தமிழிலக்கிய வரலாற்றில் அதிக கவனம் பெறாமல் இருந்து தற்போது ஓரளவிற்கு கவனம் பெற்று வருபவை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஆகும். ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பற்றிய வரலாறு முழுமையாகத் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை. ஒரு சில முயற்சிகளைத் தவிர, ஒரு ரஷ்ய - தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு வரலாறு முறையாக எழுதப்படும் பட்சத்தில் ரஷ்ய இலக்கியங்களுக்குத் தமிழ் இலக்கியச் சூழலிலிருந்த வரவேற்பை உணர்ந்துகொள்ள முடியும். மேலும், அம்மொழிபெயர்ப்புகளின் ஊடாகத் தமிழ் இலக்கியப் போக்கில் நடந்துள்ள மாற்றத்தையும், தாக்கத்தையும் அறிந்துகொள்ள இயலும். இவ்வாறான மொழிபெயர்ப்புச் சூழலில் இலக்கியங்கள் மட்டுமல்லாது, அவற்றின் வழியாகப் பண்பாடு, பழக்கவழக்கம், அவ்விலக்கியங்கள் உருவான நிலப்பரப்பில் பின்பற்றப்பட்ட இலக்கிய உத்திகள், அரசியல் சூழல் போன்றவையும் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய புனைவு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படும் பொழுது வேற்று மொழிச்சூழலில் அவ்விலக்கியங்களுக்கு இருக்கும் வரவேற்பை அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள புனைகதைகளை ஒப்பிலக்கிய ஆய்வு நெறிகளில் ஒன்றான வரவேற்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

ஒப்பிலக்கிய ஆய்வில் வரவேற்புக் கோட்பாடு

russian literaturesஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கியங்களைத் தகுந்த ஆய்வு அணுகுமுறைகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒப்பிலக்கியமாகும். பிரஞ்சு இலக்கியச் சிந்தனை மரபில் தோன்றிய இவ்வாய்வு அணுகுமுறை பின்னர் அமெரிக்க ஒப்பியல் அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவில் இக்கொள்கை வரவேற்பு, தாக்கம், இணைவரை என மூன்று நிலைகளாகப் பிரித்து ஆராயப்பட்டது. தமிழிலும் இத்தகைய அணுகுமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. த. ஜெகதீசன் ‘தற்காலத் தமிழ்ப் புனைகதைகளில் நவீன பிரெஞ்சுப் புனைகதை மொழிபெயர்ப்புகளின் தாக்கம்' (1980-2010) (2016)’ என்ற தமது முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஒப்பிலக்கிய ஆய்வுப் பரப்பில் வரவேற்பும், தாக்கமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன; தமிழ் இலக்கியத்தின் மீதான பிற மொழி இலக்கியங்களின் தாக்கம் மொழிபெயர்ப்பின் வழி நிகழ்வதால் மொழிபெயர்ப்பின் வருகை பற்றிய ஆய்வானது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படும்போது இலக்கு மொழிச்சூழலில் அவ்விலக்கியங்கள் தகவமைத்துக்கொள்ளும் முறைபற்றிய ஆய்வே வரவேற்புக் கோட்பாடாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய ஆய்வுகள் பெருமளவில் நடைபெற்றுள்ளன. ஷேக்ஸ்பியர், மாப்பஸான் ஆகியோரின் படைப்புகள் பிற மொழிச்சூழலில் பெற்றுள்ள வரவேற்பு பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடைபெற்றுள்ளன. ஆனால் ரஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய், தஸ்தாவஸ்க்கி மற்றும் கார்க்கி முதலியோரின் படைப்புகள் பிற மொழிச்சூழலில், குறிப்பாகத் தமிழில் பெற்றுள்ள வரவேற்பைப் பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடைபெறவில்லை. அவ்வகையில் நவீனத் தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள ரஷ்ய இலக்கிய நாவல் மொழிபெயர்ப்புகளைப் பகுத்து ஆராய்வது இன்றியமையாததாகின்றது.

வரவேற்பு ஆய்விற்கான தரவுகள்

மூல மொழியில் உள்ள இலக்கியங்களுக்குப் வேற்று மொழிச்சூழலில் கிடைக்கும் வரவேற்பை ஆய்வு செய்ய பதிப்பு விவரங்கள், மறு பதிப்பு விவரங்கள், பதிப்பாளரின் குறிப்புகள், பதிப்பகத்தின் குறிப்புகள், மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகள், முகவுரை, பின்னுரை, முன், பின், உள் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், அம்மொழிபெயர்ப்பு பற்றிய விவாதங்கள், பதிப்பகத்தாரின் விளம்பரங்கள் ஆகியவை முதன்மைத் தரவுகளாக அமைகின்றன.

தமிழ் மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாயின் நாவல்கள்

 தற்போதைய தரவுகளின்படி ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் டால்ஸ்டாயின் ‘கழிந்த காமம்’ ஆகும். இந்நாவல் 1937ஆம் ஆண்டு யோகி சுப்பிரமணியத்தின் மொழிபெயர்ப்பில் சுதந்திர சங்கு காரியாலயத்தின் வெளியீடாக வந்தது. இதன் மூலம் தமிழ் மொழிபெயர்ப்பில் அறிமுகமான முதல் ரஷ்ய எழுத்தாளர் என்ற பெருமையை லியோ டால்ஸ்டாய் அடைந்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் 1937ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை டால்ஸ்டாயின் நாற்பது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் வி.எஸ். வெங்கடேசன் மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு குதிரை வீரர்கள், காட்டுமலர், தேக்கு மரக்காடு, விஷப் பணம், புனித வாழ்க்கை, பனிப்புயல் ஆகிய நாவல்களும் ஆர்.எச்.நாதன் மொழிபெயர்ப்பில் வெளியான துறவியின் மோகம், நா.பாஸ்கரனின் மொழிபெயர்ப்பில் வெளியான கைதி, சுப. நாராயணன் மொழிபெயர்த்த படையெடுப்பு போன்ற மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். டால்ஸ்டாயின் நாவல்கள் பல மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு மற்றும் போரும் அமைதியும் ஆகிய நாவல் மொழிபெயர்ப்புகளே செல்வாக்குப் பெற்றிருந்தன. அன்னா கரீனினா நாவலை முதலில் சீமாட்டி கார்த்தியாயினி எனும் பெயரில் தழுவல் மொழிபெயர்ப்பாக நாரண துரைக்கண்ணன் கொண்டுவந்தார். இம்மொழிபெயர்ப்பு 1947 ஆம் ஆண்டிற்குள் மூன்று முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னுரையில்,

“அன்னா கரீனினா ஒர் உன்னதமான உயிர்ச் சித்திரம்: வெறுங் கற்பனைச் சித்திரமாக இருக்க முடியாது. நான் படித்த மேனாட்டு நவீனங்களில் டால்ஸ்டாயின் Resurrection, Anna Karenina, விக்டர் ஹ்யூகோவின் Les Miserable, Hunchbaok of Notre Dame, சார்லஸ் டிக்கன்ஸின் Tale of The Two Cities ஆகியவைகள் என் மனதை முற்றும் கவர்ந்து மகிழ வைத்தது போல் வேறெதுவுஞ் செய்யவில்லை என்றும் இவ்விதம் நான் படித்து மகிழ்ந்த ‘அன்னா காரீனீனா’வை என்னுடைய சகோதர சகோதரிகளும் படித்து இன்புற வேண்டும் - பயன் பெற வேண்டும் - என்ற எண்ணத்தோடுதான், ‘சீமாட்டி கார்த்தியாயினி’ என்ற பெயரோடு தமிழில் தருகிறேன்”1

என்று குறிப்பிடுகின்றார். சீமாட்டி கார்த்தியாயினி நாவல் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து அன்னா கரீனினாவின் இரண்டாவது மொழிபெயர்ப்பு 1947 ஆம் ஆண்டு தமிழ்ச்சுடர் நிலையத்தின் வெளியீடாக வந்தது. வெ. சந்தானத்தின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்நாவல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2022ஆம் ஆண்டில் வ.உ.சி.நூலகத்தின் வெளியீடாக மறுபதிப்பில் வெளிவந்துள்ளது. சோவியத் ரஷ்யாவின் ராதுகா பதிப்பகத்தின் வெளியீடாக வருகை தந்த அன்னா கரீனினா நாவலே தற்போது அதிகமாகப் பதிப்பில் உள்ளது. நா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியான இந்த நாவலை நியூ செஞ்சுரி புக் ஹவுசும், பாரதி புக் ஹவுசும் தொடர்ந்து பதிப்பித்து வருகின்றன. சிவனின் அன்னா கரீனினா மொழிபெயர்ப்பானது அந்நாவலின் கதைச் சுருக்கமாக அமைந்துள்ளது. இம்மொழிபெயர்ப்பை கவிதா பப்ளிகேஷன்ஸ் 2006ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

ந.இராமசாமி மொழிபெயர்ப்பில் 1955ஆம் ஆண்டு டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவல் ‘புத்துணர்ச்சி’ எனும் பெயரில் திருமகள் வெளியீடாக வந்தது. இதனைத் தொடர்ந்து வாணீ சரணன் மொழிபெயர்ப்பில் 1962ஆம் ஆண்டு இந்நாவல் வெளியானது. இவ்விரு மொழிபெயர்ப்புகளும் ரா.கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பு வரும் வரை அதிகமாகப் பதிப்பிலிருந்தது. 1979ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகம் ரா.கிருஷ்ணையாவைக் கொண்டு புத்துயிர்ப்பு நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தொடர்ந்து பதிப்பித்து வெளியிட்டு வந்தாலும் அடையாளம், வளரி, நற்றிணை போன்ற பதிப்பகங்களும் பதிப்பித்து விற்பனை செய்து வருகின்றன. 2019ஆம் ஆண்டு அடையாளம் பதிப்பகமும் 2022ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், வளரி வெளியீடு மற்றும் நற்றிணை ஆகிய பதிப்பகங்களும் கடைசியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளன. மேலும் இப்பதிப்பகங்கள் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதிலிருந்து ரா.கிருஷ்ணையாவின் மொழி பெயர்ப்பு தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. பாரதி புத்தகாலயம் கரிச்சன் குஞ்சு மொழிபெயர்த்த புத்துயிர்ப்பு நாவலைத் தொடர்ந்து பதிப்பித்து வெளியிட்டு வருகிறது.

தமிழில் 1951ஆம் ஆண்டு டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸ் நாவல் கமர்ஷியல் பிரிண்டிங் அண்டு பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீடாகத் திருகூட சுந்தரம் மொழிபெயர்ப்பில் போரும் காதலும் பாகம் - 1 என்னும் பெயரில் வெளியானது. இதன் பாகம் - 2 வெளிவரவில்லை. பிறகு டி.எஸ்.சொக்கலிங்கம் போரும் அமைதியும் நாவலை 1957ஆம் ஆண்டு முழுமையாக மொழியாக்கம் செய்தார். இம்மொழிபெயர்ப்பு மூன்று பகுதிகளாக வெளியானது. இந்நாவலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017ஆம் ஆண்டு ‘போரும் வாழ்வும்’ எனும் தலைப்பிலும், கௌரா பதிப்பகம் 2012ஆம் ஆண்டு ‘போரும் அமைதியும்’ எனும் தலைப்பிலும் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளன. எஸ்.கௌமாரீஸ்வரியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நாவல் 2003ஆம் ஆண்டு சீதை பதிப்பகத்தால் திருத்தம் செய்யப்பட்டு செம்பதிப்பாக வெளியிடப்பட்டது. எஸ்.சங்கரனின் மொழிபெயர்ப்பும் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக 1957ஆம் ஆண்டிலேயே வெளியானது. சிவன் மொழிபெயர்த்த ‘போரும் அமைதியும்’ நாவலை கவிதா பப்ளிகேஷன்ஸ் தொடர்ந்து பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது. முல்லை முத்தையா இந்நாவலைப் போரும் காதலும் எனும் தலைப்பில் சிறுகதை வடிவில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் வாசகர்கள் பரப்பை மட்டுமின்றி எழுத்தாளர்களின் மத்தியிலும் டால்ஸ்டாயின் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும் ஆகிய மொழிபெயர்ப்பு நாவல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

“இலக்கிய உலகின் இமையம் என மதிக்கப்படுகின்ற லியோ டால்ஸ்டாயின் அன்னா கரினினா, போரும் அமைதியும், புத்துயிர்ப்பு (ரிஸரக்ஷன்) ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். மூன்றும் ஒவ்வொரு விதத்தில் தனிச் சிறப்புடைய படைப்புகளாகும்”2

என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுவதிலிருந்து இந்நாவல்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ் மொழிபெயர்ப்பில் தஸ்தாவஸ்க்கியின் நாவல்கள்

டால்ஸ்டாயை அடுத்து தஸ்தாவஸ்க்கியின் நாவல்கள் ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குற்றமும் தண்டனையும், வெண்ணிற இரவுகள், சூதாடி, கரமசோவ் சகோதரர்கள், நிலவறைக் குறிப்புகள், அசடன், மனப்புயல், வசவும் வடுவும் உள்ளிட்ட பத்தொன்பது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் குற்றமும் தண்டனையும், வெண்ணிற இரவுகள், சூதாடி, கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நான்கு நாவல் மொழிபெயர்ப்புக்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. குற்றமும் தண்டனையும் நாவல் முல்லை முத்தையாவின் மொழிபெயர்ப்பில் 1956ஆம் ஆண்டு மலர் நிலையத்தின் வெளியீடாக வந்தது. இதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தஸ்தாவஸ்கியின் முதல் நாவலாகும். முல்லை முத்தையாவின் குற்றமும் தண்டனையும் சுருக்கமான மொழிபெயர்ப்பாகும். இதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு எம்.ஏ.சுசீலாவின் மறுமொழிபெயர்ப்பில் குற்றமும் தண்டனையும் நாவல் நற்றிணைப் பதிப்பகத்தின் வெளியீடாக வெளியானது. இம்மொழிபெயர்ப்பு முல்லை முத்தையாவின் மொழிபெயர்ப்பைவிட விரிவான மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் 2012, 2016ஆம் ஆண்டுகளில் இருமுறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

கரமசோவ் சகோதரர்கள் நாவல் தமிழில் நான்கு முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிவனின் மொழிபெயர்ப்பில் கதைச் சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட கரமசோவ் சகோதரர்கள் நாவல் 2014ஆம் ஆண்டு வரை மறுபதிப்பிலிருந்துள்ளது. பின்னர் இம்மொழிபெயர்ப்பு அதிகமாக மறுபதிப்பு செய்யப்படவில்லை. வி.எஸ். வெங்கடேசன் மொழிபெயர்த்த கரமசோவ் சகோதரர்கள் வள்ளி சுந்தர் பதிப்பில் 2008ஆம் ஆண்டு வெளிவந்தது. இம்மொழிபெயர்ப்பும் தொடர்ந்து பதிப்பிக்கப்படவில்லை. இந்நாவல் 2011ஆம் ஆண்டு புவியரசின் மொழிபெயர்ப்பில் நியூ

செஞ்சுரி புக் ஹவுஸிலும் அரும்பு சுப்பிரமணியனின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீட்டிலும் மட்டுமே தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நாவலுக்குத் தமிழ் வாசகர்களிடையே இருந்த வரவேற்பைவிட வெண்ணிற இரவுகள் நாவலுக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. வெண்ணிற இரவு போல சூதாடி மற்றும் அருவருப்பான விவகாரம் ஆகிய நாவல்களும் தமிழ்ச் சூழலில் நல்ல மதிப்பை பெற்றிருந்தன. இம்மூன்று நாவல்களும் குறுநாவல் வகையைச் சார்ந்தது. சோவியத் ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகம் 1973ஆம் ஆண்டு ரா.கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பில் வெண்ணிற இரவுகள் நாவலை வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்பு அதிகமாகப் பதிப்பில் உள்ளது. இந்நாவலினை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் முதல் பதிப்பு 2007ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பதிப்பு 2021ஆம் ஆண்டிற்குள் ஆறு முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல பதிப்பகங்கள் இந்நாவலைப் பதிப்பித்துள்ளன.

நஞ்சுண்டனின் ‘தமிழ்ச் சூழலும் சில மொழிபெயர்ப்புகளும்: “நாயுடன் கூடிய மாது (2014)”’ என்ற கட்டுரை ‘White night’ நாவலின் தலைப்பை ‘வெண்ணிற இரவுகள்’ என மொழியாக்கம் செய்தது தவறு என்ற விமர்சனத்தை முன் வைத்தது. மேலும் White night என்பது தூங்காத இரவைக் குறிக்கும். நாவலின் கதாநாயகன் கதை நிகழும் காலத்தில் தூங்குவது இல்லை. எனவே ‘தூங்காத இரவுகள்’ என்ற தலைப்பே பொருத்தமானது எனத் தீர்வையும் சுட்டிக்காட்டியது. இக்கட்டுரை வெளிவந்த சில ஆண்டுகள் கழித்து பத்மஜா நாராயணன் மற்றும் எம்.ஏ.சுசீலா ஆகியோர் ‘White night’ நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளனர். பத்மஜா நாராயணன் மொழிபெயர்ப்பு 2017ஆம் ஆண்டு எதிர் வெளியீட்டில் ‘வெண்ணிற இரவுகள்’ என்னும் பெயரிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுபோலவே எம்.ஏ.சுசீலாவின் மொழிபெயர்ப்பு நற்றிணைப் பதிப்பகத்தின் வெளியீடாக 2021ஆம் ஆண்டு ‘வெண் இரவுகள்’ எனும் பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிபெயர்ப்பாளர்களும் வெண்ணிற இரவுகள் என்ற தலைப்பு விமர்சனத்துக்குள்ளான பிறகும் நாவலின் மொழிபெயர்ப்புத் தலைப்பில் மாற்றம் செய்யவில்லை. பாரதி புத்தகாலயத்தின் பதிப்பில் வெண்ணிற இரவுகள், அருவருப்பான விவகாரம் மற்றும் சூதாடி ஆகிய மூன்று குறுநாவல்களும் உலகப் புகழ் பெற்ற தாஸ்தயேவ்ஸ்கி கதைகள் எனும் தலைப்பில் வெளிவந்துள்ளன. எஸ்.ராமகிருஷ்ணன் இந்நூலின் பின் அட்டையில்,

“இதுவரை நான் வாசித்த புத்தகங்களில் மிகச்சிறந்த காதல் கதையாக தோன்றுவது மூன்று கதைகள் மட்டுமே. மூன்றுமே ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதியது. அதில் முதலிடம் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்”3

என்று குறிப்பிடுவதிலிருந்து வெண்ணிற இரவுகள் நாவலின் சிறப்பை அறிந்துகொள்ள முடியும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள நாவல்களான அருவருப்பான விவகாரம் மற்றும் சூதாடி ஆகியவை தனித்தனியாகப் பதிப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அருவருப்பான விவகாரம் நாவலானது நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு வரை இரண்டு முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து பதிப்பித்து விற்பனை செய்து வருகின்றது. நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தைத் தவிர ரிதம் புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ் மற்றும் ஆதி பதிப்பகம் ஆகிய நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இந்நாவலை வெளியிட்டுள்ளன. வெண்ணிற இரவுகளை ஒப்பிடும் பொழுது இந்நாவலைக் குறைந்த எண்ணிக்கையிலான பதிப்பகங்களே பதிப்பித்து வெளியிட்டு வருகின்றன. சூதாடி நாவல் ரா.கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பில் மட்டுமே வந்திருந்தாலும் வெண்ணிற இரவுகள் அளவிற்கு வாசகர் பரப்பைப் பெற்றிருந்தது எனலாம். இந்நாவலை வ.உ.சி நூலகம் (2018), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2007), வளரி (2021), நற்றிணை (2022), ரிதம் புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ் (2023) ஆகிய நிறுவனங்கள் தங்களது பதிப்பாகக் கொண்டுவந்துள்ளன.

தமிழ் மொழிபெயர்ப்பில் மாக்ஸிம் கார்க்கியின் நாவல்கள்

டால்ஸ்டாய், தஸ்தாவஸ்க்கியைத் தொடர்ந்து தமிழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி ஆவார். தமிழுக்கு மொழிபெயர்ப்பாகியுள்ள கார்க்கியின் மொத்த நாவல்களின் எண்ணிக்கை பதிமூன்று ஆகும். இதில் பிரம்மச்சாரியின் டயரி, பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், தந்தையின் காதலி, தாய், மூன்று தலைமுறைகள் போன்ற நாவல் மொழிபெயர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழுக்கு முதலில் வந்த கார்க்கியின் முதல் நாவல் “தி மதர்” ஆகும். இதனை அன்னை என்னும் பெயரில் ப.ராமஸ்வாமி மொழிபெயர்த்து 1946ஆம் ஆண்டு நவபாரதி பிரசுராலயத்தின் வெளியீடாக வந்தது; எனினும் இம்மொழிபெயர்ப்பு முழுமையானதாக அமையவில்லை. மூலநூலுடன் ஒப்பிடுகையில் இடையிடையே சில பத்திகள் விடுபட்டுள்ளன. கார்க்கியின் தாய் நாவல் ப.ராமஸ்சுவாமியின் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து அம்மா, தாய், தாய் காவியம் எனும் பெயர்களில் மொத்தம் ஐந்து முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக இந்நாவல் மொழிபெயர்ப்பு தொ.மு.சி.ரகுநாதன் மொழிபெயர்ப்பில் 1952ஆம் ஆண்டு சென்னை ஸ்டார் பிரசுரத்தின் வெளியீடாக வந்தது. தாய் நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பாக இது அமைந்திருந்தது. இது சிறு திருத்தங்களுடன் 1975ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் ராதுகா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்நாவலே தற்பொழுது அதிகமாகப் பதிப்பில் உள்ளது. தொ.மு.சி. ரகுநாதனின் தாய் நாவல் மொழிபெயர்ப்பை 2022ஆம் ஆண்டு வரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் பத்து முறைக்கு மேல் மறுபதிப்பு செய்துள்ளது. இந்நிறுவனம் தவிர பிற பதிப்பு நிறுவனங்களான ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (2012), பாரதி புத்தகாலயம் (2014), தோழமை வெளியீடு (2016), கவிதா பப்ளிகேஷன் (2017), வளரி வெளியீடு (2021), டிஸ்கவரி புக் பேலஸ் (2022) மற்றும் கௌரா பதிப்பகக் குழுமம் (2022) ஆகிய ஆண்டுகளில் இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளன.

சீர் வாசகர் வட்டம் என்ற அமைப்பு 2023ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 150 ரூபாய்க்கு இம்மொழிபெயர்ப்பைப் பதிப்பித்து விற்பனை செய்தது. இவ்வமைப்பின் வெளியீடானது பன்னிரண்டு நாட்களுக்குள் 6000 பிரதிகள் விற்பனையாகின. மூன்றாவதாக தாய் நாவலானது முல்லை முத்தையா மொழிபெயர்ப்பில் 1956ஆம் ஆண்டு ‘அம்மா’ என்னும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்ப நிலையத்தின் மூலம் வெளியிடப்பட்டது. அல்லயன்ஸ் நிறுவனத்தின் வெளியீடாக சிவன் தாய் நாவலை சுருக்க மொழிபெயர்ப்பாக கொண்டுவந்துள்ளார். கலைஞர் கருணாநிதி கவிதை நடையில் தாய் நாவலை, ‘தாய் காவியம்’ என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இம்மொழிபெயர்ப்பு 2004ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கலைஞர் கதை வசனத்தில் தாய் நாவல் ‘இளைஞன்’ என்னும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. தாய் நாவல் 2022ஆம் ஆண்டு சத்தியாவின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வந்த ‘தி மதர்’ நாவலின் அண்மைய மொழிபெயர்ப்பாகும். இது பொன்னுலகத்தின் வெளியீடாக வந்துள்ளது. தாய் நாவல் மொழிபெயர்ப்புகள் இலக்கியத் தளத்தைக் கடந்து அரசியல் தளத்திலும் செல்வாக்கு செலுத்தின. ப.ஜீவானந்தம் 1960ஆம் ஆண்டு தாமரை இதழில் வெளியிட்ட மாக்சிம் கார்க்கியும் மாயக்கோவ்ஸ்கியும் எனும் கட்டுரையில்,

“அன்னை ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பாரத நாட்டிலும் ‘அன்னை’ மொழி பெயர்க்கப்படாத மொழி இல்லையென்றே சொல்ல வேண்டும். தமிழில் ‘அன்னை’ என்ற ஒரு மொழிபெயர்ப்பும், அப்பால் ‘தாய்’ என்ற மொழிபெயர்ப்பும், பின்னர் ‘அம்மா’ என்ற அன்னையின் கதைச்சுருக்கமும் வெளிவந்துள்ளன. இவைகளெல்லாம் உலக மக்களிடம் அன்னைக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பைக் குறிக்கப் போதும்”4

என்று குறிப்பிடுவதிலிருந்து இந்நாவலுக்கு இருந்த வரவேற்பை அறியலாம். இந்நாவலின் பாதிப்பினால் தொ.மு.சி.ரகுநாதன், சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் தமிழில் உருவாகினர். தாய் நாவலுக்கு அடுத்தபடியாக ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் கார்க்கியின் ‘தந்தையின் காதலி’ எனும் நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இம்மொழிபெயர்ப்பு 1950ஆம் ஆண்டு சக்தி காரியாலயத்தின் வெளியீடாக வந்தது. பின்னர் இந்நாவலை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2021ஆம் ஆண்டு தேனீர் பதிப்பகம் மறுபதிப்பில் கொண்டுவந்துள்ளது.

முடிவுரை

தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட ரஷ்ய இலக்கியங்களை ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது 1937 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுவரை 161 நாவல்கள் மொழிபெயர்ப்பாகியுள்ளன. மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாவல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் ஒப்பிலக்கிய வரவேற்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகிப்பார்க்கும் பொழுது டால்ஸ்டாயின் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும், தஸ்தாவஸ்கியின் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், வெண்ணிற இரவுகள், கார்க்கியின் தாய் போன்ற நாவல்கள் அதிகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இம்மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பகங்கள் தொடர்ந்து பதிப்பு செய்துவருவதையும், தமிழ் புனைகதை எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களால் இப்படைப்புகள் கொண்டாடப்பட்டு வருவதையும் கருத்தில் கொண்டு இப்படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும் டால்ஸ்டாயின் தாக்கத்தை ஜெயகாந்தன், ஷோபாசக்தி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற புனைகதை எழுத்தாளர்களிடம் காணமுடிகின்றது. தாய் நாவலின் பாதிப்பினால் தொ.முசி.ரகுநாதன், சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் தமிழில் உருவாகினர். எனவே ரஷ்ய இலக்கியங்களின் வருகையால் தமிழ் புனைகதை போக்கில் நடந்துள்ள மாற்றத்தை இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ஆராய்வது அவசியமாகிறது.

சான்றெண் விளக்கம்

1.           நாரண துரைக்கண்ணன் (மொ.பெ)., சீமாட்டி கார்த்தியாயினி, 1947, ப.வீவீ

2.           வெ.சந்தானம் (மொ.பெ)., அன்னா கரினினா, 2003, ப.14

3.           ரா.கிருஷ்ணையா (மொ.பெ)., உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள், 2016, பின்னட்டை

4.           கே.ஜீவபாரதி (தொ.ஆ), சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, 2018, ப.72.

துணையன்கள்

1.           இராசாராம், சு., மொழிபெயர்ப்புப் பார்வைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்: 2014.

2.           கிருஷ்ணையா, ரா (மொ.பெ)., உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள், பாரதி புத்தகாலயம், சென்னை: 2016.

3.           கிருஷ்ணையா, ரா (மொ.பெ)., வெண்ணிற இரவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 2016.

4.           கிருஷ்ணையா. ரா (மொ.பெ)., புத்துயிர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 2018.

5.           கோவிந்தசாமி, பெ., தமிழில் சோவியத் இலக்கியங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 2018.

6.           சந்தானம். வெ (மொ.பெ)., அன்னா கரினினா, வ.உ.சி.நூலகம், சென்னை: 2003.

7.           தர்மராஜன். நா (மொ.பெ)., அன்னா கரீனினா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 2018.

8.           நாரண துரைக்கண்ணன் (மொ.பெ)., சீமாட்டி கார்த்தியாயினி, நா. முனிசாமி முதலியார், சென்னை: 1940.

9.           நாச்சியப்பன், ச., ரஷ்ய - தமிழ் மொழிபெயர்ப்புக்கள்: திறனாய்வு நூலடைவு (வெளியிடப் பெறாத இளமுனைவர் பட்ட ஆய்வேடு), ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி: 2014.

10.         சொக்கலிங்கம். டி.எஸ் (மொ.பெ)., போரும் வாழ்வும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 2017.

11.         ரகுநாதன், தொ.மு.சி (மொ.பெ)., தாய், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 2003.

12.         முருகேசபாண்டியன், ந., தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம், தி பார்க்கர், சென்னை: 2004.

13.         ஜீவபாரதி, கே (தொ.ஆ)., சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்: 2000.

14.         ஜெகதீசன், த., தற்காலத் தமிழ்ப் புனைகதைகளில் நவீன பிரெஞ்சுப் புனைகதை மொழிபெயர்ப்புகளின் தாக்கம் (1980 - 2010) (முனைவர் பட்ட ஆய்வேடு), ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி: 2016..

- கா.தங்கதுரை, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் துறை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி