lavanya sundararajan bookஇரவைப் பருகும் பறவை கவிதை நூல் ஆசிரியர் லாவண்யா சுந்தரராஜன் முசிறியில் பிறந்து டெல்லியில் பணிபுரிந்து, தற்போது பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். தனது கவிதை, கதை மூலம் உலகம் முழுவதும் பயணித்து வருகிறார். நான் என்பது மறைந்தால் அந்தக் கணமே அன்பு மேலோங்கி விடும் என்ற தத்துவம் அனைவருக்கும் பொருத்தமாகுமென்பதைப்போல், அன்பினாலே இயங்கும் இப்பூவுலகில் கவிஞரின் தேடலும் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. மலை, மணல், மரம், மழை மூலம் தன்னுடைய சமூக அக்கறையை காட்சிப் படுத்தியுள்ளார். தன் வீட்டருகே இருந்த மலை உருத்தெரியாமல் போனதைக் கண்டு மனம்வெதும்பி கவிஞர் நாகா தனது உய்ய்ய்ய் கவிதை நூலில் கண்ணீருடன் கவிதை வடித்திருப்பார் அந்த ஞாபகம் வந்துவிட்டது.

வார்த்தையாலும், வக்கிர புத்தியாலும் காயப்படும்போது கடந்து செல்லாமல், பையிலும் கையிலும் ஆயுதமேந்தச் சொல்லி அசரச் செய்கிறார். கல்வி முறையானது அறிவைப் பெருக்காமல் மதிப்பெண் பெருக்கத்தை நோக்கிச் செல்வதை மிக அழகாய்ச் சாடியும், கால மாற்றம் கோலத்தையே மாற்றியதை கச்சிதமாய்க் காட்டியும், அம்மாவின் அன்பினில் ஏற்றத்தாழ்வு என்றும் கிடையாதென்பதை அழகாய்ப் புகுத்தியுள்ளார்.

தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் ரசிக்காமல் கடந்து செல்வதில்லை என்பதைப் பல கவிதைகளில் தூவியுள்ளார். பாலிதீன் பைகளாலும், கைபேசிக் கோபுரத்தாலும் நம் உயிர்ச்சங்கிலியான பறவைகள் நம் கண்ணைவிட்டு மறைந்து போகும் தூரம் வெகுதூரமில்லை என்பதை இக்கவிஞரும் சொல்ல மறக்கவில்லை. அவருடைய கவிகளில் சிலவற்றை தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். தாங்களும் இரவைப் பருகும் பறவையை அறிந்து கொள்வீர்கள்.

'உதிரும் பிரியம்

பாசிமணிக்குமில்லை

அலங்கார ஆடைக்குமில்லை

ஆயினும்

பிரியம் சிறிது சிறிதாய்

உதிரவே செய்கிறது'.

மனிதர்களின் தேவைகள் நிறைவேறியபின் பிரியங்கள் அடுத்த தேவைக்காக உதிர்ந்து செல்வதை அலங்கார ஆடையில் புகுத்தியுள்ளார்.

'இளைப்பாற மரங்களற்ற

நெடுஞ்சாலையில்

பெரும் தண்டனையென

நீண்டிருந்தது வெயில்'

சாலைகளெல்லாம் சோலைகளாக இருந்த காலம் மானூடரின் சுயநலத்தால் நிர்வாணமாகி விட்டது அதற்கான தண்டனைதான் இது.

' கம்பளி உடையையும்

புழுவாகிப் பட்டு நூலறத்து

படபடக்கும்

பட்டாம்பூச்சியிடம்

விடாமுயற்சியை'

தன்னம்பிக்கையை நமக்கு புழுகூட கற்றுத் தருவதை உணர்த்தியுள்ளார்.

' உணவருந்திய மேசை மீது

ரோஜாப் பூவாக மலர்ந்திருந்தன

கை துடைத்தெறிந்த காகிதங்கள்'

அனைவருக்கும் இப்பார்வை வாய்ப்பதில்லை. வீட்டில் உணவருந்தும்போது சிந்தியிருந்த தண்ணீர்த் துளிகள் மரமாக எனக்குக் காட்சியளித்தது, இக்கவிதையைப் படித்த நொடியில் ஆச்சர்யம் எமை கவ்விக் கொண்டது.

'பிரியங்களைப் பொழிவிக்கும் மழை

பாறையென்றும் மண்ணெண்றும் பார்ப்பதில்லை

எங்கெங்கும் கொட்டுகிறது'

அன்புமழை பொழியும்போது கண்களுக்கு இவ்வுலகமே அன்பாகத்தான் தெரியுமேயொழிய வேறொன்றுமில்லை எனச் சுட்டியுள்ளார்.

'உண்மையும் பிரியமும்

எங்கேனும் ஓரத்தில்

ஒளிந்தொருக்கிறதாவெனத்

துளாவுகிறேன்

பையெங்கும் நிறைந்த

அமிலம்தான்

கையெங்கும் மிஞ்சியது'

அன்பினை மட்டும் மனக்கண்ணில் கொண்டு வந்து சகோதரத்துவத்துடன் பழகும்போது அகம் அசிங்கமாகும்போது ஆயுதத்தை எடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லையென நெத்தியடி கொடுத்துள்ளார்.

'சொட்டி வடியும் நீர்த்துளிகள்

ரகசிய ராகங்களால்

சில்லிட்டு அதிர்வித்தன

கூடத்தின் பெருந்தரையை'

ரகசியத்தை ரகசியமாக அதன்போக்கில் விட்டு விடுகிறேன் கவிதையைப் படித்துவிட்டு ரகசியமாக கடத்திச் செல்லுங்கள்.

இன்னும் ஏராளமான கவிதைகள் நூலில் நீங்கள் வாசித்து ரசிக்க காத்திருக்கிறது.

கவிதை நூல்: இரவைப் பருகும் பறவை

ஆசிரியர்: லாவண்யா சுந்தரராஜன்

முதல் பதிப்பு : நவம்பர் 2011

பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,

669- கே.பி. சாலை,

நாகர்கோவில்-629001.

விலை: ரூ. 70/-

- செல்வக்குமார், இராஜபாளையம்

 

Pin It