தமிழ் இலக்கியத்தில் சிறார் நூல்கள் தொடர்ந்து படைக்கப்பட்டுப் புழக்கத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அவையெல்லாம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன; பலன் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன . எப்படி? உண்மையைப் பேச வேண்டும், நன்மையைச் செய்ய வேண்டும் என்று மழலைகளுக்குப் பாடம் கற்பிக்கிறவையாக.

ivaan novelஇவையெல்லாம்… வறுமையிலேயே வாழ்ந்தாலும் கூட ஓரளவுக்காவது அமைதியை சுவாசிக்கிற குழந்தைகளுக்கு . ஆனால், நாம் இங்கே பார்க்கப் போவது போரினால் பாதிக்கப்பட்டு பன்னிரண்டு வயதிலேயே போரில் கலந்து கொண்டு எதிரிகளை வீழ்த்திய சிறுவனின் கதையை.

உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ரஷ்ய எழுத்தாளர் விளதீமிர் பகமோலவ் அவர்களால் எழுதப்பட்டது - “இவான்” என்னும் குறும் புதினம். விளதீமிர் எழுதிய இந்தக் குறும் புதினத்தை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நா.முகமது செரீபு. இதில் இடம்பெற்றுள்ள படங்களை வரைந்திருப்பவர்: ஒரேஸ்த் வெரெய்ஸ்கி.

இரண்டாம் உலகப் போரில் இவான் என்னும் ரஷ்ய நாட்டுச் சிறுவனின் குடும்பத்தினர் ஜெர்மானிய நாஜிப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர்.

அதன்பிறகு அந்தச் சிறுவனின் வாழ்க்கை என்ன ஆனது?…

ரஷ்யாவின் போர் அணிப்பிரிவின் உதவிப் படைத்துறைக் களத்தில் கதை தொடங்குகிறது.

கால்த்ஸெவ் என்னும் இருபத்தொரு வயது நிரம்பிய இராணுவ அதிகாரி சொல்வதாக இந்தக் கதை புனையப்பட்டுள்ளது. அதிகாலை நேரம் அவர் துயில் எழுப்பப்படுகிறார். பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் சிப்பாயால் அறிமுகப்படுத்தப்படுகிறான்.

“கரையோரத்து நீரில் இவன் ஊர்ந்துகொண்டிருந்தான். எந்த விளக்கமும் கொடுக்க மறுத்து விட்டான். மேலும், தலைமையிடத்திற்கு அழைத்துப் போகும்படியும் கோரினான். எந்தக் கேள்விக்கும் இவன் பதில் பேச மாட்டான். தலைமை அதிகாரியிடம் மட்டுமே நான் பேசுவேன் என்று கூறுகிறான். களைத்துப்போய்க் காணப்படுகிறான். ஆனால், இவன் ஏமாற்றுகிறவனாகத் தான் இருக்க முடியும். ஜூனியர் லெப்டினண்ட் இவனை இங்கே அழைத்துப் போகும்படி எனக்குக் கட்டளையிட்டார்” என்றான் அந்தச் சிப்பாய்.

உடன் அழைத்து வந்து அறிமுகப்படுத்திய சிப்பாய் வசீலியெவை வெளியே அனுப்பும்படி கால்த்ஸெவ்விடம் கண்டிப்பான தொனியில் சொன்னான் சிறுவன். அதன்படி, கால்த்ஸெவ் அந்தச் சிப்பாயை வெளியே சென்று காத்திருக்கும்படி கூறினார் .

அப்படியே அமைதியாக இருந்த சிறுவனிடம் “நல்லது, ஏன் பேச மாட்டேன் என்கிறாய்? எங்கிருந்து நீ வந்தாய்?” என்று கேட்கிறார், அதிகாரி.

“நான் போன்தரெவ் . பணித் தலைமையிடம் எண் ஐம்பத்தி ஒன்றுக்கு, நான் இங்கிருக்கிறேன் என்று உடனடியாக அறிவியுங்கள்.” என்று பதில் அளிக்கிறான். “அப்படியா? பிறகு?” என்றார் அதிகாரி.

“அது அவர்களுடைய வேலை; என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியும்.”

சிறுவனை உற்று நோக்குகிறார் அதிகாரி கால்த்ஸெவ் சிறுவன் சட்டையைக் கழற்றினான். புழுதியில் புரண்டு அழுக்குப் பிடித்த மேனி. எலும்பிருக்கிறது, தோலிருக்கிறது, தசையில்லை.

அவனுக்கு இரானுவத்தில் யாரைத் தெரியும் என்று கேட்க… இராணுவ வேவுத் துறைத் தலைவர் லெப்டினண்ட் – கர்னல் கிரியச்னோவ் என்று பதிலளித்தவன் பிறகு சிடுசிடுப்பான தோற்றத்தோடு “காப்டன் ஹோலின்” என்று முணுமுணுத்தான்.

இராணுவத் தலைமையிடத்தின் ஆணையின்படி கால்த்ஸெவ் அவனை உபசரித்தார். “சிவக்கப் பழுத்த அடுப்புப் பக்கம் தனது முதுகைக் காட்டிய படி பெஞ்சின் ஓரத்தில் பையன் உட்கார்ந்திருந்தான். மூலையில் அவன் தூக்கி எறிந்த ஈரமாய்ப் போன காற்சட்டை இப்பொழுது அவனது காலடியில் கிடந்தது. மூடியிருந்த பையிலிருந்து ஓர் அழுக்கேறிய கைக்குட்டையை வெளியே இழுத்தான். அதை விரித்து மேசையின் மீது உதறினாள். கோதுமை , ரை தானியங்கள், சூரிய காந்தி விதைகள், பைன், ஃபிர் இவற்றின் ஊசிவடிவ இலைகள் ஆகியவற்றைச் சிறுசிறு குவியல்களாகத் தனித்தனியாக ஒழுங்குபடுத்தினான். பிறகு, கூர்ந்த நோக்கோடு ஒவ்வொரு குவியலிலும் இருந்தனவற்றை எண்ணிக் காகிதத்தில் எழுதினான்” என்கிறார், கதைசொல்லும் கால்த்ஸெவ்.

பின்னர் , தாளில் வரிசையாகக் கோடுகளும் கட்டங்களும் போட்டு இடப் பக்க ஓரத்திலிருந்து குழந்தையின் கையெழுத்து போன்று அப்பையன் எழுதினான்: “ 2… 4 , 5 …” இந்த எண்கள் எதைக் குறிக்கின்றன என்பதையோ, அவன் வேறு என்ன எழுதுகிறான் என்பதையோ கால்த்ஸெவால் சிந்திக்க முடியவில்லை.

“நீண்ட நேரம், ஏறத்தாழ ஒரு மணி நேரம் வரை தனது பேனாவால் காகிதத்தில் கிறுக்கியபடி அவன் எழுதினான். பலமாக மூச்சு விட்டுக்கொண்டு தனது மணிக்கட்டால் தாளை மறைத்துக் கொண்டான் . அவனது விரல்கள் கீறப்பட்டும் கன்றிப் போயுமிருந்தன. அவனது கழுத்தும் காதுகளும் நீண்ட காலமாகக் கழுவப்படாதவையாக இருந்தன. அவ்வப்பொழுது உணர்ச்சிவசப்பட்டுத் தனது உதடுகளைக் கடித்தபடியும், எதையோ சிந்திப்பதற்கவும் , நினைவுபடுத்திப் பார்க்கவும் எழுதுவதை நிறுத்தினான். பிறகு மீண்டும் எழுதத் தொடங்கினான் .வெந்நீரும் தண்ணீரும் உள்ளே கொண்டு வரப்பட்டன. உள்ளே யாரையும் வர விடாமல் கால்த்ஸெவ் தானே வாளிகளையும் நீர்மொள் கலத்தையும் நிலவறைக்குள் கொண்டு போய் வைத்தார். ஆனால், அவன் இன்னமும் தனது பேனாவால் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான்”. (பக்கம்: 27, 28)

அவனைக் குளிக்க வைத்து விருந்தோம்பும் பணியில் ஈடுபட்டார், அதிகாரி கால்த்ஸெவ்.

உடலில் அழுக்கு கழுவப்பட்டதும், அவனுடைய நெல்நிறம் வெளியே தெரிந்தது. குளித்தும் அவன் குளிரவில்லை.

***

ரஷ்ய எல்லையில் உள்ள நீப்பர் நதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடிவளர்ச்சி கொண்ட புதரில் கால்த்ஸெவின் நிலவறை இருந்தது. நதி ரஷ்யர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் இடையே இருந்தது. எதிரே இருந்த உயரமான கரை தனித் திறங்களுடைய நிலப் பகுதியாகக் கருத்தப்பட்டது. ரஷ்யாவின் முக்கியப் பகுதி மிகவும் வாய்ப்பான பகுதியின் பின்னணியில் இருந்தது. நதியின் பார்வையில் ரஷ்யாவின் புறக்காவல் அரணின் கிளைப் பிரிவுகள் இருந்தன.

ரஷ்ய எல்லை நெடுகிலும் ஜெர்மானியர்கள் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு எந்திரத் துப்பாக்கிகள் அவ்வப்பொழுது வெடித்துச் சிதறின.

சிறுவன் உறங்கியும், உறங்கவில்லை. தகவல் அறிந்து இராணுவ உளவுப் பிரிவு அதிகாரியான காப்டன் ஹோலின் வந்து சேர்ந்தார். ஹோலினைப் பார்த்த உடனேயே பையன் உயிர் பெற்றவன் போலாகிச் சிரித்தான். அவன் சிரித்தது அதுதான் முதல் முறை.

“இவான், நீ இளைஞர்களுக்கான இராணுவப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் ஹோலின். இவான் மறுத்துப் பேசினான். ஹோலின் இவானைத் தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றார்.

புதினத்தின் அடுத்த சில பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டது – கால்த்ஸெவ் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு பெண் மருத்துவ அதிகாரியுடன் கொண்ட காதல்.

அடுத்து, இவான் ஓய்வெடுத்து, உடல் நலம் தேறிய பிறகு, அவனைச் சந்திக்கிறார், கதைசொல்லியான கால்த்ஸெவ்.

“இன்று அவன் அடையாளம் தெரியாதபடி மாறி இருந்தான் விளையாட்டாகவும், அவ்வப்பொழுது சிரித்துக் கொண்டும், என்னை நட்பு முறையில் பார்த்துக் கொண்டும், ஹோலினையும் கதசோனையும் அழைக்க, நெருக்கத்தைக் குறிக்கும் ‘நீ’ என்ற சொல்லையே என்னை அழைப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டு இருந்தான்” என்று இவான் மீது கொண்ட அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்.

இவானின் அத்தனை அசைவுகளும் ஏராளமான செய்திகளை வெளிபடுத்துகின்றன. இடையிடையே அவன் சிரிக்கிறான். அப்போதெல்லாம் அவனிடம் குழந்தைமை தெறிக்கிறது. பிறகு கடமை என்று வந்தவுடன் முதிர்கிறான். தெறித்த சிரிப்புகளெல்லாம் முதிர்ச்சியில் உறைகின்றன.

அவன் ஏராளமாகப் பேசுகிறான் – பேசாமலே!

வாசகர்கள் கூர்ந்து கவனிக்கிறபோது, தாங்களாகவே காட்சிகளையும் கதைத்தல்களையும் படைத்துக் கொள்வர்.

இராணுவத்தில் இருக்கிற இவான் ஐந்தடி உயரம் இல்லை, ஐம்பது கிலோ எடையில்லை, காளையல்லன், கன்றுக்குட்டி!

இவான் போன்தரெவ் கால்த்ஸெவ்விடம் இருக்கும் கத்தி ஒன்றைப் பார்த்து, அதைத் தனக்குத் தரும்படி ஆசையுடன் கேட்கிறான். ஆனால், கால்த்ஸெவ் அந்தக் கத்தியைத் தன் நண்பன் கன்ஸ்தந்தீனின் நினைவாக வைத்திருப்பதாகக் கூறி, கத்தியை போன்தரேவுக்குத் தர மறுத்து விடுகிறார். சிறுவனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளத் துடிக்கிறார் கால்த்ஸெவ்.

அதையொட்டி, காப்டன் ஹோலின் கால்த்ஸெவ்விடம் போன்தரேவைப் பற்றிச் சொல்கிறார்.

“போன்தரெவ் கோமெல் என்ற நகரத்திலிருந்து வந்தவன். போருக்கு முன்பு பால்டிக் பகுதியில் எங்கோ ஓர் எல்லைப் புறத்தில் தனது பெற்றோருடன வசித்திருக்கிறான். எல்லைப்புறக் காவலாளியாகிய அவன் தந்தை போரின் முதல் நாளன்றே கொல்லப்பட்டார். பின்வாங்கிச் செல்கின்றபோது பதினெட் மாதமே நிரம்பிய அவனது தங்கையும் கொல்லப்பட்டாள். சகோதரனுடைய கைகளில் அவள் இருந்தபோது ஜெர்மானியக் குண்டு ஒன்றினால் கொல்லப்பட்டாள். நீயோ நானோ ஒரு போதும் கற்பனையே செய்து பார்த்திராதவற்றை அவன் கடந்து வந்திருக்கிறான்.’’

ஹோலினின் குரலில் ஒலி அளவு குறைந்தது.

“அவன் கொரில்லாக்களோடும் இருந்திருக்கிறான். திரொஸ்தியானேத்ஸ் சாவு முகாமிலும் இருந்தான். அவன், மனத்தில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கடைசி மனிதன் வரை பழிவாங்க வேண்டும்! முகாமைப் பற்றியோ அவனது தந்தை அல்லது சகோதரியைப் பற்றியோ அவன் பேசத் தொடங்குகின்றபோது, அவன் நடுநடுங்கத் தொடங்கி விடுகிறான். ஒரு குழந்தை இதுபோல வெறுக்கும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை”.

முதிர்ந்தவன் குழந்தைப் பருவத்தை அசைபோட்டு குழந்தையாகலாம். அப்படி, குழந்தை முதிர்ந்தவனின் செயல்பாட்டைக் கற்பனை செய்ய முடியுமா? அதற்குப் போதுமான அளவுக்கு அவனிடம் பட்டறிவு இருக்குமா?

ஒரு குழந்தை கொஞ்சலாம், கொஞ்சப்படலாம், கெஞ்சலாம், கெஞ்சப்படலாம். இத்தகைய செய்வினைகளையும் செயப்பாட்டு வினைகளையும் துய்ப்பதைத் தொடர முடியாமல் துறந்தவன் இவான் போன்தரெவ்.

ரஷ்யாவின் உளவுப் பிரிவு முழுவதும் சேகரிப்பதைவிட்டு கூடுதலான தகவல்களைக் கொண்டு வருகிறான். இவான் கத்திப் பேசவில்லை, கம்பு சுற்றவில்லை, துப்பாக்கி தூக்கவில்லை, வெடிகுண்டு வீசவில்லை; அமைதியாகவே போர்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.

இப்போது புறப்பட்டு விட்டான் - ஜெர்மானியப் பகுதியில் உளவுப் பணியாற்ற. காப்டன் ஹோலின் அறிவுறுத்துகிறார்.

“இடுக்கு வழியில் ஓரமாகவே நெருங்கிச் செல். அடிப்பகுதி முழுவதுமே வெடிகள் வைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதே… அடிக்கடி நின்று கவனி. திடீரென்று நின்று கவனி! மறைகுழிகள் எல்லாம் காவல் போடப்பட்டிருக்கின்றன. ஆகவே ஊர்ந்து, செல், பொறுத்திரு…. சுற்றி வரும் காவலர்கள் கடந்த உடனேயே, மறைகுழியைத் தாண்டிச் சென்று, மேற்கொண்டு முன்னேறிச் செல்….”

கரடு முரடான பயணம்… நீப்பர் நதியைக் கடந்து, ஈரமான சதுப்பு நிலத்தைக் கடந்து, எல்லையின் உள்ளே நுழைகிறான். இவான் போன்தரெவ்.

மழை மெதுவாக ஒரே மாதிரியாகப் பெய்கிறது. ஆற்றிலிருந்து ஈரஞ்செறிந்த காற்று வீசத் தொடங்கியது.

இறுதியில், எதிரிப் படையினரிடம் சிக்கிக் கொண்ட இவான் பொன்தரேவ் என்னும் இரும்பு மலர் என்ன ஆனது என்பதை ஆவணங்களின் மூலம் அறிந்து கொள்கிறார், கதை சொல்லியான சீனியர் லெப்டிமைன்ட் கால்த்ஸெவ்.

அவருடைய மனம் கனத்துப் போவதைப் போல, யாருடைய மனமும் கனத்துப் போகும் - இந்தக் குறும் புதினத்தை வாசித்தால்!

எந்தக் கண்ணாடியை அணிந்து பார்த்தாலும், போர் மிகக் கொடூரமானது! போரினால், இந்த இவான் போன்தரெவைப் போன்ற குழந்தைகளிடமிருந்து சூறையாடப்படும் குழந்தைப் பருவத்தை எவன் திருப்பிக் கொடுப்பான்?

(இவான் குறுநாவல் | விலை ரூ.100 | வெளியீடு: என்.சி.பி.எச்.)

- சா.ஜெயராஜ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.