திராவிட தேசியம் பேசி தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பங்களித்த அறிஞர் அண்ணா, இந்திய தேசிய அரசியல் சட்டவரையறைக்கு உட்பட்ட பதவி அரசியலில் பங்கெடுத்தார். அண்ணாவைத் தமிழ்த் தேசிய நோக்கில் ஆய்வு செய்தால், அவரிடம் பல சறுக்கல்கள், சமரசங்கள், ஒரு தேசிய விடுதலைப் போராளியிடம் காணக் கூடாத ஒவ்வாமைகள் மற்றும் போதாமைகள், தன் காரியத்தைச் சாதிக்க முன்னமே திட்டமிட்டு, அதை மற்றவர்கள் பேரால் நடத்திக் கொள்ளும் தந்திரங்கள் - ஆகிய கூறுகள் ஒளிந்து கிடந்ததையும் அவை தமிழ்த் தேசிய அரசியல் முன்னெடுப்புக்கு ஊறு விளேவித்ததையும் காணலாம்.

அண்ணாவின் அரசியல் வாழ்வு 1937இல் தொடங்கி 1969இல் அவரது மறைவுடன் நிறைவு பெறுகிறது. இதில் 1937இல் இருந்து 1949இல் தி.மு.க.வைத் தோற்றுவிக்கும் வரையில், அண்ணா இன விடுதலை அரசியல் பேசினார். 1949 முதல் 1962 வரை திராவிட நாடு விடுதலை பேசினார்; 1957இல் இருந்து தேர்தல் அரசியலில் பங்கேற்றார். தேர்தல் அரசியலில் பங்கேற்ற நாள் முதல் தம் அடிப்படைக் கொள்கைகளே அடக்கி வாசித்தார். 1963இல் பிரிவினைத் தடைச் சட்டத் திருத்தம் வந்த பிறகு திராவிட நாடு கோரிக்கையைக் கை கழுவினார்; தமிழ் மொழி உணர்வை மட்டும் உயர்த்திப் பிடித்தார். அண்ணாவின் அரசியல் ‘விடுதலை’ அரசியல் அல்ல, அது தேர்தல் அரசியல்தான். அண்ணா தமிழின உணர்வை வளர்த்தெடுத்தார்; அதைத் தேர்தல் வெற்றியாக மாற்றிக் கொண்டார்.

அண்ணாவையும் தி.மு.க.வின் வரலாற்றையும் ஆர்வத்துடன் படிப்பவர்கள், அண்ணாவின் அல்லது தி.மு.க.வின் தடுமாற்றம், அது 1957இல் இரண்டாவது பொதுத் தேர்தலில் ஈடுபட்டதிலிருந்தே தொடங்குகிறது எனக் கருதுவார்கள். ‘தி.மு.க.வின் தேர்தல் அரசியலைப் பொறுத்த வரையிலும் கூட, திருச்சி மாநாட்டில் (1956) முறையாக வாக்கெடுப்பு நடத்திப் பெருவாரியான தொண்டர்களின் விருப்பப் படி ஜனநாயக முறையில் முடிவெடுத்து தி.மு.க 1957இல் தேர்தல் களத்தில் நுழைந்தது’ என்பது ஒரு சாமானியனின் பார்வை. அது போன்றே, பெரியார் - மணியம்மையாரின் பொருந்தாத் திருமணத்தால்தான் அண்ணா பெருவாரியான தலைவர்களுடனும் இளேஞர்களுடனும் வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார் என்பதும் மிக மேலோட்டமான பார்வை. பிரிவினைத் தடைச் சட்டம் வந்ததால்தான் அண்ணா திராவிட நாடு என்ற இலக்கை வேறு வழியின்றிக் கைவிட்டார், இல்லாவிடில் சுதந்திர திராவிடக் கூட்டமைப்பு சாத்தியப்பட்டிருக்கும் என்று கருதுவதும் ஆய்வு தவறிய முடிவே ஆகும்.

1957இல் இரண்டாவது பொதுத் தேர்தலில் நேரடியாக ஈடுபடுவதற்கு முன்பே தேர்தல் அரசியலில் தி.மு.க. ஒரு கண் வைத்திருந்தது. தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதே அந்த எண்ணத்துடன்தான் உருவாக்கினார் என்பதை அவருடைய ‘ஆகஸ்ட்டு 15 - இன்ப நாள்’ உள்ளிட்ட அறிக்கைகளேப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

தேர்தல் அரசியலை உள்ளத்துக்குள் ஒளித்துக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சிக்கு விடுதலை இயக்கம் போன்ற தோற்றத்தைத் தந்து, எதிர்காலத்தில் பெறப் போகும் விடுதலை பற்றிய கனவையும், நம்பிக்கையையும் தொண்டர்க ளுக்கு ஊட்டிக் கட்சியை வளர்த்ததும், கட்சி பலப்பட்டு விட்ட நிலையில் அரசியலில் நேரடியாக இறங்கியதும், அவ்வாறு தேர்தல் அரசியலில் இறங்கவும்கூட தொண்டர்களின் விருப்பமே காரணம் என்று காட்ட வாக்கெடுப்பு உத்தியைக் கையாண்டதும், சாத்தியமேயில்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை விடாமல் பேசி வந்ததும், அந்தக் கனவில் மூழ்கிக் கிடந்த தொண்டர்களின் எதிர்ப்பே எழாத வகையில் 1963இல் அதனைக் கைவிட்டதுமான அண்ணாவின் சாமர்த்தியம், ஆழ்ந்து நோக்குகிற எவரையும் வியப்பில் ஆழ்த்தும்.

இந்திய விடுதலைக்குப் பிறகு சென்னை மாகாணத்தில் எழுந்த சூழலில், தேர்தல் அரசியலுக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளும் நோக்கு தி.மு.க. வுக்கு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத் தி.மு.க.வை அண்ணா திட்டமிட்டே வடிவமைத்தார். காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத வாய்ப்பு ஒன்று அண்ணாவுக்கு சென்னை மாகாணத் தமிழ் மாவட்டங்களில் காத்துக் கிடந்தது. தமிழகத்தில் அதுகாறும் வேர்விட்டு வளர்ந்து கிடந்த தமிழ்மொழி - இன உணர்வைத் தேர்தல் அரசியலுக்கு அண்ணா பயன்படுத்திக் கொண்டார். இந்திய தேசியத்துக்கும் பார்ப்பனிய - பனியாக்களுக்கும் எதிராகத் திராவிடர் கழகமும் தனித் தமிழ் அறிஞர்களும் வளர்த்த எதிர்ப்புணர்வும் தமிழ் மொழி - இன உணர்வும் செழித்து மண்டி, அறுவடை செய்ய ஆளில்லாமல் கிடந்தன. அண்ணா அறுவடை செய்துகொண்டார்.

1949 செப்டம்பர் 17ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தன. தி.க. மாணவர் அமைப்பு உருவாக்கம், அனைத்துத் தொண்டர்களும் கருஞ்சட்டை அணிதல், ‘ஆகஸ்ட்டு - 15 இன்ப நாள்’ என்ற அண்ணாவின் அறிக்கை, பெரியார் தன்விருப்பப்படி இயக்க முடிவுகளே எடுக்கும் இயல்பு - எனப் பலவற்றில் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருந்தன. தனக்குப் பின் திராவிடர் கழகம் தடம் மாறக் கூடும், அப்படித் தடம் மாற்றக் கூடியவர்தாம் அண்ணா - என்ற புரிதல் பெரியாருக்கும் இருந்திருக்கிறது.

இராயபுரம் இராபின்சன் பூங்காவில் 17.9.1949 அன்று மாலை நடைபெற்ற தி.மு.க.வின் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசிய கருத்து கவனத்தில் கொள்ளத்தகக்து:

“பெரியாரோடு நான் மாறுபட்ட கருத்துடையவன் என்று கூறப்படுகிறது. சிற்சில வி­யங்களிலே, நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும், நெடுநாள் களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் அவைகளேப் பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த அளவு ஒத்துழைத்தே வந்திருக்கிறேன், முடியாத நேரத்தில் மிகமிகக் கண்ணியமாக ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை அவர் வழிப்படியே கழகம் நடக்கும். பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற போக்கைக் கொண்டிருந்தவன்.” (டி.எம். பார்த்தசாரதி, தி.மு.க. வரலாறு, பாரதி பதிப்பகம், சென்னை, (1961) 1998, பக்.118)

பெரியாரோடு கருத்து வேறுபாடுகள் இருந்ததை ஆமோதிக்கும் அண்ணா, பெரியாருக்குப் பின் தடம் மாறும் என்பதையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியா விடுதலை பெற்ற நாளான ஆகஸ்டு 15ஐ துக்க நாள் என்று தி.க. தலைவர் பெரியார் அறிவித்ததும், தி.க. பொதுச் செயலர் அண்ணா அதை மறுத்து ‘ஆகஸ்ட்டு 15 - இன்ப நாள்’ என்று அறிக்கை வெளியிட்டதும் அண்ணா எந்த அளவிற்குப் பெரியாரின் பார்வையிலிருந்து மாறுபட்டவர் என்பதையும், எந்த அளவு வரை செல்லக் கூடியவர் என்பதையும் வெளிப்படுத்தியது.

திராவிடர் கழகம் அதுவரை முன்வைத்துப் போராடி வந்த கோட்பாட்டிற்கு மாறுபட்ட கருத்தை முன் வைத்து எதிர்நிலை எடுத்த அண்ணாவைப் பெரியாரால் எதிர்கொள்ள முடிந்தது. பெரியார் மறைந்தால் அடுத்து அண்ணாதான் என்று இருந்த சூழலில் பெரியார் அண்ணாவை முற்றாக ஓரங்கட்டினார். தம் சொத்துக்களே ஓர் அறக்கட்டளேயாக்கி, தன் கொள்கைப்படி இயக்கம் தொடர்ந்து நடைபெற ஓர் ஏற்பாடு செய்ய முயன்ற பெரியாரால் தமக்குப் பணிவிடை செய்து வந்த மணியம்மையை வாரிசாக்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணை வாரிசாக ஏற்பதில் சட்ட இடர்ப்பாடுகள் இருந்த நிலையில், மணியம்மையைத் திருமணம் செய்து சட்டப்படி அறக்கட்டளேத் தலைவராக்கினார். அண்ணா நகர்த்திய காய் பெரியாரின் எதிர்விளேயாட்டில் வெட்டுப்பட்டுப் போனது.

அண்ணாவும் அவர் நண்பர்களும் பெரியாரின் பொருந்தாத் திருமணத்தையே காரணம் காட்டி பெருவாரியான இளேஞர்களுடன் வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினர். அப்போதும் அண்ணா தாம் கொள்கைக்காகவே வெளியேறிதாகக் கூறினார்.

“தோழர்களே! எது முக்கியம், நமக்கு இலட்சியமா? பெரியாரா? இலட்சியம் தேவை, பெரியாரல்ல என்று முடிவு செய்தோம்.” (டி.எம். பார்த்தசாரதி, தி.மு.க. வரலாறு, பக். 126)

பெரியாருக்கும் அண்ணாவுக்குமான பிணக்குகளுக்கு, பெரியாரின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இயல்பு மற்றும் அண்ணாவை ‘சோம்பேறி, உதவாக்கரை’ என்றெல்லாம் தூற்றியமை (அண்ணாவே கூறியுள்ளபடி) - ஆகியவை தவிர வேறு காரணங்களும் இருந்தன. அவற்றுள் முக்கியமானது அண்ணாவின் தேர்தல் அரசியல் சார்புத் தன்மை. பெரியாரோடு சேர்ந்து திராவிட இன விடுதலை பற்றிப் பேசிவந்தாலும், அண்ணாவுக்குத் தொடக்க முதலே தேர்தல் அரசியலில் ஒரு கண் இருந்து வந்தது. இதை அண்ணாவின் அறிக்கைகளே ஆழ்ந்து படிக்கும் எவரும் உணரலாம்.

ஆகஸ்டு-15 : அண்ணாவின் தடுமாற்றம்

இந்திய விடுதலை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியாவை ஆளும் அதிகாரம் பார்ப்பன பனியா வட இந்தியர் வசம் ஒப்படைக்கும் நாள் ஒரு துக்க நாள் என்று பெரியார் கருதினார். 1947 ன்ல்லை 25ஆம் நாள் வெளியான திராவிடர் கழக நிர்வாகக் குழுத் தலைவர் தி.பொ. வேதாசலத்தின் அறிக்கையும், அதைத் தொடர்ந்து ன்ல்லை 27-ஆம் நாள் வெளியான பெரியாரின் அறிக்கையும் ‘ஆகஸ்டு - 15 துக்க நாள்’ என்று அறிவித்தன. பெரியார் அந்நாளே “பிரிட்டிஷ் - பனியா - பார்ப்பனர் ஒப்பந்த நாள்” என்று வருணித்திருந்தார்.

“வடநாட்டுக்காரர்களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு, அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மானமுள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித் தானே இருக்கப் போகிறது? ” (எஸ்.வி. ராஜதுரை (பதிப்), ஆகஸ்ட் 15 துக்கநாள் - இன்பநாள், விடியல் பதிப்பகம், கோவை, 1998, பக்.20) என்று பெரியார் கேள்வி எழுப்பினார். மேலும் ஆகஸ்டு 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பெரியார் இவ்வாறு கூறினார்:

“இந்தியர்களில் எல்லாக் கட்சி மக்களிடையேயும் அதிகாரத்தை ஒப்புவிக்காமலும், எல்லோருடைய குறைகளேக் கேட்காமலும், எல்லாக் கட்சியாரையும் சமரசப்படுத்தாமலும், தங்களுக்குப் பல வழிகளிலும் வியாபாரத்திற்கும் பிரிட்டன் நலத்திற்கும் சில இரகசிய ஒப்பந்தங்களேச் செய்துகொண்டு காங்கிரஸ்காரரிடம் மாத்திரம், அதாவது, பார்ப்பன ஆதிக்கமும் வடநாட்டார் சுரண்டல் வசதியும் கொண்ட - ஒரு சுயநல தந்திர சூழ்ச்சி கொண்ட கோஷ்டியார் கைக்கு அதிகாரத்தை மாற்றிவிட்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் நிபந்தனையோடு அதிகாரத்தை மாற்றி இருக்கிறார்கள்.

...ஆதலால், வெள்ளேயருக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனாய் இந்த நாட்டிலுள்ள காங்கிரசல்லாத மக்களுக்கு நன்மை இல்லை; பிரதிநிதித்துவம் இல்லை, வருண சிரம தர்மக் கொடுமை ஒழிவதில்லை.

“ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளேயர் அதிகார ஆட்சிக் காலத்திலிருந்த உரிமையை விட மோசமான ஆட்சியேயாகும். அதிகாரங்கள் யாவும் மத்திய அரசாங்கத்திற்குத்தான் உண்டு.

“சில அதிகாரங்கள் தாம் மாகாணங்களுக்கு என்றாலும் அவைகளும் கவர்னருக்கே ஒழிய, மந்திரிகளுக்கல்ல.

“ஆதலால், வெள்ளேயர் நம்மை மோசடி செய்ததை வெறுக்கவும், அதாவது வடநாட்டுப் பனியாக்களுடையவும், ஆரியப் பார்ப்பனர்களுடையவும் சூழ்ச்சிக்கும், ஏமாற்றுக்கும் உள்ள தந்திரத்திற்கும் நாம் ஏமாந்துவிடவில்லை என்பதைக் காட்டவும் பூரண சுயேச்சையுள்ள திராவிட நாடுதான் நமது இலட்சியமே தவிர, அதற்குக் குறைந்த எதைக் கொண்டும் நாம் திருப்தியடைய மாட்டோம், ஓய மாட்டோம். கிளர்ச்சி செய்தே தீருவோம் என்பதைக் காட்டவும் இம்மாதம் 15-ந்தேதி நடக்கும் சுதந்திரத் திருநாள் என்னும் ‘ஆரியர் - பனியா’ ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம்.” (மேலது, பக் 22-23)

பெரியாரின் இந்த அறிவிப்பு, பெரியாரின் நீண்ட காலப் பார்வையின் தொடர்ச்சியே ஆகும். 1935இலேயே பெரியார் இந்தப் பார்வையை கொண்டிருந்தார்:

“நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது என்பதுதான் தேசாபிமானிகளின், மகாத்மாக்களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதைவிட இப்போது இருக்கும் பரராஜ்யமே மேலானது என்பது என் கருத்து.” (குடி அரசு, 29.9.1935)

“நமக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஒழிய வேண்டும். ஆனால் கண்டிப்பாகக் காங்கிரஸ் ஆட்சியோ மத்திய அரசாங்க ஆட்சியோ கூடாது. திராவிட நாட்டு ஆட்சியே வேண்டும். திராவிட நாட்டு ஆட்சிக்கு திராவிட நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுடைய சம்பந்தமே கிடையாது ” (குடி அரசு, 30.11.1943)

ஆகவே, இந்த ‘அதிகார மாற்றம்’ திராவிடர்களுக்குத் துக்க நாள் என்று பெரியார் அறிவித்தது இன விடுதலை கோரும் ஒரு தலைவரின் சரியான நிலைப்பாடேயாகும்.

‘ஆரியர் - பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை’ என்று தி.க.வின் தலைவர் பெரியார் அறிவித்துவிட்ட நிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலர் அண்ணா இவ்வாறு எதிர் அறிக்கையைத் தமது திராவிட நாடு இதழில் வெளியிட்டார்:

“ஆகஸ்டு 15-ந்தேதி அன்னிய ஆட்சி ஒழிந்த நாள், நம்மை நலிய வைத்த வெள்ளேயர் ஆட்சி நீங்கிய நாள். ஏகாதிபத்தியப் பிடி ஒழிந்த நாள். இரு எதிரிகளில் ஒரு எதிரி ஒழிந்த நாள் (மிச்சமிருப்பது பனியா ஏகாதிபத்யம்) என்பதிலே நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளக் காரணமும் அவசியமும் இருக்கிறது.” (திராவிட நாடு, 10.8.1947 ; எஸ்.வி. ராஜதுரை, பக்.28)

பெரியாரையே எதிர்த்து அண்ணா அறிக்கைவெளியிடும் அளவிற்குத் துணிவு பெற்றமைக்கு என்ன காரணம்?

மாறி விட்ட அரசியல் சூழலில் எதிர்காலத் தேர்தல் அரசியலில் பங்கேற்கும் நோக்கம் அண்ணாவின் இந்த வகைப்பட்ட அறிக்கைக்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது. இந்திய விடுதலையைக் கொண்டாடுவதன் மூலம் தாங்களும் பிரிட்டிஷாருக்கு எதிரிதான் என்று காட்டிக் கொள்ளலாம் என்ற கருத்து அண்ணாவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகிறது. ஆகஸ்டு 15ஐக் கொண்டாடித் தம் தேசபக்தியைக் காட்டாது போனால் என்ன நிகழ்ந்து விடும்? இன்று இந்திய விடுதலையை எதிர்த்துவிட்டு எதிர்காலத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்றால் தாம் கேலிப் பொருளாகி நிற்க வேண்டியதிருக்கும் என்று அண்ணா கருதியிருக்கலாம்.

அண்ணா இப்படி அச்சம் தெரிவித்தார்:

“காங்கிரசார் பழி சுமத்தியதைப் போல நாம் பிரிட்டிஷாரின் அடிமைகளல்ல என்பதை விளக்க நமக்கு இருக்கும் ஒரு நாள், கடைசி நாள் ஆகஸ்டு 15. நாம் ஏன் அந்தச் சந்தர்ப்பதை இழந்து அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொள்ள வேண்டும்? ” (மேலது)

மேலும், இந்திய விடுதலை நாளேக் கொண்டாட முன்வராதவர்களேக் குற்றவாளி யாக்கும் சாமர்த்தியம் அண்ணாவின் அறிக்கையில் வெளிப்படுகிறது.

ஆகஸ்ட் 15ஐக் கொண்டாடாதவர்கள் திருப்பூர் குமரனையும், பகத் சிங்கையும், சிதம்பரம் பிள்ளேயையும் அவமதிப்பதாக அண்ணா கூறினார்; அதுவும் அவர்கள் திராவிட நாடு கேட்காததால்தான், இவர்கள் ஆகஸ்டு 15-ஐ கொண்டாடவில்லை என்ற பொருள் தொனிக்க அண்ணா அறிக்கையிட்டார்:

“அவர்கள் இப்போது நாம் கேட்கும் திராவிட நாடு கொள்கைக்காக, அந்தக் கொள்கை பிறக்காத போது அதற்குப் பாடுபடவில்லை என்று காரணம் காட்டி அவர்களே மதிக்க மறுப்பது தமிழ் மரபுக்கே கேடு ஆகும்.”

திராவிட நாடு கோராதவர்கள் என்று பகத்சிங்கையோ அல்லது திருப்பூர் குமரனையோ யாரும் குறை கூறவில்லை ; அதற்காகப் புறக்கணிக்கவில்லை. ஆனால் தம் வாதத்தை வலிமைப் படுத்திக் கொள்ள, தொடர்பற்றவர்களேயயல்லாம் தொடர்புபடுத்தி எதிரியைக் குற்றம்சாட்டும் போக்கு அண்ணாவின் அறிக்கையில் காணப்படுகிறது.

அண்ணாவின் இந்த அறிக்கைக்கு என்ன காரணம்?

முதலாவதாக, பொதுச் செயலாளராகிய தன்னைக் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுக்கவில்லை என்ற கோப உணர்வு அண்ணாவின் அறிக்கையில் தென்படுகிறது. தன்னைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தால் இப்படித்தான் செய்வேன் என்ற தன்முனைப்பும் வெளிப்படுகிறது.

“ஆகஸ்டு 15-ந் தேதியின் முக்கியத்துவத்தை உணரவும், அந்நாள் நமது கழகம் என்னவிதமான போக்கு கொள்ள வேண்டும் என்பதைக் கவனிக்கவும், அதற்குப் பிறகு நமது வேலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும், நமது கழகத்தின் நிர்வாகக் கமிட்டியோ, முக்கியஸ்தர்களோ கூடி யோசித்திருக்க வேண்டும்” (எஸ்.வி. ராஜதுரை, பக்.30) என்று அண்ணா குறிப்பிடுகிறார். இரண்டாவதாக ஆகஸ்டு 15ஐக் கொண்டாடியே தீரவேண்டும் என்பதில் அண்ணா முனைப்பு காட்டினார். அதற்கான எதிர்காலத் தேவை அண்ணாவுக்கு இருந்தது.

“இது கட்சிக் கட்டுப்பாட்டையும் தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்பட்டு என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வருவதானாலும், என் வாழ்நாளில் பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்ற கொள்கையைக் கொண்டவனே நான் என்பதை மக்களுக்குக் கூற எனக்கிருக்கும் ஒரே நாளான, கடைசி நாளான ஆகஸ்டு 15-ந் தேதியின் முக்கியத்துவத்துக்காக வேண்டி கட்சியின் கடுமையான நடவடிக்கைக்கும் சம்மதிக்க வேண்டியவனாகிறேன்.

“தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் நான் சமூகச் சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளேக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன்.” (எஸ்.வி. ராஜதுரை, பக்.43)

1937 முதல் 1947 வரை தாம் சேர்ந்து உழைத்த இயக்கத்தில் நீடிப்பதை விடவும், இந்திய விடுதலை நாளேக் கொண்டாடுவது அண்ணாவுக்கு முக்கியமானதாகத் தெரியக் காரணம் என்ன? என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

அண்ணாவின் அறிக்கையைப் படித்துவிட்டு ‘நகரதூதன்’ இதழ் ஆசிரியர் ‘கேசரி’ மணவை ரெ. திருமலைசாமி அண்ணாவின் அறிக்கையின் கோளாறுகளேத் தம் இதழில் வெளிப்படுத்தினார். (மேலது, பக். 43-112)

“கேவலம் யாரோ சிலர் ஏளனமாகப் பேசுகிறார்கள் என்பதற்காக, கொள்கைகளே விட்டுக் கொடுத்து எதிர் முகாமில் வலிய நுழைந்து, அவர்க¼ளாடு உறவாடுவதென்பது மகா கேவலமான காரியம் - அறிவற்ற செய்கை - வேறில்லவே இல்லை” என்று சாடிய ‘கேசரி’ இவ்வாறு நியாயமான கேள்வியையும் எழுப்பினார்:

“1939இல் காங்கிரஸ் மந்திரி ராஜினாமாச் செய்த காலத்தில் வில்லங்கம் விடுபட்ட நாள் என்று நாம் கொண்டாடினோமே, அது எதற்கு?... காங்கிரஸ் அதிகாரம் இழந்த நாளே சந்தோ­ நாளாகக் கொண்டாடிய திராவிடர், அதே காங்கிரஸ் கைக்கு தேசத்தின் முழு நிர்வாகமும் மாற்றப்பட்ட நாளே துக்க நாளாகக் கருத வேண்டும் என்று கூறுவதில் தவறென்ன? ”

அண்ணாவைக் கண்டனம் செய்த கேசரி, அண்ணா தி.க.விலிருந்து விலகிப் போகக் கூடாது என்றும் விலக்கப்படுவதும் கூடாது என்றும், அடுத்து வரும் கடலூர் மாநாட்டில் அண்ணா பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1947ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் கடலூரில் முன்னாள் முதல் அமைச்சர் முத்தையா முதலியார் தலைமையில் ‘திராவிடநாடு பிரிவினை மாநில மாநாடு’ நடைபெற்றது. திரு.வி. கலியாண சுந்தரனார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், ‘திராவிட நாடு தனிநாடாக வேண்டும்’ என்ற தீர்மானம் ஏற்கப்பட்டது. ஆனால் அறிஞர் அண்ணா இம் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

திராவிடர் கழகத்தில் அண்ணாவைத் தளபதி என்று அழைத்துக் கொண்டு அவர்பால் தனிப்பட்ட வாஞ்சையை வளர்த்துக் கொண்ட பெரும் இளேஞர் பட்டாளம் இருந்தது. அவ்வாறு கட்சியை விட்டுத் தாம் வெளியேற நேர்ந்தால் இளேஞர் பட்டாளத்துடன் வெளியேறுவது என்று அண்ணா நினைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஆகஸ்டு 15 அறிக்கையை வெளியிட்ட போது, திராவிடர் கழக இளேஞர்களேயும் அதில் இழுத்துக் கோர்த்து இந்திய விடுதலை நாளேக் கொண்டாடக் கூறுவது அந்த இளேஞர்களின் மீதான பழியைத் துடைப்பதற்காக - என்ற தோற்றத்தை அண்ணா உருவாக்கினார்:

“நம்முடைய வீர இளேஞர்கள் மீது இதுநாள் வரையிலே சுமத்தப்பட்ட பழிச்சொல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது. அந்த பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும் போது, நாம் துக்கங் கொண்டாடுவது இந்தப் பழிச்சொல்லை நாமாகவே நம்மீது சுமத்தும்படி அவர்களே வற்புறுத்தி அழைப்பதாகும்.” 

இளேஞர் பட்டாளத்தைத் தம் கைக்குள் இருத்திக்கொள்ளும் நோக்கம் அண்ணாவுக்கு இருந்தது.

அண்ணாவின் ஆகஸ்டு 15 அறிக்கை திராவிட அல்லது தமிழின அரசியலுக்குப் பாதகமானதும் எதிரிடையானதுமாகும். அண்ணாவின் எதிர்காலத் தேர்தல் ஏற்பு அரசியல், அவசியமானால் திராவிடர் கழகத்தை விட்டே வெளியேறிவிடுவது, இந்திய தேசியத்துக்குள் அரசியல் நடத்துவது - ஆகிய கூறுகள் அவருடைய அறிக்கைக்குள் புதைந்து கிடக்கின்றன.

தேர்தல் அரசியலையே இலக்காகக் கொண்ட அண்ணா:

தொடக்கம் முதலே தேர்தல் அரசியல் பற்றிய ஈர்ப்பு அண்ணாவிடம் குடிகொண்டிருந்தது. 1935ஆம் ஆண்டு சென்னை நகரசபைத் தேர்தலில் நீதிக்கட்சியின் வேட்பாளராக நின்று தோற்றதன் மூலம் அரசியலுக்கு வந்தவர் அண்ணா. 1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகம் ஆன போது தேர்தல் பங்கேற்பு என்பது மறுக்கப்பட்டது. ஆனாலும், தேர்தல அரசியல் மீது அண்ணாவுக்குப் பெரும் ஈர்ப்பு இருந்தது.

அண்ணாவின் தேர்தல் அரசியல் மீதான விருப்பு 1947இல் ‘ஆகஸ்டு 15 இன்ப நாள்’ அறிக்கையிலும் வெளிப்பட்டது. பாகிஸ்தான் உருவாக்கத்தைப் பற்றிப் பேசும் அண்ணா, ஜின்னா தேர்தல் அரசியலில் ஈடுபட்டுத் தம் விருப்பத்தை முறையாகத் தெரிவித்ததாலேயே பாகிஸ்தான் கிடைத்தது என்றும், தாங்கள் அப்படி ஒரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறார். காங்கிரஸ் 60 ஆண்டுகள் போராடிப் பெற்ற விடுதலையை ஜின்னா 6 ஆண்டுகளில் பெற்றதற்குத் தேர்தல் அரசியலே காரணம் என்றார்.

“ஒரு திட்டத்துக்கு, ஒரு இன மக்களில் பெருவாரியானவர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக முறைப்படி ஜனாப் ஜின்னா காட்டியே வெற்றி பெற்றார். அது போலவே, காங்கிரசும் சுயராஜ்யக் கோரிக்கைக்குச் சகலரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை ஜனநாயக முறையான தேர்தல் முறைப்படியும் விடுதலைப் போர் நடத்தியும் காட்டிவிட்டது.” (திராவிட நாடு: 10.8.1947)

அண்ணாவின் ‘தேர்தல் அரசியல்’ என்ற இலக்கு 1951 முதலே வெளிப்படத் தொடங்கியது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடத்தப்பட்டது. 1949 செப்டம்பர் 17ஆம் நாள் தோற்றங்கண்ட தி.மு.க., 1951-இல் எதிர்வரும் தேர்தல் குறித்து மதுரையில் கூடிய பொதுக்குழுவில் விவாதித்தது. 1951இல் அப்போதுதான் தோன்றியிருந்த தி.மு.க தேர்தலில் பங்கெடுக்கக் கூடிய அளவிற்கு வலிமை பெற்றுவிடவில்லை என்பதை உணர்ந்திருந்தது தி.மு.க தலைமை. ஆகவே கீழ்க்கண்ட முடிவு எட்டப்பட்டது.

“திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும், ஒரே கட்சியாரின் எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்படி நடைபெறும் முதல் பொதுத் தேர்தலில் தி.மு. கழகம் தனது அபேட்சகர்களே நிறுத்திக் கலந்து கொள்ளாது...” (எ.எம். பார்த்தசாரதி, தி.மு.க வரலாறு, பக்.200)

இந்தத் தீர்மானத்தில், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க பங்கேற்கும் என்ற செய்தி மறைந்து நிற்கிறது.

1953ஆம் ஆண்டிலேயே 1957 பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான வேலைகளேத் தி.மு.க தொடங்கி விட்டது. 1953 ஜுன் மாதம் விருதுநகரில் தி.மு.க.வின் இராமநாதபுரம் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் உ. ராஜாம்பாள் நிகழ்த்திய வரவேற்புரையை மறுநாள் வருகை தந்த அண்ணா முக்கியத்துவம் தந்து பேசினார்:

“பொதுத் தேர்தலிலே ஈடுபட்டு மக்களிடம் ஓட்டுக்களே பெருவாரியாகப் பெற்று, சட்டசபைகளேக் கைப்பற்றி, திராவிடத் தனியரசுப் பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்று அம்மையார் கூறியிருக்கிறார்கள். எழுச்சியூட்டும் கருத்து இது. திராவிட முன்னேற்றக் கழகம் இது பற்றி முறைப்படி எண்ணிப் பார்த்து தக்க திட்டத்தைத் தீட்ட முன்வரும் என்று உறுதியாகக் கூறுவேன்.” (மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? வசந்தம் வெளியீட்டகம், மதுரை, 2005, பக்:62)

‘தேர்தலில் வெற்றி பெற்று திராவிடத் தனிஅரசு அமைக்க முயற்சிப்பது’ என்ற விதையை அண்ணா தூவி விட்டார். 1957ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்றது. திராவிட நாட்டை அடைவதற்கான வழி தேர்தலில் ஈடுபடுவதுதான் என்று அண்ணா அறிவித்தார். 1956 மே மாதம் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டில் ‘தேர்தலில் பங்கேற்பது’ என்ற அண்ணாவின் உள்ளார்ந்த விருப்ப முடிவு, தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, தொண்டர்கள் முடிவெடுத்தது போன்ற தோற்றத்துடன் அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தொடங்கப்பட்ட போது விடுதலை கோரும் இயக்கம் என்றும், தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றும் அண்ணா விவரித்திருந்தார். ஆனால், இப்போது இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தேர்தல் அரசியலில் பங்கேற்கத் தயாராகி விட்ட நிலையில் திராவிடர் கழகம் மற்றும் பிறகட்சியினரின் எள்ளிநகையாடல் களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அண்ணா இந்த உத்தியை வகுத்திருந்தார் எனக் கருதுவது சரியாக இருக்கும்.

திருச்சி பொது மாநாட்டில் கலந்து கொண்ட அறுபதாயிரம் தி.மு.க. தொண்டர்கள் வாக்களித்தனர். தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்போர் சிவப்பு நிறப் பெட்டியிலும், வேண்டாம் என்போர் கருப்பு நிறப் பெட்டியிலும் வாக்களித்தனர். வேண்டும் என்றோர் 56,942 என்றும் வேண்டாம் என்றோர் 4,203 என்றும், ஆகவே தி.மு.க தேர்தலில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது ஏதோ எதார்த்தமாக நடந்ததல்ல ; தேர்தலில் பங்கேற்பு முடிவெடுத்தல் என்பது அண்ணா திட்டமிட்டபடியே நடந்தேறியது. ஆனால், தி.மு.க மாநில் மாநாட்டில் தொண்டர்களே முடிவெடுத்ததாகக் காட்டப்பட்டது.

தேர்தலில் ஈடுபட்டுத் திராவிட நாடு அடைய ஓட்டு முறையே சரியானது என்று அண்ணா கருத்துரைத்தார். தம் குறிக்கோளே அடைய மூன்று வழிகள் உள்ளன என்றும், அவை வேட்டு, ஓட்டு, கூட்டு என்றும், ‘வேட்டு’ என்ற கருவிப் போர் முறை சரிப்பட்டு வராது என்பதால் அது வேண்டாம் என்றும், இரண்டாவது முறையான கூட்டு 1952 - முதல் பொதுத் தேர்தலில் சோதிக்கப்பட்டது என்றும் கூறினார். முதல் பொதுத் தேர்தலில், திராவிட நாடு கோரிக்கை வெற்றி பெறத் துணை நிற்பவர்களுக்கு ஆதரவு என்றும், இதை ஏற்றுக் கொள்ளும் கட்சியினர் இதற்கான உறுதிமொழி ஒப்பந்தத்தில் (ஸ்ரீயிளdஆள) கையயாப்பமிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி தி.மு.க ஆதரித்த 45 வேட்பாளர்களில் 40 வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் காங்கிரசுக் கட்சியிடம் பதவிகளேப் பெற்றுக் கொண்டு அதை ஆதரித்தார்கள் என்பதால் ‘கூட்டு’ முறையும் சரிப்பட்டு வரவில்லை என்றார் அண்ணா. ஆக, தி.மு.க.வே நேரடியாகத் தேர்தலில் இறங்கும் ‘ஓட்டு’ என்ற முறையே திராவிட நாடு பெறும் வழி என்றார்.

அண்ணாவின் இலக்கும் வழியும் தேர்தல் அரசியல்தான். இந்திய வல்லாட்சிக்கு உட்பட்டு இந்திய அரசியல் சட்டப்படியான தேர்தலில் பங்கேற்று குரல் கொடுப்பதால் அல்லது தீர்மானம் நிறைவேற்றுவதால் திராவிட நாடு கிடைத்து விடும் என்று நம்பும் அளவிற்கு அண்ணா அரசியல் அறியாதவர் அல்ல. ஆனால் தமிழின மொழி உணர்வுகளேக் கிளறி இன விடுதலை உணர்வைக் கிளர்ந்தெழச் செய்து, அதைத் தேர்தல் வெற்றியாக அறுவடை செய்தார், 1952 தேர்தலில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடாத நிலையில் பிற கட்சிகளுக்கே தேர்தலில் ஆதரவு தர ‘திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்’ என்று எழுதிக் கையயாப்பமிடக் கேட்ட அண்ணா, 1957 தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘சுயநிர்ணய உரிமை’ கோரியிருந்தார். இந்திய யூனியனிலிருந்து ஏதாவது ஒரு மாநிலம் விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்படவேண்டும் என்று 1957 தேர்தல் அறிக்கை கோரியது. இத்தேர்தல் அறிக்கை 17 இலட்சம் வாக்குகளே தி.மு.க.வுக்குப் பெற்றுத்தந்தது.

தேர்தல் அரசியலை உள்ளத்தில் வைத்துக் கொண்டு, பெரியாருடன் முரண்பட்டு, தேர்தலை மறுக்கும் திராவிடர் கழகத்திலிருந்து காரணம் கண்டுபிடித்து வெளியேறினார் அண்ணா என்று கூறுவது தவறான முடிவாக இராது. அண்ணாவின் தேர்தல் அரசியல் பெரியாரிடமிருந்து இளேஞர்களேப் பெருவாரியாகப் பிரித்தெடுத்துப் பதவி அரசியலுக்கு ஓட்டிச் சென்றது. இது விடுதலை அரசியல் பேசிய பெரியாரின் இயக்கத்தைப் பலவீனப் படுத்தியது.

அண்ணா உருவாக்கிய கட்சியின் கட்டமைப்பு தேர்தல் அரசியலுக்கானது தான். அது ஒரு விடுதலைப் போராட்டத்துக் கான கட்டமைப்பையோ, பயிற்சியையோ, உத்திகளேயோ, தகவமைப்புகளேயோ பெற்றிருக்கவில்லை. ஆனாலும், அரசியல் களத்தில் அண்ணா தமிழினத்திற்குச் சார்பான சில சாதனைகளே நிகழ்த்திக் காட்டினார். அண்ணாவின் அரசியல் நோக்கம் எதுவானாலும் அவர் பேசியதும் பரப்பியதும் மொழி உணர்வும், இன உணர்வும் ஆகும். பார்ப்பனிய மேலாண்மையை உறுதி செய்யும் ஓர் அகில இந்தியக் கட்சியை எதிர்த்து, டில்லி வல்லாட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, இந்தி மொழி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமது கட்சியை ஆட்சிப் பொறுப்பில் கொண்டுவந்து அமர்த்தினார். தமிழகத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்து காங்கிரசைத் தூக்கியயறிந்தார். இது தமிழ்த் தேசிய இனத்தின் வெற்றியாகும். அண்ணாவின் வெற்றி இந்திய தேசியத்தின் எதிர்ச் சக்திக்குக் கிடைத்த வெற்றி.

அண்ணாவுக்குக் கிடைத்த வெற்றிகள் எந்தக் கருத்தியலுக்குக் கிடைத்த வெற்றி என்று கருதிப் பார்க்க வேண்டும். இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்று பிரிவினையைப் பேசிப்பேசி அண்ணா வெற்றிகளேக் குவித்தார். 1952 தேர்தலில் போட்டியிடாமல். 1957 தேர்தலில் 15 இடங்களேயும், 1962 தேர்தலில் 50 இடங்கைளயும் தி.மு.க. சட்டமன்றத்தில் கைப்பற்றிய போது, அதைப் பிரிவினைக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என அண்ணாவே விவரித்தார். 1967 தேர்தலில் தி.மு.க 138 சட்டமன்ற இடங்களேக் கைப்பற்றியது. இந்திமொழி வெறிபிடித்த காங்கிரசுக்கு எதிராகத் தமிழின உணர்வு கிளர்ந்தெழுந்தமையால் இது சாத்தியமாயிற்று.

1965 ஆம் ஆண்டில் வெடித்த இந்தி எதிர்ப்புப் போர் மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சி ஆகும். இந்தி எதிர்ப்புப் போரின் போது 500 பேருக்குக் குறையாமல் தமிழர்களேக் கொன்று குவித்த காங்கிரஸ் கட்சி தமிழக ஆட்சிபீடத்திலிருந்து தமிழ் மக்களால் நெட்டித் தள்ளப்பட்டது. 1967 தேர்தலில் தி.மு.க என்ற கட்சி வென்றது என்பது ஒரு பார்வை. ஆனால், உண்மையில் 1965 மொழிப் போரில் காங்கிரசுக் கட்சியின் இந்தி மொழி வெறியையும், தமிழ் இன-மொழிக்கு எதிரான நிலைப்பாட்டையும் 1965இல் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளேயும் கண்டு வெகுண்டெழுந்து தமிழ்த் தேசிய இனம் அண்ணாவைக் கருவியாகக் கைக்கொண்டு, தமிழகத்திலிருந்து இந்திய தேசிய முகவர்களே வீழ்த்தியது ; அதிகாரத்திலிருந்து விரட்டியடித்தது. வென்றது அண்ணா அல்ல; ஓசையின்றி வளர்ந்திருந்த தமிழ்த் தேசிய இன உணர்வே காங்கிரசு ஆட்சியைக் காவு கொண்டது, இதுவே சரியான மதிப்பீடாக இருக்கும்.

(வரும்)

- முனைவர் த.செயராமன்