‘தமிழர் தலைவர்’ எனும் பெயரில் பெரியார் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், அந்நூலின் முன்னுரையில்;
“இது சிறிதும் தவறில்லாததும், சுருக்கமாக எல்லா நிகழ்ச்சிகளையும் ஏறக்குறைய எடுத்துக்காட்டுவதுமாகிய ஒரு உண்மை வரலாறாயிற்று" எனக் குறித்துள்ளார்.
இந்த வரலாறு எழுதப்பட்ட காலத்தில் 1938 இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்று சிறையில் பெரியார் இருந்தார். பெரியாரிடமே அதனைக் காட்டி, அவரது ஒப்புதல் பெறுவதற்காகவே நூல் அச்சிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பெரியார் விடுதலையான பிறகு பெரியாரிடம் படித்துக் காட்டி பல திருத்தங்கள் செய்யப்பட்டன. தவறாக எழுதிய பல செய்திகளை பெரியார் திருத்தினார். புதிதாகப் பல செய்திகளும் சேர்க்கப்பட்டன. இதுதான் சாமி சிதம்பரனார் உருவாக்கியத் தமிழர் தலைவரின் தனிச்சிறப்பு. ஆனால் திருவாளர் வீரமணியின் ‘உலகப் பெரியார் வரலாறு...?’
விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் வரலாறுகளைத் திரிப்பது- வரலாற்றுத் துரோகமாகிவிடும். ‘துரோகம்’ என்ற சொல்- திருவாளர் வீரமணிக்கு மிகவும் பிடித்தமானது; ஒவ்வொரு முறையும் தனது அமைப்புக்குள், கொள்கைக் குரல் கொடுத்தோருக்கு அவர் சூட்டி வரும் பட்டம் ‘துரோகிகள்’ என்பதாகும். அவர்தான் இப்போது வரலாற்றுக்குத் துரோகமிழைக்கிறார். அப்போதெல்லாம், அவர் வெளியிடுகிற அறிக்கையின் தலைப்பு என்ன தெரியுமா? “ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்” என்பதாகும். அறிக்கைகளையே ஊன்றிப் படிக்க உத்தரவிட்ட ஒரு தலைவர், வரலாறையே எழுதும்போது ஊன்றிப் படிக்கத்தானே வேண்டும்! அப்படி ஊன்றிப் படிக்கும்போது - சார்புநிலையையும் சுயமுரண்பாட்டையும் காணும்போது அதைச் சுட்டிக் காட்டாமல் எப்படி இருக்க முடியும்?
அதுவும் அவ்வளவு எளிதாக எழுதப்பட்ட வரலாறு அல்ல இது! பல்வேறு ‘பணிச்சுமை- அழுத்தங்களுக்கிடையே- இந்த பாரத்தையும் தூக்கி சுமந்து’ எழுதப்பட்ட வரலாறாயிற்றே! 1939ஆம் ஆண்டுடன் நின்றுபோன பெரியார் வரலாற்றை- 68 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதும் முயற்சிகளைத் துவக்கும்போதேகூட- பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே இந்தப் ‘பாரத்தை’யும் சுமக்க வேண்டிய நிலையில்தான்; ‘பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டராகிய’ ஒருவர் இருக்கிறார்!
- கல்வி நிறுவனச் சுமைகள்
- அறக்கட்டளைச் சுமைகள்
- அயல்நாட்டு பயணச் சுமைகள்
இவை எல்லாவற்றையும்விட - மாறிமாறி ஆட்சிக்கு வருவோரை ஆதரித்து அன்றாடம் அறிக்கைகளைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டிய மிக மிகக் கடுமையான பணிச் சுமைகளுக்கிடையே பெரியார் வரலாற்றையும் எழுதுவது என்பது எவ்வளவு ‘பாரம்’ என்பது அவருக்கு மட்டுமே தெரியும்!
‘தமிழர் தலைவர்’ வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார் உட்பட பல தோழர்கள் பெரியாரிடமே அவரது வரலாற்றை எழுதுமாறு பலமுறை வற்புறுத்தியும் பெரியார் எழுதவில்லை.
“அவர் இந்தி எதிர்ப்பின் பொருட்டு சிறைப்பட்டிருந்த காலத்திலாவது வாழ்க்கை வரலாற்றை எழுதுவாரென்று எதிர்பார்த்தனர் பலர். அப்பொழுதும் அவர் எழுதத் தொடங்கவில்லை எனத் தெரிந்தது. இதன்பிறகு தோழர்கள் தூண்டுதலின் பேரில் யான் இம்முயற்சியில் ஈடுபட்டேன்”
- என்று சாமி சிம்தபரனார் எழுதுகிறார் (தமிழர் தலைவர்- நூல் முன்னுரை).
“நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும்; அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகளாக வேண்டும் தமிழர்கள்- உலகத்திற்கு வழிகாட்டிகளாக நிற்கக் கூடிய சிறந்த ஒரே சமூகமாக வேண்டும் என்னும் கருத்தே இதை எழுதத் தூண்டியது”
- என்று எழுதுகிறார் சாமி சிதம்பரனார். பெரியார் வரலாறு தமிழர்களை உடனே சென்றடைய வேண்டும் என்ற துடிப்பு- சாமி சிதம்பரனாரை இயக்கிற்று.
அதனால் ‘பணி சுமைகளுக்கிடையே பாரத்தைத் தூக்கிச் சுமக்க’ வேண்டிய ‘தியாகம்’- சாமி சிதம்பரனாருக்குக் கிடைக்காமலே போய்விட்டது.
அந்த சாமி சிதம்பரனார் பற்றி ‘உலகத் தலைவர் பெரியார்’ வரலாற்றில்- டாக்டர் கி. வீரமணி குறிப்பிடுகிறார் (பக்.76)
“தஞ்சை மாவட்டம் பாபநாசம் விக்டோரியா போர்டு உயர்தரக் கலாசாலையில் தமிழாசிரியராகப் பணியாற்றிய சாமி சிதம்பரனார் 10-1-1941 அன்று தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஈரோடு வந்து விடுதலை- குடிஅரசு பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பதவி ஏற்று 1.1.1942 வரை பொறுப்பில் இருந்து பின் விலகினார். 1938 வரையிலான தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை ‘தமிழர் தலைவர்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். ஒரு வகையில் இந்நூல் அதன் தொடர்ச்சியாகும். தமிழர் தலைவரின் இரண்டாம் பாகம் எனலாம்”
- என்ற அளவோடு சாமி சிதம்பரனார் பற்றிய குறிப்பு முடிகிறது.
குடி அரசு-விடுதலை அலுவலகத்தில் ஆசிரியர் குழுவி;ல் சாமி சிதம்பரனார் சேர்ந்த தேதி-விலகிய தேதி இரண்டுமே துல்லியமாக பதிவு செய்யப்பட்டு அவர் அங்கே பணியாற்றியது, சுமார் ஓராண்டு காலம் மட்டுமே என்ற வரலாற்று உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் டாக்டர்- தமிழர் தலைவர் கி. வீரமணி;.
சாமி சிதம்பரனார் போலவே- கலைஞர் மு. கருணாநிதியும் ஈரோட்டில் ‘குடி அரசு’ அலுவலகத்துக்கு வந்ததை இந்த நூலில் குறிப்பிடுகிறார் (பக்.180).
“தந்தை பெரியாரின் கருத்துகளை தமது எழுச்சிமிக்க பேச்சாலும், உணர்ச்சிமிக்க எழுத்தாலும் திருவாரூரில் பரப்பிக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், தந்தை பெரியாரின் குருகுல வாசத்தில் தங்கி பணியாற்றிட ஈரோடு வந்து சேர்ந்தார். கலைஞர் கருணாநிதி அவர்கள் ஈரோட்டில் குடிஅரசு பத்திரிகையில் பணியாற்றியதை திருவாரூர் ‘முரசொலி’ எழுத்தாளர் தோழர் மு. கருணாநிதி அவர்களின் தற்கால முகவரி
மு. கருணாநிதி, C/O குடிஅரசு ஆபீஸ், ஈரோடு என்று 13-10-1945 குடி அரசு இதழ் தெரிவிக்கிறது” என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாமி சிதம்பரனாருக்கு சுமார் ஓராண்டு காலத்திலேயே வெளியேறியதைப் பதிவு செய்துள்ளபோது கலைஞர் கருணாநிதியின் ‘குருகுலவாசத்தின்’ காலத்தையும், நியாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லவா? அதுபற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறாமல் போனது ஏன்? என்ற கேள்வியை ‘ஊன்றிப் படித்து உண்மையை அறிய’ துடிக்கும்போது கேட்காமல் இருக்க முடியவில்லையே!
மறைந்த கவிஞர் கருணானந்தம் அவர்கள் 1979-இல் ‘தந்தை பெரியார்- முழுமுதல் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார் (பெரியார் திடலில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி பங்கேற்றார்.)
கடந்த இதழில் நாம் சுட்டிக்காட்டியது போல் பெரியார் பிறப்பிலிருந்து இறப்பு வரை தேதி வாரியாக- செய்தித் திரட்டு போலவே- இந்த நூல் வெளிவந்திருக்கிறது. அந்த நூல்;
“கலைஞர் கருணாநிதி - ஈரோடு ‘குடி அரசு’ அலுவலகத்தில் 1945 இறுதியில் வந்து 1946லேயே கோவைக்கும் சேலத்துக்கும் திரைப்படக் கதை வசனம் எழுதப் போய்விட்டார்”
என்று குறிப்பிடுகிறது (பக். 153.) ஆக- கலைஞர் கருணாநிதி ஈரோடு குடிஅரசில் இருந்த காலம் கூட சுமார் சில மாதங்கள்தான்!
கலைஞர் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் ‘குடிஅரசு’ பத்திரிகையில் தான் ஓராண்டு காலம் உதவி ஆசிரியராக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இதில் மற்றொரு செய்தியை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் (http://www.tn.gov.in/tnassembly/mkarunanidhi.htm) ‘குடி அரசு’ பத்திரிகையின் ‘ஆசிரியராகவே’ கலைஞர் கருணாநிதி பணியாற்றினார் (“served as Editor for kudiarasu”) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நம் கண்களுக்கு எதிரே நடக்கும் வரலாற்றுப் புரட்டு! பெரியார் மொழியில் சொல்வதென்றால் இமாலயப் புரட்டு!
இவ்வளவு குழப்பங்கள்- முரண்பாடுகள் உள்ள ஒரு நிகழ்வை பெரியாரின் ‘அதிகாரப்பூர்வ வரலாறு’ துல்லியமாகத் தெளிவு படுத்தியிருக்க வேண்டாமா?
‘பெரியார் வரலாறு- 1940-1949’ காலகட்டத்தில் மிக முக்கியமானது நிகழ்வு- அவர் கண்ட திராவிடர் கழகம் உருவான வரலாறு என்பதுதான். அந்த இயக்கத்தின் கொடி உருவான வரலாறும் மற்றொரு முக்கிய நிகழ்வு.
இந்த இரு நிகழ்வுகள் பற்றி ஏற்கனவே வரலாற்றுத் திரிபுகள் வந்த நிலையில்- வலிமையான மறுப்புகளும் வந்துள்ளன.
‘இது ஒன்றே அதிகாரப்பூர்வமான வரலாறு’ என்று அறிவித்து, வரலாறை எழுதியுள்ளதாகக் கூறுகிற டாக்டர் வீரமணி இது தொடர்பான முழுமையான செய்திகளைப் பதிவு செய்திருக்க வேண்டுமா இல்லையா என்பதே நாம் எழுப்பும் அடிப்படையான கேள்வி!
பெரியார் இயக்கத்துக்கான வரலாற்று ஆவணங்கள் எல்லாம்- திராவிடர் கழகத்திடம்தான் இருக்கின்றன.
வரலாற்று ஆய்வு நூலகம் வேறு இயங்குகிறது.
வரலாறுகளைத் தேடித் துருவி அலசக் கூடிய ஆய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள். தாராளமாக நிதியும் குவிந்து கிடக்கிறது.
இத்தகைய நிறுவனத்திடமிருந்து வெளிவரும் ‘அதிகாரப்பூர்வமான வரலாறு’- அரைகுறை உண்மைகளோடு வெளிவருவது பெரியாருக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?
முதலில் 1944-இல் திராவிடர் கழகம் உருவான வரலாற்றைப் பார்ப்போம்.
1944இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக மாற்றப்பட்டபோது என்ன நடந்தது? இதுபற்றி கலைஞர் கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ வரலாற்று நூலில் விளக்குகிறார்.
(இது ‘தினமணிக் கதிரில்’; கலைஞர் கருணாநிதி தொடராக- எழுதி 1975 டிசம்பரில் நூலாக வந்தது)
அதில் அவர் இவ்வாறு எழுதுகிறார்.
“(27-8-1944இல் நடந்த சேலம); மாநாட்டில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பெரியாரை இறக்கிவிட நீதிக்கட்சிச் சீமான்களும், கோமான்களும் முயன்றார்கள். அப்படி நடைபெற்றுவிடாமல், பெரியாரின் தலைமையைக் காப்பாற்ற அண்ணா நாடெங்கும் சூறாவளிப் பயணம் செய்து கட்சித் தொண்டர்களின் ஆதரவைப் பெருக்கினார்.
எதிர்ப்புகளை முறியடிக்கவும், நீதிக்கட்சியை ஏழைகளின் இல்லத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்ற தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் இந்திய விடுதலையில் தனக்கிருந்த அழிக்க முடியாத பற்றினை வெளிப்படுத்திக் கொள்ளவும் அண்ணா அவர்கள் சேலம் மாநாட்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். சரித்திரப் புகழ்பெற்ற அந்தத் தீர்மானத்துக்கு “அண்ணா தீர்மானம்” என்று பெயர்........................
......................... பெரியார் தலைமையை அண்ணா காப்பாற்றியது மட்டுமல்ல, நீதிக்கட்சிக்கு ஒரு புதிய திருப்பத்தையும் தந்தார்!”
(நெஞ்சுக்கு நீதி;: பக். 85) என்று எழுதியிருக்கிறார். இது கலைஞர் கருணாநிதி நெஞ்சைத் தொட்டு எழுதிய நீதியல்ல- உண்மையைப் புரட்டும் நீதி!
கலைஞர் கருணாநிதி கூறியது போல் பெரியாரின் தலைமையைக் காப்பாற்ற அண்ணா நாடெங்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு ஆதரவைப் பெருக்கினாரா? இதற்கு ‘உலகத் தலைவர் பெரியார்’ நூலில் (பக்.155-156) இடம் பெற்றுள்ள பெரியார் உரையே பதிலாக அமைந்திருக்கிறது.
பெரியாரின் எதிரணியில் அண்ணாவே இருந்தார் என்ற சந்தேகம் தனக்கே இருந்தது என்பதை அந்த உரையில் பெரியார் குறிப்பிடுகிறார். அண்ணாதுரைத் தீர்மானம் என்ற தீர்மானத்துக்குப் பெயரிட்டு தானே எழுதி அண்ணாவை படிக்க வைத்ததாகவும் பெரியாரே பேசியிருக்கிறார். இதை ‘உலகத் தலைவர் பெரியார்’ வரலாறு பதிவு செய்திருக்கிறது.
ஆனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியாரின் உரை, எங்கே எந்த தேதியில் நிகழ்த்தப்பட்டது என்ற குறிப்பே- ‘அதிகாரப்பூர்வ வரலாற்றில்’ குறிப்பிடப்படவில்லை.
அந்த உரை- சிதம்பரத்தில் 13-10-1959 லும் கடலூரில் 14-10-1959 லும் பெரியார் ஆற்றிய உரை! இதே சேலம் மாநாட்டுப் பிரச்சனைகளை விளக்கி 23-5-1971ல் திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாட்டிலும்கூட பெரியார் பேசியிருக்கிறார். அந்த உரையில்தான் தனக்குப் பிறகு தனது வாரிசு தனது நூல்கள்தான் என்பதையும் பெரியார் தெரிவித்தார். பெரியார் பேசிய ஒரு முக்கிய வரலாற்றுப் பேருரை நிகழ்ந்த இடம், தேதி கூட குறிப்பிடப்படாமல் எழுதுவதுதான் ‘அதிகாரப்பூர்வ வரலாறா’?
சேலத்தில் 27-8-44இல் நீதிக் கட்சியின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட வரலாற்றை-‘உலகத் தலைவர் பெரியார் வரலாறு’ எப்படி கூறுகிறது?
“நீதிக் கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது இம்மாநாட்டில் தான். திராவிடர் என்ற சொல் புதிதல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படித்த சிலர், தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி 1892ஆம் ஆண்டிலேயே ‘திராவிட ஜனசபை’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். 1913ஆம் ஆண்டிலேயே ‘சென்னை திராவிடர் சங்கம்;’ என்றே ஆரம்பிக்கப்பட்டிருந்தது”
- என்ற இரண்டு சான்றுகளோடு இந்த வரலாற்றுக் குறிப்புகள் முடிக்கப்பட்டுவிடுகின்றன.
ஆனால் உண்மையில் 1913ஆம் ஆண்டுக்கும் 1944ஆம் ஆண்டுக்கும் இடையே ‘திராவிடர்’ என்ற சொல்லை பெரியார் பயன்படுத்தியதற்கு ஏராளமான சான்றுகள் இயக்க வரலாற்றிலே உண்டு. ‘அதிகாரப்பூர்வமான வரலாறு இது ஒன்றே’ எனக் கூறிக் கொள்கிறவர்கள், அவைகளைப் பதிவு செய்ய வேண்டாமா என்பதே நமது கேள்வி.
சேலம் மாநாட்டுத் தீர்மானம் வருவதற்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார், ‘திராவிடர்’ என்ற கருத்தை பல இடங்களில் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரில் இயங்கிய அமைப்புகளின் பல கூட்டங்களிலேயே பங்கேற்று பேசியுள்ளார்.
• 19-6-1927 கோவில்பட்டியில் திராவிடர் கழகத்தின் 18ஆவது ஆண்டு விழா பெரியார் தலைமையில் நடந்தது. அதில் ஆரியர்- திராவிடர் பற்றி விவரித்துப் பேசினார். ஆரியர்- திராவிடர் சங்கங்கள் குறித்தும் அதில் பெரியார் உரையாற்றினார்.
• 1927லேயே திருவாரூரில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு இயங்கி வந்த செய்தியை ‘குடி அரசு’ (22-5-1927) குறிப்பிடுகிறது.
இந்த செய்திகள் பலவும் அதிகாரப்பூர்வ வரலாற்றில்; பதிவு செய்யப்படும் போதுதான் அது முழுமை பெறும். அது மட்டுமல்ல.
சேலம் மாநாடு நடப்பதற்கு அய்ந்து மாதங்களுக்கு முன்பே 13-2-1944இல் சென்னையில் நீதிக்கட்சி மாநாடு நடைபெறுகிறது. அதன் முதல் தீர்மானமே, தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதை சென்னை மாகாண திராவிடர் கட்சி என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப் போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்வது என்பதுதான்;. (ஆதாரம் 26-2-1944 குடி அரசு 16ஆம் பக்கம்) சேலம் மாநாடு நடந்த தேதி 1944- ஆகஸ்ட் 27.
ஆனால் அதே ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியே சேலம் செவ்வாய்ப் பேட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார். அதைப் பதிவு செய்துள்ளார் திருவாளர் வீரமணி. ஆனால்,
‘ஜஸ்டிஸ் கட்சி திராவிடக் கட்சியாக மாற வேண்டும். சேலத்திலே நடைபெறவிருக்கும் மாகாண மாநாட்டில் இதையே முதல் தீர்மானமாகக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார்’
என்ற சொற்றொடர் மட்டுமே திருவாளர் வீரமணியின் ‘உலகத் தலைவர் பெரியார்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு வரலாற்றுக் குறிப்பு ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா?
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் பெரியார் பேசிய அந்தக் கூட்டமே ‘திராவிடர் கழகம்’ என்கிற அமைப்பின் முதல் ஆண்டு விழாக் கூட்டம்.
1913ஆம் ஆண்டுக்குப் பிறகும் பெரியாராலேயே திராவிடர் - திராவிடர் கழகம் என்ற கருத்தாக்கங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது என்பதைத்தான் இவை காட்டுகின்றன. ஆனால் 1913ல் சென்னை திராவிடர் சங்கம் தொடங்கப்பட்ட செய்தியைக் கூறியதோடு, நூலின் நாயகரான பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டாமல் டாக்டர் வீரமணி விட்டுவிட்டார். இதுதான் ‘அதிகாரப்பூர்வ வரலாறா’? இதைப் பதிவு செய்திருந்தால் தற்போது பரப்பப்பட்டு வரும் வரலாற்றுப் பொய்களுக்கும் இது தக்க பதிலாக அமைந்திருக்கும்.
அப்படிப் பரப்பப்படும் வரலாற்றுப் பொய் இதுதான்.
சேலம் மாநாட்டில் அண்ணல்தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் வேண்டுகோளை ஏற்று தமிழர் கழகம் என்றே பெயர் சூட்ட பெரியார் முடிவு செய்திருந்தார் என்றும் ஆனால் மாநாட்டில் கடைசி நேரத்தில் மணவை ரெ. திருமலைசாமி போன்ற பிறமொழியாளர்களின் வற்புறுத்தலால்தான் ‘திராவிடர் கழகம்’ என்று அன்று மாலையே முடிவை பெரியார் மாற்றிக் கொண்டார் என்றும் தவறான கருத்து தற்போதும் பரப்பப்பட்டு வருகிறது. இந்தத் தவறான கருத்துகளுக்கும் இது மறுப்பாக அமைந்திருக்குமே! (‘எழுகதிர்’ ஏட்டில் அருகோபாலன ;கூட இந்தப் பொய்யை அண்மையில் எழுதியிருந்தார்.)
மேலும் ‘நெஞ்சுக்கு நீதியில்’- “நீதிக்கட்சியை ஏழைகளின் இல்லத்திற்கு கொண்டு வர வேண்டுமென்று தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள “அண்ணாத்துரை தீர்மான” த்தை அண்ணா கொண்டுவந்தார”- என்கிறார் கலைஞர்.
வரலாற்றுப் பதிவுகளில் உண்மைகளை பலிகடா வாக்கிவிடக் கூடாது.
26.12.1926 நாளிட்ட ‘குடிஅரசில்’ (கலைஞருக்கு அப்போது வயது இரண்டு) ‘பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்’ என்ற கட்டுரையின் இறுதி சொற்களாக...
“பார்ப்பனர் அல்லாதார் என்றால் பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தில் 100க்கு 90 பேர்களாயிருக்கும் பாமர மக்களையும் ஏழை மக்களையும் குறிக்குமே அல்லாமல் 100க்கு 5 பேர் கூட இல்லாத ராஜாக்களையும் ஜமீன் தார்களையும், பிரபுக்களையும் வக்கீல்களையும் மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்றம் என்பதும் 100க்கு 90 பேர்களின் முன்னேற்றத்தையும் சேர்த்;து குறிக்குமேயல்லாது 100க்கு 5பேர்களின் முன்னேற்றத்தை மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்;. இச்சங்கம் உண்மையான பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்ற சங்கமா அல்லது யாரோ சிலர் குறிப்பிட்ட நபர்களின் முன்னேற்ற சங்கமா என்பது வெளியாக இது ஒருதக்க சமயமாய் ஏற்பட்டுவிட்டதால் ஒவ்வொரு தலைவரும் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதாக விண்ணப்பித்துக் கொள்கிறோம்”
- என்று பெரியார் எழுதியிருக்கிறார். இதைச் சுட்டிக் காட்டியிருக்கலாமே! பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து வெளியிட்டு வரும் ‘குடிஅரசு’ தொகுப்பின் மூன்றாவது தொகுதியில் பின் அட்டையிலேயே, இந்த உரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘அண்ணாத்துரை தீர்மானம்’ வருவதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவ்வளவு துல்லியமாக இயக்கம் யாருக்காக என்று தெளிவாக கருத்தறிவித்த பெரியாருக்கு இல்லாத அக்கறையை அண்ணா கொண்டிருந்ததுபோல் கலைஞர் கருணாநிதி எழுதுகிறார்.
அதிகாரப்பூர்வ கழகம் - அதிகாரப்பூர்வ அமைப்பு - அதிகாரப்பூர்வ தமிழர் தலைவர் என்ற தொனியில்- ‘அதிகாரப்பூர்வ வரலாறு’ என்ற ‘அக்மார்க்’ முத்திரையிடப்பட்ட ஒரு வரலாறு இப்படி அரைகுறையாக விருப்பு வெறுப்புகளோடு- அவசர கோலத்தில் அச்சேறலாமா என்பதே ‘அதிகாரப் பூர்வமற்ற’ ஆனால் கொள்கைப்பூர்வமான தமிழர்களின் கேள்வி!
(அடுத்த இதழில் கழகக் கொடி பிறந்த வரலாற்றில் ‘அதிகாரப்பூர்வ’ங்களின் அந்தர் பல்டிகள்)