"குண்டுமழை பொழியும்; இறந்தோர் உடல்கள் மலைபோல் குவிந்து கிடக்க, இறக்கப் போகிறவர்கள் அலறித் துடிப்பர். இந்தக் கொடூரமான போர்க்களத்திற்கு அருகில் ஒரு பீரங்கி வண்டியில் தூளி கட்டி என்னைப் பாதுகாப்பர். நான் போர்ப் பயங்கரத்தைக் கண்டு அஞ்சமாட்டேன். நான் பேனாவைப் பிடிக்காதிருந்தால், கத்தியைப் பிடித்திருப்பேன்."
இந்தச் சொற்றொடர்கள் உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ (1802- 1885) அவர்களால் எழுதப்பட்ட கவிதை வரிகள்.
இவ்வாறு, குழந்தை ஹியூகோ தந்தையுடன் இத்தாலி, ஸ்பெயின் போர்க்களங்களில் வளர்ந்து, பதினோராம் வயதில்தான் நிலையாகப் பாரிசுக்கு வந்து, வாழத் தொடங்குகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சில் நடைபெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஹியூகோ தனது கருத்தை ஓங்கித் தெரிவித்துள்ளார்.
தனது இலக்கியச் செல்வாக்கைச் சமூக மாற்றங்களுக்காகவும், முன்னேற்றங்களுக்காகவும் பயன்படுத்தினார்.
இத்தகைய ஹியூகோ எழுதிய முதன்மையான நாவல்களுள் குறிப்பிடத்தக்கது இளிச்சவாயன் என்னும் தலைப்பிலானது .
பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது - 1869 ஆம் ஆண்டில்!
பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரபுத்துவ வர்க்கம் ஏழை மக்களுக்குச் செய்யும் கொடுமைகளைப் பேசுகிறது - இளிச்சவாயன் என்னும் இந்தப் புதினம்.
கொம்ப்-ரா-ஷி-கர் என்னும் குற்றக் கும்பல், அரசன் மூன்றாம் வில்லியம் நிறைவேற்றிய குற்றச் சட்டத்துக்கு அஞ்சி, கடத்தி வைத்திருந்த சுமார் 10 வயது சிறுவனைப் போர்ட்லேண்ட் அருகில் தன்னந்தனியே விட்டு விட்டு, தப்பித்து ஓடுகிறது.
இங்கிலாந்தில் உள்ள பிரபுக்கள் தங்களின் பொறாமைப் புத்தியினால் தங்களைப் போன்ற பிற பிரபுக்களின் குடும்பங்களைக் கெடுப்பது, பிறரின் குழந்தைகளைக் கடத்தித் துன்புறுத்தச் செய்வது, அவ்வாறே பிற பிரபுக்களின் குழந்தைகளைக் கொடூரத் தோற்றம் உடையவர்களாக மாற்றி இன்புறும் பழக்கம் நிலவியது. அவற்றைப் போன்ற குரூர ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பவர்கள்தாம் - இந்தக் கொம்ப்ராஷிகர் கும்பல்.
இரண்டாம் ஜேம்ஸ் மன்னனின் ஆணையின்படி, கொம்ப்ராஷிகர் கும்பலால் க்வின்ப்ளேன் முகம் எப்போதும் சிரித்த நிலையில் இருக்கும்படி செய்யப்படுகின்றது.
சிறுவன் இந்தத் திகிலான சூழலில் மானிட நடமாட்டமே இல்லாத இடத்தில் இருந்து புகலிடம் தேடி வருகையில் அங்கே இறந்து போன தாயின் மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு பச்சிளங் குழந்தையைக் காண்கிறான்.
'என் நிலையை விட மோசமாக இருக்கிறதே - இந்தக் குழந்தையின் நிலை...' என்று பரிதாபப்பட்டு, அந்தக் குழந்தையையும் சுமந்து கொண்டு மக்கள் வசிக்கும் இடம் தேடி அலைகிறான்.
நீண்ட கால்நடைப் பயணத்துக்குப் பிறகு சிறுவன் வேமௌத் என்னும் ஊரைச் சென்றடைகிறான்.
அங்கே மன்னன் மூன்றாம் ஜார்ஜின் பெயரால் சிலைகள், பெரிய உணவகங்கள், மாளிகைகள் எல்லாம் விளங்குகின்றன. இந்த ஊரில் இசைப்புலவர்கள் பலர் இருக்கின்றனர் .
ஊரின் செழிப்பைக் கண்டு வியந்து போன சிறுவன், கையில் பச்சிளங்குழந்தையுடன் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டுகிறான்.
அந்த ஊர்ச் செல்வந்தர்களின் வீட்டுக்கதவு எதுவும் திறக்கப்படவில்லை.
செல்வந்தர்களின் இரக்கமற்ற தன்மையும் மிகச் செழிப்பாக இருக்கிறது.
இறுதியில், வீதியில் நிற்கும் வண்டியில் வசிக்கும் ஒரு முதியவர் அந்தச் சிறுவனுக்கும் அந்தக் குழந்தைக்கும் புகலிடம் கொடுக்கிறார்.
சிறுவனின் முகம் எப்போதும் சிரித்த நிலையிலேயே இருப்பதைக் கண்டு வியக்கிறார், அந்த முதியவர்.
அந்த வண்டி உர்சுஸ் என்னும் அந்த முதியவரின் நடமாடும் இல்லம், நடமாடும் மூலிகை விற்பனையகமாகும். அந்த வண்டியை இழுப்பதற்கு ஓநாய் ஒன்றை அவர் பயன்படுத்தி வருகிறார்.
சிறுவனுக்கு க்வின்ப்ளேன் என்றும், பெண்குழந்தைக்கு தியா என்றும் பெயர் சூட்டி, அவர்களை வளர்த்து வருகிறார் - உர்சுஸ்.
வேதாந்தி என்று தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு உர்சுஸ், ஊர் ஊராகச் சுற்றி வாழ்க்கை நடத்தி வருகிறார்.
அனாதையான பெண் குழந்தை தியாவுக்குக் கண்பார்வை இல்லை.
க்வின்ப்ளேனும், தியாவும் காதலிக்கிறார்கள்.
இந்நிலையில், உர்சுஸ், க்வின்ப்ளேன் ஆகிய இருவரும் ஆளும் அரசால் சந்திக்கிற தொடர் அவலங்கள் மிக விறுவிறுப்பாகச் சொல்லப் படுகின்றன.
வாசகர்கள் காத்திரமாக ரசித்துச் செல்லும் இந்த நெடுங்கதையில், நிறைய நகைச்சுவைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
புதின ஆசிரியர் உர்சுஸ் என்னும் கதைமாந்தர் மூலமாகவே சமூகக் குற்றங்களைக் குறையின்றிக் குறை சொல்கிறார் .
கதைத் தலைவன் க்வின்ப்ளேன் என்னும் பெயரால் அழைக்கப்படும் கதைத்தலைவனின் பூர்வீகம், அவனுக்கும், தியாவுக்குமான காதல் உறவு எப்படி நிறைவு பெறுகிறது என்பவை இந்தப் புதினத்தின் உச்சம்!
வாசிக்கிறவர்களுக்குக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படாத அளவுக்கு இந்தப் புதினத்தில் குட்டி குட்டி இயல்களாக 77 இயல்கள் இடம்பெற்றுள்ளன.
எழில்மிகு தமிழ்நடையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது - இளிச்சவாயன் என்னும் இந்தப் புதினம்!
- கலைச்செல்வன்