கேள்வி : ஈழத் தமிழர் படுகொலைகளை மட்டும் பேச வேண்டுமே தவிர, விடுதலைப் புலிகள் பற்றி பேசக் கூடாது என்று, பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன ஜெயலலிதா - சுப்ரமணிய சாமி, ‘துக்ளக்’ சோ, பார்ப்பனதாசர்களான சில காங்கிரஸ் கட்சியினர் கூறுவது சரியா?

பதில் : இது பித்தலாட்டமான வாதம், மத்திய அரசை விமர்சிக்கலாமே தவிர, மன்மோகன் சிங்கைப் பற்றிப் பேசக் கூடாது. அ.தி.மு.க.வை விமர்சிக்கலாமே தவிர, ஜெயலலிதாவைப் பற்றி பேசக் கூடாது என்று கூறுவதைப் போன்ற அபத்தமான கருத்து, ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளாக இருப்பவர்கள் விடுதலைப் புலிகள்தான். இந்த உண்மை சர்வதேச ஆதர வோடு நார்வே நடத்திய பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு மட்டும் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தியது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனங்களும் இலங்கை அரசும் உருவாக்கிய போட்டி குழுக்கள் தமிழ் மக்களின் பிரதி நிதித்துவமோ, ஆதரவோ பெறாதவர்கள். அவர்கள் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் ஆதரவாளர்களாகவே செயல் படுகிறார்கள். ராஜபக்சே அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார்கள். தமிழினப் படுகொலை களை இவர்களால் தடுக்க முடியவில்லை.

விமானத்தில் ராணுவ விமானங்கள் குண்டு வீசி தமிழர்களை ஒழிப்பதையோ, லட்சக்கணக்கான தமிழர்கள் வெட்ட வெளிகளில் கொட்டும் மழையில் அகதிகளாக்கப்பட்ட அவலத்தையோ இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்களுக்காகப் போராடுகிற மக்களுக்காக ராணுவத்தை எதிர்த்து போரிட்டு வீரச்சாவுகளை ஏற்றுக் கொள்கிற விடுதலைபுலிகளையும் தமிழ் ஈழ மக்களையும் பிரிக்க முடியாது.

மக்களிடமிருந்து தான் விடுதலைப் புலிகள் உருவாகி, போராளிகளாக களத்தில் நிற்கிறார்கள். எனவே விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசாமல், ஈழத் தமிழர் பிரச்சினையை பேச முடியாது என்பதே உண்மை. இப்படி குறுக்குசால் ஓட்டுகிறவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டு மகிழ்கிறவர்கள், குதூகலிக்கிறவர்கள்; இந்த உணர்வை பகிரங்க மாக வெளிப்படுத்த முடியாததால், ஈழத் தமிழர் களைப் பற்றி பேசு - விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாதே என்று கூப்பாடு போடுகி றார்கள்.

கேள்வி : தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதே குற்றம் என்று துரோக காங்கிரசாரும், பார்ப்பன ஜெயலலிதாவும், ‘இந்து’ பார்ப்பன ஏடுகளும் மிரட்டுவது சரியா?

பதில் : ஒரு இயக்கத்தை தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு என்றால், அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்று, குரல் கொடுப்பதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு. அதுதான் ஜனநாயகம். அதுதான் கருத்து சுதந்திரம். அரசு விதித்துள்ள தடை நியாயமற்றது என்று கருத்துகளை எடுத்துக் கூறும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நேரடியான உதவிகளை செய்வதுதான் சட்டப்படி குற்றம் பொடா சட்டத்தின் கீழ் பழ. நெடுமாறன், வை.கோ. உள்ளிட்டோர் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடாவில் பார்ப்பன ஜெய லலிதா கைது செய்தபோது, உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று தெளிவாகவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

காங்கிரஸ் உட்பட இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்திவருவது தமிழ்நாட்டில் ‘துள்ளிக் குதிக்கும்’ துரோக காங்கிரசுக்கு தெரியுமா? இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 2006-2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ள வாசகங்களை அப்படியே தருகிறோம்.

“வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிப் போராடும் பல்வேறு ராணுவ குழுக்களுடன் இந்தியா சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதோடு போர் நிறுத்த ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கிறது.” - சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவது மட்டுமல்ல, போர் நிறுத்த ஒப்பந்தமும் செய்துள்ளார்களாம். இதன் அர்த்தமென்ன? இந்திய இராணுவத்துக்கும் இந்தியாவில் செயல்படும் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்குமிடையே போர் நடந்து வருகிறது என்பது தானே! நூற்றுக் கணக்கான இந்திய ராணுவத்தினர் இதே ஆயுதம் தாங்கிய குழுக்களால் சாகடிக்கப்பட்டுள்ளார்களே?

அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஓய்வு பெற்ற உள்துறை செயலாளர் தி.கே. பத்மநாபய்யா ஆலோசனைகளோடு இந்திய ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்களோடு சமரசம் பேசி வருகிறது. தமிழகத்தில் துள்ளி குதிக்கும் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு என்ன பதிலைக் கூறுவார்கள்? தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு பேசாதே என்று டெல்லியில் போய் சுவரொட்டி ஒட்டி, மத்திய அரசை எதிர்த்து இந்த ‘தேசபக்த வீராதி வீரர்கள்’ போராடுவார்களா?

அரிவாள் கத்தியுடன்’ கட்சி செயற்குழுவுக்கு சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்து போட்டி குழுவினரை அரிவாளால் வெட்டி சத்திய மூர்த்தி பவனை ரத்தப் பவனாக மாற்றுகிறவர்கள் தான் பயங்கரவாதம் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்! வெட்கம் வெட்கம்!

கேள்வி : சட்ட விரோத நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று துரோக காங்கிரசும், பார்ப்பன ஏடுகளும் ‘சட்ட நியாயம்’ பேசுகிறார்களே!

பதில் : உண்மை தான். சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்பது சட்டப்படி சரியான கருத்து தான். அதனால் தான் சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதம் கடத்துவதோ, மருத்துகளை வழங்குவதோ, சட்டப்படி குற்றம் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு கேள்விக்கு இந்திய ஆட்சி பதில் சொல்ல வேண்டும்? இந்தியாவிலிருந்து இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும், ராணுவத்தினரையும், ராணுவப் பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளதே!

ராடார் கருவிகளை மட்டுமல்லாது, அதை பராமரிக்கவும், பொறியாளர்களை அனுப்பியுள்ளதே. அண்மையில் விடுதலைப் புலிகள் ‘ராடார்’ மீதுதாக்குதல் நடத்தியபோது, அதில் காயமடைந்தவர்கள் குப்தா, ராவுத் என்ற இரண்டு இந்திய பொறியாளர்கள் என்று செய்திகள் வந்தனவே!

2000 ஆம் ஆண்டில் ஹார்ஷா என்ற யுத்தக் கப்பலையும் (75 மீட்டர் நீளமுள்ள 100 மாலுமிகள் ஓட்டக் கூடிய கப்பல்) - அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் அடங்கிய அய்.என்.எஸ்.சரயு (இப்போதைய பெயர் எஸ்.எல்.என்.எஸ். சயுரா) என்ற போர்க் கப்பலையும், அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்களை பொறுத்துவதற்கு வசதியாக ‘புளூவாட்டர்’ என்ற போர்க் கப்பலையும் - ஆக 3 போர்க் கப்பல்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளதே! இந்தத்தகவல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதா?

ஆயுதங்களையும் போர்க்கப்பல்களையும் வழங்குவதற்கு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் ஏதேனும் செய்து கொண்டதா? இலங்கைப் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று வெளியே கூறிக் கொண்டு, ரகசியமாக ஆயுதங்களையும், கப்பல்களையும் வழங்குவது சட்ட விரோதமில்லையா? இது அரசே நடத்தும் ஆயுதக் கடத்தல் தானே! பார்ப்பன ஏடுகளோ, பார்ப்பன ஜெய லலிதாவோ ஓலமிடும் காங்கிரசோ, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மற்றொரு கேள்வி. இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று “சமாதானப் புறா” வேடம் தரித்து வரும் மத்திய பார்ப்பன ஆட்சி ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பதுதான் சமாதானத் தீர்வுக்கு வழி காட்டும் லட்சணமா?

கேள்வி : பயங்கரவாதம் தமிழ்நாட்டில் தலை தூக்குகிறது என்று ஜெயலலிதா பேசுகிறாரே?

பதில்: ஜெயலலிதாவைவிட பயங்கரவாதி வேறு யாராவது இருக்க முடியுமா? ஜெயலலிதாவுடன் பார்ப்பனப் பாசத்தோடு இன்று இணைந்து நிற்கும் சுப்ரமணியசாமிகள் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் கூட்டமே நடத்தவிடாமல் தடுக்கப் பட்டது மறந்து விட்டதா? அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்டது யாருடைய ஆட்சியில்? எதற்காக வீசப்பட்டது? மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கப்பட்டது, பார்ப்பன சேஷன் தங்கிய நட்சத்திர ஓட்டல் தாக்கப்பட்டது எல்லாம் யாருடைய ஆட்சியில்? எல்லாவற்றையும் விட ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்காக அ.தி.மு.க.வினர், சுற்றலா வந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பேருந்துக்கு தீ வைத்து, 3 பிற்படுத்தப் பட்ட மாணவிகளை எரித்துக் கொன்றார்களே! அந்தக் குற்றத்துக்கு தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்களே? இந்தப் படுபாதகத்தை மூடி மறைக்க சாட்சிகளைக் குலைத்து, குற்றவாளி களை விடுவிக்க ஜெயலலிதா முதல் வராக இருந்தபோது, அரசு அதிகாரங்கள் முறைகேடாக செயல்பட்டதை உயர்நீதி மன்றமே சுட்டிக்காட்டியதே! இந்த ஜெயலலிதாவா, பயங்கர வாதம் பற்றிப் பேசுவது? பார்ப்பனர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் மட்டும் - அது ‘தேச பக்தி’யாகிவிடுமோ?

Pin It