ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசின் ராணுவப் படுகொலையை வெளிப்படையாக ஆதரித்து இலங்கை அரசின் இரண்டாவது தூதரகமாக செயல்பட்டு வரும் 'இந்து' நாளேடு அண்மையில் தி.மு.க. செயற்குழு மேற்கொண்ட முடிவுகளை மனம் குளிர பாராட்டி வரவேற்று தலையங்கம் தீட்டியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும் இந்தப் பிரச்சினையில் மிகவும் உள்ளத்தைத் தொடக்கூடிய அரசியல் மேன்மை மிக்க செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக 'இந்து'வின் தலையங்கம் கூறுகிறது (பிப்.4). சிறிலங்காவில் நடக்கும் சம்பவங் களை எதிர்கொள்வதில் மிகவும் நிதானத்தோடு அளந்து செயல்படுவதோடு தனது மேதைமையான முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தத் தலையங்கம் கூறுகிறது.
"Between them, the Dravida Munnetra Kazhagam government in Tamil Nadu and the United Progressive alliance at the Centre have shown impressive political statesmanship and footwork in responding to the challenge of digesting and responding soberty to what is happening in Sri Lanka."
மேலும் அத்தலையங்கத்தில், "தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோருகின்றன; விரல்விட்டு எண்ணக்கூடிய குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன; தமிழகத்தின் கொந்தளிப்பான இச்சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தனது கவலை தமிழ் மக்களைப் பற்றித் தானேயொழிய விடுதலைப் புலிகளைப் பற்றியல்ல என்று திட்டவட்டமாக சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்திவிட்டார். அதுமட்டுமல்ல; கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் நடத்தி வரும் சகோதர யுத்தத்தையும், முரட்டுத்தனமான கொள்கைகளையும் மிகவும் துல்லியமாக விமர்சித்துள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய மூன்று அரசியல் தீர்மானங்கள் இலங்கை இனப்பிரச்சினையில் இதுவரைத் தமிழகம் முன் வைத்த கோரிக்கைகளிலிருந்து மாறுபட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களாகும்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. வின் எதிர்பார்ப்பையும் முன் வைக்கும் பிரச்சாரத்தையும், தி.மு.க. செயற்குழு தெளிவாக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. விடுதலைப் புலிகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அப்பாவி தமிழ் மக்களின் பாதுகாப்பும் நலன்களும் பாதுகாக்கப்பட்டு, சுமூகமான நிலை திரும்ப வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் கூறுகிறது. வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து, சுயாட்சி வழங்கும் வகையிலான அரசியல் தீர்வை (ஒன்றுபட்ட இலங்கைக்குள்) இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அத் தீர்மானம் கூறுவதோடு, இந்த இலக்கை அடைவதற்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதில் தமிழ்நாடு அரசினை பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய அம்சம் வேகம் பெற்று வரும் ஒரு பிரச்சினையில் - மத்திய அரசோடு தன்னையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்துக்கான தீர்வை முன் வைத்துள்ளதுதான்!
(A commendable feature of the Tamil Nadu Government's response is the forward looking way in which it has teamed up with the Central government in responding to a fast-developing situation.)
பிரணாப் முகர்ஜியின் அறிவார்ந்த நடுநிலையான அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அவர் கொழும்பு சென்று, ராஜபக்சேயை சந்தித்து, இந்தப் பிரச்சினையை சாதுர்யத்தோடு கையாண்டதே இதற்கு காரணம். இதன் காரணமாகத்தான் மாநில அரசும், மத்திய அரசும் தங்களை ஓரணியாக்கிக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி உணர வைத்து, எதிர்கால அமைதித் தீர்வை நோக்கி மத்திய மாநில ஆட்சிகளை திரும்பச் செய்துள்ளது - என்று 'சிறிலங்கா ரத்னா' விருதைப் பெற்ற 'இந்து' ராம் தனது ஏட்டின் தலையங்கத்தில் பாராட்டு மழையில் தி.மு.க.வை மூழ்க செய்து விட்டார்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதே 'இந்து'வின் மய்யமான கருத்து. பார்ப்பன 'இந்து' ஏட்டிடமிருந்து கிடைத்துள்ள இந்த சான்று ஒன்று மட்டுமே தி.மு.க. மேற்கொண்ட துரோகத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமானதாகும்.
'இந்து' ஏடு போற்றிப் பாராட்டும் ஒரு தீர்வு திட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'இந்து' ஏடு எதை ஆதரிக்கிறதோ, அதை எதிர்த்து எழுதினாலே போதும் என்று பெரியார், தாம் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது தனக்கு ஆலோசனை கூறியதாக கி.வீரமணி அடிக்கடி கூறுவார். இப்போது 'இந்து' ஏடு பார்ப்பன வெறியோடு முன் வைக்கும் கருத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு 'கலைஞரின் தூதுவராக' வீரமணி களமிறங்கியிருப்பதை தமிழின உணர்வாளர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தும் பிரச்சாரத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு தீவிரப் பிரச்சார பீரங்கியாக மாறி நிற்கும் கி.வீரமணி, கடந்த காலங்களில் எத்தகைய கருத்துகளை முன் வைத்தார்? துரோக காங்கிரசாரிடம் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டு சேரக் கூடாது என்று கூறி, திராவிட கட்சிகள் ஓரணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று 'திராவிட பார்முலாவை' அன்று முன் வைத்த கி.வீரமணி, இப்போது காங்கிரசின் பச்சை துரோகத்துக்கு நடை பாவாடை விரிக்கும் தி.மு.க.வோடு கைகோர்த்துக் கொண்டு காங்கிரசாரோடு ஒரே மேடையை பகிர்ந்து கொண்டு பேசி வருவதற்குப் பெயர் என்ன? தமிழர்களுக்கு எதிராக காங்கிரசின் பச்சை துரோகத்தை எதிர்த்து, தமிழகமே கொந்தளிக்கும் சூழ்நிலையில் கி.வீரமணியின் காங்கிரசு எதிர்ப்பு முழக்கம் எங்கே போனது? ஏன் வாயடைத்துப் போனது? இதோ, உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்:
"திராவிட இயக்கங்களான அரசியல் கட்சிகளுக்கு நமது கனிவான வேண்டுகோள் என்னவென்றால், மீண்டும் காங்கிரசுடன் சேருவது பற்றி சிந்திப்பதை ஒரு புறத்தில் தள்ளி வைத்து, நாடாளுமன்றத்திற்கான 40 இடங்களுக்கும் (புதுவை உட்பட) நீங்கள் ஒரு தொகுதி உடன்பாட்டிற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? திராவிட பார்மூலா என்று நாம் முன்பு வற்புறுத்தியதையே மீண்டும் நினைவூட்டுகிறோம்; இதை அசை போட்டுச் சிந்தியுங்கள். அதற்கான வாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளோம். இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது.
மொழி (இந்தி)ப் பிரச்சினை, மாநில சுயாட்சி, திராவிடப் பண்பாட்டினை காத்தல், காவிரிப் பிரச்சினை, ஈழத் தமிழர் இனப் படுகொலை தடுப்புப் பிரச்சினை இவைகளில் உங்களால் ஒத்தக் கருத்து கொள்ள முடிகிறது; அகில இந்திய கட்சிகளால் அப்படி அதனை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அத்தகையவர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களோடு தொகுதி உடன்பாடு காண முயலும்போது, 25 ஆண்டுகள் நேற்று வரை ஒரே அணியில் இருந்து கோபதாபங்கள் காரணமாகப் பிரிந்த நீங்கள், மிகப் பெரும் பகையாளர்கள் போல் எவ்வளவு காலத்திற்குக் கட்சி நடத்தப் போகிறீர்கள்? ('விடுதலை' 10.3.96) - என்று அன்று கி.வீரமணி எழுதினார். காங்கிரசை தனிமைப்படுத்த அன்று குரல் கொடுத்தவர். இன்று தமிழகத்தின் உணர்வாக அந்தக் கருத்து உருவாகும் போது தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரசுடன் கை குலுக்குவது, தமிழினத் துரோகம் அல்லவா?
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரி என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதி செயற்குழுவில் பேசியிருக்கிறார். இதைக் கண்டிக்காத வீரமணி, தி.மு.க. அமைத்துள்ள குழுவிலும், இடம் பெற்றுள்ளார். அப்படியானால், பிரபாகரன் சர்வாதிகாரி என்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்தை கி.வீரமணி ஆதரிக்கிறாரா? இல்லை என்றால், அதை இதுவரை மறுத்து எழுதாதது ஏன்? தி.மு.க.வின் துரோகப் பாதை தான் தி.க.வின் பாதையா?
1991 இல்விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியாவில் அய்க்கிய முன்னணி ஆட்சி நீட்டித்தது. அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியே நடந்தது. அப்போது இதே கி.வீரமணி என்ன எழுதினார்? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்கக் கூடாது என்று எழுதினார்.
"ஏனைய போராளிக் குழுக்களில் பலவும் தாராளமாக தமிழ்நாட்டில், இந்தியாவில் நடமாட உரிமைகள் அளித்து விட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினை மட்டும் தடை செய்வது ஏன்?" - என்று கேட்ட வீரமணி, அப்போது தமிழகத்தில் இருந்த கலைஞர் கருணாநிதி அரசும் இதற்கு உடன்பட்டு பழியை சுமக்கக்கூடாது என்று எழுதினார்.
"மத்திய அரசு - அய்க்கிய முன்னணி அரசு முந்தைய அதிகார வர்க்கம் விரித்த வலையில் வீழ்ந்து, அவகீர்த்தியைத் தேடிக் கொள்வதும் தமிழக தி.மு.க ஆட்சி - கலைஞர் அரசு இதில் பழியைச் சுமப்பதும் தேவையற்ற ஒன்று என்பது நமது உறுதியான கருத்து. ('விடுதலை' 15.6.96)
1996 இல் வெளியிடப்பட்ட உறுதியான கருத்து. இப்போது தி.மு.க. தலைமை விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இழிவுபடுத்திப் பேசும்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டது?
மத்திய அரசின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டதாக 'இந்து' பார்ப்பன ஏடு கலைஞர் கருணாநிதியை பாராட்டி மகிழ்கிறது. 'இந்து' பார்ப்பன ஏட்டின் கருத்துகளை எதிர்ப்பதே பெரியார் கற்றுத் தந்த அணுகுமுறை என்று கூறி வந்த கி.வீரமணி, இப்போது 'இந்து'வின் பாராட்டைப் பெறும் கலைஞர் கருணாநிதியோடு கரம்பிடிக்க நின்று கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
திராவிடர் கழகத்தில் இன்னும் மிச்சம் மீதியுள்ள உணர்வுள்ள இளைஞர்களைக் கேட்கிறோம், கி. வீரமணியின் இந்த துரோகத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? காங்கிரஸ் கட்சித் தொண்டன்கூட இன துரோகத்தை எதிர்த்து, அக்கட்சியைக் கண்டித்து, தீக்குளிக்கும் போது பெரியார் தொண்டர்களே இந்த துரோகத்தைத் தட்டிக் கேட்காமல் வாய் மூடி நிற்கப் போகிறீர்களா? அல்லது 'உலகத்தின் ஒரே தமிழர் தலைவர் எங்கள் தலைவர்' என்று மீண்டும் பஜனைப் பாடல்களைப் பாடப் போகிறீர்களா?