“அண்ணா! மொய்தீன்! நீங்கள் பிச்சுவய்யர் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டிருக்கிறீர்களோ? என்ன ருசி, போங்கள்? அருமையான ‘டேபிள்’ அரிசி! கோயமுத்தூர் நெய், சொட்டச் சொட்ட! அன்று வெட்டப்பட்ட ஆடு! கமகமவென்று ஒரு பர்லாங் தொலைவுக்கு ஒரே வாசனை! ‘ப்ளேட்’ ஒன்றுக்கு 3 ரூபாயாம்! 6 ரூபாய் கூடக் கொடுக்கலாம்!” என்றார், மொய்தீனின் நெருங்கிய நண்பரான சு.ம. சுப்பையா!

kuthoosi gurusamy“என்னப்பா சுப்பையா! உன் சூனா மான பிரசாரத்தை என்னிடத்திலேயே ஆரம்பித்து விட்டாயே! நான்தான் 10-15 வருஷமாக சூனாமானாவாச்சே! நாஸ்திக மகாநாட்டிலே கூடப் பேசியிருக்கிறேனே! வைதீக முஸ்லிம்களின் எதிர்ப்பையெல்லாம் சட்டை பண்ணாமல் தனிக் குடித்தனம் பண்ணுகிறேனே! என்னிடமா உன் பிரசாரம்? பார்ப்பான் ஹோட்டலில் பிரியாணியாம்!”

“அண்ணா, கிண்டலுக்கென்றா நினைக்கிறீர்கள்? இல்லை. உண்மைதான். காலம் மாறுகிறதா இல்லையா? அவர்களும் மாறுகிறார்கள்! ஸ்பென்ஸர் ஹோட்டலில் சாம்பார்ச் சோறும், தயிர்ச் சோறும், பஜ்ஜியும் கிடைக்கின்றன என்று போன வாரம் சொல்லியிருந்தால் கிண்டல் செய்கிறேன் என்றுதானே கூறியிருப்பீர்கள்? இப்போது என்ன சொல்கிறீர்கள்? 5 வருஷத்திற்கு முன்னே வெள்ளைக்கார கவர்னர் குங்குமம் வைத்துக் கொண்டார் என்று யாராவது கூறினால் கூறுகிறவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தானே சேர்ப்பார்கள்? இப்போது பாருங்கள்! நம் மகாண கவர்னர் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டதாகப் படித்தோம்! இங்கிலீஷ்காரனுக்கும் பார்ப்பானுக்கும் இருக்கிற சமயோசித புத்தி உங்களுக்கும் எனக்கும் வரவே வராது. அண்ணா! நீங்களும் நானும் ஜாதியையும் மதத்தையும் கட்டிக்கொண்டு அழுவோமே தவிர, காலத்திற்கேற்ற வேஷம் போடத் தெரியாதவர்கள்! பாருங்களேன்! சி. பி. ராமசாமி அய்யர் பொசாட்டோ ஹோட்டலில் எருமை நாக்கை சாப்பிடுகிறார்; அவர் நாக்கில் படாத இறைச்சி வகையே இருக்க முடியாது. குடிவகையும் அப்படித்தான். ஆனாலும் ‘பிராமணர் மகாநாட்டு”க்குத் தலைவர் அவர்தான்! சமஸ்கிருத சங்கத்துக்குக் காப்பாளர் அவர்தான்! பார்ப்பனருக்கே தனிப்பெருந் தலைவரா யிருக்கிறாரே!”

“அதெல்லாம் சரி! ஆகையால் பிச்சுவய்யர் ஹோட்டலில் பிரியாணி செய்திருப்பதாக என்னை நம்பச் சொல்கிறாய்! அதுதானே?”

“நம்பச் சொல்கிறேனா? சாப்பிட்டே பார்த்துவிட்டேன்! பிரியாணி செய்வது யார் தெரியுமோ? பரம்பரையாய்ப் புகழ்பெற்ற உங்கள் கூட்டமுமல்ல; தஞ்சாவூர் மராட்டியருமல்ல. ஸர் சி. பி. யிடம் சமையற்காரனா யிருந்த - அய்யராம்! ரொம்ப அனுபவசாலியாம்! கோழி குருமா கூட வெகு பேஷாக செய்வாராம்! மாதம் 250 ரூபாய் சம்பளமாம்! நீங்கள் கட்டாயம் ஒரு வேளையாவது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும், அண்ணா! என்ன ருசி! என்ன வாசனை, போங்கள்!” (சுப்பையா வாயிலிருந்து தரை வரையில் பென்சில் பருமனுக்கு எச்சில் கம்பி நீண்டது!)

இந்தக் காட்சியைக் கண்டபின் கூடவா மொய்தீன் சந்தேகப்படுவார்? என்ன புரட்சி பாருங்கள்! ஸ்பென்சர் ஹோட்டலில் சாம்பார்ச் சோறு! ஆமாம்! அதுவும் சரிதானே! பூரண மதுவிலக்கு வந்த பிறகு அந்த நஷ்டத்தை ஈடு பண்ண வேண்டுமே! அதற்கு சாம்பார் சோறு, பஜ்ஜி, காபி, வகையாறாவை விட வேறு நல்ல வியாபாரம் என்ன இருக்கிறது?

காபி ஹோட்டல் வைப்பது என்றால், சொந்த அச்சாபிசில் ‘கரன்சி நோட்’ அடிப்பது மாதிரி! உளுந்து ரூபாய்க்கு 2 1/2 படி ஆனாலுங்கூட அரையணா இட்லி ஒரு ரூபாய் கனம்தானே இருக்கிறது? காலனாப் பொறாத சோற்றுப் பொட்டலம் மூன்று அணாவுக்குத்தானே விற்கிறது? இந்தப் பகற் கொள்ளையைக் கேட்க யாராவது உண்டா? நான் மட்டும் மந்திரியாயிருந்தால் (நாடக மேடையில்தான் சொல்கிறேன்!) ஹோட்டல்களை யெல்லாம் அந்தந்த முனிசிபாலிடிதான் நடத்த வேண்டும் என்று ஒரே உத்தரவு போட்டு விடுவேன்!

மணி அடிக்கிறது! திரை விழுகிறது! எல்லோரும் எழுந்து விட்டனர்! வேஷம் கலைந்தது! நான் பழையபடி வெறும் ‘குத்தூசி’ யாகி விட்டேன். கனம் மந்திரியார் சைகிளில் புறப்பட்டு விட்டார்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It