(தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் 10-06-09 அன்று சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரை, நேர நெருக்கடி காரணமாக அங்கு ஆற்றியதும், ஆற்ற வாய்ப்பின்றி ஆற்றாமல் விட்டதுமான கருத்துகளின் தொகுப்பு)

அனைவருக்கும் வணக்கம்.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் நாம் அனைவரும் புறத்தோற்றத்திற்கு எப்படிக் காட்சியளித்த போதிலும் அகத்தளவில் கனத்த இதயத்தோடும், தாங்கவொண்ணா துயரத்தோடும் மிகுந்த வேதனையோடும், சொல்லப் போனால் நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும், போராளிகளையும் காப்பாற்ற நாம் எதுவும் செய்யத் திராணியற்றவர்களாய் இப்படிக் கண்ணெதிரில் அவர்களை அழிய விட்டோமே, ஆயிரக் கணக்கில் மடிய விட்டோமே என்கிற ஒரு குற்ற உணர்ச்சியோடுமே இங்கே திரண்டிருக் கிறோம் எனலாம்.

உலக வரலாற்றில் எத்தனையோ இனங்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியிருக்கின்றன. அப்போராட்டங்கள் பல்லாண்டு காலம் நீடித்திருக்கின்றன. இறுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன. வியட்நாம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஹோசிமின் தலைமையில் போராடியது. வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகள் சிறையிலே அடைக்கப்பட்டு பெரும் இன்னல் களுக்கு உள்ளாக்கப்பட்டார். தென் னாப்பிரிக்க இனவெறி அரசுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது. ஆனால் ஈழப் போராட்டம் இப்படி வெற்றி பெற முடி யாமல், தற்போது அது பலத்த இழப்பு களையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ள துடன், மக்களும் பல் லாயிரக் கணக்கில் கொல்லப்பட எஞ்சியுள்ள மக்களும் வார்த்தைகளில் விவரிக்க இயலாத கொடும் துயரங்களுக்கும் அவலங் களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

1983 ஜூலை படுகொலை சம்பவம் தொடங்கி இந்த 2009 வரை கடந்த 25 ஆண்டுகளாக நாமும் ஈழத் தோழர் களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டங் கள், ஊர்வலங்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், மறியல்கள், மனித சங்கிலிகள், முழு அடைப்புகள் என எத்தனையோ வடிவங்களில் நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறோம். ஆனால் எதுவும் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எந்த வகையிலும் உதவ முடியவில்லை. அப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி பயன் தர வில்லை. மாறாக 25 ஆண்டுகளுக்கு முன்பு அம்மக்கள் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடவும் கீழான மோசமான நிலைக்கு இப்போது அவர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இன்று ஈழச்சிக்கல் என்பது ஏதோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து, உணவுப்பொருள் வழங்கும் நிவாரணப் பணிபோல் ஆக்கப்பட்டுள்ளது. அவர் களது உரிமை பற்றிய சிந்தனை பின் னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழீழ மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று மரி யாதையோடும், கண்ணியத்தோடும் வாழவும், அதற்கான அவர்களது போராட்டம் தொடரவும், அதற்கான நமது ஆதரவு பெருகவும், கடந்த கால அனுபவங்களி லிருந்து பாடம் கற்று, அடுத்து நாம் என்ன செய்யலாம், எப் படிப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து செயல்படலாம் என்பது போன்ற சிந் தனைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் பயன்படும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுக் கொள்கை என்று தலைப்பு தந்திருக்கிறார்கள். இந்தத் தலைப்புக்குள் செல்வதற்கு முன், உலகெங்கிலும் உள்ள நாடுகள், உறவுகள் சார்ந்த சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது தேவையாகிறது.

இன்று உலகமே, உலக நாடு களுக்கு இடையேயான உறவுகளே ஒரு கட்டைப் பஞ்சாயத்து போல இயங்கு கிறது. சாதாரண சிற்றூர்ப் புறங்களில் நடக்கும் பஞ்சாயத்துகளில், பிரச்சினை யின் தன்மை, தகுதி அடிப்படையில் அதற்கு தீர்ப்பு வழங்காமல், பிரச்சினை யோடு சம்மந்தப்பட்டவர்களில் வேண் டியவன், வேண்டப்படாதவன் யார் என்று பார்த்து தீர்ப்பு வழங்குவது போல், உலகப் பிரச்சினைகளிலும் நாடுகள், பிரச்சினையின் தன்மை, தகுதிப்பாடு, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்கு தீர்வு காண் பதை விட்டு, பிரச்சினையோடு தொடர் புடைய நாடுகளில் வேண்டப்பட்ட நாடு எது, வேண்டப்படாத நாடு எது எனப் பார்த்து அதற்கேற்ப அந்த ‘நல் லுறவுகளை’ பாதுகாப்பது என்கிற நோக்கிலேயே நிலைபாடுகளை மேற் கொள்கின்றன. அது அதற்குரிய அணுகு முறைகளை கைக்கொள்கின்றன.

காட்டாக, கொசவா, திபெத் போராட்டங்களை, அவை ருஷ்ய, சீன நாடுகளுக்கு எதிரானவை என்பதால், அவற்றை ஆதரிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈழத்தை ஆதரிப்பதில்லை. திபெத் விடுதலையை ஆதரித்து அந்த மக்கள் இந்தியாவில் தங்க, சீனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. இந்திய அரசின் ஆதரவுடனே இவற்றை அவை செய்து வருகின்றன. ஆனால் ஈழத்துக்கு ஆதர வாக பேச, எழுத, உதவ, தடை செய் கின்றன. வாய்ப்பூட்டு போடுகின்றன. இப்படி அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள், ஆதிக்க சக்திகள் நலன் சார்ந்தே நாடுகளுக்கிடையேயான உறவு களும், வெளியுறவுக் கொள்கை களும் தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கை சார்ந்த இந்தியாவின் அணுகு முறையும் இவ்வாறே. நாடுகளுக்கிடையேயான உறவு கள் அல்லது ஒரு நாடு அடுத்த நாட்டை ஆக்கிரமித்தல், கைப்பற்றல், தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல் என்பன முக்கியமாக நான்கு வித அடிப் படைகளில் நிலவுகின்றன.

1. ஒரு நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையடித்தல்

2. ஒரு நாட்டில் பெருகிக் கிடக்கும் மனித வளத்தை, உழைப்பை மலிவான விலையில் சுரண்டுதல்.

3. ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு, தன் நாட்டு உற்பத்திப் பொருளுக்கு அவற்றைச் சந்தையாகப் பயன் படுத்துதல்

4. மேலே சொன்ன மூன்று கார ணங்களுக்கு அப்பால் அவற்றுக்கு வாய்ப்பு அல்லாவிடினும், அந்நாடு அமைந்திருக்கும் புவியியல் இருப்பை யொட்டி, அதை ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கொண்டு, அதற்கு உதவுவது, கை கொடுப்பது. அதைத்தன் கட்டுப்பாட் டில் வைத்துக் கொள்ள முயல்வது.

இந்த நோக்கில் இந்தியாவின் இலங்கை மீதான அக்கறைக்கு முதலில் சொல்லப்பட்ட மூன்று காரணங்களை விடவும் நான்காவது காரணமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொள்ளப் படுகிறது. சுமார் 2 கோடி மக்கள் தொகையுடன் 65 ச.கி.மீ. பரப்பு மட்டுமே கொண்ட, இயற்கை வளங் களும், தேயிலை, காபி, ரப்பர் தோட் டங்கள், எரி எண்ணெய் என மிகக் குறைவாகக் கொண்ட ஒரு நாட்டில் மேற்சொன்ன மூன்று காரணங்களின் முக்கியத்துவம் குறைவு. மாறாக நான் காவது காரணமே இலங்கைக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. இந்து மாக் கடல் பகுதியில் இலங்கை யின் புவியியல் இருப்பை நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆங்கில ‘வி’ எழுத்து வடிவல் குமரி முனையைத் தென் எல்லையாகக் கொண்டு முடிவடையும் இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்கே அமைந் துள்ள இலங்கை வடகிழக்குத் திசையில் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடு களையும், மேற்கு, வடமேற்குத் திசை யில் ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடு களையும் நோக்கியவாறு அமைந்துள் ளதை அறியலாம். இலங்கையில் அமையும் ஒரு இராணுவ தளம் இந்த நோக்கில் அதிக முக்கியத் துவம் வாய்ந் ததாக இருக்கும் என்பதுடன் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நோக் கியும், மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும் கடல்வழி மற்றும் வான்வழிப் பாதைகளின் இடைப்பட்ட தளமாகவும் இலங்கை அமைந்துள் ளதைப் புரிந்து கொள்ளலாம். இப்படிப் பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடத் தில் இலங்கை அமைந்துள்ளதால் தான், பிற எல்லாக் காரணங்களையும் விட வும், கூடுதலாக கேந்திர முக்கியத் துவம் வாய்ந்ததாக இலங்கை இந்தியா வாலும், உலக நாடுகளாலும் நோக்கப் படுகிறது. இலங்கையின் மீதான இந்தியா வின் அக்கறை ஏதோ சுதந்திர இந்தியா விலிருந்து கொள்ளப்படுவதாய் கருதக் கூடியதல்ல. மாறாக அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்கு கிறது.

இந்தியாவைக் கைப்பற்றி தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டுவந்த ஆங்கி லேயர்கள், இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்திற்கும், அரசாட்சிக்கும் இலங்கை தங்கள் பாதுகாப்பின்கீழ் இருப்பது அவசியம் என்று கருதி னார்கள். ஆகவே இந்தியாவிற்கு சுதந் திரம் வழங்கும் வரை இலங்கை யையும் தங்கள் ஆட்சியின்கீழ் வைத் திருந்தனர். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது என்று முடிவு செய்த கையோடே, இலங்கைக்கும் - அங்கு இந்தியாவைப் போல வெள்ளை யருக்கு எதிரான வீறு கொண்ட போராட் டங்கள் ஏதும் எழாத நிலையிலும், அதைக் கை கழுவும் நிலைக்கு வந்தனர். எனவேதான் 1947 ஆகஸ்டு 15இல் இந் தியாவுக்கு சுதந்திரத்தை அறிவித்த ஆங் கிலேயர் அதற்கடுத்த ஆறு மாதங்களுக் குள்ளேயே 1948 பிப்ரவரி 4-இலேயே இலங்கைக்கான சுதந்திரத்தையும் அறிவித்தனர்.

வெள்ளை ஆதிக்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பெற்ற காங்கி ரசும், ஆங்கில ஆதிக்கத்தைப் போலவே இலங்கையை இந்தியாவின் ஒரு மாநி லமாக இந்திய ஆட்சிப் பரப்புக்குள் தக்க வைத்துக்கொள்ள முயன்றது. “இந்திய கூட்டாட்சி அமைப்பில் இலங்கையும் சுயாதிக்கம் உள்ள பகுதியாக நிலவலாம்” என ஜவகர்லால் நேருவும் “இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை இந்தியாவுடன் இணைக்கப் பட வேண்டும்” என்று எம்.கே. பணிக் கரும் 1945ஆம் ஆண்டிலேயே குறிப் பிட்டுள்ளனர். “இலங்கை விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, அது இந்தியா வுடன் இணைய வேண்டும்” என வைத் தியாவும், இந்தியாவிற்கு விரோதமான நாடுகளுடன் இந்தியா உறவு கொள்ளக் கூடாதென்றும், இரு நாடுகளுக்கும் ஒரே பொதுவான பாதுகாப்புக் கொள் கையே இருக்க வேண்டும் என வும் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாரா மையரும் சுதந்திரத் திற்கு பின் 1948இல் கூறியுள்ளார்.

இந்தியாவில் இப்படிப்பட்ட கருத்துகள் உலா வரத் தொடங்கிய 1940கள் வாக்கிலேயே இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயகா 1942இல், “இந்திய கூட் டாட்சி அரசு அமைப்பில் இலங்கை இணை வதானது, இலங்கைக்கு அரசி யல், பொருளாதாரம், ராணுவம் போன்ற ரீதியில் நன்மை பயக்கும். ஆனால் இந்தியாவிலிருந்து இலங் கைக்கு குடியேற்றமும் பொருளாதார ஊடுருவலும் ஏற்படுவதற்கெதிரான பாதுகாப்பும் அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் பூரண சுயாதிபத்தியத் திற்கான உத்திரவாதமும் கட்டாயம் அளிக்கப் படவேண்டும்” என்று குறிப் பிட்டுள்ளார். இவ்வாறு இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்கிக் கொள்ளும் கருத்தாக்கம் அப்போது நிலவியது.

இலங்கை இந்திய எல்லைக்கு அப்பால் தனித்த ஒரு நாடாக அல்லவா இருக்கிறது. அதை எப்படி இந்தியா வின் ஒரு மாநிலமாகக் கொள்ளும் நோக்கு தோன்றியிருக்க முடியும் என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். நியாயம். ஆனால் அந்தமான், நிக்கோ பார் தீவுகள் சென்னையிலிருந்து 1200 கி.மீ. தூரத்திலும் கல்கத்தாவிலிருந்து 1250 கி.மீ. தூரத்திலும் உள்ளது. ஆனால் இவை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதிகள். அந்தமான் நிக்கோபார் தீவு களுக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம். அதேபோல கேரள கடற்கரையிலிருந்து 300 முதல் 400 கி.மீ. வரை சிதறிக் கிடக்கும் லட்சத் தீவுகள் தில்லி ஒன்றிய ஆட்சிப் பகுதிகள். இதற்கு உயர் நீதிமன்றம் கேரளம். இப்படி இவ்வ ளவு தொலைவில் உள்ள பகுதிகள் எல்லாம் இந்திய ஆட்சிப் பரப்புக்குள் இருக்க, கன்னியாகுமரியிலிருந்து சென் றால் 80 கி.மீ. தூரத்தில் கொழும்புவும், கோடியக் கரையிலிருந்து சென்றால் 20 கி.மீ. தூரத்தில் யாழ்ப்பாணமும் உள்ள இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாகக் கொள்ளும் கருத்து தலை தூக்கியதில் வியப்பில்லை.

அதுமட்டுமல்ல, வெள்ளை ஆட்சியின்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கீழ் யாழ்ப்பாணக் குடிமை நிர்வாகம் நடைபெற் றிருக்கிறது. இந்த அளவு புவியியல் இருப்பும், நிர்வாக மற்றும் தொலைதொடர்பு நெருக்கமும் இதற்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல பிரித்தானியர் ஒன்றுபட்ட இந்தியத் துணைக்கண்ட விடுதலையை விரும்பாமல் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக வழி வகுத்தனரே, அதேபோல இலங்கையையும் இந்தியா வோடே சேர விடாமல் தனித்தனி அரசுகளாக அமைத்துத் தந்தார்கள். இப்பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நீட்டிக்கும் நோக்கில் வெள்ளை ஆட்சி இதைச் செய்தது என்றாலும், சுதந்திரத் திற்குப் பிறகான இந்தியா, இலங் கையை ஒரு தனிநாடாகப் பார்க்காமல், மிகுந்த பரிவுடன் தன் ஆதிக்கப் பகுதிக் குட்பட்ட ஒரு மாநிலம் போலவே பாவித்து அன்று முதல் இன்று வரை இலங்கைக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.

இந்தியா இலங்கையின் பால் இப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை மேற்கொள்ள, இந்தியாவைச் சுற்றி யுள்ள பிற நாடுகளுடனான அதன் அணுகு முறையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடு கள் என்பவை இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பின்னும் வேறு வேறானவை. காட்டாக, 1947 இந்திய சுதந்திரத்தின்போது மேற்கு, கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய பாகிஸ் தான் உருவாக்கப்பட்டது. தனியரசாக இருந்த காஷ்மீர் 1948இல் இந்தியா வுடன் இணைக்கப்பட்டது. 1975இல் சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக பிணைக்கப்பட்டது. எனவே, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவை இந்த மாறுதல்களினூடேயே நோக்க வேண்டும்.

இந்தியாவின் வடக்கே இந்தி யாவை விட எல்லா வகையிலும் பலம் மிக்கதாக, இந்தியாவுக்கு அச்சுறுத் தலாக விளங்கும் நாடு சீனா. அதற் கடுத்து இந்தியாவைவிட எல்லா வகை யிலும் பலம் குறைவானதாக இருந் தாலும், சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவை அச்சுறுத்தி வரும் நாடு பாகிஸ்தான். 1962இல் சீனாவோடும், 1964இல் 1999இல் பாகிஸ்தானோடும் இந்தியா போர் நடத்தியதை வைத்து இதைப் புரிந்து கொள்ளலாம். இவ் விரண்டையும் விட்டு தற்போது அடுத்து உள்ள நாடுகள் வடக்கே நேபாளம், பூட்டான். கிழக்கே வங்க தேசம், தெற்கே இலங்கை, மாலத் தீவுகள்.

இவற்றுள் இலங்கை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவை மூத்த சகோதரனாக, அதன் மேலாதிக் கத்தை ஏற்றுக் கொள்ளும் நாடுகள். ஆனால் இலங்கை அப்படி ஏற்றுக் கொள்ளும் நாடு அல்ல. அதேவேளை இந்தியாவை நேரடியாக பகைத்துக் கொள்ளும் நாடும் அல்ல. மாறாக இந்தியா தனக்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ் தானிடமும் சீனாவிடமும் உதவி பெறுவேன் என்று அச்சமூட்டியே இந்தியாவை தனக்கு சாதகமாக வைத்துக் கொள்ளும் உத்தியைக் கடைப் பிடித்து வரும் நாடு இலங்கை. அதே வேளை, அது பாகிஸ் தான், சீனா ஆகிய நாடுகளுடனும் நெருக்கமாக இருக்கிறது. இது இந் தியாவுக்கு நன்கு தெரிந்ததுதான் என் றாலும் இலங்கை தன் பிடியிலிருந்து விலகாமலிருக்கவும், சீனா, பாகிஸ்தான் பக்கம் அதிகம் சாயாமல் தடுக்கவும் இலங்கையை செல்லப்பிள்ளை மனோ பாவத்தோடு பாவித்து அது கோரும் உதவிகளை யெல்லாம் செய்து வருகிறது இந்தியா.

சுருக்கமாக இந்தியா, இலங்கையை ஒரு மாநிலமாக உருவாக்கிக் கொள்ள இயலாமல் போனாலும், அது இந்தியாவில் ஒரு மாநிலமாக இருந் தால் என்னென்ன உதவிகள் செய்யுமோ அத்தனை உதவிகளையும் செய்து வரு கிறது. அதேவேளை, அது ஒரு தனி நாடாக இருப்பதால் அதன்மீது இந் தியா எந்தவிதக் கட்டுப்பாடும் செலுத்த முடியாமலும் இருக்கிறது. அதாவது உதவி நோக்கில் சொந்த மாநிலம் போலவும், கட்டுப்பாடு நோக்கில் அண்டை நாடு போலவும் இருந்து வருகிறது. இதில் கட்டுப்பாடு செலுத் தும் வலு, வாய்ப்பு இருந்தாலும் அதற் கான திராணியற்று இருக்கிறது. இலங்கை சார்ந்து இந்தியா கடைப் பிடிக்கும் ஒவ்வொரு அணுகுமுறை யிலும் இதைக் காணலாம்.

காட்டாக, 1971இல், மேற்கு பாகிஸ் தானிடமிருந்து கிழக்கு வங்கம் விடுதலைக்காகப் போராடியபோது, இந்தியா மேற்கு பாகிஸ்தானுக்கு எதி ராக கிழக்கு பாகிஸ்தான் விடுதலையை ஆதரித்து நேரடியாகவே தன் படை களை அனுப்பி வங்கதேசத்துக்கு விடு தலை வாங்கித் தந்தது. அதே 1971இல் இலங்கை அரசுக்கு எதிராக புரட்சிக்குத் திட்டமிட்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுணா என்னும் துஏஞ அமைப்புக்கு இந்தியா ஆதரவு தரவில்லை. மாறாக இலங்கை அரசுக்கு ஆதரவாகப் படை களை அனுப்பி துஏஞ-யை ஒடுக்கியது. அதேபோல 1988 மாலத்தீவில் அரசுக்கு எதிராக நிகழ்ந்த கலகத்திலும் கலகக் காரர்களை ஆதரிக்காமல் அரசையே ஆதரித்தது. அதாவது பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்த இந்தியா, இலங்கையில் மாலத்தீவில் அரசுகளுக்கு ஆதரவாக நின்றது என்பதே இதன் பொருள்.

அதோடு மட்டுமல்ல, சீனா வோடும், பாகிஸ்தானோடும் போர் நடத்தியது எதற்காக, இந்தியாவின் ஒரு அங்குல மண்ணையும் அந்நிய நாட் டுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதற் காக. ஆனால் இதே இந்தியா, 1974இல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது. தமிழக மக்களின் கருத் தறியாமல், அவர்கள் இசைவைப் பெறாமல் தமிழ்நாட்டுக்குச் சொந்த மான மண்ணை இலங்கைக்கு அடைக்கலமாக்கியது. இப்படியெல்லாம் இலங்கைக்கு மட்டும் தனி அணுகுமுறையும், தனிச் சலுகைகளும் வழங்கி வரும் தில்லி அரசு வாய்ப்புக் கிட்டும்போது இலங் கைக்கு நெருக்கடி தந்து அது தன்னைச் சார்ந்திருக்கச் செய்யும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது.

1970களில் இலங்கையில் போரா ளிக்குழுக்கள் உருவாகி, இலங்கை அரசை எதிர்த்த ஆயுதமேந்திய போராட் டங்களில் இறங்க, அக்குழுக் களுக்க இந்தியா தன் சொந்த செலவில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளைக் கொண்டு இங்கே பயிற்சியளித்தது. இப்படிப் பயிற்சி பெற்ற குழுக் கள் ஒன்றாகச் சேர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி நுசூடுகு என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, ஓர் ஐந்தம்சக் கோரிக்கையை - அக்கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றான தனி ஈழம் தவிர்த்த வேறு எந்த குறைந்த பட்சத் திட் டத்தையும் ஏற்பதில்லை என்பதை - முன்வைக்க இந்திய அரசு விழித்துக் கொண்டது.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந் தால் அதன் தாக்கம் தமிழ் நாட்டிலும் வெளிப்படும். தமிழகத்திலும் தனித் தமிழ்நாடு கோரிக்கை எழும் என்பதை உணர்ந்த தில்லி அரசு, தன் உளவு அமைப்பானை ‘ரா’வைப் பயன் படுத்தி, போராளிக் குழுக்களுக்குள் பிளவையும் மோதலையும் ஏற்படுத் தியது. அதேவேளை, ஈழச் சிக்கலில் தன் ஆதிக்க நலனுக்கு பொருத்தமாக தான் விரும்பும் ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்து அதைப் போராளிகளை ஏற்கச் செய்யும் முயற்சியிலும் இறங்கியது. 1985இல் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. தில்லி, சென்னை, பெங்களூர் என இதன்மீது பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி பின் 1987இல் ராஜீவ் ஜெய வர்த்தனே ஒப்பந்தம் போட்டது, புலிகள் அமைப்பு அதை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தியது, அது ஏற்காத நிலையில் இந்தியா அமைதிக் காப்புப் படை என்கிற பெயரில் தன் படையை அனுப்பி ஈழப் போராளிகள் மீது அடக்கு முறையை ஏவியது, திலீபன் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தது, படைத் தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 போராளிகள் சயனைடு அருந்தி மாண்டது, 1993 சனவரியில் கிட்டுவின் கப்பலை வழிமறிக்க, அவர் போராளி களோடு மாண்டது என எண்ணற்ற இந்திய அரசின் வல்லாதிக்க நடவடிக் கைகள் இதன் பின்னணி யிலேயே நோக்க வேண்டும்.

இலங்கை சார்ந்த இதே அணுகுமுறையின் தொடர்ச்சிதான் தமிழின துக்கு எதிரான இந்திய அரசின் சமீப 7, 8 மாத கால குரூர நடவடிக்கைகளும். 1987 ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந் தத்தில் உள்ள பல்வேறு பிரிவு களில், இந்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகளோடு நெருக்கமான தொடர் புடைய முக்கியமான பிரிவுகள் இரண்டு, 1) தனிநாடு கேட்கும் பயரங்கரவாத அமைப்புகளில் இலங் கையைச் சார்ந்தவர்களை இந்தியா நாடுகடத்தும், 2) இந்தியா இலங் கைக்கு தேவையான ராணுவ உதவி களையும் படைப் பயிற்சிகளையும் அளிக்கும். இந்த இரு பிரிவுகளின் அடிப்படையில் தான் இந்தியா தற் போது இலங்கைக்கு அனைத்து வகை யான உதவிகளையும் செய்து வருகிறது.

10-09-08 தேதியிட்ட நாளேடுகளில் ஒரு செய்தி. வவுனியாவில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் 8 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 2 இந்திய ராணுவத்தினர் காயம் பட்டனர் என்று. இந்திய ராணுவத்தினர் ஏற் கெனவே இலங்கையில் இருப்பது அதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாக உலா வந்து கொண்டிருந் தாலும், இந்திய ராணுவத்தினர் காயம் பட்ட செய்தி அதை உறுதிப் படுத்திய துடன், இவர்கள் ஏன் இலங்கைக்குப் போய் போராளிகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்கிற ஆத்திரத் தையும் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.

விளைவாக அச்சம்பவம் அறியப் பட்ட நாள் தொடங்கி ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடாதப் பிரிவு மக்களே இல்லை, அமைப்பு களே இல்லை என்கிற அளவுக்கு அனைத்துப் பிரிவு மக்களும் அவரவர் சக்திக்கும் வாய்ப்புக்கும் உட்பட்ட வடிவங்களில் பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என பல்வேறு வகைகளில் போராடினர். அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து தமிழக சட்ட மன்றத்தில் இது குறித்து இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய துடன் மூன்றாவது முறையாக ‘ஐயகோ’ தீர்மானத்தையும் நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால் எது குறித்தும் தில்லி சட்டை செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அதன் நிலையில் கிஞ்சித்தும் மாற்றமின்றி இலங்கை இனவெறி அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்து, தமிழின அழிப்புப் போரை நடத்தி வந்திருக் கிறது. அதோடு மட்டுமல்ல, தமிழீழ மக் களுக்கு ஆதரவாக மனிதாபிமான அடிப்படையில் எழும் உலக நாடுகளின் முயற்சிகளையும் திட்டமிட்டு முறி யடித்து வருகிறது.

அதாவது இலங்கை இந்தியா வின் கீழ் தனக்கு விசுவாசமான ஒரு மாநிலமாக, தனக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசாக இருந்தால் என்னென்ன உதவிகள் செய்யுமோ அத்தனை உதவி களையும் இலங்கை அரசுக்கு செய்து வருகிறது. இத்துடன் இது ஏதோ இலங்கை யில் இந்திய அரசு நடத்தும் தமிழின அழிப்புப் போர் என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடியதன்று. இது தமிழகத் தமிழர்களுக்கு எதிரான ஒரு சவால். தில்லி அரசு தமிழகத் தமிழர்களைப் பார்த்து, ஈழத்தில் எப்படி தமிழினத்தை அழித்தோம் தெரியுமா, அதைப்போல உங்களையும் அழிப் போம், ஆகவே அதைப் பார்த்து வாலை சுருட்டிக் கொண்டு கட்டுப்பெட்டித் தனமாக அடக்க ஒடுக்கமாக இருங்கள். மீறி ஏதும் வாயைத் திறந்தால், உரிமைக் குரல் எழுப்பினால் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் என்பதான அச்சுறுத்தல். இதுதான் இலங்கை சார்ந்து இந்திய அரசு கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கையின் சாரம்.

ஏதோ இந்திய அரசின் வெளி யுறவுக் கொள்கைதான் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது என்று கருதிவிடக் கூடாது. இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கையும் தமிழர்களுக்கு எதிரானது தான். காவிரிச் சிக்கலில், முல்லைப் பெரியாறு, பாலாற்று நீர் உரிமைச் சிக்கலில், கச்சத் தீவு, கண்ணகிக் கோட்டச் சிக்கலில், தமிழக மீனவர்கள் சிங்கள கப்பற் படையால் தாக்கப்படும் சிக்கலில் இப்படி அனைத்து சிக்கல் களிலும் உள்நாட்டுத் தமிழர்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் அவர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாது காக்க முன்வராமல், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று உதாசீன மாகவும் அலட்சியமாகவும் இருந்து அண்டை இனங்களை அரவணைத்துச் செல்வது இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கை. இப்படி இந்திய அரசின் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கை அனைத்துமே தமிழர் களுக்கு, தமிழினத்துக்கு எதிராக இருக் கிறது என்பதுதான் நாம் கண்ட பலன்.

ஆகவே, இந்நிலையில் இதை மாற்ற இதை முறியடிக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள ஒரே கேள்வி. இதற்கு இரண்டு வழிகளில் நாம் விடை கண்டாக வேண்டும். ஒன்று, தமிழக மக்களின் உணர்வு களை கிஞ்சித்தும் மதிக்காமல் தில்லி அரசு தன் நிலைபாட்டில் பிடி வாதமாக இருந்து இலங்கை இனவெறி அரசுக்கு உதவுவதன் பொருள் என்ன, தமிழ் நாட்டு மக்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை, அவர்கள் எந்தக் காலத் திலுமே நமக்கு எதிராகப் போகமாட் டார்கள், அப்படியே ஏதாவது நேர்ந் தாலும் அப்படிப் போகாமல் பாது காத்து நமக்கு சேவகம் செய்து வைக்கிற பணியை பதவி சுகங்களுக்காக, தன் காலில் மண்டியிட்டுக் கிடக்கிற அடிமைக் கட்சிகள் பார்த்துக் கொள் ளும் என்கிற நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை நாம் முறியடிக்க வேண்டும். இதில் தி.மு.க.வை மட்டுமே குற்றம் சுமத்தி நாம் தப்பித்துக் கொள்ள முயலக் கூடாது. இனப் போரில் எண்ணற்ற பிணங்கள் விழுந்து அப்பாவி மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை, எனக்குத் தேவை என் குடும்ப உறுப்பினர்களுக்கு, விசுவாசிகளுக்கு அமைச்சர் பதவி என தில்லியில் திருவோடு ஏந்தி தமிழினத் துரோகம் புரிந்து வருபவர் கருணாநிதி என்பது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போன ஒன்று. ஆனால் அதை மட்டுமே பேசி, அதை மட்டுமே குற்றம் சாட்டிக் கொண்டிருக் காமல், நாம் என்ன செய்தோம் என் பதையும், என்ன செய்யத் தவறினோம் என்பதையும் சற்று மீள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பார்த்து அதிலிருந்து பாடம் கற்று, தமிழர்களுக்கு விரோத மான, தமி ழினத்துக்கு எதிரான காங்கிரஸ் கட் சியை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்த வேண்டும். இத்துடன் இப்படிப் பட்ட காங்கிரஸ் கட்சியுடன், தமிழகத் தில் தன்மானமுள்ள, தமிழினச் சொர ணை யுள்ள எந்தக் கட்சியும் இனி கூட்டு வைத்துக் கொள்வதில்லை, அதற்காக தமிழகத்தில் வாக்கு கேட்ப தில்லை, மாறாக தமிழகத்திலிருந்து காங்கிரசைத் துடைத்தெறிவதே நம் இலட்சியம் என்பதாக சபதமேற்று அதைக் கராறாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

இரண்டாவது, கட்சிகள், கூட் டணிகள், கூட்டு நடவடிக்கைகள் என்பதை ஏதோ இது தேர்தல் காலப் பிரச்சினை என்பதாக தேர்தலோடு மட்டும் குறுக்கிப் பார்த்துக் கொள் ளாமல் எல்லாக் காலத்திலும் இப்பணி தொடர ஒரு நிலைத்த கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஈழத்தமிழர் சிக்கல் என்பது ஈழத்தோடு முடிவதல்ல. அது தமிழக உரிமைகளோடு தொடர்புடையது. ஈழ மக்களுக்கு உதவ தமிழக மக்களுக்கு முழு உரிமை இருந்திருக்குமானால், ஈழப் போராட்டத்தின் திசையே வேறு மாதிரி யிருந்திருக்கும். தமிழ் ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும். ஆனால் அப்படியல்லாமல் தமிழகம் தில்லி யிடம் சிறைப்பட்டு தில்லி அரசால் அனைத்து உரிமைகளும் பறிமுதல் செய்யப்பட்டு எதற்கெடுத்தாலும் எல்லாவற்றுக்கும் தில்லியின் தயவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கக் கூடிய அவல நிலை நீடித்ததுதான் ஈழத்தை இந்நிலைக்கு ஆளாக்கியுள்ளது என் பதையுணர்ந்து இந்த உரிமைகளுக் காகவும் போராடும் விழிப் புணர்வைப் பெறவேண்டும்.

இத்துடன் தமிழக நலன்களைப் பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழகத்தில், அனைவரும் ஒன்றுபட்டு வரக்கூடிய ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்துடன் கூடிய ஒரு நிலைத்த கூட்டணியை உருவாக்க வேண்டும். இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கித் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் தமிழக உரிமைகள் சார்ந்து தமிழக மக்களும் விழிப்புணர்வு பெறு வார்கள். ஆட்சியாளர்களும் தாங்கள் இதுபற்றி மெத்தனமாயிருந்தால் எதி ரணிக் கட்சிகள் பிரச்சினையைக் கையிலெடுக்குமே என்று அச்சமடை வார்கள். அவர்களும் கொஞ்சமாவது தமிழக உரிமைகள் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள். இப்படிப் பல்முனைத் தாக்குதல் மூலம்தான் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க முடியும், மீட்க முடியுமே அல்லாது சும்மா ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு பயனும் விளையாது. மாறாக எதிர் விளைவுகளே ஏற்படும் என்பதை உணர்ந்து தமிழகக் கட்சிகள் செயல்பட வேண்டும்.

இறுதியாக ஒன்று, இலங்கை மண்ணில் வடக்கு கிழக்காக மூன்றில் ஒரு பங்கு பரவியிருந்த தமிழீழப் பகுதியைப் போராளிகள் தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதன் சிவில் நிர்வாகம் அனைத்தை யும், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், காவல் நிலையங்கள், நீதி மன்றங்கள் என அனைத்தையும் தாங் களே நிர்வகித்து வந்ததுடன் தமிழீழப் பாதுகாப்புக் கென்று தரை வழி, நீர்வழி, வான்வழி என முப்படைகளையும் நிறுவி, ஐரோப்பிய பாணியில் உருவாக் கப்பட்ட, போராளி களின் கனவு நகரமாம் கிளிநொச்சியைத் தலை நகராகக் கொண்டு சுதந்திரமாய் வாழ்ந்து வந்தார்கள். இந்தத் தமிழீழ மக்களின் வாழ்வை, சிங்களர்கள் உள்ளே நுழைய அஞ்சிய போராளி களின் கோட்டையை இலங்கை சார்ந்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை இலங்கைக்கான இந்திய அரசின் உதவி முற்றாக அழித்துப் போட்டு, அம்மக் களின் வாழ்வையே நரகமாக்கியுள்ளது.

தமிழீழத்தின் வரைபடமே இன்ன தென்று அறியாத சிங்கள ராணுவத்துக்கு செயற்கைக்கோள் மூலம் அதைத் தந்தும், ராடார் கருவிகள் தந்தும், ராணுவ அதிகாரிகள் அனுப்பியும், போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்து ஆயுதக் கப்பல்களை அழித்தும் எண் ணற்ற கொடுமைகளைச் செய்து போரா ளிகளை பூண்டோடு அழிக்கும் வெறி யில் சிங்கள அரசுக்கு உதவியுள்ளது. பேரிழப்புகளைச் சந்திக்க ஒரு சில மாதங்கள் முன்புவரை கூட போர் விமானங்களோடு வலம் வந்த போராளி களை முற்றாக அதன் சுவடு கூட இல் லாமல் ஆக்கியதுடன், போர்த்திறமும் வீரமும் மிக்க பல படைத் தளபதிகளின் எண்ணற்ற போராளிகளின் விலை மதிப்பிலா உயிர்களைப் பலி கொண் டுள்ளது. பலநூறு ஆண்டு பாரம்பரிய மும் தொன்மையும் மிக்க ஒரு இனத் தையே அழிக்கக் கங்கணம் கட்டி இந்திய அரசு தன் கொலை வெறியை ஈடேற்றி யுள்ளது.

எனவே, இதன் தாக்கம், இதன் காயம், வன்மம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் மாறாத வடுவாய் இடம் பெற வேண்டும். இன்றில்லா விட்டா லும் என்றாவது ஒரு நாள் தமிழினம் இதற்கு பழி தீர்க்கும் என்று வெஞ்சினம் கொள்ள வேண்டும். எந்த லட்சியத்திற் காக எண்ணற்ற போராளிகள் உயிர் நீத்தார்களோ, எந்த லட்சியத்தின் பேரால் எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப் பட்டார்களோ, கொடுந் துயர் களுக்கு உள்ளாக்கப் பட்டார்களோ, அந்த லட்சிய தீபத்தை - ஒளிச்சுடரை அணையாமல் பாதுகாத்து, அதை முன் னெடுத்துச் செல்ல நாம் ஒவ்வொரு வரும் நம்மாலியன்ற பங்களிப்பைச் செய்ய உறுதியேற்க வேண்டும்.

அரசியலாக்கலும், மக்கள்திரள் போராட்டமும்

புலிகள் அமைப்பின் பின்னடைவுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இவ்வமைப்பு தொடங்கி இந்த 33 ஆண்டுகளாக இவர்கள், மக்களை எந்த அளவு அரசியல் படுத்தினார்கள், மக்களை எந்த அளவு சிங்கள அரசை எதிர்த்துப் போராடப் பயிற்றுவித்தார்கள் என்பதெல்லாம் கூட கேள்வியாக்கப்படுகின்றன. காஷ்மீர் போராட்டம் முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அங்கு மக்கள் சனநாயகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றெல்லாம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி, நிர்வாகம் நடந்து வருகிறது. என்றாலும் எந்த ஒரு பிரச்சினையானாலும் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்களே. பல்லாயிரக் கணக்கில் திரண்டு போராடுகிறார்களே. அப்படி இருக்க அதுபோல் ஈழ மண்ணில் நடைபெற வில்லையே. அங்கு மக்கள் செய்வதெல்லாம் புலிகள் போகுமிடமெல்லாம், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பின்னால் போவதுமாகவேதான் இருந்திருக்கிறது.

கிளிநொச்சி வீழ்ந்தது என்று சொன்னால் புலிகள் அங்கிருந்து பின் வாங்கினாலும், மக்கள் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதுதானே. சிங்கள இனவெறி ராணுவம் விடாது சுட்டுத் தள்ளும் எனலாம். இப்போது மட்டும் என்ன நடக்கிறது. இப்படி அகதியாய்த் திரிந்து அல்லல்பட்டு உயிரிழப்பதைவிடவும் உள்ள இடத்திலிருந்தே போராடி உயிர் நீத்துப் போகலாமே. இப்படிச் செய் திருந்தால் இது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும். உலக நாடுகள் மத்தியில் பிரச்சினை ஆகி யிருக்கும். அப்படி அல்லாது புலிகள் ஆயுதத்தை மட்டுமே நம்பியதும், மக்கள் தாங்கள் சொந்த மாய் எதுவும் செய்யாமல் புலிகளை மட்டுமே நம்பியதும் கூட இந்த பின்னடைவுக்கான காரணங் களாக இருக்கலாமோ என்றும் அலசப்படுகிறது.

தேவை செயலூக்கமிக்க ஒரு கூட்டமைப்பு

ஈழத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு ஈழ விடுதலை ஆதரவுக் கட்சியினர் கருணாநிதியைக் குற்றம் சுமத்துவதிலேயே குறியாயிருக்கின்றனர். கருணாநிதி தன்னல நோக்கோடு, தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும், காவு கொடுக்கும், இனத் துரோகத்தைச் செய்து வருபவர் என்பதில் உணர்வாளர்கள் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இதில் கருணாநிதியை மட்டுமே குற்றம் சுமத்தி நாம் செய்த அல்லது செய்யாமல் விட்ட தவறை மறைத்துவிடவோமறந்துவிடவோ முடியாது.அப்படிச் செய்தால் மக்களுக்கு இருக்கிறவர்கள் மீதும் நம்பிக்கையற்றுப் போகும் ஏற்கெனவே இவ்வமைப்பினர் தீவிர போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என உணர்வாளர்கள் சோர்வில், விரக்தியில் இருக்கின்றனர். இதனாலேயே பயன் ஏதும் விளைவிக்காத வெற்று சம்பிரதாயமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபாடு காட்டாதும் இருந்தனர். அடுத்தடுத்த போராட்டங்களில் கூட்டமும் எழுச்சியும்குறைவாகவும் இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொளள வேண்டும்.

நிலைமை இப்படிஇருக்க திமுகவும் விசிகவும் மற்ற கட்சியினர் யாரும் ஒன்றுபட்டு வரவில்லை என இவர்கள் மேல் குற்றம் சுமத்த இவர்கள் அவர்கள் மேல் குற்றம் சுமத்த இப்படிவே மாற்றி மாற்றி லாவணி பாடிக் கொண்டிருந்தால் இதனால் தமிழ்ச் சமூகத்திற்கு எந்தப் பயனும் விளையாது. தமிழக மக்களது அக்கறையும் அது இல்லை. துதோகிகள் தொலையட்டும் , இருப்பவர்களாவது உருப்படியாய் எதையாவது செய்வோம் செய்யவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு. எனவே இந்த எதிர்பார்ப்பைத் தமிழகத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து இதை நிறைவேற்ற உரியவழி வகைகளைக் காணவேண்டும். இதற்குப் பொருத்தமான செயலுhக்கம் மிக்க ஒருகூட்டமைப்பை உருவாக்கவேண்டும்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் எழுச்சிமிகு தொடர் போராட்டங்கள்

தமிழீழ மக்களுக்கு தமிழகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதன் சக்திக்கு முடிந்த அளவு தொடர்ச்சியான எழுச்சியான போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஒரு சிறிய அமைப்பு ஈழச் சிக்கலில் இவ்வளவு உறுதியோடும், உண்மையோடும் இருந்து போராடியது மிகுந்த பாராட்டுதலுக்குரியதும், வரலாற்றில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதுமாகும். இந்த அமைப்பு போல தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஈழ ஆதரவுக் கட்சிகளும் ஒன்று திரண்டு களம் இறங்கியிருந்தால் தமிழகத்தில் எழுச்சிமிகு போராட்டங்கள் நடத்தியிருந்தால், ஈழச் சிக்கலின் திசையே வேறு மாதிரியிருந்திருக்கும். அம்மக்களின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் தங்களால் இயன்ற எதையுமே செய்யாமல் தமிழீழ மக்களை அம்போ என்று விட்டுவிட்டார்கள் தமிழகத் தலைவர்கள்.

ஈழச் சிக்கலுக்காக உலகம் முழுவதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டங்களின் அளவுக்குக்கூட தமிழகத்தில் போராட்டங்கள் இல்லை. எல்லாம் திருக்கோயில் திருப்பணிக்கு பால் ஊற்றிய கதையாகவே முடிந்தது. இந்த பலவீனத்திற்குக் காரணம் தலைவர்கள். மன்னிக்க முடியாத இந்த வரலாற்றுப் பிழையைச் செய்த நம் தலைவர்கள் நடந்துபோன நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்று இனியாவது விழிப்புடனும், உண்மையுடனும் இருந்து செயலாற்ற வேண்டும். மக்கள் அணி திரட்டிப் போராட வேண்டும். 

Pin It