அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தவுடன் விடுதலையில் தலையங்கமாகவும், மறுநாள் வானொலியில் உரையாகவும், தந்தை பெரியார் அவர்கள் அண்ணாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள சில வரிகள் இவை:-

"தான் இந்த (என்னுடைய) மந்திரி சபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால், பெரியார் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதுகிறேன்.

அதற்கேற்ப அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் செல்லுபடித் திட்டம் ஆகும். அதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாத்திரத்திற்கோ இடமில்லை என்பதாகும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், உலகத்திற்கே மாபெரும் துணிச்சலான காரியம் என்று கருதப்பட்டது.

அண்ணாவின் குணம் மிக மிகத் தாட்சண்ய சுபாவமுடையது என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் கடிந்து பேச மாட்டார்.

நான் தி.மு.கவிற்கு அது தேர்தலில் வெற்றி பெறும் வரை படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து, மிக்கப் பெருந்தன்மையோடு நட்புக் கொள்ள ஆசைப்பட்டு, என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார்."

அறிஞர் அண்ணாவின் கொள்கை மற்றும் நடைமுறை ஆகியவற்றை ஒருசேரப் புரிந்துகொள்ள மேற்காணும் வரிகள் உதவும்.

அண்ணா பெரியாரைப் போல இல்லை. திராவிட இயக்கக் கொள்கை சற்று நீர்த்துப் போனதற்கு அவரே காரணம் என்று இன்றும் நம்புகிறவர்கள், சொல்கிறவர்கள் உண்டு. அதற்குச் சில சான்றுகளையும் அவர்கள் சொல்ல முயற்சி செய்வார்கள்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்றார் பெரியார். ஆனால் அண்ணாவோ ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி அதனைத் தளர்த்தி விட்டார். தேர்தலில் ஒருநாளும் பெரியார் போட்டியிட்டதில்லை. அண்ணாவோ தேர்தல் பாதைக்குச் சென்று விட்டார். பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் தமிழரின் தொன்மை, பெருமை, தமிழ்மொழியின் சிறப்பு ஆகியனவற்றுக்கெல்லாம் இடமிருக்காது. அண்ணாவோ அத்தகைய பழம் பெருமிதங்களை மக்களிடம் ஊட்டி வளர்த்தார்.

- இவைதான் அண்ணா குறித்த விமர்சனங்கள்.

இந்த விமர்சனங்களை முற்றிலும் பொய்யென்று கூறி நாம் மறுதலித்துவிட முடியாது. இவற்றுள் உண்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த உண்மைகளுக்குள் இருக்கும் நுண்ணரசியலை நாம் கவனிக்கத் தவறி விட்டால், அண்ணா நமக்கு அந்நியமாகத்தான் தெரிவார்.

நாம் அண்ணாவைப் புரிந்து கொள்கிறோமோ இல்லையோ, பெரியார் மிகச் சரியாக அவரைப் புரிந்து கொண்டுதான், அவர் இறந்தவுடன் தன் கருத்துகளை மேலே உள்ளவாறு கவனமாக முன்வைக்கிறார்.

திமுக ஆத்திகத்தின் பக்கம் திரும்பி விட்டது என்று இன்றைய வார ஏடு ஒன்று தலையங்கம் எழுதியிருப்பதைப் போலவே, அன்றைக்கும். கடற்கரையில் நடைபெற்ற அண்ணா நினைவேந்தல் கூட்டத்தில் ராஜாஜி அவர்களும் தன் கருத்தை வெளியிட்டார். ஆனால் அந்த மேடையிலேயே அதனைப் பெரியார் மறுத்துவிட்டார். அண்ணாதுரை எப்போதும் என் கொள்கைகளில் நின்ற என் பிள்ளைதான் என்றார் பெரியார்.

கடவுள், தேர்தல், மொழி குறித்த அண்ணாவின் கருத்துகள் அனைத்தும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. ஏற்றத்தாழ்வு மிகுந்த நம் சமூகம் குறித்துப் பெரியார், அண்ணா இருவருக்கும் ஒருமித்த கவலை இருந்தது. எனினும் அணுகுமுறையில் வேறுபாடும் இருந்தது.

சமூக மேம்பாட்டிற்காகவே தன் கருத்துகளைப் பெரியார் எடுத்துவைத்தார். ஆனால் அந்தக் கருத்துகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதை அண்ணா பெரியாரோடு இருக்கும்போதே உணர்ந்தார். 1948ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரையைக் கவனித்துப் படித்துப் பார்த்தால் இது உண்மை என்பது புரியும். அப்போதே அவர் அந்த உரையில் தன் கருத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றார்.

அந்த நோக்கில்தான், தி.மு.கழகம் தொடங்கி 7 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சித் தொண்டர்களின் கருத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்து, தேர்தலில் போட்டியிடுகின்றார். ஒருவனே தேவன் என்னும் திருமூலரின் கோட்பாடு மக்களை அணுகுவதற்குத் தேவையாகின்றது. எனினும் தேர்தலில் வெற்றிபெற்று 1967இல் ஆட்சிக்கு வந்த பின்னர், அண்ணா என்ன செய்தார்? அரசு அலுவலகங்களில் உள்ள கடவுள் படம் எல்லாவற்றையும் அகற்ற வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டார். இதனை விடப் பெரியார் கொள்கைக்கு ஆதரவாக வேறு என்ன செய்ய முடியும்!

ராஜாஜி அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டுதான் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் முதல்வராகப் பதவி ஏற்பதற்கு முன்னர், திருச்சி சென்று, இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை என்று பெரியாரிடம் சொன்னார். சொன்னபடி நடக்கவும் செய்தார்.

தமிழ் மொழிப் பெருமை பேசினார் என்பது உண்மைதான். ஆனால் எந்த இடத்திலும், தமிழில் உள்ள புராண, மூட நம்பிக்கைக் கருத்துகளுக்கு அவர் உரம் சேர்க்கவில்லை. மொழி உணர்ச்சியையும், இன உணர்வையும் மக்களிடம் ஊட்டியதன் மூலம், நாம் ஆரியத்தின் அடிமைகள் இல்லை, தன்மானம் மிக்க தனி இனம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

பெரியார் சொல்லியிருப்பதை போல, அண்ணா மென்மையான இயல்பு உடையவர். தங்கள் கருத்துகளை மென்மையாகவும், மக்களுக்கு இணக்கமாகவும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கருதினார். அப்படிக் கொண்டு சென்ற கருத்துகள் அனைத்தும் திராவிட இயக்க கருத்துகளே. இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு ஆகிய கருத்துகளைத் தமக்கே உரிய வகையில் அவர் மக்களிடம் கொண்டு சென்றார். வெற்றியும் கண்டார்.

பெரியாரின் கொள்கைகளை அண்ணா நீர்த்துப் போகச் செய்துவிட்டார் என்பது தவறான புரிதல். பெரியாரின் கொள்கைகளை வெகு மக்களிடம் கொண்டு செல்ல சில உத்திகளை அவர் கையாண்டார் என்பதே சரியான பார்வை.

நான் ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டேன். பெரியார்தான் 24 காரட் தங்கம். அண்ணா, 22 காரட்தான். ஆனால் 22 காரட் தங்கத்தில்தானே நகை செய்ய முடியும். பெரியார் தங்கம். அண்ணா நகை!

பெரியார் இல்லாமல் அண்ணா இல்லை. அண்ணா இல்லாமலும் பெரியார் இல்லை.

Pin It