முன்னாள் துணைவேந்தர் எழுத்தாளர், ப.க.பொன்னுசாமி அவர்களின் எண்ணத்தில் உதித்த கரு, எழுத்தாக உருப்பெற்று சுமார் 522 பக்கங்களுக்கு உடுமலையில் நடைபெற்ற, உண்மையான நிகழ்வுகளைப் புதினமாக்கித் தந்துள்ளார்.
இதில் நமது கொங்கு வட்டாரத்தில் பயன்படும், பயன்படுத்தப்படும் அனைத்துச் சொற்களும் மிகைப்படுத்தப்படாமல் அப்படியே பயன்படுத்தியது இந்த நாவலுக்கு மிகவும் நல்ல உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளது.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு நமது மண்ணில் நடந்த ஒரு காதலை அப்போதைய சமூக அரசியலோடு இயல்பாகப் பொருத்தி நடந்த நிகழ்வுகளை மீண்டும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
பள்ளபாளையம் (பள்ளிபுரம்), கொங்கக்குறிச்சி (கொங்கலக்குறிச்சி) குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, தளி, செல்லப்பம்பாளையம், உடுமலைப்பேட்டை, போடிபட்டி, திருமூர்த்தி பஞ்சாலை (திருமலை ஆலை) என ஊர்களின் பெயர்களை நாட்டுப்புற வழக்காறுகளோடு பொருத்திப் புனைவுகளாக இல்லாமல் மழலைகள் மண்ணிலும், தண்ணீரிலும் கொஞ்சி விளையாடுவது போன்று, இன்னமும் கிராமங்களில் நடந்தேறும் நிகழ்வுகளை நம் மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
இதில் கரிசல் நாவலின் நாயகர் கி.ரா. வைப் போன்று கொங்கு மண்ணின் மனம் கமழும் சொற்களைத் தம்முடனே உலவ விட்டிருக்கின்றார். பஞ்சாலையில் வேலை செய்து கொண்டே விவசாயத்தையும் பார்த்துக்கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களின் நிலையை விரிவாகவும், விளக்கமாகவும் ஒன்பது பாகங்களாகப் பதிவு செய்துள்ளார்.
ஒன்பது பாகங்களையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி சங்கிலித்தொடர் போல் நாவலை மென்மையாகவும், தென்றல் காற்றாகவும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி, கொண்டு செல்கின்றார்.
குருசாமியின் குதிரை, செட்டிகுளம், ஆலை முதலாளி தாமோதரன், ஆலை, இடம் மாறிக்கொண்டது பகை, ஒரு காதல், சோமுத்தேவருக்கு உள்பகை, பாசாங்குப் பழனியம்மாள், பாவம் ராமு வீராசாமி எனும் கதை மாந்தர்களின் அறிமுகத்தையும் அவர்களின் பின்னணியைக் கூறும் வகையில் அறிமுகமாக முதல் பாகத்தினை எழுதியுள்ளார். இதில் கொங்கு வட்டாரத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம் எனும் கொங்குக் காளைகளின் வளர்ச்சிப் பரிமாணத்தையும் எந்தெந்த வரிசைப்பல் வகைகளோடு எந்தெந்த நிறக் காளைகள் ஓடவேண்டும் என்பதையும், காளைகளின் ஓட்டப்பந்தயத்திலே கொங்கின மக்களின் வாழ்க்கைப் பயணம் போட்டி போட்டுக்கொண்டு போவதையும் பதிவு செய்துள்ளார்.
இந்தப் புதினம் கொங்கு வட்டாரத்தில் வாழும் ஒரு கிராமக் குடும்பத்தின் நிகழ்வுகளை ஒரு திரைப்படமாகப் பார்த்த உணர்வை ஏற்படுத்தும். உதாரணமாக ஒரு நகைச்சுவைக் காட்சியில், ‘என்ன மாமா, சைக்கிளை இப்படி அழுக்கா வெச்சிருக்கீங்க? தண்ணியும், துணியும் குடுக்கட்டுமா? கழுவித்துடைச்சுட்டுப் போங்க” என்று குறுஞ்சிரிப்பில் கனகவேலை வெங்கிட்டம்மா கேட்க, ‘எஞ்சைக்கிளு, எப்பவும் இப்படித்தாம்மா இருக்கும். கழுவினா, கரைஞ்சு போகும். தொடச்சாத் தேஞ்சு போகும்” எனக் கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சமில்லாமல் புதினம் பயணிக்கின்றது.
படுகளம் நாவல் முன்னோட்டச் சுருக்கமாக, திருமூர்த்தி மலைக் கோயிலும், அதை ஒட்டிய திருமூர்த்தி மலை அணையும் உடுமலைப்பேட்டையிலிருந்து தெற்கே இருபத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்தவை. பள்ளிபுரம் கிராமமும் அதைச்சுற்றியிருக்கும் பல கிராமங்களும் திருமூர்த்தி அணையால் பயன்பெறும் கொங்கு மண்டலத்தின் தென்பகுதியாகும். அணை வருவதற்கு முன்னால் சுற்றிலும் அமைந்திருக்கும் ஏழு பெருங்குளங்களின் நீர்வரத்தால் இப்பகுதி கரும்பு, நெல் விளைச்சலில் திளைத்திருந்தது. அணை வந்த பிறகு நீண்ட தூரம் கீழ் மண்டலங்களுக்குப்போன நீர்ப்பங்கீட்டால் வேளாண்மை பங்கு போடப்பட்டுத் தள்ளாடுகின்றது.
பள்ளிபுரத்தில் கூத்தம்பூண்டி ஆத்தாள்கூட்டுக் குடும்பம், நல்லசாமிக் கவுண்டர், கண்ணுச்சாமிக் கவுண்டர், செல்லச்சாமிக் கவுண்டர் ஆகிய மூன்று சகோதரர்களின் ஒற்றுமையால் பெருமை பெற்றிருக்கின்றது. பிறகு தனிக்குடும்பங்கள் ஆகின்றன. பங்காளிகள் பன்னீர்க்கவுண்டரும், பொங்கியண்ண கவுண்டரும், ஆத்தாள் குடும்ப எதிரிகளாகின்றனர். வீண் வீராய்ப்புகளுக்கிடையில் ஆத்தாவின் முயற்சியால் பங்காளிகள் ஒற்றுமைப் படுகிறார்கள். பள்ளிக்கவுண்டர் குடும்ப முழுக்காத குலம் சீர் விழாவில் இரவு முழுவதும் வில் அம்பு எடுத்து ஆடும் “படுகளம்”நிகழ்ச்சியில் செல்லச்சாமிக் கவுண்டரும், வந்து ஆடுகின்றார். ஆட்ட முடிவில் அவர் மர்மமாக மரணிக்கிறார். ஊர் முணு முணுக்கின்றது.
கண்ணுச்சாமிக் கவுண்டரின் கரும்புக்காட்டுத் தீயில் அவருடைய கண்களான காளைகள் கருகிச் சாகின்றன. அவர் மனைவி சின்னக்கண்ணுவைக் கேலி செய்து வந்த பன்னீர்க் கவுண்டரை நல்லசாமிக் கவுண்டர் கொடுவாளால் தாக்குகிறார்.
பரம்பரைப் பணக்காரரான பன்னீர்க்கவுண்டர், குடும்ப ஆடம்பரச் செலவுகளால் பூமிகளை விற்று ஏழையாகிறார். புதுப்பணக்காரர் பொங்கியண்ண கவுண்டர் அந்தப் பூமிகளை வாங்கிக்கொள்வதோடு கண்ணுச்சாமிக் கவுண்டர் பூமியிலும் தொல்லை கொடுக்கிறார்.
சாதிகளின் முன்னுரிமையை முன்னிட்டு எழுந்த சிக்கலில் உச்சி மாகாளி அம்மன் திருவிழா நின்று போகிறது.
சேரிப்பெண்ணான மாராத்தாளுடன் உயர்சாதி வாலிபன் தொடர்பு கொண்டதால் சாதிச்சண்டை வெடிக்கின்றது. தன் ஆளுமையால் அச்சண்டையை அவன் தடுக்கிறான்.
கரும்புப்பால் காய்ச்சும் தீக்குழியில் ஒருவர் யாரும் அறியாவண்ணம் வெந்து போகின்றார். கரும்பாலை ஆட்ட மதுரைப்பக்கம் போன கண்ணுச்சாமிக் கவுண்டரின் மகன் நல்லதம்பி ஆலைக்குச் சொந்தக்காரர் சோமுத்தேவரின் பேத்தி ராஜேஸ்வரியைக் காதலிக்கிறான்.
பங்காளிகளுக்குள் கண்ணாமூச்சி ஆடிய பகைமை கொஞ்ச நாள் காத்திருந்து மீண்டும் தன் ஆட்டத்தைத் தொடங்குகிறது.
கதை - ஆனந்தப் படுகளம்- ஆட்டத்தில் தொடங்கிப் பகைமை ஆட்டத்தில் இளைப்பாறுகிறது.
புதினத்தில் உலாவரும் கொங்குப் பங்காளிகள் பெயர் மாறியிருந்தாலும் இன்னமும் திருமூர்த்தி மண்ணில் உலா வருகின்றனர்.
"திருமூர்த்தி மலை மண்ணு நின்னு சொல்லும் மண்ணு”
இதில் ஏழுகுளப்பாசனம் குறித்து ஒரு உரையாடலில் ‘காத்திருந்தவம் பொண்டாட்டிய நேத்து வந்தவத் தட்டீட்டுப்போன கததாம் பாலு, கண்ணுச்சாமி சொல்லிச் சிரித்துக் கொண்டார்”
"சாதிச் சனியனோ, ஊருச்சனியனோ, நம்மயெல்லாம் தொரத்திக்கிட்டே இருக்கு”
“என்ன கூத்தப் பேசறீங்க? அவுங்க ஒரு சாதி, நாம ஒரு சாதி, ரெண்டும் மொரட்டுத் தனத்துல ஒண்ணுக்கொண்ணு கொறைஞ்சதில்ல,”
சோமுத்தேவர், பொங்கியண்ண கவுண்டர், சென்னியப்பக் கவுண்டர் என சாதி ஒட்டுப்பெயர்களோடு இருந்தாலும் கதை மாந்தர்கள் சாதி பார்க்காமல் ஊருக்காகவும், ஊரின் நலனுக்காகவும் கூட்டுக் குடும்பமாகவும், விட்டுக்கொடுத்து வாழ்வதையும் இன்னமும் கிராமப்புறங்களில் உயிர்ப்போடு இருக்கும் நிகழ்வுகளை அப்படியே உயிர்ப்பான படங்களுடன் பதிவு செய்துள்ளார் துணைவேந்தர்.
பின்னிணைப்பாக புதினத்தில் திருமூர்த்தி மண்ணில் வசித்த, வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களை ஆவணப்படுத்தும் வகையில் மிகவும் உயிர்ப்பான படங்களைப் போட்டு பதிவு செய்துள்ளார். இதற்காக மிகவும் சிரத்தையெடுத்து ஓவிய நடிகர், கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரோடு இணைந்து படங்களை வரைந்துள்ளது மிகவும் உயிர்ப்புத் தன்மையோடிருக்கிறது.
திருமூர்த்தி மண் எனும் புதினத்தில் உயிராக வலம் வந்த நபர்கள் இன்னும் ஒருசில பேர் உயிர்ப்பாக இருப்பதை நுட்பமாகக் கூர்ந்து கவனித்தால் உணர்ந்தறிய முடிகின்றது. அதில் வந்த பெயர்கள் தற்போது 60, 70 வயது மேற்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் 1966ல் திராவிடக் கட்சித் தலைவரை தாக்க முயற்சி செய்த நிகழ்வுகளை கண்ணாடியாகப் பதிவு செய்துள்ளார் துணைவேந்தர். தாக்க முயற்சி செய்தபோது நடந்த கலவர நிகழ்வுகளையும் அதற்குப் பின்பு நடந்த மோதல்களையும் புதினத்தோடு இயைந்து சொல்லியிருக்கிறார்.
இதில் வரும் கதை மாந்தர் கனகவேல் பாத்திரத்தை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார் துணைவேந்தர். ஏற்கனவே இவர் எழுதிய படுகளம் நாவலில் பயன்படுத்திய அதே சொல்லாடல்கள், அதே தொடர்ச்சி.
கொங்கு வட்டாரப் புதினங்களில் பெயர் பெற்ற மந்திரிபாளையம் நடராசன் போன்று துணைவேந்தரும் கொங்கு வட்டாரச் சொற்களை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் பயன்படுத்தியுள்ளதைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய திராவிடய இயக்க அரசியல், தேசியப்பேராயக்கட்சி அரசியலும், மக்களின் மனதில் எந்த அளவிற்கு ஆழங்கால் பதித்திருந்தது என்பதையும், அந்த சமூக அரசியல் நிகழ்வுகள் ஒரு குடும்பத்தை எந்த அளவிற்குப் பாதிப்பிற்குள்ளாக்கின என்பதையும், இதனால் ஒரு பெண் வாழ்வு எப்படியானது என்பது குறித்தும் கண்ணாடியாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு பாகத்திலும் தாம் பயன்படுத்திய உட்தலைப்புகளின் கோவையே இந்தப் புதினத்தை எங்கு எப்படி விடுபட்டு படித்தாலும், தொடர்ச்சியாகப் படித்தாலும் எளிமையாகப் புரியும்படி உள்ளது. உதாரணமாக பாகம் இரண்டில் ஒரு கட்டளை, ஆலை எரிமலை, ஒரு கொந்தளிப்பு, இதெல்லாம், ஒரு கலவரம், களவாடிய காளைகள், பட்டம் பெற்றாள் ராஜேசுவரி, யார் செய்த சதி, சிக்கினான் கன்னிமுத்து, நல்லதம்பிக்கு நல்லம்மாள் போன்ற தலைப்புகளைப் படித்து விட்டு பாகம் ஆறில் புதுக்காதல், அதிர்ச்சி, பேரதிர்ச்சி, கல்யாணமே வேண்டா, குறுக்கு விசாரணை, பெண் என்பவள், தித்திக்கவில்லை, குற்றவாளி, இப்ப மனநோய், தூக்கில் பொன்னி போன்ற தலைப்புகளைப் படித்தாலும், கதையின் ஓட்டம் சிறிதும் வட்டார வழக்குச் சொற்கள் புதினத்தின் மாந்தர்களையும், புதினத்தையும் ஆற்றொழுக்காகக் கொண்டு சென்றமைக்காக துணைவேந்தரின் எழுத்தாளுமையைப் பாராட்டலாம். தொடக்கம் முதல் இறுதி வரை கதையின் மாந்தர்களுக்கு நல்ல உயிரோட்டத்தைத் தந்துள்ளார்.
இதுவரை கொங்கு வட்டார நாவல்களுக்காக இல்லாமல் பொதுவான இலக்கியத்திற்காக சிற்பி பாலசுப்பிரமணியம், சுப்ரபாரதிமணியன் போன்ற எழுத்தாளர் விருது பெற்றிருந்தாலும் பெரிய அளவில் இலக்கிய விருதுகள் கிடைக்கவில்லை என்ற அவாவினை கட்டாயம் இந்த திருமூர்த்தி மண் எனும் படுகளம் (நாவல் 2) நிவர்த்தி செய்யும் என நம்பலாம்.
சோ.தர்மனின் சூல் நாவல் போன்று, கி.ரா.வின் கரிசல் மண் வாசனை போன்று தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை போன்று வட்டார வழக்கு நாவல்களில் கொங்கு வட்டார நாவலாகப் புதிவு செய்த துணைவேந்தர் ப.க. பொன்னுசாமி அவர்களுக்கு இந்த நூல் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுத் தரும்; தரவேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் நூல் மதிப்புரையாக இதனைப் பதிவு செய்வோம்.
திருமூர்த்தி மண்
ப.க.பொன்னுசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை - ரூ.650/-
படுகளம்
ப.க.பொன்னுசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை - ரூ.700/-
- அருள் செல்வன்