bookreview6எந்தவொரு படைப்பும் புனிதமானது அல்ல; விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதும் அல்ல. படைப்பு என்பதே ஒருவகையில் அரசியல் செயல்பாடுதான். ஏதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி, படைப்புக் குறித்து உருவாக்கப்படுகிற புனைவுகளின் பின்னர் அரசியல் பொதிந்திருக்கிறது. ஒரு படைப்பு, காலந்தோறும் தொடர்ந்து வாசிக்கப்படும்போது, மரியுள்ள சமூகச் சூழலுக்கேற்ப வாசிப்பில் உணர்த்தும் பொருண்மையின் ஒத்திசைவு காரணமாகக் காலத்தைக் கடந்து, பிரதியாக நிலைபெறுகிறது. படைப்பாளியின் குரல் மட்டுமல்ல, வெவ்வேறு குரல்கள் பிரதிக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பிரதியின் மையத்தில் குவிந்திருக்கிற அதிகாரத்தைக் கட்டுடைக்கும்போது, வேறுபட்ட கோணங்களில் அணுகிட முடியும்; புரிந்திட இயலும். நூற்றாண்டுக்கு முன்னர் வெளியான படைப்பு என்றாலும் மறுவாசிப்புகள் மூலம், பிரதி சமகாலப் பிரதியாகிறது. 1879ஆம் ஆண்டில் அதாவது இன்றைக்கு 121 ஆண்டுகளுக்கு முன்னர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதி பிரசுரித்த ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலை மறுவாசிப்புக்குட்படுத்தும்போது, சமகாலத்துடன் நாவலின் பிரதி உறவாடுவதைக் கண்டறிய முடியும்.

இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனியாதிக்க ஆட்சியின்போது பிரிட்டிஷாரின் ஆங்கில மொழி, உணவு, உடை, பழக்கவழக்கம் போன்றவை, தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தின. ஆங்கிலேயரின் ஆட்சி அதிகாரத்தின் மீதான ஈடுபாடு காரணமாக ஆங்கில மொழியைக் கற்று, அரசியந்திரத்தில் பங்கேற்றிட முயன்ற பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினரின் எண்ணிக்கை, கணிசமாகப் பெருகியது.

அதேவேளையில் ஆங்கில இலக்கியப் படைப்புகள் உன்னதமானவை என்ற கருத்தியல், ஓரளவு ஆங்கிலக்கல்வி கற்றவர்களிடம் பரவலானது. அன்றைய காலகட்டத்தில் செய்யுளில் எழுதுவதுதான் புலமைமிக்கது என்ற பொதுப்புத்தி, தமிழ்ப் பண்டிதர்களிடம் பரவலாக இருந்தது. பெரும்பாலான பண்டிதர்கள் உரைநடையில் எழுதுவதைப் புலமைக் குறைவாகக் கருதினர்; தமிழ் உரைநடை எழுதிடச் சிரமப்பட்டனர். தமிழகத்தில் திண்ணைப் பள்ளிகள் வழக்கிலிருந்தபோது, ஆங்கிலேயரின் புதிய கல்விமுறை அறிமுகமானது.

குறிப்பாக 1857 இல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், புதிய வகைப்பட்ட கல்வி கற்றலைப் பரவலாக்கியது. இத்தகு சூழலில்தான் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பின்னர் ‘முன்சீப்’ என்ற நீதியரசராகவும் விளங்கிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ படைப்பை 1879 ஆம் ஆண்டில் எழுதினார். வசனத்தில் நீண்ட கதை சொல்கிற மனநிலை, பிள்ளைக்கு எப்படி உருவானது என்பது முக்கியமான கேள்வி.

நாவலின் முதல் பதிப்புக்குப் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற முன்னுரை, ஆய்விற்குரியது. “தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தக் குறையை நீக்கும் நோக்கத்துடன்தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும், ஏற்கனவே வெளிவந்துள்ள எனது நூல்களான நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனை ஆகியவற்றில் குறிப்பிட்டிருக்கிற அறநெறிக் கொள்கைகளுக்குச் சான்றுகள் காட்டவும்தான் இந்த நாவலை எழுதினேன்.” தமிழில் உரைநடை நூல் இல்லை என்ற குறையைப் போக்கிடவும், அறநெறிகளுக்குச் சான்றுகள் காட்டவும்தான் நாவல் என்ற புதிய இலக்கிய வகைமையில் எழுதியதாகப் பிள்ளை தரும் ஒப்புதல், கவனத்திற்குரியது.

தமிழில் கதைசொல்கிற மரபில் அதியற்புதப் புனைவென்றாலும் முன்னொரு காலத்தில் நடந்த கதை என்று சொல்கிற வழக்கு, பெரிதும் நிலவியது. இந்தப் போக்கினை இந்தியக் கதையாடலின் பொதுத்தன்மையானதாகக் கருத முடியும். எடுத்துக்காட்டாக மகாபாரதம் கற்பனைக் கதையல்ல என்றும், கி.மு. 1000த்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் என்றும் சராசரி இந்தியர்கள் நம்புகின்றனர். வைதிக சநாதன மதத்தின் மேலாதிக்கத்தை இந்தியாவில் வாழ்கிற பாமரரிடம் பரவலாக்கிட அன்றும் இன்றும் இதிகாசங்கள் பயன்படுகின்றன.

இடைக்காலத்தில் கடவுள்களை முன்வைத்துக் கட்டுக்கதைகள் நிரம்பிய புராணங்கள், அதிக எண்ணிக்கையில் எழுதப்பட்டன. புராணம் என்ற சொல்லுக்குக் ‘கடந்த காலத்தின் கதை’ என்று பொருள். அந்த மரபில் கதைசொல்லி, பிரதாப முதலியார் சரித்திரம் நாவலையும் முன்னர் நடந்த கதைபோலச் சொல்லியுள்ளார். நம்ப முடியாத சம்பவங்கள் நிரம்பிய புராணங்களின் அதியற்புதப் புனைவுகளுடன் ஒப்பிடும்போது, முன்னொரு காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு என்று நாவலைச் சொல்வதற்கான சாத்தியமுள்ளது. பிரதாப முதலியார் என்ற தனிமனிதனின் வாழ்க்கை வரலாற்றுப் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள நாவல், ஒற்றைத்தன்மையான போக்கில் விவரிக்கப்படவில்லை. ஏகப்பட்ட கதைகளின் தொகுப்பாகச் சொல்லப்பட்டுள்ள பிரதியில் யதார்த்தக் கதைசொல்லலுக்கு முக்கியத்துவம் இல்லை.

கதைக்குள் கதையாக விவரிக்கப்படும்போது மூலக்கதையிலிருந்து விலகினாலும், மீண்டும் எடுத்துரைப்பியலாகக் கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கதைசொல்லல் முறையானது இந்தியக் கதைசொல்லல் மரபிலிருந்து எடுக்கப்பட்டதாகும். நாவலில் கதையாடல் சூழலுக்குத் தக்கவாறு வெவ்வேறு பாத்திரங்கள் கதை சொல்கின்றன.

அன்றைய காலகட்டத்தில் வழக்கிலிருந்த நாட்டார் வாய்மொழிக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள், செவிவழிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்யன் கதை போன்ற பல்வேறு கதைகள், தாராளமாக நாவல் ஆக்கத்தில் பயன்பட்டுள்ளன. கதைசொல்லல் முறையில் கதைக்குள் கதையாக விரிந்திடும் பல்வேறு கதைகளும், துணுக்குகளும், நகைச்சுவைச் சம்பவங்களும் பிரதியைச் சுவராசியமானதாக்கியுள்ளன. வேடிக்கைக் கதைகள், கேலியான கதைகள் என விவரிக்கப்பட்டுள்ள பிரதியில் மையத்திற்கு முக்கியத்துவம் இல்லை.

கதைசொல்லி கதை சொல்கிறபோது, மூலக்கதையைவிட்டு விலகி, குட்டிக் கதைகளால் நிரம்பிய ஓர் இயல் தனித்து இருக்கிறது. நாவலின் இரண்டாம் இயல் முழுவதும் பிரதாப முதலி சொல்லியுள்ள வேடிக்கைக் கதைகளும், சொந்த அனுபவக் கதைகளும் என 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. வாசகர்களுக்குக் குறுங்கதைகள் மூலம் உற்சாகம் அளிப்பதுதான் பிள்ளையின் நோக்கமாக இருக்கிறது.

ஆங்கில நாவல்களை வாசித்துள்ள வேதநாயகம் பிள்ளை, நவீன வடிவமான நாவல் மூலம் கதை சொல்லும்போது, மேலைநாட்டு நாவல் வடிவத்தைப் பின்பற்றாமல், சுயேச்சையான முறையில் பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை எழுதியுள்ளார். அவர், நாவலின் முன்னுரையில் இத்தகைய கதைசொல்லல் முறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர், விக்கிரமபுரி நாட்டில் பிரதாப முதலி எதிர்கொண்ட விநோதமான வழக்குகளும், சிக்கல்களும், ஆண் வேடமிட்ட ஞானாம்பாள் அரசியானதும் என விவரிக்கப்பட்டுள்ள கதை, ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் ஆர்வமுடைய இந்திய வாசகர்களைத் திருப்தி செய்வதற்காக எழுதப்பட்டுள்ளது என்கிறார். பிள்ளை, தன்னுடைய நாவலின் வாசகர்கள் யார் என்ற புரிதலுடன்தான் கதையைச் சொல்லத் தொடங்கியுள்ளார்.

நாவல் என்ற புதிய வடிவில் கதை சொல்ல முயன்ற பிள்ளைக்குப் பருண்மையான அரசியல் நோக்கம் இருக்கிறது. பிள்ளை, நாவல் எழுதியதற்கான தனது நோக்கத்தை ஞானாம்பாள் பாத்திரம் மூலம் குறிப்பிட்டுள்ளார்: “இங்கிலீஷ், பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசனகாவியங்கள் இல்லாமலிருப்பது, பெருங் குறைவென்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அந்தக் குறைவைப் பரிகரிப்பதற்காகத்தான் எல்லாரும் ராஜபாஷைகளுந் தமிழுங் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

ராஜபாஷைகளும் சுதேச பாஷைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசனகாவியங்களை எழுதக் கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக் கூடுமா? வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியமல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசனகாவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுயபாஷைகளில் வசனகாவியங்கள் இல்லாமலிருக்கிறவரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.” நாவல் இலக்கிய வடிவத்தை வசன காவியம் என்று குறிப்பிடுவதிலிருந்து, உரைநடைப் படைப்பு, செய்யுள் மரபின் தொடர்ச்சி என்ற பிள்ளையின் கருத்து புலப்படுகிறது. இந்திய நாட்டின் நாகரிகமும், நற்பாங்கும் வசன காவியத்தின் அடிப்படையிலானவை என்று மேலைநாடுகளுடன் ஒப்பீட்டுநிலையில் ஞானாம்பாள் சொல்வது, நாவல் இலக்கிய வடிவத்தின் தேவையையும், முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. வெறுமனே கதை சொல்வது மட்டும் பிள்ளையின் நோக்கமன்று; கதையின் வழியாகத் தமிழர் வாழ்க்கை குறித்த விசாரணையையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

நாவலின் தொடக்க வரிகள், கதையாடல் நிகழ்ந்த காலத்தைக் கண்டறிந்திட உதவுகின்றன. ஒருவகையில் உண்மையில் நிகழ்ந்த சம்பவம் என்ற புரிதலை வாசிப்பில் உருவாக்குவது நாவலாசிரியரின் நோக்கமாக இருக்கிறது. “இந்தத் தேசம் இங்கிலீஷ் துரைத்தனத்தார் சுவாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு, சத்தியபுரி என்னும் ஊரிலே, தொண்டை மண்டல முதலிமார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார், இந்தத் தேசத்தை ஆண்ட நவாபுகளிடத்தில் திவான் உத்தியோகஞ் செய்து, அளவற்ற ஆஸ்திகளையும், பூஸ்திகளையும் சம்பாதித்தார்.” கதைசொல்லியின் பாட்டனார் ஏகாம்பர முதலியார், ஆற்காடு நவாபின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவர். மூன்று தலைமுறையினர் வாழ்க்கைக் கதைகளால் சொல்லப்பட்டிருக்கிற நாவல், நவாபுகளின் காலத்தில் தொடங்குகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நவாபுகளின் ஆட்சியின்போது, பிரிட்டிஷாரின் அதிகாரம் மெல்ல வலுவடைந்து கொண்டிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் தெருவில் குதிரையில் பயணித்த இஸ்லாமியன் கீழே விழுந்து, மயக்கமடைந்தான். அங்கிருந்தவர்கள், “அவன் யாரோ பக்கிரி, அவனைத் தொட்டால் ஜாதிப் பிரஷ்டத்துவம் உண்டாகும்” என்று சொல்லிக்கொண்டு அப்பால் போய் விட்டார்கள். உடல் நலமற்றிருக்கிற இஸ்லாமியனைத் தொட்டால் சாதியிலிருந்து விலக்கப்படும் நிலை என்பது வைதிக சநாதனத்தின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கதைசொல்லியின் பாட்டனார், தொண்டை மண்டல முதலியார் சாதியைச் சார்ந்தவர் எனினும் சாதிய விலக்கைப் பொருட்படுத்தாமல் பக்கிரிக்கு உதவினார்.

நாட்டையாண்ட நவாப்தான் பக்கிரியாகக் குதிரையில் வந்தவர். அதனால் ஏகாம்பர முதலியார், நாட்டின் திவானாக நியமிக்கப்பட்டார். ஆட்சியின் முக்கியப் பொறுப்பான திவானாக ஒருவர் நியமிக்கப்படுவதற்குக் கல்வி, நிர்வாகத்திறன், அந்தஸ்து போன்றவை தேவை இல்லை என்பது திவான் நியமனத்தில் இருந்து தெரிகிறது. அதிகாரத்தில் இருக்கிற நவாப் ஏன் ஒற்றையாகக் குதிரையில் வந்தார் என்ற கேள்விக்குக் கதையில் இடமில்லை. சரி, போகட்டும்.

நாட்டார் கதைகளில் ஒருவருக்குத் திடீரென அதிர்ஷ்டம் எப்படியாவது வரும். அந்த மரபில் கதைசொல்லியின் தாத்தாவான ஏகாம்பர முதலிக்குத் திவான் பதவி கிடைத்திருக்கிறது. அப்புறம் என்ன? அவருக்கு ஏகப்பட்ட சொத்தும் பொருளும் குவிந்தன. நாவலின் தொடக்கம் கட்டுக்கதையாக விரிந்தாலும், வைதிக சமயத்திற்கு எதிரான சமூகச் சூழல், பதிவாகியுள்ளது.

வேதநாயகம் பிள்ளையின் பெற்றோர் கிறிஸ்தவ சமயத்தினர். கிறிஸ்தவப் பின்புலத்தில் வளர்ந்து, கல்வி பயின்ற பிள்ளை, மாயவரத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணியாற்றியபோது, 1873 ஆம் ஆண்டில் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி ஆகிய செய்யுள் நூல்களைக் கிறிஸ்துவைத் துதித்தும், கிறிஸ்துவ வரலாற்றைப் போற்றியும் எழுதியுள்ளார். ஆங்கிலேயரின் காலனிய ஆட்சி குறித்துப் பிள்ளைக்கு உடன்பாடான மனநிலைதான் இருந்தது.

பிள்ளை, ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கத்தை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ, கண்டனம் செய்யவோ பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில் எந்தவொரு இடத்திலும் முயலவில்லை. கிறிஸ்தவ சமய நெறிகள், விவிலிய வாசகங்கள் போன்றவை நாவலில் இடம் பெற்றுள்ளன. அதேவேளையில் வைதிக சமயத்திற்கு எதிரான கருத்துகளைப் பாத்திரங்களின் மூலம் நாவலில் பிள்ளை பதிவாக்கியுள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியில் மநு தருமத்தின் அடிப்படை­யிலான வைதிக சநாதன தருமம் விமர்சனத்திற்குள்ளானது; இதுவரை சமூக அடுக்கின் உச்சியில் வசதியாக இருந்த பார்ப்பனர்களின் நிலை கேள்விக்குள்ளானது. குறிப்பாகப் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பித்த வருணாசிரமத்தை எதிர்த்திடும் போக்கு உருவாகிப் பரவலானது.

தமிழகத்தில் சாதிய மேல் ஙீ கீழ் அமைப்பில் இருந்த பார்ப்பனர், பிள்ளைமார், முதலியார் போன்ற உயர் சாதியினருக்கு இடையில் நிலவிய சமூக அடையாளத்திற்கான முரண்பாடுகள் கூர்மையடைந்தன. சமூக அமைப்பில் பார்ப்பனர் வகித்த உயரிய இடத்தைக் கைப்பற்றிட பிள்ளைமார் போன்ற உயர்சாதியினர் முயன்றனர். பிள்ளைமார் ஙீ பார்ப்பனர் எதிர்கொண்ட அரசியல் அதிகாரப் போட்டி, நாவலின் கதையாடலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

நாவலின் முதல் பத்து இயல்களில் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி குறித்த பிரசங்கம் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டுள்ளது. பிள்ளைக்குக் கல்வியின் மீதான அக்கறை காரணமாக கதைமாந்தர்கள், கல்வி கற்றல் பற்றிய விவரிப்பு, பத்து இயல்களில் இடம் பெற்றுள்ளன. ஏழு வயதுச் சிறுவனான பிரதாப முதலியிடம் பள்ளிக்கூடத்திற்குப் போக விருப்பமா? என அவனுடைய தந்தையாரான கனகாசல முதலியார் கேட்பது, வேடிக்கையாக இருக்கிறது.

அப்போது அவன், “ஐயா, நானும் படிக்க வேண்டுமா? எனக்கிருக்கிற சுயபுத்தி போதாதா? ஏழைகள் ஜீவனஞ்செய்து பிழைக்க வேண்டியதற்காக அவர்களுக்குக் கல்வி அவசியந்தான்! நான் படிக்க வேண்டிய அவசியமென்ன? ஏதாவது வாசிக்க வேண்டியிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டி­யிருந்தால் எழுதவும், நமக்குக் காரியஸ்தர்கள் இல்லையா? கணக்கர்களில்லையா?” என்றான். அவனுடைய பேச்சைக் கேட்ட பாட்டி உள்ளிட்ட பலரும் பாராட்டுகின்றனர்.

ஆனால், அவனுடைய அம்மா சுந்தரத்தண்ணியின் நீண்ட அறிவுரையைக் கேட்டு, வீட்டில் ஆசிரியரிடம் பாடம் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதாப முதலியின் சேட்டைகளைப் பொறுக்க முடியாமல், பன்னிரண்டு ஆசிரியர்கள் விலகிப்போய் விட்டனர். அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் அவலநிலைக்கு எடுத்துக்காட்டாகப் பிரதாப முதலியின் கல்வி கற்றல் சூழல் அமைந்திருந்தது. முதலியின் உறவுக்காரச் சிறுமியான ஞானாம்பாள் கல்வியில் சிறந்து விளங்கினாள்.

அவளுடைய கல்வியறிவைக் கண்டு பிரதாப முதலி வருத்தப்பட்டபோது, தேறுதலாகச் சொன்னாள்: “ஸ்தி­ரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களை வெல்ல மாட்டார்கள்; ஸ்திரீகள் சொற்ப காலத்தில் வளர்ந்து, புஷ்பித்து, சீக்கிரத்தில் கெட்டுப்போகிற செடிகளுக்குச் சமானமாயிருக்கிறார்கள்...” பெண்களைக் கல்வி கற்றவர்களாகவும், பொது விஷயத்தில் அக்கறை மிக்கவர்களாகவும் சித்திரித்திருக்கிற கதையாடலின் மையப் போக்கில், ஞானாம்பாள் பேச்சை எப்படிப் பொருத்துவது என்ற கேள்வி தோன்றுகிறது. கல்வி கற்றலில் பின்தங்கியிருந்த முதலிக்கு ஏற்பட்டிருந்த தாழ்வு மனநிலையைப் போக்குவதற்காக ஞானாம்பாள், பெண்களை மட்டமாகச் சொல்லியிருக்க வாய்ப்புண்டு.

சோதிடம் பொய், சாஸ்திரம் பொய் என்று அழுத்தமாகப் பிள்ளையின் கருத்துகள் நாவலில் பதிவாகியுள்ளன. பிரதாப முதலியும், ஞானாம்பாளும் வெளித்திண்ணையில் அமர்ந்து பாடம் படிக்கையில், அங்கு வந்த ஜோதிட சாஸ்திரியார், தன்னைப் பற்றி வீண் பெருமையாகப் பேசியதுடன், கரடி, புலி போன்ற கொடிய விலங்குகளின் வாய்களை மந்திரத்தால் கட்டி விடுவேன் என்று தற்பெருமையாகப் பேசினார்.

அப்பொழுது அருகில் கட்டியிருந்த வேட்டை நாய், சங்கிலியை அறுத்துக்கொண்டு, சாஸ்திரியின்மீது பாய்ந்து கடித்தது. நாயிடமிருந்து சாஸ்திரியைக் காப்பாற்றிய ஆசிரியர், மந்திரத்தால் நாயின் வாயைக் கட்ட முடியாதா? என்றார். அதற்கு சாஸ்திரியார் சொல்கிறார்: “எங்கள் வித்தையெல்லாம் சுத்தப்பொய்; உலகத்தில் உதர நிமித்தமாக பலபேர் பல வேஷங்கள் பூண்டுகொண்டு ஜீவிக்கிறார்கள்; அப்படியே நானும் இந்த வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறேன்... எனக்கு நாலு புத்திரிகள்; சாஸ்திர சகுனங்கள் பார்த்து, சாதகங்கள் பார்த்து, பொருத்த நிமித்தங்கள் பார்த்து, அவர்களைக் கல்யாணஞ் செய்து கொடுத்தேன். அவர்கள் நாலு பேரும் அமங்கலியாகி விட்டார்கள்...” சாஸ்திரியின் வாக்குமூலத்தின் வழியாகச் சாதகம், சோதிடம் என்ற பெயரில் எதிர்காலப் பலன்களைச் சொல்கிற செயல் பொய்யானது என்று பிள்ளை நிறுவிட முயலுகிறார்.

ஆசிரியர், சோதிடம் பொய்யென்று நிரூபிக்கும் வகையில், எதிர்காலம் குறித்த தீர்க்க தரிசனத்தைச் சாஸ்திரி போன்ற சர்வ மூடர்கள், கோணங்கிக்காரர்கள், குறத்திகள் போன்றவர்களுக்குச் சுவாமி கொடுத்திருப்பாரா? என்கிறார். மேலும் அவர், அசேதன ஜந்துக்களாகிய பல்லிகளுக்கும், பட்சிகளுக்கும் எப்படி எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியும் என்று கேள்வியை முன்வைக்கிறார். தஞ்சை நகரில் வசித்த சுப்பையனுக்கு இரு புதல்வர்கள். மூத்தவனின் ஜாதகபலன் தகப்பனுக்கு ஆகாதென்று குறிக்கப்பட்டதை அறிந்த தகப்பன் அவனைக் குழந்தைப் பருவத்தில் இருந்து புறக்கணிக்கிறான்.

ஆனால் அவன் நெருப்பில் சிக்கியபோது, மூத்தவன்தான் காப்பாற்றினான் என்ற கதையின் மூலம் ஜாதகபலன் போலியானதென்று நாவல் சித்திரிக்கிறது. பிள்ளை, ஆங்கிலேயரின் தொடர்பினால் அன்றைக்கு நிலவிய மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும்வகையில் பல சம்பவங்களை நாவலில் எழுதியுள்ளார். சாஸ்திர சம்பிரதாயம் என்ற பெயரில் அறியாமையில் மூழ்கி­யிருந்த தமிழ்ச் சமூகத்தில் நாவல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பிள்ளையின் நோக்கமாகும்.

பிரதாப முதலியாரின் வீட்டுக்குப் பின்புறம் பல்லாண்டுகளாக மனிதர்கள் புழங்கிடாத மண்டபமும், அதைச் சுற்றிலும் அடர்த்தியான காடும் இருந்தன. அந்த மண்டபத்தில் தற்கொலை செய்துகொண்டவன், பிசாசு வடிவில் இருப்பதாகவும், விநோதமான ஒலிகள் கேட்பதாகவும் நிலவிய நம்பிக்கை காரணமாகப் பகலில்கூட அங்கே செல்வதற்குப் பயந்தனர்.

மனப் பேய் தவிர வேறு பேய் இல்லை என்று சொன்ன ஆசிரியர், பிரதாப முதலியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு காட்டுக்குள் போனார். பேய் என்று எதுவும் இல்லை என்று பிரதாப முதலி சிறுவனாக இருக்கும்போதிலே அறிந்துகொண்டான். பேய், பிசாசு, முனி என்று தீய ஆவிகளுக்குப் பயந்து, பெரும்பாலானோர் நடுங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், அவையெல்லாம் இல்லையென்று ஆசிரியர் பாத்திரம் மூலம் கதைத்த பிள்ளை, உண்மை­யிலேயே சமூக சீர்திருத்தவாதிதான்.

பிரதாப முதலிக்கும், ஞானாம்பாளுக்கும் போதித்த ஆசிரியர், இதுவரை கற்றது புத்தக அறிவு. பாடசாலையை விட்டபிறகுதான் படிப்பு ஆரம்பமாகிறது என்று கூறிய அறிவுரை, நடைமுறை வாழ்க்கைக்குப் பொருத்தமானது. மேலும் அவர், “கல்வியின் பிரயோஜனம் எல்லாங்கூடி கடவுளை அறிவதுதான்... கல்விமானுக்குத் தெய்வபக்தியே சிறந்த பூஷணமாயிருக்கின்றது... அவருடைய கிருபை இல்லாவிட்டால் ஒரு நிமிஷம் நாம் சீவிக்கக்கூடுமா? அவர் நம்மை அசைக்காமல் அசையக்கூடுமா?...” என நெடிய பிரசங்கம் செய்தார். பொருளாதாரரீதியில் வசதியானவர்களின் தயவை எதிர்பார்த்திருக்கிற ஆசிரியர், கடவுள் பற்றிக் கூறிய சேதிகள், வேதாகமத்தின் சொற்கள்.

சென்னை நகரில் தர்ம சத்திரத்தில் உணவு சமைத்து விற்று வாழ்ந்த ஏழைப் பார்ப்பனரான சுப்பையனின் மகனான அனந்தையன் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தைக் கற்றதனால் தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக்கொண்டான். அற்பப் படிப்பாளியான அனந்தையனின் இழிவான செயல்கள் குறித்து தேவராஜப் பிள்ளை சொன்ன கதை, கவனத்திற்குரியது.

அனந்தையன் எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசுதல், பல் விளக்காமல் இருத்தல், குளிக்காமல் இருத்தல், சுருட்டுக் குடித்தல், வாயில் புகையிலையைத் திணித்தல், கள், சாராயம் குடித்தல் போன்றவற்றை விருப்பத்துடன் செய்தான். ஆங்கிலேயரிடம் வேலை செய்த வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், வசதியற்ற சட்டைக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியர்களுடன் அனந்தையன் எப்பொழுதும் சேர்ந்திருந்தான்.

லெக்கி எல், ஸ்டீபன், பெயின், டார்வின், கம்டிஎச், மில், ஹெர்பர்ட், ஸ்பென்ஸர், ஹக்ஸ்லி, ஹ்யூம், காலின்ஸ், டிண்டால், வால்டேர் போன்ற வேத விரோதிகளுடைய கிரந்தங்களை அவன் படித்ததினால் தெய்வம் இல்லை; வேதம் இல்லை; பாவபுண்ணியங்கள் இல்லை; நரகம் மோட்சம் இல்லை; உலக சுகமே சுகமென்கிற சித்தாந்தம் உள்ளவனானான்.” அவனுக்குத் தாலுகா முன்சீப் பணி கிடைத்தவுடன் தனது பெற்றோரையும் குடும்பத்தினரையும் புறக்கணித்தான். இறுதியில் வேலையும் போய், சொத்தும் இழந்து, மனைவியும் பிரிந்துபோன பிறகு உடல் நலக்குறைவினால் துயரமடைந்தான். ஆங்கில மொழியைக் கற்றதனால் எல்லாம் தெரிந்ததுபோல நடக்கிறவனின் அற்பச் செயல்களை விளக்குவதற்குப் பார்ப்பனர் சாதியைச் சார்ந்த அனந்தையனின் கதை சொல்லப்பட்டிருப்பதில் நுண்ணரசியல் உள்ளது.

ஆங்கிலேயரின் விசுவாசியாகி அவர்களைப் போற்றி, உயர் பதவிகளைப் பெற்றுச் சௌகரியமான வாழ்க்கை வாழ்வதில் உயர் சாதியினரான பிள்ளை, பார்ப்பனர் இடையில் நிலவிய மோதுதல்தான், அனந்தையன் கதையின் அடிப்படை என்றார். ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியின்மீது நம்பிக்கை வைத்திருந்த பிள்ளை, ஆங்கிலேயரைப் போலச் செயல்பட்ட இந்தியர்கள் குறித்து எதிர் மனநிலையுடனும், கண்டனத்துடனும் இருந்தார்.

வால்டேர், டார்வின் போன்றோர் எழுதிய காத்திரமான புத்தகங்களை வேதத்திற்கு எதிரானவை என்றும், அவற்றை வாசித்ததனால் நாத்திகனாக மரிய அனந்தையன் கேடான செயல்களைச் செய்தான் என்றும் கதைக்கிற பிள்ளையின் குரலில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் பொதிந்துள்ளது.

வறுமையில் வாடிய சுப்பையனின் மகனான அனந்தையன், அந்தச் சூழலிலிருந்து மீள்வதற்காகக் கற்ற ஆங்கிலக் கல்வியும், வாசித்த புத்தகங்களும் அவனைச் சீரழித்து விட்டன என்ற கிளைக்கதையைத் தேவராஜப் பிள்ளை சொல்வது உள் நோக்கமுடையது. ஆங்கிலக் கல்வி கற்றல், ஆங்கிலேயர் போல நடத்தல் குறித்த எதிர்மறையான கருத்துகளைப் பாமரரிடம் உருவாக்கிடுவதற்காக அனந்தையன் கதை பயன்பட்டுள்ளது.

தையற்காரனிடமிருந்து ஒரு ரூபாய் திருடியதற்காக ஒரு காதை இழந்த திருடன், விசாரணைக்காகத் தேவராஜப்பிள்ளை முன்னர் நிறுத்தப்பட்டான். அப்பொழுது குடும்பத்தினரின் பட்டினி, வறுமை காரணமாக வேறு வழியில்லாமல் திருடியதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட திருடன் பேசிய பேச்சு, அன்றைய சமூகம் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றம். ஒரு திருடன் புத்திசாலித்தனமாகச் சமூகத்தை விமர்சித்து இப்படியெல்லாம் விரிவாகப் பேசுவது, நாட்டார் கதைசொல்லல் மரபில் சாதாரணம். அந்தத் திருடன் சொன்ன அன்றைய சமூகத்தில் நடைபெறும் திருட்டுகள், கபடங்களில் சில:

பிறரிடம் பணத்தை லட்சக்கணக்கில் கடன் வாங்கிக்கொண்டு, திருப்பித் தராமல் ஏமாற்றுகிறவர்கள்.

அடுத்த நாட்டின் மீது படையெடுத்துக் கொலை செய்வதுடன், பொருட்களைக் கொள்ளையடிக்கிற மன்னர்கள்.

நீதிபதிகளுக்கு அரசாங்கம் போதுமான சம்பளம் கொடுத்தபோதிலும், வாதியிடமும் பிரதிவாதியிடமும் லஞ்சம் வாங்குதல்.

சில அதிகாரிகள் திருடர்களின் கொள்ளைப் பணத்தில் இருந்து பெரும் தொகையை லஞ்சமாகப் பெறுதல். சில அதிகாரிகள் அவர்களுடைய வீட்டில் அடிக்கடி நடத்துகிற கலியாணம், ருது சாந்தி, உபநயனம், பிதுர் சிரார்த்தம் மூலம் பெரிய அளவில் பணத்தைத் திரட்டுதல்.

துணி வியாபாரிகளின் ஏமாற்று வேலை, நவரத்தினக் கல் வியாபாரிகள் துண்டைப் போட்டுப் பேசும் பரிபாஷைகள், தங்க வேலை செய்கிற தட்டார்களின் களவாணித்தனம், கோவில் சொத்தைத் திருடுகிற அலுவலர்கள்.

பிள்ளை, திருடன் மூலம் அன்றைய சமூகத்தில் நிலவிய கேடுகளையும், அநியாயங்களையும் விமர்சித்துள்ளார். உபநயனம் என்ற பூணூல் போடுகிற வைதிகச் சடங்கு மூலம் பணத்தைத் தவறான வழிகளில் சம்பாதிக்கிற பார்ப்பன அதிகாரிகளின் கேடான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளார். ருது சாந்தி என்பது முதல் இரவு.

அது, எப்படி அடிக்கடி நிகழும்? அதிகாரிகள் முதல் இரவைச் சொல்லி பணம் வசூலிப்பது நிகழ்ந்ததா? வேடிக்கையாக இருக்கிறது. பார்ப்பன அதிகாரிகள் மீதான பிள்ளையின் வெறுப்பு, ருது சாந்தி என்று எழுதிட வைத்துள்ளது. சரி, போகட்டும். வைதிக சநாதன நெறி, வருணாசிரமத் தருமம் என்றெல்லாம் போதிக்கிற பார்ப்பனர் வேதம் ஓதுதல், யாகத்தீயை வளர்த்தால்தான் செய்ய வேண்டும்.

ஆனால், பார்ப்பனர்கள் ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் ஆங்கிலம் பயின்று, அரசின் அதிகாரிகளாகி, எல்லோரையும் சுரண்டுவதற்குச் சடங்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். யார் ஆட்சியில் இருந்தாலும் அரசின் ஆதரவுடன் செயல்படுகிற பார்ப்பனர்களின் தந்திரமான செயல்பாடுகளைத் திருடன் மூலம் நாவலில் பதிவாக்கியுள்ளார், பிள்ளை.

அந்த நிலைமை இன்றளவும் வெவ்வேறு வழிகளில் தொடர்கிறது. சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்காக ஒடுக்கப்பட்ட சாதியினர் பல்லாண்டுகள் போராடிச் சில சலுகைகள் பெற்றிருக்கின்றனர். ஆனால் ஆண்டுக்குப் பத்து லட்சம் வருமானமுடைய பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை எவ்விதமான போராட்டமும் நடைபெறாமல், மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு வழங்கியிருக்கிறது. அதுதான் வருணாசிரமத்தின் ஆதிக்கம். சரி, இருக்கட்டும்.

நாவலின் களம் பிரதாப முதலியின் பூர்வீகக் கதையில் தொடங்கி, பிறப்பு, வளர்ப்பு, கல்வி கற்றல், திருமணம், குடும்ப வாழ்க்கை என விரிந்துள்ளது. முதலியின் அன்னை சுந்தரத்தண்ணியும், மனைவி ஞானாம்பாளும் நாவலின் கதையாடலில் பிரச்சினையும், சிக்கலும் உருவாகும்போது, அவற்றைத் தீர்க்கிற வல்லமை பொருந்தியவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலிக்கும் திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

அப்பொழுது சம்பந்தி சண்டை என்ற விஷயம் அரங்கேறியது. வீணாகப் பேசிய சம்பந்திகள் ஒருவருக்கொருவர் பகையாகினர். நிச்சயதார்த்தம் நின்று விட்டது. அப்புறம் கல்யாணம் தொடர்பாகப் பிள்ளை விவரிக்கிற சம்பவங்கள், முழுக்கப் புனைவாக உள்ளன. பிரதாப முதலி- ஞானாம்பாள் திருமணம் முடிந்த பின்னரும் சிக்கல் ஏற்படுகிறது. கர்ப்பமடைந்துள்ள ஞானாம்பாளுக்கு முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்குமென்று ஜாதகத்தில் இருக்கிறது.

அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்க வேண்டுமென்று அவளின் தந்தை சம்பந்த முதலியார் வலியுறுத்துகிறார். மீண்டும் சம்பந்திகளிடையில் சண்டை. இதனால் இருவரும் அவரவர் தந்தையாரின் வீட்டில் தங்குகின்றனர். இளம் வயதில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மீது பெற்றோர் செலுத்தும் ஆதிக்கமும், அதிகாரமும் அன்றைய காலகட்டத்தில் சாதாரண விஷயமாக இருந்திருக்கிறது. வயதானவர்களின் அடாவடி மனநிலைக்குக் குழந்தைகளின் கல்யாணமும், குடும்ப வாழ்க்கையும் இலக்காகியுள்ளது.

அற்பப் படிப்பினால் ஆங்கிலேயரைப் போல வாழ முயன்ற அனந்தையனின் அரசு வேலை பறிக்கப்பட்டதற்குக் காரணம் அவன் தனது குடும்பத்தைப் பராமரிக்காமல் இருந்ததுதான் என்று கதைத்த தேவராஜப்பிள்ளை, தன் மகனுக்குத் திருமணம் செய்ய கலெக்டர், ரிவின்யூ போர்டு அலுவலர்களுக்கு பல மனுக்கள் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறார்.

பாளைப்பட்டுக் குடும்பத்தினர் தன்னிச்சையாகத் திருமணம் செய்துகொள்வதற்குச் சுதந்திரமற்ற நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கம் வைத்திருப்பதைக் கதைசொல்லி கண்டிக்கவில்லை. பிள்ளையும் சம்பிரதாயம் என்ற சொல்லில் பிரிட்டிஷாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறார். சிரேஸ்தார் என்ற அதிகாரியின் சதிக்கு உடந்தையாக கலெக்டரும், இரு விசாரணை அலுவலர்களும் செயல்பட்டு தேவராஜப்பிள்ளையும் அவருக்கு ஆதரவாகச் சாட்சி சொன்ன இரு நூறு சாட்சிகளையும் தீவாந்திரத் தண்டனைக்குட்படுத்துவதுடன், சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.

அதைக் கேட்டுப் பெண்கள் அழுது புலம்பினர். சுந்தரத்தண்ணி, சென்னை நகருக்கு ஐநூறு வாகனங்களில் பெண்களுடன் சென்று கவர்னரைச் சந்தித்துப் பிரச்சினையை முன்வைத்தார். தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆவேசத்துடன் சென்ற எழுச்சியான முதல் ஊர்வலம் அதுதான். மரி வரும் தமிழக அரசியலில் பெண்களின் தன்னெழுச்சியான பயணமும், கவர்னரிடம் துணிச்சலாக நியாயத்தை எடுத்துரைத்த சம்பவமும் பிள்ளை காண விரும்பிய புனைவுக் காட்சிகள்.

பெண்களின் தகப்பனுக்குச் சமமானவராகக் கருதப்பட்ட ஆங்கிலேயரான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவர்னர், பிரச்சினையை நியாயமாகத் தீர்த்து வைத்தார். அப்பொழுது அவர், ஸ்திரீகளும் குழந்தைகளும் நிரம்பிய அவையில் சுந்தரத்தண்ணி எழுந்து நின்றுகொண்டு நியாய வாதம் செய்த காட்சியைப் படமாக வரையச் சொல்லியிருக்கிறேன் என்று பாராட்டினார். ஒருக்கால் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தால், தமிழகத்தின் முதல் பெண்ணிய ஓவியமாக இருந்திருக்கும்.

கனகசபை கல்யாண விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்தபோது, அந்த நேரத்தில் இன்னும் மூன்று திருமணங்கள் நடக்கவிருந்தன என்று கதைசொல்லி சொல்கிறார். திருமணம், கணவன் - மனைவி பிரிவு என்று கதையை நீட்டித்துச் செல்வதில் பிள்ளைக்கு அதிக ஆர்வமிருக்கிறது. கனகசபை உள்ளிட்ட நால்வரின் திருமணம் இரவில் நடைபெற்றபோது, ஒரு மாப்பிள்ளை தாலி கட்டவில்லை என்ற விஷயம், பிராமணப் புரோகிதனுக்கு வீட்டுக்குப் போனதும் தெரிகிறது.

கல்யாண வீட்டுக்குத் திரும்பிய புரோகிதன், பெண்கள் தூங்குகிற அறைக்குள் நுழைந்து ஒவ்வொரு பெண்ணின் கழுத்தையும் தடவி, தாலி இல்லாத ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டி விட்டான். அந்தப் பெண் விதவை. பிள்ளை, இப்படிப்பட்ட விநோதமான சம்பவத்தைப் பகடியாக விவரித்திருப்பது, வெறுமனே நகைச்சுவைக்காக மட்டும் இல்லை.

வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது. புரோகிதனின் கை, நல்லவேளை பெண்களின் கழுத்துக்குக் கீழே இறங்கவும் இல்லை; பெண்களும் தூக்கத்தில் இருந்து விழிக்கவும் இல்லை. நாவலின் கதையாடல், திருமணம் தடைபடுவதும் பின்னர் நீங்குவதும் இன்பமும், துன்பமும் என விரிந்திருக்கிறது. ஒருவகையில் கல்யாணத்தை மையமாகக்கொண்டு நாவலின் கதைப் பின்னல் சொல்லப்பட்டிருக்கிறது.

பிரதாப முதலி, காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது, காடு, மலைகள் சூழ்ந்த விக்கிரமபுரி என்ற நாட்டுக்கு வழி தவறிச் சென்றான். அந்த நாட்டில் அவன் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொண்டு துயரப்பட்டான். அவனைத் தேடிக் காட்டுக்குச் சென்ற ஆண் வேடமிட்ட ஞானாம்பாளின் கழுத்தில் பட்டத்து யானை மாலையைப் போட, அவள் விக்கிரமபுரியின் மன்னனாகி ஆட்சி செய்தாள்.

முதலியும் ஞானாம்பாளும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். முழுக்க நாட்டார் மரபில் சொல்லப்பட்டுள்ள விக்கிரமபுரி கிளைக்கதையில் தர்க்கம் எதுவுமில்லை. பெண், ஆண் உடையில் மாறுவேடத்தில் வந்தால், ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாத காட்சிகள், இன்றைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் சாதாரணமாக இடம் பெறுகின்றன. ஞானாம்பாள் பாத்திரம் ஆண் வேடமிட்டு, அரசனாகி அரசாண்ட சாத்தியப்பாடு குறித்துப் பேசிட சொற்கள் எதுவுமில்லை.

அவ்வளவுதான். பிள்ளை, விக்கிரமபுரியின் கல்வித்துறை, நீதித்துறை பற்றிய பேச்சுக்களின்போது, தாய் மொழியான தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை நுணுக்கமாக விவரித்துள்ளார். முழுக்கப் புனைவெனினும் நாவல் என்பது சமகாலத்தின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டுமென்ற கருத்து, விக்கிரமபுரி கிளைக் கதையில் இடம் பெற்றுள்ளது.

ஆங்கிலேயரின் ஆட்சியின்போது நிறுவப்பட்ட தமிழ் நீதிமன்றங்களில் சில வழக்கறிஞர்கள் தமிழில் வாதிடாமல், ஆங்கிலத்தில் வாதிடும் சூழல் குறித்து ஞானாம்பாள், வக்கீல்களிடம் பேசிய பேச்சு, இன்றையச் சூழலுக்கும் பொருத்தமாக இருக்கிறது. அவளுடைய உரை, நீதிமன்றத்தில் தமிழில் வாதிட வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. “தமிழ் நியாயாபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் இந்தத் தமிழ்நாட்டையும், தமிழ் பாஷையையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப்படுத்துகிறார்.” நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பிள்ளை, தான் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், மக்கள் மொழியில் வழக்காட வேண்டியதன் தேவையைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷாரின் ஆட்சியதிகாரத்தில் ஆங்கில மொழி, உயரிய நிலையில் போற்றப்பட்டது. தமிழ் மொழி, இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுப் புறக்கணிப்பிற்குள்ளாகியிருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்குச் சார்பானவரான பிள்ளை, தமிழ் மொழி ஒதுக்கப்படுகிற சூழலுக்கு எதிரான கருத்துகளை அழுத்தமாக நாவலில் பதிவாக்கியுள்ளார்.

தமிழ் மொழியைக் கற்க வேண்டியதன் அவசியத்தை ஞானாம்பாள் விரிவாகப் பேசியிருப்பது, மொழி அரசியல் வெளிப்பாடு. ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற இராஜ பாஷைகளைக் கற்கிறவர் எண்ணிக்கை பெருகுவதும், தமிழ் போன்ற சுதேச பாஷையைக் கற்பதற்கான அரசின் ஆதரவு குறைவதும் என்ற சூழலின் காரணமாக ஏற்பட்டிருக்கிற சீரழிந்த அன்றையச் சூழல், நாவலில் சுட்டப்பட்டுள்ளது.

தமிழ் மொழியைக் கைவிட்டு, பிற மொழியைக் கற்றலை உன்னதமானதாகக் கருதுகிற மனநிலை, அந்தக் காலத்திலே இருந்ததை அறிய முடிகிறது. “தமிழ்ப் பாஷையைப் பேசுகிறது வேப்பிலைக் கஷாயங் குடிப்பது போலிருக்கும். தமிழ் வார்த்தைகளைக் கேட்பதும் அவர்களுக்குக் கர்ணகடூரமாகயிருக்கும். அவர்கள் தமிழ்ப் பாஷையைப் பேசினாலும் முக்காற் பக்கு இங்கிலீஷ¨ம் காற்பங்கு தமிழுமாகக் கலந்து பேசுவார்கள்.”

பொதுப் புத்தியில் தமிழர்கள் ஆங்கில மொழிக்குத் தந்த முக்கியத்துவம் நுண்ணரசியலுடன் தொடர்புடையது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், உடலால் இந்தியனாகவும், மனதினால் ஆங்கிலேயனாகவும் வாழ்கிற இந்தியர்களை உருவாக்கிட ஆங்கில மொழியைக் கையாண்டது. ஆங்கிலேய அரசு தொடர்பான அனைத்து விஷயங்களும் உன்னதமானவை என்ற கருத்து, காலனிய ஆட்சிக்குச் சார்பான உடல்களைத் தயாரிக்க உதவியது. இந்நிலையில் நாவலாசிரியரான பிள்ளை, தமிழ் பற்றிய பேச்சுகளை ஞானாம்பாள் கதைமாந்தர் மூலம் உருவாக்கிட முயன்றிருப்பது, குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியைப் படிக்காமல் புறக்கணிக்கிறவர்கள் குறித்து ஞானாம்பாள் சொன்ன கருத்துகள், மொழி அரசியலில் முக்கியமானவை. “தமிழ்ப் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர்ப் பாஷைகளைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால், சுய பாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம்.

பிரான்சு மட்டும் படிக்கிறவர்களை பாரீசுப் பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்கு... சமஸ்கிருதத்துக்கு... சொந்த ஊர் இல்லாதபடியால், அந்தப் பாஷைகளைப் படிக்கிறவர்களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்.” இன்றைக்கும் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல் பட்டம் பெறுகிற நிலைமை நிலவுகிறது.

தாய் மொழியான தமிழ் வழியாக உயர் கல்வி பயிலுவது, நடைமுறையில் இல்லை. தமிழ் பயன்பாட்டுக்குரிய மொழி அல்ல என்று கருதுகிற மனநிலை, மேல்தட்டுத் தமிழர்களிடம் பரவலாகிக் கொண்டிருக்கிறது. வசதியான தமிழர்களின் குழந்தைகள் ஆங்கிலத்தில் பயிலுவதும், பேசுவதும் எனச் சூழல் மரியுள்ளது.

அன்றைய காலகட்டத்தில் பிள்ளை, ஞானாம்பாள் பாத்திரம் மூலம் தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனக் குரல் கொடுத்திருப்பது புரட்சிகரமானது. தமிழ் நாட்டில் அரசினால் நடத்தப்படுகிற மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்த செலவில், மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பட்டம் பெற்று, மேலைநாடுகளுக்குப் போய் வேலையில் சேர்ந்து, அங்கேயே தங்கிவிடத் துடித்திடுவோர் எண்ணிக்கை பெருகிடும் இன்றையச் சூழலில், 1879இல் பிள்ளை, நாவலில் முன்வைத்த கருத்துகள் காத்திரமானவை.

நாவலில் பல்லக்கில் செல்லுதல், குதிரைச் சவாரி போன்றவை இடம் பெற்றுள்ளன. தாசில்தார், சிரேஸ்தார், கலெக்டர் போன்ற அதிகாரிகளுடன் கூடிய பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாக முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துப் பிள்ளைக்கு எப்பொழுதும் எதிர்மறையான கருத்துகள்தான். சுவர்க் கடிகாரத்தின் மணி ஓசை, கதை நிகழ்ந்திடும் காலத்தை விடியற்காலம் நான்கு மணி, இராத்திரி எட்டு மணி என நாவலாசிரியர் குறித்துள்ளார். பொதுவாக நாவலின் கதையாடல் விவரணை, சமகாலத்துடன் இயைந்திருக்கிறது.

நாவலின் நிறைவில் கதைசொல்லியான பிள்ளைக்குக் கதையை முடிக்க மனமில்லாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. கூத்துக் கலை நிகழ்த்து மரபில் இறுதியாக மங்களம் இசைக்கும்போது, பார்வையாளர்களையும் உள்ளடக்கிப் பேசுவது இயல்பு. அந்தவகையில் நாவலின் இறுதி வரிகள், வாசகர்களுடன் நேரடியாக உரையாடுகின்றன.

“இந்தச் சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும் இந்த நிமிசம் வரையில் ஒரு குறையும் இல்லாமல் சுகஜீவிகளாயிருக்கிறார்கள். அப்படியே இதை வாசிக்கிறவர்கள் எல்லாரும் வச்சிர சரீரிகளாய் நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள்.”

இந்தியக் கதையாடல் மரபில் படைப்பு என்பது முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் பதிவு. பிரதாப முதலியார் சரித்திரம் நாவலைப் புனைவு என்று நம்புவதும், நம்பாமல் இருப்பதும் வாசகர்களின் விருப்பம்.

பிரதாபமுதலியார் சரித்திரம்
(முதல் தமிழ் நாவல்)
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
வெளியீடு: நியூ செஞ்சுரி பூக் ஹவுஸ்
விலை: ரூ.150/-

-ந.முருகேசபாண்டியன்