தமிழர்களின் பழம்பெரும் சிறப்புகளை வெளிக்கொண்டு வந்து நிறுவியவர்கள் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர்.
திராவிடர்கள் வரலாற்றை மண் போட்டு மூடி இருப்பார்கள் என்று கற்பனையில் கூறுகிறவர்கள், தமிழ் வரலாற்றுச் சிறப்புகளை எல்லாம் மூடிய வையாபுரியையும், தெ. பொ. மீ.யையும் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்?
ஒருவரை - அவர் பிறப்பால் தெலுங்கர், இவர் பிறப்பால் கன்னடர், அவர்கள் பிறப்பால் தமிழர்கள் இல்லை - இப்படியாக அடையாளப்படுத்துவதுதான் தமிழ்த் தேசியம் என்று இன்றைக்குக் கருத்துரைக்கின்றார் சிலர்.
பிறப்பால் தமிழர்கள் இந்தியத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பற்றியோ, ஆரியப் பார்ப்பனியத்திடம் தங்கள் மொழியும் பண்பாடும் வரலாறும் அரசியலும் நசுக்கப்பட்டுக்கீழே கிடப்பதைப் பற்றியோ, இந்திய மார்வாடி பெருமுதலாளிகளிடமும், பன்னாட்டுப் பெருமுதலாளிகளிடமும் தமிழ்நாட்டின் பொருளியல் வீழ்த்தப்பட்டுக் கிடப்பதைப் பற்றியோ அவர்களுக்குக் கவலை இல்லை.
அவற்றை மீட்பதற்குரிய அரசியலையும் விடுவிப்பதற்குரிய போராட்ட அறிவையும் செயற்பாடுகளையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.
தமிழர்களாகப் பிறந்த பெரும்பாலான அறிஞர்கள், தலைவர்கள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நிலையினரிடமும் முடங்கி அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.
அத்தகைய அடிமைத்தனத்தைத் தமிழர்கள் என்று பெருமை அடைகிறவர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்து, போராடிய, தம்மை ஈகப்படுத்திக் கொண்ட தலைவர்கள் பலரின் குருதியாய்வு செய்து, அவர்கள் தமிழர்கள் இல்லை, தெலுங்கர்கள், கன்னடர்கள் என்பதாகக் குறிப்பிட்டு வருகின்றார்.
ஒரு தேசிய இன விடுதலைக்காக, ஒருவர் அந்த இனத்தின் விடுதலையில் அக்கறை கொண்டிருக்கிறார்களா? தங்களை அதற்கென ஒப்புவித்துக் கொண்டு ஈகப்படுத்திக் கொள்ளுகிற உணர்ச்சியோடு இருக்கிறார்களா? - என்பதுதான் வரையறையே அன்றி, அவர்கள் பிறப்பால் யார் என்று கிளறிக்கொண்டிருப்பது வரையறை இல்லை.
பிறப்பால் ஒருவரை அடையாளம் காணுகிற உணர்வே முதலில் தமிழ்ப் பண்பாட்டுக்குரியது இல்லை. அத்தகைய உணர்வு ஆரியப் பார்ப்பனியத்தின் வருணாசிரம சிந்தனைப் பயிற்றுவித்த உணர்வு. அந்த உணர்வைத் தங்களின் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலைக் குளறுபடி செய்து கொண்டிருக்கிற ஆரியப் பார்ப்பனிய அடிமை கருத்தியலாளர்களைத் தமிழ்த் தேச அரசியல் களத்தில் இருந்து விலக்கியாக வேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுமை அறம்சார்ந்த உணர்வை உலகுக்குப் பரப்பிய பேரறிவு கொண்ட தமிழ்ப் பேரினத்தில் சாதி என்றும் மதத்தைக் கிளறிக் கொண்டிருக்கிற உணர்வுதான் ஒருவரைப் பிறப்பால் அடையாளப்படுத்துகிற உணர்வு.
எவர் ஒருவரும் கருத்தால், நடைமுறையால், வாழ்முறையால், செயற்பாடுகளால் யாருக்கானவராக இருக்கிறார் என்பதிலிருந்தே அவரை அடையாளம் காண முடியும்.
கியூபா விடுதலைக்காகப் போராடிய சே குவேராவைக் கியூபர்கள் எவரும் குருதி ஆய்வு செய்து அவரைப் புறக்கணிக்கவில்லை.
தமிழ் மொழிக்கும் இன உரிமைகளுக்காகவும் தமிழ்நாட்டு விடுதலை நோக்கத்திற்காகவும் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, ஈகப்படுத்திக் கொண்ட எண்ணற்ற பலரின் வீட்டு மொழி தமிழுக்குத் தொடர்புடைய மொழியாகவே இருந்திருக்கிறது என்பதையும், பலர் வெளிநாட்டினராகக்கூட இருந்திருக்கின்றனர் என்பதையும் அறிய வேண்டும்.
விடுதலை உரிமைப் போராட்ட அரசியல் என்பது ஒருவரின் கொள்கையிலிருந்தும் செயல்களிலிருந்தும் மதிப்பிடப்படுவதேயன்றி, எவர் ஒருவரின் குருதியையும் மலத்தையும் ஆய்வு செய்து கொண்டிருப்பதில்லை.
கருத்துகளில் இருந்து, செயல்களில் இருந்து ஒருவரை மதிப்பிடுகிற பொழுது அவர் தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உரியவராக உள்ளாரா இல்லையா என்பதை வெளிப்படையாக அறிய முடியும். அப்படியே இல்லாதவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரே ஆனாலும் அவரைத் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் எத்தகைய தேவையோ சிறப்போ இருப்பதில்லை.
கீழடியின் சிறப்புகளை, அதன் பழமை இருப்புகளை ஆய்வு செய்து நிறுவி வெளிப்படுத்தியவருக்குத் தாய்மொழி தமிழ் இல்லை. இந்திய அரசு அவரைத் தூக்கிப் பந்தாடிய பொழுதுகூட, அதன் வழி இன்னல்களை அவர் அடைந்தபோதுகூட, அவர் தாம் கண்டறிந்த உண்மையிலிருந்து மாறிச் சொல்லிவிடவில்லை.
அதேபோல், கீழடியில் இரும்பு உருக்கு நிலைகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டறியப்பட்டது எனும் உலகின் பெரும் சிறப்பை இந்திய அரசு ஏற்காத சூழலில்கூட, அதை வலிமையாக நிறுத்திக்காட்டி, நினைவுபடுத்தி, காட்சிப்படுத்திப் பரப்பிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.
அதேவேளையில் கீழடியின் பழஞ்சிறப்பை ஏற்காத இந்திய அரசைக் கண்டிக்காமல், அதை எதிர்த்துப் போராடாமல், அதை வெளிப்படுத்திய தமிழ்நாடு அரசு திராவிடத்தின் பெயரைத் தாங்கி இருக்கிறது என்றும், அவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதாகவும் இழிவுபடுத்துகிறவர்களைத் தமிழ்த்தேசியர் என்பது வெட்கப்படக் கூடியது.
தமிழை, தமிழர்களின் பழமைச் சிறப்புகளை ஆய்ந்து உலக அளவில் வெளிக்காட்டிய வெளிநாட்டு அறிஞர் பெருமக்களை அவர்கள் தமிழர்கள் இல்லை என்று இழிவுபடுத்துவதுதான் தமிழ்த்தேசியமா?
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பிறந்து தமிழை, தமிழ் இனத்தை, தமிழ்நாட்டை மீட்கிற உணர்வை, போராடுகிற உணர்வை மேற்கொள்ளாமல் அடிமைப்பட்டிருந்த வீடண, பிரகலாத வரிசையில் வையாபுரியார், தெ.பொ.மீ, ம.பொ.சி, மூப்பனார், பொள்ளாச்சி மகாலிங்கம் உள்ளிட்டோரின் பட்டியலில் இருக்கிற தமிழர்களிடம் என்ன பெருமை நமக்கு இருக்கிறது?
ஆக, பிறப்பால் தமிழர்களா, பிறப்பால் தமிழர்கள் இல்லையா என்பது மிகவும் இழிவான மதிப்பீடு என்பதை மக்களும் அறிஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
- பொழிலன்