சோவியத் இலக்கியத்தின் மரபணுவாக இருந்த - ருசிய எழுத்தாளர் மக்ஸிம் கோர்க்கியால் வளர்த்தெடுக்கப்பட்ட - சோஷலிஸ எதார்த்தவாதத்தைத் தமிழ் இலக்கியத்தில் பதியம்போட்ட முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர் தோழர் டி.செல்வராஜ். ‘மலரும் சருகும்’ நாவல்வழி தமிழ் இலக்கிய உலகத்தில் பரவலான அறிமுகத்தைப் பெற்ற டி.செல்வராஜ், நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள தென்கலம் என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதனை ஒட்டியுள்ள மாவடி கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14.1.1938 அன்று மகனாகப் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் மூதாதையர்கள், தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணிகளாக இருந்தனர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலைச் சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு தொடர்புகொண்டார்.

selvaraj award 600தோழர் ப.ஜீவானந்தத்திற்கு நெருக்கமாக இருந்த டி.செல்வராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யில் சில காலம் பணியாற்றினார். அந்த இதழில் அவரது முதல் சிறுகதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சாந்தி, சரஸ்வதி, தேசாபிமானி (இலங்கை), பிரசண்டவிகடன், நீதி, சிகரம், தாமரை, செம்மலர், தீபம் ஆகிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார். நோன்பு (1966) டி.செல்வராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். 1958-1964 காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் பெரும்பாலும் ‘தாமரை’ இதழில் வெளிவந்தவை. டி.செல்வராஜ் கதைகள் என்னும் இரண்டாவது தொகுப்பு (1994) கிறித்துவ இலக்கியச் சங்கம் வாயிலாக வெளிவந்தது. நிழல் யுத்தம் (1995) அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். டி.செல்வராஜ் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். “பாட்டாளி மக்களின், குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்” என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார் (1973).

ரகுநாதனைப் போன்றே கட்சி அரசியல் பின்புலத்தோடு இலக்கியத்திற்குள் நுழைந்தவர், டி.செல்வராஜ். ரகுநாதனின் கதைக்களமான நெல்லை வட்டாரப் பின்னணியும் தொழிலாளர் பிரச்சினைகள், வர்க்கப் போராட்டம், பெண் விடுதலை, சமூக மாற்றம் ஆகிய கருப்பொருள்களுமே செல்வராஜின் கதைகளில் இடம்பெற்றுள்ளன. முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நோன்பு’ என்னும் சிறுகதை ஆண்டாள் தொன்மத்தை மறுவாசிப்புச் செய்துள்ளது. அடித்தள மக்களுக்கு ஆதரவாக இருந்த கணிகையர் குலப்பெண்ணான ஆண்டாளை, ஸ்ரீவல்லவப் பாண்டியன் என்கிற அரசனின் ஆணைக்கு அடிபணிய மறுக்கும் வீரப்பெண்ணாகச் சித்திரித்துள்ளார். புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ (சீதை), ரகுநாதனின் ‘வென்றிலன் என்றபோதும்’ (திரௌபதி) ஆகிய கதைகளின் பாணியிலேயே இக்கதையை எழுதிப் பார்த்ததாக டி.செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பில் இடம்பெறும் ‘கிணறு’ என்ற கதை இயந்திரமயமாக்கலினால் சிறு விவசாயிகளும் இயற்கை வளங்களும் சுரண்டப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.

கிறித்தவ இலக்கியச் சங்க வெளியீடாக வந்திருக்கும் ‘டி.செல்வராஜ் சிறுகதைகள்’ என்கிற இரண்டாவது தொகுப்பில் இடம்பெறும் ‘மீன்குத்தகை’ கதை பண்ணை ஐயர் அனுபவித்து வந்த குத்தகைக் குளத்தில் சேரி மக்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைப் போராட்டத்தை ஐயர் சமூகத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் முன்னின்று நடத்துவதை விவரிக்கின்றது. ரகுநாதனின் ‘ஆனைத்தீ’ கதையின் பின்புலத்தை நினைவுபடுத்துகிற ‘சாதுமிரண்டால்’ கதையில் சுடலைமாடன் சாமியாடியான ‘சுப்பன் சாம்பான்’ பாரம்பரியமாக உழுதுவந்த நிலத்திலிருந்து அவனது முதலாளி மகன் சிகாமணியால் சூழ்ச்சி காரணமாக அப்புறப்படுத்தப்படுகிறபோது, பொங்கியெழுந்து சுடலைமாடன் சாமியாகவே உருப்பெற்று வேல்கம்பால் அவனைக் குத்தித் தூக்கியெறிந்து குடலை மாலையாகப் போட்டு ஆடுகிறான்.

‘கதையின் தொடக்கத்தில் துப்பாக்கி காட்டப்பட்டால் கதை முடிவதற்குள் துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும்’ என்கிற சிறுகதை இலக்கணத்திற்கேற்ப, இக்கதையின் தொடக்கத்தில் சுடலைமாடன் பீடத்தில் இருந்த வேல்கம்பு கதையின் இறுதியில் அநீதியின் அழிவிற்கு, விவசாயப் போராட்டப் புரட்சியின் எழுச்சிக்குக் காரணமாகிறது. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறையையும் கிராமியச் சுரண்டல் சமூக அமைப்பையும் ‘நெஞ்சே போல்வர்’ கதை விவரிக்கின்றது. புதுமைப்பித்தன் இழைத்த கதை அரங்கிற்குள் நின்றுதான் ரகுநாதனும், டி.செல்வராஜும் சமூக எழுச்சியான ஒரு கதை விளையாட்டை நிகழ்த்தியுள்ளனர். தமிழ்ச் சிறுகதையில் சோஷலிஸ நடப்பியலின் விளைச்சலுக்கு முன்னேர் பிடித்து உழுதவர்கள் இவ்விருவரும்தாம்.

‘‘இந்தியாவில் புத்திலக்கியங்கள், இன்று நடப்பிலுள்ள பட்டினி, வறுமை, சமூகத்தின் இழிநிலை, அரசியல், அடிமைத்தனம் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம். இவையெல்லாம் நம்மை அடங்கிப்போகிற, செயலற்றுப்போகிற, நியாயமற்ற நிலைக்குப் பிடித்துத் தள்ளுகின்றன. இவற்றை நாம் பிற்போக்கானவை என்று நிராகரிக்க வேண்டும். எது நம்மிடம் விமர்சன ஆற்றலை எழுப்புகிறதோ எது தருக்க அறிவின் ஒளியில் நிறுவனங்களையும் மரபு வழக்காறுகளையும் பரிசீலிக்கிறதோ, எது நாம் செயல்படுவதற்கும் நாம் ஒருங்கிணைப்பதற்கும் பெருமாறுதல்களைக் கொணர்வதற்கும் உதவுகிறதோ அதனை ‘முற்போக்கு’ என்று ஏற்றுக் கொள்கிறோம்’’ (மேற்கோள் : கே.என்.பணிக்கர் : 2012, ப.8)

என்கிற அனைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்மொழியும் வகையில் டி.செல்வராஜ் எழுத்துகளும் அமைந்துள்ளன.

சிறுகதைகள் மட்டுமின்றி நாடகங்களையும் ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ‘யுகசங்கமம்’ (1968), ‘பாட்டு முடியும் முன்னே’ ஆகிய இரண்டு நாடகங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இடதுசாரி இயக்க மேடைகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. என்.என்.கண்ணப்பா, டி.கே.பாலச்சந்தர் உள்ளிட்ட புகழ்பெற்ற நாடகக் கலைஞர்கள் அவற்றில் நடித்துள்ளனர். அவசரநிலை பிரகடன காலகட்டத்தில் (1975) காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து எள்ளல் சுவையில் தோழர் டி.செல்வராஜ் எழுதிய நாடகம் ‘வேட்டை’ ஆகும். இன்னும் பல நாடகங்கள் தொகுக்கப்படாமலேயே உள்ளன.

தமிழில் தொழிலாளர் (நெசவாளர்) வாழ்க்கையினை முதன்முதலில் படம் பிடித்துக்காட்டிய நாவல், தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ (1953) ஆகும். தமிழில் வெளிவந்த முதல் சோஷலிஸ எதார்த்தவாத நாவல் இதுவாகும். இதனை அடியற்றி நிலத்தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்திரித்துக் காட்டிய நாவல் டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’ (1967) என்பதனைக் கைலாசபதி உட்பட பல திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இந்நாவல் நெல்லை மாவட்டத்தில் இந்திய விடுதலைக்குப்பின் நடைபெற்ற ‘கள்ளமரக்கால்’ ஒழிப்புப் போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு நிலத்தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டியுள்ளது. இந்நாவல் தமிழில் நிலத்தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற பெருமை உடையது.

இதன் பின்னர் தேவிகுளம், பீர்மேடு, மூணாற்றில் வாழும் காப்பி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னல்களையும் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் ‘தேநீர்’ (1976) நாவல் வாயிலாக டி.செல்வராஜ் எடுத்துக் காட்டியுள்ளார். இன்றைய கேரளத்தின் மலையகப் பகுதியில் வாழ்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த இந்நாவலைத் தவிர, வேறு எந்த இலக்கியப் பதிவுகளும் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. விடுதலைக்குப்பின் நடுத்தர வர்க்கத்தினரின் அகப்புற வாழ்வில் ஏற்பட்ட சிதைவுகளையும் மாற்றங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் டி.செல்வராஜின் ‘மூலதனம்’ (1982) என்ற நாவல் வெளிவந்தது.

முதலாளித்துவச் சமூகத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் மூலதனம், தமிழ்ச்சமூகத்தின் குடும்ப உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் சித்திரிக்கிறது. வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.செல்வராஜின் நீதிமன்ற வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘அக்னி குண்டம்’ (1980) நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனிய நீதிமன்ற நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதையும் குடியாட்சியின் தூணாக இருக்கவேண்டிய நீதித்துறையில் ஊழல் மலிந்திருப்பதையும் இந்நாவலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் விதமாக ‘தோல்’ (2010) நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவல் தமிழக அரசின் விருதினையும் (2011) சாகித்திய அகாதெமி விருதினையும் (2012) பெற்றுள்ளது. ‘தோல்’ நாவல், திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினையும் அப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையினையும் எடுத்துரைக்கின்றது. சுண்ணாம்புக் குழிகளில் இறங்கி வேலை பார்ப்பதால் கைகால்கள் அழுகியும் தோலிலுள்ள மயிர்களை நீக்குவதன்மூலம் தோல் தூசிகளின் மாசுகளுக்கு ஆட்பட்டு இளைப்பு நோய்க்குப் பலியாகியும் மாண்டுபோன, முதலாளிகளின் ‘முறி’ அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்திரிக்கின்றது. சின்னக்கிளி என்ற பச்சிளம் பெண்ணைத் தோல் தொழிற்சாலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தொழிற்சாலை முதலாளியின் மைத்துனன் முஸ்தபா மீரான் பாயை, தோல் ஷாப்பில் வேலை பார்த்த ஆசீர்வாதச் சாம்பான் மகன் ஓசேப்பு தூக்கி எறிவதிலிருந்து நாவல் தொடங்குகின்றது.

ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வுபெற்றுச் சங்கத்தின்வழி ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவது நாவலின் மையக்கருத்தாக அமைகின்றது. தோல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்ட பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பறையர் இனத்தவர்களும் நகரத் துப்புரவுத் தொழிலாளர்களான அருந்ததியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர். தலித்துகள் தங்களது சாதிய அடையாளங்களை மறந்து வர்க்க உணர்வு பெறுகின்றனர். தலித்துகளின் அவலங்களை, அவமானங்களை, வேதனைகளைச் சொல்வதைவிட அவற்றிலிருந்து விழிப்புணர்வு பெற்று மீண்டெழுகின்ற வெற்றிகரமான வாழ்வே நாவலில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

‘வகைமாதிரியான சூழல்களில் வகைமாதிரியான கதை மாந்தர்களைப் படைத்துக்காட்டுவதுதான் எதார்த்தவாதம்’ (வுலிவீஉயட உலீயசயஉவநசள வீஸீ வுலிவீஉயட ளவைரயவழைளெ) என்னும் ஏங்கல்சின் கூற்றிற்கேற்ப, தோல்தொழில் நகரமான திண்டுக்கல் சமூகவெளியின் பகுதிகளான பேகம்பூர், தோமையார்புரம், சவேரியார் பாளையம், இராஜக்காபட்டி, நந்தவனப்பட்டி, பஞ்சம்பட்டி என்னும் இடங்கள் நாவலின் கதைக்களங்களாகின்றன. ஓசேப்பு, சுப்பவாடன், இருதயசாமி பொதுவுடைமை இயக்கத் தலைவர்களான வேலாயுதம், சங்கரன்; உழைக்கும் பெண்களான மாடத்தி, சிட்டம்மாள்; தோல்ஷாப் முதலாளிகளான சுந்தரம் ஐயர், அசன் இராவுத்தர் ஆகிய அனைத்துப் பாத்திரங்களும் குறிப்பிட்ட சமூகப்பிரிவின் வர்க்க நலனைப் பிரதிபலிக்கும் வகைமாதிரிப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

மக்ஸிம் கோர்க்கியின் தாய், தகழியின் தோட்டியின் மகன் ஆகிய நாவல்களைப் போன்று தோல் நாவலிலும் வகைமாதிரிப் பாத்திரப்பண்பு சிறந்திருக்கின்றது. ‘தோல்’ நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் கோர்க்கி குறிப்பிடும் ‘ஆன்மாவின் புத்துயிர்ப்புப்’ பெற்ற பாத்திரங்களாக அமைந்துள்ளன. தோல்ஷாப் தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பின்புலமாக இருக்கும் இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவுக்காலத் தியாக வரலாற்றினை நாவலின் பின்பகுதி விவரிக்கின்றது. இடதுசாரி இயக்கத்தலைவர்களின் தலைமறைவுக் கால வாழ்க்கையைப்பற்றிய முதல் இலக்கியப் பதிவாகத் ‘தோல்’ நாவல் அமைந்துள்ளது.

1948 - 1953 காலகட்டத்தைய (தலைமறைவுக்காலம்) இடதுசாரி இயக்கத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு இந்நாவலில் உயிர்ப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. நாவலில் வரும் வெள்ளைத்துரையும் தேவசகாயமும் அன்றைய அடக்குமுறை சார்ந்த காவல்துறை அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகளாக நாவலில் காட்டப்படுகின்றனர். சட்டத்தை மதிக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேர்மையான நீதிபதியாக தேவயிரக்கம் காட்டப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய அடையாளங்களை மறந்து ஒரே வர்க்கமாகத் திகழ்வதைப்போல் தோல்ஷாப் முதலாளிகளான சுந்தரம் ஐயர், வரதராஜ நாயுடு, அசன் ராவுத்தர் ஆகியோர் தங்கள் சாதிமத அடையாளங்களை மறந்து ஒரே வர்க்கமாகச் செயல்படுகின்றனர்.

இரண்டாம் உலகப்போர், போர்க்காலப் பஞ்சம், அரிசிப் பதுக்கல், இந்திய விடுதலை, அதனைத் துக்க நாளாகக் கொண்டாடும் சுயமரியாதை இயக்கம் (எண்ணெய்க்கடை வீரபத்திர நாடார்) ஆகிய சமகாலச் சமூக நிகழ்வுகளும் நாவலின் பிற்பகுதியில் தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. 1930-60 காலகட்ட திண்டுக்கல் நகர வரலாறு, தமிழகச் சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றுடனும் உலக வரலாற்றுடனும் நாவலில் இணைந்து செல்கிறது. எனவே, தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் தனியாகச் சித்திரிக்கப்படாமல் ஒட்டுமொத்தச் சமூக இயங்கியல் பார்வையில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கப் போராட்டத்தின் விளைவால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, ஊக்கத்தொகை ஆகியவற்றைப் பலனாகப் பெறுகின்றனர். இடதுசாரி இயக்கத் தலைவர்களாக நாவலில் சித்திரிக்கப்படும் சங்கரன், மதன கோபால், கந்தசாமி ஆகியோர் முறையே தமிழக இடதுசாரி இயக்கத் தலைவர்களான தோழர் ஏ.பாலசுப்பிரமணியம், தோழர் மதனகோபால், தோழர் மணலி கந்தசாமி ஆகியோரின் வார்ப்புக்களாக அமைந்துள்ளனர். தோழர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் தந்தையும் பெரியாருடன் தொடர்புவைத்திருந்த இராமாயண விமர்சன நூலை எழுதியவருமான வழக்கறிஞர் அமிர்தலிங்கய்யர்தான், நாவலில் சங்கரனின் தந்தையாக வழக்கறிஞர் சுந்தரேச ஐயராக வார்க்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் தோல் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைக்க உறுதுணையாக நின்ற தோழர் எஸ்.ஏ.தங்கராஜ் இந்த நாவலில் வரும் ஓசேப்பு, பிரதர் தங்கசாமி முதலான பல பாத்திரங்களில் ஊடாடி நிற்கிறார்.

ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் 1963ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நின்று வெற்றிபெறுவதோடு நாவல் நிறைவடைகிறது. நாவலின் இறுதியில் உயர்வர்க்கத்தைச் சார்ந்த கணேச ஐயரின் நகர சபைத் தலைவர் பதவியினை அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த முறியடிமையாக இருந்த ஆசீர்வாதச் சாம்பான் மகன் ஓசேப்பு கைப்பற்றுகிறான். தோழர் வேலாயுதம் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகின்றார். சமூக அரசியல் அதிகாரம் கைமாறுவதையும் அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அமர்வதையும் நாவல் காட்டுகின்றது. 21ஆம் நூற்றாண்டில் எதார்த்த வாதம் வீறுடன் மறு எழுச்சி பெற்றமைக்கு இந்நாவல் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

தோல் நாவலுக்கு முன்னர் எழுதப்பட்ட, போலிச்சாமியாரான மெய்ஞானச்சித்தர் சுவாமிகள் என்கிற கருப்புத்துரையின் மெய்கீர்த்தியை விளக்கும் விதத்தில் ‘பொய்க்கால் குதிரை’ (2011) என்னும் நாவல் அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்தது. இந்நாவல் மானுட விடுதலைக்குப் போராடும் மனிதர்களைச் சித்திரிக்கும் ஏனைய நாவல்களிலிருந்து வேறுபட்டு புதிய பாணியில் சமூக அங்கத நாவலாக எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் போலிச் சாமியார்களின் உருவாக்கத்தினையும் போலிச் சாமியார்களின்மீது மக்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளையும் கேலி செய்கிறது. ‘மெய்கீர்த்தி’கள் சோழர் காலத்தில் அரசர்களின் புகழையும் பெருமிதத்தையும் எடுத்துரைக்க உருவாக்கப்பட்டன.

இந்த நாவல், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் புதிரைவண்ணார் இனத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளியான கருப்புத்துரை என்கிற சாமானியன் மெய்ஞான சித்தர் சுவாமியாக அவதாரமாக்கப்பட்ட வரலாற்றினை ‘மெய்கீர்த்தி’யாக எடுத்துரைக்கின்றது. ஆங்கிலேயரிடம் உரிமையை அடகுவைத்துச் சுகபோகங்களில் மூழ்கித் திளைத்த ஜமீன்தார் காலத்திய வாழ்க்கைப் பின்புலமும் விடுதலைக்குப் பின்பு நில உச்சவரம்புச் சட்டத்தினால் ஜமீன்தாரிமுறை அழிந்து புதிய பணக்காரர்கள் உருவான பின்புலமும் இந்நாவலில் பின்னணியாக அமைந்துள்ளன.

அண்மையில், தமிழகத்தில் காணலாகும் சுற்றுச்சூழல் அழிவை ஒரு தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாழ்க்கைப் பின்புலத்தில் ‘அடுக்கம்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியுள்ளார். இந்நாவல் விரைவில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாக வரவிருக்கிறது. மேலும் தோழர் இரா.பாலதண்டாயுதத்தின் இளமைக்கால காதல் வாழ்வை நாவல் வடிவில் எழுதியுள்ளார். அது இன்னும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள நிலத்தொழிலாளர்கள் போராட்டத்தினைக் ‘காணி நிலம்’ என்ற பெயரில் நீண்ட நாவலாக எழுத முயற்சித்தார். இதற்காக ஏராளமான தமிழ்ச் சமூக வரலாற்று நூல்களிலிருந்து தரவுகளைத் திரட்டினார். ஆனால் அந்த நாவல் ஐம்பது பக்கங்களோடு நின்றுவிட்டது.

சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களைத் தாண்டி சாமி.சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக எழுதியுள்ளார். இவை சாகித்திய அகாதெமியின் வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. தோழர் டி.செல்வராஜ் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய இடதுசாரி இலக்கிய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டவர். இடதுசாரிகள் இலக்கிய அமைப்பில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தனது வாழ்நாளின் இறுதிவரை, 81 வயதிலும் தகழியைப்போல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரி உள்ளிட்ட புதிய படைப்புகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவற்றின்மீதான தனது விமர்சனத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அல்தூசர் முதலான புதிய மார்க்சியச் சிந்தனையாளர்களின் நூல்களை வாசித்து விமர்சிக்கவும் அதுபற்றி உரையாடவும் செய்தார். எனவே எழுத்திலும் அவர் இலட்சியமாகக் கொண்டிருந்த மார்க்சியத் தத்துவத்திலும் சமகால அறிதலும் அறிவும் மிக்கவராக அவர் திகழ்ந்தார். எமது காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் புலத்தின் எல்லா நிகழ்வுகளிலும் ஏதேனும் ஒருவகையில் பங்குபெற்று வந்தார். கடந்த ஆண்டில் சாகித்திய அகாதமி அவருக்காக நடத்திய எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாடினார்.

மகாத்மா காந்தி 150ஆம் ஆண்டை ஒட்டி சாகித்திய அகாதெமி எம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ‘தமிழ் இலக்கியமும் காந்தியமும்’ என்ற தேசியக் கருத்தரங்கில் வாழ்த்துரை வழங்கியதே அவரது கடைசி இலக்கிய நிகழ்வாக அமைந்துவிட்டது. அந்நிகழ்வில் காந்தியையும் அம்பேத்கரையும் ஒருசேரக் கையில் எடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தினார். சொந்த வாழ்க்கையிலும் இறுதிவரை இடதுசாரியாகவே வாழ்ந்து மறைந்தார். அவரது திருமணம், அவரது குழந்தைகளின் திருமணம் எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களே.

இலக்கிய வாழ்வில் மட்டுமல்லாது வழக்கறிஞர் வாழ்விலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான பொதுவுடமையாளராகவே திகழ்ந்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொட்டனம்பட்டி கிராமத்து ஊராட்சி ஒன்றியத் தலைவர் சமூக விரோதி ஒருவனால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டபோது அக்கிராமத்திலுள்ள பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து அரசுப் பேருந்தை எரித்தனர். இதற்காகப் பொதுமக்கள்மீது வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் வாதாட முன்வராதபோது தோழர் டி.செல்வராஜ் எவ்விதமான கைமாறும் கருதாது வாதாடி வெற்றியைத் தேடித் தந்தார். இதற்காக வழக்கறிஞர் சங்கம் அவரை ஒதுக்கிவைத்தபோதும் அதைப்பற்றி அவர் கவலைகொள்ளவில்லை. பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவல் சர்ச்சையில் அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை இருக்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் அவருடைய புதல்வர் சார்வாகன் பிரபு ஆஜரானார்.

மேலிடத்திலிருந்து (கேரள ஆளுநர்) பெரும் அழுத்தம் தந்ததால் நீதிபதி அவ்வழக்கைத் திரும்பப் பெறவேண்டும், இல்லையெனில் கடும் தண்டத்தொகை விதிக்கப்படும் என அச்சுறுத்தினார். கால அவகாசம் அளிப்பதாகக் கூறினார். பதினைந்து நிமிடங்கள் கழித்துத் தான் மீண்டும் வாதாட வருவதாகச் சார்வாகன் தெரிவித்து அறைக்குத் திரும்பினார். அப்போது மற்றொரு நீதிபதி வழக்கைத் திரும்பப் பெறுவதுதான் உசிதம்; மேலிடம் உக்கிரமாக இருக்கிறது என ஆலோசனை வழங்கினார். அதன்படி சார்வாகன் வழக்கைத் திரும்பப் பெற்றார்.

ஆனால் இதைக் கேள்விப்பட்ட தோழர் டி.செல்வராஜ் கடும் சினம் கொண்டார். இந்த வழக்கு நீதிமன்றமே தானாக முன்வந்து எடுத்துக்கொள்ளப்படவேண்டிய ஒன்று. இது எவ்வாறு பொதுநல வழக்காகாது? அடுத்த வாரம் மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்; நானே நேரில் ஆஜராகிறேன் எனத் தெரிவித்தார். பிறகு சிகரம் செந்தில்நாதன் வேண்டாம் தோழர், சென்னையில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகுதான் அமைதியானார். அந்த அளவிற்கு சமூகக் கடமையும் சமூக அக்கறையும் மிக்க மாமனிதராக வாழ்ந்தார்.

தோழர் டி.செல்வராஜ் தனது இளம்பருவத்தில் மூணாறு மலைத் தோட்டப் பகுதியில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஐம்பதுகளில் கேரளத்திலிருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்களோடு தொடர்பு வைத்திருந்தார். இக்கேரளத் தொடர்பு அவரது இறுதிக்காலம்வரை இருந்தது. சான்றாகக் கேரள இடதுசாரி அரசியல் தலைவரும் மார்க்சிய இலக்கிய விமர்சகருமான பி.கோவிந்தபிள்ளை அவரது இறுதிக் காலம்வரை தோழர் டி.செல்வராஜோடு கடிதம் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் உரையாடிக்கொண்டிருந்தார். மலையாளத்தில் வெளிவரும் மிக முக்கியமான அரசியல் இதழான ‘சிந்தா’ இன்றுவரை அவருக்கு வந்துகொண்டிருக்கிறது. டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’, ‘தேநீர்’ ஆகிய இரண்டு நாவல்களும் தேசாபிமானி பத்திரிகையில் மொழிபெயர்க்கப்பட்டுத் தொடராக வெளியாயின.

1970களுக்குள்ளேயே இவ்விரண்டு நாவல்களும் இடதுசாரி இயக்கப் பதிப்பகமான ‘சிந்தா’ மூலமாக, ‘வீணபூவு’, ‘தேயிலக்காடு’ என்னும் பெயர்களில் வெளியிடப்பட்டன. அவரது இளம் வயதில் மூணாறு தோட்டப்பகுதியில் வாழ்ந்தபோது, தோழர் பாலசுந்தரம், இளையராஜா ஆகியோரும் இவரது வீட்டில் தங்கியிருந்து சென்ற செய்தியைத் தெரிவித்துள்ளார். 1950 - 1970 காலகட்ட மூணாறு பெருந்தோட்டச் சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு தொடர்பான பல அரிய செய்திகளை அவர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் அவற்றை ஆவணப்படுத்த முடியாமல் போனது பெரும் இழப்பே. இலக்கியத்திலும் அரசியலிலும் சொந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கையில் எவ்விதச் சமரசமும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் டி.செல்வராஜ். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற அடிப்படையில் தோழர் டி.செல்வராஜுக்குத் தமிழ் இலக்கியத்தில் என்றும் நிலைத்த இடம் உண்டு.

துணைநூற்பட்டியல்

1) கே.என். பணிக்கர், இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம், தமிழில் பா.ஆனந்தகுமார், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஜூன் - 2012.

2) டி.செல்வராஜ் ‘மலரும் சருகும்’, மல்லிகைப் பதிப்பகம், சென்னை, மு.ப. - 1967, சித்திரை நிலவு, மதுரை, 3ஆம் பதிப்பு, செப் - 2003.

3) டி.செல்வராஜ் ‘தேநீர்’, கவிதா, சென்னை, மு.ப. - 1976, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2ஆம் பதிப்பு- 2008.

4) டி.செல்வராஜ் ‘அக்னிகுண்டம்’, கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, மு.ப. - 1985.

5) டி.செல்வராஜ், ‘மூலதனம்’, பூக்கூடை பதிப்பகம், சென்னை, மு.ப. - 1982.

6) டி.செல்வராஜ், ‘தோல்’, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப. - 2010.

7) டி. செல்வராஜ், ‘பொய்க்கால் குதிரை’, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம், மு.ப- 2011.

8) டி.செல்வராஜ், ‘நோன்பு’ மு.ப- 1960, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2ஆம் பதிப்பு, ஆகஸ்ட்- 2005.

9) டி.செல்வராஜ், ‘டி.செல்வராஜ் கதைகள்’, கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, மு.ப- 1994.

10) டி.செல்வராஜ், ‘நிழல் யுத்தம்’, நர்மதா, சென்னை, மு.ப- 1995.

11) டி.செல்வராஜ், ‘யுகசங்கமம்’, மல்லிகை, சென்னை, மு.ப- 1979.