கலைஞர் கருணாநிதி - இப்போது கடுமையான மவுன வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ‘ஆனால் - இந்த வலி, யாருக்குத் தெரியப் போகிறது; எனக்கு மட்டும் தான் தெரியும்’ என்பதும் அவரது ஆழ்ந்த துயரமாக இருக்கிறது. இப்படி ஒரு மவுன வலியைத் தந்தது யார்? எதற்காக இந்த வலி?
ஈழத்திலே - ஒரு லட்சம் தமிழர்களைப் படு கொலை செய்து, 3 லட்சம் தமிழர்களை அகதிகளாக்கி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே அழித்து, ஒழித்து விட்ட சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலை ‘தமிழினத் தலைவருக்கு’ இந்த வலியைத் தந்ததா? அல்லது, இந்த இனப் படுகொலைக்கு எல்லா உதவிகளையும் வழங்கி, தனது பழிவாங்கும் படலத்தை முடித்துக் கொண்டுவிட்ட இந்தியப் பார்ப்பனிய ஆட்சியின் துரோகத்தினால் வலி ஏற்பட்டதா? அல்லது, இந்த துரோகத்தைக் கண்டிக்காது - கைகட்டி, வாய் பொத்தி, அவர்களின் கூட்டணி ஆட்சியில் பங்கேற்று இருந்து விட்டோமே என்பதால் ஏற்பட்ட வலியா? அல்லது இனப்படுகொலை உச்ச கட்டத்தில் நடந்தபோதுகூட, சோனியாவை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து, ‘இதோ பாருங்கள்; இவரன்றோ நமது தலைவி’ என்று பெருமை பேசி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டோமே அதனால் வந்த வலியா?
அல்லது “இந்திய அரசு போர் நிறுத்தத்தை இலங்கை அரசிடம் வலியுறுத்தித்தான் வருகிறது. இன்னொரு நாட்டின் மீது நாம் ஓரளவுக்கு மேல் வற்புறுத்த முடியுமா?” என்று சோனியாவின் துரோகத்தை மூடி மறைத்ததால் ஏற்பட்ட வலியா? அல்லது தமிழின அழித்தொழிப்பு நடந்து கொண் டிருக்கும் போதே, நான்கு மணி நேர உண்ணா விரதத்தை அரங்கேற்றி, அங்கே போர் நிறுத்தமே வந்துவிட்டது; நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டோமே என்பதால் ஏற்பட்ட வலியா? அல்லது ‘பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்’ என்ற செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்து, அது தொலைக் காட்சியில் உலகம் முழுதும் தலைப்பு செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்திலே, நகரும் நாற்காலியில், டெல்லியில் மன்மோகன்சிங்கையும், சோனியாவையும் சந்தித்து, குடும்பத்து பிள்ளை களுக்கு அமைச்சர் பதவிக்கு பேரம் பேசிக் கொண்டிருந்து விட்டோமே என்று ‘மனசாட்சி’ உலுக்கியதால் ஏற்பட்ட வலியா?
அதெல்லாம் கிடையவே கிடையாது; இவை யெல்லாம் வெறும் அற்பக் காரணங்கள்; கூட்டணி தர்மத்தின் முன் கால் தூசு மதிப்புக் கூட இதற்கு கிடையாது. பின் எதற்காக முத்தமிழ் அறிஞருக்கு வலி ஏற்பட்டிருக் கிறது? அய்யகோ, விடுதலைப்புலிகளிடம் விவேகம் இல்லாமல் போய் விட்டதே என்ற கவலையில் ஏற்பட்ட வலி இது!“வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இது போன்ற போர்முனைகளில், விவேகத்தைப் பயன் படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை, என்ன காரணத்தினாலோ, விடுதலைப் புலிகள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்” அதனால் ஏற்பட்டதே, இந்த வலி என்கிறார். (‘முரசொலி’ நவ. 18)
உண்மைதான்; கலைஞர் கருணாநிதிக்கு இப்படி ஒரு வலியை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி யிருக்கவே கூடாது தான்! அவர் தொடர்ந்து முன் வைத்த விவேகமான சிந்தனைகளை ஒழுங்காகக் கேட்டு செயல்படாதது, சாதாரண குற்றமல்ல; பெருங்குற்றம்.
முதலில் விவேகம் என்றால் என்ன என்பதை சரியாக துல்லியமாக ஒழுங்காகப் புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா? அதாவது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி நடத்தும் தேர்தல் அரசியலுக்கு ‘பக்கவாத்தியம்’ வாசிப்பதுதான் விவேகம். அவர் எம்.ஜி.ஆரை, காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்தினால், அதற்குத்துணை நிற்க வேண்டும். அவரே காங்கிரசு ஆதரவு அரசியல் நடத்தினால், அதற்கும் ‘சலாம்’ போட வேண்டும். வீரத்தையே மிஞ்சி நிற்கக் கூடியதுதான் விவேகம்! எப்படித் தெரியுமா? ரணில் விக்ரமசிங்கே போன்ற சிங்களர்கள்தான் விடுதலைப் புலிகளைவிட உண்மையான ஈழ விடுதலைப் போராளி என்று ‘வீரத்துடன்’ கூறுவதுதான் - விவேகம்! அந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு ‘ஜெ’ போட்டிருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறுவதுதான் விவேகம். “நான் சொன்னதை விடுதலைப்புலிகள் கேட்டார்களா? இல்லை; ஆனால், நான் சொன்னதை ராஜபக்சே கேட்டு, அகதிகள் மீது கருணை காட்டிவிட்டாரே! ஆக, விடுதலைப் புலிகளைவிட, விவேகத்தின் இமயமாக ராஜபக்சே உயர்ந்து நிற்கிறார், உடன் பிறப்பே” என்று, அடுத்து, விவேகமான கடிதங் களைக்கூட தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். பெரியாருக்கு கூட அவ்வளவு விவேகம் போதாது என்றுதான் கூற வேண்டும்.
ராஜகோபாலாச்சாரி பேச்சை பெரியார் ஒழுங்காக விவேகத்துடன் கேட்டிருப்பாரேயானால், அவர் காங்கிரசை விட்டு விலகியிருக்காமல், வசதியான தேசியத் தலைவராகியிருக்கலாம். எல்லாம் விவேகப் பற்றாக்குறை தான். அந்தக் காலத்திலிருந்தே இந்த ‘விவேகம்’ தமிழனுக்கு இல்லாமல் போய்த் தொலைந்து விட்டதே என்பதை நினைக்கும் போது மவுன வலி மேலும் அதிகமாவதுதான் மிச்சம்!
இதை எல்லாம் செய்யாமல், எத்தனை வீரம் காட்டினாலும் அவர்கள் உண்மையானத் தமிழர்கள் என்ற வரையறைக்குள் வரவே முடியாது - என்பது மட்டும் உறுதி! உறுதி!!
• உலகத்திலே எந்த ஒரு விடுதலை இயக்கத்திலும் இல்லாத ராணுவக் கட்டமைப்பை விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பியிருக்கலாம்;
• தரைப்படை, கப்பல் படை, விமானப் படை - என்ற முப்படைகளையும் கொண்டிருந்த ஒரே, விடுதலை இயக்கம் தமிழன் கண்ட புலிகள் இயக்கம் தான் என்று கூறிக் கொள்ளலாம்;
• தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, ராணுவ இலக்குகளைத் தகர்ப்பதற்கு கரும்புலிகளை உருவாக்கி காவியம் படைத்திருக்கலாம்;
• ஆண்களுக்கு நிகராக பெண்களின் விடுதலைப் படையணிகள் ஆயுதமேந்தி களமாடியிருக்கலாம்;
• தமிழ் ஈழத்தின் விடுதலைச் சமரில் 25000க்கும் மேற்பட்ட வீரர்களும், வீராங்கணைகளும் தங்கள், உயிரை அர்ப்பணித்து மாவீரர்களாகியிருக்கலாம்;
• கொரில்லாப் படையாகத் தொடங்கிய இயக்கம் வளர்ச்சிப் பெற்று மரபு வழி ராணுவமாக உருவெடுத்திருக்கலாம்;
• உலகின் எந்த ஒரு நாட்டின் பிடியிலும் சிக்கிக் கொள்ளாமல், தங்களுக்கான ஆயுதங்கள் வாங்கவும், தங்களுக்கான நிர்வாகக் கட்ட மைப்புகளை அமைத்துக் கொள்ளவும், தங் களது சொந்தக் கால்களிலேயே நின்றிருக்கலாம்;
• நீதி, நிர்வாகங்களோடு தமிழர்களுக்கான தனி ஆட்சியையே தனித்துவமான அடையாளத் தோடு நடத்திக் காட்டியிருக்கலாம்;
- இப்படி எல்லாம் தமிழின உணர்வாளர்கள் வீணாக பெருமை பேச வேண்டாம். இவையெல்லாம் கிடக்கட்டும்; ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?
விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் கருணாநிதியை போன்ற விவேகம் இருந்ததா?
அது தானய்யா கேள்வி!
தங்களைத் தாங்களே குண்டுவைத்து தகர்த்துக் கொண்டு, ராணுவத்தின் நிலைகளை அழித்தது வீரம் என்று கூறுவீர்களேயானால், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தலைவர் தூக்கி எறிந்தாரே, அந்த விவேகத்தின் முன் இந்த வீரம் நிற்க முடியுமா?
ஆணைஇறவைப் பிடித்திருக்கலாம்; ஆனால், 1986 ஆம் ஆண்டில் மதுரையில் ‘தமிழினத் தலைவர்’ கலைஞர் கருணாநிதி பங்கேற்ற மாநாட்டில் பிரபாகரனே வராமல் வேறு ஒரு தலைவர் திலகரை அனுப்பி வைத்தாரே, ஈழ விடுதலைப் போராட்டம் பின்னடையத் தொடங்கியதே, அப்போது தானே?
விவேகத்தைப் பற்றி இன்னும் விளக்கம் வேண்டுமா? என்ன செய்வது; புரியாதவர்களுக்கு உணர்த்த வேண்டியிருக்கிறதே? சரி; அதையும் கூறி தொலைக்கிறோம்.
காங்கிரசை எதிர்க்கும் அணியில் இருக்கும் போது ‘இந்திய அமைதிப் படையை’ இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று முழங்க வேண்டும். அமைதிப் படையை வரவேற்க முதல்வராக இருந்தாலும் போகமாட்டேன் என்று பேச வேண்டும். ஆனால், காங்கிரசின் ஆதரவு அணியில் இருக்கும்போது ஏற்கனவே கூறியதை அப்படியே முட்டாள்தனமாக திருப்பிக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. அப்போது எவ்வளவு ராணுவ உதவிகள் செய்தாலும் எதிர்க்காமல் மவுனத்தோடு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அது தானய்யா விவேகம்!
அமெரிக்காவும், பிரிட்டனும், சுவிட்சர் லாந்தும், அய்ரோப்பிய ஒன்றியமும், அய்.நா.வின் மனித உரிமை அமைப்புகளும்கூட சிங்கள ராணுவத்தின் தமிழினப் படுகொலைகளைக் கண்டிக்கலாம். வெட்டிப் பயல்கள்! அதற்காக உணர்ச்சி வசப்பட்டு, சிங்கள ராணுவத்தை நாமும் கண்டித்து விடக் கூடாது. அடக்கமாக - அமைதி காக்க வேண்டும். அங்கே தான் விவேகமே அடங்கியிருக்கிறது.
ஒரு பக்கம் மனித சங்கிலி; உண்ணாவிரதம்; போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டே மறுபக்கம் மன்மோகன் சிங் ஆட்சியிடம் கை குலுக்கிட வேண்டும். அதற்காக கூட்டணியிலிருந்து விலகி விடக் கூடாது.
அது ...... அது..... விவேகம்! இவை எல்லாவற்றையும் விட மற்றொரு முக்கிய ‘விவேகம்’ இருக்கிறது. அதுதான் முக்கியம். ஈழத்தில் இனப் படுகொலைக்கே காரணம் - விடுதலைப் புலிகள்தான் என்று பழியைத் தூக்கி அவர்கள் தலையிலே போட்டு, மண்ணை வாரித் தூற்றிட வேண்டும்.
சூடு சொரணை உள்ள எவனாவது எதிர்த்தால், ஜெயலலிதா பிரபாகரனை எத்தனை முறை கண்டித்துள்ளார் தெரியுமா? என்ற பட்டியலை எடுத்து, எதிர்ப்பவர்கள் முகத்தில் வீச வேண்டும். அப்படியானால், தாங்களும் ஜெயலலிதா போட்டுத் தந்த பாதையில்தான் பயணம் செய்கிறீர்களா என்று மீண்டும் எவனாவது கேட்டால், ‘போடா, தமிழினத் துரோகி; அரண்மனை நாயே; அடக்கடா வாயை’ என்று மட்டையடி ‘முரசொலி’யில் கொடுத்துவிட வேண்டியது தான். இந்த விவேகங்களைப் புரியாமல், விமானப் படை யாவது, கரும்புலியாவது, வெண்டைக்காவாவது; எல்லாமே, வீண்!
எல்லாவற்றுக்கும் மேலாக கடைசியாக ஒரு விவேகமான “அஸ்திரம்” கைவசம் இருக்கிறது. அதை எடுத்து வீசி விட்டால், பீரங்கிகள் கூட அதற்கு முன்னால் நிற்க முடியாது. அதுதான் ‘சகோதர யுத்தம்’ எனும், சக்தி வாய்ந்த ஆயுதம்; அதாவது நன்றாக விளங்குமாறு கூறுவோமே!
வீரபாண்டிய கட்டபொம்மனை பிரிட்டிஷாரி டம் எட்டப்பன் காட்டிக் கொடுத்த கதை தெரியுமல்லவா? அந்த வரலாற்றை கட்டபொம்மன் வீரன் என்றும்; எட்டப்பன் துரோகி என்றும் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. கட்டபொம்மனுக்கும் எட்டப்பனுக்கும் நடந்த ‘சகோதர யுத்தம்’ என்று இருவரையும் குற்றக்கூண்டில் நிறுத்திவிட வேண்டும். அப்போதுதானே கட்டபொம்மனை தூக்கில் போட்ட பிரிட்டிஷ் ஆட்சியைக் குற்றத்திலிருந்து காப்பாற்ற முடியும்.
அங்கே தான்...... அங்கே தான்..... விவேகம். இன்னும் ‘சகோதர யுத்தம்’ என்பதற்கு விளக்கம் தேவையா? அப்படியானால், எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன் குடும்பத்தினரிடம் போய் கேட்கலாம்; வைகோவிடம்கூட விசாரிக்கலாம்.
மதுரை தா. கிருட்டிணன் குடும்பத்திடம் கேட்டால், மேலும் தெளிவான விளக்கங்களைப் பெறலாம் அய்யா!
- கோடங்குடி மாரிமுத்து