கி.வெங்கட்ராமன் அவர்களின் ‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்; என்னும் நூல் ‘பன்மைவெளி’ வெளியீடாக வந்துள்ளது. தனது நூலில் கி.வெங்கட்ராமன் இன்று உலகின் உயிர் வாழ்க்கை அனைத்தையும் அச்சுறுத்தி வரும் சூழலியல் பிரச்சினைகளை விளக்குகிறார். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சந்தைக்கான முதலாளிய உற்பத்திமுறை மனித வாழ்க்கை மீதும் இயற்கை மீதும் ஏற்படுத்தி வரும் பேரழிப்புகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.

முதலாளிய வர்க்கத்தின் இலாப வேட்டைக்கு ஏற்ற வகையில் தாராளமய-உலகமயப் பொருளியல் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் இந்தியா உட்படப் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் ஒரே திசையில் பயணிக்கின்றன என்றும், அதற்கு இசைவான நுகர்வு வெறியும் அரசியல், பண்பியல் கருத்துகளும் கட்டமைக்கப்படுகின்றன என்றும் சரியாகவே விளக்குகிறார் ஆசிரியர்.

ki venkatraman book 420இப்புவிக் கோளத்தை சூழலியல் பேரழிப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காக முன்வைக்கப்படும் வாதங்களான சந்தைப் பொருளியலுக்குள்ளேயே மாற்றுத் திட்டம், அணு மின்சாரம், மாற்று வாழ்முறை, தொழில்நுட்பத் தீர்வு, சூழலியல் அரசியலிவாதம் ஆகியவற்றைத் தருக்கரீதியாக ஆசிரியர் மறுத்துரைக்கிறார். சூழலியல் பேரழிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் தாரளமய முதலாளியமும் முதலாளிகள்-அரசதிகாரம் இணைந்த பொறியமைவும் நீடிக்கும் வரை மேலே குறிப்பிடப்பட்ட மாற்று நடைமுறைகளால் உலகைக் காப்பாற்ற முடியாது என மிகச் சரியாகவே விளக்குகிறார் ஆசிரியர்.

குமரப்பா முன்வைக்கும் காந்தியப் பொருளியல் கவனத்திற்கு உரியது என ஆசிரியர் கருத்துரைக்கும் அதே சமயத்தில் குமரப்பா பின்பற்றும் காந்தியம் வருணாசிரம சனாதனத்தைப் பாதுகாக்கும்படி வலியுறுத்துகிறது என்றும், வல்லரசு இந்தியாவும் குமரப்பாவின் தற்சார்பு கிராமும் ஒரு ஆட்சியின் கீழ் இணைந்திருக்க முடியாது என்றும் என்று கூறி அதை ஏற்க மறுத்து விடுகிறார்.

பசுமை மார்க்சியம் என்ற பெயரில் மார்க்சின் வளமான சூழலியல் கருத்துகளை தொகுத்து அளிக்கும் ஆசிரியர் மார்க்சியமும் வளர்ச்சிவாதம் என்ற குறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கூறி அதையும் மறுத்துவிடுகிறார். இறுதியாகத் தமிழ் தேசியமே தீர்வு என்ற தனது கருத்தை விக்கிறார்.

இந்த நூலில் மார்க்சியம் பற்றிய அவருடைய விமர்சனங்கள் மீதும், அவர் முன் வைக்கும் தமிழ்த் தேசியத் தீர்வு மீதும் எனது கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.

‘மார்க்ஸ் பயன் மதிப்பில் பொதிந்துள்ள இயற்கைப் பொருளுக்கு எந்த வித மதிப்பும் வழங்கவில்லை. எனவே அடுத்தடுத்த சந்தைப் பரிமாற்றத்தின்போது உருவாகும் மதிப்பில் இயற்கைக்கு இடமில்லாமல் போகிறது; உபரி மதிப்பைக் கணக்கிடுவதில் உழைப்பு சக்தி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது; இயற்கையை உபரியாக உறிஞ்சுவது கணக்கில் கொள்ளப்படவில்லை. அதன் காரணமாகவே ‘இயற்கையை வெல்வது’ ‘இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவது’ ‘இயற்கையை மனிதனுக்குக் கீழ்படியச் செய்வது’ போன்ற கருத்தியல்கள் மார்க்சிய முகாமிலேயே வளர்வதற்கு அடிப்படை வாய்ப்புகள் மார்சியத்திலேயே இருந்தன’ என்ற விமர்சனத்தை ஆசிரியர் மார்க்சியத்தின் மீது வைக்கிறார்.

செல்வத்தின் மூலாதாரமாக உழைப்பை மட்டும் மார்க்ஸ் கருதவில்லை. செல்வத்தின் இன்னொரு மூலாதாரமாக இயற்கையையும் மார்க்ஸ் கருதினார். ‘உழைப்பு என்பது பொருள்வகைப்பட்ட செல்வத்தின், அதாவது, அது உற்பத்தி செய்யும் பயன்மதிப்புகளின் ஒரே ஆதாரமாக இல்லை. வில்லியம் பெட்டி கூறுவது போல உழைப்பு பொருள்வகைப்பட்ட செல்வத்தின் தந்தை, பூமி அதனுடைய தாய்’ என மூலதனத்தில் மார்க்ஸ் வலியுறுத்துகிறார். அது மட்டுமல்லாமல் ‘உழைப்பு சக்தி என்பது மனித உயிரியாக மாற்றப்பட்ட இயற்கையின் பொருளாகும்’ எனவும் மார்க்ஸ் கூறுகிறார். இதை விட இயற்கையின் முக்கியத்துவத்தை எவரும் வலியுறுத்தி இருக்க முடியாது.

உண்மையில் மார்க்ஸ், புவியானது இயற்கையின் இலவசமான பரிசு என்று கூறிய மால்தூசையும், பிசியொகிரட்டுகளையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் இந்த வரலாற்றை அறியாமல் மார்க்ஸ் இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என இந்த நூலாசிரியர் விமர்சிக்கிறார்.

மார்க்சினுடைய ‘மூலதனம்’ நூலின் நோக்கம் முதலாளிய மதிப்பு விதியின் கீழ் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை ஆய்வதுதான். அதில் உழைப்புச் சக்தியினால் உருவாக்கப்படும் உபரி உழைப்பு எவ்வாறு செல்வத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது என்பதை நிறுவுவதுதான். அது வெறுமனே முதலாளியப் பண்ட உறவுகளுடனும் பரிவர்த்தனை மதிப்பைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள அமைப்புடனும் இணைந்த செல்வம் பற்றிய மிகவும் குறுகிய, வரையறைக்கு உட்பட்ட கருத்தாக்கத்தையே சுட்டிக் காட்டியது. ஆனால் மார்க்சைப் பொறுத்த வரையிலும் உண்மையான செல்வம் பயன்மதிப்புகளைக் கொண்டது. அது குறிப்பான முதலாளிய வடிவத்தைக் கடந்தது என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இயற்கையின் பங்களிப்பு முதலாளிய மதிப்பு விதியால்தான் புறக்கணிக்கப்படுகிறது மார்க்சால் அல்ல. முதலாளியத்தின் கீழ் எந்தப் பொருளும் உழைப்பிலிருந்தே தன மதிப்பைப் பெறுகிறது எனக் கூறும் மார்க்ஸ் ‘கோதுமை என்ற பொருளை, பயன்மதிப்பை உற்பத்தி செய்வதில் ஒரு செயல் துடிப்பான முகவராக நிலமுள்ளது. ஆனால் அது கோதுமையின் மதிப்பை உற்பத்தி செய்வதில் எந்தப் பங்கும் கொள்வதில்லை.’ எனக் கூறும் மார்க்ஸ் எவ்வாறு முதலாளிய மதிப்பு விதி இயற்கையின் பங்களிப்பை மறுக்கிறது என விளக்குகிறார். ஆனால் ஆசிரியரோ மார்க்ஸ் இயற்கையின் பங்களிப்பை மறுக்கிறார் என ஆதாரமில்லாமல் விமர்சிக்கிறார்.

உபரி மதிப்பு முழுவதுமே உழைப்புச் சக்தியால் மட்டுமே விளைந்தது என்று மார்க்சியம் வரையறுப்பது பொருத்தமாக இல்லை என்றும், ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கும் உபரி மதிப்பில் இயற்கைக்கும் பங்கு உண்டு என்றும், இயற்கையின் பங்கை மறுப்பது சரக்கு உருவாகும் உழைப்பு நடவடிக்கையை முழுமையாக விளக்குவதாக இல்லை என்றும், உபரி மதிப்பு உருவாகும் பின்னணியைத் தெளிவுபடுத்துவதாக இல்லை என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

ஒரு பொருளின் பயன்மதிப்பை உருவாக்குவதில் இயற்கையின் பங்கை மார்க்ஸ் மறுப்பதில்லை என்றும், மேலும் இயற்கையின் முக்கியமான பாத்திரத்தை எவ்வாறு வலியுறுத்துகிறார் என்றும், பொருளின் பயன்மதிப்பைப் புறக் கணிப்பது முதலாளிய மதிப்பு விதிதான் என்றும் ஏற்கனவே நாம் பார்த்தோம்.

இயற்கை அளிக்கும் பொருளில் பொதிந்து கிடக்கும் பயன்மதிப்புதான் அது பரிவர்த்தனைப் பொருளாக மாறுவதற்கான அடிப்படை. பயன்மதிப்பு இல்லாத எந்தப் பொருளும் சந்தைக்கு வர முடியாது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் உழைப்புச் சக்தி மட்டும் உபரி மதிப்பை உருவாக்குவதில்லை; உபரி மதிப்பை உருவாக்குவதில் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கை அளிக்கும் பயன்மதிப்பும் பங்காற்றுகிறது என ஆசிரியர் கருதுகிறார்.

ஆனால் ஆசிரியர் கருதுவது போல உழைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையின் பயன்மதிப்பு உபரியைப் படைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ எடையுள்ள பஞ்சின் பயன்மதிப்பை எடுத்துக் கொள்வோம். அது நூலாக மாற்றப்படும்போது அந்த ஒரு கிலோ பஞ்சு கொண்டுள்ள பயன்மதிப்புதான் வடிவ மாற்றமடைகிறது. அது துணியாக மாற்றப்படும்போதும் அதே அளவு பயன்மதிப்புதான் வடிவ மாற்றம் அடைகிறது. இடையில் எந்தவிதமான வீணடிப்பும் இல்லை என்ற அனுமானத்தில் இந்த எடுத்துக்காட்டு கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்தப்படும் உழைப்புச் சக்தி அதற்கே உரிய உபரி மதிப்பைப் படைக்கிறது. எனவே உபரி மதிப்பின் உருவாக்கத்தில் உழைப்புச் சக்திக்குத்தான் பங்கு இருக்கின்றதே ஒழிய ஆசிரியர் கருதுவது போல பயன்மதிப்புக்குப் பங்கு இல்லை. அது உழைப்பின் நிகழ்வுப் போக்கில் மாறா மதிப்பையே கொண்டிருக்கிறது.

பயன்மதிப்பு இல்லாத எந்தப் பொருளும் சந்தைக்கு வர இயலாது. பயன்மதிப்புதான் எந்த ஒரு பண்டத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் இயற்கையினால் வழங்கப்படும் பயன்மதிப்புக்கு முதலாளிய மதிப்பின் விதிப்படி விலையை நிர்ணயிக்கமுடியாது. ஏனென்றால் அது மனித உழைப்புச் சக்தியினால் உருவாக்கப்பட்டதல்ல. உழைப்புச் சக்தி கூட மனித உயிரியாக மாற்றப்பட்ட இயற்கையின் பொருள்தான் என மார்க்ஸ் கூறுகிறார். மனித உயிருக்கு விலை மதிப்பு நிர்ணயிக்க முடியுமா? எனவே பயன்மதிப்பு விலை நிர்ணயிக்க முடியாதது. அதன் மதிப்பை பயன்பாட்டில்தான் உணர முடியும்.

“உபரி மதிப்பு என்பது உபரி உழைப்பு நேரமும் மிகையாக உறிஞ்சப்பட்ட இயற்கையும் சேர்ந்ததுதான். இங்கு மிகையாக உறிஞ்சுவது என்பது புதுப்பிக்க முடியாத அளவு உறிஞ்சுவது, மீட்க முடியாத அளவு மாசுபடுத்துவது ஆகியவற்றைக் குறிக்கும்” என்கிறார் ஆசிரியர்.

இங்கு உபரி மதிப்பில் உபரி உழைப்பு நேரமும் மிகையாக உறிஞ்சப்பட்ட இயற்கையும் உள்ளது என்கிறார். பயன்மதிப்பு பொருளின் அடிப்படையாக இருந்தாலும் உழைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் பயன்மதிப்பு உபரி மதிப்பைப் படைப்பதில்லை என ஏற்கனவே நாம் பார்த்தோம். அடுத்து, உபரி மதிப்பை உருவாக்கும்போது இயற்கை மிகையாக உறிஞ்சப்படுகிறது என்கிறார். அதாவது புதுப்பிக்க முடியாத அளவுக்கு உறிஞ்சப்படுகிறது, மீட்க முடியாத அளவுக்கு மாசுபடுத்துகிறது என்கிறார். உண்மையில் உழைப்பின் நிகழ்வுப்போக்கில் இயற்கை மிகையாக உறிஞ்சப்படுவதில்லை. அதனால் சூழல் பேரழிவு ஏற்படுவதில்லை. அதற்கு அடிப்படையாக இருப்பது முதலாளிய உற்பத்தி முறைதான்.

சூழல் பேரழிவுக்கும் இயற்கையின் மீதான மிதமிஞ்சிய அழிவுக்கும் காரணமாக அமைவது இயல்பான தேவையின் அடிப்படையில் இல்லாமல் இலாபம் ஒன்றையே இலக்காகக் கொண்டும் இயங்கும் முதலாளிய உற்பத்தி முறைதான். இயல்பான தேவைகளுக்குப் பதிலாக செயற்கையான தேவைகளை உருவாக்குவது, நுகர்வுக் கலாச்சாரத்தைப் பரப்புவது ஆகியவற்றின் மூலம் பெரும் அளவில் பண்டங்களை விற்பனை செய்வது; ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தித் தொடர்ந்து சந்தையில் புதிய புதிய பொருட்களை நிரப்புவது (எடுத்துக்காட்டாக அலை பேசிகள், மகிழுந்துகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றைக் கூறலாம்) போன்ற செயல்களால் பண்டங்கள் தேவைக்கும் மேலாகச் சந்தையில் குவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலப் பொருட்களுக்காக இயற்கை பெரும் அளவுக்கு நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பொருட்கள் வெகு விரைவாகக் காலவதியாக்கப்பட்டு கழிவுப் பொருட்களாக மாற்றப்படுகின்றன. அதனால் பொருட்களின் வீணடிப்பும் பெரும் அளவு பெருகி வருகிறது. அன்றாடம் கழிவு செய்யப்படும் பொருட்களால் இந்தப் புவிக் கோளமே பெரிய குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு அரசும் இராணுவத் தளவாடங்கள், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், போர் ஆயுதங்கள் போன்றவற்றிற்காக ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவழித்து வருகின்றன. அவற்றிற்குத் தேவையான மூலப் பொருட்களுக்காக இயற்கை பூதாகரமாக அழிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சமூகத்திற்குத் தேவையற்ற வீணடிப்புகள்தான். இவ்வாறு இயற்கையைப் பெரும் அளவு அழித்து வரும் முதலாளியம் உலகமெங்கும் போரில் இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்து வருகிறது. மேலும் இத்தகைய மனித குலத்தை அழிப்பதற்குப் பயன்படும் போர்க் கருவிகளை உருவாக்க ஏராளமான மனித உழைப்புச் சக்திகளும் வீணடிக்கப்படுகின்றன. இவ்வாறு முதலாளியம் இயற்கையையும் மனித குலத்தையும அழித்து வருகிறது.

எனவே இயற்கைப் பேரழிவுக்குக் காரணாமாக இருப்பது இலாப வெறியின் அடிப்படையில் இயங்கும் முதலாளிய உற்பத்திமுறைதான். அதைப் பார்க்கத் தவறும் ஆசிரியர், உபரி மதிப்புக் கோட்பாட்டில் இயற்கை உபரியாக உறிஞ்சப்படுவதை மார்க்ஸ் கவனிக்கத் தவறியதால் இயற்கையின் அழிவுக்கு மார்க்சியத்திடமே அடிப்படை உள்ளது என்று எந்தவிதமான அடிப்படையும் இல்லாத அபத்தமான விமர்சனத்தை வைக்கிறார்.

அடுத்து, ‘இயற்கையைப் பாதுகாப்பதன் தேவை குறித்து மார்க்ஸ் ஆங்காங்கே சொல்லிச் சென்றாலும் அவரது தலையாய பொருளியல் கோட்பாட்டில் அது இடம் பெறவில்லை’ என்று ஆசிரியர் கூறுகிறார். மார்க்சின் ‘மூலதனம்’ நூல் சுற்றுச் சூழல் பற்றிய நூல் அல்ல. அது முதன்மையாக முதலாளிய உற்பத்திமுறை, முதலாளிய சமூகத்தில் செல்வத்தின் உருவாக்கம், செல்வத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் உபரி உழைப்பு போன்றவற்றை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யும் நூல். இருப்பினும் நூலில் பல்வேறு இடங்களில் முதலாளிய உற்பத்திமுறை எவ்வாறு இயற்கையையும் மனிதனையும் அழித்து வருகிறது என்று பல இடங்களிலும் சுட்டிக் காட்டுகிறார்.

‘...தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தியின் சமூக நிகழ்வுப் போக்கின் ஒன்றிணைப்பு ஆகியவற்றை மட்டும் வளர்ச்சியுறச் செய்யும் முதலாளிய உற்பத்தி அதே சமயத்தில் அனைத்து வளங்களின் உண்மையான மூலாதாரங்களாக இருக்கும் மண்ணையும் தொழிலாளியையும் அழிக்கிறது’ என்கிறார் மார்க்ஸ்.

இதன் பொருள் முதலாளிய உற்பத்திமுறையை ஒழிக்காமல் இயற்கையையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது என்பதுதான். மேலும் அவருடைய காலத்திய முதலாளிய வளர்ச்சி இயற்கையின் மீது ஏற்படுத்திய அழிவுகளைக் கண்ணுற்ற மார்க்சின் கருத்துகள் அவை. இன்றைய முதலாளிய வளர்ச்சி இயற்கையின் மீது ஏற்படுத்தி வரும் அழிவுகளைப் பார்க்கும்போது அவருடைய காலத்திய முதலாளிய வளர்ச்சி இயற்கையின் மீது ஏற்படுத்திய அழிவுகள் ஒப்பீட்டு அளவில் மிகக் குறைவானவையே எனக் கூறலாம். ஆயினும் முதலாளிய உற்பத்திமுறை இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரானது என்ற அடிப்படைக் கோட்பாட்டை அன்றே மார்க்ஸ் கொண்டிருந்தார். மார்க்சியத்தின் இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் நூலின் ஆசிரியர் இயற்கையைப் பாதுகாப்பதன் தேவை குறித்த கோட்பாடு அதில் இல்லை என ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்.

மேலும் நூல் ஆசிரியர் “இயற்கையை தனி நபர் இலாப வேட்டைக்காகச் சுரண்டுவதா, பெரும்திரள் மக்கள் நலனுக்காகச் சுரண்டுவதா என்பதாக அது (மார்க்சியம்) சுருங்கி விடுகிறது.” என்றும்,

“...வரம்பற்ற நுகர்வை மக்கள் மய்யப்படுத்த வலியுறுத்துகிறது. வரம்பற்ற வளர்ச்சியை மக்கள் மய்யப்படுத்த விரும்புகிறது” என்றும் அதனால் “வளர்ச்சிவாதம் என்ற இந்த உள்ளார்ந்த பலவீனத்திலிருந்து மீளாமல் மார்க்சியர்கள் மேற்கொள்ளும் சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறும் முதலாளியச் சுரண்டலை எதிர்ப்பதாக மட்டுமே அமையும். உருப்படியான மாற்று உற்பத்தி முறையை –வாழ்வியல் வழியை- அரசியல் முறைமையைச சொல்ல முடியாமல் விழிக்க வைக்கும்” என்கிறார்.

மார்க்சியம் வரம்பற்ற நுகர்வைக் கோருகிறது என்ற ஆதாரமற்ற விமர்சனத்தை ஆசிரியர் வைக்கிறார் என்றே கூற வேண்டும். மார்க்ஸ் மனிதனின் இயல்பான தேவைகளைப் பற்றித்தான் கூறுகிறாரே தவிர எங்கும் வரம்பற்ற நுகர்வு என்ற கருத்தை வைப்பதில்லை.

நாம் ஏற்கனவே பார்த்தது போல செயற்கையான தேவைகளை உருவாக்கி வரம்பற்ற நுகர்வைக் கோருவதும், மக்களை நுகர்வு வெறியர்களாக மாற்றுவதும் இலாபத்தைப் பெருக்க வேண்டும், மூலதனத்தைப் பெருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்பட்டு வரும் முதலாளிய உற்பத்தி முறைதான்.

முதலாளி என்பவன் மூலதனத்தின் ஆளுருவம் என்கிறார் மார்க்ஸ். மூலதனம்தான் முதலாளியை இயக்கி வருகிறது, ஆட்டிப் படைத்து வருகிறது. மூலதனம் ஒவ்வொரு நிமிடமும் இலாபத்தைப் பெருக்கித் தன்னை வளர்க்கச் சொல்லி முதலாளியை ஆட்டிப் படைத்து வருகிறது. மூலதனத்தைப் பெருக்குவதற்காகவே கடுமையான போட்டியில் முதலாளியம் மனித உழைப்பைக் கடுமையாகச் சுரண்டுகிறது. இயற்கையைப் பேரளவில் அழித்து வருகிறது. இவ்வாறு மனிதனையும் இயற்கையையும் அழித்து வரும் முதலாளிய உற்பத்தி முறையை வீழ்த்தாமல் மனித குலத்தையும் இயற்கையையும் காப்பாற்ற முடியாது. இதைத்தான் மார்க்சியம் கூறுகிறது.

ஆனால் உருப்படியான மாற்று உற்பத்திமுறை மார்க்சியத்திடம் இல்லை எனக் குற்றம் சுமத்துகிறார் ஆசிரியர். அவர் மார்க்சியத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே அது காட்டுகிறது. மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளிய உற்பத்தி முறையை ஒழிக்கக் கோருகிறது மார்க்சியம். மூலதனத்தை ஒழிக்காமல் கூலி உழைப்பை ஒழிக்க முடியாது; முதலாளியத்தையும் ஒழிக்க முடியாது. மூலதனம் தனி முதலாளிகளின் வடிவில் இருந்தாலும் சரி, அல்லது அரசு முதலாளியம் என்ற வடிவில் இருந்தாலும் சரி, பரிவர்த்தனை மதிப்புகளை உருவாக்குவதும், அதன் மூலம் இலாபத்தை மென்மேலும் அடைவதும் என்ற மூலதனத்தின் குறிக்கோளின் அடிப்படையிலேயே உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

பரிவர்த்தனை மதிப்புகளை உருவாக்கும், அதாவது இயல்பான தேவைக்கு அல்லாமல் இலாபத்திற்காகப் பொருட்களை உருவாக்கும் முதலாளிய உற்பத்தி முறைக்குப் பதிலாக இயல்பான தேவைகளை நிறைவு செய்யும் உற்பத்திமுறையை, பரிவர்த்தனைகளை ஒழித்த, பயன்மதிப்புகளை மட்டும் கொண்ட ஒரு மாற்று உற்பத்திமுறையை மார்க்சியம் முன்வைக்கிறது; அதற்கு அடிப்படையான தேவையாக உற்பத்தி சாதனங்களைச் சமூக உடைமையாகக் கொண்ட உற்பத்தியாளர்களின் சுதந்திரமான ஒன்றிணைப்பை மார்க்சியம் முன்வைக்கிறது. மூலதனத்தை ஒழிப்பதன் மூலம் முதலாளிய மதிப்பு விதி ஒழிக்கப்படுகிறது. மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு ஒழிக்கப்படுகிறது. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள பிளவு ஒழிக்கப்படுகிறது.

நூலின் ஆசிரியர் முதலாளிய உற்பத்திமுறைக்கு மாற்றாக மார்க்சியம் முன்வைக்கும் சுதந்திரமான உற்பத்தியாளர்களின் ஒன்றிணைப்பு கொண்ட உற்பத்திமுறையைப் பற்றி அறியாமல், இலாப நோக்கத்தின் அடிப்படையிலான முதலாளிய உற்பத்திமுறைக்குப் பதிலாக மக்களின் இயல்பான தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் மார்க்சியம் முன்வைக்கும் உற்பத்திமுறையைப் பற்றி அறியாமல், இரண்டிற்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டை அறியாமல் மார்க்சியம் உருப்படியான மாற்று உற்பத்திமுறை பற்றிக் கூறவில்லை என்கிறார். அதனால்தான் ‘இயற்கையை தனிநபர் இலாப வேட்டைக்காகச் சுரண்டுவதா அல்லது பெருந்திரள் மக்கள் நலனுக்காகச் சுரண்டுவதா என்பதுதான் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு’ என எளிமைப்படுத்தி மார்க்சியத்தின் சாராம்சத்தை மறைத்துவிடுகிறார்.

ரசியாவிலும் சீனாவிலும் முதலாளியத் தனியுடைமை உற்பத்திமுறை ஒழிக்கப்பட்டாலும் அங்கு உற்பத்திமுறை சுதந்திரமான உற்பத்தியாளர்களின் ஒன்றிணைப்பு என்பதை நோக்கிச் செல்லவில்லை. அரசு முதலாளியமே நீடித்தது. மூலதனத்தின் பாத்திரம் ஒழிக்கப்படவில்லை. பரிவர்த்தனை மதிப்பு ஒழிக்கப்படவில்லை. அந்த நாடுகளில் ‘முதலாளிகளற்ற முதலாளியமே’ நீடித்தது. மூலதனத்தைக் கடந்து செல்லவில்லை. (அதற்கான அகக் காரணங்கள் மற்றும் புறக் காரணங்கள் தனியான ஆய்வுக்குரியவை). அதனால்தான் அந்த நாடுகளில் முதலாளிய மீட்பு நடந்தேறியது. அந்த நாடுகளில் நிலவியதுதான் மார்க்ஸ் முன்வைத்த உற்பத்திமுறை என்று ஒருவர் கருதினால் அது மார்க்சியத்தின் குறைபாடல்ல.

மேலும் மார்க்ஸ் மீது போகிற போக்கில் பல விமர்சனங்களை ஆதாரமில்லாமல் வைத்துச் செல்கிறார் ஆசிரியர். ‘நிலம் வாங்கி விற்கும் சந்தைச் சரக்காக மாறுவதை முற்போக்கான மாறுதலாக மார்க்ஸ் பார்க்கிறார்’ என்கிறார். ஆனால் மார்க்சும் ஏங்கல்சும் நிலம் நிலம் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தார்கள்? மார்க்சின் ‘பொருளாதார மற்றும் தத்துவக் குறிப்பேடு 1844’ இன் பின் இணைப்பாக உள்ள ஏங்கல்சின் ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சன உரை பற்றிய சுருக்கமான வரையறை’ யில் ஏங்கல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்:

“அனைவரின் இருப்பிற்கும் முதல் நிபந்தனையாக இருக்கும் நிலத்தை ஒருவர் விற்பனைப் பொருளாக மாற்றுவது என்பது ஒருவர் தன்னையே விற்பனைப் பொருளாக மாற்றுவதை நோக்கிய இறுதி அடியாகும். சுய அந்நியமாதல் என்ற ஒழுக்கக்கேடான செயலுக்கு அடுத்தபடியான ஒழுக்கக்கேடு இதுவாகத்தான் இருந்தது. இன்று வரை இருந்தும் வருகிறது. மற்றும் தொடக்க காலக் கைப்பற்றல் –பூமியை ஒரு சிலர் ஏகபோகமாக்கிக் கொண்டு, மற்றவர்களை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நிபந்தனையாக இருக்கும் நிலத்திலிருந்து வெளியேற்றுவது –அதைத் தொடர்ந்து பூமியை விற்பனைப் பொருளாக மாற்றும் ஒழுக்கக்கேட்டைத் தவிர வேறு எதயும் வழங்குவதில்லை”

உண்மை இவ்வாறிருக்க, இந்த நூலாசிரியரோ நிலம் சந்தைச் சரக்காக மாறியதை மார்க்ஸ் முற்போக்கானது என வரவேற்றார் என்கிறார்.

மார்க்ஸ் மீது இவர் வைக்கும் இன்னொரு விமர்சனம் ‘கிராமங்களைப் பிற்போக்கின் மையங்களாகப் பார்ப்பதும் நகரங்களை வளர்ச்சியின் சக்கரங்களாகப் பார்ப்பதும் மார்க்சின் எழுத்துகள் முழுவதும் பார்க்கலாம்,’ என்பது.

இது பற்றிய மார்க்சின் கருத்துக்கு நாம் செல்வதற்கு முன்பு நமக்கு முன் எழும் ஒரு கேள்வி இவர் கிராமங்களை முற்போக்கின் மையங்களாகப் பார்க்கிறாரா? மனிதனை மனிதனாக நடத்தாத, சாதி வேறுபாடுகளும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும், ஒடுக்குமுறைகளும், மூடத்தனங்களும் நிறைந்த இங்குள்ள கிராமங்களை முற்போக்கின் மையங்களாக இவர் கருதுகிறாரா? காந்தி கண்ட இராமராஜ்யத்தை வரவேற்கிறாரா?

பொது வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள கிராமம் குறுகிய, வட்டாரம் சார்ந்த பார்வையைக் கொண்டுள்ளது என்ற பொருளிலேயே மார்சும் ஏங்கல்சும் கிராமத்தைப் பார்த்தனர். முதலாளியம் கிராமப் புற உழவர்களை உலகப் பண்பாட்டின் அனைத்து உறவுகளிலிருந்தும் விலக்கி வைத்துள்ளது எனக் கருதினர். நகர்ப்புற வாழ்வின் காரணமாக, சுரண்டப்படும் மக்களின் ஒரு பகுதி உலகச் சமூகத்துடன் உறவு கொள்ள முடிகிறது, அவர்களுடைய வாழ்நிலை அவர்களைப் புரட்சிகரமான சக்தியாக மாற்றுகிறது என்று கருதினர். முதலாளியத்திற்கு எதிரான புரட்சியின் முதற் கடமைகளில் ஒன்று நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான பகைத் தன்மை கொண்ட பிரிவினையை ஒழிப்பதுதான் என அவர்கள் கருதினர். மார்க்சின் கருத்து இவ்வாறு இருக்கையில் ஆசிரியர் கிராமங்களைப் பிற்போக்கின் மையங்களாகப் பார்த்தார் என ஆதாரமில்லாமல் விமர்சிக்கிறார்.

மேலும், ‘தங்கு தடையற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது வரம்பற்ற இயற்கை வள உறிஞ்சலைத்தான் குறிக்கிறது. வரம்பற்ற நுகர்வைத்தான் குறிக்கிறது. நுகர்வு அளவை அதிகப்படுத்துவது, அதை அனைத்து மக்களுக்கும் பொதுவாக்குவது என்பது மார்க்சியத்தின் வளர்ச்சிவாதமாக இருக்கிறது’ என்கிறார் ஆசிரியர். தங்கு தடையற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது இயற்கை வள உறிஞ்சலையும் வரம்பற்ற நுகர்வையும் குறிக்கிறது என இவரே கற்பனை செய்து கொள்கிறார். இதற்கான ஆதாரத்தை மார்க்சிடமிருந்து இவரால் காட்ட முடியாது.

உழைப்புச் சக்தியையும் உழைப்பின் நிகழ்வுப்போக்கில் பயன்படுத்தப்படும் உழைப்புச் சாதனங்களையுமே மார்க்ஸ் உற்பத்தி சக்திகள் என்கிறார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது உழைப்புச் சாதனங்களில் ஏற்படும் வளர்ச்சி, உழைப்பாளியின் கல்வி, திறனில் ஏற்படும் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. உற்பத்தி சக்திகளில் முதன்மையாக இருப்பது உழைப்பாளி; அதாவது மனிதனின் உழைப்பு சக்தி. முதலாளியம் ஒரு பக்கம் அபரிதமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. இன்னொரு பக்கம் அவற்றை உருவாக்கும் உழைப்பாளிகளைப் பட்டினியிலும், வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வீழ்த்தி அவர்கள் உருவாக்கும் பொருட்களை அவர்களே நுகர முடியாமல் தடுக்கிறது. உழைப்புச் சக்தி சமூகத்திற்கு முழுமையாகப் பயன்படாமல் தொடர்ந்து முதலாளியம் அழித்து வருகிறது. இந்த உழைப்புச் சக்தியின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது உற்பத்தி சாதனங்களைத் தனியுடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளியம்தான். உழைப்புக் கருவிகளில் ஏற்படும் வளர்ச்சிகளைக் கூட முதலாளியம் உழைப்புச் சக்தியை மென்மேலும் கடுமையாகச் சுரண்டவும், தனது இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளவுமே பயன்படுத்துகிறது. அதனால் மனித உழைப்புச் சக்தி மென்மேலும் வேண்டப்படாததாக ஆக்கப் படுகிறது. எனவே மனித உழைப்பு சக்தி வீணாக்கப்படாமல் மென்மேலும் தங்கு தடையின்றி வளர்ந்து முழுமையாகச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டுமானால் இங்கு நிலவி வரும் முதலாளிய உற்பத்திமுறை ஒழிக்கப்பட வேண்டும். தடையற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பதன் சாராம்சம் இதுதான். ஆனால் ஆசிரியரோ தங்கு தடையற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பதை வெறும் பொருட்களின் வளர்ச்சி எனக் கற்பிதம் செய்து கொள்கிறார்.

மேலும் மார்க்ஸ் எங்கும் வரம்பற்ற நுகர்வை ஆதரிப்பதில்லை. தொழிற்துறையில் உண்டாகும் ஏராளமான வீணடிப்புகளைப் பற்றியும், வீணடிப்புகளைக் குறைப்பது பற்றியும், வீணான பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல் பற்றியும் மூலதனம் மூன்றாவது தொகுதியில் மார்க்ஸ் குறிப்பிடுவது பற்றி நாம் அறிவோம்.

மேலும் “ஒரு முழுமையான சமூகமோ, ஒரு நாடோ அல்லது ஒரே சமயத்தில் நிலவுகின்ற அனைத்து சமூகங்களின் ஒட்டுமொத்தமோ புவியின் உடைமையாளர்கள் அல்ல. அவர்கள் வெறுமனே புவியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், அதனால் பயனடைபவர்கள், அவர்கள் நல்ல குடும்பத் தலைவர்களைப் போல, மேம்படுத்தப்பட்ட நிலையில் அதை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். (மூலதனம், தொகுதி.3).

இதன் மூலம் மார்க்ஸ் வரம்பற்ற நுகர்வைப் பொருள் படுத்துகிறாரா? இப்பொழுதுள்ள நிலையை விட மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்ல வேண்டும் என்பதன் பொருள் என்ன? இங்கு அவர் பொருள்படுத்துவது புவிக் கோளத்தைக் காத்துப் பேணுவது மட்டுமல்லாமல் அதை மேம்படுத்தவும் வேண்டும் என்கிறார். வரம்பற்ற நுகர்வால் இந்தப் புவிக் கோளத்தைக் காத்துப் பேண முடியாது. இந்த நிலையில் அதை மேம்படுத்துவது எப்படி? மார்க்ஸ் கோருவது இயல்பான தேவைகளை நிறைவு செய்வதுதான். இங்கு மார்க்சுக்கு மிகவும் பிடித்த, அவர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கிரேக்கத் தத்துவ ஞானியான எபிக்கூரசின் கருத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

“இயற்கையாகத் தேவைப்படும் வளத்தின் அளவு குறைவானதும் எளிதில் அடையப்படக் கூடியதும் ஆகும். செயலற்ற கற்பனைகளால் தேவைப்படும் வளத்தின் அளவிற்கு எல்லையே இல்லை”

மார்க்ஸ் பொருள்படுத்தியதும் இயற்கையாகத் தேவைப்படும் செல்வம்தான். முதலாளிய இலாப வேட்டைக்காகச் செயற்கையாக உருவாக்கப்படும் நுகர்வு வெறியை அல்ல.

அடுத்து, மண்ணையும் கடலையும் காட்டையும் மலைகளையும் என அனைத்து இயற்கை வளங்களையும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய அதிகாரக் கட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும். உலகமயத்திற்கு எதிர் தேசியமயம்தான். எனவே இந்தியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறி தேசிய இன இறையாண்மையை மீட்டுக் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தைப் பொருத்த அளவில் இந்த மாற்றுகளுக்கான உரமான அடித்தளம் உள்ள இனமாகும். சமத்துவப் போராட்டத்தை முன்னெடுத்த மரபு தமிழ் மரபு. அற மரபு கொண்டது தமிழர் மரபு என அதன் கடந்த காலப் பெருமைகளை விளக்கும் ஆசிரியர், தமிழ்த் தேசிய இனம் தனக்கான தேச அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியலே தமிழ்த் தேசியம் என்கிறார் ஆசிரியர்.

இன்றைய எதார்த்த நிலையை அறியாத கற்பனாவாதியாக இருக்கிறார் ஆசிரியர். தமிழ்த் தேசிய இனம் முழுவதும் ஒத்த தன்மை கொண்ட இனமாக உள்ளது எனக் கற்பனை செய்கிறார். தமிழ் தேசிய இனம் பல்வேறு வர்க்கங்களாகப் பிளவுண்டு இருப்பதை அவர் அங்கீகரிக்கவில்லை. அவற்றின் வர்க்க நலன்கள் வேறு வேறானவை என அவர் பார்க்கவில்லை. அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் அரசு பற்றி அவர் கூறுகிறார்.

இவர் கூறும் தமிழ்த் தேசிய அரசு முதலாளிய வர்க்கத்தையும் உள்ளடக்கியதுதான். அங்கு முதலாளிய உற்பத்திமுறைக்கு எதிராக மாற்று உற்பத்திமுறை எதையும் அவர் முன்வைக்கவில்லை. இலாப அடிப்படையில் செயல்பட்டுவரும் முதலாளிய உற்பத்திமுறையே இயற்கையை அழித்து வருகிறது என்பதைப் பார்த்தோம். இவர் கூறும் தமிழ்த் தேசத்தில் முதலாளிகள் இலாப நோக்கில் செயல்பட மாட்டார்களா?

இங்குள்ள தமிழ் தேசிய இன முதலாளிகள் இவர் கூறும் அற வழியில்தான் செயல்பட்டு வருகின்றனரா? உண்மையில், இங்குள்ள ஆறுகளையும் மலைகளையும் இயற்கை வளங்களையும் மக்களையும் அழித்து வருவதில் இவர்களுக்குப் பங்குண்டு. இந்தியா என்ற அதிகாரக் கட்டமைப்பில் இவர்களும் பங்கு கொண்டு இங்குள்ள தமிழ் தேசிய இன மக்களை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள பிற தேசிய இன மக்களையும் வளங்களையும் சுரண்டி வருகின்றனர். உலகமய, தாராளமய முதலாளியத்துடன் இவர்களுக்கு உறவுண்டு. அதனால் பெரும் இலாபமும் அடைந்து வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியர் தமிழ் தேசிய இன முதலாளிகள் அற வழியில் நடப்பவர்கள் எனக் கூறிச் சுரண்டுபவர்களையும் சுரண்டப்படுபவர்களையும் ஒன்றாக்கப் பார்க்கிறார். ஓநாய்களையும் ஆடுகளையும் ஒரே பட்டியில் அடைக்கப் பார்க்கிறார். இவர்களையும் உள்ளடக்கி அமையப் போகும் தமிழ் தேசிய அரசு எவ்வாறு மக்களையும் இயற்கை வளத்தையும் காப்பாற்றும்? இவர்களுடைய தமிழ்த் தேசிய அரசில் புலிகள் சைவப் புலிகளாக மாறி விடும் போலும்!

உண்மையில், தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் பிற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுடன் இந்திய அதிகாரக் கட்டமைப்பில் இணைந்தே உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்தியா என்னும் பெரிய சந்தை தேவையாக உள்ளது; இந்தியா முழுவதிலுமிருந்தும் மலிவான விலையில் மூலப் பொருட்களும் குறைந்த கூலியில் உழைப்பாளிகளும் தேவைப்படுகின்றனர். அவர்களுடைய சுரண்டல் நலனைக் காப்பாற்ற பலமான அரசு தேவை. எனவேதான் பல்வேறு இனங்களைச் சேர்ந்த முதலாளிகளும் இந்தியக் கட்டமைப்பைப் பாதுகாக்க விரும்புகின்றனர். அதனால்தான் பல்வேறு தேசிய இனங்களின் நியாயமான தேவைகளைக் கூட நிறைவேற்ற மறுத்து வருகின்றனர். இவர்கள் நிதி மூலதனத்திற்காகவும் சந்தைக்காகவும் தொழில் நுட்பத்திற்காகவும் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து இருக்கின்றனர். அதனால் ஏகாதிபத்திய நாடுகள் இந்த நாட்டைச் சுரண்டவும் வழி வகுத்துள்ளனர்.

ஆசிரியர் கருதுவது போல இன்று தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் கூட தனித் தமிழ் தேசிய அரசை விரும்ப மாட்டார்கள். அது அவர்களுடைய நோக்கமும் அல்ல. பெரும் வளங்களும் சுரண்டுவதற்கான வாய்ப்புகளும் கொண்ட இந்தியா என்ற பெரும் நிலப் பரப்பு அவர்கள் முன் இருக்கும்போது அவர்கள் தமிழ் நாடு என்ற சிறிய நிலப் பரப்பிற்குள் முடங்கிப் போக விரும்ப மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக, இன்று பிற தேசிய இனத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் இலட்சக் கணக்கானோர் தமிழ் நாட்டில் நிறைந்துள்ளனர். அவர்களின் மலிவான உழைப்பை தமிழ் இன முதலாளிகள் சுரண்டி வருகின்றனர். தமிழ் தேசிய அரசு என்ற பெயரில் இந்த முதலாளிகள் இந்த வாய்ப்பை இழக்க விரும்ப மாட்டார்கள்.

எனவே ஆசிரியர் முன்மொழியும் தமிழ்த் தேசியத் தீர்வு என்பதை ஐந்த இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதே சமயத்தில் பாட்டாளிகளும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த முதலாளிகளின் நலனுக்கான இந்தியக் கட்டமைப்பில் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றனர். இந்தியா என்ற கட்டமைப்பு மூலதனத்தையும் சந்தையையும் மட்டும் ஒன்றிணைக்கவில்லை. பல்வேறு இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகளையும் ஒன்றிணைத்துள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் நலன் சர்வதேசிய நலனில்தான் உள்ளது. முதலாளிய வர்க்கத்தின் வலிமைமிக்க இந்தியா என்ற கட்டமைப்பிலிருந்து விடுபட, ஏகாதிபத்தியங்களின் சுரண்டலிலிருந்து விடுபட அனைத்து இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் தேவைப்படுகிறது. தேசியம் என்ற பெயரில் பாட்டாளி வர்க்கம் பிளவுபடுவது அதனுடைய எதிரிக்கே சாதகமாக அமையும். இன்று அனைத்து இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் நலனும் பெரும்பான்மையான மக்களின் நலனும் சோசலிசத்தையே நாடுகின்றன. சோசலிசத்தில்தான் அவற்றின் வாழ்வும் வளர்ச்சியும் இருக்கிறது. ஏனெனில் சுதந்திரமான உற்பத்தியாளர்களின் ஒன்றிணைப்பு என்ற சமூகத்தை நோக்கி வழி நடத்திச் செல்லக்கூடியது சோசலிசம்தான்.

பாட்டாளி வர்க்கம் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக நிற்கிறது. அதே நேரத்தில் அனைத்துத் தேசிய இனங்களிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது. அந்த அடிப்படையில் இன்று தேவைப்படுவது அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு சோசலிசக் குடியரசுகளின் இந்திய ஒன்றியம்தான்; தமிழ்த் தேசியமல்ல.

இன்று முதலாளிய உலகமயமாதலுக்கு எதிரானது சோசலிசமும் சர்வதேசியமும்தான். ஆனால் ஆசிரியர் முதலாளிய உலகமயமாதலுக்கு எதிராகக் குட்டி முதலாளிய தேசியவாதத்தை முன்வைக்கிறார்.

இந்த நூலின் தொடக்கப் பகுதியில் ‘சந்தைப் பொருளியலுக்குள்ளே மாற்றுத் திட்டம்’ பகுதியில் ஆசிரியர் சுற்றுச் சூழலியலுக்கான மாநாடு நடை பெற்றபோது மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே நடந்த மக்கள் போராட்டத்தை விவரிக்கிறார். ‘பத்து இலட்சம் செயல்பாட்டாளர்கள் அங்கே கூடியிருந்தனர். அமெரிக்கச் செவ்விந்தியர்கள், மேற்குலகக் கருப்பின மக்கள், ஆஸ்திரேலியாவின் ஆதிப் பழங்குடியினர், எரி எண்ணெய் எதிர்ப்பாளர்கள், மார்க்சியர்கள், தொழிற்சங்கத்தினர் எனப் பல தரப்பட்டவர்கள் ஒரே தளத்தில் இப்போராட்டத்தை நடத்தினர். இப்போராட்ட காலங்களில் இவர்களிடையே விவாதங்களும் உரையாடல்களும் நடந்த வண்ணம் இருந்தன. ஆயினும், புவி காக்கும் நோக்கத்தில் இவர்கள் ஒரே அக்கறையில் இருந்தனர். இப்போராட்டங்களின் வெற்றியாகவே “பாரிசு ஒப்பந்தம்” என்ற முதல் சிறிய முன்னேற்றம் காணப்பட்டது’ என்கிறார்.

இங்கு சுற்றுச் சூழலை உலகம் முழுவதும் அழித்து வரும் முதலாளியத்திற்கு எதிரான சர்வதேசிய ரீதியான போராட்டத்தை விவரிக்கும் ஆசிரியர் மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேசியத்தையும் சோசலிசத்தையும் மேல் எடுத்துச் செல்வது எப்படி, அதைப் பலப்படுத்துவது எப்படி என்று சிந்திக்காமல் குறுகிய தேசியவாதத்தில் வீழ்ந்து விட்டதுதான் முரண்பாட்டுக்குரியது.

 - மு.வசந்தகுமார்

Pin It