடிவுக்கு வந்தார். இந்த எண்ணத்தைத் தந்தையாரிடம் கூறினார். மகனின் மனநிலை அறிந்து பகவான் சந்திர போஸ் மனம் மகிழ்ந்தார். ஆனால், பணம் திரட்டுவது எப்படி? என்று மனம் வருந்தினார். பொருள் தேடுவது மட்டும் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தால் மகனது முடிவுக்கு அவர் அனுமதி தரவில்லை.

அதற்கு அவர் கூறிய காரணம் இது:-

               "ஜகதீஸ், நான் அரசு அதிகாரிதானே! என்ன சம்பாத்தியம் செய்துவிட்டேன்? மாதச் சம்பளம் உண்டு, நானுண்டு என்றல்லவா வாழ்கிறேன்? எனவே, நீயும் இந்த அரசாங்கத்தின் கீழ் ஓர் அரசு அதிகாரியாகக் கூடாது என்பதே எனது விருப்பம்."

               மேலும் கூறினார், “நீ பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு, தொண்டு புரியும் வேலைசெய்வதே நல்லது. அப்படி உனக்கு அதில் விருப்பம் இல்லையென்றால், விவசாயத் தொழிலில் ஈடுபடுவது மிகவும் நல்லது" என்றார்.

தாயாரின் தாராளம்

               `தன்னை ஐ.சி.எஸ்., படிக்க வைக்க தந்தை அனுமதிக்கவில்லையே!’ என்று ஜகதீசர் மீண்டும் கவலையுடன் சிந்தித்தார். மருத்துவக் கல்வி படித்தால் தந்தை கூறுவதைப் போல் மக்களுடன் தொடர்பு ஏற்படும்; தொண்டு செய்யலாம்; எனவே தந்தையிடம் கூறி அனுமதி கேட்டார். மறுபடியும் தந்தை மறுத்துவிட்டார்.

               ஓரே மகனை இலண்டனுக்கு அனுப்பிவிட்டுத் தான்மட்டும் தனியாக இருப்பது எப்படி என்று தாயாரும் கவலைப்பட்டார். ஜகதீசரின் இலண்டன் பயணம் தடைபட்டது. கடல் கடந்து, இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகருக்குச் சென்று கல்விகற்கும் வாய்ப்புக் கிட்டாதோ? இளைய மனத்தில் ஒரு தவிப்பு ஏற்பட்டது; பாவம்… எண்ணத்தில், கலங்கிப் போய், முடங்கிக் கிடந்தார். பெற்றோர் சொல்லை மீறி நடக்கவும் ஜகதீசருக்கு மனம் ஒப்பவில்லை.

               ஒருநாள், ஜகதீசரின் தாயார் மகனை அழைத்தார். "உனது எதிர்கால முன்னேற்றத்தை நான் தடுத்துவிட்டேனா?" என்று வேதனைப்பட்டார். “ஏதோ பாசத்தினால் உன்னை பிரிய மனமின்றி அப்படிக்கூறிவிட்டேன்; மனம் வருந்தாதே! மேல்நாட்டுக்குச் சென்று நீ படித்து விட்டுவா! உனது வாழ்க்கை மேன்மை பெறும்! இப்போது உனது தந்தையிடம் பணமில்லை; அதை உன்னிடம் சொல்ல விரும்பாமல், ஏதேதோ காரணம் கூறி வருகிறார்."

               "எனது நகைகள் அனைத்தையும் விற்று அந்தப் பணத்தைத் தருகிறேன்; எடுத்துக்கொண்டு நீ இலண்டனுக்குச் சென்று படி! நாங்கள் பணம் அனுப்புகிறோம். நீ இங்கிலாந்துக்குப் போ! புறப்படத் தயாராகு!” என்று தாயார் மனதாரக் கூறினார். தாயாரின் சம்மதத்தைக் கேட்ட ஜகதீசர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

               இரண்டாண்டுக் காலமாக வேலைக்குப் போகாமலிருந்து பகவான் சந்திரருக்கு மீண்டும் அரசுப் பணியாற்றிட உத்தரவு கிடைத்துவிட்டது. ஜகதீசரின் படிப்புச் செலவிற்காக தாயாரின் நகைகளை விற்க வேண்டியத் தேவை ஏற்படவில்லை. மகன் ஜகதீசர், இலண்டனுக்குச் சென்று படிப்பதற்கான பணத்தைத் தந்தையே தேடிக் கொடுத்தார். ஜகதீசர் ஐ.சி.எஸ் படிக்க இலண்டனுக்குப் புறப்பட்டார். கல்கத்தாவிலிருந்து கப்பல் ஏறினார்.

காய்ச்சலும் கப்பல் பயணமும்

               துறைமுகத்தை விட்டுக் கப்பல் கிளம்பியதும், ஜகதீசருக்கு மலேரியா காய்ச்சல் வந்துவிட்டது. அந்தக் கப்பலிலே வெள்ளைக்காரர்கள் அதிகம் பேர் பயணம் செய்தார்கள்; மனிதாபிமானத்தோடு அய்ரோப்பியர் ஒருவர் கூட, ஜகதீசருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. காரணம் `கறுப்பர்-வெள்ளையர்` என்ற `நிற-இன`-வேறுபாடுதான்! ஆனால், ஒரு மருத்துவர் மட்டும் ஜகதீசருக்கு உதவிகளைச் செய்ய முன்வந்தார். தொடர்ந்து அவரை கவனித்துக்கொண்டார்.

               அய்ரோப்பியர்களுக்கு, இந்தியர் என்றாலே அக்காலத்தில் பிடிக்காது. அவர்கள் ஆளவந்தவர்கள் அல்லவா? ஆதிக்க மனப்பான்மையும், `இந்தியர்கள் என்றால் அடிமைகள் தானே!’ –என்னும் தாழ்வு மனப்பான்மையும் மனிதர்களை வேறுபடுத்தின. உதவிதான் புரியவில்லை; உபத்திரமாவது செய்யாமல் இருந்தார்களா?

               ஜகதீசருக்கு காய்ச்சல் நோய் கடுமையாகிவிட்ட தென்றும், ஆள் பிழைக்கமாட்டார் என்றும், இதர பயணிகளிடம் ஒரு பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அதனால், மற்ற பயணிகளுக்கு பயம் உண்டாகிவிட்டது. மலேரியா காய்ச்சல் தொட்டவரை பற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தை அந்த வெள்ளையர்கள் கப்பல் பயணிகளிடம் உருவாக்கிவிட்டனர்.

               மனிதாபிமானமற்ற முறையில் அய்ரோப்பியர்கள் பரப்பிவிட்ட பீதியைக் கண்டு ஜகதீசர் பயப்படவில்லை. மனத் தளர்ச்சியும் அடையவில்லை. துணிவே துணை என்ற மன உறுதியுடன் இருந்தார். நோய் ஓரளவுக்கு அவரைத் துன்புறுத்திவிட்டு, பிறகு தானாகவே மறைந்து போனது. மலேரியாக் காய்ச்சலின் பாதிப்பிலிருந்து முழுவதும் விடுபட்டார். இறுதியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன் மாநகரைச் சென்றடைந்தார்.

ஐ.சி.எஸ்.நிர்வாகியா? அறிவியல் மேதையா?

               இலண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயிலத் துவங்கினார். அவர் படிக்க வந்தது ஐ.சி.எஸ் படிப்பு, ஆனால், அவர் சேர்ந்து படிக்கத் துவங்கியதோ மருத்துவம். அக்கல்வியிலாவது, அவர் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படித்தாரா? இல்லையே! ஏன்?

               மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் பிணங்களை அறுத்துச் சோதித்துப் பார்த்து, அதன் நுட்பங்களை உணர்ந்து படிக்க வேண்டும். ஜகதீசர் முதன் முதலாக ஒரு பிணத்தை அறுத்தார்! அந்தப் பிணத்திலிருந்து வெளியேறிய துர்நாற்றம் அவரது உடம்புக்கு ஒத்துவரவில்லை. அதனால், அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. அந்தக் காய்ச்சலால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். `சுண்டைக்காய் கால்பணம், சுமைக்கூலி முக்கால் பணம்` என்பது போல, அவர் அறுத்ததோ ஒரு பிணம்! நோய்க்குச் செலவு செய்ததோ அவரால் தாங்க முடியாத பெரும்சுமை!

               மருத்துவ வல்லுநரான டாக்டர் ஒருவர், ஜகதீசரின் உடலைச் சோதித்துப் பார்த்தார். "பிணத்தின் துர் நாற்றம் அவரது உடம்புக்கு ஏற்றதாக இல்லை; அவர் மருத்துவக் கல்வி கற்க இயலாது" - என்று கூறிவிட்டார்! டாக்டரின் முடிவை அவரால் மறுக்க முடியவில்லை. ஆகவே, மருத்துவப் படிப்பைக் கைவிட்டார்.

               மருத்துவம் ஒத்துவரவில்லை என்றதும், அவர் எந்தக் கல்வியைக் கற்கலாம் என்று சிந்தித்தார். `அறிவியல்` கற்பது என்ற முடிவுக்கு வந்தார். அதனால், அந்தப் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறி, கேம்பிரிட்ஜ் (ஊயஅசெனைபந) பல்கலைக் கழகத்தில் உள்ள ‘கிரிஸ்ட் சர்ச் காலேஜ்‘ ல் சேர்ந்து விஞ்ஞானம் படிக்கலானார்.

               விஞ்ஞானப் பாடங்களில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு பேராசிரியர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ஜகதீசர் அக்கல்வியில் மேலும் உற்சாகமாகப் படிப்பதற்கான ஆக்கப்பூர்வ வழிகளையும், ஆலோசனைகளையும் கூறி அவரை ஊக்கப்படுத்தினார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துச் சூழ்நிலையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, அறிவியல் கல்வியில் மிக ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தினார் ஜகதீசர்.

உடல் நோயும் படகு ஓட்டமும்

               இதற்கிடையில், அவரை வாட்டி வதைத்து வந்த அந்த நச்சுக் காய்ச்சல், ஜகதீசர் கேம்பிரிட்ஜ் வந்த பிறகும் உடல் நிலையைப் பாதித்தது. மேலும் இலண்டன் மாநகரின் தட்ப வெப்பமும் அவரது உடலுக்கு ஏற்றதாக இல்லை. அதனால், கேம்பிரிட்ஜ் டாக்டர்களைப் போய்ப்பார்த்தார்; தனது உடலை அடிக்கடி தாக்கும் நச்சுக் காய்ச்சல் நோயைப் பற்றிய விளக்கம் வேண்டினார்; சோதனைகளையும் செய்து கொண்டார்.

               கேம்பிரிட்ஜ் டாக்டர்கள் ஜகதீசரின் உடலை முழுவதுமாய் சோதித்துப் பார்த்தனர்; பிறகு, “நாங்கள் கூறுகிறபடி நடந்தால், காய்ச்சல் நோயைக் குணப்படுத்தலாம்! ஆனால், உங்களால் செய்ய முடியாதே” என்றனர். ஜகதீசர், “ என்ன வழி என்று கூறுங்கள். தவறாது நடக்கிறேன்” என்று உறுதி கூறினார்.

               “தினந்தோறும் ஆற்றங்கரைக்குச் சென்று, படகு, கயிற்றை மார்பில் கட்டிக் கொண்டு அந்தப் படகை இழுத்துச் செல்ல வேண்டும். ஆற்றில் படகு ஓட்டும் பயிற்சி ஒன்றுதான் நல்ல உடற் பயிற்சியாகும். அந்தப் பயிற்சியைத் தவறாமல் நீங்கள் செய்து வந்தால், உடல் உரம் பெற்று, நோய்க்கு ஆளாகாமல், ஆரோக்கியமாக வாழலாம்” என்று டாக்டர்கள் ஜகதீசருக்கு அறிவுரை கூறினார்கள்.

               ஜகதீச சந்திரபோஸ், கேம்பிரிட்ஜ் டாக்டர்கள் கூறியபடி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் படகு இழுக்கும் பயிற்சியை மேற்கொண்டார். படகு ஓட்டவும் கற்றுக் கொண்டார். அவர் படகு ஓட்டும்போது ஒரு நாள் தவறி ஆற்றிலே விழுந்துவிட்டார். அப்போது ஆற்றில் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், ஜனதீசர் தனது ஆற்றலின் வலிமையால் கரையேறி உயிர் தப்பினார். படகுப் பயிற்சியை இடைவிடாது தொடர்ந்து செய்து வந்ததால், அவரது உடல் வேர்த்தது! உடலிலிருந்த கெட்ட நீர் வெளியேறியது. அதற்குப் பிறகு, காய்ச்சல் என்ற வியாதியே தலை காட்டவில்லை. படகு ஓட்டும் பயிற்சிதான் அவரது காய்ச்சலுக்குரிய மருந்தாகப் பயன்பட்டது.

               காய்ச்சல் நோய் மாயமாய் மறைந்துவிட்ட தருணம் முதல், கல்வியிலே முழு மூச்சாகக் கவனம் செலுத்தினார் ஜகதீசர். அவரது அறிவாற்றல் நாளுக்கு நாள், மேலும் மேலும் ஒளிர்வதைக் கண்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்; பயிலும் மாணவர்கள் அவர்பால் மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள். கல்வி உதவித் தொகையும் கிடைத்ததால், மேலும் ஊக்கத்துடன் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடலானார்.

`கேம்பிரிட்ஜ்` பல்கலைக் கழகப் படிப்பு

               விஞ்ஞானத்தின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துப் படித்தார். அந்த அளவுக்கு விஞ்ஞானம் அவருக்கு மிக எளிமையாக இருந்தது. இறுதியில் ஜகதீசர் இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய முப்பிரிவுகளையும் தோர்ந்தெடுத்துக் கவனமாகப் படித்தார்.

               கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், சிறந்த அறிஞர்கள், மாணவர்களது எண்ணங்களை ஈர்க்கும் வகையில் இயற்பியல் பாடங்களை கற்பிக்கும் திறமையாளர்கள்; அவர்களிடம் படித்த ஜகதீசருக்கு, விஞ்ஞானப் பாடங்கள் மிக எளிதாக விளங்கின.

               அவர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து படித்தார். நான்காம் ஆண்டு இறுதியில், பல்கலைக் கழகத்தின் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளிலும் திறமையாகப் படித்து பல்கலைக் கழகத்தின் பி.எஸ்.ஸி. பட்டத்தைப் பெற்றார்.

               மகன் ஜகதீச சந்திர போஸ் விஞ்ஞானத் துறையிலே பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றதைக் கேள்விப்பட்டு, அவரைப் பெற்றெடுத்த போது, அடைந்த மகிழ்ச்சியைவிட, பெரும் களிப்பிலே மிதந்து பேருவகைக் கொண்டனர் அவரது பெற்றோர்கள்.

பேராசிரியர் ‘பாசெட்’ - வைசிராய் ‘ரிப்பன்’ தொடர்பு

               கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘பாசெட்’ என்பவர், அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்; அன்பும், பண்பும் கொண்டவர், அடக்கமும், ஒழுக்கமும், நம்பிக்கையும், நாணயமும், நீதியும், நேர்மையும் ஒருங்கே பெற்ற ஜகதீசர் மீது அளவிலாப் பற்றுக் கொண்டிருந்தார். தன்னைப்பற்றிய நினைவு தனது மாணவன் நெஞ்சத்திலே என்றும் நிலைத்து நிற்குமாறு ஏதாவது உதவி செய்ய நினைத்தார். அவர் தனது நினைப்பை நிசமாக்க எண்ணினார் - இப்படி : அப்போது இந்தியாவில் வைசிராயாக இருந்தவர்; ‘ரிப்பன் பிரபு!’ அவரை இந்திய மக்கள் ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றிப் புகழ்ந்தனர்! அவரும் இந்தியர்களை மனமார நேசித்தார். ‘ரிப்பன் பிரபு’, பேராசிரியர் பாசெட்டுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

               “அறிவியல் பட்டம் பெற்ற எனது மாணவர் ஜகதீச சந்திர போஸ், தங்களைக் காண வருகிறார்! அவருக்கு உயர் பதவி வழங்கி உதவ வேண்டும்” என்று விளக்கி பேராசிரியர் பாசெட், ரிப்பன் பிரபுக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர் சந்திர போஸ், பேராசிரியருக்கு நெஞ்சார நன்றி கூறி நின்றார் ; அவரது முகத்தில், அப்போது ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டு ஓடி வழிந்து பெருகியது !

               படிப்பை முடித்து, பட்டம் பெற்ற கையோடு, ஜகதீசர், இந்தியா திரும்பினார். இந்திய வைசிராய் ‘ரிப்பன் பிரபு’வைக் கண்டு பேராசிரியர் பாசெட் தந்த கடிதத்தைக் கொடுத்தார். பரிந்துரைக் கடிதத்தை வைசிராய் படித்துப் பார்த்தார்.

               உடனே, கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதினார் ; ஜகதீசரிடம் கொடுத்து, “நேராக இயக்குநரைச் சென்று பாருங்கள், உரிய பதவியை உங்களுக்கு அளிப்பார்” இவ்வாறு, ரிப்பன் பிரபு ஆதரவாய்க் கூறி, அவரை இயக்குநரிடம் அனுப்பி வைத்தார்.

கடுப்பாகிப் போன கல்வி இயக்குநர்

               ரிப்பன் பிரபுவுக்கு, நன்றி கூறிக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார் ஜகதீச சந்திர போஸ் பின்னர் தனது வீட்டிற்கு நேராகச் சென்று, தாய் தந்தையரைக் கண்டார். மகனைக் கண்ட பெற்றோர் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவிக் கொண்டார்கள். குதூகலம் குமிழியிட தனது அனுபவங்களைக் கலகலப்போடு பரிமாறிக் கொண்டார்.

               பின்னர், கல்வித்துறை இயக்குநரை சந்திக்கப் போனார். ரிப்பன் பிரபு கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார். அக்கடிதத்தைப் படித்த இயக்குநருக்கு ஜகதீசர் மீது பரிவு ஏற்படுவதற்குப் பதிலாக பகை உணர்வு தலைதூக்கியது.

               காரணம் இயக்குநர் ஒரு வெள்ளைக்காரர். இந்தியரை வெறுப்பவர், அடிமைகள் என நினைப்பவர், அது மட்டுமின்றி, ‘அறிவியல் துறையிலே பணியாற்ற இந்தியர்கள் தகுதியற்றவர்கள்’ என்பது அவரது கணிப்பு – இயக்குநருக்கு மேலே உள்ளவர் வைசிராய்! ‘ஒரு வைசிராயிடமிருந்து பரிந்துரைக் கடிதம் வாங்கி வந்து விட்டாரே!’ எனக் கடுப்பாகிவிட்டார். ஜகதீசர் மீது பகை கொண்டார்; கோபமாகவும், வெறுப்பாகவும் பேசினார்.

               ஜகதீசரின் படிப்புக்கும், தகுதிக்கும் கீழானவர்கள் பார்க்கிற சாதாரண வேலையைக் கொடுத்தார். அந்த வேலையே, வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டு நேரே வீடு வந்து சேர்ந்தார் ஜகதீசர்.

தேடிவந்த பேராசிரியர் பதவி

               சில மாதங்கள் கடந்துவிட்டன. அன்றொரு நாள் வைசிராயின் அலுவலகத்திலிருந்து கல்வித் துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், வைசிராய் பரிந்துரை செய்திருந்த அறிவியலாளர் ஜகதீசருக்கு பணி வழங்கப்பட்டதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றவுடனேயும், அதில் உள்ள அக்கேள்வியைப் படித்தவுடனேயும் இயக்குநர் கதிகலங்கிப் போனார். அச்சம் அடைந்தார். உடனே, ஜகதீச சந்திர போசுக்கு உயர் பதவி அளிக்க முன் வந்தார்.

               இயக்குநர் வைசிராயின் கடிதத்திற்கு பதிலை அனுப்பிவைத்தார். அதில், ‘ஜகதீசருக்கு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டது’. - என்று எழுதினார். அதே வேகத்திலே, ஜகதீசருக்கு மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு உத்தரவிட்டார். ஜகதீசரின் பெற்றோர், மகன் பேராசிரியராக நியமனம் பெற்றதை அறிந்து ஆனந்தனம் கொண்டனர்.

               அந்த நாட்களில் பேராசிரியர் பதவி வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்தியர்கள் அப்பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்பது வெள்ளைக்காரர்களது முடிவு அப்படியானால், ஜகதீசருகூகு எப்படிக் கொடுக்கப்பட்டது பேராசிரியர் பதவி?

               கேப்பிரிட்ஜ் பேராசிரியர்களையே பிரமிக்க வைத்த அறிவு ஆற்றலுடன், ரிப்பன் பிரபுவின் பரிந்துரை வேறு! அதிலும் வெள்ளைக்கார இயக்குநரின் இனக்காழ்ப்பை மீறி வழங்கப்பட்ட பேராசிரியர் பதவி என்றால் சாமான்யமானதா? பகவான் சந்திர போஸ் தனது மகனின் ஆற்றலை வியந்து பேசும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்வார்.

               வெள்ளைக்கார இயக்குநர் வேண்டா வெறுப்பாக ஜகதீசருக்குப் பேராசிரியர் பதவியைத் தந்துவிட்டார். ஆனால், வெள்ளைக்காரப் பேராசிரியர்களுக்குச் சமமாகக் கருதிட அவருடைய, இன வேற்றுமை உள்ளுணர்வு இடம் தரவில்லை. அது மட்டுமா? வெள்ளைக்காரப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்குச் சமமாக அவருக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை.

ஊதிய வேறுபாடு

               வெள்ளைக்காரப் பேராசிரியர்களின் சம்பள விகிதத்தில் மூன்றில் இரண்டு பங்கை மட்டுமே இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் என்று அந்நிய ஆட்சி முடிவு செய்து இருந்தது. ஆனால், ஜகதீசருக்கு மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மட்டும் வழங்கப்படும் என கல்வித்துறை இயக்குநர் அறிவித்தார். இதற்கு அவர் கூறிய காரணம், ஜகதீசரின் பேராசிரியர் பணி நிரந்தரமாகவில்லை என்பதுதான்.

               கடுமையான விதிமுறைகள் – மனிதாபிமானமுற்ற அணுகுமுறைகள் – வஞ்சகம் நிறைந்த போக்குகள் – இனப்பாகுபாடு கல்வித்துறை இயக்குநர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் எதேச்சதிகாரமும் ஆணவமும் அங்கு வந்து ஜகதீசர் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. வேலைக்கான சம்பளத்தில் கூடவா இனப்பாகுபாடும் சூழ்ச்சியும் என்று ஜகதீசர் மனம் நொந்தார்.

               மனிதாபிமானமற்ற இந்தக் கொடுமையை எப்படியாவது எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். தனது துறையைச் சார்ந்த மேலதிகாரிகளுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்து, நீதி கேட்டார். எந்த அதிகாரியிடமிருந்தும் எவ்விதப் பதிலும் வரவில்லை. எனவே, அமைதியான முறையில் அநீதியை எதிர்த்துப் போர்க்குரல் கொடுக்கத் தீர்மானித்தார்.

அநீதிக்கு எதிரான அமைதிப் போர்

               ‘பேராசிரியர் பணிக்குத் தவறாமல், சரியான நேரத்தில் கல்லூரிக்குச் செல்வது; வேலையையும் குறைவின்றிச் செய்வது; ஆனால், சம்பளம் பெறும் நாளில் மட்டும் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றுவிடுவது’ – என்று தீர்மானம் செய்தார். நியாயம் கிடைக்கும்வரை இவ்வாறே போராடுவது என்ற முடிவை எடுத்து, அதன்படி நடந்தும் வந்தார் ஜகதீசர்.

               தனது இந்த முடிவைத் தந்தையிடம் கூறினார். அவரும், ‘அநீதியை எதிர்க்கப் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை’ என்றார். தந்தை ஆதரவும் கிடைத்துவிட்டது. அதனால் ஜகதீசர் முழுமனதுடன் கல்வித்துறை நிர்வாகத்தின் அநீதியைக் கடுமையாகவே எதிர்த்தார்.

ஏற்றமும் இறக்கமும்

               இதனூடே, பகவான் சந்திரபோஸின் குடும்பம் பொருளதாரச் சிக்கலில் சிக்கித் தவித்தது. கடன் சுமையும் ஏற்பட்டது.

               பகவான் சந்திரபோஸ் அற்புதமான மனிதர்! மற்றவர்களுக்கு உதவி செய்வதே பிறவியின் பயன் என்று நம்புபவர்’! இரக்க குணம் கொண்டவர்! தேசப்பற்று மிக்கவர். அனைத்தையும்விட, தாய் மொழியான ‘வங்கமொழி’ மீது உயிரையே வைத்திருப்பவர். மனித நேயம் கொண்ட அவரது குடும்பம், பொருளாதாரத்தில் சிரமப்பட்டது. கேட்கவே வேதனையாக இருந்தது.

               கல்கத்தா ‘பீபிள்ஸ் வங்கி’ மிகவும் பிரபலமானது. அவ்வங்கியில் பகவான் சந்திர போஸீக்குப் பல பங்குகள் இருந்தன. அவற்றின் மூலம் நிறைய லாபம் கிடைத்தது. அவருக்கோ பரந்த உள்ளம்; யாருக்கும் உதவி செய்யும் மனம்; கொடுத்துச் சிவந்த கர்ணன் போல அனைத்துப் பங்குகளையும் ஏழை மக்களுக்கும், நண்பர்களுக்கும் அள்ளிக் கொடுத்தார். இல்லாதவர்களுக்குத் தனது பங்கு லாபங்களைப் பிரித்துக் கொடுத்தார். அத்தோடாவது அவர் நின்றிருக்கலாம். பலருக்கு ஜாமீன் கையொப்பங்களையும் போட்டுக் கொடுத்தார். அதனால் பல தொல்லைகளை ஏற்றார். நடுத்தெருவில் வந்து நின்றார். நான்கு பேர் இழிவாகப் பேசும் நிலையும் அவருக்கு வந்தது.

               தந்தை பகவான் சந்திரபோஸ் பட்ட அனைத்துக் கடன்களும், மகன் ஜகதீசர்தான் அடைக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. ‘தந்தை பட்ட கடன்களைத் தீர்த்தால்தான், தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏற்பட்டுவிட்ட கெட்டபெயரைப் போக்கிடமுடியும். இல்லாவிட்டால், போஸ் குடும்பம் மோசடிக் குடும்பம் என ஏசுவார்கள்; பித்தலாட்டக் குடும்பம் என்று தூற்றுவார்கள்! ஏமாற்றுக் குடும்பம் என்று எள்ளி நகையாடுவார்கள்’- என்றெல்லாம் நினைத்துக் கலங்கினார். இரவு பகல் எல்லாம் ஜகதீசர் வருந்தினார்.

               தந்தை பெற்றிருந்த கடன்களை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிட, நிலங்களை எல்லாம் விற்று விட்டார்; அவரது நண்பர்கள் தடுத்தும் கேட்கவில்லை. ‘தந்தையின் மானம் தான் பெரிது; குடும்ப மரியாதைதான் முக்கியமானது’ – என்று அனைத்து சொத்துக்களையும் விற்று பாதியளவு கடன்களை அடைத்தார்.

               ஒரு பேராசிரியர் தனது பணியைத் தவறாமல் ஒழுங்காகச் செய்தும் கூட, சம்பள விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் ஓரவஞ்சனை காட்டுகிறதே என்பதற்காக தனது கடமையைச் சிறிதும் அவர் புறக்கணிக்கவில்லை. அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதில் ஜகதீசர் காட்டிய ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் கண்டு மாணவர்களும், மற்றப் பேராசிரியர்களும் அவரது பணி ஒழுங்கைப் பாராட்டினார்கள்.

நீதி நிலைத்தது

               ஜகதீசர் வகுப்பில் பாடம் கற்பிக்க எடுத்த முயற்சிகளையும், மாணவர்களுக்குப் புரியும் விதமாக விளக்கங்கள் அளித்ததையும் கண்டு புகழ்ந்தார்கள்.

               ஜகதீசரின் நேர்மை – ஒழுக்கம் - பாடம் நடத்தும் கடமையுணர்வு – எல்லாம் கல்லூரி முழுவதும் பரவியது. அவருக்குத் தனியொரு மரியாதையும், மதிப்பும் உருவாகிப் பெருகியது. கல்வித்துறை இயக்குநரான அந்த வெள்ளைக்காரருக்கும் அது தெரியவந்தது. உண்மை தெரிந்ததால் அவர் வெட்கப்பட்டார்; தலை கவிழ்ந்தார்.

               சம்பளம் பெறாமலே இவ்வளவு அற்புதமாக ஒரு பேராசிரியர் தனது கடமையை ஆற்றுகின்றாரே என்பதை உணர்ந்து கல்லூரிக் கல்வி இயக்குநரின் நெஞ்சமே அவரைச் சுட்டது. அவரது கல்மனதையும் காயப்படுத்திக் கரைத்தது. விளைவு? ஜகதீசரின் பேராசிரியர் பணியை நிரந்தரப்படுத்தி உத்தரவு பிறப்பித்தார் இயக்குநர். அவர் பணிசெய்த மூன்றாண்டுகளுக்கான முழுச் சம்பளத்தையும் உடனடியாக வழங்கவும் ஆணையிட்டார். ஜகதீசர், தொடுத்த அநீதிக்கு எதிரான போராட்டம் வெற்றியடைந்தது. நீதி வென்று நிலைத்தது.

               முழுச் சம்பளத்தையும் பெற்றார் ஜகதீசர்; தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களை அழைத்தார். தொகை முழுவதையும் திருப்பிக் கொடுத்துக் கடனைத் தீர்த்தார்.

திருமணமும் இல்லறப் பொறுப்பும்

               ஜகதீச சந்திரபோஸ், பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அவரது துணைவியாரின் பெயர் அபலாபோஸ். (ஹயெடடய க்ஷடிளந) அபலா போஸ் மருத்துவக் கல்லூரி மாணவியாக இருந்தபோது போஸைத் திருமணம் செய்து கொண்டார். அவரது துணைவியார் அபலா போஸ், அருங்குணவதியாக – மாமியாருக்கு ஏற்ற மருமகளாக விளங்கினார். சிக்கனமாகக் கணவரின் வருமானத்திற்கு ஏற்றபடி குடும்பம் நடத்தினார்.

               பட்ட கடன் அனைத்தையும் மகன் திருப்பிக் கொடுத்துவிட்ட மறு ஆண்டே பகவான் சந்திர போஸ் மரணமடைந்தார். ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி; அவன் தந்தை பட்ட கடன் தீர்த்தலே’ என்னும் புதுமொழிக்குப் பொருத்தமானவர், ஜகதீசர்! ஆமாம், ஜகதீச சந்திரபோஸ் மக்கள் செல்வாக்கை உருவாக்கிவிட்டார்! பகவான் சந்திர போஸ் காலமான மறு ஆண்டே ஜகதீசரின் தாயார் பாமாசுந்தரியும் மறைந்துவிட்டார். தந்தையும் தாயும் அடுத்தடுத்து மறைந்த சோகத்தால் ஜகதீசர் மீளவியலாத துயரமடைந்தார்.

               பகவான் சந்திர போஸ் பரீத்பூரில் உதவிக் கமிஷணராகப் பணியாற்றினார். அப்போது, ஒரு பொருட்காட்சியைக் தொடங்கி நடத்தினார். அந்தப் பொருட்காட்சி ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. பொருட்காட்சியின் அய்ம்பதாவது ஆண்டு விழாவை மக்கள், சிறப்பாகக் கொண்டாடினார்கள். கோலாகலமாக நடைபெற்ற அந்த விழாவிற்கு ஜகதீச சந்திர போசையே, தலைமையேற்று நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த விழாவில் ஜகதீசர் உருக்கமாகப் பேசினார். “எனது தந்தை மக்களுக்காகப் பல பணிகளைத் தொடங்கினார். அவற்றிலே அவர் வெற்றியோ தோல்வியோ கண்டாலும், அவையாவும் வெற்றிக்கு நாட்டப்பட்ட அடிப்படைக் கற்கள். எனது தந்தையைப் போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் தோன்ற வேண்டும். அப்போதுதான் இந்தியா முன்னேறும். இந்திய மக்களும் விழிப்படைவார்கள்! என்று பெருமிதத்தோடு அவர் குறிப்பிட்டார். தந்தையார் செய்த பொதுப் பணியின் மீது அவருக்கு அளவில்லா மதிப்பும், பெருமையும் இருந்தது.

அறிவியல் துடிப்பும் ஆராய்ச்சி முடிவும்

               பேராசிரியர் போஸ், அறிவியல் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பவராக மட்டும் இருக்கவில்லை. எப்பொழுதும் புதிய சிந்தனைகளையும், புதிய எண்ணங்களையும் மனதில் கொண்டிருந்தார். அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டுமெனவும், தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், அறிவியலில் புதுமைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் துடித்தார்.

               ஆராய்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்குத் தொண்டு செய்யவே விரும்பினார். அதன் மூலம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிட முனைந்தார். தனது ஆராய்ச்சியில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்; உலக மக்களுக்கு உதவியாக அந்த ஆராய்ச்சிகள் அமைய வேண்டும் என்று எண்ணினார்.

               அறிவியல் ஆராய்ச்சிக்கு சோதனைக் கூடம் தேவை. அதற்குப் பணம் தேவை. பணத்துக்கு என்ன செய்வது? தான் பணிபுரியும் கல்லூரியிலும் சோதனைக் கூடம் இல்லை. இது பற்றி கல்லூரி இயக்குநருக்கு அவர் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், கல்லூரிக்கு ஓர் ஆராய்ச்சிக் கூடம் தேவை. அப்போதுதான் மாணவர்களுக்கு விஞ்ஞானப் பாடங்களை, செயல்முறைப் பயிற்சிகளுடன் விளக்கிக் கூற முடியும், அறிவியல் பாடம் மீது ஆர்வமும், உற்சாகமும் ஏற்படும் என்று குறிப்பிட்டார். ஆனால், கல்லூரி இயக்குநரிடமிருந்து எவ்விதப் பதிலுமில்லை. இவரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆம், ஜகதீசர் தனது வீட்டிலேயே ஓர் ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். கல்லூரிப் பணிகள் முடிந்த பின் வீட்டிற்கு வந்து தனது ஆய்வுகளைத் தொடங்குவார்; இரவெல்லாம் கண்விழித்து எழுதுவார். 1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு முப்பத்தைந்தாவது பிறந்தநாள் வந்தது. அந்த நாளில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.

               தனது வாழ்நாளின் மீதிக் காலம் முழுவதும் அதாவது, ‘தான் சாகும்வரை அறிவியல் ஆராய்ச்சிக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பது’ – என்பதுதான் அந்த சபதமாகும்.

               காலத்துக்கு சவால்விட்ட நாள் முதல், ஆராய்ச்சியில் அவர் கடுமையாக ஈடுபட்டார். முதன் முதல் ஜகதீசர் மின்சாரத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலே கவனத்தைச் செலுத்தினார். தனது அறிவியல் ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடைக்குமா என்று கல்கத்தா நகர் முழுவதும் தேடிப் பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. அதற்கான மனம் தளர்ந்துவிடவில்லை. இரும்பு வேலை செய்யும் ஒரு கருமானைத் தேடிக் கண்டுபிடித்தார். அந்த தொழிலாளிக்கு அறிவியல் சோதனைக் கருவிகளைச் செய்யும் பயிற்சி கிடையாது. ஆனால், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே, அதற்கொப்ப, அந்தத் தொழிலாளியின் துணை கொண்டே சில சிக்கலான கருவிகளைச் செய்து கொண்டார். அந்தக் கருவிகளை வைத்துக் கொண்டே, ஜகதீசர் தனது ஆராய்ச்சிப் பணிகளை ஆரம்பித்தார். மேலும், தனது சம்பளத்திலிருந்து சேமித்து ஒரு ஆய்வகத்தை தனது வீட்டிலேயே உருவாக்கினார்.

               தான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் ஓராண்டிற்குள்ளேயே மின்சாரத்தின் முக்கியமான தன்மை ஒன்றைக் கண்டுபிடித்தார்.

               “மின்சார அலைகள், ஒளி அலைகளை ஒத்திருக்கின்றன” என்பதுதான் ஜகதீசர் கண்டுபிடித்த முதல் ஆராய்ச்சியின் முடிவாகும். கம்பிகள் இல்லாமல், அந்த அலைகள் பொருள்களைக் கடந்து செல்லும்வல்லமை பெற்றவை என்பது அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த உண்மை. மேற்கண்ட உண்மைகளை உலகுக்கு நிருபித்துக்காட்ட முயற்சிகள் மேற்கொண்டார்.

               கல்கத்தா மாநகராட்சி மன்ற மண்டபத்தில் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்காள கவர்னர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ஜகதீச சந்திர போஸ் தனது கண்டுபிடிப்பை அங்கே கூடியிருந்தவர்களுக்கு விளக்கினார். பின்பு கருவிகள் மூலம் நிரூபித்துக் காட்டினார். கம்பிகள் ஏதுமில்லாமல் மின்சாரம், பொருள்களைக் கடந்து செல்லும் தன்மை பெற்றது என்பதை ஜகதீசர் கூடியிருந்த மக்கள் முன்பு நிரூபித்தார்.

               மின்சார அலைகளின் தொகுதியை மூன்று சுவர்களுக்கு அப்பால் இருந்த மணி ஒன்றை நோக்கி செலுத்தினார்.

               அந்த மின்சார அலைத்தொகுதி மூன்று சுவர்களையும் வெகு வேகமாகவும், சுலபமாகவும் கடந்து சென்று, அங்கே இருந்த மணியை ஒலிக்கச் செய்தது. அதேபோல், அங்கே இருந்த துப்பாக்கி ஒன்றையும் வெடிக்க வைத்தது. வெடி மருந்தையும் பற்ற வைத்தது.

               அறிவியலின் இந்த அற்புதச் சக்திகளை, அங்கு திரளாகக் கூடியிருந்த மக்கள் முதன் முதலாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர். இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பரவியது. அது மட்டுமன்று இங்கிலாந்து நாட்டுக்கும் எட்டியது! இந்தியாவின் புகழ், மின்அலை போல் மேவி கடல் கடந்து பெருகியது.

இலண்டன் ராயல் சொசைட்டியின் பாராட்டு

               ஜகதீச சந்திரபோஸ், தனது ஆராய்ச்சியின் போது என்னென்ன மாற்றங்களைப் பார்த்தாரோ, அவற்றை எல்லாம் தொகுத்து "மின்சார ஒளி முறிவு" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையை இங்கிலாந்திலுள்ள "ராயல் சொசைட்டி" என்ற ‘அறிவியல் பேரறிஞர் அவை’க்கு அனுப்பி வைத்தார்.

               இங்கிலாந்து ராயல் சொசைட்டியின் அறிவியல் பேரறிவாளர்கள் அனைவரும் ஜகதீச சந்திர போசின் கட்டுரையைப் படித்து வியப்பில் ஆழ்ந்தார்கள். அந்தக் கட்டுரை “ராயல் சொசைட்டி” யினால் வெளியிடப்படும் அறிவியல் பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டது.

               உலகத்தில் உள்ள அறிவியல் வல்லுநர்கள் எல்லாம் அந்தக் கட்டுரையைப் படித்து, ஜகதீச சந்திர போஸை ஓர் அறிவியல் மேதை என்று ஏற்றுக் கொண்டார்கள். மனமாரப் பாராட்டியும் மகிழ்ந்தார்கள். உலகத்தின் பல அறிவியலாளர் அவைகளில் இருந்தும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டுக் கடிதங்கள் வந்துகுவிந்தன.

               ஜகதீசரின் அறிவியல் அற்புதக் கண்டுபிடிப்பை வியந்து போற்றிய இலண்டன் பல்கலைக் கழகம், அவருக்கு “டாக்டர் ஆஃப் சயின்ஸ்” (னுடிஉவடிச டிக ளஉநைnஉந) என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. மேற்கொண்டு நிதி உதவி வழங்குவதாகவும் தெரிவித்தது. ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துமாறும் ‘ராயல் சொசைட்டி’ ஜகதீச சந்திர போஸைக் கேட்டுக் கொண்டது. இந்தியாவின் புகழ் ஜகதீச சந்திர போஸினால் உலகம் முழுவதும் பரவியது. பிறந்த மண்ணுக்கு இதைவிடப் பெரும்பேறு வேறு என்ன வேண்டும்?

               இங்கிலாந்து அறிவியல் பேரவை ஜகதீச சந்திர போஸ் அறிவை பலபட பாராட்டியதற்குப் பிறகே, பிரிட்டிஷ் இந்திய பேரரசு அவரது அறிவாற்றலை உணர்ந்தது. அறிவியல் ஆராய்ச்சியை அவர் தொடர்ந்து செய்வதற்காக ஆண்டுதோறும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை மானியமாக வழங்கியது.

இங்கிலாந்தில் ஆறுமாத ஆராய்ச்சி

               அறிவியல் ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு, இந்தியாவில் அதற்குரிய விஞ்ஞானக் கருவிகள் கிடைப்பது அரிது. இங்கிலாந்துதான் அறிவியல் ஆய்வுக்கு வசதியுள்ள இடம்; ஆகவே, ஜகதீசர் வங்காள கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தனக்கு இங்கிலாந்து செல்வதற்கு தக்க வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் வங்காள கவர்னர் செவிசாய்க்கவில்லை. ஜகதீசரின் விடா முயற்சியால் கவர்னர் அவருடையை கோரிக்கையை ஏற்றார். அய்ரோப்பிய நாடுகளில் ஜகதீசர் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்திட என்ன செலவாகுமோ அதை மட்டுமே அரசு வழங்கும் என்று கவர்னர் உத்தரவு போட்டார்.

               அறிவியலில் ஒரு புதிய கண்டுபிடிப்பை, முதன் முதல் கண்டுபிடித்த அற்புதவிஞ்ஞானி வருகை தருவதை இங்கிலாந்து நாட்டுச் செய்திதாள்கள் விவரங்களுடன் விரிவாக எழுதி வெளியிட்டன; வரவேற்பையும் அளித்துள்ளன. அறிவியல் அறிஞர்களைக் கொண்ட பல விஞ்ஞானக் கழகங்கள் வரவேற்றன. தங்கள் அமைப்புகளில் சொற்பொழிவுகளாற்றக் கூப்பிட்டன. எப்படிச் சோதனை செய்தார் என்ற விவரத்தை சோதனைகள் மூலம் நேரில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டன.

               ஜகதீசர் அனைத்து வரவேற்புகளையும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சோதனைகள் மூலமாகத் தனது ஆராய்ச்சிகளை நடத்தி நிரூபித்தார். இவற்றையெல்லாம் அறிந்த மேல்நாட்டு அறிவியல் அறிஞர்கள், இந்திய விஞ்ஞானியின் அறிவாற்றலை வானளாவப் புகழ்ந்தார்கள். இந்திய நாட்டிலும் விஞ்ஞானத்தில் வல்ல மேன்மையான ஆராய்ச்சி அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

பிரான்ஸ் - ஜெர்மனி – சுற்றுப் பயணம்

               இங்கிலாந்து நாட்டினர் மட்டுமல்ல, அய்ரோப்பிய நாட்டினரும் பாராட்டினர்.

               இங்கிலாந்து நாட்டில் அவரது ஆராய்ச்சிப்பணிகள் முடிந்த பிறது, ஜகதீசர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அந்தந்த நாடுகளில் உள்ள அறிவியல் பேரவைகள் எல்லாம் அவரை வரவேற்றுப் பாராட்டின. அவர் சென்ற நாடுகளில் எல்லாம் தான் கண்டுபிடித்த ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவாகச் சொற்பொழிவுகளாற்றினார். தனது கண்டுபிடிப்புச் சோதனைகளை ஆங்காங்கே நிரூபித்துக் காட்டினார். அந்தந்த நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளின் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றார். ஜகதீசர் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தியாவின் புகழ் பரவியது.

               ஜெர்மன் தலைநகரமான பெர்லினில் உள்ள அறிவியல் பேரவையினர், ஜகதீசருடைய ஆராய்ச்சியைத் துண்டறிக்கைகளாக அச்சிட்டு நாட்டு மக்களுக்கு வினியோகம் செய்தனர்.

               உலகமெலாம் இந்தியாவின் புகழை நிலை நாட்டிவிட்டு பெருமையோடு ஜகதீச சந்திரபோஸ் தாய்நாட்டுக்குத் திரும்பினார். இந்தியத் தாய்நாடு அவரை பெருமையோடு வரவேற்றுச் சிறப்பித்தது.

               தாயகம் திரும்பிய ஜகதீசர் மின்சாரத்தைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டார். காரணம் என்னவென்றால், ஜகதீசரின் கண்டுபிடிப்புக்கு முன்பே, மின்சாரத்தின் உதவியால் கம்பி வழியே செய்திகளை அனுப்பும் முறை இருந்தது. ஆனால், இவரோ, கம்பி இல்லாமலேயே மின்சாரத்தின் மூலம் செய்தி அனுப்புவதைச் செய்து காட்டி வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்திருந்தால் இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனிக்கு முன்பே ஜகதீசர் கம்பி இல்லாமல் செய்தி அனுப்புவதைக் கண்டுபிடித்திருப்பார்.

தாவரவியல் ஆராய்ச்சி

               ஜகதீச சந்திரபோஸ் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து சாதனை படைத்தார். அதற்கடுத்து, தாவரவியல் துறையில் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார்.

               பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் மாநகரில் இயற்பியல் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் அரசு, ஜகதீச சந்திர போஸை அந்த மாநாட்டிற்கு இந்திய அறிவியல் துறை சார்பாக அனுப்பி வைத்தது.

               அந்த மாநாட்டில் கலந்து கொண்ட போஸ், உயிரற்றப் பொருட்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதைப் பற்றித் தக்க ஆதாரங்களுடன் ஆய்வுச் சொற்பொழிவாற்றி நிரூபித்துக் காட்டினார்.

பாரிசில் ஆன்மீக ஞானியும் அறிவியல் அறிஞரும் சந்திப்பு

               அமெரிக்காவில் இந்திய ஆன்மீகத்தைப் பற்றி உரையாற்றி, வெற்றிக்கொடி நாட்டிய சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பும்போது, அவர் பாரிஸ் மாநகருக்கு வந்தார். அங்கு நடைபெற்ற அறிவியல் ஆய்வாளர்கள் மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொள்கிறது என்பதை அறிந்து சுவாமி விவேகானந்தர் அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்தார்.

               இந்திய அரசு சார்பாக கலந்துகொண்டு, ஜகதீச சந்திரபோஸ் அந்த மாநாட்டில் ஆற்றிய தாவரவியல் குறித்த சொற்பொழிவை சுவாமி விவேகானந்தர் கேட்டார். அந்தப் பேச்சிலே தன்னை மறந்து வியந்து போனார். இந்தச் சொற்பொழிவிலுள்ள அருமையான புதிய கண்டுபிடிப்பு உணர்வுகளை விவேகானந்தர் தனது நூலிலே பெருமையாகவும் எழுதியுள்ளார்.

               பாரீஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு ஜகதீச சந்திர போஸ் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று இலண்டன் மாநகரில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். தாவரவியலில் மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தார்.

மற்றும் ஒரு கண்டுபிடிப்பு!

               அந்த ஆராய்ச்சியின் மூலம் மற்றொரு உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது, “ஒரு தாவரத்துக்கு மயக்க மருந்துகள் கொடுத்தால் அந்தத் தாவரம் மனிதரைப் போலவே மயக்கமடையும்” என்பதே அந்த உண்மை! ஜகதீசர், அதை இலண்டன் அறிவியல் பேரவையிலேயே நிரூபித்துக் காட்டினார். ஆனால், பொறாமை எண்ணம் கொண்ட சிலர் எதிர்த்தார்கள்; ஒத்துக் கொள்ள மறுத்தார்கள்; ஜகதீசர் கண்டுபிடித்த உண்மையைப் பொய் என்று கூறினார்கள்.

               ஜகதீசர் எதிர்ப்புகளையும், மறுப்புகளையும் கண்டு மனம் தளரவில்லை. தொடர்ந்து தனது ஆராய்ச்சியிலே அவர் ஈடுபட்டார். தனது கண்டுபிடிப்பு உண்மைதான் என்பதை நிரூபிக்கப் பாடுபட்டார். அவற்றையே மீண்டும் உறுதிபடுத்தினார்.

               தாவரவியலைப் பற்றி ஜகதீசர் கூறிய அனைத்தும் ஏற்கனவே, சில அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துக் கூறியவைதான் என்று வாதிட்டார்கள். இவர்களது விதண்டாவதாத்தைக் கேட்ட ஜகதீச சந்திரபோஸ், ஒரு குழு அமைத்து உண்மையை அறியுமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு ஜகதீசர் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தது. ‘தாவரங்களைப் பற்றிய தத்துவங்களைக் கண்டுபிடித்தது ஜகதீச சந்திரபோஸ்தான்; அவருக்கு முன்பு யாரும் அது போன்ற உண்மைகளை ஆராய்ந்து அறிந்து கூறவில்லை’ என்ற தீர்ப்பை அக்குழு வெளியிட்டது. எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கிய விஞ்ஞான வித்தகர் போஸ் வெற்றி வீரராக இந்தியா திரும்பினார்.

               இந்தியா திரும்பிய போஸ், மறுபடியும் தனது தாவரவியல் ஆராய்ச்சியிலே ஈடுபட்டார். மேலும் சில உண்மைகளை அதே துறையில் தொடர்ந்து கண்டுபிடித்தார்.

கண்டுபிடித்த உண்மைகள்:-

             விலங்குகளைப் போலவே தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு.

             தாவரங்களுடைய நரம்பு மண்டலம் விலங்கினத்தையே ஒத்ததாகம். அதாவது தாவரங்களுக்கும் நரம்பு மண்டலம் உண்டு.

             தாவரங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போது அவை நன்றாகத் தழைத்து வளருகின்றன. அந்தத் தாவரங்களை வெட்டும் போதோ அல்லது அறுக்கும்போதோ வலியால் அவை வேதனைப்படுகின்றன.

             கள்ளும், சாராயமும் தாவரங்களைப் பாதிக்கின்றன.

             மரங்கள் இரவு 12 மணிக்கு தூங்கத் துவங்கி, காலை 8 மணிக்கு விழிப்படைகின்றன.

             தாவரங்களுக்கும் அசைவு உண்டு; அவற்றின் தண்டுகள் சூரிய வெப்பத்தை நாடி மேல் நோக்கிப் போகின்றன. வேர்கள் நீரையும், உணவையும் நாடித் தரையில் கீழ் நோக்கிச் செல்கின்றன.

             பயிர்கள் இசையால் விளைச்சல் அதிகம் தருகின்றன.

             தாவரங்கள் வெப்பம், குளிர், ஒளி, ஒலி ஆகியவற்றை உணருகின்றன; உட்கிரகிக்கின்றன.

போஸ், தனது ஆராய்ச்சியில் கண்டு பிடித்த உண்மைகளை, அறிவியல் நிபுணர்கள் இடையே பரிமாறிக்கொண்டார். அதற்கான சோதனைகளைச் செய்து காட்டியும் நிரூபித்தார். விஞ்ஞானிகள் ஜகதீசரைப் பெரிதும் பாராட்டினார்கள்.

இங்கிலாந்திலிருந்து போஸ் அப்படியே அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு உள்ள பல்கலைக் கழகங்களிலும், அறிவியல் பேரவைகளிலும் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அமெரிக்க அறிஞர்கள் வியந்து பாராட்டினார்கள் இந்தியாவின் புகழையும் பெருமையையும் இவ்வாறு, நிலை நாட்டிய பின்பு, இந்தியா திரும்பினார்.

தானே தயாரித்த விஞ்ஞானக் கருவிகள்

               போஸ் தான் கண்டறிந்த விஞ்ஞான உண்மைகளை, மற்றவர்களும் நேரடியாக அனுபவித்து உணர வேண்டும் என்று விரும்பினார். அதற்கேற்ற எல்லாவித விஞ்ஞானக் கருவிகளைக் கொண்ட சோதனைக் கூடம் ஒன்று தேவைப்பட்டது. பெரிய அளவில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்திட இரவும் பகலும் விடாது முயன்றார். பல நண்பர்களது உதவியையும் பெற்றார். தான் விரும்பியபடியே ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை அமைத்தார்.

               தாவரங்களின் உணர்ச்சிகளை அறியும் சிறப்பான கருவி ஒன்றைத் தயாரிக்க முனைந்தார். முன்பு தனக்கு உதவி செய்த கருமான் தொழிலாளி உதவ முன்வந்தார். அக்கருவியை எப்படிச் செய்வது என்பதை அவருக்கு விளக்கிக் கூறினார். ஜகதீசர் எதிர்பார்த்தபடி அக்கருவி உருவானது கண்டு மகிழ்ச்சி கொண்டார்! அந்தக் கருவிக்கு “ரேசோனன்ட் நிகார்டர்” என்று பெயரிட்டார்.

               தாவரங்கள் அன்றாடம் நிமிடத்துக்கு நிமிடம் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள மற்றொரு கருவி தேவைப்பட்டது. அது போன்று செய்ய வரைபடம் வரைந்தார்; அப்படத்தின் அமைப்பை அதே கருமான் தொழிலாளியிடம் கொடுத்து விளக்கிக் கூறினார். ஒரு புதிய கருவி அத்தொழில் வினைஞரால் உருவாக்கப்பட்டது! “கிரஸ்கோகிராஃப் (ஊசநளஉடிபசயயீh) என்பதே அக் கருவி.

               இக்கருவியால் தாவரங்கள் வினாடிக்கு வினாடி எப்படி வளருகின்றன என்பதை நேரடியாகப் பார்க்க முடியும். இந்த இரண்டுமே ஜகதீச சந்திர போஸ் தான் கண்டறிந்த, புதிய உண்மைகளை எல்லோருக்கும் புலப்படுத்த உதவிய விஞ்ஞானக் கருவிகளாகும்.

               இந்த சமயத்தில், இந்திய அரசு ஜகதீசரை இங்கிலாந்துக்கு மறுபடியும் அனுப்பியது. ஜகதீசர் தான் கண்டுபிடித்த இரண்டு விஞ்ஞானக்கருவிகளையும் உடன் எடுத்துக் கொண்டு சென்றார்.

               இங்கிலாந்தில் உள்ள ராயல்சொசைட்டி ஜகதீசருக்கு அமோக வரவேற்பு அளித்தது. அறிவியல் அறிஞர்களின் கூட்டத்தைக் கூட்டியது. ஜகதீச சந்திரபோஸ், தாவரங்களைப் பற்றி இதுவரை கண்டறிந்த உண்மைகளை அவர்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டினார்.

தாவரங்களுக்கும் - உறக்கம் - விழிப்பு – வேதனை உண்டு

               தாவரவகைச் செடி ஒவ்வொன்றும் உறங்குவது, விழிப்பது, வேதனைப்படுவது, மது அருந்தி மயங்குவது போன்ற உணர்ச்சி நிலைகளை, ஜகதீசர் “ரேஸோனன்ட் ரிகார்டர்” என்ற விஞ்ஞானக் கருவி மூலமாக தெளிவாக விளக்கினார். எல்லா அறிவியல் அறிஞர்களும் கண்டு ஆச்சரியப்பட்டனர். இந்திய விஞ்ஞானியின் அறிவுக் கூர்மைக்கு அனைவரும் அடிமையானார்கள்.

               இலண்டன் மாநகரில் உள்ள ராயல் சொசைட்டியின் அரங்கத்தில், 1901 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் பிரபல புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. உலக அறிவியலாளர்களின் அவையில், ‘தாவரம்’ விஷத்தினால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறது என்ற உண்மையை நிரூபித்தார்: ஆம், ஒரு தாவரத்தை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துள்ள விஷத்தன்மை கொண்ட திரவத்தில் (புரோமைட் கலந்த திரவம்) மிகக் கவனமாக தாவரத்தின் தண்டுப் பகுதியை நனைத்தார். புரோமைட் விஷத்தன்மை கொண்டது. மேலும் ஒரு கருவியை தாவரம் இருந்த பாத்திரத்துடன் பொருத்தினார். கருவியிலிருந்த ஒளிப்புள்ளி திரையில் நகரத் தொடங்கியது. பின்னர் திடீரென்று நின்று விட்டது. இறுதியில் அந்தத் தாவரம் இறந்து விட்டது.

               ‘ஜகதீச - சந்திரபோஸ்’ தமது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய நுட்பமான கருவிகளைக் கண்டு வியந்து போற்றினார்கள் அயல் நாட்டு விஞ்ஞானிகள்! அந்தக் கருவிகளை எங்கே வாங்கினீர்கள்? என விசாரித்தனர். அப்பொழுது” அவை எனது தாய் நாட்டில் நானே சொந்தமாகத் தயாரித்தவை” என்று பெருமித உணர்வுடன் கூறினார் ஜகதீச சந்திர போஸ்!

ஜகதீசரின் குடும்ப வாழ்வு

               ஜகதீசர் அபலாபோஸ் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது நீண்ட நாள் உயிர் வாழவில்லை. ஆனால் என்ன? தாய் நாட்டில் உள்ள மாணவர்களையே தங்கள் குழந்தைகளாக பாவித்தனர். ஆபலாபோஸ் கல்கத்தா நகரில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். பொறுப்புடன் நிர்வகித்து, பெண்கள் கல்வி பெற பாடுபட்டார். ஜகதீசருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஜகதீசருடைய விஞ்ஞான ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவியாக விளங்கினார்.

ஜகதீசர் அடைந்த புகழ்

               ஜகதீசசந்திரபோஸ் மிகச் சிறந்த விஞ்ஞானி என்று உலகம் பாராட்டியது! அவரைத் தேடி பல அறிவியல் பட்டங்கள் வந்தடைந்தன.

               அயல்நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு தாயகம் திரும்பியதும், ஜகதீசரைப் பல பல்கலைக் கழகங்கள் தேடி வந்து பாராட்டின. அவருக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவித்தன. பட்டங்கள் அளித்துப் போற்றிப் புகழ்ந்தன.

               பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் ஜகதீசருக்கு சி.ஜ.இ (ஊ.ஐ.நு) என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டியது. அப்போது இங்கிலாந்து நாட்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தார். ஜகதீச சந்திரபோசை அழைத்துக் கௌரவித்து, பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். அப்போது சி.எஸ்.ஐ என்ற அரசுப் பட்டத்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னரே நேரடியாக ‘போசுக்’கு வழங்கிப் போற்றிச் சிறப்புச் செய்தார்.

               அதே நேரத்தில் மன்னரே தனது அரசு சார்பாக ‘சர்’ என்ற பட்டத்தையும் அனைவர் முன்னிலையிலேயே வழங்கினார். இந்தியர்கள் மத்தியிலேயும் ஒரு விஞ்ஞானி தோன்றியுள்ளார் என்று அறிவித்தார்! ஜகதீசரின், அறிவியல் சாதனையை, உலகம் பயன்படுத்திக் கொண்டு மேன்மை பெற வேண்டும் எனப் புகழாரம் சூட்டினார். அன்று முதல் சாதாரணமாக இருந்த ஜகதீச சந்திரபோஸ்; டாக்டர் ஆஃப் சி.எஸ்.ஐ என்று கற்றறிவாளர்களால் அழைக்கப்பட்டார்!.

               தாவரவியல் தத்துவங்களைக் கண்டுபிடித்து நிரூபித்தபோது, சில விஞ்ஞான காழ்ப்புணர்ச்சியார்களுக்கு அஞ்சி, போஸின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய கருத்துக் கட்டுரையை வெளியிட மறுத்தது இலண்டன் ராயல் சொசைட்டி, இப்போது அவற்றைத் தேர்ந்தெடுத்து, சான்றிதழை அவருக்கு அனுப்பி வைத்தது.

               சர்.ஜகதீச சந்திரபோஸ் தாவரங்களைப் பற்றி, அதுவரை எவருமே கண்டுபிடிக்காத தத்துவங்களை வெளிப்படுத்தினார்; செயலுணர்ச்சி செயல்முறையில் தெளிவுபடுத்தினார். வளர்ச்சியின் வகைகளை விவரித்தார்; உலகமறியா உண்மைகளை, அறிந்து உலகத்துக்கு அறிவித்த பெருமைகளுக்கு உரியவராக விளங்கினார்.

               ஜகதீச சந்திரபோஸின் அறிவியல் தொண்டினைப் பாராட்டுகின்ற முகமாக, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் திலகர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு ரூ.56,000/- நன்கொடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

               “இரவீந்திரநாத் தாகூர் உலக கவிஞர்களுள் ஒப்பற்ற புகழ் பெற்றவர்; மகாத்மா காந்தியடிகள் உலக உத்தமர்களுள் உயர்வான இடத்தைப் பெற்றவர்; அந்த வரிசைகளுள் பெரும் புகழ் பெற்றவராக ஜகதீச சந்திரபோஸ் கருதப்பட வேண்டியவராவார்”- என்று, “சர் மால்கம் ஹெய்லி” எனும் ஆங்கிலேயக் கவர்னர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

               “போசின் திருவுருவம், ஜெனிவாவிலுள்ள சர்வதேச சங்க மாளிகையில் வைத்துப் போற்றப்பட வேண்டும்” என்று உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூறினார்.

               ஸ்காட்லாண்டில் உள்ள அபர்டீன் பல்கலைக் கழகம், ஜகதீச சந்திர போசுக்கு எம்.எல்.டி. என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன்பு 1903 ஆம் ஆண்டு “இந்தியப் பேரரசின் உற்ற தோழன்” (Companion of India Empire) என்ற பட்டம் ஜகதீசருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

               உலகப் புகழ் பெற்ற நாடக மேதை பெர்னாட்ஷா, தனது நூற்களை “மிகச் சிறந்த உயிர் நூற் புலவருக்கு” என்று எழுதிப் போசுக்கு அனுப்பி வைத்துச் சிறப்பித்தார்.

               பிரஞ்சு நாட்டு நோபல் பரிசு பெற்ற ஓர் இலக்கிய அறிஞர், “புதியதோர் உலகைக் காட்டிய பெரியாருக்கு” என்று எழுதித் தன் நூல்களை அனுப்பி கௌரவப்படுத்தினார்.

               இங்கிலாந்து நாட்டில் உள்ள ராயல் சொசைட்டிக்கு 1920 ஆம் ஆண்டு ஜகதீச சந்திர போஸ் F.R.S. (Fellow of Royal Socity) ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

               இந்தியாவின் தேசிய அறிவியல் தகவல் தொடர்பு நிறுவனம் நடத்துகிற ‘சயின்ஸ் ரிப்போர்ட்டர்’ (Science Reporter) என்ற ஏட்டில், “ஜகதீச சந்திர போஸ் என்கிற புகழ் போதையோ, பணத்தாசையோ இல்லாத விஞ்ஞானியின் பெருந்தன்மை இந்தியருக்குப் பெருமையளிக்கிறது. ஆனால், உண்மைகள் தெரிய வந்து உள்ள நிலையில் அவருக்கு உரிய நியாயமான பெருமையை அங்கீகரித்து உலகம் தனது நன்றியறிதலை எப்போது வெளிப்படுத்தப் போகிறது” என்று எழுதியுள்ளது.

               ஜகதீச சந்திர போஸின் விஞ்ஞானக் கட்டுரைகள் இலண்டன் மாநகரத்திலிருந்து வெளிவரும் ‘The spectator’, - ‘The Times' ஆகிய பிரசித்திப் பெற்ற இதழ்களில் வெளியிடப்பட்டன.

               மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விஞ்ஞானிகளாக உருவாக முடியும் என்ற ஆழமான நம்பிக்கை இந்தியா போன்ற புராதன நாடுகளில் நிலவியது. ‘தவறான நம்பிக்கை’, அது, என்பதை ஜகதீச சந்திரபோஸ் நிரூபித்தார். இந்திய தீபகற்பத்திலும் அறிவியல் அறிஞர்கள் உருவாக முடியும் என்பதை அவர் உலகிற்கு உணர்த்தினார்.

               இந்தியா தத்துவத்திலும் மற்றும் ஆன்மீகத்திலும் மட்டுமே சிறந்து விளங்கும் நாடு என்ற கருத்தை முறியடித்து விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபித்தார்.

ஒரு புதிய கோயில்

               கல்கத்தா நகரில் போஸ், அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை’, 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் உருவாக்கினார். தற்போதும் அந்த ஆராய்ச்சி நிலையம், ‘போஸ் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது. மிகவும் புகழ் பெற்று இன்றும் விளங்குகிறது. அவர் உருவாக்கிய அந்த ஆராய்ச்சி நிலையத்தில் போஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகளைச் செய்து வந்தார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்து நிறுவினார். அதன் துவக்க விழாவில் உரையாற்றிய போஸ், “இது ஆராய்ச்சி நிலையம் மட்டுமல்ல, இது ஒரு புதிய கோயில்” – என்று குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சி மையத்தில் அனைவரும் உற்சாகத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார்.

மாணவர்களுக்கு ஜகதீசரின் அறிவுரைகள் :-

             விடா முயற்சியும், கடின உழைப்பும் இறுதி வெற்றியை நிச்சயம் அளிக்கும்.

             மாணவர்களே! இளைஞர்களே! எதற்கும் அஞ்சாதீர்கள்! எந்த செயலையும் திறம்படச்செய்து முடியுங்கள்! நாட்டிற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள்! செயல் புரியுங்கள்!

             அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து உலகம் முழுவதும் நம் இந்திய நாட்டின் புகழைப் பரப்புங்கள்!

             உங்கள் பாடப்புத்தகங்களோடு விளக்க நூல், வினா – விடை நூல் என வாங்கி அவற்றை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயலாதீர்கள். கவனித்தல் – ஆய்வு செய்தல் சிந்தனை செய்தல் ஆகியவற்றை மேற் கொள்ளுங்கள்!

ஜகதீசர் எழுதிய நூல்கள்

             ‘உயிர்வாழும் மற்றும் உயிரில்லாத பொருட்களில் உணர்வு (Response in the living and nothing)’ என்ற நூலை எழுதினார்.

             ‘மின்சார ஒளி முறிவு’ என்ற பிரபலமான கட்டுரை நூலைப் படைத்தார்.

             ‘தாவரங்களின் எதிர்வாதம்’ (Plant Response) என்ற நூலையும், ‘மின் உடற் செயல்’ (Electro physiology) என்ற நூலையும் தந்தார்.

             ஜகதீசர், தாம் நிகழ்த்திய அறிவியல் உரைகளை எல்லாம் ஒன்று திரட்டி, திருத்தங்கள் செய்தும், சேர்க்க வேண்டிய கருத்துக்களைச் சேர்த்தும் ஒரு புத்தகமாக்கி வெளியிட்டார்.

             இலண்டன் நகரில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், அந்த நூலை ஆய்ந்து உணர்ந்த விஞ்ஞானிகள் – கவிஞர்கள் – அரசியல் தலைவர்கள் – அதன் அருமை பெருமைகளைப் பேசி விமரிசனம் செய்தார்கள்! ஜகதீசரை மிகவும் பாராட்டினார்கள். சர்.ஜகதீசர் உலகம் போற்றும் விஞ்ஞான மேதைகளிலே ஒருவராக மதிக்கப்பட்டார்.

மக்களின் அறியாமையை அகற்றிய ஜகதீசர்

  • • பரீதாப்பூரில் உள்ள ஒரு பனைமரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் கீழ் நோக்கி வளைந்து காணப்படும். அதைப் பார்த்த மக்கள் தங்களுக்குத் தெரிந்த விளக்கங்களைச் சொன்னார்கள். ஒரு புனிதமான மனிதனின் ஆவி, அந்த மரத்தில் புகுந்து கொண்டுள்ளதாக ஆழமாக நம்பினார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும், கோயில் மணி ஒலிக்கும் நேரத்தில் எல்லாம் அந்த புனிதரின் ஆவி மரத்தில் ஏறிச் சென்று அமர்ந்து கொள்ளுமாம்! ஆனால், உண்மையானக் காரணத்தை ஜகதீச சந்திரபோஸ் கண்டுபிடித்து விளக்கினார். அந்த மரம் காலையில் மேல் நோக்கி உயரவும், மாலையில் கீழ் நோக்கி வளையவும் சூரிய வெப்பம் அதிகமாவதும், குறைவதும்தான் காரணமாகும் எனக் கண்டறிந்தார். பாமர மக்களுக்குப் புரியும்படி அதை விளக்கிக் கூறினார்.

அறிஞர்களுடன் - தலைவர்களுடன் அகலாத நட்பு

               பிரபுல்லா சந்திர ராய் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்! பிற அறிவியல் அறிஞர்களுடனும் சந்திர போஸ் நட்பு பாராட்டியதை நானிலமே அறியும்.

               கோபால கிருஷ்ண கோகலே – தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் – இருவரும், ‘எழுச்சி மிக்க இந்தியக் திருமகன்’ என்று புகழ்ந்தனர்.

               சகோதரி நிவேதிதாவுக்கு இவர் நல்ல நண்பர். அவர் ‘ஜரீஷ்’ நாட்டைச் சேர்ந்த பெண்மணி. அவரின் இயற்பெயர் மார்கரெட் நோபல். சுவாமி விவேகானந்தரின் சீடராகவும் அவர் விளங்கியவர்.

               அவர் இந்தியாவில் தங்கி மக்களுக்கு சேவை புரிந்தவர். ஜகதீச சந்திர போஸின் அறிவாற்றலை, சமுதாய நோக்கில் சரியாகப் பார்த்துப் பாராட்டியவர்! ஜகதீச சந்திர போஸ் உழைக்கும் மக்களுக்கு விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியும், எளிமையாகவும் கற்பிப்பதற்காக பாராட்டினார்! கல்கத்தாவில் உள்ள போஸ் ஆராய்ச்சி நிலையத்தின் முன்புறம் ஒரு சிலை உண்டு; உலகுக்கு ஒளியூட்ட ஒரு பெண் கையில் விளக்கேந்தி வருவதாக அது அங்கே அமைக்கப்பட்டுள்ளது!

ஜகதீச சந்திரபோஸ் குறித்து பாரதியார் உயர்வாக பாடியுள்ளார்..

               உலக மகாகவி பாரதியார் தனது சுயசரிதைப் பாடல்களில், ஜகதீசரின் உயிர் தத்துவத்தை, எண்சீர் விருத்தங்களால் இப்படி விளக்குவார்

               “……. புவியின்மிசை உயிர்களெல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ? தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ?

               செத்திடற்குக் காரணங்கள் யாதென்பீரேல்; கோளாகிச் சாத்திரத்தை ஆள மாண்பார்

               ஜகதீச சந்திரவஸீ கூறுகின்றான்.

               ஞானானு பவத்திலிருந்து முடிவாங் கண்டீர்

               “நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்” என்றான்

               “கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;

                              கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

               ஆபத்தாம், அதிர்ச்சியிலே சிறிய தாகும்;

                              அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெல்லாம் சிதைந்து போகும்;

                              கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடவே பிறவற் றைத்தான்

                              கொல்வதற்கு வழியென நான் குறித்திட் டேனே.”

               கோபம், அச்சம், தாபம், கவலை ஆகியவற்றால் மனிதன் பாதிக்கப்படுவான் என்பதை ஜகதீச சந்திர போஸின் ஆராய்ச்சிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இதைப் பாடியுள்ளார்.

ஜகதீசருக்கு அரசு அளித்த அபூர்வமான சலுகை

               ஜகதீச சந்திர போஸ், பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, எவருக்கும் வழங்கப்படாத சலுகை ஒன்றை அரசாங்கம் வழங்கியது! என்ன சலுகை அது?

               ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஓய்வு பெறும்போது! ஓய்வூதியம் கிடைக்கும், அத்திட்டத்தின்படி பணியில் இருக்கும்போது எவ்வளவு ஊதியம் பெறுகிறாரோ, அதில் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதிதான் ஓய்வூதியமாக அரசு வழங்கும்.

               அதாவது, அரசு அலுவலர் தான் பெற்று வந்த சம்பளத்தைவிடக் ‘பென்ஷன்’ தொகை குறைவாகவே இருக்கும். ஆனால், ஜகதீசர், பேராசிரியராக இருக்கையில் எவ்வளவு ஊதியம் பெற்றாரோ, அந்த முழுத் தொகையையும், அப்படியே ‘பென்ஷனாகப்’ பெறும்படி பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.

               ஜகதீசருடைய வயது வளர வளர அவரது அறிவும், ஆராய்ச்சியும் அதனால் உருவாகும் புதுப்புது கண்டுபிடிப்புகளும், அதன் பயன்களும் வளர்ந்து கொண்டே வந்தன. அவர் ஓய்வு பெறுவதையும் இரண்டு ஆண்டுகள் நீடித்து அரசு உத்தரவிட்டது. ஜகதீச சந்திரபோஸின் அறிவியல் அறிவை, மேலும் சிறப்பாக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே காரணம் ஆகும். ஜகதீசரும் அதற்கு சம்மதித்தார். இரண்டாண்டுகள் கழித்தே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

               இந்தியப் பண்பாடு மற்றும் கலைகளின் மீது ஜகதீசர் அதிகப் பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார். இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற புனிதத் தலங்களுக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் சென்று வந்தார். முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களையெல்லாம் சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை சுற்றிப் பார்த்தார். புகழ்பெற்ற சிற்பங்கள், கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவைகளைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார். சாஞசி, சிட்டார்கார் (ஊhவைடிசபயnh) சுஜ்மீந் மற்றும் நைனிடால் போன்ற குகைக் கோயில்கள் யாவும், இயற்கையின் கொடைகள் அல்லவா? அவற்றையும், ஒரிசா, அஜந்தா, எல்லோராவிலுள்ள குகைகளையும் ஆர்வமுடன் சுற்றிப் பார்த்தார். பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கும் சென்று கண்டு மனம் பறி கொடுத்தார்.

               தென்னிந்தியாவில் உள்ள புகழ் பெற்ற யாத்திரைத் தலங்களான இராமேஸ்வரம், மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் சென்று வந்தார். தெற்கில் அலையடிக்கும் கலை நகரங்கள் முதல் வடக்கில் இமயமலை அடிவாரம் வரை குறிப்பாக ‘கேதர்நாத்’ – புனிதத் தலம் வரை புறப்பட்டுப் போய் வலம் வந்துள்ளார்.

ஆராய்ச்சிக் கூடத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்

               கல்கத்தா நகரில் போஸ் விஞ்ஞான ஆய்வக் கூடத்தை 1920 ஆம் ஆண்டு ஜகதீசர் நிறுவினார். ஐந்து லட்சம் ரூபாய்கள் சொந்தப் பணத்தை, அள்ளிக் கொடுத்து ஆராய்ச்சிக் கூடத்தை திட்டமிட்டு அமைத்தார். அந்த ஆராய்ச்சிக் கூடம் கல்கத்தா நகருக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தனியார் சொத்தல்ல

               ஜகதீசர் தனது கண்டுபிடிப்புகளை எதையும் ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை. புதிய கண்டுபிடிப்புகளை செய்பவர்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை ராயல்டியாக சம்பாதிப்பாகர்கள். இவர் பல கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்தக் கருவிகள் பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக பணம் பெறுவதை ஒப்புக் கொள்ளவில்லை. அவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தனியார் சொத்தல்ல; அவைகள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

வியன்னா பல்கலைக் கழகம் பாராட்டு

               பல்கலைக் கழக அரங்கில் அரியதொரு அறிவியல் உரையை ஆற்றினார். விஞ்ஞான அற்புதங்களையும் அப்போது செய்து காட்டினார்.

               உயிரோடு நின்று கொண்டிருந்த ஒரு செடியை அவையில் கொண்டு வந்து வைத்தார்; அந்தச் செடிக்குள், ஜகதீசர் அரிய மருந்தைப் புகுத்தினார். உடனே செடி வாடி தளர்ந்து காய்ந்து விழுந்தது. அந்தச் செடி இறந்துவிட்ட நிலையிலே இருந்தது.

               ஜகதீசர், மறுபடியும் செடியினுள் வேறொரு மருந்தைச் செலுத்தினார். உடனே அந்தச் செடி மீண்டும் உயிர் பெற்று எழுந்து பழைய நிலைக்கு வந்து பக்காவாக நின்றது.

               வியன்னா நகர் பேரவையிலே கூடி இருந்த விஞ்ஞானிகளும், பொது மக்களும் ஜகதீசரைக் கைகுலுக்கிட பாராட்டினார்கள்; ஆரத் தழுவிக் கொண்டாகள்.

               இந்தியா திரும்பிய ஜகதீசர் மீண்டும் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்ந்தார். தனது எழுபதாவது வயதிலும் முழு ஆர்வத்துடன் ஆராய்ச்சியிலேயே மூழ்கினார்! கல்கத்தா நகர மக்கள் ஜகதீசரின் எழுபதாவது பிறந்த நாளை மிகக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

               வயது ஏறினாலும், அவர் தனது ஆய்வுகளை அன்றாடப் பணியாகவே கருதித் தொடர்ந்தார். ஓய்வு எடுத்துக் கொள்வதை ஒரு பொழுதும் விரும்பியதில்லை. ஆராய்ச்சியில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 23 ஆம் நாள், உலகம் போற்றும் விஞ்ஞான மேதையான ஜகதீச சந்திரபோஸ், மாரடைப்பால் இம்மண்ணுலகை நீத்தார் ……. என்றும் மறையாத புகழ் உலகில் புகுந்தார்!

               ஜகதீச சந்திர போஸ் சிறந்த தேசபக்தர்! இந்திய நாட்டைப் பற்றி உலகம் உயர்வாக எண்ண வேண்டும் என்பதே அவர் ஆசை! இந்தியரிலும் சுடர்விட்டு ஒளிரும் அறிவியல் மேதைகள் இருக்கிறார்கள் என்பதை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதே அவரது ஆசை! அதற்காகவே அவர் அல்லும் பகலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்! அளப்பரிய வெற்றிகளைக் கண்டார்! இந்திய நாட்டின் புகழைப் புவி எங்கும் சென்று நிலை நாட்டினார்! தாய் நாட்டின் மீது அளவிறந்த அன்பு கொண்டிருந்தார்! அரும்பாடுபட்டு அன்னைத் திருநாட்டின் பெருமையை அகிலத்துக்கு உணர்த்தினார்! உயர்த்தினார்!!

               “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே!” – என்னும் பாரதியின் பாடல்வரிக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார். அந்த இந்திய விஞ்ஞானி!!

- பி.தயாளன்

Pin It