1949 ஆம் ஆண்டு தோழர் பெரியாரிடமிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கினார் அண்ணா. அந் ஆண்டிலிருந்து 1967 இல் தி.மு.க ஆட்சி அமைக்கும் வரை பெரியார், தி.மு.க.வைக் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். ஆனால், அண்ணாவின் ஆட்சி அமைந்த பிறகு அண்ணாவின் பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளால் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார் பெரியார்.

 1967 லில் இருந்து பெரியார் மறைந்த 1973 வரை அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி, தி.மு.க. என்ற அமைப்பு ஆகியவற்றுக்குக் காவல் அரணாகவே இயங்கினார் பெரியார். இந்தக் காலகட்டத்தில் பெரியார், தி.மு.க வைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் பேசிய உரைகளும், அறிக்கைகளும் அதிகமாகப் பரவவில்லை.

தனித்தமிழ்நாடு கேட்டுக் கொண்டிருந்த பெரியார், அதே போராட்டக் காலத்திலேயே - போராட்டக் களத்திலேயே தி.மு.க.வையும் மிகப்பெரும் ஆதரவு சக்தியாகக் கருதினார். தி.மு.க.வையும், அக்கட்சியின் ஆட்சியையும் பாதுகாப்பதிலும் கவனமாக இருந்தார். அந்த சமூக அக்கறை மிகுந்த அணுகுமுறையை நமது இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொகுப்பு.

anna periyar and karunanidhiதி.மு.க அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும், தம்மிடம் மிகுந்த கனிவும், மரியாதையும், நன்றியும், அன்பும் செலுத்துகிறார்கள் என ஒரேடியாகப் புகழ்ந்தார் பெரியார். 16.9.1967 விடுதலை தலையங்கம் பெரியாரின் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. காரணம்?

28.11.1967 இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா திராவிடருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கிட்டாதிருந்த பெருவாய்ப்பை அளித்தது. அதாவது இதுவரை நடைபெற்றிருந்த சுயமரியாதை திருமணங்கள் அனைத்துமே செல்லுபடியாவதற்கு (With Retrospective Effect) இச்சட்டம் வழிவகுத்து, பார்ப்பனரின் மதகுருத்தன்மை ஒழியவும், மூடச்சடங்குகள் அகலவும் வழிவகுத்து, உரிமையளித்த இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாகப், பெரியாரின் நீண்ட நாளையக் கனவை நனவாக்கினார் முதல்வர் அண்ணா.

நாம் இருக்கின்ற காலத்துக்குள், நமக்குப்பின் வேறு யார் வந்து ஆண்டாலும் மாற்ற முடியாதபடி, சில நிலையான காரியங்களை, அவை மூன்று நான்காயிருந்தாலும் கூடப்போதும்; செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லிய வண்ணமே அண்ணா தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமண சட்டம், பி.யூ.சி வரை இலவச கல்வி ஆகியத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அந்தச் சாதனைகளைப் பாராட்டும் வண்ணமாகப் பெரியார் பாராட்டுத் தலையங்கத்தை எழுதியிருந்தார். இதுபோல, 1973 வரை தோழர் பெரியார் எழுதியவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

 *40 வருடகாலம் இம்முறையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றும் இது (சீர்த்திருத்தத் திருமணம்) சட்டப்படி செல்லுபடி அற்ற திருமணமாக இருந்தது. அதனை அண்ணா அவர்கள் ஆட்சி, சட்டப்படி செல்லக்கூடிய தாக்கிவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே முதலில் அண்ணாவிற்கு வணக்கம் தெரிவித்து ஆரம்பிக்க வேண்டும். - விடுதலை, 06.08.1968

*அண்ணாத்துரை பின் சரித்திரத்தில் “சமுதாயச் சீர்த்திருத்த வீரர்” எனப் பொறிக்கப்படுவார் என்பது உறுதி. - விடுதலை, 20.08.1968

*அண்ணா அவர்கள் நம் நாட்டுக்கு நிதி என்று தான் சொல்லவேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படித் துணிந்து ஆட்சி செய்து வருகிறார். ஒவ்வொரு மன்றங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணா அவர்கள் படம் இருக்கவேண்டும். ஏனெனில், வரலாறு தோன்றிய காலம் முதல் இம்மாதிரிப் பகுத்தறிவாளர் ஆட்சி ஏற்பட்டதே கிடையாது. -விடுதலை, 10.09.1968

*அண்ணாவை “அறிஞர் அண்ணா” என்று சொல்லக் காரணம் அவருடைய அறிவின் திறம் தான். - விடுதலை, 15.09.1968

*இந்த நாட்டில் தமிழர் சமுதாயத்தினருடைய அன்பை இதுவரை வேறு எவரும் பெறாத அளவுக்குப் பெற்றுவிட்டார். எங்கு சென்றாலும் எப்பக்கம் திரும்பினாலும் அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க!! அண்ணா வாழ்க!!! என்ற முழக்க ஒலிதான். - விடுதலை, 15.09.1968

*அவருக்குத் (அண்ணாவுக்கு) தெரியாதது ஒன்றுமில்லை. எல்லா விசயங்களையும் அறிந்தவர். இராமாயணத்தைக் கொளுத்த இருக்கிறார். கடவுள் படங்களை எல்லாம் பிய்த்து எடுத்திருக்கிறார். மாபெரும் புலவர்களையெல்லாம் திணற வைத்திருக்கிறார். குடிஅரசு, விடுதலை பத்திரிக்கையில் பத்திரிக்காதிபராக இருந்து பல பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி இருக்கிறார். பல புத்தகங்கள் கடவுள், புராணங்களை பற்றி எழுதி இருக்கிறார்.- விடுதலை, 20.09.1968

*அண்ணா அவர்கள் சமுதாயத் துறையில் பெரிய மாற்றம் ஏற்படுத்த அவர் கைக்கொண்டிருக்கும் ஆயுதம் பகுத்தறிவாகும். அதாவது எந்தக் காரியமானாலும் அறிவு என்ன சொல்கின்றது என்று பார்த்து சிந்தித்து செயல்படுத்துவதாகும். - விடுதலை, 30.10.1968

*அண்ணா அவர்கள் நமக்குக் கிடைத்தற்கரியது கிடைத்தது போன்றவராவார்கள்; அவர் போனால் அடுத்து அந்த இடத்திற்குச் சரியான ஆள் இல்லை என்று சொல்லும்படி அவ்வளவு பெருமை உடையவர்கள். நமது நல்வாய்ப்பாக அவரது தலைமையில் பகுத்தறிவாளர் ஆட்சி அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது. தமிழர் கடமையாகும். - விடுதலை, 06.11.1968

*அண்ணாவின் குணம் மிகமிகத் தாட்சண்ய சுபாவமுடையது என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்ல மிகவும் தயங்குவார். நல்ல ஆராய்ச்சி நிபுணர். - விடுதலை, 03.02.1969

*அண்ணா அவர்களின் கொள்கை சந்தேகத்திற்கு இடமில்லாதவையேயாகும். அவர் நம்மிடம் இருந்தபோது மட்டுமல்ல, வெளியே சென்ற பின்னும் ஆரிய மாயை, கம்பரசம், கடவுள், பகுத்தறிவுக் கருத்துக்கள் என்பதாகப் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். அண்ணா அவர்களைப் போல அவரது தம்பிகளையும் கொள்கையில் உருவாக்கி இருக்கிறார்கள். - விடுதலை, 12.02.1969

*அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி, கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாதவர் அவர் பதவிக்கு வந்தபோதும் கடவுளை நம்பாதவர். அதனைக் காரியத்தில் காட்டினார். எனக்கு சொல்லவே வெட்கமாக இருக்கின்றது; இருந்தாலும் சொல்லுகின்றேன். இந்த மந்திரி சபையே எனக்கு காணிக்கையாக வைத்திருப்பதாக அவர் சொன்னார். - விடுதலை, 13.02.1969

*அரசாங்க அலுவலங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவு போட்டார். இதன் மூலம் மூடநம்பிக்கை இல்லை என்பதைக் காட்டிக்கொண்டார். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது முக்கியமல்ல; அதிலே கடவுள், மதம் புகக்கூடாது என்பதற்கு வழிசெய்தது தான் முக்கியமாகும். அவர் சிறந்த பகுத்தறிவுவாதி. அவ்வளவு பெரிய மேதைக்கு அவர் மறைந்த அன்று 30 இலட்சம் பேர் பின் தொடர்ந்தார்களென்றால் இந்த நாட்டு மக்களை அவர் மக்களை அவர் அவ்வளவு தூரத்திற்குப் பண்படுத்திவிட்டார் என்று அர்த்தம். - விடுதலை, 13.02.1969

*அண்ணா மீது உண்மையான அன்பு காட்டுகிறவர்கள் அவரைப் பின்பற்றிப் பகுத்தறிவுப் பாதையில் நடக்க வேண்டும். - விடுதலை, 13.02.1969

*எந்தக் காரியத்தையும் கடவுள், மதம், சாத்திரம் ஒப்புக்கொள்கிறது என்பதற்காக ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது அறிவைக்கொண்டு சிந்தித்து எனது அறிவிற்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னவர் புத்தராவார் என்பதோடு மற்றவர்களும் அதன்படி நடக்கவேண்டு மென்றும் சொன்னவராவார். அண்ணா அவர்களும் கடவுள், மதம், சாத்திரம், பழமை முன்னோர்கள் சொன்னது என்பதற்காக எதையும் கடைபிடிக்காதே, பின்பற்றாதே உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப்பார். உன் அறிவிற்கு அது சரியென்று தோன்றினால் அதை ஏற்று அதன்படி நட, உன் அறிவிற்குச் சரியில்லையென்று தோன்றினால் தள்ளிவிடு என்று கூறியவராவார்; என்பதோடு எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்கும் தன்மையுடையவர். - விடுதலை, 20.02.1969

*இன்றைய தினம் நம்முடைய வாழ்வு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அண்ணா அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டுமென்று சொன்னார். நான் சொல்கிறேன் கடமை, கண்ணியத்தை பற்றி கவலையில்லை. கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். அதுதான் அண்ணா இல்லாத நேரத்தில் மிக மிக முக்கிய அவசியமாகும். - விடுதலை, 20.02.1969

*அண்ணா அவர்கள் என்னிடம் வந்தபோது படித்த அ,ஆ வன்னாவெல்லாம், மனித சமுதாயத்திலிருந்து இழிவு, மானமற்ற தன்மை ஆகியவைகளுக்குக் காரணம் கடவுள், மதம், சாத்திரம், புராணம், இதிகாசம், தர்மம் இவைகள்தான். இவைகள் ஒழிக்கப்பட்டால்தான் மனிதச் சமுதாயத்தின் இழிவும், மானமற்ற தன்மையும் போகும் என்பதேயாகும். - விடுதலை, 01.03.1969

 *நம்நாட்டில் பலர் அரசியலுக்காக, சுதந்திரத்திற்காக, பக்திக்காக, மோட்சத்திற்காகப் பாடுபட்டிருப்பார்கள். ஆனால், அண்ணா அவர்கள் இதற்காகப் பாடுபடவில்லை என்பதோடு இவைகளுக்கு முற்றும் மாறான சமுதாயச் சீர்த்திருத்தத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, மக்களின் நல்வாழ்விற்காக நம் மக்களுக்கு ருசியளிக்காததும், அதனால் எந்தப் பணி பாராட்டும் கிடைக்காதது மான சமுதாயச் சீர்த்திருத்த பணியினை மேற்க்கொண்டிருந்தார். - விடுதலை, 20.03.1969

*சமுதாயச் சீர்த்திருத்தப் பணி மற்ற பணிகளைப்போல் சாதாரணப் பணியல்ல. மக்களின் வெறுப்பிற்கும், ஏச்சுப்பேச்சுக்கும் ஆளாகி அவர்கள் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், நடப்பிற்கும் விரோதமாகச் செய்யும் பணியாகும். சமுதாயச் சீர்த்திருத்தப் பணிக்கு என்ன செய்யவேண்டுமோ அதையே சிறப்புப் பெயராகக் கொண்டவர் அண்ணா ஆவார். `அறிஞர்’ என்கின்ற பெயர் வேறு எவருக்கும் கிடைத்தத்கரிய பெயராகும். அப்படிப்பட்ட பெயரை முதலில் அண்ணா பெற்றார். நம் நாட்டில் இதுபோல் பெயர் பெற்றிருந்தவர் புத்தர் ஒருவர் தான் ஆவார். புத்தியைக் கொண்டு சிந்தித்ததாலேயே அவர் புத்தரானார். அறிஞர் என்ற பெயர் பெற்றவர்களால் தான் சமுதாயச் சீர்திருத்தம் செய்ய முடியும். - விடுதலை, 20.03.1969

*அண்ணா ஒருவர் தான் எந்தப் புரட்சியும், கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரைப் பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார்கள். - விடுதலை, 23.12.1969

*அண்ணா ஒரு களஞ்சியம். ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள் ``என்சைக்லோபீடியா” என்று அது எல்லாக் கலைகளும் விசயங்களும் நிறைந்த புத்தகமாகும். அது போன்றே எல்லாக் கலைகளையும், விசயங்களையும் உணர்ந்தவர் அண்ணா அவர்கள் ஆவார்கள். - விடுதலை, 11.03.1970

*அறிஞர் அண்ணாவின் புகழ் மேலும் மேலும் ஓங்க வேண்டுமானால் அவரது பகுத்தறிவுக் கொள்கையும் சுயமரியாதை மேம்பாட்டையும் மனதில் நிறுத்திச் செயல்படுவது தான் அதற்கு வழிவகுக்கும். - விடுதலை, 11.03.1970

*அண்ணா அவர்களின் பெருமையைப் பற்றி வெகு பேருக்குத் தெரியாது. ஒரு கட்சித் தலைவர்; அரசியலுக்காகப் பாடுபட்டவர் என்பதுதான் தெரியும். அண்ணா அவர்கள் தனியாக ஒரு கொள்கையைக் கொண்டு அக்கொள்கையை மக்களிடையே பரப்பி மக்களைப் பக்குவப்படச் செய்து அதன் மூலம் ஆட்சியை அமைத்தவராவார். இவரைப் போல் ஒருவரை சொல்ல வேண்டுமானால் லெனினைத் தான் சொல்லாம். அவர் தான் அண்ணா போன்று தனியாக கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியை அமைத்து காலமானவர் ஆவார். -–விடுதலை, 01.07.1970

*இந்தியாவிலேயே அண்ணா சாதித்ததைப் போல் எவருமே சாதிக்கவில்லை. - விடுதலை, 03.02.1973

தோழர் அண்ணாவின் மறைவில் தோழர் பெரியார்

துயரம் மிகுந்த தோழர் அண்ணாவின் மறைவுச் செய்தி 02.02.1969 அன்று வெளியிட்ட சுருக்கமான செய்தி, ``நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய, பரிகாரம் செய்ய முடியாத துக்கச் சம்பவம் ஆகும்.” என்று உடனடிச் செய்தியாகப் பெரியாரால் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது!.

03.02.1969 விடுதலையில், “அண்ணாவின் முடிவு” என்ற பெரியாரின் தலையங்கம் வெளியாயிற்று.

"இன்று அண்ணா அவர்கள் முடிவு எய்திவிட்டார். இந்த முடிவு தமிழ்நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல், இந்தியாவிலுள்ள மக்களை மாத்திரமல்லாமல், உலகில் பல பாகத்திலுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்.

அண்ணாவுக்குச் செய்த வைத்தியச் சிகிச்சை உலகில் வேறெங்கும் செய்திருக்கமுடியாது. டாக்டர் சதாசிவம் தலைமையில் அமைந்த குழுவினரும் வேலூர் டாக்டர்கள் டாக்டர் ஜான்சனும், டாக்டர் பதம்சிங்கும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.

அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றம் அடைய காத்திருந்தது. நான் இந்த மந்திரி சபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்து விட்டேன். என்று அண்ணா சொன்னதை பெரியாரின் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதினேன்.

நான், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெறும்வரை, அக்கழகத்திற்கு படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து, மிக்க பெருந்தன்மையுடன், நட்புக்கொள்ள ஆசைப்பட்டு என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன், நண்பராகவே நடத்தினார்.

இப்படிப்பட்ட ஒரு அற்புதகுணம் படைத்த அண்ணா முடிவானது, தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும். மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணாவின் புகழ் மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இப்படி எல்லாரும் துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.

இனியும் அவர் புகழ் ஒங்கவேண்டுமானால், அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெறவேண்டும். தி.மு.க தோழர்களையும் நான் எனது தி.க தோழர்களை போலவே கூட்டுப் பணியாளர்களாகவே கருதுகிறேன். பொதுமக்கள் எல்லாருமே ஒத்துழைத்து, மக்களுக்கு வேண்டிய நலன்களைப் பெற பாடுபட வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.”

வானொலி உரை

03.02.1969 வானொலியில் பெரியார் இரங்கலுரை ஆற்றினார்.

"அண்ணா முடிவெய்திவிட்டார் அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! நோய் வருவதும், முடி வெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையே ஆகும். அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமே ஆகும் என்றாலும் இவ்விஷியத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி, மக்களின் உச்சநிலை துக்கக் கொண்டாட்டத்தையே பெற்று விட்டார்!”

இன்று மக்களுக்கு உள்ள கவலையெல்லாம் நானறிந்த வரை, அண்ணா முடிவடைந்துவிட்டதே இனி ஆட்சி எப்படி இருக்குமோ? என்பதுதான்! நான் சொல்வேன். ‘அண்ணா இறந்துவிட்டார்; அண்ணா வாழ்க! என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும், திருப்பமும் இல்லாமல், இவரது கொள்கை வளர்ந்து ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியை தங்களுக்கு வழிகாட்டிய வைத்துக்கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகின்றேன். இயற்கையும் அவர்களை அந்தப்படியே நடக்கச்செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்படவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்."

04.02.1969 இரவு 8 மணிக்கு இது ஒலிபரப்பாகியது. மக்கள் கூட்டம் 15 இலட்சம் பேர் என்று குறிப்பிட்டிருந்தார்.

"நாடு பஞ்சம், வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானா? ஆட்சி மீது குறை சொல்வதை நிறுத்துகிறானா? என் உயிர் உள்ளவரை தி.மு.க ஆட்சியை ஒழியவிடமாட்டேன்!” என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஓர் அக்கிரமத்தை குறிப்பிட்டிருந்தார்.

* “ஜில்லா ஜட்ஜுகள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, அய்கோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்?”

என்ற கேள்விக்கு, என்ன பதில்? ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதை பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார்.

17.09.1969 தோழர் பெரியாரின் 91 –வது பிறந்தநாள் விழா தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது,

“பெரியார்தான் தமிழக அரசு. தமிழக அரசுதான் பெரியார். நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்பதற்கு ஒரே சான்று, அதிர்ஷ்டமில்லாததென்று சொல்லப்படும் 13 தான் இன்றைய அமைச்சர்களின் எண்ணிக்கையாகும். நாங்கள் ஆதரவு பெற்றவர்கள் அல்ல. பெரியாராலேயே ஆளாக்கப்பட்டவர்கள்"

என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில ‘சாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். எனது 90 ஆவது வயதை விட, 91 ஆவது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து.

* “தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.” - விடுதலை, 31.07.1969 –

தோழர் பெரியாரின் நீண்டகால சமூகநீதியின் உச்சபட்ச கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் கலைஞரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை.

தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றம் 1861 ல் துவங்கி 1973 வரை நிகழாத ஒரு வரலாற்று நிகழ்வு தோழர் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 112 ஆண்டுகளுக்கு பிறகு 14.02.1973 அன்று முதன்முறையாக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி ஏ.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டார்.

கலைஞர் குறித்தும் தி.மு.க குறித்தும் பெரியார்

திராவிடர் இயக்க அரசியல் பிரிவான தி.மு.க குறித்து கலகக்காரர் தோழர் பெரியாரின் 1967 தொடங்கி 1974 முடிய பெரியாரின் மதிப்பீடுகள்:

*கருணாநிதி அவர்கள் இராசதந்திரம் மிக்கவர். இந்த நாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவற்றை பற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் மிக்க அறிவுத் திறன் காரணமாக தீர்த்து வருகிறார். - விடுதலை, 10.02.1971

*யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது. - விடுதலை, 15.09.1967

* ஜஸ்டிசு கட்சி கவிழ்ந்ததற்குக் காரணம் இன்றைய காங்கிரசார் போலவே தமிழர்கள், பார்ப்பன தாசர்கள் செய்த துரோகம் அல்லாமல் வேறு காரணம் ஒன்றுமில்லையே! இன்னும் சொல்கிறேன் கடுகளவு தமிழர் உணர்ச்சி பற்றுள்ள யாரும் இன்றைய (தி.மு.க) ஆட்சியை கவிழ்க்க நினைக்கவே மாட்டார்கள். - விடுதலை, 18.09.1967

*தாங்கள் பகுத்தறிவுவாதிகள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்; தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதைத் தங்களின் செயல் மூலம் காட்டிக் கொண்டார்கள். எல்லா மந்திரிகளையும் தமிழர்களாக பார்த்துப் போட்டார்கள். உத்தியோகங்களைத் தமிழர்களுக்குக் கொடுத்தார்கள்.

*தண்ணீரில் தன் மகன் விழுந்து தத்தளிக்கும்போது, தன் மானத்தைப் பற்றிக் கவலையில்லாமல் தன் சீலையை அவிழ்த்து ஒரு முனையை வீசித் தண்ணீருக்குள் எறிந்து, தத்தளிக்கும் மகனை அந்த முனையை பிடித்து கொள்ளச் செய்து கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாயைப்போல் நாம் (தி.மு.க வை) காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். - விடுதலை, 05.03.1968

*தி.மு.கழகமென்றால் பகுத்தறிவு இயக்கம் என்று பெயர். அதில் உள்ளவர்கள் யாவரும் பகுத்தறிவாதிகளாவார்கள். யாரோ சில பேர் பட்டை நாமம் போட்டுக் கொள்கிறவர்கள், கோயிலுக்குப் போகிறவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் பதவிக்காக – சுயநலம் – காரணமாகத் தி.மு.கழகத்திலிருப் பவர்களே தவிர கொள்கைக்காக இருப்பவர்கள் அல்ல. - விடுதலை, 05.01.1971

*திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக் குறைய இரண்டு, மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும். - விடுதலை, 11.03.1971

*பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்றத் திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும் படியான நிலையில் இருந்து வருகிறது. - விடுதலை, 11.03.1971

*தி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். ஆகவே இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர் கடமையாகும்!. –- விடுதலை 19.02.1973.

உதவிய நூல்கள்: பெரியார் கணினி (தொகுதி -1, 2), பெரியார் 95, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Pin It