‘ஒற்றைப் பல்’லில் இடறும் இரண்டு செய்திகளை முதலில் பார்த்து விடுவோம்.

ortrai palநாவல் முழுக்க எழுத்துப் பிழைகள். ஒன்று, இரண்டல்ல… பக்கத்துக்குப் பக்கம். 183 பக்க நாவலில் குறைந்தது 500 பிழைகளையாவது சுட்டிக் காட்ட முடியும். டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தில் பிழை திருத்துவதற்கென்று ஆட்கள் இல்லை என்பது இரண்டு பக்கங்கள் படித்தவுடனேயே தெரிகிறது. கீற்று மாதிரியான தனிநபர் நடத்தும் இணையதளங்களில் கூட முடிந்தவரை பிழைகள் திருத்தி வெளியிடுகிறோம். கட்டுரைகள் அதிகமாக இருக்கும் ஒரு சில நாட்களில்தான் பிழை திருத்த நேரமின்றி அப்படியே வெளியிடுகின்றோம். ஆனால், ஒரு புத்தகத்திற்கு விலை வைத்து விற்கும் ஒரு நிறுவனம், அதற்கு உரிய சிரத்தையை எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லுகிறேன். ‘தாளாளர்’ என்ற வார்த்தையை எப்படி எல்லாம் விதவிதமாக பிழையுடன் எழுதலாம் என்பதை 74ம் பக்கத்திலும், 76ம் பக்கத்திலும் முயற்சித்திருக்கிறார்கள். ‘தாளலருக்கு’, ‘தாளாலரின்’, ‘தாலாளர்’ என்று தொடரும் பிழைகளில் நல்வாய்ப்பாக ‘ழ’ எழுத்தை வைத்து முயற்சித்துப் பார்க்கவில்லை. இதையெல்லாம் விட பெரிய கொடுமை, நாவல் தொடங்குவதற்கு முன்பு இருந்த, நாவல் ஆசிரியர் கரன் கார்க்கியின் ‘என்னுரை’யை அப்படியே, நாவலின் இறுதி அத்தியாயத்தில் (176ம் பக்கம்) ரிபீட் செய்திருக்கிறார்கள். பின்னட்டையில் புத்தகத்தைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு எழுதுவார்கள் அல்லவா? அதில்கூட எழுத்துப் பிழைகள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், பதிப்பகத்தாரின் அக்கறையை.

மற்றொரு செய்தி, பின்னட்டையில் ‘காதலைப் போலொரு நம்பிக்கை, நம்பிக்கை போலொரு காதல்’ என்ற சொல்லடுக்கை கரன் கார்க்கி பயன்படுத்துகிறார். முதல் தடவை படிக்கும்போது அது வசீகரிக்கிறது. ஆனால், அதேபோல், ‘சிரிப்பைப் போலொரு  அழுகை, அழுகை போலொரு சிரிப்பு’, ‘குழந்தையைப்  போலொரு கிழவன், கிழவனைப்  போலொரு குழந்தை’ என்று நாவல் முழுக்க விதவிதமாக அவர் எழுதிப் பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் அயற்சி ஏற்படுகிறது.

ஒற்றைப் பல்லில் இடறும் இந்த இரண்டு செய்திகளைப் பொருட்படுத்தவே தேவையில்லை என்ற அளவிற்கு, நாவல் மூலம் கரன் கார்க்கி ஒரு அன்பு மழையை நம்மீது பொழியச் செய்கிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் மனநிலை பிறழ்ந்த கோயில்தாஸ்; அதே இல்லத்தில் தொண்டு செய்யும் இளம்பெண் சாரதா; சாரதாவைத் துரத்தும் வாலிபர்கள்; பயத்தில் ஆதரவு கேட்டுப் போனால் சாரதாவுக்கே தண்டனை தரும் கன்னியாஸ்திரீகள்; இவர்கள் மத்தியில் வெகுளித்தனமான அன்பைப் பொழியும் கோயில்தாஸை தனது கணவனாகத் தேர்ந்தெடுக்கும் சாரதா; சாரதா மறைவிற்குப் பின் மீண்டும் மனநிலைப் பிறழ்வு உச்சமடையும் கோயில்தாஸ்; காணாமல் போகும் கோயில்தாசுக்கு அடைக்கலம் தரும் நடைபாதைவாசி குஷ்பூ – இப்படியாக நகரும் நாவலில் கோயில்தாசிடம் எஞ்சியிருக்கும் ஒற்றைப் பல்லும் இன்னொரு முக்கிய பாத்திரம்.

முதல் இருபது பக்கங்களில் கோயில்தாசின் மனநிலைப் பிறழ்வை, ஒரே செயலைத் திரும்பத் திரும்ப செய்யும் அவரது இயல்பை வாசகர்களிடம் அழகாகக் கடத்தி விடுகிறார் கரன் கார்க்கி. ஒரே மாதிரியான சம்பவங்களைத் தொடர்ச்சியாக அடுத்தடுத்துப் படிப்பது கொஞ்சம் சலிப்பூட்டினாலும், நாவலின் இறுதிவரை வரும் அந்தக் கதாபாத்திரத்தின் மன இயல்பைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியமாகிறது.

வீட்டை விட்டு வெளியேறும் கோயில்தாஸ், நடைபாதைவாசியான குஷ்பூவிடம் வந்து சேர்கிறார். அவருக்கு என்ன ஆனது, ஒற்றைப் பல் பிடுங்கப்பட்டதா என்பதை கோயில்தாசின் சாரதாவைப் பற்றிய நினைவுகளிலும், குஷ்பூவின் கவனிப்பில் இருக்கும் நிகழ்காலத்திலுமாக முன்னும், பின்னும் விரித்துச் செல்கிறார் கரன் கார்க்கி.

கொஞ்சம் தப்பினால் செயற்கைத்தனம் வந்துவிடும் என்பது மாதிரியான நிகழ்வு அடுக்குகளை இயல்பாகப் படைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் நாவலாசிரியர். கொஞ்சம்கூட மிகையில்லை. அதனாலேயே, நமக்கு அந்நியமான ஒரு வாழ்க்கைச் சூழலை மிக எளிதாக நம்மால் உள்வாங்க முடிகிறது.

ஒவ்வொரு நிகழ்வுக்குமான காரண, காரியங்களை அதற்கு முந்தைய நிகழ்வுகளில் போகிற போக்கில் சொல்லி விடுகிறார் கரன் கார்க்கி. அதனால்தான் கோயில்தாஸ் போன்ற ஒரு மனநிலை பிறழ்ந்தவரை சாரதா மணக்கும்போதும், குஷ்பூ ஆதரிக்கும்போதும் ‘சரிதானே!’ என்று நமக்குத் தோன்றுகிறது.

நடைபாதைவாசிகளின் வாழ்க்கையும், அவர்களது இடர்களும் நாவலின் முக்கிய பகுதிகள். வெறும் செவிவழிச் செய்திகளால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக கரன் கார்க்கியால் இதைச் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. அவர்களுடனான நேரடித் தொடர்போ, அறிமுகமோ ஆசிரியருக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

சாலையோரங்களில் பயணிக்கும்போது நாம் பார்க்கும் நடைபாதைவாசிகளை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நம்முள் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார் கரன் கார்க்கி. அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள், என்ன வேலை செய்கிறார்கள், என்ன மாதிரியான உணவுப் பழக்கம், எத்தனைவிதமான வாழ்க்கைச் சிக்கல்கள், வாழ்க்கையை, அரசியலை, சினிமாவைப் பற்றிய அவர்களது புரிதல்கள் என ஒவ்வொன்றும் மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றது. நடைபாதைவாசிகள் பற்றி யாரேனும் குறும்படமோ, திரைப்படமோ எடுக்க நினைத்தால், முதலில் ‘ஒற்றைப் பல்’ நாவலைப் படித்துவிடுங்கள்.

நாவலின் மிக முக்கியமான இன்னொரு பகுதி – கோயில்தாசுக்கும், சாரதாவுக்கும் இடையிலான உரையாடல்கள். கொஞ்சம் தப்பினால் பிரச்சாரம் ஆகிவிடுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிற அப்பகுதியை மிகத் திறமையாக கையாண்டிருக்கிறார் கரன் கார்க்கி.

குஷ்புவைப் போல் அன்பும், சாரதாவைப்  போல் தெளிவும் நமக்குக் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கி விடுகிறது நாவல்.

ஒரு நல்ல இலக்கியம் என்பது சக மனிதர்கள் மீதும், வாழ்க்கை மீதும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்; நம்முள் இருக்கும் மனித மாண்புகளை இன்னும் ஒரு படி மேலே உயர்த்த வேண்டும். அந்த வகையில் பார்த்தால் ‘ஒற்றைப் பல்’ நல்லதொரு  இலக்கியம். கரன் கார்க்கியின் முந்தைய நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்த நாவல் விதைத்துவிட்டுச் செல்கிறது.

ஒற்றைப் பல் (நாவல்)

ஆசிரியர்: கரன்  கார்க்கி

வெளியீடு: டிஸ்கவரி புக்  பேலஸ்,

6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை,

கே.கே.நகர் மேற்கு, சென்னை – 78

தொலைபேசி: 044-6515 7525, 87545 07070

பக்கங்கள் – 183, விலை ரூ.160

- கீற்று நந்தன்

Pin It