இந்தியா பல மதங்களையும் பல தேசிய இனங்களையும் பல நூறு மொழிகளையும் கொண்ட ஒரு துணைக்கண்டம். அதாவது பல நாடுகளைக் கொண்ட ஒரு பெரிய நாடு. இங்கு அனைத்திந்தியாவுக்குமாகத் தோன்றிய கட்சிகள் சில.
இந்திய தேசிய காங்கிரசு ‘1885’ அக்கட்சி 1929இல் வரித்துக் கொண்ட குறிக்கோள் வெள்ளையனிடமிருந்து விடுதலை பெறுவது என்பது.
யாருக்காக விடுதலை? (Swaraj for whom?) என்ற வினாவை, 1922இல், காங்கிரசு மாநாட்டிலேயே எழுப்பினார், மாமேதை ம.சிங்காரவேலர்.
காந்தி, நேரு எவரும் அதற்கு விடை சொல்லவில்லை.
“விடுதலைக்காக விடுதலை” அவ்வளவுதான்.
அந்த விடுதலை 14-8-1947 இரவு 12 மணிக்கு வந்தது. இந்தியாவே மகிழ்ச்சி கொண்டாடியது. பெரியார் ஈ.வெ.ரா. துக்கம் கொண்டாடினார்.
28-1-1948இல், “இனி காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும். அதன் கோரிக்கை நிறைவேறிவிட்டது. இனி சேவை அமைப்பாகக் காங்கிரசு மாறிவிட வேண்டும்” என, காந்தியார் மனம் நொந்து எழுதினார்.
அந்த அமைதி உருவத்தை, 30-1-1948இல் 3 அடி தொலைவில் நின்று சுட்டுக் கொன்றான், விநாயக் கோட்சே.
அடுத்த பழைய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்; 1906இல் தோற்று விக்கப்பட்டது; 1940 மார்ச்சில் பாக்கித்தான் தனிநாடு கோரியது.
1947இல் இந்திய மக்கள் தொகை 32 கோடி; 8 கோடிப் பேர் இஸ்லா மியர்கள். அவர்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் பாக்கித்தான் அமைந்தது-இலட்சக்கணக்கான இந்து-இஸ்லாம்-சீக்கியர்களின் பிணங்களின்மீது!
இன்றும் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் முஸ்லீம் லீக் இருக்கிறது.
அடுத்துப் பிறந்த கட்சி-தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாருக்கான, தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்கிற நீதிக்கட்சி, 1916 திசம்பரில்.
தென்னாட்டில் 26.12.1926இல், “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்” - ஈ.வெ.ரா. தூண்டுதலால், பார்ப்பனரல்லாதார் கட்சி மாநாட்டில் தோற்றுவிக் கப்பட்டது.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் - 9.11.1917இல், “கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கிய தென்னிந்தியா, இந்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்பட்டது. அதற்காகவே பாடுபடப்போகிறது” என, “ஜஸ்டிஸ்” ஆங்கில நாளேட்டில் அறிவித்தார்.
அடுத்து முளைத்தவை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 1925இல்; இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் 1925இல்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் குறிக்கோள், அன்றும் இன்றும், “இந்தியாவில் பொதுவுடைமை மலர வேண்டும்” என்பதே. அந்தச் சீரிய நோக்கம் கொண்ட அக்கட்சி இந்திய சாதிய சமூக அமைப்புப் பற்றிக் கவலைப் படவே இல்லை. அதனால், 1962-க்குப் பிறகு ஓங்கி வளரவே இல்லை. அது வருத்தத்துக்கும், ஆய்வுக்கும் உரியது.
1925இல் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். 30.1.1948 இல் காந்தியார் கொல்லப்பட்ட பிறகு, 1948 பிப்ரவரியில் பூனாவில் கமுக்கமாகக் கூடி, “இந்தியாவில் கி.பி.2000 இல் இராம ராஜ்யத்தை அமைக்க வேண்டும்” என்று முடிவு எடுத்தது. அதற்காக, சமூகத்தின் எல்லா அங்கங் களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ வேண்டும் என்றும் அறிவுடைமையோடு முடிவு எடுத்தது.
அந்தக் கமுக்கமான கூட்டத்திற்கு, பார்ப்பனரின் மரியாதைக்குரியவராக விளங்கிய மகாத்மா புலேவின் பெயரன் சென்றிருந்தார். அவர்தான் இந்த உண்மையை வெளிப்படுத்தினார்.
1946 முதல் 1967 வரை இடைவிடாமல் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டது. அதே சமகாலத்தில் காங் கிரசுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எல்லாத் தளங்களிலும் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.
காங்கிரசுக்குப் பணத்தை வாரிக் கொடுத்த டாட்டா, பிர்லா, பஜாஜ், டால்மியா முதலான இந்தியப் பழைய பெருமுதலாளிகள், ஆர்.எஸ்.எஸ்.-க்கும் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். எந்த இலக்கும் இல்லாத காங்கிரஸ் கட்சி, இந்திய நடுவண் அரசை பார்ப்பனர், காயஸ்தர், மலையாளிகள் என்கிறவர்களின் அரசு நிர்வாகத்துறை ஆதிக்கத் துணையோடு ஆட்சி செலுத்தியது.
இந்திய வெகுமக்களுக்கு வேண்டுமென்றே கல்வி தராமல் செய்தது. வானம் பார்த்த நிலங்கள் மிகுந்த இந்தியாவை, வளம் கொழிக்கும் வேளாண் நாடாக மாற்றத் தவறியது. நேருவின் பிடிவாதத்தினால் ஜம்மு- காஷ்மீர் மக்களின் தேசிய இன எழுச்சியை அடக்கி ஒடுக்குவதையே தலையான பாதுகாப்பு வேலையாக மேற்கொண்டது.
நேருவினால் தன் வாரிசாக இந்தியத் தேசியக் காங்கி ரசின் தலைவியாக 1955இல் ஆக்கப்பட்ட இந்திரா காந்தி, 1967இல் பிரதமர் பதவிக்கு வந்தவுடன், தானடித்த மூப்பாக நடந்துகொண்டார்; மாநிலக் கட்சிகளை ஒடுக்கினார்.
தன்னைப் பிரதமராக ஆக்கிய காமராசரை, 16.8.1969 இரவில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்து, அதிகாரப்பூர்வ குடிஅரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்து, வி.வி.கிரியை வெற்றி பெறச் செய்ய கருணாநிதியுடன் ஒப்பந்தம் செய்து கொண் டார். கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில்தான் தமிழ் நாடு காங்கிரசின் பிணப்பெட்டிக்குக் கடைசி ஆணி அடித்தார்கள். அன்று முதல் கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலையெடுக்க முடியாததற்கு இதுவே காரணம் ஆகும்.
இந்தச் சூழலில், 1975இல் அவசர கால ஆட்சியை அறிவித்து, பழம்பெரும் தேசியவாதிகளையும், சோசலிசக் கட்சிக்காரர்களையும், திராவிடக் கட்சிக்காரர்களையும், தலைசிறந்த எழுத்தாளர்களையும் சிறைக் கொட்டடி யில் அடைத்தார்; துன்புறுத்தினார்; சிலரைக் கொன்றார். உரிய நேரத்தில் 1969இல் கைகொடுத்த கலைஞர் மு. கருணாநிதியை 1976 சனவரியில் பதவியை விட்டு இறக்கினார். இவற்றுக்கெல்லாம் தண்டனையாக 1977 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார்.
1972இல் தி.மு.க.வை விட்டு விலக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அண்ணாவின் பெயரில் “அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம்” என அமைத்து, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், 1973இல் வெற்றி பெற்றார். 1977க்குப் பின்னர் 12 ஆண்டுகள் தி.மு.க. வனவாசம் போக வேண்டி நேரிட்டது. அறிஞர் அண்ணாத்துரையும், கலைஞர் கருணாநிதியும், நடிகர் எம்.ஜி.ஆரும் திட்டமிட்டு வளர்த்தெடுத்த திரைப்படக் கவர்ச்சிக்கு இளைஞர்களும் தாய்மார்களும் ஆளாயினர்.
எம்.ஜி.ஆர். 1987 திசம்பரில் மறைந்தார். ஓராண்டுக் காலம் ஜானகி எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்றது.
1989க்குப் பிறகு ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க.வின் பெருந்தலைவரானார். இந்த இரண்டு திராவிடக் கட்சி களும் மத்தியில் காங்கிரசுக் கட்சி ஆட்சியையும், பி.ஜே.பி. வாஜ்பாயின் ஆட்சியையும் மாறி மாறி ஆதரித்தன. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும்தான் தமிழ்நாடு முழுவதிலும் பாரதிய சனதாக் கட்சியின் தாமரைச் சின்னத்தை அறிமுகப்படுத்தின.
அனைத்திந்தியப் பெரு முதலாளிகளின் ஆதரவில் இரண்டு தேசியக் கட்சிகளும் வளர்வதைப்போல, தமிழ்நாட்டுப் பெரும் பணக்காரர் களின் பணத்தையும் அடியாள்கள் வலிமையையும், தமிழின் பெயரால் பெற்ற நல்ல பெயரையும் முதலீடாக வைத்து, ஜெயலலிதாவும் கலைஞரும் மாறி மாறி நேற்று வரை பதவிக்கு வந்தனர்.
தமிழால் வளர்ந்த கலைஞர், பேராசிரியர், நாவலர் முதலானவர்கள் தமிழில் நிரம்பப் புலமை பெற்ற வர்கள். தமிழின் சொற்களஞ்சியப் பெருமையை நன்றாக அறிந்தவர்கள். அவர்களுடைய பதவிக்காலத்தில்தான் தமிழ்வழிக் கல்விக்கு உலை வைத்தனர். தமிழ்நாடு கூட்டுறவு இயக்கத்தை நாசப்படுத்தினர்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் கூட்டுக்கொள்ளை அடித்து நாசப் படுத்தினர். ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் மற்றும் திரைப் படச் சலுகைகள், சாராய ஆலைகளைத் தொடங்கி வைத்தது, தனக்கு வேண்டியவர்களை உயர்த்திவிடு வது, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் உண்டாக்கிய சில நினைவுச் சின்னங்களைப் பாழடிப்பது என்பதிலேயே கவனம் செலுத்தினார். அதே போக்கில் கருணாநிதியும் நடந்துகொண்டார்.
கிலோ அரிசி 2 ரூபாய் என்பதை ஒரு ரூபா என்று கருணாநிதி ஆக்கினார். கிலோவுக்கு ஒரு ரூபா விலை எதற்கு? இருபது கிலோ அரிசியை விலையில்லா அரிசி எனத் தாராளமாக அள்ளிக் கொடுத்தார், ஜெயலலிதா. கருணாநிதி அறிமுகப்படுத்தியதை அப்படியே பின்பற்றி வீடுதோறும் இலவச கிரைண்டர், இலவச மின்விசிறி, மிக்ஸி எனத் தந்து இலவசங்களுக்குத் தமிழ்நாட்டு மக்களை இரண்டு திராவிடக் கட்சிகளும் அடிமையாக்கின. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எப்போதும் இப்படிப் பட்ட இழிசெயல்கள் அரசினால் மேற்கொள்ளப்பட வில்லை.
திராவிடக் கட்சிகள் இரண்டும், போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்வழிக் கல்வியை ஒழித்தன. தமிழ் நாட்டில் உள்ள 41,127 ஏரிகளில் ஓராயிரம் ஏரிகளைக் கூடத் தூர்வாராமல் பாழடித்தன; காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சித் தண்ணீர் வணிகர்கள் வளர இரண்டு கட்சிகளும் உதவின. பாலாறு தொடங்கி தாமிரபரணி வரை எல்லா ஆறுகளிலும் பத்தடி ஆழத்துக்கு மணல் வாரப்பட இரண்டு கட்சிகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் துணைபோயினர்.
இன்று தமிழ்நாடு முழுவதும் 6814 சாராயக் கடைகளும், 264 வட்டங்களில் (தாலுக்கா) வட்டத்துக்கு 2 வீதம் “எலைட்” சாராயக் கடைகளும் திறந்து, தமிழ் நாட்டு ஆண்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள் என, 50 விழுக்காடு மக்களைக் குடிகாரர்கள் ஆக்கி, தமிழ் மக்களின் ஒழுக்கத்தைப் பாழ்படுத்தினார், ஜெயலலிதா.
திராவிட இன உணர்வு உள்ளவர்கள் “அய்யாவை விட்டால் வேறு யார்?” எனக் கலைஞரையும்; பெரியா ரையோ, அண்ணாத்துரையையோ, திராவிட இயக்கத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாத வெகுமக்கள், “அம்மாவே தெய்வம்” எனப் பூசிக்கவும் ஆன, தலைவர்கள் வழிபாட்டுப் பண்பாட்டை இரண்டு திராவிடக் கட்சிகளும் வளர்த்தெடுத்தன.
கேரளத்துக்கு மத்திய அரசு அநீதி செய்வதாகத் தென் பட்டால், எல்லாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள்-இந்நாள் முதலமைச்சர்களும் ஒரே குழுவாக, தில்லிக்குப் படையெடுக்கிறார்கள். அதனால், தில்லிக் காரன் அச்சம் கொண்டு இறங்கி வருகிறான்.
தமிழ்நாட்டு ஆற்றுநீர்ச் சிக்கல்களானாலும், மண் ணெண்ணெய்ப் பங்கீடு குறைப்பு ஆனாலும், தமிழ் நாட்டு மீனவர்கள் கச்சத்தீவைக் கடந்தால் அடித்தும் சுட்டுக்கொன்றும் படகுகளைக் கைப்பற்றியும் இலங்கை மீனவர்கள் தமிழ் மீனவர்களைக் கொடுமைப்படுத்து வதைப் பற்றியோ கொல்லுவதைப் பற்றியானாலும்; விடுதலைப்புலிகளை ஒழிக்கும் போரில் இலங்கை அரசு கையாண்ட வன்முறைகளையும், இரசாயனக் குண்டுகள் போட்டு 1.4 இலட்சம் தமிழர்களைக் கொன்ற கொடுமை பற்றியானாலும்-தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் தலைமை ஏற்று நடத்திச் சென்று-பிரதமரை, குடிஅரசுத் தலைவரை, உள்துறை அமைச்சரைக் கண்டு பேச இரண்டு தலைவர்களும் எத்தனித்தவர்கள் அல்லர்.
இவர்களை அன்றைய காங்கிரசின் மன்மோகன் சிங்கோ, இன்றைய நரேந்திர மோடியோ ஏன் பொருட் படுத்துவார்கள்? இவ்வளவு கேடுகளையும் செய்தாலும், பாரதிய ஜனதாவோ, காங்கிரசோ எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டுச் சேராமலே, இந்த இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒரு கட்சிதான் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தது.
பொறுப்பும் அறிவு உணர்ச்சியும் உள்ள தமிழ்ப் பெரு மக்கள், தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளையும், பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில் உள்ள யாதவர்கள், குர்மிகள், ஜாட்கள், சமார் அல்லது ஜாடவ்கள் ஆகிய இவர்களையெல்லாம் தூக்கியடித்து விட்டு, இன்று முழுப் பெரும்பான்மையோடு மக்கள வையைக் கைப்பற்றி இருக்கிற பாரதிய ஜனதாக் கட்சி எல்லா மாநிலச் சட்டமன்றங்களையும் கைப்பற்ற எத்தனிக்கிறது.
குசராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, கவுதம் அதானிக்கு ஒரு சதுர அடி ஒரு ரூபாய் மேனி, 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ரூபாய் 300 கோடிக்கு விற்றார். தேர்தலுக்கு அந்த அதானி அள்ளித் தருவார், பணத்தை.
இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கும் காந்தியாரின் தொண்டுக்கும் டாட்டாவும் பிர்லாவும் பஜாஜும் பெரும் பண உதவி செய்தனர். இன்றுள்ள டாட்டாவுக்கு நானோ கார் தொழிற்சாலையை நிறுவி நடத்துவதற்காகரூபாய் 10 ஆயிரம் கோடியை 0.1 சதவீத வட்டிக்குக் கடனாகக் கொடுத்தது மோடி அரசு. அத்துடன் ஒவ்வொரு நானோ காருக்கும் குசராத் அரசு ரூபாய் 40 ஆயிரம் நிதி உதவி அளித்தது.
அதே நேரத்தில் வேளாண் மக்களுக்கு வங்கிக் கடனுக்கு ஆண்டுக்கு 9 விழுக்காடு வட்டியை வங்கி வசூலித்தது. இவ்வளவையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தமிழகத்தில் உள்ள படிப்பாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் என்பவர் கள் தேர்தல் அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏன்?
1. மோடி அரசு பதவி ஏற்ற நாள் முதல் இந்தி மொழி யை இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்குவதற்கு வேண்டிய எல்லாத் துறைக் கலைச் சொல் ஆக்கங் களையும் ஊக்குவித்து, மடமட என எல்லாத் துறை களிலும் இந்தியை விரைவில் அலுவல் மொழி ஆக்கிடத் துடிக்கிறது.
“இந்தியை எதிர்ப்போம்! தமிழைக் காப்போம்!” என்று கதைக்கிற திராவிடத் தமிழர்களும், கையில்லாத ஊமையன் கடலில் இருந்து கொண்டு கூவுவதைப் போல-எந்த உணர்வும் இல்லாதத் தமிழர்களிடம் இந்தி எதிர்ப்பைக் காட்டிக் காட்டித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிப்பது மனதறிந்த பச்சைத் துரோகம் ஆகும்.
2. “எல்லா நிலைக் கல்வியையும் தமிழில் கொடுப் போம்!” என்று இதுவரை செயலில் காட்டாத திராவிடக் கட்சிகளை, நாம் நம்புவது சரியா என்று எல்லோ ரும் சிந்திக்க வேண்டும்.
3. இந்தியா முழுவதிலும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. 15 ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தை அடுத்த குடிதாங்கியில் ஊருக்குத் தெற்கே உள்ள பறையர் தெருவில் இருந்து வன்னியர் குடியிருக்கும் கீழத் தெரு வழியாக 200 அடி சென்று கொள்ளி டக் கரையில் ஆதித்திராவிடரின் பிணத்தைப் புதைக் கக் கூடாது எனத் தடுத்தனர்.
அந்த ஊரில் பெண் ணுக்கு ஆளாக வந்த ஜமீன் தத்தனூரைச் சேர்ந்த ஒரு எம்.ஏ. பட்டதாரி வன்னியர்தான். அதற்கு மூளை என்பதை நானும் சீர்காழி மா.முத்துச்சாமியும் கண்டுபிடித்தோம். என்ன ஆயிற்று? ஆதித் திராவிடர் பிணம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் வழியாகத்தான் எடுத்துச் செல்லப்பட்டது. நாங்கள் போய்வந்த அடுத்த அந்த ஊர் ஆதித்திராவிடர் பிணத்தை வன்னியர் தெரு வழியாக எடுத்துச் செல்லத் துணைநின்றார். ஆனால் வன்னியப் பெண்கள் அத்தெருவில் காரித்துப்பினார்.
இன்று மயிலாடுதுறையை அடுத்த வழுவூரில் அடுத் தடுத்து இறந்த ஆதித்திராவிடர் கணவன், மனைவி பிணங்களை எல்லோரும் போகிற பொதுப் பாதையில் எடுத்துச் செல்லக் கூடாது என்று, கம்புகளோடும் கத்திகளோடும் வன்னியர்கள் ஒன்றுதிரண்டு தடுத்துவிட்டனர். அதிகாரிகள் என்கிற திருடர்களும் காவல் துறையினரும், பொதுச் சாலையில் அனுமதிக்க நீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், அவர்களே பிணங்களைத் தூக்கிப் போய் அடக்கம் செய்தனர்.
பெரியார் பிறந்த நாட்டில் திராவிடக் கட்சிகள் தீண்டா மைக் கொடுமை பற்றி நெஞ்சை நிமிர்த்திப் பேசினால் போதுமா? சாவுக்குப் பிறகும் இந்த இழிவுகளையும் கொடுமைகளையும் ஏன் அவர்கள் நெடுங்காலம் தாங்கிக் கொண்டு இருந்தார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டாமா?
குடிதாங்கி நன்செய் நிலப்பரப்பில் 95 விழுக்காடு வன்னியர்களுக்குச் சொந்தம். வயிற்றுப் பாட்டுக்கு அவர்களைச் சார்ந்துதான் ஆதித்திராவிடர் இருக்க வேண்டியுள்ளது. இதுபற்றி நாம் சிந்தித்தோமா?
ஊர்தோறும் பார்ப்பான் சுடுகாடு, குடியானவன் சுடுகாடு, பறையன் சுடுகாடு என்று ரெவின்யூ பதிவேடுகளிலும் பட்டா சிட்டா அடங்கல்களிலும் 2016இல் இருப் பது அமைச்சர்களுக்குத் தெரியாதா? திராவிடக் கட்சி களுக்குத் தெரியாதா? தெரியாது என்பதுதான் உண்மை.
எம்.ஜி.ஆர். காலத்தில் தாழ்த்தப்பட்டோர் நல அமைச்ச ராக இருந்த விஜயசாரதியை நானும் 10 மாவட்டச் செயலாளர்களும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஒரே சுடுகாடு தான் வேண்டும் என்று பேசினோம். அந்த அமைச்சர் 30 வயது இளைஞர். அவருக்கு இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. அது அவருடைய குறை அல்ல, தமிழக ஆட்சியின் குறை. எப்படி?
48 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் கலைஞரோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ சுயமரியாதைத் திரு மணம் ஏன் என்று ஆறாம் வகுப்புப் பாடத்தில் கற்பிக்காதது ஏன்? யார் தடுத்தார்கள்? அடுத்து, ஊர்தோறும் 3 சுடுகாடுகள் இருப்பது தெரிந்தால்தானே எதிர்ப்பு உணர்ச்சி வரும்? அந்தத் தீண்டாமைக் கொடுமையைச் செய்யத் தாங்கலாக இருப்பது மற்ற சாதிக்காரர் களின் சாதித் திமிர் மட்டும் அல்ல; நிலவுடைமை உரிமை ஆதிக்கமும் ஆகும்.
அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் மாணவர்களால் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவன் ரோகித் வெமுலா தூக்குப் போட்டுக் கொண்டு சாக நேர்ந்தது ஏன்? பி.ஜே.பி. மாணவர்களின் தூண்டுதலால் இந்தியக் கல்வி அமைச்சர் இரானி, பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஆகிய இவர்கள் அம்பேத்கர் சங்க மாணவர்களைப் பல்கலைக்கழக விடுதியை விட்டு நீக்கிவிட்டது மட்டுமின்றி, அவர்களுக்குரிய கல்வி உதவித் தொகை பல மாதங்கள் தரப்படாததால் பட்டினி கிடந்து, படிப்பையும் இடையில் விட்டுத் தூக்குப் போட்டுக் கொண்டு சாகும் கொடுமைக்கு ஆளானார்.
இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய பாரதிய வித்யார்த்தி சங்கம் வலுவாக இயங்கி வருகிறது. அதேபோல்தான் சென்னை ஐ.ஐ.டி.யில் சிறப்பாகச் செயல்பட்ட அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் சென்ற ஆண்டு சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள். இவை மட்டுமா?
இந்தியா முழுவதிலும் தில்லியிலும் மாநிலத் தலை நகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டத் தலைநகரங்களிலும் இந்தியக் குடிஅரசு நாள் 26.1.2016 இல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் மீரட்டில் அகில பாரதிய இந்து மகா சபையினர், அந்த அமைப்பின் தேசியத் துணைத் தலைவரான பண்டிட் அசோக் சர்மா தலைமையில், குடிஅரசு நாளைத் துக்க நாளாக அனுசரித்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் மகாத்மா காந்தி, நேரு போன்றவர்களால் எல்லா மதங்களையும் சமமாகக் கருதுவது என்கிற மதச்சார்பற்ற கொள்கையை உடையதாக இருப்பதாகச் சொல்லி, கடந்த 50 ஆண்டுகளாக அதே சர்மா பரப்புரை செய்து வருகிறார். அதன் வெளிப்பாடாக அந்த அமைப்பின் தொண்டர்கள், “இந்திய அரசமைப்பைப் பகிஷ்கரிப்போம்” எனக் கூவிக் கொண்டு கருப்புக் கொடிகளை ஏந்தி 26.1.2016இல், மீரட் தெரு வெல்லாம் ஊர்வலம் சென்றனர்.
இதே சர்மாதான் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குக் கோவில் கட்டப் போவதாகச் சென்ற ஆண்டு அறிவித்தார். அதே சர்மா 26 சனவரி மீரட் நகரில், இந்து ஏட்டின் (The Hindu) செய்தியாளரிடம் “இந்தியாவை இந்து ராஷ்டிரமாக - இந்து ராஜ்யமாக - Hindu State-ஆக அமைப்பதுதான் என் வாழ்நாள் குறிக்கோள்” என்று துலாம்பரமாகப் பேட்டி அளித்தார். இந்தத் துணிச்சல் யாரை நம்பி? மோடியை நம்பி. இது என்றாவது நடக்குமா என்று எண்ணாதீர்கள்.
1. 2019 வரையில் நரேந்திர மோடி ஆட்சி இந்தியாவில் நீடித்தால், 2014 தேர்தல் அறிக்கையில் கண்ட படி, அயோத்தியில் இராமர் கோயில் சிறப்பாகக் கட்டப்படும்.
2. இராமாயணப் பண்பாடு, இராமன் வணக்கம் எல்லார் பேரிலும்-குறிப்பாக இசுலாமியரிடத்திலும் கிறித்து வரிடத்திலும் திணிக்கப்படும். அன்றியும் பகுத்தறிவு, நாத்திகம் பேசுவோரும் எழுதுவோரும், இந்து மத வெறியர்களால் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்படுவர். இது உறுதி.
வரப்போகிற இந்த மாபெரும் கேடுகளைத் தடுத்து நிறுத்த எந்தப் பெரிய மாநிலக் கட்சிகளாலும் - எவ் வளவு பெரிய பகுத்தறிவுப் பரப்புரைகளினாலும் முடியாது. இறுதியாக, இன்று நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரே செய்தி இந்தியா பல நாடுகளைக் கொண்ட ஒரு பெரிய நாடு என்பதை, இந்தியா முழுவதுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
3. மதச்சார்பற்ற சமதர்மக் கொள்கை கொண்ட மாநிலங்களாக ஒவ்வொரு மாநிலமும் உருவாக்கப்பட்டு - பணம் அச்சடித்தல், செய்திப் போக்குவரத்து, பொதுப் படை ஆகிய மூன்று அதிகாரங்களைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் மற்றும் எஞ்சிய அதிகாரங்களும் அந்தந்த மொழி நாட்டுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அளவில் கொண்டு செல்ல வேண்டும்.
4. அந்தந்த மொழி நாட்டுக்கும் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக் கொடி, தனிப் பாதுகாப்புப் படை முதலான எல்லாம் இருக்க வேண்டும்.
இந்தத் தன்மைகளைக் கொண்டிருந்ததுதான் 1955 இல் நிறைவேற்றப்பட்ட “ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்”. அந்த அரசமைப்புச் சட்டம் 1955இல் நிறை வேற்றப்பட்ட பிறகும், அதில் உள்ள எல்லா அதிகாரங் களையும் - 1959, 1960, 1961, 1962, 1967, 1968, 1970ஆம் ஆண்டுகளில் காங்கிரசு அரசு சட்டங்களை நிறைவேற்றிப் பறித்த கொடுமையை நாம் நேரில் கண்டோம்.
இதை நரேந்திர மோடி முழுமையாகச் சாதிப்பார். அவருடைய கட்சியின் நோக்கப்படி “அகண்ட காஷ்மீர்” எனும் கோரிக்கை வைத்து, பாகிஸ்தான் வசம் உள்ள “ஆசாத் காஷ்மீரத்”தையும் சேர்த்து, எந்தத் தனியுரிமையும் அற்ற ஒரு மாநிலமாக ஆக்க எத்தனிப்பர். நிற்க.
தமிழ்நாட்டில் டாக்டர் டி.எம்.நாயரை அடுத்து, தந்தை பெரியார் 30.9.1945இல் “தனிச் சுதந்தர நாடு” என்கிற பிசிறற்ற கோரிக்கையை முன்வைத்தார்.
தென்இந்திய மாநிலங்கள் நான்கும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின்னர், 01.11.1956 முதல் 19.12.1973 இல் அவர் கடைசி உரை ஆற்றிய நாள் வரையில் “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” எனப் பிசிறு இன்றிக் கோரினர்.
அறிஞர் சி.என். அண்ணாதுரை, “திராவிட நாடு திராவிடருக்கே!” என்பதில் பிடிவாதமாக இருந்தார். 1963இல் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டோம். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று மாநிலங்களவையில் அவர் சொற்சிலம்பம் ஆடி பேசினார்.
அறிஞர் அண்ணாதுரை அவர்களின் மறைவுக்குப் பின்னர், “மாநிலத்தில் சுயஆட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என முழக்கமிட்டார், கருணாநிதி. இதுபற்றி, தந்தை பெரியார், “இது பிய்ந்த செருப்புக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போன்றது” என்று அப்போதே சொன்னார். யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இன்று மொழி, இனம், சாதி, மதம் என்கிற பேரால் எத்தனைக் கட்சிகள் தமிழ்நாட்டில் இயங்கினாலும் ஏறக்குறைய சரிசமமான வலிமையுடன் இயங்கும் இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டாமா என்பதை - குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் தமிழ்இன உணர்வாளர்களும் சிந்திக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வளவு ஈனத் தனங்களையும் காப்பாற்றும் இன்றைய அரசியல மைப்பைத் தூக்கி எறிய எந்த வாக்கு வேட்டைக் கட்சி யும் உறுதி கூறி, அதற்கு உழைக்காத போது, மக்களை ஏய்க்கவே நடத்தப்படும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிப்போம், வாருங்கள்!