"இலங்கைத் தமிழர்களுக்காக உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டு மென்று மத்திய அரசின் சார்பில் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் கூறியதைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையினை வரவேற்கின்ற அதே நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் 15.2.2009 அன்று மாலையில் சென்னையில் பேசியபோது குறிப்பிட்டதைப் போல, இரு சாராரும், அதாவது இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போரை நிறுத்தினால்தான் உண்மையான போர் நிறுத்தத்திற்கு அர்த்தம் இருக்க முடியும்.” - மு.க.ஸ்டாலின் அறிக்கை (முரசொலி, 17.12.2009)
தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் மனிதச் சங்கிலியின் நோக்கத்தை மேற்குறிப்பிட்டவாறு விளக்கியுள்ளார் மு.க. ஸ்டாலின் கொட்டும் மழையில் கலைஞர் அழைப்பை ஏற்று சென்னையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மனிதச் சங்கிலியாக கைகோர்த்து, போர் நிறுத்தம் கோரி முழக்கமிட்டதை நாடு மறந்துவிடவில்லை. அது இலங்கையின் இனப் படுகொலையை நிறுத்தக் கோரும் மனிதச் சங்கிலி!
இப்போது நடக்கப்போகும் மனிதச் சங்கிலி எதற்காக? இது விடுதலைப் புலிகள் ஆயுதத்தைப் போட்டு சரணடைய வேண்டும் என்ற ‘போர் நிறத்தத்தைக்’ கோரும் பேரணி.
போர் நிறுத்தத்துக்கு தயார் என்று ஏற்கனவே விடுதலைப்புலிகள் அறிவித்து விட்டனரே. நார்வே உருவாக்கிய சமரச உடன்பாட்டை இப்போதும் விடுதலைப்புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் தெளிவு படுத்திவிட்டாரே. இப்போது போரை இந்தியாவின் முழு ஆதரவோடு நடத்துவதே சிங்களம்தான். அய்.நா. சபையே தலையிட்டால்கூட போரை நிறுத்த மாட்டோம் என்று ராஜபக்சே கூறிவிட்டார்.
ஏற்கனவே அமெரிக்கா - பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் விடுத்த போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று இலங்கையின் ராணுவ செயலாளரும், ராஜபக்சேயின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புறந்தள்ளி விட்டார். போர் நிறுத்தத்துக்கு தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்த பிறகும் போரை நிறுத்த முடியாது என்று இலங்கை ஒவ்வொரு நாளும் ‘தமிழின அழிப்பை’ நடத்திக் கொண் டிருக்கும்போது - குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது இலங்கை அரசைத் தானே? அப்படி சிங்களம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டிக்காமல், ஏதோ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை ஏற்க மறுப்பதுபோல் பொய்மையாக ஒரு குற்றத்தை சுமத்தி இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என்று கூறி, மக்களை ஏன் திசை திருப்ப வேண்டும்? இதன் மூலம் சிங்களம் நடத்தும் இனப் படுகொலையை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்களா?
ப. சிதம்பரம் கூறும் ‘போர் நிறுத்தம் என்பது என்ன? “ஆயுதங்களை கீழே போடுவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தால், போரை நிறுத்துமாறு, இலங்கை அரசை வற்புறுத்தலாம்” (ப. சிதம்பரம் பேச்சு ‘தினத்தந்தி’ பிப்.16)
இதன் பொருள் என்ன? இலங்கை ராணுவத்திடம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்பதுதான்!
சிதம்பரம் கூறும் இந்த “போர் நிறுத்தத்தை” தி.மு.க. ஆதரிக்கிறது என்கிறது, மு.க.ஸ்டாலினின் அறிக்கை! விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பதை நேரடியாகக் கூறாமல், ப. சிதம்பரத்தின் வழியாக கூற முற்படுகிறது தி.மு.க.
தி.மு.க.வும், ப.சிதம்பரமும் முன் வைக்கும் இந்த கோரிக்கையைத்தான் ராஜபக்சேயும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பார்ப்பன ஜெயலலிதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். ‘இந்து’ ராம், ‘துக்ளக்’ சோ, சுப்ரமணியசாமி, ‘தினமலர்’ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல்களும் இதே கருத்தைத்தான் வற்புறுத்தி வருகின்றன. “இதோ நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்கிறோம்” என்று தி.மு.க. வும் ஓடிப் போய் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் குடியரசுத் தலைவரை சோனியாகாந்தியை சந்தித்து இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை மனு தரப் போகிறதாம். சோனியாகாந்தியிடமும் நேரில் வற்புறுத்தப் போகிறதாம்! இந்தக் குழுவில், “தமிழர் தலைவர்” கி.வீரமணி யும் போகிறாராம். இலங்கையிலுள்ள நிலவரங்கள் குறித்து அது பற்றி விவரமாக அவர்களிடம் எடுத்துக் கூறப் போகிறார்களாம். போரையே நடத்திக் கொண்டிருப்பதே சோனியாவும் அவரது ஆணைப்படி செயல்படும் அதிகாரவர்க்கமும் தான். அவரிடமே இவர்கள் இலங்கை நிலவரத்தை விளக்குவார்களாம்! அதுவும்கூட, மிகவும் எச்சரிக்கையாக ‘இலங்கை நிலவரம்’ என்ற சொல்லையே பயன் படுத்துகிறது. அந்த அறிக்கை. கொல்லப்படும் இனப் படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் பற்றிக் கூறுவோம் என்று கூறுவதற்குகூட இந்த ‘உரிமைக்குழு’ தயாராக இல்லை.
பெண்கள், குழந்தைகள், முதிய வர்கள் என்று ஒவ்வொரு நாளும் வேகம் வேகமாக படுகொலைகளை நடத்தி, இன அழிப்பை துரிதப்படுத்தி வருகிறது, சிங்கள ராணுவம். போரில்லாத பகுதிக்கு பாதுகாப்புத் தேடி வந்த தமிழ்ப் பெண்களை கட்டாயக் கருத் தடைக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கி வருவதோடு, நூற்றுக் கணக்கான தமிழர்களை சித்திரவதை செய்து, படுகொலை செய்து, மண்ணில் புதைத்து வருகிறது. இதைப் பற்றி யெல்லாம் இலங்கைத் தமிழர் நல உரிமைக்குழு கண்டிக்காமல் தடுத்து நிறுத்த வலியுறுத்தாமல், அரசியல் தீர்வுத் திட்டத்தை நோக்கி ‘பாய்ச்சல்’ நடத்தி நிகழ்வுப் போக்குகளை திசை திருப்பி விடுகிறது!
ப. சிதம்பரத்தின் கருத்தை வழி மொழிந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு இலங்கை ராணுவத்திடம் சரணாகதி அடைந்து, தமிழர்கள் சிங்களர்களிடம் அடிமை முறிச்சிட்டு எழுதித் தரவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்ட தி.மு.க. இதே கருத்தையே வலியுறுத்தி வரும் சோனியாவிடமும் பிரணாப் முகர்ஜியிடமும் நேரில் வலியுறுத்த என்ன இருக்கிறது?
இனி, இப்படிகூட மனு தருவார்கள், “வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வைவெற்றி பெறச் செய்ய கடும் நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஜெயலலிதாவின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்தி, பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று, கலைஞரிடம் மனு தரப்போவதாக துரைமுருகன் தலைமையிலுள்ள குழு புறப்பட்டாலும், வியப்பதற்கு இல்லை.
தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.