மார்க்சியக் கோட்பாடு என்பது மார்க்ஸுடைய சிந்தனைகளை மட்டுமே கொண்டதன்று. அதற்குள், குழுமங்களை ஆய்வு செய்த மார்க்ஸுக்கு முந்தைய கால அறிஞர் பெருமக்கள் அனைவரின் சிந்தனைகளும் உள்ளடங்கியிருக்கின்றன.
திருவள்ளுவத்தின் அறக்கருத்துகளும், ஒப்புரவியக் கருத்துகளும் அதனுள் இருக்கின்றன. வள்ளலாரியமும் இருக்கிறது.
திருவள்ளுவர் காலத்தில் முதலாளியம் இல்லை. இன்றைய பன்னாட்டு முதலாளியக் கொடுமைகளை வல்லாட்சி அதிகாரங்களை எதிர்க்க வேண்டிய அரசியல் திட்டங்களை திருவள்ளுவத்தில் தேட இயலாது.
ஓர் அடிப்படையான குழுமவியல் பார்வையை, மாந்தநேயப் பார்வையை ஒப்புரவிய (சோசலிச)ப் பார்வையைத் திருவள்ளுவம் கொடுக்கிறது. ஆனால், அதனால் புரட்சிவய மாற்றத்திற்குரிய வழிகாட்டலை, அதற்கான வழிமுறைகளைச் செய்ய இயலாது.
அத்தகைய புரட்சிவயக் குழும அறிவியல் வழிமுறைப் பார்வையே மார்க்சியம்.
தமிழ் தேச விடுதலைக்கு, இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் விடுதலைக்கு, உலக அளவில் உள்ள தேசங்களின் விடுதலைக்கு மார்க்சியத்தாலேயே முழுமையான அரசியல் பார்வையை வகுத்துத் தர முடிகிறது.
திருவள்ளுவத்தை, வள்ளலாரியத்தை, அம்பேத்காரியத்தை, பெரியாரியத்தை. . எல்லாம் உள்ளடக்கிய குழும அறிவியல் பார்வையுடையதாக மார்க்சியத்தை விரிவுபடுத்திப் புரிந்து கொள்ள முடியும்.
திருவள்ளுவத்திடம் இருக்கிற அறவுணர்ச்சியையும் ஒப்புரவிய உணர்ச்சியையும் எவ்வாறு மார்க்சியத்தின் உள்ளடக்கமாக அமைத்து விளங்கி கொள்ள முடியுமோ, அவ்வாறே அம்பேத்காரிய பெரியாரியத்திடம் இருக்கிற பார்ப்பனிய, சாதிய எதிர்ப்புக்குரிய அரசியல் தெளிவையும் மார்க்சியக் கருத்துகளோடு பொருத்தி விளங்கி கொள்ள வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இன்னும் சொன்னால் இந்தியாவில் உள்ள மார்க்சியக் கருத்தாளர்களிடம் அத்தகைய அரசியல் தெளிவு இருந்திடவில்லை.
அவர்களிடம் அடிப்படையில் இரண்டு நிலைகளில் தெளிவின்மை இருந்தது. இருக்கிறது.
அதனால் அவர்களால் முன்னேறி நகர இயலவில்லை.
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டிருந்தாலும், பொதுவுடைமைக் கட்சிகள் தொடக்க நிலையில் வளர்ந்த அளவு கூட பிறகு முன்னேறிடவில்லை. முன்னேறி நகரவில்லை என்பது மட்டுமின்றி எண்ணற்ற பின்னடைவுகளும் அவற்றிடம் ஏற்பட்டன.
அதற்குக்காரணமாக நடைமுறைப் பிழைகளையே கருத்தில் கொண்டனரே அல்லாமல், கோட்பாட்டுப் பிழைகளை, செயல்திட்டப் பிழைகளைத் திறனாய்வு செய்து கொள்ளவில்லை. அவற்றில் பிழைகள் இருப்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.
இந்தியப் பொதுவுடைமையரின் இரு பெரும் பிழைகளான அரசியல் கணிப்புகள் குறித்து விரிவாகப் பேசியாக வேண்டும். அதில் முதன்மையானது அவர்களின் இந்தியாவைப் பற்றிய அரசியல் மதிப்பீட்டுப் பிழையே.
இந்தியாவைத் தேசம் என்று அவர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர், மதிப்பிட்டும் வருகின்றனர்.
வகுப்பு (வர்க்க)ப் போராட்டத்திற்காகப் பாட்டாளி வகுப்பை முழுமையாக அணிதிரட்டுகிற முனைப்பைக் காட்டிலும், அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற இந்தியத்தேசத்தின் பாதுகாப்பையும் ஒற்றுமையையுமே முதன்மையாகக் கருதுகின்றனர்.
இந்தியப் பாதுகாப்பு என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்திய அதிகார வகுப்போடு பல நேரங்களில் இணங்கியும் வந்திருக்கின்றனர்.
"தேச ஒற்றுமை என்பது காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி யாக இருந்தாலும் சரி சந்தர்ப்பவாத இடதுசாரி அல்லது புரட்சிகர கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, அனைத்து முக்கிய அரசியல் நீரோட்டங்களும் நிச்சயமாகக் கவலை கொள்கிறதோர் முக்கிய விசயமாகும். முக்கிய விசயமென்பது, பல்வேறு நிலைப்பாடுகளுக்கிடையில் கறாரான எல்லைக் கோட்டை வரைந்து கொள்வதாகும்."
— என்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.இல.) தன் கட்சி ஆவணத்திலேயே குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியர்கள் தங்களுக்குள் பல கூறுகளில் வேறுபட்டிருந்தாலும் அனைவருமே இதே கருத்துடையவர்களே.
இந்தியா என்பது பிரித்தானிய வல்லரசாலேயே அதன் ஆட்சி அதிகாரத் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு முன்பு ஆண்ட அரசர்கள் காலங்களிலோ, நிலவுடைமை அரசுக்காலங்களிலோ இந்தியா உருவாக்கப்படவுமில்லை, ஒரே ஆட்சி அதிகார அரசாகக் கட்டி ஆளப்படவுமில்லை.
பிரித்தானிய வல்லரசால்தான் பிரிட்டிஷ் இந்திய அரசு உருவாக்கப்பட்டது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலைகளில் இருந்த பல்வேறு மொழி இன மக்களை யெல்லாம், அவர்களின் நிலவுடைமை அரசுகளையெல்லாம் தங்கள் அதிகாரத்தின் கீழ் அடக்கி இணைத்துப் பிரிட்டிஷ் இந்திய அரசை உருவாக்கினார்கள்.
பிரித்தானிய வல்லரசு இங்கிருந்து போகிற போது, பிரிட்டிஷ் முதலாளிகளின் மூலப்பணக் குவியலில் இருந்த தொழில் நிறுவனங்களோ அவற்றின் சுரண்டல்களோ போய்விடவில்லை. பன்னாட்டு முதலாளிய மூலப்பணச் சுரண்டல்களுக்கு இடம் அமைத்துத் தருகிற படியான ஒப்பந்தத்தின் கீழேயே அது வெளியேறியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்தியப் பொதுவுடைமையர்கள் அரசியல் அளவில் இந்தியா விடுதலை பெற்றதாகக் கொண்டாடினர்.
மார்க்சிய நெறியினராக இல்லாத பெரியாரே பிரித்தானியரிடம் இருந்து பெற்றது விடுதலை இல்லை என்றும், அது இழவு நாள் என்றும் அறிவித்திட, இந்தியப் பொதுவுடைமையாளர்கள் விடுதலை பெற்றதாகப் பெருமளவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிரித்தானியக் கொள்ளைக்காரனிடமிருந்து, இந்தியப் பார்ப்பனிய பனியா கூட்டத்திற்கு அரசியல் அதிகாரம் கைமாறியதை அவர்கள் அம்பலப்படுத்தவில்லை.
(மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியினர் சில காலம் அதை மறுத்தாலும் பின்னர்க் இந்திய விடுதலைபெற்றதாகவே அந்நாளைக் கொண்டாடி வருகின்றனர். சில இந்திய மா.இல. கட்சியினரும் அதே நிலைப்பாட்டோடேயே உள்ளனர்)
1947 இந்தியா விடுதலை பெற்றதான அறிவிப்புக்கு முன்புவரை, நில ஆளுகைக்குரிய தேசியப் (நன்கு அமைந்துள்ள எந்த ஒரு) பகுதிக்கும் இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகும் உரிமை உண்டு என்று இ.பொ.க அறிவித்திருந்தது.
“தனது தாயகமாகத் தொடர்ச்சியான பகுதி, பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுவான மொழி, கலாச்சாரம், மனவியல் அமைப்பு மற்றும் பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட இந்திய மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் விரும்பினால் பிரிந்து செல்லக்கூடிய உரிமையுடன். சுதந்திர இந்திய ஒன்றியத்திலோ அல்லது கூட்டமைப்பிலோ ஒரு சுயாட்சி மாநிலமாக இருக்கும் உரிமை உடைய தனியான தேசிய இனமாக அங்கீகரிக்கப்படும்.”
என்பதாக இ.பொ.க. 1942ஆம் ஆண்டு செப்டம்பர் நடுவக் குழுத் தீர்மானம் கூறுவதாக (1994-ஆம் ஆண்டு பிப்பிரவரியில் வந்த) ‘மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் பெருமைமிகு வரலாறு’ நூலுள் அதன் அப்போதைய பொதுச்செயலர் அர்கிசன் சிங் சுர்சித் கூறியிருக்கிறார்.
ஆனால், மொழி மாநிலங்களின் தேசிய அடையாளத்தைப் பெறுவதற்குக் கூட, அதாவது காசுமீரிகள் தங்களைக் காசுமீரிகள் என்றும், பஞ்சாபியர்கள் தங்களைப் பஞ்சாபியர்கள் என்றும், மலையாளிகள் தங்களை மலையாளிகள் என்றும், தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்றும் பதிந்து கொள்வதற்குக் கூடப் பொதுவுடைமைக் கட்சிகள் கோரிக்கை வைத்ததோ, போராடியதோ இல்லை. தங்களை இந்தியர்கள் என்று இல்லாத தேசிய அடையாளத்தை இந்திய அதிகார வகுப்பு அனைவர்மீதும் திணித்து வருவதை அவர்கள் எதிர்த்திடவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தின்படி அனைவரும் இந்தியக் குடி மக்களாக இருக்கமுடியும், ஆனால், இந்தியர் என்பதே அனைவரின் தேசிய அடையாளமாகத் திணிப்பது என்பது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்?.
இவ்வாறு, ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான அடையாளத்திற்கான கோரிக்கையைக் கூட இந்தியப் பொதுவுடைமையர்கள் முன்வைப்பதில்லை.
இந்தியாவிற்குள் உள்ள தேசங்களின் வேறுபாடுகள் மிக அதிகப்படியானவை. ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் செர்மனிக்கும் பிற நாடுகளுக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளைவிட இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள காசுமீரத்திற்கும், பஞ்சாப்புக்கும், நாகலாந்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மற்றுமான தேசங்களுக்கும் இடையே அனைத்து நிலைகளிலும் வேறுபாடுகள் அதிகம்.
பல வேறுபட்ட இன மக்களை ஒரே அரசு அதிகாரத்தின் கீழ் அடக்கி வைத்து, அவற்றின் அடையாளங்களை, உரிமைகளை அழித்து வருவது தான் இந்திய அரசின் அதிகாரப் போக்காக இருந்து வரும் நிலையில் இந்தியாவை ஒரு தேசம் என்றோ, ஒரு நாடு என்றோ அடையாளப்படுத்துவதும், ஏற்றுக்கொள்வதும் அதிகாரப் போக்குடையதும் அல்லது அதிகார வகுப்பின் கீழான அடிமைப் போக்குடையதுமே ஆகும்.
இந்த நிலையில், இந்தியாவுக்கென்று பொதுவுடைமைக் கட்சியை உருவாக்கியதே இந்தியாவை ஒரு தேசமாக அல்லது நாடாக ஏற்றுக்கொண்டதே இந்திய அதிகார வகுப்போடு இணைந்து சிந்திக்கிற அடிமை அரசியலாகவே இருக்கிறது.
பிரித்தானிய இந்தியாவில் உள்ளடக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பல தேச நிலப்பரப்புகளை அன்றைக்கு இந்தியா என்று அடையாளப்படுத்தியிருந்தது இந்திய அதிகார வகுப்பு. பின்னர் அவையெல்லாம் பிரிந்து போன பிறகும் எஞ்சிய பகுதிகளும், மேலும் பல பகுதிகளும் வன்மையாக இணைக்கப்பெற்று அவற்றை இந்தியா என்று அழைத்தது அதிகார வகுப்பு.
இந்தியப் பொதுவுடைமையர்களும் அதிகார வகுப்புகள் சுட்டிக் காட்டுகிற இந்திய வரைபடத்தையே ஏற்றுக்கொண்டு 1925 தொடங்கி மாறி மாறி அமைந்த இந்திய நிலப்பரப்பை இந்திய அதிகார வகுப்புக்கு இணங்கி இவர்களும் அடையாளப்படுத்தி வருகின்றனர். ஆக, தேசம் என்பது எது என அதிகார வகுப்புகள் அடையாளப்படுத்துவதைத்தான் பொதுவுடைமையர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், பொதுவுடைமையர்களுக்குத் தேசம் பற்றியான அரசியல் மதிப்பீடு இல்லை என்றும், இந்திய அதிகார வகுப்போடு இணைந்து கொண்டு இந்தியாவை ஒரு தேசமாகவே மதிப்பிட்டு வருவதும் வெளிச்சமாகிறது.
இந்தோசீனப் பொதுவுடைமைக் கட்சியில் உள்ளடங்கியிருந்த இலாவோசு, கம்போடியா, வியட்நாம் - ஆகிய தேசங்கள் மீளாய்வு செய்து இலாவோசு பொதுவுடைமைக் கட்சி, வியட்நாம் பொதுவுடைமைக் கட்சி, கம்போடியா பொதுவுடைமைக் கட்சி என்று அமைத்துக் கொண்டு முன்னெடுத்ததன் பிறகு தான், அங்கெல்லாம் புரட்சிவய மாற்றங்கள் உருவெடுத்தன என்பதை வரலாற்றில் பார்க்கிறோம்.
அப்படியான மீளாய்வை இந்தியப் பொதுவுடைமையர்கள் இன்று வரை செய்து கொள்ளவில்லை.
எம்.என்.இராய் தொடங்கி நம்பூதிரிபாடு என எல்லாரும் இந்தியாவை எந்த அளவில் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றும், அம் மதிப்பீடுகளில் தேசிய இனங்களின் அடையாளங்களும் உரிமைகளும் எந்த அளவு அடையாளம் இல்லாமல் இருக்கின்றன என்றும் இந்தியப் பொதுவுடைமையர்கள் மீளாய்வு செய்தாக வேண்டும்.
இந்தியக் குமுகம்(சமுகம்) என இந்திய அளவில் ஒரே குமுக (சமுக) அமைப்பு இருப்பதாகவும், இந்தியப் பண்பாடு என ஒரே பண்பாடு இருப்பதாகவும் மதிப்பிடுவதே முதல் பெரும் அரசியல் பிழை.
அப்படியான இந்தியக் குமுகத்தை(சமூகத்தை) ஒற்றைப் பொருளியல் அளவிலும் அவர்களின் மதிப்பீட்டுமுறைதான் மார்க்சியக் கண்ணோட்டம் எனில் அக் கண்ணோட்டம் அதிகார வகுப்பின் பகுப்பாய்வுக் கண்ணோட்டமாகவே இருக்கிறது என்பதையும் இந்தியப் பொதுவுடைமையர்கள் மீளாய்வு செய்தாக வேண்டும்.
அவர்கள் எழுதிய இந்திய வரலாற்று நூல்கள் ஆரியப் பார்ப்பனிய முன்வைப்புகளையே இந்தியாவின் வரலாறு என்றும், வேத புராணங்களின் உள்ளடக்கங்களையே வரலாறாக ஏற்றுக் கொண்ட நிலையிலுமே உள்ளன.
ஏசு.ஏ.டாங்கே எழுதிய பண்டைய கால இந்தியா முழுக்க முழுக்க வேதங்களின் வழிப்பட்ட ஆரிய வாழ்வியல் முறைகளையே இந்திய வரலாறாக மதிப்பிடுகிற ஆரியப் பார்ப்பனிய மயக்கம் கொண்டது. குமுக வரலற்றியல் ஆய்வும் எவ்வகையிலும் இல்லாமல் பொய்களையும், பாணினியின் அஷ்டாத்தியாயியையும், கௌடில்யனின் அர்த்தசாத்திரத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது.
நம்புதிரிபாடு-வின் இந்திய வரலாறு ஆரியப் பார்ப்பனியச் சார்புடைய அளவிலேயே இந்தியாவை மதிப்பிடுவதிலும், அதையே வேதங்களின் நாடு - என அடையாளப்படுத்தி நூலை உருவாக்கி வெளிப்படுத்தியிருப்பதிலும் இயங்கியல் தன்மையில் வரலாற்றியல் ஆய்வற்றநிலையிலேயே உள்ளன.
மொழி பற்றிய, குறிப்பாகச் சமசுகிருதம் பற்றிய கருத்துகளிலும் இந்தியப் பொதுவுடைமையர்களிடம் இயங்கியல் அறிவியல் பார்வை இல்லை என்பதை அவர்களின் பல நூல்களில் இருந்து அறிய முடிகிறது.
நம்பூதிரிபாடு வெளியிட்ட இந்திய வரலாறு நூலில்,
“இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் சமஸ்கிருதம் அடைந்த ஒப்பற்ற வளர்ச்சி அதனை இந்தியா முழுவதினுடையக் கலாச்சார வாழ்க்கையின் மையமாக ஆக்கியது. உலகப் புகழ்பெற்ற காளிதாசன் உள்பட ஏராளமான கவிஞர்களும் நாடக ஆசிரியர்களும் அதனை உலகம் முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற மொழிகளில் ஒன்றாக ஆக்கினர். அந்த மொழிக்கு விஞ்ஞான ரீதியிலான இலக்கணம் இயற்றப்பட்டது. கணிதம், வான சாஸ்திரம், மருத்துவம் முதலிய விஞ்ஞானத் துறைகளிலும் தத்துவச் சிந்தனையின் பல்வேறு துறைகளிலும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. பாலியை ஒரு இலக்கிய மொழியாக வளர்த்த ஷைன, புத்த மதபோதகர்களும், செந்தமிழை ஒரு இலக்கிய மொழியாக்கியக் கவிஞர்களின் பரம்பரையினரும்கூட இந்தியா முழுவதிற்குமான கலாச்சார மொழியாக(சமஸ்கிருதத்தை) ஏற்றனர்.”
என்ற அவரின் கருத்துகள் எந்த அளவு மொழி பற்றிய, மொழிகளின் எழுத்து, இலக்கணம் பற்றியான, அவற்றின் கால வளர்ச்சி பற்றியானவற்றில் குறைபார்வைவோடு இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆரியப் பார்ப்பன அதிகார வகுப்பினர் அடையாளப்படுத்தி இருக்கிற பொய் புரட்டுப் பெருமைகளையே இவரும் எடுத்து எழுதியிருப்பது எந்த அளவில் மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டமாக இருக்க முடியும்.
இத்தகைய ஆய்வுகளை மீளாய்வு செய்யாமல் இருக்கும் வரை இந்தியப் பொதுவுடைமையர்களால் மக்கள் குமுகத்தில் புரட்சிவய மாற்றத்திற்கான செயல் திட்டத்தில் எப்படி முன்னுக்கு நகர முடியும்?
- பொழிலன்