ஈரோட்டு இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விசயநகரப் பேரரசுக் காலத்தில் தூய்மைப் பணிக்காக வந்தவர்கள், அல்லது அழைத்து வரப்பட்டவர்களே அருந்ததியர்கள் - என்றும், அதற்கு முன்னர் தூய்மைப் பணி செய்து கொண்டிருந்த தமிழர்கள் அப்பணிகளை விசயநகரப் பேரரசுக்குச் செய்ய மறுத்ததால் அருந்ததியர்கள் அழைத்து வரப்பட்டனர் என்றும் பேசிய பேச்சையொட்டித் தன் புனைவுக் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன் அருந்ததியர்கள் தமிழர்கள் அல்லர் என்பதான கருத்தையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்..

அவரும் அவரின் நாம் தமிழர் கட்சியும் தமிழ்நாட்டிற்குள் பிறப்பால் தமிழர்களாக இருப்பவர்கள் மட்டுமே வாழலாம், ஆளலாம் மற்றவர்கள் வாழ மட்டுமே செய்யலாம் ஆனால் ஆள முடியாது!.. - என்ற கருத்தைக் கொள்கையாக உடையவர்கள்..

அந்த வகையில்தான் அருந்ததியர்களை வந்தவர்கள், அல்லது விசயநகர ஆட்சியர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், அவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும், எனவே அவர்கள் தமிழ்நாட்டில் வாழ மட்டுமே தகுதி உடையவர்கள், ஆளுவதற்கான தகுதி அவர்களுக்குக் கிடையாது என்கிற கருத்தில் நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கிறது..

நாம் தமிழர் கட்சியின் இந்த அறிவிப்பை, கருத்தை மிகப்பெரும் மன உளைச்சலோடு மிகக் கடுமையாக மறுக்கும் வகையில் அருந்ததியர்கள் தமிழர்கள்தாம் என்று அருந்ததியர்களின் அமைப்புகள் இயக்கங்கள் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைச் செய்து தங்களின் மறுப்புக் கருத்தைப் பதிவு செய்து வருகின்றன.

அருந்ததியர்கள் தமிழர்கள்தாம் என நிறுவுவதற்காக ஆங்காங்கே எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களை, நூல்களைத் தேடிப் பதிவு செய்கின்றனர்..

அத்தகைய கருத்துகளில் எது சரியானது என்று முடிவு செய்வதற்கு முன்பு அந்தக் கேள்வியே எந்த வகையில் தவறானது அஞ்சத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்..

பிறப்பின் அடிப்படையில் ஒரு மொழி இனத்தினைச் சார்ந்தவர்கள்தாம் ஒரு தேசத்தில் வாழ வேண்டும் அல்லது ஆள வேண்டும் என்கிற வகையில் உலகில் எந்த நாடும் இருப்பதில்லை..

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஒபாமா அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்தானேயன்றி அவர் கென்ய இனத்தைச் சார்ந்தவர்.

பிற மொழி இனத்தினர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று சொன்னால் சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ மொரிசியசிலோ அமைச்சர்களாகத் தமிழர்கள் பொறுப்பேற்பது என்ன வகையில் ஞாயமானது என அக்கருத்துடையவர்கள் எண்ண வேண்டும்..

கருநாடகாவில் `மேயரா`கவும், மும்பை, கேரளம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரப் பொறுப்புகளிலும் தமிழர்கள் இருக்கக் கூடாது என்றல்லவா சொல்ல வேண்டி வரும்.. அவ்வாறு இருக்கிற தமிழர்களை நீக்கம் செய்யவல்லவா இங்குள்ள அக்கருத்துடையவர்கள் போராடியாக வேண்டும்..

அவை ஒரு புறம் இருக்க.. இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு என்பதை முதலில் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒருவர் ஓர் இனத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்துவதற்கு மொழி ஒன்று மட்டுமே போதுமானது. ஆனால் ஒருவர் ஒரு தேசிய இனத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்துவதற்கு மொழி மட்டுமே போதுமானதன்று..

பொதுவான மொழி, பண்பாடு, அரசியல், பொருளியல், நீண்ட நெடிய வரலாறு இவையெல்லாம் தேவைப்படுகின்றன..

பாஷகவின் தலைவர் அண்ணாமலையையோ, அல்லது வானதி சீனிவாசனையோ, உலக அளவில் பணக்காரர்களின் வரிசையில் இருக்கிற சிவ நாடாரையோ, இந்திய அதிகார வகுப்பின் ஆண்டைகளாக இருக்கும் தமிழ்த் தாய் மொழியினர் பிறரையோ தமிழர்கள் என்று பெருமை கொள்ள முடியுமா?

அவர்களெல்லாம் மொழியால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாக இருக்கலாம்.. ஆனால் இந்திய அரசு அதிகாரத்தின் கீழும், வல்லரசிய கார்ப்பரேட் முதலாளிய அதிகாரங்களின் கீழும், பார்ப்பனிய - சாதிய - மதவாத அதிகாரங்களின் கீழும் அவர்கள் தங்களைத் தமிழ்த் தேசிய இனத்தினராகக் கருதுவதோ பதிவு செய்திடுவதோ இல்லை..

அவர்களெல்லாம் தங்களை இந்திய அதிகாரங்களோடு, வல்லரசியச் சுரண்டல் அதிகாரங்களோடு இணைத்துக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர். அவர்களேகூடத் தங்களைப் பாரதத்தினர் என்று சொல்லிக் கொள்கிறார்களேயன்றி தமிழர்கள் என்று பறைசாற்றுவதில்லை.. பாரதம்.. பாரதம்.. - என்று மூச்சுவிடும் அவர்களுக்குத் தமிழர்கள் - தமிழ்நாடு என்றாலே மூச்சு முட்டுகிறது..

அவர்களெல்லாம் தமிழ்த் தேசியத்தை, தமிழ்த் தேசிய அடையாளத்தை, தமிழ்த் தேசிய அரசியலை, தமிழ்த் தேசியப் பொருளியலை, தமிழ்த் தேசிய வாழ்வியலை, தமிழ்த் தேசிய வரலாற்றை, தமிழ்த் தேசியப் பண்பாட்டை ஏற்காத நிலையில், அவர்கள் எவரையும் நாம், தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள இயலாது..

ஆக, எவர் எவர் தமிழ்த் தேசிய அடையாளங்களை, தமிழ்த் தேசிய வாழ்வியலை, தமிழ்த் தேசிய அரசியலை, தமிழ்த் தேசியப் பொருளியலை, தமிழ்த் தேசிய வரலாற்றை, தமிழ்த் தேசியப் பண்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை மட்டுமே தமிழர்கள் என்று அடையாளப்படுத்த முடியும்..அணி சேர்க்க முடியும்..

அவ்வகையில்தான் தமிழ்நாட்டில் நீண்ட நெடிய காலம் உழைப்போடு பிணைந்து தன் உழைப்பை இந்தத் தமிழ்த் தேசத்தின் நலனுக்காக ஈடுபடுத்துபவர்களோ அவர்களே தமிழர்களாக இருக்க முடியும்..

தமிழ்நாட்டின் கனிம வளங்களைச் சூறையாடிச் செல்லுகிற, தமிழ்நாட்டின் வளங்களைச் சூறையாடிச் சென்று வணிகம் செய்து கொழுக்கிற, தமிழ்நாட்டு மக்களின் உழைப்பைப் பறித்து அண்டை அயல் நிலங்களுக்குக் கொண்டு சென்று கொழுக்கிறவர்களை எந்த வகையிலும் தமிழர்கள் என்று ஏற்க முடியாது..

எனவே, தங்களைத் தமிழ்த் தேசிய இனத்தினர் என்று ஏற்றுக் கொள்கிறவர்கள் எவரோ, அத் தேசிய இனத்தின் எவ்வகை நலன்களும் கெட்டுவிடாத படி பாதுகாத்துக் கொள்ளுகிறவர்கள் எவரோ அவர்களே தமிழர்கள்..

இத்தகைய புரிதல்களில் இருந்து பிற நாடுகளில், பிற தேசங்களில் உள்ள தாய்மொழித் தமிழர்களை எவ்வாறு மதிப்பிடுவது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்..

ஒரு மொழி மக்களை மட்டுமே கொண்டிருந்த பழங்காலத் தேயங்கள், நாடுகள்கூட அண்டை மொழி இனத்தினர் வந்து வாழ்ந்த நிலைகளைக் கொண்டிருந்தன என்பதை அறியலாம். அவ்வாறு இருக்க இன்றைக்கு உலகெங்கும் வாழ்கிற எல்லா தேசங்களிலும் நாடுகளிலும் சிறுபான்மை அளவில் அண்டை மொழித் தேசத்தினர் இணைந்து வாழவே செய்கின்றனர்..

300, 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மலையகத்திற்கும், மொரிசியசிற்கும், மராட்டியத்திற்கும், இன்ன பிற நாடுகளுக்கும் சென்று வாழத் தொடங்கி, ஆங்காங்கேயே இணைந்து கலந்து உழைத்து அந்தந்த நாடுகளை மேம்படுத்தி நிறுத்தி வாழ்ந்து வருகின்றனர்.. அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அங்கு சென்று வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களின் உழைப்பும் பெரும்பங்குடையவை.

மலேசியத் தேசத்தின் தேசிய இன உரிமைகள் அனைத்தும் அங்குள்ள தமிழர்களுக்கும் உண்டு என்பது போல்.. மொரிசியசிலும், மராட்டியத்திலும், கர்நாடகாவிலும், கேரளத்திலும் இன்ன பிற தேசங்களிலும் சென்று தம் உழைப்பை முழுவதும் கொடுத்துப் பணியாற்றிவருகிற தமிழர்களுக்கும் அங்கெல்லாம் அத்தகைய உரிமைகள் உண்டு, இல்லையேல் அவற்றைப் போராடிப் பெற்றாக உரிமை உண்டு.

எனவே பிற தேசங்களில் நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே குடியேறி உழைத்து அங்கேயே தம் வாழ்நிலையை அமைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் தாய் மொழியினர் மொழி அளவில் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் தேசிய அளவில் அந்தந்தத் தேசத்தின் இன மக்களாகவே இருக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்..

அதேபோல்தான் விசயநகரக் காலங்களில் தமிழ்நாட்டில் குடியேறி இங்கேயே தம் வாழ்நிலையையே, இம் மண்ணின் அரசியலையே, பொருளியலையே அமைத்துக் கொண்டிருக்கிற மக்களுள் பலர், தங்கள் வீட்டளவில் தெலுங்கு, கன்னட மொழிகளை ஏதோ ஒரு வகையில் திரித்துப் பேசினாலும் அவர்கள் தேசிய இன அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தினராகும் வகையில் - தமிழர்களாகவே இருக்க முடியும்.

அவர்களுள் சிலருக்கு இல்ல மொழி தமிழாகவே இருக்க, மேலும் சிலர் தங்களைத் தங்களின் இல்ல மொழி அடிப்படையில் தெலுங்கர்கள் என்று கூறிக் கொண்டாலும் அது இல்ல மொழி அடிப்படையில் பிழையானதும் அன்று..

கருநாடகாவில் நீண்ட நெடுங்காலம் வாழுகிற கருநாடகத் தேசிய உரிமைகளுக்குப் போராடுகிற தாய்மொழித் தமிழர்கள் தங்களைக் கர்நாடகத் தேசிய இனத்தினர் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளுகிற அதே போது மொழி வழித் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வது எப்படி பிழை இல்லையோ அப்படியே தமிழ்நாட்டில் நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே வந்து உழைப்பிலும், வாழ்விலும் தங்களைத் தமிழ்நாட்டோடு பிணைத்துக் கொண்டவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் வழித் தமிழர்களாகவே கருதப்பட வேண்டும்..கருதப்பட முடியும்.., அவர்களுள் சிலர் இல்ல மொழியாகப் பிற மொழி பேசுகிற வகையில் அவர்கள் இல்ல மொழியடிப்படையில் அம்மொழியினராகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் பிழை இல்லை....

எதையும் அறிவியல் கண்ணோட்டத்தோடும் இயங்கியல் கண்ணோட்டத்தோடும் அளவிடப் பழகுவதே தமிழ்த் தேசிய அரசியலை எழுச்சியோடு வளர வைக்கும்.

-  தமிழக மக்கள் முன்னணி

Pin It