சென்ற இதழ் தொடர்ச்சி
1990 மார்ச் மாதத்திலிருந்து (இந்திய ராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து) தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தது. வழக்கமாக ராமேசுவரம் வழியாகவே வந்து சேருவார்கள். ஆனால், கன்னியாகுமரி வழியாக அதிகம் வரத் துவங்கினர்; சில நியாயமான காரணங்களுக்காக தி.மு.க. அரசு, போட்டிக் குழுக்களின் வருகையை எதிர்த்ததே இதற்குக் காரணம்.
அப்படி கன்னியாகுமரியில் வந்து இறங்கியவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்து, அவர்களை தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களுக்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஏராளமான ‘ஏஜெண்டுகள்’ இருந்தனர். பெரும்பாலோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குக் கொண்டு போகப்பட்டனர். (உளவு நிறுவனம் உருவாக்கிய - தமிழ்க் குழுக்களுக்கு அன்றைய கலைஞர் அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே கேரளாவுக்கு அவர்களை அனுப்பி வைத்தது உளவு நிறுவனங்களின் ஏற்பாடுதான். அதற்காக ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டார்கள்.)
ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழர்கள் அகதிகளாக 1983 ஆம் ஆண்டு முதல் வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு, முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். இது வழமையான நடைமுறை. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக குழுக் களை உருவாக்கிய இந்திய உளவு நிறுவனமே தனியாக கப்பல்களையும், விமானங்களையும் ஏற்பாடு செய்து, அந்தப் போட்டிக் குழுக்களை அழைத்து வந்தது என்பது தான் முக்கியமான பிரச்சினை.
கப்பல்களில் வரும்போது, அவர்கள் துறைமுகம் வழியாக இறங்க வேண்டும். துறைமுக விதிகளின்படி கடவுச் சீட்டு, தமிழகத்தில் நுழைவதற்கான முறையான அனுமதி போன்றவை அவசியமாகும். ஆனால், உளவு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. சென்னைத் துறை முகத்தில் தான் உருவாக்கிய போட்டிக் குழுவினை இறக்க முயன்றபோது, துறைமுக அதிகாரிகள் உரிய ஆவணங்களைக் கோரினர்; அவை இல்லாததால், துறைமுகத்தில் இறங்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.
இந்திய உளவுத் துறையின் ஆதரவுக் குழுக்கள் திருகோண மலையிலிருந்து சென்னை துறை முகத்துக்கு இரண்டு கப்பல்களில் வருகிறார்கள் என்ற தகவல், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநில அரசின் ‘சி.அய்.டி.’ பிரிவு துறை முகத்தில் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட் டிருந்தது. ஆக, இவர்களை கப்பல்களில் அழைத்து வந்தது உளவு நிறுவனம் தான் என்பது, இதன் மூலம் உறுதியாகியது. அதனால் தான் காவல்துறை அதிகாரி களோடு முன் கூட்டியே பேச முடிந்திருக்கிறது.
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய கப்பல் வாரியத்துக்கு சொந்தமான ‘ஹர்ஷ வர்த்தனா’, ‘திப்பு சுல்தான்’ என்ற இரண்டு கப்பல்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ரா’ உளவு நிறுவனத்தின் அமைப்பான ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ குழுவினரும், அவர்களது குடும்பத் தினருமாக 747 பேருடன் 8.3.1990-ல் ‘ஹர்ஷ வர்த்தனா’ கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமையால் தமிழ்நாட்டில் இறங்க அவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கப்பல் எரி பொருளை நிரப்பிக் கொண்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.
அதே போல் ‘ரா’ உருவாக்கிய மற்றொரு குழுவான ‘ஈ.என்.டி.எல்.எப்’ குழுவினரை ஏற்றிக் கொண்டு வந்த ‘திப்பு சுல்தான்’ கப்பல் 10.3.90-ல் விசாகப் பட்டினம் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களிலும் வந்த இரண்டு குழுக்களைச் சார்ந்த 1324 பேரும் தனிப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஒரிசாவின் மால்கங்கிரி, சத்திகுடா என்ற இரு வெவ்வேறு பகுதிகளில் தங்க வைக்கப் பட்டனர். (இத் தகவல்கள் ஜெயின் ஆணையத்தின் முன் அன்றைய சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் சிறீபால் தாக்கல் செய்த அறிக்கையிலும் அரசு ஆவணங் களிலும் இடம் பெற்றுள்ளன.
ஏற்கெனவே சென்னையிலிருந்த, ஈ.பி.ஆர். எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் ஒரிசாவுக்குப் போய் அங்கே இருந்த தங்களது குழுவினரை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி உளவுத் துறை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரிசா மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.3.1990ல் தொலைவரி மூலம் (கூநடநஒ) ஒரு அவசர செய்தியை விடுத்தார். “தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்காமல் இருக்க, ஒரிசாவில் உள்ள ஈழத் தமிழ்க் குழுக்களை தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் விரும்புகிறார்” என்று அந்த செய்தி எச்சரிக்கை செய்தது.
கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களைத் தவிர, 11.3.1990-ல் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா உட்பட அக்குழுவைச் சார்ந்த 295 பேரை இந்திய உளவு துறை விமானத்திலும் ஒரிசாவுக்கு அனுப்பியது. ஆனால், தமிழக அரசின் கண்காணிப்புகளையும் மீறி உளவுத்துறை உருவாக்கிய குழுக்கள் ஒரிசாவில் தங்கள் முகாம்களை மூடிவிட்டு, தமிழகத்துக்குள் நுழைந்து விட்டனர். இதை ‘கியு’ பிரிவு போலீசின் ரகசிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி - பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் (26.4.1990) எழுதினார். அதில், ஒரிசாவில் மால்கங்கிரி முகாமில் இருந்த இலங்கை அகதிகள், அங்கிருந்து, தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்றும், அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தலைதூக்கலாம் என்றும் குறிப்பிட் டிருந்தார். கடிதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டுள்ள மற்றொரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.
“ஒரிசா முகாமிலிருந்து, தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அகதிகள் மீது குடியேற்றச் சட்டத்தின் கீழோ, அல்லது ‘பாஸ்போர்ட்’ சட்டத்தின் கீழோ தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்தப் பிரச்னையில் அப்படி வழக்குகள் தொடர முடியாது என்று எங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. காரணம், இவர்கள், இந்தியாவுக்கு சொந்தமான கப்பல்களில், இந்தியத் துறைமுகமான விசாகப்பட்டினம் வழியாக வந்தவர்கள் என்பதால், அவர்களை அகதிகளாகவே கருத வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”
“But we have been advised that such prosecution cannot be sustained in this particular case, as they were brought by Indian Ships to an Indianport.” என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அக் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். உளவு நிறுவனத்தின் அத்துமீறல்கள் எல்லை மீறி நடந்துள்ளதை, இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
• தங்களின் தாயக விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளை - ராணுவ ரீதியாக ஒடுக்க முயன்று, தோல்வி கண்டார்கள்.
• விடுதலைப் புலிகளுக்கு எதிராக - விரக்தி யடைந்த குழுக்களைத் திரட்டி - ஆயுதம் வழங்கி, சகோதர யுத்தத்தைத் தூண்டி விட்டார்கள்.
• ஈழத்தில் துப்பாக்கி முனையில் - தங்களது எடுபிடி ஆட்சியை நிறுவினார்கள்.
• இந்திய ராணுவம் - அரசியல் நெருக்கடிகளால் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் - தாங்கள் உருவாக்கிய குழுக்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.
• அதற்கு இந்திய அரசு கப்பல்களையும், விமானங்களையும் பயன்படுத்தினர்.
• அன்றைக்கு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த எதிர்ப்பைப் புறக்கணித்து, வேறு மாநிலத்தில் தங்க வைத்தார்கள்.
• ‘ரா’ உளவு நிறுவனத்தின் இந்த அடாவடி நடவடிக்கைகளில் அரசியல் நேர்மை ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்கிறோம்.
பின்னர் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது பற்றிய விவாதம் வந்தது. உளவு நிறுவனங்கள் இப்படி போட்டிக் குழுக்களை உருவாக்கி, சகோதர யுத்தங்களைத் தொடங்கி வைத்ததை காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.அய்., (எம்) கட்சிகள் கண்டிக்க முன் வரவில்லை. முறைகேடாக கப்பல்களில் விமானங் களில் ஏற்றி இந்தியாவுக்கு உளவு நிறுவனங்கள் போட்டிக் குழுக்களைக் கொண்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. மாறாக தி.மு.க ஆட்சியில் விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்ற பார்ப்பன ஏடுகளின் குரலையே இவர்கள் எதிரொலித்தார்கள். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி –
“‘ரா’ உளவு நிறுவனம் தான் இந்தக் குழப்பங் களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே ‘ரா’வின் நோக்கமாக இருக்கிறது. எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ்க் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி யதற்கு ‘ரா’ தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே செய்து கொண்டிருக்கிறது”
“Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the Assembly is reported to have accused the Research and Analysis Wing (RAW) of trying to create a rift between the Centre and the State appealed to the Prime Minister to take appropirate action. He alleged that the RAW which was responsible in the past for creating divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State” (ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை) - என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பத்மநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன. இப்படித்தான் உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்!
உளவு நிறுவன மிரட்டலுக்கு தி.மு.க. பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. சகோதர யுத்தங்களை உருவாக்கியதே உளவு நிறுவனங்கள்தான் என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் வேண்டுமா?