அண்மையில் இலங்கைக்கு சென்று வந்த பேராசிரியர் அ.மார்க்ஸ், தமது பயண அனுபவங்களை, ஊடகங்கள் வாயிலாகவும், அரங்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழ்நாட்டுத்  தோழர்களுடன் பகிர்ந்து வருகின்றார். இலங்கையில் தாம் கண்டவற்றை, கண்டு மனம் கலங்கியவற்றை உள்ளது உள்ளபடி உரத்து பேசி வருகின்றார்.

அவ்வாறு அவர் பேசுவது இங்குள்ள சிலருக்கு எரிச்சலையும், பலருக்கு ஆறுதலையும் அளித்து வருகிறது.  எரிச்சல் அடைபவர்கள் அனைவரும் அவரை பேச விடாமல் துரத்துகின்றனர். அவரது கூட்டங்களில் பார்வையாளர்கள் போர்வையில் புகுந்து ரகளை செய்கின்றனர்.அவரது மனித உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி, இணைய தளங்களில் பரப்புரை புரிகின்றனர். சமீப நாட்களாக இந்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அ மார்க்சின் கருத்துக்களால் எரிச்சல் அடைந்தவர்களின் எதிர்வினை இப்படி இருக்க, ஆறுதல் அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இத்தகைய எதிர் வினைகளுக்கு எதிராகவோ, அ.மார்க்சுக்கு  ஆதரவாகவோ பெரிய அளவில்  எதிர்ப்பு ஏதும் எழாமல் இருப்பது, சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்து வரும் தோழமை சக்திகளை வருத்தமடைய செய்துள்ளது.

பொதுவாகவே, முஸ்லிம்கள் மீது தோழமை உணர்வாளர்கள் முன்வைக்கும் விமர்சனமும் இதை சார்ந்தே உள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேரும்போதெல்லாம் மதச்சார்பின்மை குறித்து அதிகம் பேசுவார்கள்; ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அணி திரள வேண்டும் என்று அறைகூவல் விடுப்பார்கள்; கருத்திலும், களத்திலும் முஸ்லிம் அல்லாத தோழமை உணர்வாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் என விரும்புவார்கள்.ஆனால், தோழமை சக்திகளுக்கு ஏதேனும் பாதிப்பு வரும் போது மட்டும் அமைதியாகி விடுவார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன .இத்தகைய விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் முழுமையாக மறுக்கவும் முடியாது.ஏனெனில் அ.மார்க்ஸ்  மீதான அண்மைக்கால தாக்குதல்களுக்கு எதிராக முஸ்லிம்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் எழாதது , அத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கின்றது.
 
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த டாக்டர்.கே. பாலகோபால் மறைந்த போது, "முஸ்லிம்களில் ஏன் இல்லை ஒரு மனித உரிமைப் போராளி"? என்ற கேள்வி எழும்பியதை இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

முஸ்லிம்கள், தங்களது பிரச்சனைகள்  பற்றி பேச எல்லோரையும் அழைப்பதும் ,மற்றவர்களின் பிரச்சனைகளை கண்டும் காணாமல் கடந்து செல்வதும் மிக மோசமான அணுகுமுறையாகும்.நாம் பாதிக்கப் படும் போது  எத்தனை வீரியமாக களமிறங்குகிறோமோ அதே வீரியத்தை மற்றவர்கள் பாதிக்கப்படும் போது  நாம் வெளிக்காட்டுவதில்லையே அது ஏன்?

நமக்காக குரல் கொடுக்கும் தோழமை சக்திகள் அவர்களுக்குள்  முரண்பட்டு மோதிக்கொள்கிறார்கள் என்றால், அப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். இரண்டு பேரும் நமக்கு முக்கியம் என்பதற்காக கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும். அ.மார்க்சைப் பொறுத்த வரை ,அவர் ஒரு தீவிரமான மனித உரிமைப் போராளி. சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக மட்டும் இன்றி கிறிஸ்தவ, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும், அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும், முழுவீச்சில் குரல் எழுப்பி வரும் எழுத்தாளர் அவர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், எடுத்துக்கொண்ட நோக்கத்திற்காகவும் யாரையும் எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ளத் தயங்காதவர். இடம், பொருள், ஏவல் பார்த்து கருத்துக்களை முன்வைக்கும் தந்திரமெல்லாம் அவருக்கு தெரியாது. மனதில் பட்டதை பட்டென சொல்லிவிடும் பழக்கம் உடையவர்.

அவரது இத்தகையப்  பண்புகளாலேயே அவருக்கு தனி மனிதப்  பகை அதிகம். இன்று அவரை வெறுக்கின்ற, அல்லது விமர்சிக்கின்ற எல்லோரும் அ.மார்க்சின் இந்த தனி மனிதப்  பகைகளைத்தான் அதிகம் சுட்டிக் காட்டுகின்றனர். அவரோடு இணைந்து செயல்பட்டவர்களில் அவரிடம் முரண்படாத ஒருவரையாவது காட்ட முடியுமா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.ஒருவரோடு எல்லோரும் முரண்படுகின்றார்கள் என்பதாலேயே அவர் உண்மை அற்றவர் என்றாகிவிடுமா என்பது தான் நமது கேள்வி.

எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருக்கத்தான் செய்வார்கள். வளைந்து, நெளிந்து, தமக்கு சாதகமான கருத்துக்களை முன்வைக்கும் ஒருவரைத்தான் இன்று பலருக்கும் பிடிக்கிறது. இது இன்றைய சமூக சூழலில் பொதுப் புத்தியாகவும்  மாறி விட்டது.

அவதூறையும், விமர்சனங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்களாகவும்,விமர்சனங்களை தாங்கிக்  கொள்ளும்  மனப்பக்குவம் அற்றவர்களாகவும் நாம் மாறிக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, அ.மார்க்சைப் போன்று வெளிப்படையாக பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்? அவரிடம் முரன்பட்டவர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை வைத்தா அவரது போராட்டத்தை மதிப்பிடுவது? மற்றவர்கள் அப்படி மதிப்பிட்டாலும் ஒரு முஸ்லிமால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முஸ்லிம்களின் இறுதித் தூதரும், வாழ்வியல் வழிகாட்டியுமான நபிகளார் அவர்கள், உண்மையை உரத்துப் பெசியதனாலேயே பலராலும் வெறுக்கப்பட்டவர். அன்றைய சூழலில் அவரோடு உடன் பட்டவர்களை விட முரண்பட்டவர்கள் தான் அதிகம். ஆதரவாளர்களின் எண்ணிக்கை சிறியது என்பதாலேயே அவர் பேசியதெல்லாம் பொய் என்றாகிவிடவில்லை. பலரது எதிர்ப்புக்கும் ஆளான நபிகளார் அவர்கள் தான் பின்னாளில் வரலாற்று நாயகராக உலகத்தையே ஈர்த்தார். ஆகவே அந்த தத்துவத்தின் வழியில் நின்றுதான் ஒரு முஸ்லிமால் இன்றையப் பிரச்சினைகளை பார்க்க முடியும். அப்படி பார்கின்ற போது அ.மார்க்சை விட்டுக்கொடுக்க எங்களால் இயலாது.

தமிழ்  சூழலில் பெரியாரை விட எல்லோருடனும் முரண்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது.உண்மையை உரத்துப் பேசியதில் அவருக்கு நிகரே கிடையாது.பெரியாரை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவரது தத்துவம் பொய்த்தா போனது? எதையும் கேள்வி கேட்டுப் பழகிய,விமர்சிக்க கற்றுத்தந்த பெரியாரை, பின்பற்றுவதாக சொல்பவர்களும் அ.மார்க்சை எதிர்ப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
 
அ.மார்க்ஸ், தமது இலங்கைப் பயண அனுபவங்களைப் பற்றி பேசுகின்ற போது, அங்கே தாம் கண்ட  அவலங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார். தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத  செயல்களை அவர் அதிகம் அதிகம்  பதிவு செய்துள்ளார். மலையகத் தமிழர்களின் நிலையைப் பற்றி பேசி உள்ளார். தமிழ் முஸ்லிம்களின் அவலங்களைப் பதிவு செய்துள்ளார்.  ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையிலும்,அரசியல் விமர்சகர் என்ற வகையிலும் அங்கே தான் கண்ட அனைத்தையும் தன் பார்வையில் எடுத்துரைக்கிறார்.

தமிழர்களின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு, அங்கெல்லாம் சிங்களவர்களின் ஆதிக்கம் பெருகி வருவதையும், புலிகளின் கல்லறைகள் கூட சிங்களவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை என்பதையும் கூர்மையாக பதிவு செய்துள்ளார். அதைப் போலவே தமிழ் முஸ்லிம்களின் வாழ்விடங்களின் தற்போதைய நிலையையும், அவர்களின் இன்றைய அகதி முகாம் வாழ்க்கையையும், அதற்கு காரணமான புலிகளின் அன்றைய வன்முறையையும் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.

ஒரு ஆய்வாளர்  எப்படி பிரச்சனைகளை அனுகுவாரோ ,தாம் கண்டவற்றை எப்படி பகுத்துப் பார்ப்பாரோ, அப்படித்தான் அவர் இலங்கையைப் பார்க்கின்றார்.அப்படியான அவரது ஒளிவு மறைவற்றப் பார்வையில் - வரலாற்றுப் பிழை செய்தவர்களின் செயலைக் குறிப்பிடாமல், அத்தகையப் பிழைகளின் காரணமாக இன்றைக்கும் தொடருகின்ற அவலங்களைப் பற்றி பேசாமல் இருக்க.. அவரால் மட்டும் அல்ல; வேறு எவராலும் முடியாது.

தற்போது புலிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு, ஈழமே துயரமான சூழலில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளைக் கிளறி ஆத்திரமூட்டுவது நியாயமா என்பதுதான் அ.மார்க்சை எதிர்க்கும் புலி ஆதரவாளர்களின் ஒருமித்த கேள்வி.

ஒரு துயரத்தையோ அல்லது நிகழ்வையோ இன்றைய நிலையில் மட்டுமே  பார்ப்பது பாமரப்  பார்வை. ஒரு துயரம் எதனால் நிகழ்ந்தது ,அதற்கு யார் யார் காரணம், எந்தெந்த வகையில் காரணம், அதன் தொடக்கம் என்ன,அதற்க்கு தீர்வு என்ன, எதிர்காலத்தில் அது நிகழாமல் இருக்க வழி என்ன, என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதுதான் ஒரு சிந்தனையாளனின் பார்வை. அ.மார்க்ஸ் அப்படித்தான் பார்க்கிறார்.

ஒரு தரப்பினருக்கு கசக்கிறது என்பதற்காக, அவர் கண்ட உண்மையை பொய் என்று சொல்லி விட முடியாது. அல்லது ஒரு தரப்பினருக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதற்காக எந்த ஒரு தகவலையும் அவர் மிகைப் படுத்தியும் கூறிவிட முடியாது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்பவன்தான் உண்மையான ஆய்வாளன்.

அந்த அடிப்படையில் தான் அவர், அங்கே புலிகளால் துரத்தப்பட்டு அகதி முகாம்களில் அல்லல்படும் முஸ்லிம்களின் துயரங்களை உலகிற்கு சொல்கின்றார். அம்மக்களின் கண்ணீரை காட்சிப் படுத்துகிறார்.  அவர்களுக்காக பேச, தமிழ்ச் சூழலில் யாருமே முன் வராத நிலையில், பொது அரங்கில் துணிச்சலாக குரல் எழுப்புகின்றார். ஒரு மனித உரிமைப் போராளி என்ற வகையில் தமது தார்மீக கடமையை அவர் ஆற்றிவருகின்றார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் அ.மார்க்சை விமர்சிக்கும்  தோழர்களை நோக்கி நாம் எழுப்பும் கேள்வி.

அ.மார்க்சை மூர்க்கமாக எதிர்த்து,  அவரைப் பேச விடாமல் தடுத்ததில் "நாம் தமிழர்" இயக்கத்தினர் ஈடுபட்டதாக அறிகின்றோம். ஒடுக்கப்படும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் தோழர் சீமானின் 'தம்பிகள்' அப்படியான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். அப்படி அவர்கள் ஈடுபடுவது உண்மை என்றால்  அது சீமான் பேசி வருகின்ற பெரியாரிய கொள்கைக்கே எதிரானது என்பதுதான் எமது தோழமையான கருத்து.

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், புலிகளை எதிர்த்துப் பேச காங்கிரஸ் காரனுக்கு உரிமை இருக்கும் போது, புலிகளை ஆதரித்துப் பேச தமக்கு உரிமை இல்லையா என்றும் கலைஞரைப் பார்த்து கேள்வி எழுப்புகின்ற தோழர் சீமானுக்கு, அதே கருத்து சுதந்திரம் பேராசிரியர் அ.மார்க்சுக்கும் உண்டு என்கிற நியாயம் மட்டும் புரியாமல் இருப்பது ஏன் என்பதுதான் நமக்கு புரியவில்லை.

அ.மார்க்ஸ் பேசும் கூட்டங்களில் எல்லாம்  புகுந்து ரகளை செய்து இடையூறு ஏற்படுத்தும் அவர்கள், புலிகளை எதிர்த்து  மிக மோசமாகப் பேசி வரும் காங்கிரஸ்காரர்களின் கூட்டங்களில் புகுந்தும் இதே வகையான ரகளைகளை செய்வார்களா  என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.

அ.மார்க்ஸ் அதிகாரப் பின்புலம் அற்றவர் என்பதனாலேயே அவரின் கூட்டங்களுக்கு சென்று கலகம் புரிவது எந்த வகை நியாயம். புலிகளுக்கு எதிரான கருத்தியலைப் பரப்பி வரும் இளங்கோவன், ப.சிதம்பரம் உள்ளிட்ட ஆளும் அதிகார வர்க்கத்தின்  கூட்டங்களுக்கு  சென்று  கேள்வி கேட்கவும், ரகளை செய்யவும் வலிமை அற்றவர்கள், அ.மார்க்சைப் போன்ற எளிய மனிதர்களிடம்  சென்று மோதிப் பார்ப்பது எந்த வகை வீரம்?

புலிகளை கடுமையாக எதிர்த்து வரும்  காங்கிரஸ் காரர்களைக் கூட, கருத்தால் எதிர் கொள்ளும்  "நாம் தமிழர்" இயக்கத்தினர், புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் மீது மோசமாகப் பாய்வது கண்டனத்திற்குரிய  ஒன்று.

புலிகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகப் பாவித்து, அவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் தமிழரென்றும் பாராமல் மூர்க்கத்தனமாகப்  பாய்ந்து குதறியது தான் ஈழத்தின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம். ஈழத்தில் சாதி வெறியை ஒழிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்ததும், மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களையும் இணைத்த, அவர்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் உத்தரவாதமளித்த  தனி ஈழத்தை கட்டமைக்க மறுத்ததும் தான் புலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.

இது  பற்றி எல்லாம் பேசினால், அது புலிகளுக்கு எதிரானது என்ற கற்பிதம் புலி ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்பிதம் உடையாத வரை இந்தப் பிரச்சனைக்குத்  தீர்வு ஏற்படாது.

2002 - ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, சமாதானம் தழைத்திருந்த அந்த அமைதியான சூழலில், சுதந்திரமாக இலங்கையை  சுற்றி வந்தவன் என்ற முறையில், அப்போதே புலிகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்த உரையாடலை தமிழ் நாட்டில் தொடங்கினோம். அப்போது வெளிவந்து கொண்டிருந்த இதழ் ஒன்றில்  இது குறித்தெல்லாம் விரிவாக அலசி உள்ளோம். தமிழகத்தில் முஸ்லிம்களின் தோழமை சக்தியாகவும்  அதே நேரம் தீவிர புலி ஆதரவாளர்களாகவும் செயல்படும் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
 
பாவலர் இன்குலாப், சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன், தோழர் தியாகு என பல தரப்பினரையும் சந்தித்து, முஸ்லிம்களை அடித்து துரத்திய புலிகளின் செயல் குறித்து  கருத்துக்களை  கேட்ட போது, பலரும் அது தவறு என்பதை ஒப்புக் கொண்டனர். தவறு என்றால் அதை ஏன் புலிகளுக்கு நீங்கள் சுட்டிக்காட்டவில்லை என்று திருப்பிக் கேட்ட போது, சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து  களத்தில் நின்று கொண்டிருப்பவர்களை  கேள்விகளால் காயப்படுத்த விரும்பவில்லை என்று பதில் அளித்தனர்.

அப்போது புலிகள் களத்தில் நின்றதனால் இது பற்றிக் கேட்கவில்லை. இப்போது புலிகள் களத்தில் இல்லாததனால் அது பற்றி கேட்கக் கூடாது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் புலிகளின் தவறுகளை எப்போது தான் கேள்வி கேட்பது?

புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தி, புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளாத வரை அவர்களின் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது.கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு புதிய அணுகு முறையை கையில் எடுக்கும் போதுதான்,  மறுமலர்ச்சி சாத்தியமாகும்.

தோழர் சீமான் தமிழ் இனத்தின் மீள் எழுச்சிக்காக களமாடிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் புலிகளைப்  போலவே பிரச்சனைகளை அணுகினால் வீழ்ச்சிதான் விடையாக கிடைக்கும்.

- ஆளூர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

19 comments

19
ஆதவன்
தோழர் ஷா நவாஸ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இங்கு பேரா.மார்க்ஸ் ஒன்றும் பிரச்சனையில்லை, அவர் ஒரு தற்காப்பு கேடயம் மட்டும் தான்.
இன்று தாங்கள் தான் உண்மையான தமிழீனத்தின் பிரதி நிதிகள்- அக்கறையுள்ளவர்கள் என உலகத் தமிழர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெருவதற்க்கு யாரையாவது புலி எதிர்ப்பாளர்களாக காட்டவேண்டும் என்ற நிலையிருப்பதால் இங்கு பாவம்
பேரா. ஆ.மார்க்ஸ் சிக்கி கொண்டார். இதுவும் ஒரு விதமான Push doctrine தான், புலிகளை ஆதரிக்காத எல்லோருமே புலி எதிர்ப்பாளர்கள் தான்.

இங்கு புலிகளை வைத்து நடக்கும் வணிகத்திற்கு பேரா. மார்க்ஸ் ஒரு பலி கடா அவ்வளவு தான்.

புலி ஆதரவாளர்கள் நாங்கள் என்று கூப்பாடு போட்டு கொண்டு பின் தமிழக முதல்வரின் செல்லப் பிள்ளையாக சுற்றி வருபவர்களுக்கு உலக தமிழர்களிடம் நல்ல பிள்ளை என பேரு வாங்குவதற்காக இந்த நாடகம் .எவனாவது புலி எதிர்ப்பு என்று சொன்னால் போதும் இவர்கள் பாய்ந்து விடுவார்கள். இவர்கள் எல்லாம் காகிதப் புலிகள்..உருப்படியாக என்ன செய்தார்கள் என்றால் ஒன்றும் இல்லை, புலிகள் யார் தெரியுமா? அவர்களின் வீரம் என்ன வென தெரியுமா?.. அவர்கள் எல்லாம் அக்மார்க் குற்றமற்ற தேவர்கள் ...என பஜனை பாடும் வாத்தியக் குழுக்கள், கூட்டங்களில் கோசம் போடுவது ..கருத்து சுதந்திரத்தை பறிப்பது..என மிக அநாகரிகமாக நடந்து வருவதும் புலிகளின் மேல் இருக்கும் குறைந்த பட்ச அனுதாபத்தையும் போக்கிவிடும். புலிகளே தங்களுடைய கடந்த கால தவறுகளை ஒப்புகொண்ட பின் இந்த ******* ஏன் இந்த குதி குதிக்கின்றனர் என தெரியவில்லை.

கலைஞருக்கு முன்னால் ஒரு வேசம் , புலி வேசம் என இரட்டை வேசம் போடும் *******.. உங்களுடைய பேச்சுகளைத் தான் மக்கள் எதிர்க்கபட வேண்டும் .

மார்க்ஸ் போன்ற மனித உரிமை போராளிகளை பற்றி அவதூறு பறப்புவதை அனுமதிக்க முடியாது.

சீமானை பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை.

”சே” குவேராவின் படத்தை டி சர்டில் போட்டு தனது மரியாதையையும் பிரியத்தையும் காட்டிய நெருப்பு தமிழன், புலிகள் அழிக்கப்படும் போது கியூபா எதிர்க்கவில்லை என்ற காரணத்தால் ”சே” குவேராவின் படத்தை கிழித்து எறிந்து விட்டு பிராபாகரனின் படத்தை ஒட்டிகொண்டாராம்..

****** ****** ******** ****** ******

”சே” ஒரு உலக போராளி அவன் எல்லைகளை கடந்து அடக்குமுறைகளுக்கு எதிராய் போராடியவன்.

அவனின் படத்திடம் போய் **** கோபத்தை காட்டுவது என்பது பாறையிடம் போய் முட்டி கொள்வது போல்தான் இருக்கிறது ..அந்த அளவிற்கு விசய ஞானம் உள்ளவர்.

அத்தனை நாத்திகம் பேசுவார், இந்து கடவுளர்களையெல்லாம் திட்டுவார், காவிகளின் காலித்தனத்தை சபையில் போட்டு உடைப்பார் ஆனால்
மும்பையில் “ தாதா சாகிப் பால்தாக்ரேயின் புகழ் பாடுவார்” அவரின் அரசியல் ஞானம் அப்படி .

தலைவன் எப்படியோ அப்படித்தான் இருக்கும் குட்டிகள். ஈழத்து பிரச்சனையில் தமிழர்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யவேண்டும் என்ற முயற்சியில் பேரா. மார்க்ஸ்., .... ...மன்னை வாரி தூத்தி கொண்டு ஒப்பாரி வைக்கும் இன்னொரு கூட்டம்.

முரன்பாடுகளை கடந்த அந்த சூரியன் எட்டாத உயரத்தில் என்றும் ஒளித்து கொண்டிருக்கும்.

பள்ளத்தில் நின்று ***** கொண்டிருக்கட்டும் மற்றவைகள்.
venkat
//‘அவதூறு செய்கிறார்கள், என்னைத் திட்டுகிறார்கள், அறிவில்லாமல் எழுதுகிறார்கள், சதி செய்கிறார்கள்’. அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களை இப்படித்தான் எதிர்கொள்வார்.

பிறர் மீதான விமர்சனங்களை எவ்வாறு மேற்கொள்வார்? முதலில் எதிரியின் சாதி கண்டுபிடிப்பார்; வரவு செலவு பற்றிப் பேசுவார். தனது புகலிட பரப்புரையாளர்களான ஷோபா சக்தி, சுகன் இன்னபிற சிலபல தமிழகப் பரப்புரையாளர்களையும் வைத்து எதிரிகள் பற்றி நரகல் நடையில் எழுதச் சொல்வார். இவர்கள் அ.மார்க்ஸின் விமர்சகர்களை மிரட்டவும் செய்வார்கள். இதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தனது கருத்துக்களை எதிர்கொள்பவர்களை அ.மார்க்ஸ் அணுகும் முறை.

அ.மார்க்ஸ் தமது பரப்புரையாளர்கள் செய்கிற அனைத்துத் தகிடுதித்தங்களையும் மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். அ.மார்க்ஸின் மேற்கோள்களை முன்வைத்து அவரது பரப்புரையாளர்கள் செய்கிற விளையாட்டுக்களை முதன்மையான தத்துவம் எனச் சான்றிதழ் கொடுப்பார்.

அ.மார்க்ஸின் மேற்கோள்களை அவரது பரப்புரையாளர்கள் காவித் திரிய, அதே மேற்கோள் பரப்புரைகளைத் தமிழக இதழ்களில் உரையாடல்கள் என்றும் கட்டுரைகள் என்றும் அவர்கள் முன்வைப்பார்கள். இவ்வாறாக அ.மார்க்ஸின் மேற்கோள்கள் தமிழகம் - புகலிடம் - புகலிடம் - தமிழகம் எனச் சுற்றுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.//

What yamuna rajendra wrote was proved again
venkat
//1. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கும் நேரடிக் காரணமான கருணாவும் பிள்ளையானும் இன்னும் இலங்கையில்தான் இருக்கிறார்கள். இப்படுகொலைகள், அநியாயங்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பதுதானே நியாயம்? இலங்கை சென்றபோது இதை வலியுறுத்தி எங்காவது பேசினீர்களா?

2. புலிகள் மீது அ.மார்க்ஸ் வைத்த விமர்சனங்கள் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய போராளி இயக்கங்களுக்குப் பொருந்தாதா? அப்பாவி மக்களைப் புலிகள் கொன்றார்கள் என்ற காரணத்தால் அவர்களை எதிர்ப்பதாகக் கூறும் நீங்கள், அப்பாவிப் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்த இஸ்லாமியப் போராளி இயக்கங்களை அப்படி அணுகுவீர்களா? கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அதற்கு அல்-உம்மாதான் காரணம் என்று எப்போதாவது கூறியிருக்கிறீர்களா?///

A.marx or shanawas should answer to these questions. You people are not answering any questions askedy by others. At the same time, you are targeting the people asking questions. this is not a democratic one.
கதிர் செல்வி
நன்பர் வெங்கட் , அது என்னன்னு தெரியல இஸ்லாமியர்கள்னு ஒரு வார்த்தை வந்த உடனடியா “குண்டு வெடிப்பு” நு நீங்க குதிக்கிறிங்க..

///கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அதற்கு அல்-உம்மாதான் காரணம் என்று எப்போதாவது கூறியிருக்கிறீர்களா?/// இதுக்கு ஏன் அல் உம்மா தான் காரணனும் சொல்ல --அல் உம்மா என்ற தீவிரவாத இயக்கத்தை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் இந்து முண்ணனிகள் தான் காரணம் என எல்லருக்கும் தெரியுமே. கோவை மதக்கலவரம் உருவாக்கிய இந்துத்துவா தீவிரவாதிகள் தானே அல் உம்மா என்ற தீவிரவாதம் உருவாக காரணம். இந்துத்துவா காவாலிகளின் குண்டு வெடிப்பு கலாச்சாரம் இப்பொழுது நாடு முழுவதும் தெரிய வந்துவிட்டது -கீற்று வில் சிறப்பு கட்டுரையே இருக்கு ..பாவம் வாழ்க்கையை இழந்த முசுலீம்கள் தான் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர்.

அப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்?... கோவை குண்டு வெடிப்பு அல் உம்மா தீவிரவாத இயக்கம்-அதற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ்- இந்துத்துவா காவாலிகளும் தீவிரவாதிகளே என ஒத்துகொண்டால் விடுதலை புலிகளும் தீவிரவாதிகள் தான் என நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா??

நண்பர் ஷா நாவாஸிற்கு தயக்கம் இருக்காது என நினக்க்கிறேன்
அசோக்
இந்துத்துவா தீவிரவாதிகளுக்கும் , விடுதலை புலிகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?...இருக்கிறது போலத்தான் தெரிகிறது.

ஒரே மாதிரியான எதிர்ப்புகள் -ஒரே மாதிரியான ஆதரவுகள்.. என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியலயே.
குட்டகொழப்பி
சரியா சொன்னீங்க ஆதவன்.......

அ.மார்ஸ்க்கு நேர்ந்த இதே நிலை தான், கீற்று சென்ற மாதம் ஏற்பாடு செய்த கூட்டத்தினுலும் முஸ்தீன் என்ற அந்த இலங்கை தமிழ் இஸ்லாமியருக்கும் நடந்தது......

கீற்று ரமேஷ் கூட இந்த பிர்ச்சினை நடந்த அன்று போலி வீராவேஷம் போட்ட தமிழ் தேசியவாதிகள் பக்கம் நின்றது பக்கா சந்தர்ப்பவாதமே......கருத்து சுகீற்று இது பற்றி விளக்கமளிக்க வேண்டும்.
rajesh vinayagam
அ.மார்க்ஸ் நேர்மையான ஆய்வாளராம். ஒரே காமெடிதான். இவரை இன்னுமா இந்த உலகம் நம்புது!!!
கார்திக் கெளரி சங்கர்
உஙகள் உலகம் “ ஈழத்து தமிழர்களின் இரத்தத்தையும், சதையையும் வைத்து, அரசியல் செய்யும் நாடக சபாக்களை நம்பும்,

பராக்கிரம சாகசங்களை -கற்பனை கதாபாத்திரமாக்கி வரலாறு படைத்து- வெளி நாட்டு சுற்றுலா செல்லும் தமிழ் உணர்வாளர்களை பேசும்.

தின்னை பேச்சு வீணர்களை நம்பும், கூட்டம் கூட்டமாய் போய் பேச விடமால் கோசம் போட்டு கலவரம் செய்பவர்களை நம்பும்,

கெழடு போனதிற்கு பின் தமிழக அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பாத்திரம் வகிக்க ஈழத்து இரத்த்தையும் ,சதையையும் சூத்திரமாக்கி அரசியல் கணக்கு போடுவோர்களையும் நம்பும்.

கோடியில் ஒருவன் உண்மையை மட்டும் பேசும் போது அவர்களை விடுதலை புலி எதிர்ப்பாளர்கள், ஈழத்து எதிர்ப்பாளர்க்ள என மாற்று வண்ணம் பூசூம் ஈழத்து வணிபர்களை நம்பும்..
ஆனால் மனித உரிமை போராளியாய் நின்று பாதிக்கப் பட்ட மக்களின் உண்மையை உலகிற்கு கொண்டு வரும் தன்னலமற்ற ஆர்வலர்களை இந்த உலகம் நம்ப கூடாது????..

கொஞ்சமும் மீதமிருக்கும் மனித உரிமை ஆர்வலர்களை முடமாக்கும் செயல்களில் ஈழத்து வணிகர்களுடன் சேர்ந்து கீற்று இரமேஸ் முதலானவர்கள் இருப்பது தான் மிகவும் வேதனையானதாகும்.
கார்திக் கெளரி சங்கர்
கீற்று விழாவில் -அழைப்பின் பேரில் வந்த ஈழத்து தமிழரை பேச அழைத்து மூக்கருத்த இரமேஸ் அவர்களின் விருந்தினர் உபச்சாரம் மிகவும் கண்டிக்கத்தகக்து.

அழைப்பிதல் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும் , இல்லை என்றால் பேச அனுமதி கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழன் அவன் சூழல் சார்ந்த உண்மைகளை விளக்கும் போது - நம்மை போன்ற வெளியிலிருந்து பிரச்சனைகளை பார்க்கும் நடு நிலையாளர்கள் காது கொடுத்து கேட்க வேண்டிய பொது நாகரிகம் கூட இல்லாமல் கூச்சல் குழப்பமும் செய்து வெந்து போய் ஆருதலுக்காக இங்கு ******* அவமான படுத்தி அனுப்பியது இந்த கூட்டம்.

பேரா. சுப வீ அவர்கள்- பேசி கொண்டிருக்கும் போதே எழுந்து ஆட்சேபனம் செய்கிறார், அவரை தொடர்ந்து சந்தானம் ,,மற்றும் சகாக்கள் அனைவரும் எழுந்து பேச விடமால் விரட்டுகின்றனர்..
ஈழத்திலிருந்து வந்த அந்த பாதிக்கப்பட்ட நபரின் மன கஷ்டம் எப்படி இருந்திருக்கும்??

சு.ப வீ அவர்களே நீங்கள் முன் செய்த மாதிரிகளை இனி நீங்கள் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் திரும்ப செய்வார்கள்.அப்படி அவர்கள் செய்வதற்கு போதுமான நியாமான காரணங்கள் ஏராளம் . நீங்கள் கூட்டதில் என்ன சொன்னீர்கள்?? சில நேரங்களில் அதிகமான பேச்சு சுதந்திரம் ஆபத்தில் முடியும், அதை அனுமதிக்க முடியாது என கூறினீர்களே???? சுதந்திரத்தில் குறைவான சுதந்திரம் அதிகமான சுதந்திரம் என நிர்ணயப் படுத்த முடியுமா?? அந்த அதிகாரத்தை உங்களுக்கு தந்தது யார்???

நீங்கள் சேர்ந்த கருணாநிதி கூட்டம் உங்களுக்கு இந்த சுதந்திர நிர்ணயத்தை கற்று கொடுத்திருக்கும்.

நீங்கள் கருணாநிதியுடன் ஒரு முகத்தையும், இன்னொரு முகத்தை உலக தமிழர்களிடம் காட்டும் **** ****** எங்களை போன்ற மக்கள் எப்படி எதிர்ப்பது என்ற நாகரீகத்தை எங்களுக்கு கற்று தந்துளிர்கள்-- நன்றி.

இனி உங்களின் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முடிவு செய்கிறோம்.

அடுத்து தமுமுக - அன்சாரி - அந்த ஈழத்து தமிழனை பார்த்து உங்களை எங்களுக்கு யாரென்று கூட தெரியாது என்று சொன்ன சமயோசித புத்தியை நினைக்கையில் ...என்ன செய்வது அவர்கள் எல்லோரும் உண்மையைத் தான் கூறிவுள்ளார்..

ஈழத்தில் பாதிக்கப்பட்ட யாரையுமே இங்கு இருக்கும் உணர்வாளர்களுக்கு தெரியாது என்பது தான் உண்மை.
இவர்களின் பேச்சு -மத்திய மாநில அரசியலை சுற்றி இருக்கும், இவர்களின் உணர்வு உலக தமிழர்களை சுற்றியே இருக்கும்.
சுந்தரேசன்
கோவை இராணுவ லாரி மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள் என்று அவதூறாக எந்த ஆய்வுமின்றி எழுதினார் இந்த ஆய்வாளர் அ.மார்க்ஸ். அதை ஆதாரத்துடன் மறுத்து ச.பாலமுருகனும், இரா.முருகவேளும் எழுதினார்கள். அதன்பின்பு, தவறான தகவலை எழுதியதற்காக இதுவரை எங்கேயும் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காதவர்தான் இந்த நெர்மையான ஆய்வாலர்.
senkodan
இலங்கையில் நுழைவதற்கு மனித உரிமைவாதி யாருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் அ.மார்க்சுக்கு மட்டும் அனுமதி கொடுக்கபப்டுகிறது என்றால் அவரது நேர்மையில் சந்தேகம் ஏற்படவே செய்கிறது. 'இவர் நம்ம ஆள்' என்று எண்ணம் இலங்கை அரசிடம் இருந்தால்தான் அவருக்கு அனுமதி என்பது சாத்தியம். இலங்கை அரசிடம் இவருக்கு அத்தகைய செல்வாக்கு எப்படி ஏற்பட்டது? இனப்படுகொலை நாட்டு அரசாங்கத்துடன் அ.மார்க்சின் தொடர்பு என்ன? ஐ.நா. அதிகாரிகளுக்கே கிடைக்காத அனுமதி இவருக்குக் கிடைத்தது எப்படி? இவரைப் போய் நேர்மையான மனித உரிமையாளர் என்பது சின்னபுள்ளத்தனமா இல்லே இருக்கு
senkodan
One more thing i recently read from yamuna rajendran..

நீங்கள் (a.marx) உங்களை தலித்தியக் காவலராகவோ இஸ்லாமியக் காவலராகவோ வரித்துக் கொள்வதில் எவருக்கும் ஆட்சேபணை இருக்க நியாயமில்லை. ஆனால் உங்களோடு கருத்து விவாதம் மேற்கொள்கிறவர்கள் அனைவரையும் இந்துத்துவவாதிகள் என்பதும் தலித்திய விரோதிகள் என்பதும் சாதியவாதிகள் என்பதும் உங்களது கயமை குணம் என்கிறேன் நான். உங்களது இந்த அவதூறு முத்திரையைத் தொடர்ந்து, உங்களது சீடர்களான ஷோபா சக்தியும், சுகனும் இதே பாணி தாக்குதலையும் அவுதூறுகளையும் மிரட்டலையும் என் மீது பிரயோகித்தார்கள். இதற்கெல்லாம் ஆதி காரணம் உங்களது அற்பமான குணம் அல்லவா? உங்களது அதிகாரத்தைக் கட்டமைப்பதற்காக கருத்துமாறுபாட்டாளர்களை முத்திரைகுத்திச் சாய்ப்பது உங்களது அற்பமனம் அல்லவா?

how can he be a genuine man?
thangapandian
சிங்கள அரசின் நிதியுதவியோடு இயங்கும் என்.ஜீ.ஓ. நண்பர்கள்தான் அ.மார்க்சின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பணயுதவி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கடந்த வருடம் எழுந்தது. இதுவரைக்கும் அதற்கு அ.மார்க்ஸ் பதில் சொல்லவில்லை. அவரின் கள்ள மௌனமும், அந்த என்.ஜீ.ஓ.க்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் அ.மார்க்சின் புலியெதிர்ப்பு கட்டுரைகள் வெளிவருவதும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
thenilavan
பத்து வருடங்களுக்கு முன்பு தலித் அரசியல் பேசிவந்த அ.மார்க்ஸ், தலித் இயக்கங்கள் அவரது பித்தலாட்டத்தைக் கண்டுகொண்டு, அவரது புத்தகங்களைக் கூட விற்க விடாமல் விரட்டியடித்தன. அத்தோடு தலித் அரசியலுக்கு அ.மார்க்ஸ் கும்பிடு போட்டார். அதன்பின்பு இஸ்லாம் அரசியலை கையில் எடுத்து பேசிவருகிறார். இதுவெல்லாம் அ.மார்க்சுக்கு தன்னை மார்க்கெட் செய்து கொள்ளும் உத்தி. இப்போதுகூட பாருங்கள்.. அனைத்து முஸ்லிம் அமைப்பு மாநாடுகளிலும் அவரைப் பார்க்க முடியாது. எந்த அமைப்பு மேடையில் தலைவருக்குப் பக்கத்து சீட்டை அ.மார்க்ஸ் போடுகிறதோ, அங்கு தான் அ.மார்க்ஸ் தலையைப் பார்க்க முடியும்.

முன்பு தலித் அரசியல் பேசிய அ.மார்க்ஸ், இப்போது தலித்துகளுக்கு எதிரானவரை காந்தி குறித்து பஜனை பாடி வருகிறார். நாளையே இவர் முஸ்லிம் அரசியலைக் கைவிட்டு, ஜார்ஜ் புஷ் பஜனை பாடினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. முஸ்லிம் அமைப்பினர் இதைப் புரிந்து உஷாராக் ஐருப்பது நல்லது.
அறம்
இலங்கைக்கு பாஸ்போர்ட்ம் விமான டிக்கட்டும் இருந்தாலே போதுமானது யார் வேண்டும் என்றாலும் இலங்கை செல்லலாம் , இலங்கைக்கு செல்பவர்கள் எல்லாம் இராஜபக்சே வின் உறவினர்களா?
அறம்
நீங்கள் அடுக்கடுக்காக அடுக்கும் அவதூறுகளுக்கு எல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டுமா?

உங்கள் அவதூறுகளை காது கொடுத்து கேட்டாலே அது ஒருவரின் செயலை ஊனப்படுத்திவிடும்.
sivakumar
சும்மா புலிகள் முஸ்லிம்களைத் துரத்தினார்க்ள் என்று ஒரு பக்க நியாயத்தை மட்டும் பேசுகிறீர்கள்... முஸ்லிம் தரப்பில் என்ன தவறு நடந்தது என்று என்றைக்காவது பேசுகிறீர்களா? ஷோபா சக்தியின் இணையப்பக்கத்தில் பார்த்த பின்னூட்டம் இது... உங்களுக்காகத் தருகிறேன்...

//ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா? ஆம் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்கள், அதுவும் மிகவும் கொடூரமானமுறையில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கி, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள், அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நாலாம் கொலனி, துறைநீலாவணை, சத்துருக்கொண்டான், வீரமுனை, பிள்ளையாரடி, தானாமுனை, செங்கலடி,ஏறாவூர், குடியிருப்பு, குருக்கள் மடம், களுவாஞ்சிக் குடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும், சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதைச் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம் கூட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒருவருமில்லாமல் படுகொலை செய்து தமிழ்க் கிராமங்களை அழித்தவர்கள் முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டத்தில், சில கிராமங்களில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் அழித்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள். இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் Google இல் நிறைய உண்டு, நான் சொல்வதை மட்டும் நம்பத் தேவையில்லை. எந்தக் கிராமத்தில் முஸ்லீம்களை மட்டும் தெரிவு செய்து தமிழர்கள் அழித்தார்கள்?, இன்றும் கிழக்கில் மட்டுமல்ல, 95% தமிழர்கள் மட்டும் வாழும் வடக்கில் கூட முஸ்லீம் கிராமங்கள் உண்டு, மூதூருக்கு முஸ்லீம்களை அழிக்கப் போனதாக ஈழத்தமிழர்களில் உள்ள வெறுப்பில் சிங்கள அரசாங்கத்துக்காகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் பல வலைப்பதிவாளர்கள். முஸ்லீம்களை அழிக்க விரும்பினால் மூதூருக்கு ஏன் போக வேண்டும், யாழ்ப்பாணத்தில், மன்னாரில், தாராபுரத்தில், எருக்கலம்பிட்டியில், வவுனியாவில், விடத்தல் தீவில் எல்லாம் செய்ய முடியாதா?, சும்மா பம்மாத்துக் கதை விடுகிறார்கள், தமிழைப் பேசிக் கொண்டே தமிழினத்தின் முதுகில் குத்துகிறார்கள். முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா? முஸ்லீம்கள் வந்தேறு குடிகளென அவர்களே வாதாடும் போது, தமிழ்மணத்தில் உள்ள ஒருவர் மட்டும் அவர்கள் வந்தேறு குடிகள் இல்லையாம், தம்மை அரபுக்களின் வழிவந்தவர்களென பெருமைப்படும் இலங்கை முஸ்லிம்களை, இல்லையென மறுதலிக்கும் இவர் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் மூக்கையுடைத்து விடுவார்கள். இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்கள் தான் என்று வாதாடி, முஸ்லீம்களைத் தமிழர்களாக தம்மோடு இணையுமாறு, இன்று நேற்றல்ல 1880 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் கேட்டது மட்டுமல்ல, அவர் Royal Asiatic Society யின் முன்பு “The Ethnology of the Moors of Ceylon என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் சேர் இராமநாதன் வாதாடியது என்னவென்றால், எப்படித் தமிழர்கள் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களோ, அதே போல் தான் முஸ்லீம்களாகவும் இருக்கின்றார்கள் என்றும், மொழி, கலை, கலாச்சார, பண்பாடு, பெரும்பாலான தமிழ் முஸ்லீம்களின் ஒருவமைப்பு எல்லாவற்றையும் ஆதாரம் காட்டி, இலங்கை முஸ்லீம்கள், தென்னிந்தியாவின் தமிழர்கள், ஒரு சில அரேபிய வியாபாரிகளின் திருமணத் தொடர்பு ஏற்பட்டுக் கலப்பேற்பட்டிருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் கலப்பற்ற, இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்கள் என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் சேர் இராமநாதன். ஈழத்தமிழர்கள் மதரீதியில் பிளவு படுவதை 1880 யிலேயே ஈழத்தமிழ்த்தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் சேர் ராமநாதனின் இந்த தமிழ்ச்சகோதரத்துவத்தை மலே முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார்கள் இலங்கையின் “தமிழ்” முஸ்லீம்கள். கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையிருப்பதை மறுக்காத முஸ்லீம்கள், தாங்கள் தமிழர்களல்ல என்பதை மிகவும் உறுதியாகக் கூறியதுடன், இதற்குக் காரணம் ‘inevitable process of acculturation of a minority people’ என்று கூறினார்கள்.முஸ்லீம்கள் தமிழைப் பேசுவதற்குக் காரணம், இலங்கையின் துறைமுகங்களிலும், தென்னிந்தியத் துறைமுகங்களிலும், தமிழ் தான் வர்த்தகத்தின் மொழி( lingua franca’ of commerce) அதனால் தான் தமிழைப் பேசுகிறோம் என்று சேர் இராமநாதனுக்குத் *** பதிலளித்தார்கள் “தமிழ்” முஸ்லீம்கள். அதே வேளையில் தம்முடைய உடலில் தமிழ் இரத்தக் கலப்புள்ளதையும் அவர்கள் மறுக்கவில்லை, ஆனால் அவர்களில் சிலருக்கு தமது உடலிலுள்ள சிறியளவு அரபு, அல்லது ஆப்கானிகளின் இரத்தம், தமிழை விட முக்கியமானது. இலங்கை முஸ்லீம்கள் தொப்பி பிரட்டிகளா? ஓம், தொப்பி பிரட்டிகள் தான் முஸ்லீம்களைத் “தொப்பி பிரட்டிகள்” என்று இலங்கையில் அழைப்பதற்குக் காரணம், அவர்கள் எங்கு போகிறார்களோ, அங்கு சூழ்நிலைக்கேற்றவாறு, சுயலாபத்துக்காக அடையாளத்தையும், விசுவாசத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் என்பது தான். நான் சொல்லுவதென்னவென்றால் தமிழர்கள், இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் சுயநலத்துக்காகவும், சலுகைகளுக்காகவும் அவர்கள் தமது தமிழடையாளத்தை மறுதலித்தார்கள் என்பது தான் சரியானதாகும். யாழ்ப்பாணத்தில் தம்மைத் தமிழர்கள் எனவும், சிங்களப்பகுதிகளில் தாம் சிங்கள ஆதரவு முஸ்லீம்கள் எனவும், எங்கெல்லாம் ஒரு ரூபாய் கிடைக்குமோ, அங்கெல்லாம் தொப்பியைப் பிரட்டியவர்கள் இவர்கள், தாம் தமிழர்களல்ல என மறுத்தவர்கள் இவர்கள். நாங்களாவது முஸ்லீம்களை தமிழர்கள், எங்களின் சகோதரர்கள் என அரவணைக்கத் தயங்குவதில்லை. ஆனால் சிங்களவ்ர்கள் இன்றும் “மரக்கல மினுஸ்”* அதாவது கள்ளத்தோணியில் வந்தவர்கள் என்று தான் அழைக்கிறார்கள். அதைக்கூட முஸ்லீம்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்கள். இலங்கை முஸ்லீம்களும் தாம் முஸ்லீம்கள் அதாவது அரபுக்கள் மட்டும் தான் என்று ஒரு அடையாளத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே, அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் ஒரு கதையென தொப்பியைப் பிரட்டுவதால் தான் இந்தப் பிரச்சனையே. அவர்களின் சந்தர்ப்பவாததைத் தான் இலங்கைத் தமிழர்கள் வெறுக்கிறார்கள், தமிழநாட்டில் அவர்கள் தமிழர்கள் என்றால் இலங்கையில் மட்டும் எப்படி அரபுக்களானார்கள், வெறும் சுயலாபத்துக்கான சந்தர்ப்பவாதம் தானே, எந்த இலங்கைத் தமிழர்களும், முஸ்லீம்களைத் தமிழராகும் படி கேட்கவில்லை, நானும் கூடக் கேட்கவில்லை, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத் தான் நான் வெறுக்கிறேனே தவிர முஸ்லீம்களையல்ல. முஸ்லீம்களின், தாம் தமிழரல்ல எனும் தமிழெதிர்ப்பைத் தான் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால் தான் சிங்கள ராணுவம், Muslim Home Guards ஐ உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் “தமிழ்” முஸ்லீம்கள், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து, எத்தனை தமிழ்க்கிராமங்களைப் பூண்டோடழித்துப் படுகொலை செய்து, தமிழர்களைத் தமிழ்க்கிராமங்களை விட்டு வெளியேற்றினார்கள், எத்தனை தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து, புலிகளுக்கெதிராக உளவு பார்த்தற்காக, பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றிய போது, யாராவது முஸ்லீம்கள் கொல்லப் பட்டார்களா? எந்த முஸ்லீம் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டாரா. சத்துருக்கொண்டான் கிராமத்தில் முஸ்லீம்கள் என்ன செய்து, தமிழர்களே இல்லாமல் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் நான் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதற்காக இதைச் சொல்லவில்லை, பிரபாகரன் கூட யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார், எந்த முஸ்லீமும் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா? முஸ்லீம்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்கள். ஆம், காட்டிக் கொடுத்தார்கள், ஈழவிடுதலையின் ஆரம்பகால கட்டத்தில் தமிழர்களுடன், தமிழைப் பேசிக்கொண்டு தாயும், பிள்ளையும் போல், தமிழ்மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கெதிராக யாழ்ப்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தார்கள், அதனால் சிங்கள இராணுவத்துக்கு வெற்றியையும், பல இளந்தமிழர்களின் சாவுக்கும் காராணமாக இருந்தார்கள், அதனால் ஈழவிடுதலைப் போரைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால். பிரபாகரன் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினார். அப்படி பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை வெளியேற்றும் போதும், முஸ்லீம்களின் உயிருக்கோ, மானத்துக்கோ, உடைமைக்கோ எந்த விதப்பாதிப்பையும் ஏற்படுத்த ஈழத்தமிழர்களின் பெருந்தன்மையும், சகோதரவுணர்வும் இடங்கொடுக்கவில்லை. 2003 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்குப் பிரபாகரன் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விளக்கமளித்த போது, முஸ்லீம் தலைவர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டைக், கண்ணியத்தை, சகோதரவுணர்வை மெச்சியதை இத் தருணத்தில் நினைவு கூர்வது நல்லது. மூதூரில் முஸ்லீம்களைக் கொல்வது தான் விடுதலைப் புலிகளின் நோக்கமென்றால், இந்தியப் பிரிவினையின் போது முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்றது போல், குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்றது போல், யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் போது விடுதலைப் புலிகள் முஸ்லீம்களைக் கொன்றிருக்க முடியாதா? மூதூருக்குப் போய்த்தான் கொல்ல வேண்டுமா, சொல்லுகிறவன் சொன்னா சொந்தப் புத்தி எங்கு போனது. ஈழத்தமிழர்களின் மேலும், திராவிட இயக்கங்களிலும், விடுதலைப் புலிகளிலுமுள்ள காழ்ப்புணர்வால், ஈழவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி, வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கச் சிலர் முனைவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம், இப்படிச் செய்து, தமிழனென்று தம்மை அழைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தும் ஈனத்தனத்தை தமிழர்களின் சரித்திரம் ஒரு போதும் மன்னிக்காது//
HM.sadhiq
நன்பர் சிவக்குமாரின் உள்ளக்குமுறல் மிக மிக நியாயமானது! நாம் நம் இனம் என்பதற்க்காக அவர்களின் த செயலை ஆதரிக்கக்கூடாது. ஆனால் ஒட்டு மொத்த புரிந்துனர்வு மட்டும் அவசியம் . யார் எதிரி,யார் துரோகி, யார் நன்பன்,இது காலத்தின் மிக மிக அவசியமான தேவையாகும். நம்மில் சில விசயங்களில் மனக்கசப்புகள் ஏற்ப்படலாம்.இதற்க்கு நம்மை வழி நாடாத்துபவர்கள் கூட காரனமாயிருக்கலாம்.ஆனால் முஸ்லிமில் முனாபிக் தனம் மட்டும் கூடவே கூடாது.யார் நம்முடய பொது எதிரி என்பது வரையறுக்கப்பட வேண்டும் . அப்போதுதான் தெளிவான முடிவு எடுக்க முடியும்.காலம் நம்மில் உள்ள தவறுகளை சரி செய்யும் .இன்ஷா அல்லாஹ்!!!!!வறான
viyasan
//சும்மா புலிகள் முஸ்லிம்களைத் துரத்தினார்க்ள் என்று ஒரு பக்க நியாயத்தை மட்டும் பேசுகிறீர்கள்... முஸ்லிம் தரப்பில் என்ன தவறு நடந்தது என்று என்றைக்காவது பேசுகிறீர்களா? ஷோபா சக்தியின் இணையப்பக்கத்தில் பார்த்த பின்னூட்டம் இது... உங்களுக்காகத் தருகிறேன்... //

இது 2006 இல் நான் எழுதிய‌ க‌ட்டுரையின் ஒரு ப‌குதி, அதை யாரோ அப்ப‌டியே ப‌திவு செய்திருக்கிறார்க‌ள். என்னுடைய‌ க‌ருத்தில் கொள்கைக‌ளை நான் மாற்றிய‌தேயில்லை. :-)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.