தமிழ்நாட்டு ஆளுநர் ஆர் என் ரவி அவ்வப்போது பல சரவெடிகளைக் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவருக்கு வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலும் இல்லை, தமிழ்நாட்டைப் பற்றிய புரிதலும் இல்லை. ஏதோ தமிழ்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை எல்லாம் கரைத்துக் குடித்தாற் போல் பேசி வருகிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழகத்தில் தத்துவ விதைகளைத் தூவிக் கொண்டிருக்கிறார். ஆளுநரிடம் அறிவுரை கேட்கிற அளவிற்குத் தமிழ்நாட்டில் தத்துவ வறட்சி நிலவவில்லை.

anna 258அண்மையில் அவர் கொளுத்திப் போட்ட ஒரு சரவெடி என்னவென்றால், “திராவிடம் என்பது நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கியது. ஆனால் இவர்கள் தமிழ்நாட்டை மட்டும் பேசுகிறார்கள்” என்பதாகும். இதற்குமுன் பாரதக் கலாச்சாரம் பற்றிப் பேசினார்கள். இந்தியா என்பதாக ஒன்றுமில்லை, பாரத தேசம் என்று சொன்னார்கள். தற்போது திராவிடத்தைப் பற்றிய பெரிய வியாக்கியானத்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘திராவிடம்’ என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றிய வரலாற்றுப் புரிதல் அவரிடம் இல்லை.  பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டோடு சேர்ந்து ஆந்திராவின் ஒரு பெரும் பகுதி, கர்நாடகாவில் ஒரு சிறிய பகுதி, கேரளாவின் ஒரு பெரும் பகுதி சேர்ந்து சென்னை மாகாணம் என்று அறிவிக்கப்பட்டது. மொழி வழி மாநிலங்கள் பிரிந்த பிறகு இந்தப் பகுதிகள் எல்லாம் பிரிந்து, தமிழ்நாடு ஒரு மாநிலமாக ஆனது. திராவிட இயக்கம் திராவிடத்தை ஏன் பேசியது என்று சொன்னால், மெட்ராஸ் பிரசிடென்சி என்று சொல்லப்படுகிற பகுதியில் ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளும் இருந்ததால், அவர்களையும் உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சிக்குத் தனி சுதந்திரம் வேண்டும், அதாவது இந்தியாவோடு சேராமல் நாங்கள் தனியாக இருந்து கொள்கிறோம் என்ற கோட்பாட்டில் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

மொழி வழி மாநிலங்கள் பிரிந்ததற்குப் பிறகு பெரியார், மொழி வழி மாநிலங்கள் பிரிந்தது நமக்கு நல்லதுதான், மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் மனுவாதத்தில் ஊறிப் போனவர்கள். அதனால் அவர்கள் போனதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்று சொன்னார். தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.

அண்ணாவைப் பொருத்தமட்டில்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு நான்கு மாநிலங்களையும் ஒரே நாடாக உருவாக்கி அதற்குப் பெயர் ‘திராவிட நாடு’ என்று அவர் சொல்லவில்லை. ‘திராவிட நாடு’ கோட்பாடு என்பது, நான்கு மாநிலங்களும் மொழி வழியாகத் தனித்தனி மாநிலங்களாக இருக்க, திராவிடர்-ஆரிய எதிர்ப்பு என்ற இன வழியில் ஒன்றுபட்டு நிற்பது. ஆரியத்திற்கு எதிரான குறிச்சொல் திராவிடம். மொழி வழியில் நான்கு மாநிலங்களாகப் பிரிந்து இன வழியில் ‘திராவிடர்’ என்கிற வகையில் ஒன்றாக இணைந்த ஒரு கூட்டமைப்பு- திராவிடக் குடியரசு, திராவிடக் கூட்டாட்சி - அமைக்க வேண்டும். அந்தக் குடியரசில் விரும்புகிற மாநிலங்கள் பிரிந்து போகலாம். பிரிந்து போகிற உரிமையுள்ள ஒரு கூட்டாட்சி என்பதுதான் அண்ணா முன்வைத்த திராவிட நாடு. எல்லா மாநிலங்களையும் ஒன்றிணைத்து, ஒரே நாடு என்று அவர் சொல்லவில்லை. பின்னர் சீனப் போரின் காரணமாகப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டார். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று சொன்னார்.

அதற்குப்பின் ‘திராவிடம்’ தமிழ்நாட்டிற்குத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரியப் பண்பாட்டு எதிர்ப்பைக் காட்டுவதற்குத் ‘திராவிடம்’ என்றும், நம்முடைய நாட்டின் பண்பாட்டைக் காட்டுவதற்கு ‘தமிழ்நாடு’ என்றும் பயன்படுத்தி வருகிறோம். எனவே இந்த ஆட்சியிலும், கடந்த கால ஆட்சியிலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களையும் ஒன்றிணைத்து ‘திராவிட நாடு’ என்று யாருமே கேட்கவில்லை.

 தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவிற்கும் இடையில் கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சனை வந்தபோது, தமிழ்நாடு ஆந்திராவை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறது. காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையின் போது கேரளாவை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டு உரிமைதான் இன்றைக்கும் பேசப்படுகிறது. தமிழர் உரிமைதான் பேசப்படுகின்றது. ‘தமிழ்நாடு’ என்று அண்ணா ஆட்சிக் காலத்தில்தான் பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் ‘திராவிடம்’ என்று சொல்வது நம்முடைய மரபு வழித் தொடர்ச்சி. ஆரிய எதிர்ப்பு, திராவிடர் இயக்கம் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டுக் கலாச்சார எதிர்ப்பு என்ற அடையாளத்திற்காகத்தான் ‘திராவிடம்’ என்ற பெயர் சேர்க்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ இந்த நான்கு மாநிலங்களும் ஒன்றாக இருப்பது போல இந்த ஆளுநர் உளறிக் கொண்டிருப்பது அவருடைய அறியாமையையும் வரலாற்றைப் பற்றிய எந்த அறிவும் அவருக்கு இல்லை என்பதையும் காட்டுகிறது.

விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It