எழுந்ததும் தேனீர் அல்லது காஃபி குடிப்பதற்கு பதிலாக நீர் குடிக்கலாம். நீர் மோர் கூட வெயிலுக்கு உகந்த விருந்தாளி தான்.

எழுந்த நொடி அலைபேசியைத் தேடுவதை தவிர்க்க ஒரு தூரத்து கற்பனையை கண்ணில் கொள்ளலாம். சிறு காடுள்ள காட்சி சிட்டிக்குள் சிரமம். சித்திரம் எதுவும் வீட்டுக்குள் இருந்தால் சில நொடிகள் கண்கள் மேயட்டும். குழந்தை இருந்தால் குழந்தை முகம். எதுவும் இல்லை எனில் மனைவி / கணவன் முகம். எழுந்ததும் காண இதை விட வேறென்ன வேண்டும். அலைபேசி அகல வேறொன்றுக்கான முயற்சி இது.

தினமும் இட்லி தோசைக்கு பதிலாக பழைய சோறு கரைத்து குடிக்கலாம். தயிர் சேர்த்துக் கொள்வது விருப்பம் சார்ந்தது. சின்ன வெங்காயம் சிலிர்க்கும். சேர்த்துப் பாருங்கள். சாமை... குதிரைவாலி... கேழ்வரகு... கம்பு என கரைத்து குடிக்க கனிவான ஐட்டங்கள் நமது தொன்றுதொட்ட வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது. இட்லி தோசை வாரம் இரண்டு முறை என்றால்.. மேற்சொன்னவைகள் மற்ற நாட்களில் உடல் மலர்த்தும். குடல் நிமிர்த்தும்.

11 மணி தேநீர் என்ன செய்யும். வியர்க்க வைக்கும். அதுவும் இங்கே பெரும்பாலோருக்கு தேநீர் தயாரிக்க தெரியவில்லை. பாயசத்தை தேநீராக்க.. படாத பாடு குடிப்பவர் பட வேண்டி இருக்கிறது. ஆக... சர்க்கரை போடாத ஒரு பழத்தின் சாறு பிழிந்து குடித்துக் கொள்ளலாம். குளிர்ச்சிக்கு குளிர்ச்சி. சுவைக்கு சுவை. உற்சாகத்துக்கு உற்சாகம். ஒருநாள் ஆரஞ் என்றால் ஒரு நாள் சாத்துக்குடி. ஆப்பிள் மாதுளை கூட இருக்கட்டும். ஆனால் அதில் பாலை ஊற்றி... உள்ளங்கை அளவு சக்கரையைக் கொட்டி சப்பு கொட்டி கேசரி கிண்டிக் கொண்டிருக்க கூடாது..வாயிலேயே. - கவனிக்க வாய்லயே வடை சுடும் ஆட்கள்.indian foodஒரு நேரம் தான் சாப்பிடறேன் என்று பெயரில்.. மதியம்... சோறு பருப்பு குழம்பு.. சோறு சாம்பார்... சோறு புளிக்குழம்பு.. சோறு தயிர்.. சோறு ரசம்.... அப்புறம் சோறு மோரு... என்றால் விளங்காது வயிறு. பிறகு வேதாளம் வந்து நிக்குது... நின்னு ஒப்பாரி பாடி நிக்குதுனு பாட வேண்டியது தான்.

வாயைக் கட்டு... வாழ்க்கை சிரிக்கத் தொடங்கி விடும் என்கிறது மெய்ஞானம்.

காய்கறிகளை சேர்த்துக் கொண்டு அரிசி உணவை அளவாக்க வேண்டும். அரைக்கும் கிரைண்டர் ஒன்றை வயிற்றில் நிரப்பி இருக்கும் நம்பிக்கை காலம் முழுக்க கை கொடுக்காது. கை கொடுக்கும் கையாக வயிறு இருக்க. பை இல்லை வயிறு பெருத்து தொங்க என்ற மந்திரத்தை முணுமுணுக்க வேண்டும்.

தினம் ஒரு காய் கண்டிப்பாக இருக்க வேண்டும். கீரை வாரத்துக்கு இரண்டு முறை குறைந்த பட்சம் ஒருமுறை வயிற்றை ஆயட்டும்.

தினம் ஒரு முட்டை. மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டியோர் தவிர்க்கலாம். கொஞ்சம் உடல் உழைப்பு உள்ளோர்க்கு ரெண்டு முட்டை கூட நல்லது தான்.


ஆக... அளவு உணவில் அற்புதம் நிகழ்த்த கற்றுக் கொள்ளல் அவசியம்.

மீண்டும் நான்கு மணிக்கு தேநீர். இதையும் தவிர்க்க தான் பார்க்க வேண்டும். இல்லை எனில் வாரம் நான்கு நாட்களுக்கு தேனீர். மூன்று நாட்களுக்கு பழச்சாறு... அல்லது காய்கறி சூப்பு. கடினம் தான். ஆனால் உடலே பிரதானம். அதைத் தாண்டி எந்த வெங்காயத்தையும் உரித்தது விட முடியாது.

இந்த நெல்லிக்கனி அதி மருந்து. அற்புதம் செய்யும். ஏன் அவ்வைக்கு தந்தான் நண்பன் அதியன் என்று யோசிக்க.

உடலோடு பேசாதவன் உயிரோடே சாகிறான். யுத்தசாமி பொன்மொழிகள்.

நாம் குடியிருக்கும் உடலை உற்று நோக்க உறுதி கொள். இதுவும் யுத்தசாமி பொன்மொழிகள் தான்.

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் தலைவர் திருமூலர் சொன்னது. நினைவு படுத்துகிறேன்.

அப்புறம் மாலை நேர பப்ஸ்.. வடை போண்டா பஜ்ஜி... இதெல்லாம் பொடியர்கள் சாப்பிடுவது. தடியர்கள் கட்டாயமாக தவிர்க்க. வேகவைத்த வேர்க்கடலை கொஞ்சம்... கொஞ்சம் என்றால் உள்ளங்கை அளவு அப்படி எடுத்து கொறித்துக் கொள்ளலாம். புரோட்டீன் தேவை என்று குண்டா நிறைய கொண்ட கடலையை போட்டு அரைக்க கூடாது. அவஸ்தை அதிலும் வரும். காலையோ மாலையோ இந்த நடைப்பயிற்சி கட்டாயம். நேரம் பொறுத்து மாற்றிக் கொள்ளுங்கள். கால்களால் நடக்காதவன்... தூக்கி செல்லப்படுவான் என்பது யுத்தசாமியின் இன்னொரு பொன்மொழி

இரவு உணவு சப்பாத்தி தோசை... இட்லி என்று விருப்பப்படி இருக்கட்டும். ஆனால் அளவு அளவு. அத்துமீறும் எதுவும் எழவு எழவு. நினைவில் இருக்கட்டும். நித்திரைக்கு முன்பாக நீண்ட இடைவெளியில் இரவு உணவு சிரிக்கட்டும்.

இதயத்துக்கு புரோட்டீன். மூளைக்கு கார்போஹைட்ரேட். அப்புறம் மினரல்... பொட்டாசியம்... என பார்த்து பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

செவ்வாழை உடலை ஓவியமாக்கும். தினம் தினம் புது ஓவியம்.

பேச்சை குறைத்தவன்... பெரியவன். சோத்தைக் குறைத்தவன்.. இன்னும் பெரியவன்.

கவனத்தில் கொள். பந்திக்கு கடைசியாக செல்.

அப்புறம் இன்னொன்று... இந்த உலகமே தன் தலையில் தான் சுற்றுகிறது என்ற தீவிர மனநோய் சிந்தனையை விட்டகல வேண்டும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இங்கு எதுவும் நிற்காது. இயல்பாய் இருக்க முனைப்பாய் இருக்க கூடாது. முனைப்பாய் இருக்க இயல்பாய் இரு.

நீரருந்த கற்றுக் கொள்ளல் கலை. நீ பாதி நீர் என்பதை உணர்ந்து கொள்ளல் நியதி. அமைதியும் அன்பும் அரவணைக்க பிறகு பார்... ரசம் போன கண்ணாடியிலும் நீ ரா...ஜா.../ ரா....ணி.

ஒரு நாள் இப்படி இசைந்தாட... இடையே தேவைப்பட்டால் அலைபேசி. இப்படி இருந்தால் எப்போதும் நீ சுகவாசி.

- கவிஜி

Pin It