அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் அக்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்குப் பிறகு மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்ன கூறினார்? ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இரண்டு வார கெடுவுக்குள் போர் நிறுத்தம் வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்றார். தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தங்கள் பதவி விலகல் கடிதத்தை முன் கூட்டியே கலைஞரிடம் தரத் தொடங்கினர்.
மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அதற்கும் மத்திய அரசு அசையவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். மீண்டும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வற்புறுத்தப்பட்டது.
முதல்வரை சந்திக்க சென்னை வந்த பிரணாப் முகர்ஜி யிடமும் நேரில் வலியுறுத்தப்பட்டது. பிரணாப் முகர்ஜி இலங்கை போகவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலுக்கான கெடு முடிந்ததும், அத்திட்டம் கைவிடப்பட்டது. அனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு முதல்வர் டெல்லி போய் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து நேரில் வற்புறுத்தினார். எந்தத் துரும்பும் அசையவில்லை. ராணுவத்தின் இனப் படுகொலை தொடர்ந்து கொண்டே இருந்தது; மேலும் மேலும் தீவிரமானது.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது. 3 லட்சம் மக்கள் விடுதலைப்புலிகளோடு முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். முல்லைத் தீவையும் ராணுவம் சுற்றி வளைத்து குண்டுகளை வீசி வருகிறது. ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. உணவு, மருந்து பொருள்கள் இல்லை. 'போரில்லாத பகுதியாக' ராணுவம் அறிவித்தப் பகுதியிலும் குண்டு வீச்சு, ஷெல் வீச்சு தொடருகிறது. புதுக் குடியிருப்பில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதே குண்டுகளை வீசி நோயாளிகளை பிணமாக்கியது சிங்கள ராணுவம். எங்கும் தமிழனின் மரண ஓலங்கள்; ரத்தவாடைகள்; பிணக் குவியல்கள்.
அய்.நா.வே போரை நிறுத்தக் கோரி தனது தூதுவரை போர் முனைக்கு நேரே அனுப்புகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் என்பவரும் கூட்டாக இணைந்து போரை நிறுத்தக் கோரி அறிக்கை விடுத்தனர். ஜப்பான், நார்வே, ஜெர்மன் நாடுகளும் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தன.
உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று, ராஜபக்சேயின் தம்பியும், ராணுவ செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அறிவித்து விட்டார். தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப் புலிகள், தற்காப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாகனங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் ராணுவம் குண்டு வீச்சு நடத்துகிறது. அய்.நா.வின் பிரதிநிதிகளே போர்முனைப் பகுதிகளில் குண்டு வீச்சு காயங்களுக்கு உள்ளாகி விட்டனர்.
சர்வதேசமுமே கண்டிக்கும் இந்த இனப் படுகொலையைக் கண்டித்து, போரை நிறுத்தச் சொல்லாத நாடு இந்தியா தான். அதுவும் தமிழகத்தின் ஒருமித்த வேண்டுகோள், போராட்டங்களை அலட்சியப்படுத்தி, ஆணவச் சிரிப்பு சிரித்து வருகிறது. இவ்வளவுக்கும் பிறகும் இந்தியாவைக் கண்டித்தால் - ஒவ்வொரு நாளும் நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால் - சிங்கள இனப்படுகொலைக்கு எதிரான குமுறலை தி.மு.க. ஆட்சிக்கு எதிரான 'அரசியல்' என்கிறது - தி.மு.க. தலைமை!
"மத்திய அரசை எதிர்க்கவே கூடாது; தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்று மீண்டும் தோல்வி கண்ட "வலியுறுத்தல்" பாதையிலேயே பயணம் செய்ய கலைஞர் கருணாநிதி அழைக்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும் என்ற அற்ப அரசியல் லாபத்துக்காக அன்றாடம் நடக்கும் "இனப் படுகொலை"யை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறார்கள். மத்திய அரசு - இனப்படு கொலையை தடுக்க வேண்டும் என்று மனம் திருந்தும் காலம் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள். தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தியுள்ள கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு பேசியுள்ளார்:
"நம்முடைய குரலை, நம்முடைய வார்த்தையை அவர்கள் மதிப்பார்களா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம்முடைய நன்மைக்காகத் தான் தமிழ் நாட்டில் கலைஞருடைய ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறோமோ, அப்படித்தான் டெல்லியிலே சோனியாகாந்தி வழிகாட்டுதலிலேயே மன்மோகன்சிங் அரசு நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று பேசியுள்ளார் ('முரசொலி' பிப்.10)
'தமிழர் நல உரிமைப் பேரவை' என்ற பெயரில் நடைபெறும் கூட்டங்களில் 'தி.மு.க. கூட்டணி நலன்கள்தான்' முன்னிறுத்தப்படுகிறதே தவிர, ஈழத் தமிழர் இனப்படுகொலை பற்றியோ இந்தியாவின் துரோகம் பற்றியோ சிங்கள அரசை கண்டித்தோ, கருத்துகள் முன் வைக்கப்படுவதில்லை. இதை பேராசிரியர் அன்பழகனே, தனது உரையில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
"இங்கே பேசிய நண்பர்கள்.... வருங்காலத்திலேகூட தமிழகத்திலே கலைஞருடைய கையைத்தான் வலியுறுத்த வேண்டும். தேர்தலிலே ஏமாந்து விடக் கூடாது என்பதை யெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அது ஓரளவுக்கு அரசியல் தான். அந்த அரசியலை கழகம் சார்பாக இன்றைக்கு நான் பேசத் தயாராக இல்லை" ('முரசொலி' பிப்.10) - என்று பேசியிருப்பதன் மூலம், "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் பரப்புரை எப்படி நடக்கிறது என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளார். அப்படிப் பேசிய பேராசிரியர் அன்பழகனோ முடிவில் எதைப்பேச மாட்டேன் என்றாரோ, அதே அரசியலைத்தான் அவரும் வலியுறுத்தியும் உள்ளார்.
ஒவ்வொரு நாளும் தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளைப் பற்றியோ போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியோ வீதியெங்கும் விமான குண்டு வீச்சுக்கு ஷெல் தாக்குதலுக்கும் பலியாகி பிணமாகக் கிடக்கும் தமிழினத்தைப் பற்றியோ மருத்துவமனைகள் மீதே குண்டுகள் வீசப்படுவது பற்றியோ - இவர்கள் மக்களிடம் பேசுவதற்கு தயாராக இல்லை. காங்கிரசுக்காரர்களோடு கைகோர்த்துக் கொண்டு, 'மத்திய அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும்" வரப்போகும் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சேறு வாரி இறைக்கப்படுகிறது. ஆனால் ராணுவக் கொடுமைகள் அடக்கி வாசிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் இலங்கைத் தமிழர் நல உரிமைக் கூட்டமைப்பாம்!
தமிழின உணர்வாளர்களே! இந்த வரலாற்றுத் துரோகத்தை அடையாளம் காணத்தவறாதீர்கள்!