மீன் பிடிக்காதவர் இருக்கலாம். பெரும்பாலும் மீனை பிடிக்காதவர் இருக்க முடியாது. 
 
அந்தக் கறி பிடிக்கும்.. இந்தக் கறி பிடிக்காது என்று சொல்வோர் கூட மீனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். மீனைப் பிடித்தல்... இயல்பாகவே உள்ளிருந்து எழும் ஆதி நீச்சல். அதுவும் அவரே தூண்டில் இட்டு பிடித்து சுட்டுத் தின்னும் மீனுக்கு சுவை அதிகம். ஆற்றோர... குளத்தோர வாழ்வில் நீந்தி கிடந்த நாட்கள் கொண்டோருக்கு இன்னும் கூடும் சுவை.  
 
ஞாயிறின் சிறப்பு... கோழி ஆடு தாண்டி மீனுக்கும் உண்டு என்பதில் உள்ளம் நீந்தும் உற்சாகத்தை நீங்களும் உணரலாம். நாமே மீன் வகையறாக்கள் தான். நீரிலிருந்து நீந்தி நிலத்துக்கு வந்த இரு கால் சுறாக்கள். நினைவில் கொள்ளுங்கள்.  
 
அழகுள்ள ரோஜாவுக்கு ஆபத்தான முட்கள் காவல் என்பது போல.. மீன்களுக்கு உள்ளிருக்கும் முட்கள்... செத்தும் காவல் தெய்வங்கள். சரியாக முள் பிரித்து மீன் தின்னுதல் வித்தை. கற்றுக் கொண்டோருக்கு தட்டு நீச்சல் பிடிபடும். 
fish gravyகவனமாக கையாள தெரிய வேண்டிய உணவு பதார்த்தம் மீன்கள். கழுவுகையில்.. வெட்டுகையில்... சமைக்கையில்... ஏன் சாப்பிடுகையில் கூட கவனமே பிரதானம். பார்த்து பார்த்து நேரம் ஒதுக்கி சாப்பிட வேண்டிய சுவையன்கள்... இந்த மீன்கள். மீன் வெட்டும் போது முள் தெறித்து கையில் ஏறி நரம்பைக் குத்தி.... கட்டு போட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் படுத்திருந்த ஆளை நான் அறிவேன்.
 
தொண்டைக்குள் மீன் முள் குத்தி செத்தவர்கள் கூட உண்டு. அதே நேரம் போகிற போக்கில் வாய்க்குள் மீனை விட்டு உரிந்தெடுத்து நடு தண்டுவட முட்களை நரம்பு பூத்த கொத்தாக தூக்கி வீசுவோரும் உண்டு. கல்லூரி நாட்களில் மீன் முள் குத்தியதாக நம்பி ஸ்கேன் வரை சென்று அதன் பிறகு நாலைந்து வருடங்கள் மீனை தொடாமல் இருந்த கதை தனி. பிறகு கவிக்குயில் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எடுத்து பார்த்து பார்த்து கொடுத்து கொடுத்து.... அப்படி மீண்டும் பிக்கப் ஆன மீன் சுவை மட்டற்றது. 
 
மாற்றி யோசிக்க விடாத மீன் பொரிபடும் சுவையை கடக்காதோர் இல்லை. பச்சையில்... அடிக்கும் வீச்சம்.. பொரிக்கையில் மணக்க தொடங்கி விடுவது சமையல் மந்திரம். மீன் பொரி படுகையில் எச்சில் விழுங்காத ஆள் யாரு. மீன் சுட படுகையில்... காத்திருக்காத கண்கள் ஏது...?
 
மீன் வாங்க போனால் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவேன். 
 
வழு வழுவென.. மினு மினுவென... தள தளவென சிணுங்குவது போல... ஒவ்வொரு வடிவத்தில்.. ஒவ்வொரு நீளத்தில்... ஆஹா... இயற்கையின் படைப்பே படைப்பு என்று தோன்றும். எங்கோ கடலில் எங்கோ ஆழத்தில் எங்கோ ஒரு மூலையில் நீந்திக் கொண்டிருந்த இந்த மீன் இவர் தட்டுக்கு என்ற விதி எது கொண்டு எழுதப்படுகிறது என்ற சிந்தையின் நீச்சலை கட்டுப்படுத்தவே முடியாது.
 
மீனின் திறந்த கண்கள் சொல்லும் செய்திகள் ஏராளம். இறைச்சிகளை கூர்ந்து கவனித்தால் அதை உண்ண தோன்றாத நிலைக்கு தள்ளப்படுவீர். கொஞ்ச நாள் அப்படி சாப்பிடாமலும் இருந்தேன். ஆனாலும்... இயற்கை நியதியின் விதிக்குட்பட்ட பசி.. மானுட கட்டமைப்பிற்குட்பட்ட ருசி... என... முதலில் தாவியது "மத்தி" மீனுக்கு தான். 
 
சிறுவயதில் டேம் மீன்கள் சாப்பிட்டிருந்தாலும்.. விபரம் தெரிந்து அடிக்கடி சாப்பிட்டது மத்தி தான். இன்று வரை அடிக்கடி மத்திக்கு தான் வீட்டில் மார்க்கெட். ஒரு பக்கம் பொரித்தெடுத்து... உள்ளிருக்கும் முட்கள் கூட பொரிந்து அதைக் கூட கடித்து மென்று தின்று விட முடியும். ஒரு சில இடங்களைத் தவிர மற்றவை எல்லாம் மத்தியில் தின்று விட கூடிய நொறுங்கு தான். இன்னொரு பக்கம் குழம்பு வைத்தால்... அது வீதிக்கே செய்தி. 
 
மீன் பொரித்தால்... வாசம் வரும். ஆனால் எந்த வீட்டில் இருந்து என்று தெரியாது. குழம்பு வைத்தால்... இந்த வீட்டில் இருந்து தான் வாசம் வருகிறது என்று தெரிந்து விடும். வாசத்தின் வாசல்கள் மீனுக்கு இரண்டு. verified.

"என்ன கவிதா.... இன்னைக்கு மீனா....?" என்று மாலதிக்கா மொட்டைமாடியில் நின்று கேட்கும். 
 
சிறு முள்.. பெரு சுவை... என 'மத்தி'யின்  மகத்துவம்.... நொறுங்க கூறும். குழம்பில் சோறு இரு பிடி கூடும். 
 
மத்திக்கு எப்படியோ... அப்படியே நெய் மீனுக்கும் நா நீளும் நமக்கு. அதில் வடியும் நெய்யும் அந்த கொழ கொழப்பும்... நாலைந்து துண்டுகளை பதம் பார்க்க செய்து விடும். நடுவே பெரு முள் ஒன்று மட்டும். பார்த்து எடுத்து விட்டால்... பிறகு பற்களுக்கு பதமாக பிளந்து கொடுக்கும்... மீன் சதை. ஆவி பறக்க... மீன் சதையை பிரித்தெடுத்து வாய்க்குள் போடுகையில்... நேரம் நிற்கும். காலம் கற்கும். தவம் என்ற பொருளுக்கு மீன் தின்னும் கணம் என்று இனி சொல்வீர்.
 
பிறகு வஞ்சிரம்... கட்லா என்று... வாங்கும் நாளில் சுவை வேறு. கொஞ்சம் காஸ்ட்லியும் கூட. பாம்பு மாதிரி ஒரு மீன் இருக்குமே. பெயர் தெரியவில்லை. அது மாவு மாதிரி இருக்கும். மீனை பொறுத்தவரை பக்குவமாய்... கவனமாய் சமைக்க வேண்டும். எண்ணெய் இழுக்கும் சமாச்சாரம் தான். என்ன செய்ய. அதில் தானே சுவை கூடி கிடக்கும் நாவின் துள்ளல்கள் இருக்கின்றன. நெத்திலி... செம்மீன்... கிழங்கான்.... ஜிலேபி...என வெரைட்டிகள் நிறைய. மீன் என்றாலே மான் போல துள்ளி துள்ளி சமையல் கட்டு பக்கமே நிற்கும் கண்கள் நமக்கு இல்லை என்றாலும்...மீனுள்ள நாளில்... நானுள்ள சுவையை கண்டெடுக்க தோன்றும். 
 
எக்காரணம் கொண்டும் கடையில் பொறிக்கப்படும் மீன்களை நான் உண்பதில்லை. வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன். அது என்னவோ ஒவ்வாமை. அதுவும்... ரோட்டோர கடைகள்... அலர்ஜியின் உச்சம். ஆனால் அந்த சிவந்த மீன்களின் வரிசை பார்க்க சுவையாக இருக்கும். பார்க்க பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
 
வீட்டில்... கீறி விட்ட மீன் மீது பூசப்படும் மசாலா ஐட்டங்கள்... அது வெந்த பிறகு... அதன் ஈரம் உள்ளே கலந்து ஒருவகை செந்நிறத்தில் மணம் ஏறி சுவை கூடி கிடக்கையில்... சூட்டோடு சூடாக எடுத்து பிரித்து கடித்து மெல்லுகையில்... 'இதுக்கு மேல என்ன இருக்கு.. வாழ்வதை உணர்ந்து கொள்ள' என்று தோன்றும். மீன்களில் கெட்ட கொழுப்புகள் இல்லை. அதற்காக போட்டு தாக்க கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சு... மீன் என்ன... மிச்சம் என்ன. 
 
அவ்வப்போது மீனுக்கு வாக்கப்பட்டால்... வாய்க்கு நிம்மதி. நாவுக்கு குதியாட்டம். வயதுள்ளோர் பொறித்த மீனுக்கு போகட்டும். வயதானோர் குழம்பு மீனுக்கு தாவட்டும்.
 
மீனுள்ள ஞாயிறு நீச்சல் அடிக்கட்டும். 
 
- கவிஜி
Pin It