தோழர்களே!

பிறந்த நாள் விழா என்பது முதன் முதலில் துவக்கப்பட்டது எல்லாம் –பொய் - பித்தலாட்டங்களை அடிப்படையாக வைத்ததுதான். எப்படி எனில் இதுவரை கடவுள்களின் பிறந்தநாள் என்ற பெயரில் தான் நம் நாட்டில் விழாக் கொண்டாடப்படுவது வழக்கம். உண்மையிலேயே இந்தக் கடவுள்கள் எல்லாம் இருந்தார்களா? பிறந்தார்களா? என்றால் அதுதானில்லை.

அப்படி அவர்கள் கொண்டாடியதன் நோக்கம். அதை வைத்து மக்களிடத்தில் பக்திப் பிரச்சாரத்தைச் செய்யலாம் என்பதற்காகத்தான்; அதில் வெற்றியும் பெற்றார்கள். அடுத்து நாயன்மார், ஆழ்வார் ஆகியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள்; அவர்கள் எல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டக்காரர்கள். அவர்கள் செய்யாத காரியங்களை எல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி அவர்களுக்குப் பெருமையை உண்டாக்கி அதன் மூலம் கடவுள்களைப் புகுப்பிக்க ஏற்பாடு செய்து விட்டனர்.

எந்த அயோக்கியத்தனமான பொய்யை எல்லாம் சொல்லியும் கடவுள் பக்தியை உண்டாக்கவே இவற்றையெல்லாம் செய்தனர்.

நம் இயக்கம் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்ததற்குப் பின்னால் தான் உண்மையிலேயே பிறந்த மனிதர்கட்கு, மனிதத் தொண்டு செய்த பெரியார்கட்குப் பிறந்தநாள் கொண்டாடும் தன்மை ஏற்பட்டது.

எனக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதின் நோக்கம், கடவுளை ஒழிப்பதாகும். இதைப் போன்ற கருத்துகளில் இப்போது மக்கள் உற்சாகம் காட்டுகிறார்கள். நாடெங்கும் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றால் நோக்கம் அதுதான்.

மற்றவர்கட்கு விழா நடக்கிறது என்றால் அது சாதி வளர்க்கவும் கடவுள் பக்தியை வளர்க்கவும் பயன்படுமே தவிர, உருப்படியாக சமுதாய வளர்ச்சிக்கு எள்ளளவும் பயன்படாதே. எங்களுக்கு விழா நடக்கிறது என்றால், அவற்றிற்கு மாறுபட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்வதால்தான் ஆகும்.

 (மாயூரத்தில், 22-9-1972ல் சொற்பொழிவு “விடுதலை”9:10-1972)

Pin It