சென்னையில் நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி…
அண்ணா ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார். முதலில் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்றால் எப்படி இருக்கும்? அரசனாக இருந்தாலும் என்பதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். சந்திர மோகன் என்பவர் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்
சிவாஜியிடம். ஆனாலும் சிவாஜி அவமானப்படுத்தப்படுவார், என்பதை எல்லாம் எழுதி அது எப்படி இந்த இந்து மத சாஸ்திரங்கள் என்ற பெயரால் அரசனைக் கூட கைப்பாவையாக வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்று சொல்வது தான் அந்த நாடகம்.
அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலில் எழுதியுள்ளார் “எப்படியாவது எந்த வழியிலாவது இந்து இராஜ்ஜியம் அமைந்து விடுமேயானால், அதை விட இந்த நாட்டுக்கு பெரும் கேடு எதுவும் இருக்க முடியாது". இந்து இராஜ்ஜியம் என்றால் என்ன அது அமைந்தால் என்ன நிலை என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நாடகம்தான் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’.
அடுத்து நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தை அண்ணா இயற்றினார். இராவணன் வழக்குத் தொடுப்பார், நீதி தேவனிடம் கம்பரைப் பற்றிய வழக்கு. வழக்கு விசாரணை வருகிறது. என்னை இரக்கம் எனும் பொருள் இல்லா அரக்கன் என்று கம்பர் எழுதி இருக்கிறார் என்று இராவணன் முறையிடுகிறார். கம்பரிடம் இதை எல்லாம் சொன்னீர்களா என்று நீதிதேவன் கேட்கிறார். ஆமாம் எழுதி இருக்கிறேன் என்கிறார் கம்பர். ‘கட்டிய மனைவியை இரக்கமில்லாமல் காட்டில் விட்டுச் சென்ற ராமன் ஒழுக்கமானவன், ஆனால் என்னை மட்டும் எதற்கு இப்படி எழுதினார்’ என்று அடுக்கடுக்கான வாதங்களை இராவணன் எடுத்து வைப்பார்.
இப்போது கூட பட்டிமன்றங்களில் தீர்ப்பே சொல்ல முடியாமல் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்று பூசி மெழுகி பேசுவது போல்தான் நீதி தேவனே தீர்ப்பு சொல்ல முடியாமல் மயங்கி விழுந்தார் என்று அந்த நாடகத்தை எழுதி இருக்கிறார் அண்ணா.
அடுத்து, சந்திரோதயம் என்றொரு நாடகத்தை அண்ணா எழுதினார். ஆருத்ரா விழாவுக்கு சென்று வந்த பணியாளரிடம், நடராஜர் தரிசனம் எப்படி இருந்தது என்று கேட்டு, அவர் அதை விளக்குவாராம். சந்திரோதயம் நாடகமும் பகுத்தறிவு கருத்துக்களே நிறைந்த நாடகம். அதில்தான் கடவுளை கல் என்று பேச வைத்து மக்களை கைத்தட்ட வைத்தவர் அண்ணா.
அண்ணாவின் சுயமரியாதை உணர்வு!
அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அரசு ஊழியர்கள் தாங்கள் எழுதும் கடிதங்களில் சம நிலையில் உள்ளவர்களுக்கு ‘Transmitted’ என்றும், தனக்கு கீழே உள்ளவர்களுக்கு ‘Directed’ என்றும் உயர் அதிகாரிகளுக்கு ‘Submit’ என்றும் எழுதுவார்கள். வெறும் ‘Submit’ என்று எழுத மாட்டார்கள் I Beg to Submit என்று எழுதுவார்கள். கீழே கடைசியாக ‘Yours Faithfully, Sincerely’ என்று எல்லாம் போடமாட்டார்கள் ‘Yours Obediently’ என்றுதான் எழுதுவார்கள். ‘Beg’ என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது, ‘Submit’ என்று எழுதுங்கள். ‘Obediently’ என்று எழுதக்கூடாது, ‘Yours Faithfully’ என்று எழுதினால் போதும் என்று சுற்றறிக்கை அனுப்பினார் அண்ணா.
தன்மானமிக்க ஒருவர் இன்னொருவரிடம் போய் எதுக்கு ‘Beg’ to Submit என்று சொல்ல வேண்டும்? அவர்களும் ஒரு அரசு ஊழியர், நீயும் ஒரு அரசு ஊழியர் என்று வார்த்தையில்கூட சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தினார் அண்ணா. இது சிறிய செய்தியாக இருக்கலாம். ஆனால் அன்றைக்கு உயர் அதிகாரிகள் எல்லாம் பார்ப்பனர்கள்தான். இதை எல்லாம் யோசித்துதான் அண்ணா வார்த்தைகளை மாற்றினார். சுயமரியாதையை பாதிக்கிற ஒரு சொல்லை அரசாணையின் வழியாக நீக்கினார். இந்த செய்தி சிறியதாக இருந்தாலும் தாக்கம் பெரிது.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று ஆக்கியது, தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது, இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது என 3 முக்கிய சாதனைகளை செய்திருக்கிறார் அண்ணா. ஒருவேளை ஆங்கிலமும் இந்தியும் அப்போது கற்றிருந்தால் இன்றைக்கு தமிழர்களின் நிலை என்ன என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அண்ணா குறைந்த காலம் தான் ஆட்சியிலே இருக்கிறார். ஆனால் அவர் செய்த பணிகள் முக்கியமானவை.
பெரியாருக்கு இருந்த கோபம் அண்ணா ராஜாஜியிடம் போய் கூட்டணி வைத்து விட்டாரே என்பதுதான். 01.01.1962-இல் அறிக்கை விடுகிறார் பெரியார். புத்தாண்டு செய்தி யாருக்கு எழுதுகிறார் என்றால் பார்ப்பனத் தோழர்களுக்கு என்று எழுதுகிறார். 1957 தேர்தலில் திமுக 15 இடங்களை பெற்று இருந்தது. 1962 தேர்தல் நடக்கவே இல்லை. இந்த நிலையில் அந்த அறிக்கையில் பலவற்றை எழுதுகிறார். ”இந்த நாட்டில் கண்ணீர் துளிகள் (திமுக) ஆட்சிக்கு வந்தாலும் பார்ப்பன எதிர்ப்பு என்ற கைத்தடியை ஊன்றாமல் தமிழ்நாட்டில் நடக்க முடியாது. அதற்கு அவர்கள் எனது
எனது ஆதரவு கேட்கலாம், நானும் ஆதரவு அளிக்கலாம். எனக்கு சமுதாயத் துறையில் பார்ப்பனர்களைத் தவிர யாரும் எதிரிகள் இல்லை என்று எழுதினார்.
1972-இல் கள்ளக்குறிச்சி உரையில் சொல்லுகிறார் பெரியார். அப்போதுதான் திமுகவில் இருந்து அண்ணா திமுக பிரிந்த நேரம் எம்ஜிஆரைப் பற்றி விமர்சனம் செய்து பேசுகிறார் பெரியார். கீழே இருந்து மக்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். எல்லாவற்றுக்கும் நிதானமாக பதிலளித்தார் பெரியார். “நீங்கள் ஆளுங்கட்சியை ஆதரிக்கிறீர்களாமே , ஆளும் கட்சியைத்தான் ஆதரிப்பீங்களாமே” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.
“ஆமாம் ஆளும் கட்சியைத்தான் ஆதரிப்பேன். நான் ஒரு கொள்கையை வைத்திருக்கிறேன், ஆனால்தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆட்சிக்கு வந்தவர்களை ஆதரித்தால் தானே என்னுடைய கொள்கைகளை சட்டமாக்க முடியும். நான் என்ன வீம்புக்கா கட்சி நடத்துகிறேன்? என் கொள்கைகளை சட்டமாக்க வேண்டும். நான் எம்ஜிஆரை திட்டுகிறேன். இதே எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்து சமுதாயத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நான் அவரை முழுமனதோடு வரவேற்கத் தயாராக இருக்கிறேன். என் கொள்கைகள் நடைமுறைக்கு வர வேண்டும் அதற்கு ஆதரிப்பேன். திமுகவை ஆதரித்தேன் அவர்களும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்” என்றார்.
பார்ப்பனர்கள் நம்மவர்களைப் பயன்படுத்திக் கொண்டதற்கு மாறாக, அண்ணா பார்ப்பனர்களைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்தார். புராண இதிகாசங்களில் நம்மவர்களை அனுமானாகவும், ராட்சசன் ஆகவும் பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தினார்கள்.
ஆனால் அண்ணா ராஜாஜியை அனுமனாக வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்ததும் இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று சொல்லி பார்ப்பனர்களைக் கழட்டி விட்டார். திமுக பெருங்காயம் இருந்த டப்பா. இப்போது காலியாக இருக்கிறது கொஞ்சம் வாசனை அடிக்கலாம் ஆனால் பூணூலை பிடித்துக்கொண்டு வாக்குகளை உதயசூரியனுக்கு வாக்குகளை குத்துங்கள் என்றார் ராஜாஜி. அண்ணா ராஜாஜியை குத்தினார் ஆட்சிக்கு வந்த உடனே பெரியாரிடம் சென்று ஆலோசனைகள் கேட்டார். ராஜாஜிக்கு கோபம் வந்தது, “தேனிலவு முடிந்தது என்று சொன்னார்”
உடனே அண்ணா "தேனிலவிலேயே எவ்வளவு காலம்தான் இருக்க முடியும்? வாழ்க்கையைத் தொடங்க வேண்டாமா" என்று பதிலடி கொடுத்தார். இதை வேறு யார் செய்திருக்க முடியும்? பார்ப்பனர்களுக்கு அடிமையாக பழகிப்போன வரலாற்றை கொண்ட நமக்கு பார்ப்பனர்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து அவர்களை துரத்தி விட்ட பெருமை அண்ணாவுக்கே உண்டு.
பார்ப்பனர் வாழத் தகுதியற்ற நாடு தமிழ்நாடு என்று ராஜாஜி சொன்னார். பெரியார் வழியனுப்புவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தன் பாணியிலே சொன்னார். இப்படிப்பட்ட ஒரு சமூக மாற்ற வரலாற்றை அண்ணா செய்து காட்டினார். அண்ணா அடித்த அடியில் இந்திய தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் எழ முடியாத நிலையில் தான் இன்றும் இருக்கின்றன.
பெரியார் எதையும் மறைக்கவில்லை
தேசியம் என்பதற்கு நாமெல்லாம் கண்டுபிடித்த வரையறை வேறு, ஆனால் அவர்கள் கண்டுபிடித்த இந்தியத் தேசியம் என்பது வேறு. அதையும் பெரியார் விமர்சனம் செய்துள்ளார். எனக்கு தேசாபிபானம் கிடையாது, தேசாபிபானம் என்பதே பித்தலாட்டம் என்று சொன்னார். உடனே பெரியார் தேசியத்தை விமர்சனம் செய்கிறார் என்று மணியரசன் வகையறாக்கள் குதித்தார்கள்.
பெரியார் எப்போது எழுதினார் தெரியுமா? விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் சொல்லும் தேசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னார். அப்போதைய காங்கிரஸில் 90 அயோக்கியர்களும், 10 மடையர்களும் இருந்தார்கள், அந்த பத்து மடையர்களில் நானும் ஒருவன் என்றார்.
பெரியார் காங்கிரஸில் இருந்து 1925 நவம்பரில் வெளியே வருகிறார். நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழுக்கு துரோகமும் இந்தியின் ரகசியமும் என்று எழுதியும் இருக்கிறார். இந்துஸ்தானி என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி, இந்தி பிரச்சார சபைகளை தான் திறந்து வைத்தார் காந்தி.
பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் இரண்டு வேறுபாடு தான்
போதிப்போர் ஒருவராகவும் அதை சாதிப்போர் ஒருவராகவும் மற்றொருவர் ஆகவும் இருப்பார்கள். மார்க்ஸ் தத்துவங்களை எழுதினார், நடைமுறைப்படுத்தினார் லெனின். ஏதாவது மாற்றங்கள் இருந்தாலும் சின்ன சின்ன திருத்தங்கள் இருந்தாலும் பெரிய அளவில் விமர்சனம் வராது. பெரியார்தான் தத்துவங்களை வழங்கியவரும், அதை நடைமுறைப்படுத்தியவரும் பெரியாரே. இரண்டும் ஒருவரே முன்னெடுக்கும் போது சிக்கல்கள் வருகின்றன. லட்சியங்கள் வேறு, வேலைத் திட்டம் வேறு. உதாரணமாக சேலத்தில் இருந்து சென்னை வரவேண்டும் என்றால் சென்னை வருவதுதான் என் லட்சியம். ஆனால் விழுப்புரத்தில் நிறுத்தி நீ ஏன் சென்னை செல்லாமல் விழுப்புரம் வந்தாய்? என்று கேட்டால் நான் அப்படித்தான் வந்தாக வேண்டும்.
பெரியார் தன்னோடு மக்களை மக்களையும் உடன் அழைத்துக் கொண்டு தான் பயணிக்கிறார். இலக்கை தெளிவாக அடையாளப்படுத்தியும் காட்டினார். மக்களையும் அடையாளப்படுத்தி கூட்டிக்கொண்டு வர வேண்டிய பணியை சேர்ந்து செய்தார். அப்படி லட்சியத்தை நோக்கி வரும்போது பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்கள். பெரியார் என் இலட்சியங்கள் என்னுடைய காலத்திற்கு பின்னால் கூட நிறைவேறும் என்று சொன்னார்.
திருமணமே வேண்டாம் என்று சொன்ன பெரியார் அவரே திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். அது லட்சியம், ஆனால் சமுதாயத்தில் மக்களைக் கூடவே அழைத்து செல்லுகிற வேலையையும் பெரியார் செய்தார். எடுத்த உடனே இந்த காரியங்களை செய்தால் மக்கள் புறந்தள்ளி விடுவார்கள். மக்களின் மனநிலையை அறிந்து அதற்கு ஏற்ப தன்னுடைய தத்துவத்தை நடைமுறைப்படுத்தியவர் பெரியார்.
நன்றாக பரிசோதனை செய்பவர்தான் நல்ல மருத்துவர், சரியாக நோயைக் கணித்தால் பாதி மருத்துவம் முடிந்து விட்டது என்பார்கள். நம்மூர் பொதுவுடைமைவாதிகள் கூட கணிக்க முடியாத ஜாதிதான் இந்த நாட்டிற்கு அனைத்திற்கும் தடையாக இருக்கிறது என்று சரியாகக் கணித்தார் பெரியார். அப்போது பெரியாரை முதலாளித்துவ சீர்திருத்தவாதி என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது பெரியாரை புரட்சிக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கவனிக்க தவறி விட்டோம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
பெரியார் மீதான விமர்சனங்களில் அவர் நிர்வாண சங்கத்தில் கலந்து கொண்டார் என்ற ஒரு விமர்சனம் உள்ளது. சோசலிஸ்ட் நடத்துற நிர்வாண சங்கத்திலும் கலந்து கொண்டார், பூஸ்வாக்கள் நடத்துகிற நிர்வாண சங்கத்திலும் கலந்து கொண்டார். என்ன வேறுபாடு இவர்கள் இருவருக்கும் என்று போய் பார்த்து, அதை அறிந்து கொண்டு வருகிறார். இவை அனைத்தையும் குடியரசில் படமாக வெளியிட்டும் இருக்கிறார். அவரே வெளியிட்ட செய்தியை வைத்துக்கொண்டுதான் இந்த விமர்சனத்தை வைக்கிறார்கள்.
காவிரி கரையில் மைனராக இருந்தார் என்றும் சொல்கிறார்கள். அதையும் பெரியார்தான் சொன்னார். நான் வாலிப வயதில் சகல இன்பங்களையும் அனுபவித்தவனாக இருந்தேன் என்று அவரே அவர் வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறார். இந்த விமர்சனம் வைக்கும் கயவர்கள் எதையாவது கண்டுபிடித்து சொன்னார்களா என்றால் இல்லை, பெரியாரே தன் மீதான அத்தனை விமர்சனத்திற்கும் பதிலையும் விமர்சனத்தையும் சொல்லி இருக்கிறார். அதை எடுத்துதான் இப்போது இந்த கும்பல் பரப்பிக் கொண்டிருக்கிறது. குறை சொல்வதற்கு கூட ஒரு சின்ன ஆதாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பார்ப்பார்கள், சுத்தமாக இருப்பதை மறைத்து உண்மைக்கு புறம்பாக எழுதுவதை இந்த கயவர்கள் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது.
(தொடரும்)
- கொளத்தூர் மணி