சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்து உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் ஒரு கருத்தரங்கைச் சென்னையில் கூட்டி இருந்தார்..தமிழ் ஈழ இந்திய நட்புறவுக் கழகம் என்கிற பெயரில் அந்தக் கருத்தரங்கம் கூட்டப்பட்டிருந்தது.

ஒன்று தமிழீழத் தமிழ்நாடு நட்புறவுக் கழகம் என்று அந்த இயக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது இலங்கை இந்திய நட்புறவுக் கழகம் என்று இருந்திருக்க வேண்டும்..

மாறாக தமிழ் ஈழ இந்திய நட்புறவு கழகம் என்பதில் தமிழ் ஈழத்தை தமிழினம் என்கிற அளவில் மதிப்பிடுவதும் தமிழ்நாட்டை இந்தியா என்கிற அளவில் மதிப்பிடுவதுமான அரசியல் குறைபாடு வெளிச்சமாகத் தெரிந்தது..

பெரும்பாலான ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டை இந்தியா என்கிற அளவிலேயே அடையாளப்படுத்துவதும் தமிழ்நாட்டிற்கு வருவதை இந்தியாவிற்கு வருவதாகக் குறிப்பிடுவதும் மிகவும் தவறான அடையாளங்கள் ஆகும்..

தமிழ்நாட்டிலேயேகூட உங்களின் தேசியம்(நேஜனாலிட்டி) எது? என்று கேட்போரிடம், எங்களின் தேசியம் இந்தியத் தேசியம் என்பதாக விடை சொல்ல வைக்கிற அளவிலேயே இந்திய அரசு அனைவரையும் கட்டாயப்படுத்திப் பழக்கி இருக்கிறது..

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தேசியம் தமிழ்த் தேசியமே ஒழிய இந்தியத் தேசியமாக இருக்க முடியாது..

வங்காளத்தைச் சார்ந்தவர்கள் வங்காளத் தேசியத்தினராகவும், கர்நாடகத்தைச் சார்ந்தவர்கள் கன்னடத் தேசியத்தினராகவும், கேரளத்தைச் சார்ந்தவர்கள் மலையாளத் தேசியத்தினராகவும், நாகலாந்தைச் சேர்ந்தவர்கள் நாகலாந்து தேசிய இனத்தினராகவும் ஆகிற வகையிலேயே அந்தந்தத் தேசிய இனத்தினராகவே இருக்க முடியும்..

அதுபோல்தான் இந்தி மொழியையும் பண்பாட்டையும் அது சார்ந்த வரலாற்றையும் அரசியலையும் பொருளியலையும் கொண்டிருப்பவர்களே இந்தியத் தேசிய இனத்தினராக, இந்தியராக இருக்க முடியுமே அல்லாமல்.. மற்றவர்கள் இந்தியத் தேசிய இனத்தினராக, இந்தியராக இருக்க முடியாது..

இந்திய அரசியல் சட்டத்தின்படி மற்ற தேசிய இனத்தினர்கள் எல்லாம் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியுமே அல்லாமல் இந்தியத் தேசிய இனத்தினர் என்று அடையாளப்படுத்துவது அரசியல் பிழையும் வரலாற்றுப் பிழையும் ஆகும்..

ஆனால், தொடர்ந்து இந்தியப் பார்ப்பனிய கருத்தாளர்கள் இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்துவதற்காக மற்றவர்களை இந்துஸ்தானிகள் என்பதும், இந்துக்கள் என்பதும், பாரதத்தினர் என்பதும், எப்படியெல்லாம் பிழையானதோ அப்படியே இந்தியர்கள் என்பதும் பிழையானதே..

இந்நிலையில் இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு. ஆங்கிலத்தில் ரேசு(race) என்றும் நேஜனாலிட்டி (Nationality) என்றும் வேறுபடுத்தி அவற்றைச் சொல்லுகிறார்கள்..

இனம் என்பது மரபு சார்ந்த மொழி இனத்தையே அடையாளப்படுத்தும்.. ஆனால் தேசிய இனம் என்பது மொழியின் வழியாக மட்டும் அடையாளப்படுத்துவதன்று..

தேசிய இனத்திற்கு மொழி அடிப்படையான கூறாக இருப்பது போலவே அரசியல், பொருளியல், வரலாறு, பண்பாடு இவையெல்லாமும்கூட அடிப்படையானவையாக உள்ளன.. எனவே இந்தியாவிற்கு என்று ஒரு பொதுமொழி வரலாற்று அடிப்படையில் இல்லாததாலும், ஒத்த வரலாற்றியல் பண்பாடு இல்லாததாலும், ஒரே தன்மையிலான பொருளியல் வளர்ச்சி இல்லாததாலும், ஒரே குமுகத்தன்மையுள்ள அரசியல் போக்கு இல்லாததாலும் இந்தியாவை ஒரு தேசம் என்று அடையாளப்படுத்த இயலாது..

இந்தியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு மொழித் தேசங்களுக்கும் பல்வேறு வகைப்பட்ட பண்பாடும் வரலாறும் அரசியலும் பொருளியலும் உண்டு என்பதை மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுதே அறிய முடியும்.. ஆனால், அதை ஒரே பண்பாடுடையது போலவும், வரலாற்றைக் கொண்டது போலவும், குமுக, அரசியல், பொருளியலைக் கொண்டது போலவும் இந்தியப் பார்ப்பனிய அரசு அடையாளப்படுத்துகிறது..

பன்னாட்டு மூலதனத்திற்கும், இந்தியப் பார்ப்பனியத்திற்கும் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மக்கள் என்கிற அமைப்பு முறையே தங்களின் அதிகாரம் செலுத்துவதற்கு எளிதானதாக இருப்பதால் இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி ஒரே மக்கள் என்று வலிய திணித்து அடையாளப்படுத்துகின்றனர்..

அக்கருத்தை மொழித் தேசங்களின் உரிமைகளை நாடி இருக்கிறவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது..

எனவே, இந்தியா ஒரு தேசம் இல்லை என்பதையும்.. அதை ஒரு நாடு என்று அடையாளப்படுத்த இயலாது என்பதையும்.. விளங்கிக் கொள்ள வேண்டும்..

இந்தியா என்பது ஓர் அரசு.. அதுவும் அதிகார வெறி அரசு மட்டுமே.. என்று விளக்கிக் கொள்வோம்..

அந்த வகையில் இந்தியக் குடி மக்களாக இருக்கிற காரணத்தினாலேயே நாமெல்லாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ அடையாளப்படுத்திக் கொள்ளவோ இயலாது.. கூடாது..

தமிழ்நாட்டில் உள்ள தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமன்றித் தமிழ்த் தேசிய அரசியல் வழித் தங்களைத் தமிழ்த் தேசியர் என அடையாளப்படுத்திக் கொள்ளும், இந்திய, பன்னாட்டு அதிகாரங்களை, சுரண்டல்களை, சூறையாடல்களை எதிர்த்திடும் தமிழ்த் தேசிய உணர்வுடையோர் அனைவரும் தமிழர்களே.. என்று அறிவோம்.

- பொழிலன்

Pin It