ஆர்எஸ்எஸ் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே தூய தமிழ் இயக்கம் தோன்றி விட்டது. தூய தமிழ் இயக்கத்தைத் தொடங்கிய நிலையில் தமிழ், பெருமளவு சமசுக்கிருதக் கலப்பைக் கொண்டிருந்தது. இசுலாமியர்கள் படையெடுப்பினால் அரபுச் சொற்களும், களப்பாளர் ஆட்சியால் மிக குறைவான நிலையிலே பிராகிருதச் சொற்களும் தமிழில் கலந்திருந்தன.
ஆரியப் பார்ப்பனர்களின் ஊடுருவலாலும் அதிகாரத்தாலும் பண்பாட்டுச் சீரழிப்பாலும் சமசுக்கிருதக் கலப்பு திருக்குறள் காலத்திற்கு முன்பிருந்தே மெல்ல தொடங்கிவிட்டது.
தமிழில் அதிகப்படியாகச் சமசுக்கிருத கலப்பு ஏற்பட்டது சமயங்களின் வளர்ச்சிக் காலங்களில்தாம் என்று பாவாணர் விளக்கப்படுத்துவார்.
அதற்கு முன்பு சமண புத்தங்கள் நுழைந்திருந்தாலும் பாலியோ பிராகிருதமோ தமிழில் பெருமளவில் கலந்துவிடவில்லை. பண்பாட்டளவில் மெய்யியலில் வாழ்வியல் நிலைகளில்தாம் கருத்துகள் பரிமாற்றம் நடைபெற்றன. அவற்றைக் கலப்பு என்பதைவிட கருத்தியல் வளர்ச்சி என்றே ஏற்க முடியும்.
ஆனால், ஆரியப் பார்ப்பனியத்தின் வைதீக வருணாச்சரம முறைகள் தமிழிய அறவாழ்வுக்கும் பொதுமை வாழ்வுக்கும் நேர் எதிரானவை. எனவே அவர்களின் கலப்பு தமிழர்களின் மெய்யியலைச் சிதைக்கவும், வாழ்வியல் முறைகளையே களவாடவும் மாற்றவும், மொழிகளின் சிறப்புகளைச் சீரழிக்கவும் செய்தன.
ஆரியப் பார்ப்பனியம் பழக்கிக் கொண்ட சமசுக்கிருத மொழி என்பது அவர்களின் வேத வல்லொலிப்பு மொழியோடு பிராகிருதமும் பாலியும் தமிழின் அடிப்படைகளும் கலந்து உருவாக்கப்பட்டது.
சமசுக்கிருதம் என்பதே கலந்து செய்யப்பட்டது எனும் பொருளுடைய சொல்..
குப்தர் காலத்திற்கு முன்பு வரை சமசுக்கிருதம் என்னும் சொல் மொழியைக் குறித்ததாகத் தெரியவில்லை.
இலக்கண நூலாகக் கருதப்படும் அசுட்டாத்தியாயி மௌரியர்கள் காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுவது ஏற்க இயலாதது.
அப்படி அந்த நூல் எழுதியதற்கான எந்தப் பதிவும் தேவையும் மௌரியர் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. (குப்தர்கள் காலத்திலேயே அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே அசுட்டாத்தியாயி தொகுத்து எழுதப்பட்டதாக ஆய்வடிப்படையில் நிறுவப்பட்டிருக்கிறது.)
மௌரியர் காலத்தில் வந்த செலுக்கசு நிக்கோட்டார் என்னும் கிரேக்க நாட்டுத் தூதர் எழுதிய இண்டிகா என்னும் நூலுள் மௌரிய மக்களிடம் எழுத்துப் பழக்கம், எழுத்தறிவு இல்லை என்பதாகப் பதிவு இருக்கிறது. அசோகனின் கல்வெட்டில் உள்ள எழுத்துமுறைகளும் பாலியும் பிராகரதமுமே ஆகும்.
சமசுக்கிருதக் கல்வெட்டுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகே உள்ளன என்பதும், எழுதப்பட்ட வேதங்கள் 14ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தளவில் தொகுக்கப்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
தொடக்கத்தில் வேதங்கள் வட்டெத்திலும் பின்னரே தேவநாகரி எழுத்து முறையிலும் எழுதப்பட்டதாக அறிய முடியும்.
இவற்றின் வழியாகவெல்லாம் நாம் அறிவது எழுத்து மொழியாகச் சமசுக்கிருதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இல்லை என்பதும், ஆரியர்கள் தமிழ்நிலம் வந்த பின்னரே எழுதவும் இலக்கணத்தை, பிற அறிவியல் ஆக்கங்களைத் தமிழகம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து களவாடி வேத புராணங்கள் உள்ளிட்ட சமசுக்கிருத நூல்களில் இணைத்துக் கொண்டனர் என்பதும் நிறுவப்பட்டுள்ள செய்திகள்..
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க..
தங்களின் அதிகாரத்தை தாம் ஊடுருவிய நிலங்களில் எல்லாம் நிறுவ வேண்டும் எனும் நோக்கத்திற்காகவே வருணாச்சிரமத்தைத் திணிப்பதும், வரலாற்றைத் திரிப்பதும், மொழிகளைச் சிதைப்பதுமாகத் தொடர்ந்து திமிரெடுத்து இயங்கியது ஆரியப் பார்ப்பனியம்..
அரசுகளைக் கூறு பிரித்துத் தனக்குக் கீழ் ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு வந்து இயக்கத் தொடங்கியதால் சமயங்கள், வழிபாட்டு முறைகள், கடவுளர் பற்றிய கருத்துகள், புராணத் தொன்மங்கள், ஊர்ப் பெயர்கள், ஆள் பெயர்கள், கடவுளர் பெயர்கள் என எல்லாவற்றையும் சமசுக்கிருத வயப்படுத்தியது ஆரியப் பார்ப்பனியம்..
தமிழ் மொழி திரிக்கப்பட்டுக் கலப்பு மொழியாக ஆக்கப்பட்டு, தெலுங்கு, கன்னட, துளு, மலையாளம் எனப் பல மொழிகள் உருவாக்கப்பட்டு அவற்றையெல்லாம் சமசுக்கிருதத்தின் தொடர்புடையன போல் நிலைப்படுத்திக் கொண்டனர்..
திரிந்து போன அவர்களிடமெல்லாம் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பும், சமசுக்கிருத எதிர்ப்பும் இல்லாமல் போனது..
திரிந்து போனவர்களின் அரசுகளைத் தன் வயப்படுத்திக் கொண்டு தமிழ் அரசுகளை எதிர்த்தனர், வீழ்த்தி ஆட்சியும் செய்தனர்..
தமிழ் அரசர்களுக்குள்ளாகவே பகை மூட்டினர்.. போரிட வைத்து எதிரிகளாக்கினர்..
இந்தக் காலங்களில் எல்லாம் சமசுக்கிருதம் வலிமையாகத் திணிக்கப்பட்டது.. அரசர்கள் பெயர்கள், குடிமக்கள் பெயர்கள், கடவுளர் பெயர்கள், ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமசுக்கிருதம் ஆக்கப்பட்டன.. பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் படிப்படியாக சமசுக்கிருதமாகத் திரிக்கப்பட்டன.
ஆரியப் பார்ப்பனியத்தின் அதிகாரத் துணையோடு வந்தேறிகளின் ஆட்சி நடைபெற்றது.. தமிழ் படிப்படியாகச் சீர்குலைக்கப்பட்டது..
ஆங்கிலேயர்களின் வரவும், அவர்களின் ஆய்வுகளும், முதலாளியக் குடிநாயக முறை அறிமுகப்படுத்தமும் படிப்படியாகச் சில வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.. வரலாற்றின் அவல நிலைகள் தமிழ் அறிஞர்களுக்குப் புலப்பட்டது.. விழிப்புணர்வு தோன்றியது..
அரசியல், பொருளியலில் தேவைப்பட்ட உரிமை மீட்பு உணர்வுகள் மொழி நிலையிலும் ஏற்பட்டது..
குமுக அவல நிலைகளிலிருந்து தமிழர்களை மீட்கிற உணர்வு பலருக்கும் ஏற்பட்டது.. ஆரியப் பார்ப்பனியத்தை விளங்கிக் கொண்டனர்..
படிப்படியாக எதிர்க்க முனைந்தனர்..
திருவள்ளுவர் காலத்திலேயே தோன்றிய ஆரியப்பார்ப்பனிய எதிர்ப்புணர்வு சித்தர்கள் காலங்களில் வளரத் தொடங்கியது..
வள்ளலார் ஆரியத்தையும் சமசுக்கிருதத்தையும் எதிர்த்தார்.. சிவனியத்தால் ஆரியத்தை வெல்ல முடியாது என்று உணர்ந்து தூய நன்னெறி கண்டார்..
மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசப் பண்டிதர், வ. உ. சிதம்பரனார், பரிதிமாற் கலைஞர், பாண்டித்துரையார் போன்றோர் தூய தமிழ்ச் சிந்தனை கொண்டிருந்தாலும் மொழி உரிமை மீட்பில் ஓரளவிலானச் செயற்பாடுகளாகவே அவர்களின் முயற்சிகள் இருந்தன.
ஆங்கிலத்திலும், சமசுக்கிருதத்திலும் புலமை பெற்றிருந்த மறைமலை அடிகளார் சமசுக்கிருதத்தை அது தமிழில் ஏற்படுத்திய கலப்பை எதிர்த்துத் தூய தமிழுக்காக இயக்க முயற்சியை முன்னெடுத்தார்.. மறைமலை அடிகளார் அவர்களின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் முனைப்பும் செயற்பாடுகளும் தூய தமிழ் முயற்சியில் குறிப்பிடப்பெற வேண்டியவை..
கி.பி. 1916 இல் தூய தமிழ் முயற்சிகள் இயக்கமாகத் தோன்றியது..
தன் பிள்ளைகளின் பெயர்களை மாற்றியதோடு, வேதாசலம் எனும் தன் பெயரையும் மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.. “அது என்ன மரம், செடி, கொடிகள்” என்று ஆரியப் பார்ப்பனியம் அடிகளாரைப் பகடி செய்தது..
தூய தமிழ் அவரைத் தலைநிமிர்த்தி நடையிட வைத்தது.. தமிழுக்காகவும் இந்தி எதிர்ப்புக்காகவும், சமசுக்கிருத எதிர்ப்புக்காகவும், தமிழ்நாட்டு உரிமைக்காகவும் தலைமகனாய் நடையிடத் தொடங்கினார் மறைமலை அடிகளார்..
சிவனியச் சார்புடையோரெல்லாம் ஆரியத்திடம் அடிபணிந்து கிடந்த அந்தக் காலச் சூழலில் ஆரியத்தை, சமசுக்கிருதத்தை எதிர்த்து நின்ற தலைமகன் அவர்..
ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்புக்கருத்துகளிலும், மொழி அளவிலும் நீங்கள் எங்களுக்குத் தலைவர் என்று மறைமலையடிகளாரை அடையாளப்படுத்தினார் பெரியார்.. பெண்கள் உரிமை மாநாடுகளுக்குத் தலைமை தாங்கும் சிறப்புக்குரியவராக நீலாம்பிகை அம்மையாரையே முதன்மைப்படுத்தினார் பெரியார்..
ஞானசாகரம் என்று தான் நடத்தி வந்த இதழை ‘அறிவுக்கடல்’ எனத் தமிழில் மாற்றி நடத்தினார் மறைமலையார். தமிழ்த் திருமணம், தமிழ்(திருவள்ளுவர்) ஆண்டு நடைமுறைப்படுத்தம், தமிழர் மதம் எனும் கருத்துகளை நடைமுறைப்படுத்தினார்..
அவரின் பெருமுயற்சியால் ஈர்க்கப்பட்ட அறிஞர் பெருமக்கள் சிலர் அவரைப் பின்பற்றிச் செயல்படத் தொடங்கினர்.
1938இல் இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி நடைபெற்ற மொழி போராட்டத்தின் மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியாருடன் பெரியார் அவர்களும் இணைந்து போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்தார்.. தூய தமிழ் இயக்க முயற்சி தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கத்தாரிடமும் பரவியது..
இருப்பினும் அரசு ஆதரவு இல்லாததாலும், ஊடக வலு இல்லாததாலும், பெருமளவில் இயக்க முயற்சிகள் இல்லாததாலும் தூய தமிழ் இயக்கம் வெகுமக்கள் இயக்கமாக வளரவில்லை..
மறைமலை அடிகளாரை அடியொற்றியவர் என்ற நிலையில் இருந்து மேலும் மேம்பட்டு, மொழியியல் துறையின் தொடக்க முயற்சிகளில் இருந்த ஆய்வுகளை மேலும் செழுமையான முயற்சிகளை மேற்கொண்டு எண்ணற்ற ஆக்கங்களைச் செய்தார் மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர்.
அவரின் ஆக்கப் பணிகள் குடத்திலிட்ட விளக்காக இருக்க அவரின் அறிவாக்கக் கருத்துகளை குன்றின் மேல் இட்ட விளக்கு போல் வெளிக்கொண்டு வந்த முயற்சிக்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் அவரின் தென்மொழி முயற்சிகளுமே அடித்தளமாக அமைந்தன..
தென்மொழி இதழ், ஓர் இதழாக மட்டும் இல்லாமல் பெரும் இயக்க முயற்சியோடு தூய தமிழைப் பரப்பியது, அக்கால மாணவர்களிடையே இளைஞர்களிடையே ஆசிரியப் பெருமக்கள் இடையே தென்மொழி வலுவாகக் காலூன்றித் தூய தமிழை இயக்கப்படுத்தியது..
பாவாணர் அவர்களும், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர் பெருமக்களும் இணைந்து உலகத் தமிழ்க் கழகம் தோற்றி வைக்கப்பெற்று, தூய தமிழ் முயற்சிகள் வலுப்பெறத் தொடங்கின.
தென்மொழியோடு மேலும் பல இதழ்கள் தூய தமிழில் வெளிவந்தன.
திராவிடர் கழகத்திலிருந்து வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தூய தமிழ் நடைமுறைப்படுத்தத்திற்கான முயற்சிகளையும் அரசியல் அளவில் செய்தது. திமுகவினர் பலர் தங்களின் பெயர்களைத் தூய தமிழ்ப் படுத்திக் கொண்டனர். தங்கள் பிள்ளைகளுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டினார், தென்மொழி தொடர்புடைய பலர் திமுகவில் இருந்த நிலையில், 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புழக்கத்திலிருந்த எண்ணற்ற சமசுக்கிருதச்சொற்களைத் தூய தமிழ்ப் படுத்தி வழக்கப்படுத்தினர்.
பல நிலைகளில் சமசுக்கிருத மொழி வழக்கம் மெல்ல மெல்ல தூக்கி எறியப்பட்டுத் தூய தமிழ் வழக்கத்திற்கு வந்தது..
இந்தியப் பொதுவுடைமையருக்குத் தூய தமிழ்க் கருத்து ஒவ்வாமையாகவே இருந்தது. மொழி, கருத்தை வெளிப்படுத்துவதற்கான கருவி என்கிற அளவிலேயே அவர்கள் தூய தமிழைப் புறக்கணித்தனர்.
பொதுவுடைமைக் கட்சிகளின் மூலவர்களான மார்க்சு, ஏங்கல்சு, இலெனின், மாவோ ஆகியோரின் நூல்களை மொழி பெயர்த்தவர்கள் எளிய மக்களின் மொழியில் அல்லாது சமசுக்கிருதக் கலப்போடான கொடுநிலையிலேயே மொழி பெயர்த்தனர்..
பெரும்பாலான மார்க்சிய ஆக்கங்களின் மொழிபெயர்ப்புகள் எல்லாம் அன்றைக்கு ஆங்கிலம் தெரிந்த ஆரியப் பார்ப்பனர்களாலேயே செய்யப் பெற்றன.
அவர்கள் அவர்களின் வழக்க மொழியிலேயே பெயர்ப்பு செய்ததால் சமசுக்கிருதக் கலப்பு மிக அதிகமாக நடைபெற்றது..
உருசிய மொழியில் ஒரு குறிப்பிட்ட சூழலை விளக்குவதற்குரிய nedochoty, nedostatki, probely என்னும் சொற்கள் இருக்கும் போது, அதே பொருளைத் தருகிற defekty என்னும் அயல்மொழிச் சொல்லை உருசிய மொழியில் ஏன் ஆள வேண்டும் - என்று தோழர் இலெனினின் கேள்வி (இலெனின் தொகை நூல் 30, பக்கம் 298) இந்திய மார்க்சியர்களின் அறிவுக்கு இன்னும் உணர்த்தவில்லை..
மொழிகள் கலந்தால் தானே பல்வேறு தேசங்களின் உழைக்கும் மக்கள் ஒன்று சேர முடியும் என்று இயங்கியல் தெரியாமல் கருத்துகூறிக் கொண்டிருக்கிற இந்திய மார்க்சியர்களும் உண்டு..
பாட்டாளிகளின் உறவில் ஏற்படுகிற இயல்பான உறவு நிலையில் உருவாகிற கலப்பு என்பதற்கும், அதிகார வகுப்பால் (வர்க்கத்தால்) அடக்கப்பட்ட நிலையில் வாழ்வுரிமைகளைக் குறிப்பாக மொழி உரிமையை இழந்து அதிகார வகுப்பின் மொழியில் கரைந்து போவதற்கும் உள்ள வேறுபாடுகளைக்கூட அவர்கள் இன்னும் உணரவில்லை.. அத்தகைய கலப்பு எந்த வகையில் ஞாயமானதாக இருக்க முடியும்?
ஆக, மொழியின் தூய்மைக்கான போராட்டம் என்பது மொழி வழியான அதிகார வகுப்பின் அடக்கு முறையை எதிர்த்த போராட்டமே ஆகும்..
அதிகார வகுப்பின் அனைத்து நிலை அடக்குமுறைகளையும் எதிர்க்கிற நோக்கம் கொண்ட உழைக்கும் வகுப்பினர், உழைக்கும் மக்களுக்கு மொழி இல்லை, இனமில்லை என்பதாகக் குருட்டு பாடம் படித்து, அதிகார வகுப்பின் மொழி வழியான அடக்குமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா?..
தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டுப்பட்டுவிடும் என்கிற அதிகார வகுப்பின் நடைமுறையை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அவ்வாறே தமிழர்கள் திரு என்கிற தமிழ் அடைமொழிச்சொல்லை விட்டுவிட்டு ஸ்ரீ என்கிற சமஸ்கிருத சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது..
ஆக, மொழி கலப்பு என்பது சமன்மையில்லாத மக்கள் குமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அல்லது தேசத்தின் மீது ஒடுக்குகிற அதிகார வகுப்பு மொழி வழியான திணிப்பை அல்லது கலப்பை ஏற்படுத்தினால் என்ன காரணத்திற்காகவும் அதை ஒத்துக் கொள்ள இயலாது..
அந்த அடிப்படையிலேயே, தூய தமிழ் இயக்க முயற்சிகள் அதிகார அடக்குமுறை மொழியை எதிர்த்தாக வேண்டியது என்று உணர வேண்டியுள்ளது..
அத்தகைய எதிர்ப்பு வினைகளை ஆற்றாமல் போகிற பொழுதுதான், ஒடுக்கப்படுகிற மக்கள் குமுகத்தின் நலனுக்கான கட்சிகள் என்று கூறிக்கொள்ளுகிற அவற்றின் மீது நமக்கு ஐயம் ஏற்படுகிறது.. அவை உண்மையிலேயே ஒடுக்கப்படுகிற மக்களுக்கான கட்சிகள்தாமா.. அல்லது அதிகார வகுப்பின் நலன்களுக்காக ஏதோ ஒரு வகையில் இணக்கம் கொண்டிருக்கிற கட்சிகளா என்கிற ஐயம் ஏற்படுகிறது..
இவை ஒரு புறம் இருக்க..
கடந்த காலங்களில் தூய தமிழ் இயக்கங்கள் எடுத்த முயற்சிகள் போதுமானவயா? அம் முயற்சிகள் சரியான கோணத்தில் முன்னெடுக்கப்பட்டனவா? - என்பன குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது..
மறைமலை அடிகளாரின் தூய தமிழ் முயற்சிகள் பொதுமக்கள் முயற்சியாக நடைபெறவில்லை.. மாணவர்கள் வட்டத்தில்கூட அது வளர்க்கப்படவில்லை.. அறிஞர்கள் அளவிலேயே அறிமுகமாகி இருந்தது..
பாவாணரின் ஆய்வுகள் அறிஞர்களுக்குப் பெரு வெளிச்சத்தை உருவாக்கியது. அவரின் அறிவாக்கங்களைத் தென்மொழி இதழின் வழியாக வெளி உலகிற்குப் பரப்பிய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் முயற்சிகள் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியது.. உலகத் தமிழ் மாநாடுகளில் பாவாணரும் அவரின் கருத்துகள் புறக்கணிக்கப்படவே, உலகத் தமிழ்க் கழகம் தூய தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு உருவாக்கிப்பெற்றது, பலரை ஒருங்கிணைத்தது..
மொழி அளவிலோடுமட்டுமே முயற்சிகளை முன்னெடுத்து உரிமைகளை நிலை நாட்டிவிட முடியாது என்பதை அறிந்து இன உரிமை, நாட்டு உரிமைகளுக்காகவும் போராட்டங்களோடு செயற்பாடுகளை விரிவு படுத்தினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தூய தமிழ் இயக்க முயற்சிகள் தமிழ்நாட்டு உரிமை மீட்பு முயற்சிகளாகவும் வலுப்பெற்றது..
தூய தமிழ் தொடர்புடைய இளைய தலைமுறை தென்மொழித் தொடர்பில் தமிழ்நாட்டு அளவில் மட்டுமின்றித் தமிழர்கள் பரவி வாழ்கிற பகுதிகளில் எல்லாம் வலுவாக வளர்ந்தது..
மாநிலங்களை நசுக்கி இந்தியப் பார்ப்பனியத்தை வலுப்படுத்துகிற அரசியல் நெருக்கடியால் இந்தித் திணிப்பும், பன்னாட்டு நிறுவன வரவுகளால் ஆங்கில அதிகார ஆளுமையும் தமிழை மேலும் மேலும் சிதைத்து வருகின்றன..
இந்நிலையில், தமிழ் வழிக் கல்வி, தமிழில் வழிபாடு, ஆட்சி மொழியாக அலுவல் மொழியாக ஞாய மொழியாகத் தமிழைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையெல்லாம் மிக முதன்மையாகத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செய்தேயாக வேண்டும்..
ஊர்ப் பெயர்கள், கடவுளர் பெயர்கள் இவற்றையெல்லாம் உடனடியாகத் தூய தமிழ்ப் படித்தியாக வேண்டும்..
தமிழ் வழியில் படித்தோருக்கு மட்டுமன்றி, தமிழில் பெயர் வைத்திருப்போருக்கும் உயர்கல்வியில், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தாக வேண்டும்..
தமிழ் நாட்டு உரிமைகளுக்கானப் போராட்டங்களுக்கு இடையில் தமிழ்நாட்டு அரசும், தமிழ் இயக்கங்களும் மேற்சொன்ன திட்டங்களைப் படிப்படியாகத் தொடர்ந்து செயற்படுத்திட வேண்டும்..
தமிழில் இல்லாத, தமிழ் இலலாத இந்தியத் திட்டங்கள் எல்லாவற்றையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றிட வேண்டும்..
தூய தமிழ் இயக்கங்கள் மறைமலை அடிகள், பாவாணர், பாவலரேறு வழித்தடத்தில் மிக வலிமையோடு செயல்பட்டாக வேண்டும்..
தமிழ் என்பதே தூய தமிழ்தான் என்பதை தெளிவுபடுத்தவும் வேண்டும்..
தூய தமிழ் இயக்கத்தின் நூற்றுப் பத்தாண்டுக் காலச் சிறப்பு இவற்றையெல்லாம் நமக்கு உணர்த்தட்டும்.
- பொழிலன், தமிழக மக்கள் முன்னணி