"சண்டை முடிஞ்ச பிற்பாடு எல்லாப்படைகளும் பாசறை திரும்பின. அப்போது தலைவர் என்னிடம் வந்து தம்பி வா நாம் சண்டை நடக்கும் இடத்தை பார்த்துவிட்டு வருவோமென கதைத்தனம். நானும் சரியென்று போகத்தலைப்பட்டனம். சண்டை நடந்த இடத்தை நாங்கள் பார்வையிட்டபோது திடுமென பத்து சிங்களச் சிப்பாய்கள் அவ்விடத்தில் வந்து ஏகே 47 துப்பாக்கியால் சுட ஆரம்பித்துவிட்டார்கள். தலைவர் என்னை மறைந்து கொள்ளச் சொல்லிவிட்டு திடுமென பாய்ந்து சென்று அந்த பத்துபேரையும் தமது இருகைகளால் வளைத்து இறுகப் பிடித்துக்கொண்டார். அந்த பத்து சிங்கள சிப்பாய்களும் சிங்களத்தில் விடுங்கோ விடுங்கோவென கத்திக்கொண்டே திமிறினார்கள். அதைக் கண்டு அண்ணன் சிரித்தவாறு ஒருவன் தலையைப் பார்த்து பூ என ஊதினார். அவன் தலை அப்படியே பறந்துபோனது. முண்டம் மட்டும் திடுமென தலைவர் காலடியிலே விழுந்தது.
தலைவர் மெல்ல புன்னகைத்தபடியே என்னைப் பார்த்தார். தம்பி நீ ஆட்களை கொன்றிருக்கிறாயா என்று கேட்டார். இல்ல தலைவரே என்றேன். ம் மூச்சைப்பிடித்து இவர்கள் தலைகளை ஊதித்தள்ளு என்றார். நானும் புஸ் புஸ்ஸென்று பாம்புபோல ஊதிப் பார்த்தேன், வெறும் காத்துதான் வந்தது. வெறுங்காத்துதான் வருது என்று தேவர்மகன் ரேவதிபோலச் சொன்னேன். தலைவர் வெடிச்சிரிப்பு சிரித்துவிட்டு மற்ற ஒன்பது சிங்கள சிப்பாய்களின் தலைகளையும் புஸ் புஸ்ஸென்று ஊதித்தள்ளினார். அத்தனை உடல்களும் திடும் திடுமென நவகிரகங்கள் போல தலைவர் காலடியில் வீழ்ந்து கிடந்தது. அப்போது தூரத்தில் தம்பிகள் கிபீர் விமானங்கள் வரும் எச்சரிக்கை மணியை ஒலித்தார்கள். அங்கு மறைய இடம் ஏதுமில்லை. எனவே உடனடியாக அவ்விடத்தை காலி செய்தாகவேண்டும்.
தலைவர் சுற்றும் முற்றும் பார்த்தார். உடனே, பொடியாள் என்று என்னை செல்லமாய் அழைத்து அப்படியே என்னை முதுகில் உப்புமூட்டை தூக்கிக்கொண்டு வலதுகாலை கீழே உந்தித்தள்ளினார். நான் தலைவரே நான்போய் எப்படி உங்கள் முதுகில் என்று சொல்லி ஆனாலும் அவர் பேச்சைத் தட்டாமல் உப்புமூட்டை ஏறிக்கொண்டு அவரையே உற்றுப் பார்த்தேன். அவர் அப்படியே வானில் பறக்க ஆரம்பித்தார். தலைவா தலைவா என்று நான் கண்களில் கண்ணீர் வடிய அரற்ற ஆரம்பித்தேன். இலங்கை அரசின் கிபீர் விமானங்கள் வரும்போது நாங்கள் மேகக்கூட்டத்தில் பறந்துகொண்டிருந்தோம். நான் அப்படியே வியந்துபோய் மேலேயிருந்து ஒரு கிபீர் விமானத்தின்மீது புளிச்சென்று காறித்துப்பினேன். அந்த எச்சில் அப்படியே விமானத்தின் முன்கண்ணாடியில் விழுந்தது. அந்த விமானி சிறிதுநேரம் அப்படியே சிறிதுநேரம் கண்தெரியாமல் திகைத்து நின்றான். தலைவர் ஹாஹாவென வெடிச்சிரிப்பு சிரித்து சரியான பொடியள் நீ என்று சொன்னார். பின்பு நான் பத்திரமாக வீடுவந்து சேர்ந்தபிறகு இதைப்பற்றி உடனே எல்லாரிடமும் சொல்லத்தொடங்கினேன். அதற்கு தோழர்கள் அ.மார்க்சும் சுகனும் இனிமே எல்லாம் அப்படித்தான் என்றார்கள்”.
வெளிவரப்போகும் சோபாசக்தியின் பெயரிடப்படாத சுயசரிதையின் கொரில்லா அனுபவங்கள் மற்றும் பிரபாகரன் என்ற தலைப்பில் வந்த முதல் பகுதியில் வெளியாகவிருக்கும் சுயானுபவங்கள். ('நான் அப்படிச் சொல்லலை, புலிகள் சாதி பாக்கலை, சாதி வளர்க்கலை' என்று டகால் பல்டி அடித்திருக்கும் சோபாசக்தி அடுத்து இப்படித்தான் எழுத முடியும்.) நிற்க.
ஜான் ஓஸ்பார்ன்- ஆங்கில நாடக இலக்கியங்களில் இவருக்கு தனி இடம் உண்டு, 1950களில் இவரின் தனிநபர் கதாபாத்திரங்களை சுற்றிலும் நடக்கும் நாடகங்கள் மிகவும் பிரசித்தம். ஒரே ஒரு வீட்டிற்குள் நடக்கிற வெறும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை மட்டுமே முதலீடாகக் கொண்டு இவர் எழுதிய நாடகங்கள் பரந்தளவிலான மக்களின் கவனத்தைப் பெற்றன. இவர் ஒரு கோபக்கார இளைஞன் என்று அழைக்கப்பட்டதற்கேற்ப இவரின் அனைத்து கதாபாத்திரங்களும் காலங்காலமாக பின்பற்றப்பட்டுக்கொண்டிருந்த அலங்காரமான உரையாடல்களை (இந்த உரையாடல்கள் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியவேண்டுமானால் உடனே அண்ணன் வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் பேசுவதை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்) தவிர்த்துவிட்டு சாதாரண உரைநடையில் கிண்டலும் குத்தலுமான உள்ளுர் மொழியில் பேச ஆரம்பித்தன. இவரின் முக்கிய கதாபாத்திரம் அனைத்து கதாபாத்திரங்களையும் கோபம் கலந்த மொழிகளில் வாங்கு வாங்கென்று வாங்கி போட்டுத்தாக்கும் (இதற்கு உதாரணம் வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் ஒரு கவிஞர் தண்ணியைப் போட்டுவிட்டு மற்றவர்களைத் திட்டுவதைப் பார்க்கவும்).
ஜான் ஓஸ்பார்ன் கோபத்தில் திரும்பிப்பார் என்றொரு நாடகத்தை எழுதியுள்ளார். இது 1956 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் அவரின் அனைத்து நாடகங்களும் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். சரி, இனி இந்த நாடகத்தின் கதையைப் பார்ப்போம். முக்கியமாக இந்த நாடகம் ஒரு நபரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள கதை என்பதால் நமக்கு இந்த நாடகத்தின் கதாநாயகன் (கதைநாயகனெல்லாம் ஓஸ்பார்னின் விடயத்தில் கிடையாது) பெயர் மட்டும் தெரிந்தால் போதும், அந்தளவிற்கு அவர் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். மற்ற பாத்திரங்களின் பெயர் தேவையில்லை. இந்நாடகத்தின் கதாநாயகன் ஜிம்மி போர்டர் வேறொருவருமில்லை. அது ஓஸ்பார்ன்தான். போர்டர் மிட்லேண்டில் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் நண்பனோடு வாழ்ந்து வருகிறான். பல தொழில்கள் நடத்த முயற்சி செய்தும் ஒன்றும் பலிக்காமல் இறுதியாக இனிப்புக்கடை ஒன்றை தனது நண்பனோடு நடத்தி வருகிறான்.
தினமும் தனது மனைவியை பாடாய் படுத்துகிறான். நண்பனோடு கட்டி புரண்டு தனது வீட்டிற்குள்ளேயே சண்டையிடுகிறான். மனைவியிடமும் தனது நண்பனிடமும் தான் பாலியல் உறவுகொண்ட (நம்மாளு பதினாலு வயசுலேயே பழுத்திட்டாரு) பெண்களை வரிசைப்படுத்தி பெருமையடிக்கிறான் (சோபாசக்தி நினைவிற்கு வந்தால் நிர்வாகம் ஜவாப்தாரி ஆகாது). அவனிடம் திட்டு வாங்காத ஆட்களே இல்லை. அந்த ஊரின் பிஷப் முதல் பத்திரிக்கைவரை அத்தனையையும் வசவு கொளுத்தி எடுக்கிறான். அந்த ஊரின் தேவாலயத்தில் மணியடித்தால் அதை திட்டுகிறான்; பொண்டாட்டி துணிக்கு இஸ்திரி போட்டால் அவளைத் திட்டுகிறான்; ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளுக்கு திட்டு; அதில் வெளியாயிருக்கும் செய்திகளுக்கு திட்டு; செய்தியில் வரும் மக்களின் மதச்சடங்குகளுக்கு திட்டு; செய்தித்தாளை உரத்துப்படிக்கும் நண்பனுக்கு திட்டு; நண்பனுக்கும், தனக்கும் செய்தித்தாள் படிக்கும்போது தேநீர் போட்டுத்தந்த மனைவிக்கு திட்டு; போட்டுத் தரவில்லையென்றால் அதற்கும் திட்டு; அவளைப் பெற்ற பாவத்திற்கு அவளின் அப்பா, அம்மாவிற்கு ஏகத்திட்டு; அவளின் தம்பிக்கு உருப்படாத பய என்று திட்டு (தம்பி பின்பு அமைச்சராகி தான் உருப்படவே போறதில்ல என்று நிரூபித்தது வேற கதை). சும்மா வசவு மன்னன். சுருக்கமாகச் சொன்னால் நம்ம லீனா மணிமேகலை கவிதைபோல அந்தப்பய இந்தப்பய கதைதான் (அண்ணன் அ.மார்க்சு பொறுத்தருள்வாராக).
இப்படியாக கதை சென்றுகொண்டிருக்கும்போது லீனாமணிமேகலை சார்பாக அ.மார்க்சு நடத்திய கூட்டத்திற்கு மகஇக சென்றதுபோல் ஒரு பிரேக். போர்ட்டரின் மனைவியின் நண்பி (பெயர் ஹெலெனா) ஒருவள் ஒரு வேலை விடயமாக இவர்கள் வீட்டிற்கு வந்து ஒருநாள் தங்குகிறாள். தங்கியதோடு மட்டுமல்லாமல் நம்ம போர்டரை தங்க வெச்சது குத்தமா என்று கேட்க வைக்கிறாள். வந்த ஹெலெனா தனது நண்பிக்கு பெண்ணியமெல்லாம் சொல்லிக் குடுத்து கணவனுக்கு எதிராகத் திருப்புகிறாள். அந்த நேரம் பார்த்து ஜிம்மியின் இன்னொரு நெருங்கிய நண்பனின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல்போக அவளைப் பார்க்க லண்டன் வருமாறு ஜிம்மி தனது மனைவியை அழைக்கிறான். அதற்கு அவள் முடியாது என்று சொல்லிவிட்டு தனது தோழியோடு (நண்பிடா…) தேவாலயத்திற்கு சாமிகும்பிட சென்று விடுகிறாள். ஜிம்மி கோபத்தோடு சென்றுவிடுகிறான். திரும்பவருவதற்குள் நம்ம ஹெலெனா அவளை இந்தப்பயலோடு எப்படி குடித்தனம் பண்ற என்று கேட்டு அவள் அப்பா வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்துகிறாள். அதற்கு முன்பாகவே ஹெலெனா தனது தோழியின் அப்பாவிற்கு அவரது மகள் கணவனிடம் சிக்கி அல்லல் படும் விடயங்களை சொல்லி கடிதம் எழுதிவிடுகிறாள்.
அவளது அப்பா ஒரு ராணுவ கேணல். அவரும் உடனடியாக திரும்பிவந்து மேஜர் சுந்தரராஜன் மாதிரி, என் மகளே, மை டாட்டர், நாம போலாம்மா போலாம், லெட்ஸ் கோ என்று சொல்லி தனது மகளை புகுந்தவீட்டில் இருந்து அவள் கணவன் வரும்முன்பே அழைத்துச்சென்று விடுகிறார். இந்த விடயங்களை தமிழ்தேசியர்கள் புகுந்த கேள்விகேட்கும் கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட அ.மார்க்சு மாதிரி அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு கவனிக்கிறான் ஜிம்மியின் நண்பன். சரி நம்ம நண்பன் வந்தால் நமக்கு கும்மாங்குத்து உண்டு என்று சொல்லிவிட்டு நானும் போறேன்பா என்று சொல்லிவிட்டு அவனும் இடத்தை காலி செய்து விடுகிறான். இப்போது காரணமேயில்லாமல் ஒரு சொத்தைக்காரணத்தை சொல்லிவிட்டு நமது ஹெலெனா மட்டும் இருக்கிறாள். ஜிம்மி லண்டனில் இருந்து திரும்பி வருகிறான் (அதேநேரத்தில் அவன் பார்க்கச் சென்ற நேரத்தில் அந்தக்கிழவி வேறு மண்டையைப் போட்டு விட, தலைவர் மிகவும் சோகத்தில் திரும்பி வருகிறார்). பார்த்தால்... இங்கு மனைவி இல்லை... மனைவியின் தோழியிருக்கிறாள். விசாரித்தால் நரேந்திரமோடி மாதிரி ஆமாம் நான்தான் உன் பொண்டாட்டிய அனுப்பினேன், அதுக்கு இன்னாங்கிற நீஸ அப்படி என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் வேற விடுகிறாள் அவள்.
நம்மாளு ஏற்கனவே கோபக்காரரு... இதில இதுவேற... உன்னை அடி வெளுத்திருவேண்டி என்று சொல்லி அடிக்க கையைக் கூட ஓங்குவதற்கு முன்பாக விட்டா பாருங்க அவ ஒரு அறை. அப்புறம் நடப்பதுதான் கதையின் முக்கிய திருப்பம். இறுதியாக அடிக்க வந்த கைகள் அணைக்க... இருவருக்கும் காதல் முகிழ்த்து முத்தமிடுகிறார்கள். இருவரும் கணவன் மனைவியாக குடித்தனம் வேறு நடத்த ஆரம்பிக்கிறார்கள். ஒருநாள் அப்பாவோடு கோபித்துக்கொண்டுபோன ஒரிஜினல் மனைவி வீடுதிரும்பி வந்து பார்த்தால் இவர்கள் இப்படி அப்படியாக இருக்கிறார்கள். கண்ணீர், கதறல், அழுகை, ஆறுதல்... இறுதியாக உண்மையான கணவனும் மனைவியும் ஒன்றிணைகிறார்கள். மனைவியின் தோழி தவறை உணர்ந்து அல்லது தவறை உணர்வதுபோல நடித்து திரும்பிச் செல்கிறாள். திரை விழுகிறது.
என்ன கதை நம்ம திரைப்பட இயக்குநர் சாமி கதைபோல இருக்குது என்று நினைக்கிறார்களா? பொறுமை. இது மிகவும் பிரசித்தபெற்ற ஓஸ்பார்ன் என்ற எழுத்தாளரின் சுயசரிதை என்று வேறு சொன்னேன். நீங்கள் கேட்கலாம். ஓஸ்பார்ன் என்ன சோபாசக்தியின் முந்தைய பிறவியா என்று. நினைவில் இருக்கட்டும் சோபாசக்தி, அனைத்துலக வாசகப் பெருமக்களிடமும் தமிழச்சி விவகாரத்திற்கு பிறகாக ‘ஆமாண்டா நான் பொம்பள பொறுக்கித்தாண்டா’ (நமக்கு அவரளவிற்கு தத்துவார்த்த அறிவில்லாத காரணத்தினால், அவரின் அரசியல் கோட்பாடுகளிடம் பெற்ற சுடரின் வெளிச்சத்தில் பெற்ற அறிவை அண்ணன் பாமரன் பாணியில் எளிமைப்படுத்திய சொற்றொடர் இது) என்று ஒத்துக்கொண்டவர். அதை பின்பற்றப்போவதாகவும் பீதியை கிளப்பி இருப்பவர். அதுபோல இருக்கிறாரே இந்த ஓஸ்பார்ன் என்று நீங்கள் கேட்பது நியாயமானதுதான். ஆனால் விடயம் எதுவானாலும் ஓஸ்பார்னின் வாழ்க்கை பிரதிபலிப்புதான் இந்த நாடகம். அவரின் பிரதிபலிப்புதான் நமது ஜிம்மி போர்ட்டர்.
இந்தக்கதையை இப்படியே கேட்டால் இது ஒரு மோசமான கதை என்றும் அல்லது ஒரு ஆணாதிக்கவாதியின் கதை என்று நீங்கள் முடிவுக்கு வரலாம். ஆனால் அது உண்மையல்ல. அப்படி நீங்கள் அவரை ஆணாதிக்கவாதியாகப் பார்த்தால் நீங்கள் ஒரு சரியான விமர்சகர் அல்ல என்று உண்மையில் சமூகம் உங்களைப் பழிக்கும். ஏனெனில் ஒரு விடயத்தை விமர்சிக்கும்போது விமர்சகன் கைக்கொள்ளவேண்டியது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாடு. தோழர் ந.தர்மராஜ் (இவர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர் என்பது உபரித்தகவல்) ரசியா சென்று மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டபோது மார்க்சிய நோக்கில் ஷேக்ஷ்பியர் என்ற நூலை மிகவும் விரும்பி மொழிபெயர்த்ததாக சொல்கிறார். முடிந்தால் வாசித்துப்பாருங்கள், மதுரை பாரதி புக்ஹவுஸ் புத்தகக்கடையிலும் நியுசெஞ்சுரி புத்தக்கடையிலும் கிடைக்கும். அந்தப் புத்தகம் ஷேக்ஷ்பியரை ஒரு முற்போக்காளனாக காட்டியிருக்கும். பாட்டாளி வர்க்கம் உருவாகாத காலங்களில் நிலவுடமைக் காலங்களில் இங்கிலாந்தின் முற்போக்கு வடிவம் பற்றி மிகச்சிறப்பாக விமர்சிக்கும் விவரிக்கும் புத்தகம் அது.
இப்போது நாடகத்திற்கு வருவோம். 1950களில் இங்கிலாந்து பாட்டாளிவர்க்கம் உலகை முன்கொண்டு செல்ல பல காரணங்கள் இருந்தும் சோப்ளாங்கியாக இருந்து அயர்லாந்து தேசியஇன விவகாரத்தில் விக்டோரியா காலத்திலேயே கார்ல் மார்க்சிடம் குட்டு வாங்கிய வர்க்கம். அந்த வர்க்கக்கண்ணோட்டம் இந்த நாடகத்தை நாம் விமர்சிக்கும்போது மிகவும் முக்கியம், அவசியம். இப்போது நாம் நாடகத்தை வரலாற்றியல் பொருள்முதவாதக் கண்ணோட்டத்தின்படி அணுகலாம். ஜிம்மி ஒரு பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவன் மனைவி ஒரு மேல்தட்டு மத்தியதரக்குடும்பத்தைச் சேர்ந்தவள். அதுபோக ஜிம்மி பல்கலைக்கழக படிப்பை வறுமையின் காரணமாக பாதியில் கைவிட்டவன். அவன் இச்சமூகத்தின்மீதான வெறுப்பை பல்வேறுவழிகளில் வெளிப்படுத்துகிறான். அதில் ஒன்றாக மேல்தட்டுக்குடும்பங்களின் மீதான வெறுப்பு அவன் மனைவிமீது திரும்புகிறது. அதுபோக நீங்கள் பாலியல் ஒழுக்கம் பற்றிக் கேட்கலாம். பாட்டாளி வர்க்கத்திற்கு அதுபற்றிய மிகப் பெரியளவு பிரக்ஞையெல்லாம் கிடையாது. ஆனால் அது மேம்பட்ட உறவை நிலைநாட்டுவதாய் இருக்குமேயொழிய புகைவண்டி நிலையத்தில் அடிவாங்குவதில் முடிவதாய் இருக்காது. இதுபற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தத்துவார்த்தரீதியாக ஏங்கெல்ஸ் மற்றும் பெரியாரையும், நடைமுறை ரீதியில் ஏதேனும் சந்தேகமிருந்தால் ரசியாவின் ஒருகோப்பை தண்ணீர்த் தத்துவத்தையும் அல்லது தொழிற்சாலைகளில் பாட்டாளி வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையையும் கவனித்துப் பார்க்கவும்.
ஓஸ்பார்ன் தன்மீதும் தன்கோபத்தின்மீதும் ஒரு இரக்கபார்வை பார்க்குமாறு இந்த நாடகத்தின் மூலம் மக்களை இரஞ்சுகிறான். தன்கோபத்திற்கு வரலாற்றுக் காரணம் உண்டென்று சொல்கிறான். நான் எல்லோரையும் வெறுக்கவில்லை என்று மன்றாடுகிறான். பசியிலும் பட்டினியிலும் கிடந்த எங்கள்மீது இந்த திமிர் பிடித்த பணக்கார வர்க்கத்தின் பிரதிநிதிகள் எப்படியெல்லாம் கிண்டல் மொழிகளைக் கொட்டினார்கள். இவர்களை நாங்கள் திட்டக்கூடாதா என்று எதிர்கேள்வி கேட்கிறான். நீங்கள் வரையறுத்தபடிதான் நாங்கள் இவர்களை பழிக்குப்பழி வாங்கவேண்டுமா? இது என்ன நியாயம் என்று கேட்டு தட்டுத்தடுமாறி மேலேறி வரும் பாட்டாளிவர்க்கமும் அதன் பிரதிநிதிகளும் பணக்கார வம்சத்தை அவர்களுக்குத் தெரிந்த வரையில் தெரிந்த வகையில் பழிவாங்குகிறார்கள். அதில் உதிரித்தன்மையும், அமைப்பாக்கப்படாத பாட்டாளி வர்க்கத்தின் அனைத்துப்பண்புகளும் வெளிப்படுகிறது. பேராசான் மாவோ தலைமையிலான சீன பொதுவுடமைக்கட்சியில் உதிரியாகயிருந்த தோழர் ஓருவர் பின்பு மத்தியக்குழு உறுப்பினர் ஆனதும் இன்றை இந்திய மாலெ இயக்கங்களில் உதிரிப்பண்புடையவர்கள் பின்னாட்களில் மக்களுக்காக தமது இன்னுயிரை ஈந்து வீரச்சாவெய்திய கதையும் உண்டு.
இப்படித்தான் எதைப் பார்த்தாலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடும் இயங்கியல் நோக்கிலும் காண வேண்டும் என்று மார்க்சிய மூலவர்கள் கூறுகிறார்கள். வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்றால் என்ன என்று அய்யந்திரிபுற புரியாதவர்களுக்கு எளிமைப்படுத்தி விளக்கவேண்டுமென்றால் பச்சைக்குழந்தையை பறக்கச் சொல்லக்கூடாது, வயதான தாத்தாவை தவளச் சொல்லக்கூடாது (மேலும் விளக்கங்கள் வேண்டுமென்றால் மார்க்சிய பாலபாடம் பற்றி மார்க்சியம் அனா ஆவன்னா என்ற தலைப்பில் தோழர் தியாகு எழுதிய புத்தகத்தை வாசித்தால் எளிதாக புரிபடும்). மேலே சொன்ன நாடகத்தை அண்ணன் அ.மார்க்சும் படித்திருப்பார், அதை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வெளிச்சத்தில் பார்த்திருப்பார். அந்தப் பார்வையில் எழுதியதுதான் அவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள். அப்படித்தான் இந்த அ.மார்க்சு போன்ற எழுத்தாளர்கள் அனைவரும் தம்மை சூரப்புலிகளாக காட்டிக்கொண்டது. உண்மையில் இவர்களின் இந்த பார்வை பாட்டாளிவர்க்கம் இவர்களுக்குப் போட்ட பிச்சை. ஆனால் இவர்கள் ஏதோ இதை தாமே கண்டுபிடித்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
சரி விடுங்கள், மீண்டும் கதைக்கு வருவோம். இப்படி தனிநபர் ஒருவரின் குறைகளையே மார்க்சிய வெளிச்சத்தில் கண்டு விளக்கம் அளிப்பவர்கள் ஏன் மகத்தான ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டும் பாசிஸ்டுகளாக முத்திரை குத்துகிறார்கள் என்பதுதான் நமது கேள்வி. தவறுகளோடு கூடிய பாட்டாளி வர்க்கத்தைக் கொண்ட அந்த அணி எப்படியும் பாரிஸ் கம்யூனில் தோல்வியைத் தழுவும் என்று தெள்ளதெளிவாகத் தெரிந்தாலும் பேராசான் மார்க்சு அந்த முளைவிடும் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தை அள்ளியணைத்து அரவணைத்துக் கொண்டான். அமைப்பாக்கவேபடாத ஸ்காட்லாந்து தேசிய இனத்தை உச்சிமோர்ந்தான் எம்தோழன் மார்க்சு. தனது மற்றும் ரசிய பொதுவுடமைக்கட்சி என்ற மகத்தான கட்சியின் சீரிய தலைமையின் கீழ் இருந்தும் எப்போதும் நீங்கள் எம்மை பிரிந்து செல்லலாம் என்று விடுதலை உணர்வை ரசியாவின் கீழிருந்த தேசிய இனங்களுக்கு ஊட்டினான் எம் பேராசான் லெனின். அமைப்பாக்கப்படாத பாட்டாளி வர்க்கமாக தத்தக்கா புத்தக்கா என்று நடைபோட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியாளர்களை “ஆகா துப்பாக்கியை தோள் மாற்றுவதுபோல முதலில் நிலவுடமை அழித்து, பின்பு தம்மோடு இருந்த முதலாளி வர்க்கத்தை அழிக்க முனைந்தார்கள். பின்பு சிலநாட்களுக்கு அந்த இரண்டையும் விரட்டி உலகின் முதல் பாட்டாளிவர்க்க ஆட்சியை (தோழன் லெனினுக்கு இதன்மீது கோடி விமர்சனங்கள் இருந்தாலும்) கொணர்ந்தார்கள்" என்று சிலாகித்தான் தோழன் லெனின். இன்னும் கோடி கோடி தவறுகளோடு எழுந்த அத்தனை தேசிய இனங்களையும் உச்சிமோந்து ஏற்றுக்கொண்ட பொதுவுடமை தலைவர்களின் உதாரணங்கள் வேண்டுமா? கீற்றுவின் செர்வர் தாங்குமா அத்தனையும் சொன்னால்?
ஆனால் ஈழத்தில் என்ன நடந்தது தோழர்களே? கோபத்தோடு திரும்பிப்பார்த்த ஓஸ்பார்ன் என்ற தனிமனிதனின் தவறுகளை ஒரு சமூகத்தின் தவறுகளாக, ஒரு வர்க்கத்தின் வளர்ச்சிப்போக்கில் நடக்கும் தவறுகளாக, பிசிறுகளாக, இதெல்லாம் இல்லாம எப்படி ஒரு மனிதனும் இயக்கமும் வளரமுடியும் என்று அகமுரண்களாக கண்டவர்கள் புலிகளின் வளர்ச்சிப்போக்கின் சில சில நடைமுறை சிக்கல்களை புறமுரண்களாக கண்டது மார்க்சியமா என்று கேட்டால் நம்மை நீ மனித உரிமையை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுவார்கள்.
இந்தியாவில் மிகவும் ஒப்பீட்டளவில் வலுவாகயிருக்கும் பாட்டாளிவர்க்கத்தை உரைகல்லாக கொண்டு மேத்யூ அர்னால்டு உரைகல் முறையின்படி ஈழத்தின் தேசியக்கோரிக்கையையும் அதற்காகப் போராடும் ஒரு தேசிய இயக்கத்தையும் இந்திய அறிவாளிகளும் சர்வதேச சமூக விஞ்ஞானிகளும் அளவிட்ட கொடுமையை நாம் எங்கு கொண்டுபோய் அழுது தீர்ப்பது? இந்த ஊர் அ.மார்க்சுகளை திருத்த எம்பேராசான் மார்க்சுதான் வரவேண்டும். பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி துள்ளிக் குதித்தானாம் என்று எம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் ஈழத்தில் நடந்தது என்னவென்றால் மார்க்சிய கிழடுகள் இல்லாததால் புலிகள் என்ற பொடியன்கள் துள்ளித் குதித்தார்கள், பெரும்பான்மை தேசிய இனத்தின் கொடுங்கோன்மைக்கெதிராக. பிள்ளைகளை பற பற என்றால் எப்படித் தோழர்களே? பிள்ளைகள் தவழும், பின்பு நடக்கும், பின்பு ஆகாயவிமானம் கண்டுபிடித்து பறக்கும். ஆனால் நீங்கள் பற பற என்றீர்கள்? கொலைகாரக்கூட்டம் எப்படி சோசலிசக் குழந்தையை கொத்தித்தின்ன வந்தபோது தோழன் ஸ்டாலின் (ஒரு சில நடைமுறைத் தவறுகளின்மீது நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும்) பதைபதைத்துக் காத்தானோ அதைப் போல ஈழக்குழந்தையை தோழன் பிரபாகரன் காத்தான், இன்று பின்னடைவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
சரி சரி பற பற என்றீர்கள். உங்கள் அர்த்தப்படி பிள்ளை செத்துவிட்டதாய் வைத்துக்கொள்வோம். எங்கே நீங்கள் பறந்துகாட்டுங்கள் பார்ப்போம் என்று நாங்கள் உடனடியாக பறக்கச்சொன்னால் அது இயங்கியலுக்கு முரணாகாதா? வெறும் எண்பதுகளில் உருவான ஒரு விடுதலை இயக்கம் (உங்கள் மொழியில் சொல்வதென்றால் குட்டி முதலாளிகளின் இயக்கம், தேசிய முதலாளிகளின் இயக்கம் என்றும் கூட வைத்துக்கொள்ளுங்கள்) தளப்பகுதிகள் பல கண்டு நாடாக விருட்சமடைந்து நின்றதே. நீங்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் பொதுவுடமை இயக்கங்கள் கட்டி எட்டு தசாப்தங்கள் ஆகின்றது. இன்னும் ஏன் நீங்கள் தளப்பகுதிகளை நோக்கி முன்னேறவில்லை என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் தோழர்களே? அந்தக் கேள்விதான் இயக்கவியலுக்கு முரணாகயிருக்காதா? கேள்வியே தவறானதாகயிருக்காதா? முதலில் ஈழத்திற்கு இன்றைய நிலைக்கு, எதிரி வகுத்த சூழலுக்கு அதுதான் பாட்டாளி வர்க்கம் அல்லது விடுதலைப்புலிகள்தான் ஈழத்தின் பாட்டாளிவர்க்க உருவம் என்று குறைகளை வளர்ச்சிப்போக்கோடு நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாமா? அதுதான் இயங்கியல்; அதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம். இல்லையேல் மாவோவின் மொழியில் சொல்வதென்றால் நீங்கள் செங்கொடிக்கெதிராக செங்கொடியை உயர்த்துகிறீர்கள் என்று நாங்கள் சொல்லலாமா?
அ.மார்க்சு போன்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள், புலிகளை ஆதரிப்பவர்கள் பிரபாகரனின் துதிபாடிகள் என்று. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் அவர்கள்தான் ஜான் டன் என்ற கவிஞன் தன்கவிதையில் சொல்வதுபோல் ஒரு எக்ஸ்டெசி நிலையில் ஒரு பரமானந்தா நிலையில் இருக்கிறார்கள். ஒன்று பாராட்டித் தீர்ப்பது. உதாரணமாக சோபாசக்தியின் தூற்று.கொம்மின் அத்தனை வரிகளையும் அ.மார்க்சால் தூள்தூளாக உடைத்தெறிய முடியும். ஆனால் செய்யமாட்டார். ஏனென்றால் அவர் ஒரு முன்தீர்மானிக்கப்பட்ட மனநிலையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், சோபாசக்தியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்று. எனவே மௌனம் காக்கிறார். அது காரிய மௌனம், கள்ள மௌனம். மற்றொரு உதாரணமாக புலிகளை எதிர்ப்பது என்ற பரமானந்த நிலையில் இருக்கிறார். எனவே வரலாறு, காலம், சூழல் போன்ற எதையும் கருத்தில் கொள்ளமாட்டார். மாறாக அர்ரம் என்றால் குர்ரம் என்பதுபோல் பேசுவார். வசைமாறி தூற்றுவார். பாசிஸ்டு என்பார். இவர்கள் சுயகாரணங்களுக்காக எதிர்ப்பையும், விருப்பையும் காட்டுபவர்கள். இயங்கியல் அல்லது வரலாற்று நோக்கில் பிரச்சனைகளை அணுகாதவர்கள். தலைவர்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும் வழிபாட்டுமுறைக்குள் புகுத்திக்கொண்டு நிறையையோ குறையையோ காண்பவர்கள். தவழும் குழந்தைகளை நடக்கச்சொல்பவர்கள், வயோதிகர்களை தவழச்சொல்பவர்கள். மாவோவின் மொழியில் சொல்வதென்றால் அதிசனநாயகவாதிகள், தற்குறிகள். தெரியாமல் செய்தால் அவர்கள் அதிசனநாயகவாதிகள், தற்குறிகள் மற்றும் கலைப்புவாதிகள். மாறாக தெரிந்தே செய்தால் அவர்கள் அயோக்கியர்கள்.
தோழர் பிரசண்டா சொன்னார், வர்க்க சமூகத்தில் பாட்டாளிவர்க்க கட்சியாகயிருந்தாலும் எல்லாருக்கும் பயணிக்க குதிரை கிடைக்காது என்று. எவ்வளவு உத்தமமான வார்த்தைகள் அவை. நடைமுறைகளை, நடைமுறைச்சிக்கல்களை தெள்ளத்தெளிவாக விளக்கிச்சொல்லும் வார்த்தைகள். அடேய் இது வர்க்கச்சமூகம், இதில் வளரும் இடது இயக்கங்களும் வெள்ளையரசு எதிர்ப்பு இயக்கங்களும் குறைகளோடுதான் வளரும் என்று பளீரென்று சொல்வதுபோல் உரைக்கும் வார்த்தைகள். வர்க்க வேறுபாடுகள் கூர்மையடையும்போது நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னான் பேராசான் கார்ல் மார்க்ஸ். பாட்டாளிவர்க்கம் வர்க்க உணர்வடையாத இலங்கையில் தேசியப்பிரச்சனையே பிரதான பிரச்சனை, மூலவுத்திரிதியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை. தேசிய வேறுபாடு கூர்மையடைந்தபின்பும் இன்னும் வளர்ச்சிப்போக்கில் உறுதியாக நிகழும் நடைமுறை பிசுறுகளை அய்யய்யோ தவறு அம்மா தவறு என்று கதறி அழுதால் அது உண்மைக்காக அழுவதல்ல, மாறாக சுயநலன்களுக்காக அழுவது, எதிரியின் நலனுக்காக அழுவது. அந்தக் கண்ணீர் டிராட்சிகியின் கடைசிநேரக்கண்ணீர், டெங்சியோ பிங் மற்றும் குருச்சேவ் கும்பலின் சமாதான சகவாழ்வுக்கான கதறல் (இன்றெமக்கு வேண்டியது சமாதானமே என்ற புத்தகம் ஞாபகம் வருகிறதா?).
உண்மையான தோழர்கள் வேண்டிய சமாதானத்திற்கும், போர்நிறுத்தத்திற்கும், இவர்கள் வேண்டுகிற சமாதான உறவு, சமாதான சகவாழ்வு, சமாதான மாற்றத்திற்கான (டெங் கும்பலின் பெருங்காயம்தான், சர்வரோக நிவாரணிதான்) வேண்டுகோள்களுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. இந்தப் புரிதல் இல்லையென்றால் நீங்கள் இயங்கியலுக்கு எதிரானவர்கள். தீர்க்கமான விமர்சனவாதிகளல்ல. ஒரு இயக்கத்தை விமர்சனம் செய்யும் அருகதையை இழக்கிறீர்கள். வர்க்க முரண்பாட்டின் கேந்திரக்கண்ணியை புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறீர்கள். வரலாறு உங்களைப் பழிக்கும். அ.மார்க்சு போன்ற தெரிந்தே கள்ளமௌனம் காக்கும் நண்பர்களை, அண்ணன்களை வரலாறு குப்பைத்தொட்டியில் தூக்கியெறியும்.
பெரும்தாவலில் பெருமளவிற்கு மக்களை எம் பேராசான் மாவோ கொன்றதாக குற்றஞ்சாட்டினார்கள். மாவோ சொன்னார் மனிதகுலத்தின் ஒரு பாதி அழிந்தாலும் மறுபாதி மகிழ்வோடு இருக்கும் என்றார். அவரை கொடுங்கோலன் என்றார்கள். எம் அருமைத்தோழன் ஸ்டாலின் விவசாயிகளை நகர்ப்புற பாட்டாளிவர்க்க நலனுக்காக கொன்றழித்தார் என்று குற்றஞ்சாட்டினார்கள். வளரும் சோசலிசக் குழந்தையைக் காக்க பகைவர்களை கேஜிபியின் உதவியால் அழித்தொழித்த எம்தலைவன் ஸ்டாலினை பயங்கரவாதியென்றார்கள். முதலாளி வர்க்கத்தின் கல்லாவை காலியாக்கிய எம்பேராசான் லெனினை கொடுங்கோலன் என்றார்கள். தோழன் ஹோசிமின்னை ரத்தவெறிபிடித்த ஓநாய் என்றார்கள். நேபாளத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவி நேபாளியர்களை கொன்று குவித்ததாய் சொல்லி தோழன் பிரசண்டாவை கொலைகாரன் என்றார்கள். வர்க்க எதிரியின் ரத்தத்தில் கைநனைக்காதவன் பொதுவுடமைவாதியல்ல என்று சொன்ன எம் தோழன் சாரு மஜூம்தாரை குட்டிமுதலாளித்துவ அராஜகவாதி என்றார்கள். லெனின் கொடுங்கோலன் என்றால், ஸ்டாலின் பயங்கரவாதியென்றால், பேராசான் மாவோ கொலைகாரன் என்றால் எம் அன்புத்தோழன் சாரு மஜூம்தார் குட்டிமுதலாளித்துவ அராஜகவாதியென்றால் எம்தோழன் பிரபாகரனும் பாசிஸ்டுதான். ஆம் எப்படி எம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரிகள், சர்வாதிகாரிகள் என்பதில் பெருமைப்பட்டார்களோ, நாங்கள் பெருமைப்படுகிறோமோ அதுபோல எம்தோழன் பிரபாகரனும் சர்வாதிகாரிதான், பாசிஸ்டுதான். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இறுதியாக சோபாசக்தி தனது சுயசரிதையின் மேல் சொன்ன பத்தியை எப்படி முடிப்பார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகயிருக்கிறதா? பிடித்திருந்தால் முதல் பத்தியில் சொன்னதுபோல எழுதி ‘பாஸ் நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்’என்றும்; ‘சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ என்றும் பாராட்டுவார். பிடிக்கவில்லையென்றால் எப்படி எழுதுவார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அவரின் இணையதளத்தை தினமும் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். மிளகாய்ப்பொடி தண்டனைதான்.
- சார்லசு அன்ரனி